புதன், 30 செப்டம்பர், 2020

நாம் இவர்களை ஏற்றுக் கொள்வோமா...? (1.10.2020)


இன்று "யார் பெரியவர்?" என்ற போட்டியானது எல்லா இடங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நமது சமுதாயத்திலும் கூட ஒரு சில கட்சியில் யார் பெரியவர்? யார் வேட்பாளர்? யார் பதவியேற்பது?போன்ற போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். ஒவ்வொருவரும் யார் பெரியவர்?என்பதை அறிந்து கொள்வதிலும் தன்னை பெரியவராக காட்டிக் கொள்வதிலும் தன்னை மற்றவர்கள் அனைவரும் பெரியவர் என்று சொல்ல வேண்டும் என்பதிலும் ஆசை கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறோம். ஆனால் இயேசு கூறுகிறார், பெரியவர் என்பவர் சிறு குழந்தைகளைப் போல மாற வேண்டும். 

தங்களை சுற்றி இருக்கின்ற சூழலைப் பொறுத்து அந்த குழந்தையின் நடத்தை மாறுபடுகின்றது. குழந்தைகளிடமிருந்து நாம் பலவற்றை கற்றுக் கொள்ள முடியும். சிறுகுழந்தைகள் இயல்பாக பழக கூடியவர்கள்.  மனதில் வஞ்சகம் இல்லாதவர்கள்.சிறுகுழந்தைகள் எப்போதுமே கெட்ட வார்த்தைகள் பேசுவது இல்லை. மாறாக, அவர்கள் தாங்கள் கேட்ட வார்த்தைகளையே தான்பேசுகிறார்கள். 
ஒரு குழந்தையின் வளர்ச்சி பற்றி விஞ்ஞானிகள் உலகம் இவ்வாறாகக் கூறுகிறது. ஒரு குழந்தை தன்னுடைய 40 சதவிகித அறிவை வெளியே இருந்து கற்றுக் கொள்கிறது.60 சதவிகித அறிவை தனது குடும்பத்தில் இருந்தும் தன்னை சுற்றி இருக்கின்ற மனிதர்களிடத்தில் இருந்தும் கற்றுக்கொள்கிறது. நமது செயல்பாடுகளையும் நமது வார்த்தைகளையும் தான் குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர். நம்மிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு முன்பு வரை குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்கின்றனர். இவ்வாறு போட்டி இல்லாமல் பொறாமை இல்லாமல் தன்னிடம் இருப்பதை அடுத்தவரோடு பகிர்ந்து கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

      குழந்தைகளின் இயல்பை குடும்பத்தின் அனுபவத்தின் வாயிலாக அறிந்து கொள்வோம். மெர்லின் என்ற ஐந்து வயது குழந்தைக்கு எட்டு வயதில் ஒரு அண்ணன். அவனுக்கு இதய நோய்‌.
அவனது பெற்றோர் மருத்துவ சிகிச்சைக்கு அவர்களது கையிலிருந்த பணத்தை செலவு செய்துவிட்டு மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தனர். அப்போது மெர்லின் தன்னிடமிருந்த சிறிது பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு மருந்தகத்திற்கு சென்று தன்னிடம் இருந்த ஐந்து ரூபாயைக் கொடுத்து மிராக்கில் தாருங்கள். என் அண்ணனுக்கு மருந்து கொடுக்க வேண்டும் என்று கூறினாள். ஆனால் அந்த மருந்து கடைக்காரர்  அவ்வாறு ஒரு மருந்து இல்லை என்று கூறினார். இதையெல்லாம் அதை பார்த்துக்கொண்டிருந்த அந்த மருந்து கடைக்கு அருகில் இருந்த மருத்துவர்  இவளின் வார்த்தைகளைக் கேட்டு  அவள் அருகில் வருகின்றார். உங்கள் அண்ணனைக் காப்பாற்ற முடியாது மாறாக கடவுள்தான் ஏதாவது மிராக்கல் செய்து காப்பாற்ற வேண்டும் என இதய அறுவை சிகிச்சை நிபுணர் கூறிய வார்த்தைகளை கேட்டு, அந்த மிராக்கள் என்பதை மருந்து என நினைத்துதான் அந்த சிறுமி மருந்துக் கடைக்காரரிடம் மிராக்கள்  மருந்தை கேட்டாள்.இதை அறிந்த மருத்துவர் தன்னை உன் வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு அந்த சிறுமியிடம் கூறினார்.

மெர்லின் அவரை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். அந்தப் புதிய மனிதர் மெர்லின் தன் அண்ணன் மேல் கொண்டிருந்த பாசத்தை கண்டு வியந்தார். ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணராக இருந்த படியால் அந்த சகோதரனுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையையும் மருத்துவச் செலவையும் தானே ஏற்றுக்கொண்டார். சில நாட்களின் தொடர் சிகிச்சைக்குப் பிறகு கடின முயற்சியால் அண்ணன் நலமாக வீடு திரும்பினான்.


இன்று ஒரு குழந்தையை சுற்றி இருக்கக் கூடிய சூழல் தான் அக்குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு குழந்தையின் வளர்ச்சியில் அக் குழந்தையை சுற்றி இருக்கக் கூடிய அனைவருக்கும் பொறுப்பு உள்ளது.இத்தகைய குழந்தைகளைப் போலவே நாம் வாழ வேண்டும் என்று இயேசு அழைப்பு விடுக்கிறார்.இந்தக் குழந்தைகளைப் போல இச்சமூகத்தில் இருக்கக்கூடிய சில நல்லவர்களை நாம் கண்டு கொள்ளவும் அவர்களை ஏற்றுக் கொள்ளவும் இன்றைய நாளில் இயேசு வலியுறுத்துகிறார்.

இந்தக் குழந்தைகளைப் போல நல்ல உள்ளம் கொண்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களை நல்லவர்களை இன்றைய நாளில் நாம் கண்டு கொள்ளவும் அவர்களை கடவுளின் பெயரால் ஏற்றுக் கொள்கிறவரும் விண்ணரசில் மிகப் பெரியவர் ஆவார். 

அடுத்தவர்களின் நலனுக்காக ஒருவர் வீதியில் இறங்கி போராடுகின்றார் என்றால் அவரை நம் சகோதரராக பாவிப்போம்.
ஏனெனில் குழந்தைகள்  அவர்களை கடவுளின் பெயரால் ஏற்றுக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்.


குழந்தைகள் சண்டைகள் வந்தாலும் இணைந்து விளையாட கூடியவர்களாக இருக்கக்கூடியவர்கள். இந்த குழந்தைகளை போலவே சமூகத்தில் எத்தனை அநீதிகள் நடந்தாலும்அதைத் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியாக கருதி அடுத்தவரின் நலனுக்காக அவரது தோள் மேல் கை போட்டுக் கொண்டு, அவர்களோடு இணைந்து செல்லக்கூடிய குழந்தைகளைப் போல எளிய மனம் கொண்ட சில நல்ல உள்ளங்கள் உண்டு. இவர்களை கடவுளின் பெயரால் ஏற்றுக் கொள்ள இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.  

    இவ்வாறாக நல்மனம் படைத்தவர்களில் ஒருவர்தான் இன்று நாம் விழா காணும் புனித குழந்தை ஏசுவின் சிறுமலர் தெரசா. இவர் 1863 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் நாள், பிரான்ஸ் நாட்டில் உள்ள லூயிஸ் மார்ட்டின் தம்பதியருக்கு கடைசி குழந்தையாக பிறந்தார். மிகுந்த பக்தி நிறைந்த இவரது குடும்ப பாரம்பரியத்தை பின்பற்றி இவரும் தன்னுடைய மூத்த சகோதரிகளைப் போல துறவற வாழ்விற்கு தன்னை அர்ப்பணிக்க விரும்பினார். 
     1890ஆம் ஆண்டில் இவர் கார்மெல் மடத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அங்கு தெரேசா தான் செய்த அனைத்தையும் கிறிஸ்துவின் மீது கொண்ட அன்பினால் செய்தார்.
      தனது இல்ல தலைவியின் உத்தரவிற்கு கீழ்ப்படிந்த வராங்க தனது வாழ்வின் நிகழ்வுகளை எல்லாம் ஓர் ஆன்மாவின் கதை என்னும் நூலாக தொகுக்கின்றார். அவர் குறிப்பிட விரும்பும் காரியம் "சிறிய வழி "ஆகும்.தான் செய்யும் சிறு சிறு செயல்களிலும் இயேசுவின் மீது கொண்ட அன்பினால் அவற்றைச் செய்து அதன் வழியாக விண்ணகத்திற்கு ஆன்மாக்களை சேர்த்தவர். இன்று மறைபரப்பு நாடுகளுக்கு பாதுகாவலராக போற்றப்படுகின்றார்.
              இன்று நமது செயல்பாடுகளிலும் இயேசுவின் மீது நாம் கொண்டிருக்கும் அன்பு வெளிப்பட, எளிய மனமும் எல்லோரிடமும் அன்பும் கொண்டவர்களாக விண்ணரசில் பெரியவர்களாக வாழ்ந்திட இன்றைய நாளில் இறையருள் வேண்டுவோம்!

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

நாம் எந்த வகை மனிதர்கள்? (30.09.2020)

இன்றைய வாசகத்தில் நாம் இரு வகை மனிதர்களை காண்கிறோம். முதல் வகை மனிதர்கள் ஒவ்வொன்றையும் பார்த்து பழகி கற்றுக்கொண்டு தாமாக செய்ய முன் வரக்கூடியவர்கள். உதாரணமாக இயேசுவை பின்தொடர தாமாக முன்வந்த சீடனைக் கூறலாம்.

