ஒருநாள் சிறுவன் இயேசு தனது நண்பன் பைடஸ் என்பவனை பார்த்து நீ பெரியவனாகி என்ன செய்யப் போகிறாய்? என்றார்..அதற்கு அவன் நான் தலை சிறந்த தட்சனாகி ஒரு சிம்மாசனம் செய்து, அந்த சிம்மாசனத்தில் அரசனை அமர வைப்பேன். எங்கிருந்து பார்த்தாலும் அந்த சிம்மாசனம் தெரியும் என்றான். இப்படி பேசிய நண்பன் தன் பெற்றோரோடு ஜப்ஃபா நகருக்கு குடிபெயர்ந்து சென்றுவிட்டான். 18 ஆண்டு காலங்கள் உருண்டோடின இயேசுவுக்கு வயது 33 ஆக உயர்ந்தது. இயேசுவுக்கு சிலுவை செய்ய பைடஸ் அழைத்து வரப்பட்டான். இயேசுவுக்கு தான் சிலுவை செய்யப்போகிறோம் என்பது அவனுக்கு தெரியாது. அவன் செய்த சிலுவையை இயேசுவின் மீது சுமத்தி அவரை கல்வாரிக்கு இழுத்துக்கொண்டு சிலுவையில் அறைந்தார்கள். பைடஸ் மற்றவர்களின் வழியாக உண்மையை உணர்ந்த போது சிலுவை அடியில் விழுந்து அழுதான். இயேசுவோ 18 வருடங்களுக்கு முன்னால் நீ சொன்னதை செய்து முடித்து விட்டாய். சிம்மாசனம் ஒன்று செய்வேன் என்றாய். இந்த சிலுவை தான் அந்த சிம்மாசனம். அரசன் ஒருவனை அதில் அமர வைப்பேன் என்றாய். நான் தான் அந்த அரசன். எங்கிருந்து பார்த்தாலும் அந்த சிம்மாசனம் தெரியும் என்றாய். இந்த சிலுவை எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் என்றார்.
இயேசுவின் சிறுவயதோடு தொடர்புபடுத்தி கூறக்கூடிய கதைகளுல் இதுவும் ஒன்று.
தந்தையே இவர்களை மன்னியும் ஏனென்றால் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை (லூக்கா 23 : 34) இவ்வார்த்தைகளை இயேசு உதித்தது சிலுவையிலிருந்தே...
இன்று நாம் தாய் திருஅவையானது திருச்சிலுவை மகிமை விழாவை முன்னெடுத்துச் செல்கிறது. இம்மண்ணில் உதித்த இயேசு கிறிஸ்து, சிலுவை மரணத்தை ஏற்று,சிலுவையில் தன்னுயிரை இழந்ததன் காரணமாக இன்று அவர் அறையப்பட்ட சிலுவை மகத்துவம் மிக்கதாக மாறியுள்ளது.
பொதுவாகவே குற்றவாளிகளுக்கு மட்டுமே சிலுவை மரணம் வழங்கப்படும். அதுவும் ஊரோமை அதிகாரிகளால் தான் தண்டனை கொடுக்கப்படும். ஆனால் குற்றம் ஏதும் செய்யாத இயேசுவுக்கு ஊரோமை ஆளுநர் பிலாத்துவின் வழியாக மரணதண்டனை தீர்ப்பு எழுதப்பட்டு, இயேசுவின் மீது சிலுவை சுமத்தப்பட்டு, சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர்துறந்தார். அதுவரை அவமானத்தின் சின்னமாக கருதப்பட்ட அந்த சிலுவை வெற்றியின் அடையாளமாக மாறியது. தியாகத்தின் மறு உருவமாக மாறியது.
இன்றைய வாசகங்களில் நாம் வாசிக்க கேட்டது போல அன்று பாம்பின் சிலை உயர்த்தப்பட்டது யாரெல்லாம் அந்த வெண்கலப் பாம்பு சிலையை உற்று நோக்குகிறார்கள் அவர்கள் எல்லாம் குணம் பெற்றார்கள். அதுபோலவே இன்று இயேசுவின் சிலுவை உயர்த்தப்பட்டுள்ளது நம்பிக்கையோடு அச்சிலுவையை நோக்கக் கூடிய அனைவரும் தாங்கள் கேட்பதை பெற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இன்றும் நிலவுகிறது.
