சனி, 3 ஜூலை, 2021

ஏற்பதும் நிராகரிப்பதும் வாழ்வின் இயல்பு. (4.7.2021)

ஏற்பதும் நிராகரிப்பதும் வாழ்வின் இயல்பு. 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு பள்ளியில் ஒரு சிறுவன் மதிய உணவு வேளையில் ஓடிச்சென்று பறந்து கொண்டிருந்த ஒரு பட்டாம்பூச்சியை பிடித்துக் கொண்டு வந்து ஆசிரியரிடம் காண்பித்து, இந்த பட்டாம்பூச்சி உயிரோடு இருக்கிறதா? அல்லது இறந்து விட்டதா? என்று கேட்டான். ஒருவேளை ஆசிரியர் இறந்து விட்டது எனக் கூறினால், கையை திறந்து அதனை பறக்க விடலாம் என எண்ணினான். ஒருவேளை ஆசிரியர் உயிரோடு இருக்கிறது எனக் கூறினால் நசுக்கிக் கொன்று விட்டு கையை திறந்து காட்டலாம் என எண்ணினான். ஆனால் ஆசிரியர் அவனைக் கூர்ந்து கவனித்து விட்டு, அது உயிரோடு இருப்பதும், இறந்து போவதும் உன் கையில் தான் உள்ளது என்றார்.

        நமது வாழ்வில், ஏற்பும் நிராகரிப்பும் அனைவரும் வாழ்வில் சந்திக்கின்ற முக்கியமான ஒன்றாகும். வாழ்வில் பல நேரங்களில் நாம் பலரால் ஏற்றுக் கொள்ளப்படுகிறோம். பலரால் ஏற்றுக் கொள்ளப்படும் பொழுது மனமானது நிறைவடைகிறது. மகிழ்ச்சி மேலோங்குகிறது. பல நேரங்களில் புத்துணர்ச்சி பெற்றவர்களாக பல புதிய புதிய பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். அதேசமயம்,  வாழ்வில் நிராகரிப்பு என்பதும் தவிர்க்க முடியாத ஒன்று. பல நேரங்களில் நாம், பல மனிதர்களால், பல சூழல்களில் நிராகரிக்கப்பட்டு இருப்போம்.  அந்த நிராகரிப்பு மனதிற்கு ஒரு விதமாக வலியைத் தரும். அந்த வலி  அடுத்து நாம் முயற்சியில் ஈடுபடாமல் முடங்கிப் போவதற்கு, நமக்கு உள்ளத்தில் விதையை விதைத்தது போல, அடுத்ததாக நாம் முயற்சியில் ஈடுபடாமல் முடங்கிப் போவதற்கு நமக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.
     ஆனால் வாழ்வில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான செயல், வாழ்வில் ஏற்பும் நிராகரிப்பும் இருக்கத்தான் செய்யும். ஏற்பைக்கொண்டு நாம் தலைக்கனத்தோடு பயணிக்கக் கூடாது.  அதே சமயம் நிராகரிப்பை கண்டு முடங்கிப் போய்விடவும் கூடாது என்பதைத்தான் இன்றைய நாள் வாசகங்கள் வழியாக, இறைவன் நமக்கு அழகாக எடுத்துரைக்கிறார்.

 இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர்கள் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள், இறைவாக்கினர்கள் உங்களிடையே இருக்கிறார்கள். பல நல்ல பணிகளை செய்வார்கள். நலமான மனிதர்களாக இருப்பார்கள். அவரை காண்பவர்கள் நல்ல பணிகளைச் செய்யக் கூடியவர்களாக மாறுவார்கள் என ஒரு  இறைவாக்கினர் எப்படி செயல்படுவார் என்பதையும், உங்களிடையேயும் அப்படிப்பட்ட இறைவாக்கினர்கள் இருக்கிறார்கள் என்ற செய்தியினையும்,  இறைவன் இன்றைய முதல் வாசகம் வழியாக தெளிவாக எடுத்துரைக்கிறார். 

 அதே சமயம் இன்றைய நற்செய்தி வாசகத்தை நாம் வாசிக்கின்ற போது,  சொந்த ஊரில் இறைவாக்கினன் ஏற்றுக்கொள்ளமாட்டான். வாழ்வில் நிராகரிப்பை சந்திப்பான்.  இவன்லாம் ஒரு ஆளு!  இவன் சொல்லி நாம கேட்கணுமா?  என்று சொல்லக்கூடிய மனிதர்கள் வாழ்வில் இருந்து கொண்டிருப்பார்கள் என்பதை எதார்த்தமாக இயேசு உணர்த்துகிறார். வாழ்வில் ஏற்றுக் கொள்ளுவதும் நிராகரிப்பதும் இருக்கத்தான் செய்யும்.  ஏற்றுக் கொள்ளும் போதும், நிராகரிக்கப்படும் போதும், நாம் எப்படி இந்த சமூகத்தில் பயணிக்கின்றோம் என்பதை சிந்தித்துப் பார்க்க இறைவன் இன்றைய நாளில் நம்மை அழைக்கின்றார்.  