இரண்டாம் வகையைச் சார்ந்த நபர்கள் பிறரால் அழைக்கப்பட்டு தூண்டப்பட்டு பிறருக்காக ஒரு செயலை செய்யக் கூடியவர்கள். 
உதாரணமாக இயேசு ஒருவரை தன் பின்னே வருமாறு அழைக்கிறார். இருவருக்குமே சம உரிமையும் சுதந்திரமும் இருக்கிறது. முதல் நபரும் இயேசுவைப் பின்பற்ற விரும்பினால் பின்பற்றலாம். இரண்டாவது நபரும் பின்பற்ற விரும்பினால் பின்பற்றலாம். 

ஆனால் முதல் நபரிடம் இயேசு தன்னைப் பின்பற்றி வருவதால் அவருக்கு ஒன்றும் கிடைப்பதில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறார். ஏனென்றால் அவன் தானாகவே முன் வந்து இயேசுவை பின்தொடர வந்தவன்.

இரண்டாவது நபரை இயேசு தன் பணிக்கு அழைக்கிறார் ஆனால் அவனோ காரணங்கள் கூறுகிறான். இருந்த போதிலும் தன் பணியை செய்ய முழுமையான ஈடுபாட்டோடு வரவேண்டும் என்று இயேசு அவரிடம் கூறுகிறார்.
  நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் நாம் செய்கின்ற நல்ல செயல்களை நாமாக செய்கின்றோமா? அல்லது அடுத்தவரின் வற்புறுத்தலின் அடிப்படையில் செய்கின்றோமா? சிந்திப்போம்!

தாமாகவே செய்பவர்கள் பலனை எதிர்பாராமல் பணி செய்பவர்களாக கருதப்படுவார்கள்.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. 
         பயனை எதிர்பாராமல் ஒருவர் செய்த உதவியை கடலிலும் மிகப் பெரியது என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். 

     முதல் வகை மனிதர்கள் இந்த வகையைச் சார்ந்தவர்கள். ஒரு நல்ல செயலை செய்வதால் தங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும் என்ற எண்ணத்தோடு இல்லாமல் எந்த கைமாறையும் எதிர்பாராமல் இயல்பாக நன்மை செய்யக் கூடியவர்கள். உதாரணமாக இயேசுவிடம் நான் உம்மை பின் தொடர்வேன் என்று கூறிய மனிதன். இயேசு
அவனிடம் நீ என்னை பின்தொடர்வதால் உனக்கு ஒன்றும் கிடைக்காது என்பதை அவனிடத்தில் தெளிவுபடுத்துகிறார். ஆயினும் அவன் இயேசுவின் போதனைகளால் பணிகளால் கவரப்பட்டு அவரைப்போல வாழ்ந்திட ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் அவரை பின்பற்றுகிறான். நாம் இந்த வகை மனிதர்களா?

இரண்டாம் வகை மனிதர்கள் அடுத்தவர்களுக்காக நன்மை செய்யக் கூடியவர்கள். இவர்கள் எப்போதும் நன்மை செய்து கொண்டிருப்பவர்கள் அல்ல. மாறாக, சில நேரங்களில் அடுத்தவருக்காக நன்மை செய்வார்கள். பல நேரங்களில் ஏன் நன்மைகள் செய்ய வில்லை என்று கேட்டால் பலவித காரணங்களை அடுக்கிக் கொண்டே போவார்கள். உதாரணமாக இயேசுவை பின்தொடர அழைத்தபோது அவன் தன் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வருவதாகக் கூறுகிறான். இவனைப் போலவே தன் நண்பர்களுக்கு நன்மை ஏதும் செய்யாமல் செய்ய இயலாததற்கான காரணத்தை மட்டும் கூறிக் கொண்டு இருப்பவர்கள்.

 இந்த இரு வகை மனிதர்களில் நாம் எந்த வகை மனிதர்களாக இருக்கிறோம் என்பதை சிந்திக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. நாம் ஒரு செயலில் ஈடுபடுகிறோமென்றால் முழுமையான ஈடுபாட்டோடு துவக்கம் முதல் இறுதிவரை தொடர்ந்து அச்செயலில் ஈடுபட வேண்டும். சில நாட்கள் சிலருக்காக மட்டும் என்று அல்லாமல் முழுமையாக உண்மையாக தாமாகவே முன்வந்து பலனை எதிர்பாராது நற்செயல்கள் செய்ய முன்வர வேண்டும். அப்படி நான் செய்யும் போது கலப்பையில் கை வைத்த நாம் திரும்பி பார்க்காமல் கலப்பையை பிடித்தவர்களாக முன் செல்வோம். 

நாம் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் பொழுதுதான் தெரிகிறது , நாம் கடந்து வந்த பாதையை இன்னும் அழகாக கடந்து இருக்கலாமோ என்று. மீண்டும் நடக்கலாம் என்று எண்ணும்போது பாதை முடிந்துவிடுகிறது. நடக்கும்போதே அழகாய் கடந்திடுவோம் நமக்கான பாதைகளில் ...

நமது வாழ்க்கைப் பயணத்தின் லட்சிய பாதைகளை அழகாக மாற்றிட இயேசுவின் அருளை வேண்டி தொடர்ந்து இயேசுவின் பாதையில் பயணிப்போம்.

திங்கள், 28 செப்டம்பர், 2020

எதை நோக்குகிறோம்...(29.09.2020)


1935 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு இரவு நேரத்தில் நியூயார்க் நகரத்தில் இருக்கக்கூடிய பென்சில்வேனியா என்ற ஹோட்டலில் பிரம்மாண்டமான ஒரு அறையில் 2500க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.  ஏன் இவ்வளவு பெரிய கூட்டம் இங்கு என்ன நிகழ்ச்சி நடக்கிறது? ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியா?அல்லது ஏதேனும் ஒரு நடிகர் நடிகைகளின் பிறந்த நாளா? அல்லது அவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை.

 அங்கு கூடியிருந்த அனைவருமே ஒரு நாளேட்டில் வெளிவந்த ஒரு விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டு வந்திருந்தனர். அந்த விளம்பரமானது,

 "திறமையோடு பேசுவது எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டுமா?
தலைமைத்துவ பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டுமா? 
வாருங்கள் 
பென்சில்வேனியா ஹோட்டலுக்கு..."

இந்த விளம்பரத்தை படித்த பலர்தான் அந்த அறையில் கூடியிருந்தவர்கள்.  
அடுத்தவர்களின் நிறைகளை நோக்கவும் அவைகளை அடுத்தவருக்கு அடுத்தவர்களுக்கு அறிவிக்கவும் அதனை நமது வாழ்வில் செயலாக்கி படுத்திக்கொள்ள இறையருளை வேண்டி இணைந்திடுவோம் இந்த இயேசுவின் பாதையில் 
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன்னை நோக்கி வரக் கூடிய நத்தனியேலை பார்த்து இவர் கபடற்றவர் என்று கூறுகிறார். இயேசுவின் வார்த்தைகளால் கவரப்பட்ட நத்தனியேல் என்னை உமக்கு எப்படி தெரியும்? என இயேசுவை நோக்கி கேள்வி எழுப்புகிறார். இயேசுவும் அவருக்கு விளக்கம் கூறும் வண்ணமாக பலவற்றை கூறி அவரை தன் சீடராக மாற்றுகிறார்.  

இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் எதிர்பாராத விதமாக நாம் சந்திக்கக்கூடிய மனிதர்கள் பற்றி நமது மனநிலை எவ்வாறு இருக்கிறது? என சிந்திக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.  

நத்தனியேலை  சந்தித்த இயேசு அவரை கபடற்றவர் என அனைவருக்கும் அறிமுகப்படுத்துகிறார்.  நாம் பல நேரங்களில் ஒரு புதிய நபரை மற்றவருக்கு எவ்வாறு அறிமுகப்படுத்துகிறோம்? அவர்களிடத்தில் இருக்கக்கூடிய நிறைகளை சுட்டிக்காட்டுகிறோமா? அல்லது அவர்களை கிண்டலும் கேலியும் செய்கிறோமா? அல்லது அவர்களிடம் உள்ள குறைகளை பெரிதுபடுத்தி காட்டுகிறோமா? என சிந்திப்போம்.  

இயேசுவைப் போல நேர்மறையான எண்ணங்களை கண்டுகொண்டு, அதை அடுத்தவருக்கு அறிவிக்கக்கூடியவர்களாக நாம் இச்சமூகத்தில் உருவாக வேண்டும்.  மாற்றத்தை விரும்பும் பலரும், மாற்றத்தை முன்வைக்கக்கூடிய பலரும், ஏற்கனவே இவ்வுலகத்தில் இருக்கக்கூடிய நிறைகளை எல்லாம் விடுத்து, குறைகளை மட்டுமே பெரிதுபடுத்தி பேசி மாற்றத்தை விதைக்க விரும்புகிறார்கள்.  மாற்றம் அவசியமான ஒன்றே! ஆனால் குறைகளை சுட்டிக்காட்டி மட்டுமே மாற்றத்தை எதிர்பார்ப்பதை விட, நிறைகளையும் மேற்கோள்காட்டி, நிறைகள் அதிகமாக வளர வேண்டிய எண்ணத்தையும் சூழலையும் உருவாக்க கூடிய மாற்றமும் அவசியமானதாகும்.

அத்திமரம் -அது ஜெபிப்பதற்காக ஒன்று கூடும் இடம். இயேசு நத்தனியலிடம் இருந்த ஆர்வம் மிகுந்த செப மனநிலையைக் கண்டார். அதை அனைவருக்கும் எடுத்துரைத்தார். அத்தகைய மாற்றமே அனைவர் உள்ளத்திலும் உருவாக வேண்டும் என்பதை தன் செயலால் வெளிக்காட்டினார். இயேசுவை பின்தொடரக்கூடிய நாம் நமது எண்ணத்தில் நிறைகளை நோக்குகிறோமா? அல்லது அடுத்தவர் குறைகளை நோக்குகிறோமா? என சிந்திப்போம் ... 

