வெற்றியைப் போலவே ஒரு தோல்வியும் நல்லது!
வேப்பம் பூவிலும் சிறு தேன்துளி உள்ளது!
குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையம்மா!
விளையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையம்மா!
ஒருநாள் காலை வேளையில் பொழுது புலரும் நேரத்தில் காட்டிற்குள் மலர்களாலும் கனிகளாலும் நிறைந்திருந்த ஒரு மரத்தின் பாகங்கள் பேசிக்கொண்டன. நான்தான் மணம் வீசி அனைவரையும் கவர்கின்றேன் என்று மலர் பெருமைப்பட்டுக் கொண்டது. எனது பழங்களை உண்கின்றவர்கள் புத்துணர்வு பெறுகிறார்கள் என்று கனி பெருமையாக பேசியது. நான் இருப்பதாலேயே நீங்கள் அனைவரும் நலமாக இருக்கிறீர்கள் என்று இலைகள் அனைத்தும் கர்வப்பட்டுக் கொண்டன. மரத்தின் தண்டு உங்கள் அனைவரையும் பத்திரமாக பாதுகாப்பவன் நான்தான் என்று பதில் மொழி கூறியது.
ஆனால் இவை அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த வேர் மட்டும் எந்த வார்த்தையும் சொல்லாமல், யாருக்கும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், பூமிக்குள் படர்ந்து சென்று தண்ணீரை தேடிக் கொண்டிருந்தது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, அவர் கூறுவதை மனதில் வைத்துக்கொள்ள சீடர்களிடம் கூறுகிறார். மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட்ட இருப்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் என்று வலியுறுத்துகிறார்.
மக்கள் கடவுளின் வல்ல செயல்களையும் அற்புதங்களையும் கண்டு இறைவனை புகழ்கிறார்கள். வியந்து போய் நிற்கின்றார்கள். ஆனால் இயேசுவோ தான் சந்திக்க இருக்கின்ற பாடுகளை மனதில் வைத்துக் கொள்ளுமாறு சீடர்களிடம் கூறுகிறார்.
அன்னை மரியாளிடத்தில் சிமியோன்,
" உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவும்" என்று கூறிய வார்த்தைகளை மனதில் இருத்தி சிந்தித்து வந்தார். அதுபோல இயேசுவும் தன்னுடைய பாடுகளை மனதிலிருத்தி சிந்திக்க அழைப்பு விடுக்கிறார்.
பூமிக்குள் பரவிச் சென்று கற்களிலும் கடினமான பாறைகளிலும் கூட தான் மோதுவதை பெரிதுபடுத்தாமல், யாரிடமும் முறுமுறுக்காமல், தன்னுடைய கடினமான பணியின் வழியாக மரத்தை வாழவைத்துக் கொண்டிருக்கும் வேர்களைப் போல இயேசு தான் சந்திக்க இருக்கின்ற துன்பங்களை மனதில் வைத்துக்கொள்ள அழைக்கிறார்.
கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார். அவர், மக்கள் பலரை மாட்சியில் பங்குகொள்ள அழைத்துச் செல்ல விரும்பியபோது, அவர்களது மீட்பைத் தொடங்கி வழி நடத்துபவரைத் துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார். இது ஏற்ற செயலே, என்று
எபிரேயர் 2:10 இல், புனித பவுலடியார் கூறுகிறார்.
அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.
எபிரேயர் 5:8
இவ்வாறாக ஆண்டவரின் துன்பங்களைப் பற்றி இறைவார்த்தை வெளிப்படுத்துகிறது.
வேரின் துன்பங்கள் தாவரங்களை வளப்படுத்துகின்றன.
ஒரு தாயின் துன்பங்கள் குழந்தைக்கு புதிய வாழ்வை கொடுக்கின்றன.
தந்தையின் துன்பங்கள் குழந்தையை தலைநிமிரச் செய்கின்றன.
விவசாயியின் துன்பங்கள் நல்ல உணவுப் பொருட்களை விளைவிக்கின்றன.
இவ்வாறு எத்தனையோ காரியங்களை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். இன்றைய நாளில் நாம் வாழ்வில் சந்திக்கின்ற துன்பங்களையும் இயேசு தன் வாழ்வில் சந்தித்த துன்பங்களையும் நாம் சற்று சிந்தித்துப் பார்ப்போம். இயேசுவின் துன்பங்கள் மனித குலம் முழுமைக்கும் மீட்பைக் கொண்டு வந்தது. அமைதியைக் கொண்டு வந்தது.
இன்றைய நாளில் நமது துன்பங்கள் நமக்கு எதைக் கொண்டு வருகின்றன என்று சிந்திப்போம்.
எப்போதும் நமது துன்பங்களை நினைத்து சதா புலம்பிக் கொண்டே இருப்பதால் நமது எண்ணங்களையும் வார்த்தைகளையும் வீணடிக்கிறோமா?
நமது கோபத்தால், நமது மனச்சோர்வினால், நமது உடலையும் உள்ளத்தையும் காயப்படுத்திக் கொண்டிருக்கிறோமா?
அல்லது
துன்பங்கள் கற்றுத் தருகின்ற பாடங்களை மனதில் வைத்து நன்மைகள் புரிவதற்காக வழங்கப்பட்ட நமது வாழ்வினை வளப்படுத்துகின்றோமா?
உளியின் பாடங்களுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டு அழகாக உருவாகும் சிற்பத்தைப் போல நமது துன்பங்கள் வழியே வாழ்வின் வழிகளை கற்றுக்கொள்ள, ஆண்டவரின் வழியில் நடந்திட, பிறருக்கும் வழிகாட்டிட, நமது துன்பங்களை ஏற்றுக் கொள்வோம்!
Superb bro.. 👍
பதிலளிநீக்கு