மாதா கோவில் பங்கு மக்கள் வறட்சியினால் மிகவும் கஷ்டப்பட்டனர். எனவே மழைக்காக தொடர்ந்து நவநாள் ஜெபிப்பது என்று முடிவு செய்தனர். ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் ஒன்றிணைந்து மழைக்காக சிறப்பாக ஜெபித்தனர். தங்களது நவநாள் ஜெபத்தை துவங்கி 9 ஆம் நாள் நிறைவு செய்கின்ற வேளையில் அன்று நவநாள் ஜெபத்திற்கு வந்திருந்தவர்களில் ஒரே ஒரு சிறுவன் மட்டும் குடை கொண்டு வந்திருந்தான். மற்றவர்கள் யாரும் கொண்டு வரவில்லை. மற்றவர்கள் அவனிடம் இந்த நாட்களில் மழை பெய்ய வில்லையே ஏன் குடை கொண்டு வந்தான் என்று ஏளனம் செய்தனர். ஆனால் அச்சிறுவனோ நாம் இறைவனிடம் மழை தர வேண்டும் என்று ஜெபித்து இருக்கிறோம். இறைவன் நமக்காக மழைபொழிய வல்லவர் என்பதை நான் நம்புகிறேன். எனவே மழையில் நனைந்து விடாமல் இருக்க நான் குடை கொண்டு வந்திருக்கிறேன் என்று இறை வல்லமையில் நம்பிக்கையோடு கூறினான்.
மனித ஞானத்தைவிட கடவுளின் மடமை ஞானம் மிக்கது: மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது என்று 1 கொரிந்தியர் 1:25 நமக்கு எடுத்துரைக்கிறது.
கடவுளின் ஞானத்தை இவ்வுலகிலுள்ள பேரறிஞர்கள் கூட புரிந்து கொள்ள முடியாது. கடவுளின் ஞானம் தெய்வீக மகத்துவம் நிறைந்தது. தம்மில் பற்று கொண்டோரின் காலடிகளை அவர் காப்பார் என்ற இறை வார்த்தைக்கு ஏற்ப இறைவனில் ஆழ்ந்த பற்றுக் கொண்டோருக்கு அவர் தன் ஞானத்தை அளிக்கின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காண்பது போல " நாங்கள் குழல் ஊதினோம். நீங்கள் ஆடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம். நீங்கள் அழவில்லை, என்று நமது உலக கவலைகளினால், நமது உள்ளத்தை நிரப்பிக் கொண்டிருந்தால் நாம் இறை ஞானத்தை கண்டுகொள்ள முடியாது. இறைஞானத்தால் வழிநடத்தப்பட முடியாது.
இறைவனின் ஞானத்தைப் பெற நாம் திறந்த மனது உடையவர்களாக இருக்க வேண்டும். விவேகமுள்ள கன்னியர்களை போல எப்பொழுதும் இறைவனின் குரலுக்கு செவி கொடுக்க கவனமாயிருக்க வேண்டும் என்பதை உணர்ந்தவர்களாய், நமது அனுதின இறைவேண்டலில் இறைஞானத்தைப் பெற்றுக்கொள்ள நம்மை இறைவனின் கரங்களில் அர்ப்பணிப்போம்.
இறைஞானத்தால் நீங்களும் தொடர்ந்து வழிநடத்தப்பட எனது ஜெபங்கள்..🙏
பதிலளிநீக்கு