நாடெங்கும் கொரோனா தொற்றுநோய் அச்சத்தின் காரணமாக அஞ்சிக் கொண்டிருந்த சூழலில், மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய வகையில் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் திருவுருவச் சிலையை திருத்தந்தை அவர்கள் எடுத்து மக்களுக்கு ஆசி வழங்கியதன் வாயிலாக பலர் மனதளவில் நம்பிக்கை பெற்றார்கள் என்பது மறுக்கவியலாத உண்மை.
பொதுவாக சிலுவை என்றாலே துன்பத்தின் அடையாளம் என்று கூறுவார்கள். ஆனால்
சிலுவை வெற்றியின் அடையாளம்.
சிலுவை வீரத்தின் அடையாளம்.
சிலுவை தியாகத்தின் அடையாளம்.
சிலுவை அமைதியின் அடையாளம்.
சிலுவை நட்பின் அடையாளம்.
இன்னும் பல வழிகளில் சிலுவையை நாம் அடையாளப்படுத்தலாம்.
இன்று நாம் வாழக்கூடிய உலகத்தில் பெரும்பாலும் மக்கள் சிலுவையை ஏற்றுக் கொள்ள அஞ்சுகிறார்கள். சிலுவை என்பதை துன்பம் என கருதி துன்பத்தை வெருக்கிறார்கள். ஆனால் இயேசு இன்முகத்தோடு துன்பத்தை ஏற்று மக்களுக்குத் தொண்டாற்றி மாமனிதராக இன்றும் மதிக்கப்பட்டும், நினைக்கப்பட்டும் வருகிறார். கடவுள் வடிவில் விளங்கிய கிறிஸ்து கடவுளுக்கு இணையாக இருக்கும் நிலையை அறிந்து பற்றி கொண்டிருக்க வேண்டிய ஒன்றாக கருத வில்லை ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றிய அவர் சாவை ஏற்கும் அளவுக்கு அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார். இவ்வாறு இயேசு மக்களுக்கு தொண்டாற்ற அவமானத்தின் சின்னமாக கருதப்பட்ட சிலுவை மரணத்தை அச்சமின்றி ஏற்றார். இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்திலும் துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல், இயேசுவைப் போல உறுதி கொண்டவர்களாக, மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு, துன்பங்களை ஏற்றுக் கொண்டு, மக்களுக்கு பணியாற்ற நாம் முன்வர இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நம்மை அழைக்கின்றார்.
தொண்டுள்ளம் கொண்ட தோழனே
அடர்த்தியான அன்பின் ஆழமான செயல்வடிவம் தொண்டு.
நம்மை நேசிக்க மறந்தாலும் நாம் நேசிக்கும் ஒருவருக்கு செய்யும் உதவி தான் தொண்டு.
அடுத்தவர் கண்ணீரைத் துடைப்பது தொண்டு.
தோல் வலித்தாலும் பிறருக்காக துடுப்பு வலிப்பது தொண்டு.
பூமியை சலவை செய்து புதுப்பிப்பது தொண்டு.
அத்தகைய தொண்டர் தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே...
என்ற வாக்கிற்கிணங்க மக்களுக்கு தொண்டாற்ற ஆண்டவர் இயேசுவின் உண்மை தொண்டர்களாக நாம் இச்சமூகத்தில் வலம்வர திருச்சிலுவையை முன்னுதாரணமாகக் கொண்டு இயேசுவின் வழியில் தொண்டாற்ற உண்மையான இயேசுவின் தொண்டர்களாக பயணிப்போம்..
"சிலுவை அமைதியின் அடையாளம்."
பதிலளிநீக்குதிருச்சிலுவை மகிமை திருநாள் வாழ்த்துகள்.
🙏