நாம் சந்திக்கிறவர்களிடத்தில் நிறைகளை நோக்கவும், அவைகளை அடுத்தவர்களுக்கு அறிவிக்கவுமான உயர்ந்த பண்பினை நமது வாழ்வில் செயலாக்கப்படுத்த இறையருளை வேண்டி இணைந்திடுவோம் இன்று, இறை இயேசுவின் பாதையில்!

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

குழந்தை மனம் வேண்டும் (28.09.2020)


குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று! 
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று!
                         என்று அழகான கவிதை ஒன்று கூறுகிறது. 
                   இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு சிறு பிள்ளையை போல ஆண்டவரை ஏற்றுக்கொள்கின்ற எவரும் அவரை அனுப்பிய தந்தையையே ஏற்றுக் கொள்கிறார் என்கிறார்.
சிறுகுழந்தையின் உள்ளம் எப்பொழுதும் மகிழ்ச்சியை தன்னகத்தே கொண்டிருக்கும். தன்னுடைய மகிழ்ச்சியை புன்னகையின் மூலமும் மலர்ந்த முகத்தின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். ஒரு நிமிடம் அதற்கு துன்பங்கள் வந்தாலும் அடுத்த நிமிடம் அந்த துன்பத்தையும் உதறிவிட்டு வாழ்க்கையின் இயல்பான மகிழ்ச்சியோடு தன்னை இணைத்துக் கொள்ளும். 
                        இவ்வாறாக சிறு பிள்ளையை போல தன்னை ஏற்றுக் கொள்பவர் பெரிய வராகக் கருதப்படுவார் என்று இயேசு கூறுகிறார். 
                        சிறுசிறு நல்லெண்ணங்கள் நற்சிந்தனைகளை உருவாக்கும்.
நற்சிந்தனைகள் நல்ல செயல்பாடுகளை உருவாக்கும்.
நல்ல செயல்பாடுகள் நல்வாழ்க்கையை உருவாக்கும்.
                  நமது சிறிய எண்ணங்களில் சிறிய காரியங்களில் நாம் இறைவனுக்கு பிரமாணிக்கமாய் இருந்தால், பெரிய காரியங்களில் ஆண்டவர் நம்மை உயர்த்துவார். அவருடைய விண்ணகத்தில் பங்கெடுக்கும் உரிமையை நமக்கும் தருவார். 

        ஒரு பாடல் ....
குழந்தை மனம் வேண்டும்        
                             - இறைவா!
 குழந்தை மனம் வேண்டும்!

மதம் இனம் மொழி பேதங்கள் தெரியாத குழந்தை மனம் வேண்டும்!
சமத்துவம் அன்பில் நாளும் வளர்ந்திடும் குழந்தை மனம் வேண்டும்!
பகைமை கயமை சிறிதும் அறியா குழந்தை மனம் வேண்டும்!
மன்னித்து மறக்கும் பண்பு ஒன்றே கொண்டிடும் குழந்தை மனம் வேண்டும்!

மண்ணக வாழ்வின் மாண்பினை காத்திட குழந்தை மனம் வேண்டும்!
விண்ணக வாழ்வை இகமதில் கண்டிட குழந்தை மனம் வேண்டும்!
வான்புகழ் இயேசுவின் நல்லாசி பெற்றிட குழந்தை மனம் வேண்டும்!
வானக அரசின் திறவுகோல் அடைந்திட குழந்தை மனம் வேண்டும்!
     நாம் வாழும் இந்த உலகில் சிறு பிள்ளையை போன்று நமது மகிழ்வை அனைவருடனும் பகிர்ந்து கொள்பவர்களாக இம்மண்ணகத்தில் நாம் வாழும் இடங்களில் விண்ணகத்தை உருவாக்க நல்ல எண்ணம் கொண்டவர்களாக தாழ்ச்சியான உள்ளத்தோடு வாழ சிறு குழந்தையின் மனம் வேண்டும் என்று வரம் கேட்போம்!

சனி, 26 செப்டம்பர், 2020

நீங்கள் நதியா? தேங்கிய குட்டையா? (27.09.2020)


நாம் வாழும் இந்த பூமி
நலமாகிட வேண்டாமா!
நலிவுற்றவர் வாழ்வினில் நீதி
நின்று நிலைத்திட வேண்டாமா!
இயேசுவே காட்டிய வழி உண்டு!
இயங்கிட நமக்கு ஒரு நெறி உண்டு!
               
                 என்று இந்த பூமியில் நம்மை நாம் சரிப்படுத்திக் கொள்வதன் வழியாக நீதியும் சமத்துவமும் செயலாக்கம் பெற நலிவுற்றவரின் வாழ்வு நலம் பெற இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.
 
                      
          வண்ணங்கள் ஒழுங்காய் சேர்ந்தால்தான் வானவில்.
         எண்ணங்கள் ஒழுங்காய் சேர்ந்தால் தான் வாழ்க்கை.

                இன்றைய முதல் வாசகத்தில் தங்களது விருப்பத்தின்படி வாழ்ந்துவிட்டு தலைவரின் செயல்பாடுகள் சரியில்லை என்று கூறுபவர்களின் சுயநலப் போக்கை ஆண்டவர் கண்டிக்கின்றார். ‌நேர்மையாளர் தனது நேர்மைத்தனத்தை விட்டு விலகி இருப்பதும், தவறு இழைப்போர் தங்களது தவறுகளை திருத்திக் கொள்ளாமல் அவைகளை விட்டு விலகாமல் இருப்பதும் பாவம் என்கிறார்.
            ஆனால் தம்மைத் திருத்திக் கொண்டு சரியான நேரத்தில் சரியான காரியங்களைசெய்வோர் சிறப்பாக வாழ்வர் என்று இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாக ஆண்டவர் உரைக்கிறார்.
           
            இரண்டாம் வாசகத்தில் கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும் என்று கூறும் புனித பவுலடியார் தூய ஆவியாரின் வரங்களையும் கனிகளையும் நம்மில் நிறைவாக்கிட, அன்புக்கும் உறவுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்திட அழைக்கின்றார்.
             எல்லோருக்கும் எல்லாமுமாய் வாழ்ந்த கிறிஸ்து "எல்லோரும் ஒன்றாய் இருப்பார்களாக" என்று கூறும் இறையாட்சியின் விழுமியங்களை நமது சமத்துவ உறவின் வழியாக வளர்த்திட அழைக்கின்றார்.

                       
                   இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரு வித உவமைகளை பற்றி இயேசு குறிப்பிடுகின்றார். தந்தை பணி செய்ய அழைத்தபோது தன்னால் முடியாது என்று மறுத்த மூத்த மகன் மனம் மாறி மீண்டும் சென்று பணியைச் செய்து முடிக்கின்றான்.

 ஆனால் இளைய மகனும் தந்தை அழைத்த போது உதவி செய்வதாகக் கூறுகிறான். ஆனால் அவன் செல்லாமல் அப்படியே இருந்து விடுகிறான்.
               மழை நீரால் இணைந்து ஓடுகின்ற நதியின் பயணத்தில் இடையிடையே குப்பைகள் வந்தாலும் தன்னுடைய பயண ஓட்டத்தில்
குப்பைகளையும் இழுத்துச்சென்று ஓரம்கட்டிவிட்டு, தொடர்கின்ற தனது பயணத்தில் தெளிவான தனது இலக்கில் தெளிந்த நீராக ஓடி, செல்லும் இடமெல்லாம் வளம் சேர்க்கிறது. 
குப்பைகளால் தடுத்து நிறுத்த படுகின்ற நதி தனது பாதைகளை மாற்றிச் செல்வது போல நாமும் அன்பினால் தந்தையின் விருப்பத்திற்கு செவி கொடுக்காத  தன்னுடைய எதிர்மறை எண்ணங்களையும், வீண்பெருமையையும் விவாதங்களையும் ஓரம்கட்டிவிட்டு கிறிஸ்துவின் உண்மை சீடனாக அவரது பணி செய்ய தொடர்ந்து ஓடுகிறான்.

              ஆனால் குட்டையில் விழுகின்ற முதல் மழைத்துளி தூய்மையானதாக இருந்தாலும் அது தனது அடுத்த நிலைக்கு கடந்து செல்லாமல் அந்த குட்டையிலேயே தங்கிவிடுவதால் புழு பூச்சிகள் உருவாகும் தூய்மையற்ற நீராக மாறி விடுகின்றது. இவ்வாறு தேங்கிய குட்டை தன்னிலையிலிருந்து மாறிவிடும் பொழுது அதனால் அந்த குட்டைக்கும் பயனில்லை. அதனை சுற்றி வாழ்கின்றவர்களுக்கும் பயனில்லை.

இன்றைய நாளில் நமது வாழ்வில் எத்தனை தடைகள் வந்தாலும் நதிகள் தன் பாதையை மாற்றி இலக்கை நோக்கி பயணித்து கடலோடு சங்கமிப்பதுபோல செல்லும் வழி எங்கும் எத்தனை தடைகள் வந்தாலும் நதியைப் போல வாழ கற்றுக் கொள்கிறோமா?

           அல்லது தேங்கிய குட்டை போன்று தீமைக்கு மேல் தீமை செய்து நமது எதிர்மறை எண்ணங்களால் நமக்கும் பிறருக்கும் தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கிறோமா?

         நதி போன்று நன்மைகள் செய்வதில் நாம் கருத்தாய் இருந்தால், அதில் நம்மைத் தொடர்ந்து வளர்த்துக் கொள்வோம்.
    
                 தேங்கிய குட்டை போன்ற எதிர்மறை எண்ணங்களால் நிறைந்திருந்தால், நம்மை மாற்றிக் கொண்டு நலமாய் வாழ, பிறரையும் வாழ வைக்க உறுதி கொள்வோம்!
       
              இன்றைய நாளில் நமது பாதைகளைத் தெளிவுபடுத்திக் கொண்டு நமது இறையாட்சி பயணத்தை தொடருவோம்!

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

துன்பமில்லாத வாழ்வா...? (26.09.2020)


வெற்றியைப் போலவே ஒரு தோல்வியும் நல்லது!
 வேப்பம் பூவிலும் சிறு தேன்துளி உள்ளது!
குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையம்மா!
விளையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையம்மா!