           இந்த உலகத்தில் ஒருவன் சரி எனக் கூறியதை இன்னொருவன் தவறு எனச் சொல்லமுடியும். ஒருவன் தவறு என சொல்லுவதை இன்னொருவன் சரி எனவும் சொல்ல முடியும். ஒவ்வொருவரும் தனித்துவமான மனிதர்கள். எனவே நாம் வாழுகின்ற இந்த உலகத்தில், நம்மை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என மகிழ்வது ஒருபுறம் இருந்தாலும், நம்மை நிராகரித்து விட்டார்கள் என்று எண்ணக்கூடிய துக்ககரமான காரியம் மற்றொரு புறம் இருந்தாலும், இந்த இரண்டும் நமது வலுவின்மையையும் வலிமையையும் இந்த சமூகத்தில் வெளிப்படுத்துகின்றன.  வலுவின்மையில் தான் வல்லமை வெளிப்படும் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில், பவுலடியார் வழியாக இறைவன் அழகாக எடுத்துரைக்கின்றார்.  வலுவின்மையில் வல்லமை வெளிப்படும். வெற்றி வரும் போது அது தலைக்கு செல்லக்கூடாது. தோல்வி வரும்போது அது மனதிற்கு செல்லக்கூடாது என்று கூறுவார்கள். ஏனென்றால் தலைகனம் நம்மை மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர்கள் என சிந்திக்க வைத்து, நம்மை நல்ல மனிதர்களாக வாழ விடாது,   இந்த சமூகத்தில் தீய மனிதர்களாக உருவாக்கும். அதுபோலவே தோல்வி  மனதிற்குச் செல்லும் பொழுது உன்னால் முடியாது என்ற வார்த்தைகள் மட்டுமே உள்ளத்தில் அதிகமாக உருவாகி முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக மாறிவிடும். எனவேதான் பெரியவர்கள் சொல்வார்கள்,  வெற்றி தலைக்கும், தோல்வி இதயத்திற்கும் செல்லக்கூடாது என்று. ஆனால் இவை இரண்டும் வாழ்வில் இருக்கும். அது போலத்தான் ஏற்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும் நமது வாழ்வில் இருக்கும்.

அந்த நேரங்களில் நாம் நமது உணர்வுகளை புரிந்து கொண்டு, எப்படி நாம்
நம்மை இந்தச் சமூகத்தில், சூழலுக்கு ஏற்ற வகையில் மாற்றிக் கொண்டு பயணம் செய்கின்றோம் என சிந்திக்க இன்று நாம் அழைக்கப்படுகின்றோம்.  பல நேரங்களில் நாம் பிறரால் ஏற்கப்படும் பொழுது மகிழ்கின்றோம்.
 பிறரால் நிராகரிக்கப்படும் பொழுது வருந்துகின்றோம். இந்த வலுவின்மையான சூழ்நிலையில், நாம் நமது செயல்பாடுகளை சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்து தூய ஆவியானவரின் துணையோடு இந்தச் சமூகத்தில் நலமாக நல்ல பணிகளை மட்டுமே முன்னிறுத்தி பயணிக்கக் கூடியவர்களாக மாறிட, இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம். வாழ்வில் நம்மை பலர் நிராகரித்தாலும்,  நாம் யாரையும் நிராகரிக்காமல் வாழப் பழக வேண்டும்.

 வாழ்வில் பிறர் நம்மை ஏற்றுக்கொள்வது போல, நாமும் அடுத்தவர்களை ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களாக வாழ வேண்டும். இன்று நாம் நல்லது செய்யும் பொழுது கண்டிப்பாக பலவிதமான இன்னல்களை நாம் சந்திக்க நேரிடும். நமது முன்னோர்கள் எதார்த்தமாக கூறுவார்கள், பழுத்த மரத்தில் தான் கல்லடி அதிகமாக விழும் என்று.

 நாம் நல்ல செயலை செய்யும் பொழுது, நம்மை பாராட்டக்கூடிய நபர்கள் உருவாவார்கள்.  அதே சமயம் நம்மை விமர்சனம் செய்யக் கூடியவர்களும் உருவாவார்கள்.  பாராட்டுபவர்களை மட்டும் நாம் மனதில் வைத்துக் கொண்டு,  நாம் அனைத்தையும் செய்வது ஒருபுறம் இருந்தாலும், நம்மை விமர்சிப்பவர்களின் விமர்சனங்களை கேட்டு முடங்கிப் போகக்கூடிய சூழ்நிலைக்கு உள்ளாகக் கூடியவர்களாக நாம் இருந்தாலும்,  இந்த இரண்டுவிதமான சூழ்நிலையில் நல்லதை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களிடமிருந்து ஒரு பாடத்தையும், நிராகரிப்பவர்களிடமிருந்து ஒரு பாடத்தையும் கற்றுக் கொண்டு, வாழ்வில் நாம் எப்படி பயணிக்க வேண்டும் என்ற பாடத்தை கற்றுக் கொண்டவர்களாய், ஒவ்வொரு நாளும் இந்த சமூகத்தில் நலமான நல்ல பணிகளை செய்யக்கூடிய இயேசுவின் பணியாளர்களாக மாறிட,  இறைவன் இன்றைய நாளில் நம்மை அழைக்கின்றார்.  அழைக்கின்ற அந்த இறைவனின் குரலுக்கு செவி கொடுத்து,  வாழ்வில் ஏற்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும் நியதி. இந்த நியதியை புரிந்து கொண்டவர்களாய்,  இத்தகைய சூழ்நிலையில் தூய ஆவியானவரின் துணையோடு, ஞானத்தோடும் விவேகத்தோடும்,  இந்த சமூகத்தில் நலமான, நல்ல பணிகளைச் செய்து ஆண்டவர் இயேசுவின் உண்மையான சீடர்களாக இச்சமூகத்தில் நாம் உருவாகிடவும், பிறரை உருவாக்கிடவும் இறையருளை வேண்டி இணைந்து செபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...