இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே
ஒரு வயதான தந்தைக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அவர் மிகவும் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்தார். அப்போது அவருடைய மகன்கள் அவரது உடலை ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்லறைக்கு எவ்வாறு கொண்டு செல்வது என்று பேசிக் கொண்டிருந்தனர். மூத்த மகன், ஒரு வாகனம் ஏற்பாடு செய்து தந்தையின் உடலை கொண்டு செல்லலாம் என்றான். இரண்டாவது மகன் ஒரு குதிரை வண்டி ஏற்பாடு செய்து கொண்டு செல்லலாம் என்றான். மூன்றாவது மகனோ, ஆட்களைத் தயார் செய்து அவர்களிடம் கூறி விட்டால், அவர்கள் கொண்டு வந்து விடுவார்கள் என்று கூறினான். இதனை கேட்டுக் கொண்டிருந்த அந்த வயதான தந்தை, அவர்களைப் பார்த்து நீங்கள் யாரும் கஷ்டப்பட வேண்டாம். அந்த அறையின் ஓரத்தில் இருக்கின்ற எனது கைத்தடியை எடுத்துக் கொடுங்கள். நான் இப்பொழுதே நடந்து கல்லறைக்குச் சென்று விடுகிறேன் என்று கூறினார்.
உண்மை, நீதி, அன்பு இவற்றுக்கான நமது போராட்டத்தில் நமது பிள்ளைகள் கூட நமக்கு எதிராக செயல்படுகின்ற நிலை ஏற்படும். ஆனால் நம் மீதான உறுதியை நாம் என்றும் இழந்து விடக்கூடாது. கைத்தடியை எடுத்துக் கொடுங்கள் நானே சென்று விடுகிறேன் என்று கூறிய தாத்தாவை போல நாம் நம்மீதும் நம்மை இயக்கக் கூடிய இறைவன் மீதும் ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக, நமது செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் .
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தம் சீடர்களை பணிக்கு அனுப்புகிறார். அது போல நம்மையும் பணிக்குச் செல்ல அழைப்பு விடுக்கும் வகையில் இன்றைய வாசகங்கள் அமைந்துள்ளன. இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக பணிக்கு அனுப்பப்படக் கூடிய சீடர்களுக்கு இயேசு அறிவுரை கூறுகிறார். பணிக்குச் செல்லும்போது பொருளையோ, பணத்தையோ, மிதியடியையோ நம்பிச்செல்ல வேண்டாம் என்கிறார். இன்று ஆண்டவர் இயேசுவின் பணி செய்ய செல்லக்கூடிய நாம் அனைவரும் ஆண்டவர் இயேசுவின் பணி என்ன? என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
உண்மை, அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவம் இதுவே ஆண்டவர் இயேசு கிறிஸ்து கொடுக்கக் கூடிய பணியாகும். இந்த பணியை செய்வதற்கு நாம் அடுத்தவரின் துணையையோ அல்லது பணத்தையோ நாடாமல் இறைவனை மட்டும் முழுமையாக ஏற்றுக் கொண்டவர்களாக, அவர் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இத்தகைய பணியை இச்சமூகத்தில் செய்ய நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்.
இத்தகைய இறையாட்சி பணியை செய்து கொண்டிருக்கும் போது நாம் பலவிதமான இன்னல்களை சந்திக்க நேரிடும்.
நாம் அமைதியை ஏற்படுத்த முயலும்போது நமது வாழ்வில் அமைதியை இழக்க நேரிடலாம்.
உண்மைக்காக நாம் வீதியில் இறங்கும் போது உண்மையற்ற முறையில் கைது செய்யப்படலாம்.
சமத்துவத்தைப் போதிக்கும் போது நம்முடைய நடத்தையில் களங்கத்தை ஏற்படுத்த கூடிய சூழ்நிலைகள் உருவாகலாம்.
ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது அசையாத நம்பிக்கை கொண்டவர்களாக நாம் உண்மை, அன்பு, நீதி என்ற ஆண்டவர் இயேசுவின் பணிகளை இயேசுவின் சீடர்கள் முழுமூச்சோடு செய்தது போல நாமும் செய்ய அழைக்கப்படுகிறோம்.
"அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது.
அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள்".
(1 பேதுரு 5:9) இல் புனித பேதுரு கூறுவது போல, உண்மை, அன்பு, நீதி என்ற இயேசுவின் பணியினை இச்சமூகத்தில் செய்யும் போது உண்மைக்கு மாறான சூழல்களும், அநீதியான செயல்களும் பலரின் வழியாக நம்மை விழுங்குவதற்கு காத்துக் கொண்டிருக்கும். அதை எல்லாம் கண்டு அஞ்சிவிடாமல், துணிவோடு மற்றவற்றின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை தவிர்த்து ஆண்டவர் மீது மட்டும் நம்பிக்கை கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும். அப்படி இருந்தோமாயின் நாமும் இயேசுவின் சீடர்கள் நோய்களை குணமாகியது போல, பேய்களை ஓட்டியது போல, அன்பையும், நீதியையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் இச்சமூகத்தில் நிலைநாட்ட முடியும்.
இறையாட்சி பணியை முழு மூச்சுடன் செய்யும்போது வரக்கூடிய அனைத்து விதமான இடர்பாடுகளையும் ஏற்றுக் கொண்டு, அவற்றைக் கண்டு அஞ்சி பாதை மாறாமல் இறுதிவரை இயேசுவின் உண்மை சீடர்களாக பயணத்திட இன்றைய நாளில் இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கின்றார். அவரின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய், வாருங்கள் செல்வோம் ஆண்டவர் இயேசுவின் உண்மை சீடர்களாக மாறி, அவரது பணியை இவ்வுலகில் செய்து இறையாட்சியை மலரச்செய்ய...
மற்ற காரியங்களில் மனதை திசை திருப்பாமல் ஆண்டவரின் பணியில் நம்மை இணைத்திடுவோம்! என்று பணி ஆர்வத்தைத் தூண்டும் கருத்துக்கள்! உற்சாகமூட்டும் கருத்துக்கள்! மிகவும் அருமை!
பதிலளிநீக்குஉண்மை... ?...
பதிலளிநீக்குஅன்பு...?...
நீதி...?...
இன்று நாம் வாழக்கூடிய உலகில்... இம்மூன்றும் மிகப்பெரிய கேள்விக்குறியான சவால்களே..
இவற்றையெல்லாம் கடந்து இறையாட்சிப்பணியில் தங்களையே அர்ப்பணித்துள்ள அனைவருக்கும் வாழ்த்துகளும் செபங்களும்.. 🙏