              ஒருநாள் காலை வேளையில் பொழுது புலரும் நேரத்தில் காட்டிற்குள் மலர்களாலும் கனிகளாலும் நிறைந்திருந்த ஒரு மரத்தின் பாகங்கள் பேசிக்கொண்டன. நான்தான் மணம் வீசி அனைவரையும் கவர்கின்றேன் என்று மலர் பெருமைப்பட்டுக் கொண்டது. எனது பழங்களை உண்கின்றவர்கள் புத்துணர்வு பெறுகிறார்கள் என்று கனி பெருமையாக பேசியது. நான் இருப்பதாலேயே நீங்கள் அனைவரும் நலமாக இருக்கிறீர்கள் என்று இலைகள் அனைத்தும் கர்வப்பட்டுக் கொண்டன. மரத்தின் தண்டு உங்கள் அனைவரையும் பத்திரமாக பாதுகாப்பவன் நான்தான் என்று பதில் மொழி கூறியது. 
                         
                           ஆனால் இவை அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த வேர் மட்டும் எந்த வார்த்தையும் சொல்லாமல், யாருக்கும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், பூமிக்குள் படர்ந்து சென்று தண்ணீரை தேடிக் கொண்டிருந்தது. 



இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, அவர் கூறுவதை மனதில் வைத்துக்கொள்ள சீடர்களிடம் கூறுகிறார். மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட்ட இருப்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் என்று வலியுறுத்துகிறார். 
மக்கள் கடவுளின் வல்ல செயல்களையும் அற்புதங்களையும் கண்டு இறைவனை புகழ்கிறார்கள். வியந்து போய் நிற்கின்றார்கள். ஆனால் இயேசுவோ தான் சந்திக்க இருக்கின்ற பாடுகளை மனதில் வைத்துக் கொள்ளுமாறு சீடர்களிடம் கூறுகிறார். 
               அன்னை மரியாளிடத்தில் சிமியோன், 
" உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவும்" என்று கூறிய வார்த்தைகளை மனதில் இருத்தி சிந்தித்து வந்தார். அதுபோல இயேசுவும் தன்னுடைய பாடுகளை மனதிலிருத்தி சிந்திக்க அழைப்பு விடுக்கிறார். 
           
             பூமிக்குள் பரவிச் சென்று கற்களிலும் கடினமான பாறைகளிலும் கூட தான் மோதுவதை பெரிதுபடுத்தாமல், யாரிடமும் முறுமுறுக்காமல், தன்னுடைய கடினமான பணியின் வழியாக மரத்தை வாழவைத்துக் கொண்டிருக்கும் வேர்களைப் போல இயேசு தான் சந்திக்க இருக்கின்ற துன்பங்களை மனதில் வைத்துக்கொள்ள அழைக்கிறார். 
            கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார். அவர், மக்கள் பலரை மாட்சியில் பங்குகொள்ள அழைத்துச் செல்ல விரும்பியபோது, அவர்களது மீட்பைத் தொடங்கி வழி நடத்துபவரைத் துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார். இது ஏற்ற செயலே, என்று
எபிரேயர் 2:10 இல், புனித பவுலடியார் கூறுகிறார்.
     
அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.
எபிரேயர் 5:8  
                    இவ்வாறாக ஆண்டவரின் துன்பங்களைப் பற்றி இறைவார்த்தை வெளிப்படுத்துகிறது.
     
வேரின் துன்பங்கள் தாவரங்களை வளப்படுத்துகின்றன. 
ஒரு தாயின் துன்பங்கள் குழந்தைக்கு புதிய வாழ்வை கொடுக்கின்றன.
தந்தையின் துன்பங்கள் குழந்தையை தலைநிமிரச் செய்கின்றன.
விவசாயியின் துன்பங்கள் நல்ல உணவுப் பொருட்களை விளைவிக்கின்றன.
            இவ்வாறு எத்தனையோ காரியங்களை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். இன்றைய நாளில் நாம் வாழ்வில் சந்திக்கின்ற துன்பங்களையும் இயேசு தன் வாழ்வில் சந்தித்த துன்பங்களையும் நாம் சற்று சிந்தித்துப் பார்ப்போம். இயேசுவின் துன்பங்கள் மனித குலம் முழுமைக்கும் மீட்பைக் கொண்டு வந்தது. அமைதியைக் கொண்டு வந்தது.

இன்றைய நாளில் நமது துன்பங்கள் நமக்கு எதைக் கொண்டு வருகின்றன என்று சிந்திப்போம். 
        எப்போதும் நமது துன்பங்களை நினைத்து சதா புலம்பிக் கொண்டே இருப்பதால் நமது எண்ணங்களையும் வார்த்தைகளையும் வீணடிக்கிறோமா?
    
நமது கோபத்தால், நமது மனச்சோர்வினால், நமது உடலையும் உள்ளத்தையும் காயப்படுத்திக் கொண்டிருக்கிறோமா?
     
       அல்லது

 துன்பங்கள் கற்றுத் தருகின்ற பாடங்களை மனதில் வைத்து நன்மைகள் புரிவதற்காக வழங்கப்பட்ட நமது வாழ்வினை வளப்படுத்துகின்றோமா?
            
     உளியின் பாடங்களுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டு அழகாக உருவாகும் சிற்பத்தைப் போல நமது துன்பங்கள் வழியே வாழ்வின் வழிகளை கற்றுக்கொள்ள, ஆண்டவரின் வழியில் நடந்திட,  பிறருக்கும் வழிகாட்டிட,  நமது துன்பங்களை ஏற்றுக் கொள்வோம்!

வியாழன், 24 செப்டம்பர், 2020

நீங்கள் தேடுபவர்களா...? (25.09.2020)

கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்: காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார். ஆயினும், கடவுள் தொடக்க முதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது.
சபை உரையாளர் 3:11

கிறிஸ்து இயேசுவில் பிரியமானவர்களே!
           கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாக செய்கின்றார் என்று இன்றைய முதல் வாசகம் வழியாக நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது.


இயேசுவின் சீடர்கள்அனுப்பப்பட்ட தமது பணி முடிந்து திரும்பிய போது ஏரோது அரசன் குழம்பினான் என்று அறிந்தோம். சீடர்கள் பல்வேறு வல்ல செயல்களையும், நோய்களை குணப்படுத்தியதையும் ஏரோது அறிந்தபோது இவர் யார்? என்று இயேசுவைப் பற்றி அறிய முற்படுகிறான். அவரைத் தேடவும் அவரை காணவும் வாய்ப்பு தேடுகின்றான். இறையாட்சியின் பயணத்திட்டப் பாதையில் இயேசு பயணித்துக்கொண்டிருந்த வேளையில் இயேசு தந்தையின் திருவுளத்தை தேடுவதை "அவர் தனியே ஜெபித்து கொண்டிருந்தார்" என்பதிலிருந்து நாம் காண்கிறோம். 

மக்களின் புகழ்ச்சிக்கும் ஏரோது அரசனின் உயர் மரியாதை உள்ள தேடலுக்கும் இடம் கொடுக்காமல் தந்தையின் திருவுளத்தை தேடியவராக ஜெபித்துக் கொண்டிருக்கிறார். தன்னைப் போலவே தன் சீடர்களும் இறை திருவுளத்தை தேடுபவர்களாக இருக்கிறார்களா? என்பதை அறிய இயேசு மக்கள் தன்னை யார் என்று சொல்கிறார்கள்? என்று சீடர்களிடம் கேட்கிறார்.
மக்களோடு தங்கி மக்களுக்கு பணியாற்றிய சீடர்கள், இயேசுவின் வல்லமையை மக்கள் புகழ்ந்து பேசியதை அவரிடம் கூறுகிறார்கள். அதில் மகிழ்ச்சியும் காண்கிறார்கள். 
                  ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்? என்று இயேசு கேட்டபொழுது, புனித பேதுரு இறைவெளிப்பாட்டை உணர்ந்தவராக, நீர் மெசியா வாழும் கடவுளின் மகன் என்று உரைக்கிறார். 
                  மக்களின் புகழ்ச்சிகளையும், ஏரோதின் தேடலையும் விட இறைவனின் திருவுளமே மேலானது, மேன்மையானது என்பதை உணர்ந்தவராக இயேசுவின் வார்த்தைகள் வெளிப்படுகின்றன. 
                   மிகவும் விரும்பத்தக்கதான புகழ்ச்சியின் பாதையை விட
இறை திருவுளம் வெளிப்படுத்தும் கடினமான பாதை மேன்மையானது என்பதை இயேசு நன்றாக அறிந்திருக்கிறார்.

            "உளி விழும் என்று அழும் கற்கள் சிலை ஆவதில்லை" என்பதற்கேற்ப தான் சந்திக்கவிருக்கின்ற சிலுவைப் பாடுகள் வழியாக தன்னையே இறைவனிடம் ஒப்புக் கொடுக்கிறார், தந்தை இறைவனின் மாட்சியில் இணைந்திட.

                 இயேசுவின் சீடர்களாகிய நாமும் அன்றாட வாழ்வில் சந்திக்கின்ற துன்பங்கள், சோதனைகள், இயலாமைகள், உடல்நல குறைபாடுகள் மத்தியிலும் கூட, அனைத்திற்கும் மேலாக இறையாட்சியை தேடுபவர்களாக, இறை அன்பின் சீடர்களாக இறையாட்சியின் வித்துக்களாக, மக்கள் பணியில் வேரூன்றி இறையாட்சியை மலரச் செய்வோம்! 

புதன், 23 செப்டம்பர், 2020

குழப்பம் வேண்டாம் (24.09.2020)


அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்

 என்பதை கூறும் திருக்குறளின் வழியாக அஞ்ச வேண்டிய காரியங்களுக்கு மட்டுமே அஞ்ச வேண்டும் என திருவள்ளுவர் கூறுகிறார்.

