ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

"எண்ணங்கள் தூய்மையாகட்டும்..."


"மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்.
வாழும் வகை புரிந்து கொண்டான்.
மனிதனாக வாழ மட்டும் 
மனிதனுக்கே தெரியவில்லை."

உலக இலக்கியங்கள் அனைத்தும் அறமாகிய தர்மத்தை தான் போதிக்கின்றன.  உலகில் உள்ள அனைத்து மதங்களும் அன்பாய் இருங்கள் என்று போதிக்கின்றன. ஆனாலும் நாள் தவறாமல் கொலைகள், கொள்ளைகள், போர் மரணங்கள் என்பவற்றை கேள்வியுரும்போதெல்லாம் வளர்ச்சியுற்ற மனித அறிவு தலைகுனிந்து நிற்கிறது என்றால் அது மிகையாகாது.

பகவத்கீதை நீதி சொல்லும் நூல் தான். ஆயினும் அது ஒரு மதம் சார்ந்தது.

கிறிஸ்தவ நூலான விவிலியம் சகோதர பாசத்தை கூறுகிறது. அதுவும், மதம் சார்ந்த நூல்தான்.

சாந்தியும், சமாதானமும் எங்கும் நிலவட்டும் என்று இஸ்லாமிய வேத நூலான குர்ஆன் எடுத்துரைக்கிறது. இதுவும், மதம் சார்ந்த நூலே.

இவ்வாறு மதங்கள் அனைத்தும் நீதியையும், அன்பையும் எடுத்துரைக்கும் போது, இதன் அடிப்படையில் இயங்கக்கூடிய மனிதர்களை எதன் அடிப்படையில் மதிக்கலாம்? என்ற ஒரு கேள்வியை எழுப்பி பார்த்தால், நம்மில் பலர் கூறுவது: செல்வத்தால், பதவியால், அழகால் என பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.  ஆனால் இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனும் தன் எண்ணத்தால் மதிக்கப்பட வேண்டும். எண்ணங்கள் தூய்மையாக இருக்கும்போது, நமது செயல்களும் தூய்மையாக அமையும்.  

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கை சூம்பிய ஒருவரை நலமாக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்கின்றார். ஆனால் பரிசேயரும், சதுசேயரும் ஓய்வுநாளில் இயேசு அவரை நலமாக்கினால் அவரை ஓய்வுநாள் சட்டத்தை மீறியதாக கூறி குற்றம் சாட்டலாம் என்ற எண்ணத்தோடு இயேசுவை உற்று நோக்குகிறார்கள்.  தம்மைச் சுற்றி உள்ளவர்களின் தீய எண்ணங்களை அறிந்த இயேசு, அவர்களை நல்வழிப்படுத்த அவர்களிடையே கேள்வியை எழுப்புகிறார்.  ஆனால் அவர்களோ இயேசுவின் கேள்விக்கு மறுமொழி கூறாது அமைதிகாக்க, அவர்களின் எண்ணத்தை அறிந்த இயேசு நல்லதை செய்து, அனைவரையும் அவரைப்போல நல்லது செய்ய அழைப்பு தருகின்றார்.

இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் சட்டங்களை மட்டுமே வெறுமனே பிடித்துக் கொண்டிருப்பதை விடுத்து, நாம் ஒருவர் மற்றவருக்கு பயன்தரக் கூடிய நல்ல செயல்களை செய்ய இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.  


ஒரு நாட்டை ஆண்ட பேரரசன் பிறந்தநாள் விழாக் கொண்டாடினான். சிறந்த பிறந்தநாள் பரிசை கொடுப்பவருக்கு அவன் ஒரு மாபெரும் பரிசளிப்பதாக அறிவித்தான். உடனே  ஆடையென்ன, ஆரவாரமென்ன, பொண்னென்ன,  மணியென்ன, மாட மாளிகை, கூட கோபுரமென்ன பரிசுகள் குவிந்து கொண்டே இருந்தன . கடைசியாக ஒரு கிழவி தள்ளாடி, தள்ளாடி அரண்மனைக்குள் நுழைந்தாள்.  அரசனின் பக்கத்தில் சென்று நான் யார் என்று பார்க்கிறாயா?  உன் அம்மாவோட அரண்மனை தோழி, உன்னை தூக்கி வளர்த்தவள் நான். ஊரெல்லாம், நாடெல்லாம் உன் பேச்சுதான். எல்லாரையும் நீ நல்லா வச்சுருக்க. ஆமா, நீ நல்லா இருக்கிறியா ?ன்று கேட்டால் அந்த மூதாட்டி. உடனே,  அரசன் கண்ணிலிருந்து கண்ணீர் கொட்டியது. அரசனும் அந்த மூதாட்டியை பார்த்து நான் நன்றாக இருக்கிறேன் என்று கூறினான்.  உடனே அந்தப் பாட்டி சரி நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு படிக்கட்டுகளில் இருந்து இறங்கி கிளம்ப தொடங்கினாள். அரசன் எழுந்து அவையோரை பார்த்து என் பரிசு இந்த பாட்டடிக்கு. காரணம் நீங்கள் எல்லாம் நீங்கள் விரும்பியதை கொடுத்தீர்கள். ஆனால் இவளோ நல்லா இருக்கிறாயா? எனக் கேட்டு, நான் தேடி அலையக் கூடிய அன்பை எனக்கு பரிசாக கொடுத்தாள் என்று கூறி அந்த மூதாட்டிக்கு பரிசுகள் பல வழங்கி, பாராட்டி அனுப்பினான்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இடம் பெற்ற கை சூம்பிய நபரின் உள்ளார்ந்த மனதின் தேடல் தன்னுடைய உடல்நலன் என்பதாகும். இதை உணர்ந்த இயேசு அவனை அனைவர் முன்னிலையிலும் எழுப்பி நிறுத்தி, அவனுக்கு உடல்நலம் தருகிறார்.  அடுத்தவரின் நலனை முன்னிறுத்தி நல்ல செயலை செய்வதில் இயேசு சிறந்து விளங்குகிறார்.  ஆனால் இயேசுவின் காலத்தில் அவரோடு வாழ்ந்த மற்றவர்களோ, இயேசுவின் செயலில் குறை கண்டுபிடிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு பிறர் நலனை முன் நிறுத்தாது, அன்பை முன் நிறுத்தாது, பகைமையை தங்களுக்குள் முன்னிறுத்திக் கொண்டு செயல்படுகிறார்கள். 
நாமும் நமது வாழ்வில் பல நேரங்களில் பகைமை உணர்வையும், சுயநல எண்ணத்தையும் மனதில் கொண்டு பிறருக்கு நலம் தரக்கூடிய நல்ல செயல்களை செய்வதற்கான அனைத்து விதமான வாய்ப்புகள் இருந்தும், அதை செய்யாமல் இருந்து கொண்டிருக்கிறோம். இந்நிலையிலிருந்து மாற்றம் பெற்று ஆண்டவர் இயேசுவை போல அடுத்தவர் நலனில் அக்கறை கொள்ள கூடியவர்களாக, நாம் இச்சமூகத்தில் திகழ்ந்து, இயேசுவின் சீடர்கள் என்பதை நமது செயலால் அகிலத்திற்கு  வெளிகாட்ட இறையருளை நாடியவர்களாக இயேசுவின் சாட்சிகளாக இம்மண்ணில் திகழவோம். 

"எண்ணங்கள் தூய்மையாகட்டும்..." 

1 கருத்து:

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...