நடந்தவற்றை அறிந்து ஏரோது மனம் குழம்பினான் என்பது இன்றைய நற்செய்தியின் முதல் வாக்கியமாக அமைந்துள்ளது. 

புயலுக்கு பின் அமைதி என்று கூறுவார்கள். எந்தவொரு சூழலிலும் எந்த ஒரு நிகழ்விலும் குழப்பத்தை உற்று நோக்கினால், ஆர்வத்தோடு தேடினால் தெளிவு பிறக்கும். தெளிவான விடை கிடைக்கும் என்பார்கள். 
 இன்றைய வாசகத்தில் ஏரோதுவின் குழப்பமும் அவன் இயேசுவைக் காண வாய்ப்பு தேடுவதும் அவனது உண்மையான தேடுதலின் வாய்ப்பு அல்ல. இதே ஏரோதின் முன்னோர் தான் இயேசு  பிறந்த போதும் கூட ஞானியரின் வழியாக அவர் பிறந்த இடத்தை தேடி கண்டுபிடிக்க முயற்சித்தானர்.
இயேசுவை காணாததால் இரண்டு வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகள் அனைத்தையும் கொல்லச் செய்து பெரும் பாவத்தை ஈட்டினார். இன்றைய வாசகத்திலும் கூட ஏரோது இயேசுவை காண வாய்ப்பு தேடுவது இயேசுவை அறிந்துஅவரைப்போல நன்மைகள் செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தால் அல்ல. மாறாக  நீதியற்ற முறையில் கொலை செய்த திருமுழுக்கு யோவான் தான் உயிர்த்தெழுந்து விட்டாரோ என்ற அச்ச உணர்வு, மேலும் இயேசுசெய்கின்ற அற்புதங்கள் மற்றும் வல்ல செயல்கள் வழியாக இயேசு அரசர் ஆகிவிடுவாரோ, தன்னுடைய பதவி பறிபோய்விடுமோ எனும் அச்ச உணர்வினால் தான். அரசனாக இருந்தும்கூட உள்ளத்தில் பாதுகாப்பற்ற சூழல் அவனை குழப்பத்திற்கு தள்ளியது. குழப்பத்தில் இருந்து தெளிவுபெற மனம் இல்லாதவனாக இயேசுவைக் காண வாய்ப்பு தேடுகிறான்.

இன்று நமது வாழ்க்கையிலும் கூட நம்மைச் சுற்றி நடக்கின்ற நிகழ்வுகள் நமக்கு சற்று இடறலாக இருந்தால் நாம் அதனை ஏற்றுக்கொள்ள அஞ்சுகிறோம். மனம் குழம்புகிறோம். ஆனால் காலங்களை எல்லாம் கடந்த இறைவன் முக்காலமும் வாழ்கின்ற கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாக செய்கிறார் என்பதை உணர்வோம். இறைவனின் கரம் நம்மை வழி நடத்துகின்ற பொழுது நமக்கு நடக்கின்ற அனைத்து காரியங்களுமே நம்மை வளர்ப்பதாகவோ அல்லது நம்மை பக்குவப்படுத்துவதாகவோ இருக்கும் என்பதை உணர்ந்தவர்களாக நமது அன்றாட நிகழ்வில் இறை வல்லமையை உணர இன்றைய நாளில் இறையருளை இறைஞ்சுவோம்!

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

இறையாட்சி பணி செய்வோம் வாருங்கள் .... (23.09.2020)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே 

ஒரு வயதான தந்தைக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அவர் மிகவும் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்தார். அப்போது அவருடைய மகன்கள் அவரது உடலை ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்லறைக்கு எவ்வாறு கொண்டு செல்வது என்று பேசிக் கொண்டிருந்தனர். மூத்த மகன், ஒரு வாகனம் ஏற்பாடு செய்து தந்தையின் உடலை கொண்டு செல்லலாம் என்றான். இரண்டாவது மகன் ஒரு குதிரை வண்டி ஏற்பாடு செய்து கொண்டு செல்லலாம் என்றான். மூன்றாவது மகனோ, ஆட்களைத் தயார் செய்து அவர்களிடம் கூறி விட்டால்,  அவர்கள் கொண்டு வந்து விடுவார்கள் என்று கூறினான். இதனை கேட்டுக் கொண்டிருந்த அந்த வயதான தந்தை, அவர்களைப் பார்த்து  நீங்கள் யாரும் கஷ்டப்பட வேண்டாம். அந்த அறையின் ஓரத்தில் இருக்கின்ற எனது கைத்தடியை எடுத்துக் கொடுங்கள். நான் இப்பொழுதே நடந்து கல்லறைக்குச் சென்று விடுகிறேன் என்று கூறினார். 

 உண்மை, நீதி, அன்பு இவற்றுக்கான நமது போராட்டத்தில் நமது பிள்ளைகள் கூட  நமக்கு எதிராக செயல்படுகின்ற நிலை ஏற்படும். ஆனால் நம் மீதான உறுதியை நாம் என்றும் இழந்து விடக்கூடாது. கைத்தடியை எடுத்துக் கொடுங்கள் நானே  சென்று விடுகிறேன் என்று கூறிய  தாத்தாவை போல  நாம் நம்மீதும் நம்மை இயக்கக் கூடிய இறைவன் மீதும் ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக, நமது செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள  வேண்டும் .
இன்றைய நற்செய்தி வாசகத்தில்  இயேசு தம் சீடர்களை பணிக்கு அனுப்புகிறார். அது போல நம்மையும் பணிக்குச் செல்ல அழைப்பு விடுக்கும் வகையில் இன்றைய வாசகங்கள் அமைந்துள்ளன. இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக பணிக்கு அனுப்பப்படக் கூடிய சீடர்களுக்கு இயேசு அறிவுரை கூறுகிறார். பணிக்குச் செல்லும்போது பொருளையோ, பணத்தையோ, மிதியடியையோ  நம்பிச்செல்ல வேண்டாம் என்கிறார். இன்று ஆண்டவர் இயேசுவின் பணி செய்ய செல்லக்கூடிய நாம் அனைவரும் ஆண்டவர் இயேசுவின் பணி என்ன? என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
              
உண்மை, அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவம் இதுவே ஆண்டவர் இயேசு கிறிஸ்து கொடுக்கக் கூடிய பணியாகும். இந்த பணியை செய்வதற்கு நாம் அடுத்தவரின் துணையையோ அல்லது பணத்தையோ  நாடாமல் இறைவனை மட்டும் முழுமையாக ஏற்றுக் கொண்டவர்களாக, அவர் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இத்தகைய பணியை இச்சமூகத்தில் செய்ய நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். 

இத்தகைய இறையாட்சி பணியை  செய்து கொண்டிருக்கும் போது நாம் பலவிதமான இன்னல்களை சந்திக்க நேரிடும். 

நாம் அமைதியை ஏற்படுத்த முயலும்போது நமது வாழ்வில் அமைதியை இழக்க நேரிடலாம். 

உண்மைக்காக நாம் வீதியில் இறங்கும் போது உண்மையற்ற முறையில் கைது செய்யப்படலாம். 

சமத்துவத்தைப் போதிக்கும் போது நம்முடைய நடத்தையில் களங்கத்தை ஏற்படுத்த கூடிய சூழ்நிலைகள் உருவாகலாம். 

ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது அசையாத நம்பிக்கை கொண்டவர்களாக நாம் உண்மை, அன்பு, நீதி என்ற ஆண்டவர் இயேசுவின் பணிகளை இயேசுவின் சீடர்கள் முழுமூச்சோடு செய்தது போல நாமும் செய்ய அழைக்கப்படுகிறோம்.  
 "அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது.
 அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள்".
(1 பேதுரு 5:9) இல் புனித பேதுரு கூறுவது போல, உண்மை, அன்பு, நீதி என்ற இயேசுவின் பணியினை இச்சமூகத்தில் செய்யும் போது உண்மைக்கு மாறான சூழல்களும், அநீதியான செயல்களும் பலரின் வழியாக நம்மை விழுங்குவதற்கு காத்துக் கொண்டிருக்கும்.  அதை எல்லாம் கண்டு அஞ்சிவிடாமல்,  துணிவோடு மற்றவற்றின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை தவிர்த்து ஆண்டவர் மீது  மட்டும் நம்பிக்கை கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும். அப்படி இருந்தோமாயின் நாமும் இயேசுவின் சீடர்கள் நோய்களை குணமாகியது போல, பேய்களை ஓட்டியது போல, அன்பையும், நீதியையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் இச்சமூகத்தில்  நிலைநாட்ட முடியும்.

இறையாட்சி பணியை முழு மூச்சுடன் செய்யும்போது வரக்கூடிய அனைத்து விதமான இடர்பாடுகளையும் ஏற்றுக் கொண்டு, அவற்றைக் கண்டு அஞ்சி பாதை மாறாமல் இறுதிவரை இயேசுவின் உண்மை சீடர்களாக பயணத்திட இன்றைய நாளில் இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கின்றார். அவரின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய், வாருங்கள் செல்வோம் ஆண்டவர் இயேசுவின் உண்மை சீடர்களாக மாறி, அவரது பணியை இவ்வுலகில் செய்து இறையாட்சியை மலரச்செய்ய...

திங்கள், 21 செப்டம்பர், 2020

நீ என் சகோதரனா...(22.09.2020)


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே ....

"இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவரே என் தாயும் சகோதரரும் ஆவார் ..."


இன்றைய நற்செய்தி வாசகங்கள் நாம் உண்மையில் இறைவன் இயேசுவின் சகோதர சகோதரிகளா?என்ற கேள்வியை எழுப்பும் வகையில் அமைகிறது.  இயேசுவை காண வந்த தாயும், சகோதரர்களும் அவரை பார்ப்பதற்காக வெளியே காத்திருந்த சூழலில் அங்கிருந்தவர்கள் இயேசுவிடம் வந்து உன்னை சந்திப்பதற்காக உன் தாயும் உன் சகோதரர்களும் காத்திருக்கிறார்கள் என்று கூறிய போது இயேசு கூறிய வார்த்தைகள்  யார் என் தாய்? யார் என் சகோதரர்கள்? என்பதாகும்.
இந்த வார்த்தைகளை பிடித்துக்கொண்டுதான் பலர் அன்னை மரியாவை  விமர்சிக்கக் கூடிய செயலில் ஈடுபடுகிறார்கள்.

"ஒன்றின் துவக்கம் அல்ல
 முடிவே கவனிக்கத்தக்கது"

என்ற சபை உரையாளரின் வாக்கிற்கிணங்க நாம் இன்றைய நற்செய்தி வாசகத்தை முழுமையாக வாசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இயேசு யார் என் தாய்?, யார் என் சகோதரர்கள்? என கேள்வி எழுப்பி விட்டு, கூடியிருந்தவர்களை பார்த்துக் கூறினார்:  இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி வாழ்வரே என் தாயும் சகோதரரும் ஆவார் எனக் கூறினார்.

குழந்தையாக இயேசுவை வயிற்றில் சுமக்க வேண்டும் என்ற இறைவார்த்தையை கபிரியேல் தூதர் மரியாவிடம் சொன்னதை ஏற்றுக் கொண்டு, இயேசுவை தன் வயிற்றில் சுமந்தாள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இறைவனிடமிருந்து வந்த வார்த்தையைக் கேட்டு அதன்படி தன் வாழ்வை அமைத்துக் கொண்டவர் அன்னை மரியாள் என்பதை சுட்டிக் காட்டும் விதமாகவும், நானும் இறைவார்த்தையை நமது செயலாக்க வேண்டும் என்பதையும் தான் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக நமக்குத் தஉணர்த்துகிறார்.
இன்று நாம் வாழக்கூடிய உலகத்தில் பல நேரங்களில் நாம் இயேசுவின் உண்மை சீடர்கள் என கர்வம் கொள்கின்றோம். ஆனால் உண்மையில் இயேசுவின் வார்த்தைகளான இறை வார்த்தைகளின் படி நமது வாழ்வை அமைத்து இருக்கின்றோமா? என்ற கேள்வியை இன்று நாம் எழுப்பி பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.

இறை வார்த்தையை ஏற்று அதனை செயலாக்க படுத்தக்கூடிய ஒவ்வொருவரும் இயேசுவின் சகோதரர்களாக மாறுகிறார்கள். நாமும் இயேசுவின் சகோதரர்களாக மாற வேண்டுமாயின் இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நம் வாழ்வை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.


"பேயாய் யஉழலுஞ் சிறுமனமே 
பேணாய்  என்சொல் இன்றுமுதல்
 நீயாய் ஒன்றும் நாடாதே
 நினது தலைவன் யானேகாண் ..."


அதாவது பேய்போல் அலைகின்ற அற்ப மனமே, இத்தினம் தொடங்கி என் அறிவுரையை கடைபிடிப்பாய். நீயாக உன் இஷ்டப்படி எதையும் விரும்பிச் செல்லாதே.... உன் எஜமானன் நானேயாவேன். 

என்ற பாரதியாரின் வார்த்தைகளுக்கு இணங்க அனுதினமும் அற்ப காரணங்களுக்காக அலைந்து திரிய கூடிய நமது மனதினை கட்டுப்படுத்தக் கூடியவர்களாக, அதன் எஜமானன் நாம் என்பதை உணர்ந்தவர்களாக, இறைவார்த்தையைக் கேட்பதோடு நிறுத்தி விடாமல் அதனை உள்ளத்தால் ஏற்று செயலில் வெளிகாட்டி இறைவார்த்தையின் படி நம் வாழ்வை அமைத்துக் கொண்டு இயேசுவின் உண்மையான சகோதரர் சகோதரிகளாக மாற உறுதியேற்றவர்களாக தொடர்ந்து இயேசுவின் பாதையில் பயணிப்போம்... 

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

நாம் இவரைப் போல மாற முடியுமா...? (21.09.2020)


இயேசு கிறிஸ்துவில் அன்புக்குரியவர்களே இன்று நம் தாய் திருஅவையானது பன்னிரு திருத்தூதர்களில் ஒருவரான  புனித மத்தேயுவை நினைவு கூறுகிறது.

இவர் இயேசுவின் வாழ்வை எடுத்துரைக்கும் நூல்களை எழுதிய நான்கு நற்செய்தியாளர்களுள் இவரும் ஒருவர்.

மத்தேயு கத்தோலிக்க திருஅவை கிழக்கு மரபுவழி திருவிழாவை லூதரனியம் மற்றும் ஆங்கிலிக்கன் திருஅவை ஆகிய கிறிஸ்தவ  பிரிவுகளில் புனிதராகப் போற்றப்படுகிறார். 

இவரது விழா, மேலைக் கிறிஸ்தவ நாடுகளில் செப்டம்பர் 21ந்தேதி கொண்டாடப்படுகிறது. இவரது திருப்பண்டங்கள் இத்தாலியின்  சலர்னோ கதீட்ரலில் பாதுகாக்கப்படுகின்றன.

இயேசு கிறிஸ்துவைத் தொடக்கம் முதலே பின்பற்றிய சீடர்களுள் மத்தேயுவும் ஒருவர் (மத்தேயு 9:9). கப்பர்நாகுமில் வரி வசூலிப்பவராக பணியாற்றிய மத்தேயுவை, இயேசு அழைத்து அவரோடு விருந்துண்டுதனது பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவராக்கினார் (மத்தேயு 10:3)

மாற்கு (3:18), லூக்கா (6:15) நற்செய்திகளும், திருத்தூதர் பணிகள் (1:13) நூலும் மத்தேயுவைத் திருத்தூதர்களில் ஒருவராக அடையாளம் காட்டுகின்றன. மேலும் மாற்கு (2:14), லூக்கா (5:27) நற்செய்திகளில் இவர் அல்பேயுவின் மகன் லேவி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். இவர், ஏரோது அந்திபாசுக்காக யூத மக்களிடம் இருந்து வரி வசூலிக்கும் பணியாற்றியதாக நம்பப்படுகிறது.

புதிய ஏற்பாட்டின்படி, இயேசுவின் உயிப்புக்கும், விண்ணேற்றத்துக்கும் மத்தேயுவும் ஒரு சாட்சியாக இருக்கிறார்.

புதிய ஏற்பாடு மத்தேயுவின் பெயரைக் குறிப்பிடும்போது, சில இடங்களில் திருத்தூதர் தோமாவோடு  இணைத்து கூறுகிறது. இயேசுவின் இறையரசு பணிக்கு துணை நின்ற திருத்தூதர்கள்  ஒருவராகவும், இயேசுவின் உயிப்புக்கும், விண்ணேற்றத்துக்கும் ஒரு சாட்சியாகவும் புதிய ஏற்பாடு மத்தேயுவைச் சுட்டிக்காட்டுகிறது. இயேசுவின் விண்ணேற்றத்துக்கு 

சுமார் 15 ஆண்டுகள், மத்தேயு யூதர்களுக்கு நற்செய்தி பணியாற்றியதாக நம்பப்படுகிறது. பின்பு அவர் எத்தியோப்பியா, மாசிதோனியா, பெர்சியா, பார்த்தியா பகுதிகளுக்கு சென்று, அங்கு வாழ்ந்த மக்களுக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்.  கத்தோலிக்க திருஅவை கிழக்கு மரபுவழி திருஅவை ஆகியவை மத்தேயு இரத்தம் சிந்தி மறைசாட்சியாக இறந்ததாக பாரம்பரியமாக நம்பிக்கை நம்பிக்கை கொண்டுள்ளன.

சமூகத்தால் பாவி என அடையாளம் காட்டப்பட்ட இந்த நபரை இயேசு தன் பணிக்கு அழைப்பதைதான் இன்றைய நாளில் நாம் நற்செய்தி வாசகத்தின் வழியாக வாசிக்க கேட்கின்றோம். 

கடவுளை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைக்கும் போது அவர் நமக்காக 99 அடிகள் எடுத்து வைப்பார் என கூறுவார்கள்.  சமூகத்தால் புறம்தள்ளப்பட்ட வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒரு நபரை ஆண்டவர் இயேசு கிறிஸ்து தேடிச் செல்கிறார். அவரை தன் பணிக்கு அழைக்கிறார். ஆண்டவரின் அழைப்பை கேட்ட மத்தேயு, தன் பணிகளை விட்டுவிட்டு ஆண்டவர் இயேசுவை பின் தொடர்கிறார் .

நம் உள்ளத்தில் ஒரு கேள்வியை எழுப்பி பார்ப்போம் இப்போது இறைவன் நம் முன் வந்து நீ செய்யும் அனைத்து பணிகளையும் விட்டுவிட்டு என் பின்னே வா என்றால் எத்தனை பேர் அவர் பின்னே செல்ல தயாராக இருக்கின்றோம்?.

இந்த கேள்விக்கு நம்மில் பலர் சொல்லக்கூடிய பதில் நான் தயாராக இருக்கிறேன் என்பதுதான். ஆனால் உண்மையில் நமது வார்த்தைகளை நம்மால் செயல்வடிவமாக்க முடியுமா? என சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம்.

மத்தேயுவை இயேசு அழைத்தது தன் பணிக்கு. இயேசுவின் பணி என்ன? என்ற கேள்வி எழுப்பினோம் என்றால். அன்றைய யூத சமூகத்தில் சட்டத்தின் பெயராலும்,  கடவுளின் பெயராலும் அடிமைப்படுத்தப்பட்டு கொண்டிருந்த மக்களுக்கு தெளிவை வழங்குவதையே ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன் பணியின் முதன்மையாக வைத்திருந்தார்.  இறைவனின் அரசாகிய இறையரசை இம்மண்ணில் விதைத்திட மனிதனை மனிதன் மதித்து வாழ்ந்திட இயேசு மனிதனாக இவ்வுலகிற்கு வந்து மனிதனின் நலனுக்காக நலமான வற்றை செய்ததன் விளைவாக மரணத்தை ஏற்கும் நிலை உருவானது. இதுவே இயேசுவின் பணி இந்தப் பணியைச் செய்யவே அவர் அன்று மத்தேயு வையும் அழைத்தார் என்று நம்மையும் அழைக்கின்றார். உண்மையில் நாம் அனைவரும் செல்ல தயாரா? என்ற கேள்வியை நம்முள் எழுப்பி பார்ப்போம்.

இன்று நாம் வாழக்கூடிய இந்தச் சமூகத்தில் நடக்கக்கூடிய அநீதிகளை எதிர்த்து எத்தனையோ நபர்கள் வீதியில் இறங்கி போராடுகிறார்கள்.  பலர் உரிமைக்காகவும், நீதிக்காகவும்  மண்ணுலகில் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடிய சூழல் அனுதினமும் எங்கு அதிகரித்து வருகிறது. இவர்களோடு இணைந்து சமூகத்தின் நீதிக்காகவும், உண்மை காகவும், துன்புறுவோரின் துயர் துடைக்கவும் நாம் அனைவரும்  இயேசு செய்த பணியை செய்ய அழைக்கப்படுகிறோம்.  

அழைத்த இயேசுவின் வார்த்தை களுக்கு தன்னை முழுமையாக கையளித்து இயேசுவைப் பின்தொடர்ந்த மத்தேயு தன் வாழ்வின் இறுதிவரை அவரது பணியில் நிலைத்திருந்தார். எனவேதான் ஆண்டுகள் பல கடந்தாலும் அகில உலக திருஅவை இன்று அவரை நன்றியோடு நினைவு கூறுகிறது.     இயேசுவைப் பின்பற்றுகிறோம், நாங்களும் இயேசுவின் சீடர்கள்,  இயேசு கற்பித்த மதிப்பீடுகளின் படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கூடியவர்கள் நாங்கள் என்ற மனநிலையோடு இச்சமூகத்தில் கிறிஸ்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய நாம் அனைவரும் உண்மையில் மத்தேயுவைப் போல உண்மையான சீடர்களாக வாழுகின்றோமா? என்ற கேள்வியை நமக்குள் எழுப்புவோம். புனித மத்தேயுவைப் போல இயேசுவின் உண்மைச் சீடராக நாமும் நமது வாழ்வில் இயேசுவைப் பிரதிபலிக்க கூடியவர்களாக வாழ இறைவனது அருளை நாடி தொடர்ந்து அவர் காட்டிய பாதையில் பின் தொடர்வோம். 


சனி, 19 செப்டம்பர், 2020

பணிக்கு தயாராவோம் ...(20.09.2020)


பார்வையற்ற பிச்சைக்காரன் ஒருவனுக்கு அரசன் மதிய உணவு கொண்டுவந்து தருவதாக கூறி சென்றான்.மறுநாள் பிச்சைக்காரன் அரசன் கொண்டுவரும் உணவை வயிறார சாப்பிட வேண்டும் என்ற ஆவலுடன் காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல் காத்திருந்தான். வழக்கம்போல அவனுக்கு பல நபர்கள் உணவு கொண்டு வந்து கொடுத்தனர் அவன் அவற்றை வாங்க மறுத்து விட்டான். மணி இரண்டானது , மூன்றானது, ஐந்தானது. பார்வையற்ற பிச்சைக்காரனுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. இறுதியாக 6 மணியளவில் அரசன் வந்தான். இன்று அரச உணவு உண்டாயா? எங்கே பொற்காசுகள்? குதிரை? என்று அரசன் கேட்டான்.
அப்போது பிச்சைக்காரன் நீங்கள் இப்போதுதானே வருகிறீர்கள். நான் உங்களுக்காக காலையிலிருந்து சாப்பிடாமல் காத்துக்கொண்டிருக்கிறேன் என்று வருத்தத்தோடு கூறினான். அப்பொழுது அங்கிருந்த சாது ஒருவர் கூறினார், அரசே உங்களது காவலன் கொண்டுவந்த உணவை இவன் வாங்க மறுத்து விட்டான். எனவே அவன் அருகில் இருந்த மற்ற பிச்சைக்காரனுக்கு அந்த உணவை கொடுத்து விட்டுச் சென்று விட்டான் என்றார்.
         அவ்வாறே அரசன் கொடுத்த பொற்காசு மூட்டையை கொண்டு வந்த இரண்டாவது பாதுகாவலன் அரச உணவை உண்டு கொண்டு இருந்த மற்றொரு பிச்சைக்காரனிடமே அந்த பொற்காசு மூட்டையையும் அரசர் கொடுத்ததாக கொடுத்துச் சென்றான். 
         மூன்றாவதாக வந்த பாதுகாவலன் அரசன் கொடுத்தனுப்பிய குதிரையை பொற்காசு மூட்டை வைத்திருந்த பிச்சைக்காரனிடமே கொடுத்துவிட்டு சென்றான். 
           அந்த பார்வையற்ற பிச்சைக்காரன் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை தவற விட்டதினால் அவனது வாழ்வு திசைமாறிப் போனது. அவனுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு மற்றவனுக்கு வாழ்வாக மாறியது. 
             இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவரை காண்பதற்கு வாய்ப்புள்ள போதே அவரைத் தேடுங்கள். அவர் அருகில் இருக்கும் போது அவரைக் கண்டு கொள்ளுங்கள் என்று இறைவாக்கினர் எசாயா அழைப்பு விடுக்கின்றார்.

இன்று நம்மோடு பேசி மகிழ்ந்த பல உறவுகள் நம்முடன் இல்லை என்பதை நாம் அறிவோம். இவ்வுலகில் பிறந்து இருக்கும் அனைவருக்கும் ஒரு நாள் இறப்பு என்பது உண்டு. ஆனால் அந்த இறப்பு எப்பொழுது நிகழும் என்பது யாருக்கும் தெரியாது.எனவே நாம் உயிரோடு வாழ்கின்ற காலத்திலேயே ஆண்டவரை ஆர்வமாய் நாடி தேட நம் அருகில் இருப்பவர்களில் ஆண்டவரை கண்டுகொள்ள அவர்களின் துன்பத்தில் உடனிருந்து ஆண்டவருக்கு பணி செய்ய இறைவாக்கினர் எசாயா அழைக்கின்றார்.
          
         இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே. நான் இறந்தாலும் ஆண்டவரோடு இணைந்து இருப்பதால் அது எனக்கு ஆதாயமே என்று கூறுகிறார். இவ்வாறு வாழ்விலும் சாவிலும் ஆண்டவரோடு இணைந்து இருக்கிறார். அவரைப்போலவே நாமும் கிறிஸ்துவின் பிள்ளைகளாக வாழ நாம் கற்றுக்கொண்ட விசுவாசத்தில் நிலைத்திருக்க நமது துன்பங்களிலும், சோதனைகளிலும் ஆண்டவரோடு இணைந்து இருக்க அழைப்பு விடுக்கின்றார். 
           இன்று இந்த கொரோனாவின் காரணமாக நமக்கும் நோய் வந்துவிடுமோ, நாமும் இழப்பை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம் பரவலாக உள்ளது. ஆயினும் புனித பவுலடியாரைப்போன்று இரவு பகல் பாராது தனது கடமையாற்றிய எண்ணற்ற மருத்துவர்களையும், செவிலியர்களையும், காவல்துறையினரையும், துப்புரவு பணியாளர்களையும் நன்றியுடன் நினைத்துப் பார்ப்போம். அவர்களை, அவர்களின் பணிகளை இறைவன் ஆசிர்வதிக்க ஜெபிப்போம். 

          இன்றைய நற்செய்தி வாசகத்தில் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தன்னுடைய தோட்டப் பணியாளர்களை விடியற்காலையிலேயே வேலைக்கு அமர்த்தி விடுகின்றார்.
              பிறகு சற்று நேரம் கழித்து சந்தை வெளியில் வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களை தனது தோட்டத்தில் பணியமர்த்துகிறார். இன்னும் மற்ற இடங்களுக்கு 3 மணிக்கும் மாலை 5 மணிக்கும் கூட சென்று பணியாளர்களை வேலைக்கு அமர்த்தினார். இங்கு திராட்சைத் தோட்ட பணி என்பது இறையாட்சி பணியாக அமைகின்றது. உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள் என்று கூறிய இயேசு ஆண்டவர் இன்றைய வாசகத்தின் வழியாக அவரோடு இணைந்து பணியாற்ற நமக்கு அழைப்பு விடுக்கின்றார். அன்று ஊர் ஊராய் நகர் நகராய் மக்களைத் தேடிச் சென்ற இயேசு அவரோடு இணைந்து என்றும் இறைபணியில் உடல் உள்ளம் மற்றும் ஆன்ம தேவையில் இருப்பவர்களை தேடிச்சென்று இறை பணியாற்ற அழைப்பு விடுக்கின்றார். 
               இன்றைய நாட்களில் பல நேரங்களில் மற்றவர்களை நேரில் சந்திப்பதற்கு நமக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டாலும் கூட அலைபேசி வழியாகவோ அல்லது இணையத்தின் வழியாகவோ பிறரை சந்தித்து ஆற்றுப்படுத்த ஆறுதல்படுத்த இயேசுவின் திராட்சைத் தோட்டத்தின் உண்மை பணியாளர்களாக இறையாட்சி பணிபுரிய நம்மை தயார் செய்வோம்!

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

உங்கள் உள்ளம் எந்த நிலம்...? (19.09.2020)

"நீயே என் கோயில் ஆண்டவனே!
உன்னில் நிலையாக வாழ்வேன் ஆசையிலே!
வார்த்தையின் வடிவினில் உன்னை பார்க்கிறேன்!
வாழ்க்கையே வழிபாடாய் உன்னை பார்க்கிறேன்!
செயல் உள்ள நம்பிக்கையில் உன்னை பார்க்கிறேன்!".

என்று இறைவனை இறைவார்த்தையாக, நம்முடைய வாழ்வாக, நம்பிக்கையாக பாடி ஜெபிக்கிறோம்.

"இறைவார்த்தை உயிர் உள்ளது ஆற்றல் வாய்ந்தது இரு பக்கமும் வெட்டக் கூடிய எந்த வாளினும் கூர்மையானது" என்று எபிரேயர் 4: 12 இல் நாம் வாசிக்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் விதைப்பவர் உவமை பற்றி இயேசு கூறுகிறார். நான்கு வகை மனிதர்கள் பற்றியும் நான்கு வகை நிலங்கள் பற்றியும் எடுத்துக் கூறுகிறார்.

1. வழியோரம் விழுந்த விதைகள்:

நான் நல்லவன். அடுத்தவன் நல்லவன் அல்ல என்ற மனநிலை உடையவர்கள் இவ்வகை மனிதர்கள். வானத்துப் பறவைகள் வந்து கொத்தி சென்றதால் தன்னிலை மாறிய விதைகளை  போல தன்னைச் சுற்றி வாழும் மனிதர்கள் மற்றும் தன்னை சுற்றி நடக்கின்ற நிகழ்வுகள் தீமைமையானவை என்று கூறி தனது பொறுப்புகளையும் கடமைகளையும் தட்டிக்கழிக்கின்றவர்கள்.

2. பாறை மீது விழுந்த விதைகள்: 

அடுத்தவன் நல்லவன். நான் நல்லவன் அல்ல என்ற மனநிலை உடையவர்கள் இவ்வகை மனிதர்கள். இவர்கள் தங்களுக்கு கிடைக்கும் சிறு வாய்ப்புகளையும் சிறு உதவிகளையும் கூட உதாசீனப்படுத்திவிட்டு, தன்னையே ஒரு குறுகிய வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்கிறவர்கள். விளக்கின் வெளிச்சத்தில் விழுந்து மடியும் விட்டில் பூச்சிகள் போன்றவர்கள் இவர்கள்.

3. முச் செடிகளுக்கு நடுவில் விழுந்த விதைகள்:
நானும் நல்லவன் அல்ல. அடுத்தவனும் நல்லவன் அல்ல என்ற மனநிலை உடையவர்கள் இவ்வகை மனிதர்கள்.
 இவர்கள் தங்களது வாழ்க்கை நிகழ்வுகள், தங்கள் கவலைகள், தங்களது சோதனைகள் இவைகளையே பெரிதுபடுத்துகிறவர்கள். இதனால் தங்களது நிம்மதியையும் இழந்து அடுத்தவர்களின் நம்பிக்கையையும் இழந்து, எப்போதும் ஒருவித தயக்கத்தையும், சோர்விலுமே தங்களுடைய வாழ்க்கையை நடத்திச் செல்கின்றவர்கள். தங்களது வாழ்க்கையிலும் முன்னேறாமல், மற்றவர்களையும் முன்னேற விடாமல், துக்கங்களிலும் துயரங்களிலுமே சுகம் காண்பவர்கள். இவர்களால் யாருக்கும் எவ்வித பயனும் இல்லை.

4. நல்ல நிலத்தில் விழுந்த விதைகள்:
நானும் நல்லவன். என்னை சுற்றி வாழ்கின்ற மனிதர்களும், இந்த உலகம் முழுவதுமே நல்லவை என்று இறைவனின் படைப்பில் ஆனந்தம் கொள்கின்ற மனிதர்கள் இவ்வகை மனிதர்கள்.
இவர்கள் இறைவனின் ஆசீர்வாதங்களையும், கொடைகளையும் அதிகமாக தங்களது வாழ்க்கையில் உணர்பவர்கள். தங்களது எண்ணங்களில் தூய்மையும் தெளிவான சிந்தனையும் முன்னோக்கிச் செல்லக்கூடிய ஆர்வமும் உடையவர்கள். தங்களோடு உடன் இருப்பவர்கள் சோற்வுற்றாலும் அவர்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி நன்மைகளில் வழி நடத்துபவர்கள். மற்றவர்களையும் மனிதர்களாக மதிப்பவர்கள். மனித நேயத்திற்கும் மனித மாண்பிற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். 
இத்தகைய மனிதர்களால் உலகம் நிறைந்து இருக்கும் பொழுது இம்மண்ணைகமே விண்ணகம் ஆகின்றது.

இந்த நால்வகை மனிதர்களில் நாம் எந்த வகையில் இருக்கின்றோம் என்று சிந்திப்போம். நல்ல நிலத்தில் விழுந்த விதை போன்று ஒளியாக, நீராக, காற்றாக தனது வாழ்க்கையில் வருகின்ற அனைத்து நிகழ்வுகளையும் இறைவனின் ஆசீர்வாதமாக ஏற்றுக் கொள்பவர்களாக நம்மை மாற்றிக் கொண்டு வாழ நல்ல நிலமாக நமது உள்ளத்தை இறையருளால் பண்படுத்துவோம்.

வியாழன், 17 செப்டம்பர், 2020

தொடர் முயற்சி தொடரட்டும் ... (18.09.2020)


ஒரு நேர்காணலில் இளைஞர்கள் பல பேர் விண்ணப்பம் போட்டிருந்தார்கள். வந்தவர்களை எல்லாம் வடிகட்டி பார்த்த போது கடைசியாக இரண்டே இரண்டு இளைஞர்கள் மட்டுமே மிஞ்சி இருந்தார்கள்.
இருவரும் தகுதியை பொறுத்தவரையில் சரிநிகர் சமமாக பெற்றவர்களாக விளங்கினர். வல்லுநர் குழு முடிவாக இருவரிடமும் ஒரே ஒரு கேள்வியை கேட்டது 

உங்களுக்கு இந்த வேலை கிடைக்கவில்லை என்றால் எப்படி உணர்வீர்கள்? 

முதல் இளைஞன் நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று நினைப்பேன் என்று பதில் சொன்னான்.  வல்லுநர் குழு அவனை நீ போகலாம் என்று சொன்னது. இரண்டாவது இளைஞனிடம் அதே கேள்வியை கேட்டார்கள். நீங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று நினைப்பேன் என்று மறுமொழி கூறினான். நீ வேலையில் சேரலாம் என்று ஒருமித்த குரலில் உடனே வேலை வாய்ப்பை வழங்கியது அந்த வல்லுநர் குழு.  

கூர்மையாக சிந்தித்துப் பார்த்தால் இரண்டு இளைஞர்களும் சொன்ன பதில்களில் உள்ள வேறுபாடு நமக்குப் புலனாகும். நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று நம்பிக்கை இல்லாமல் விரக்தியான ஒரு மனநிலையில்  முதல் இளைஞன்.  ஆனால் இரண்டாவது இளைஞனும் நம்பிக்கை ததும்பி நிற்கும் வண்ணம் எழுச்சிமிக்க மனநிலையோடு நீங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று உரைத்தான். வேலைவாய்ப்பு என்ற வெற்றிக்கனியை அவன் எட்டிப்பிடித்தான்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு நகர் நகராக ஊர் ஊராகச் சென்று இறையாட்சி பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார்.  மேலும் பல விதமான நோய்களில் இருந்து மக்களை குணமாக்கினார் என நாம் வாசிக்க கேட்கின்றோம். இன்றைய வாசகங்கள் வழியாக நாம் அனைவரும் எந்த ஒரு செயலை செய்தாலும் முழுமையான மனநிறைவோடு நம்பிக்கையோடு தொடர்ந்து செய்திட வேண்டும் என்பதை இயேசுவிடம் இருந்த நாம் கற்கலாம்.  

மேலே சொன்ன கதையில் இறுதி நேரம் வரை நம்பிக்கையை இழக்காது உறுதியோடு இருந்த இளைஞன் தன் வார்த்தைகளால் தன் வேலையை தனக்கு உரியதாக மாற்றிக் கொண்டது போல,  இயேசுவும் இந்த மண்ணில் வாழ்ந்த காலத்தில் பல நேரங்களில் பல விதமான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இறைபணியை நம்பிக்கையை இழக்காது, முழுமூச்சோடு செய்து வந்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  

இயேசுவின் இந்த உறுதியான தன்னம்பிக்கை நிறைந்த, நம்பிக்கை ஊட்டக்கூடிய இந்த பணியின் விளைவாக பலர் தங்களது உடைமைகளை விற்று அவருக்கு பணிவிடை செய்தார்கள் என நாம் இன்றைய வாசகங்களில் வாசிக்கின்றோம்.  

இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் தடைகளை கண்டு துவண்டுவிடாமல், கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி, தன்னம்பிக்கையோடும், நம்பிக்கையோடும் எடுத்த செயலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு தொடர் முயற்சியில் ஈடுபட நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம் . 
வாழ்க்கையில் நாம் எப்போதும் வாய் மூடி மவுனியாக அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டும் என்பதில்லை. சில நேரங்களில் நம் சுயரூபத்தைக் காட்ட வேண்டும். தேவைப்பட்டால் சில நேரங்களில் விஸ்வரூபம் எடுக்கும் வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் நாம் முத்திரையை பதிக்க முடியும் . 

விழிகளுக்கு தெரியாமல் புதைந்து கிடப்பதை தோண்டிப் பார்க்க துடைப்பவனே சிகரத்தை தொடுகிறான்

என்பார்கள் நாமும் நமது வாழ்வில் விடாமுயற்சியோடும், தன்னம்பிக்கையோடும் இயேசுவைப் போல இறுதிவரை இறையாட்சி பணியாற்றுவதில் தொடர்ந்திட இறை அருளை வேண்டியவர்களாலலாய் இயேசுவின் சீடர்களாக அவரை பின் தொடர்வோம். 

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...