இன்றைய வாசகத்தில் நாம் இரு வகை மனிதர்களை காண்கிறோம். முதல் வகை மனிதர்கள் ஒவ்வொன்றையும் பார்த்து பழகி கற்றுக்கொண்டு தாமாக செய்ய முன் வரக்கூடியவர்கள். உதாரணமாக இயேசுவை பின்தொடர தாமாக முன்வந்த சீடனைக் கூறலாம்.
இரண்டாம் வகையைச் சார்ந்த நபர்கள் பிறரால் அழைக்கப்பட்டு தூண்டப்பட்டு பிறருக்காக ஒரு செயலை செய்யக் கூடியவர்கள்.
உதாரணமாக இயேசு ஒருவரை தன் பின்னே வருமாறு அழைக்கிறார். இருவருக்குமே சம உரிமையும் சுதந்திரமும் இருக்கிறது. முதல் நபரும் இயேசுவைப் பின்பற்ற விரும்பினால் பின்பற்றலாம். இரண்டாவது நபரும் பின்பற்ற விரும்பினால் பின்பற்றலாம்.
ஆனால் முதல் நபரிடம் இயேசு தன்னைப் பின்பற்றி வருவதால் அவருக்கு ஒன்றும் கிடைப்பதில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறார். ஏனென்றால் அவன் தானாகவே முன் வந்து இயேசுவை பின்தொடர வந்தவன்.
இரண்டாவது நபரை இயேசு தன் பணிக்கு அழைக்கிறார் ஆனால் அவனோ காரணங்கள் கூறுகிறான். இருந்த போதிலும் தன் பணியை செய்ய முழுமையான ஈடுபாட்டோடு வரவேண்டும் என்று இயேசு அவரிடம் கூறுகிறார்.
நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் நாம் செய்கின்ற நல்ல செயல்களை நாமாக செய்கின்றோமா? அல்லது அடுத்தவரின் வற்புறுத்தலின் அடிப்படையில் செய்கின்றோமா? சிந்திப்போம்!
தாமாகவே செய்பவர்கள் பலனை எதிர்பாராமல் பணி செய்பவர்களாக கருதப்படுவார்கள்.
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது.
பயனை எதிர்பாராமல் ஒருவர் செய்த உதவியை கடலிலும் மிகப் பெரியது என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
முதல் வகை மனிதர்கள் இந்த வகையைச் சார்ந்தவர்கள். ஒரு நல்ல செயலை செய்வதால் தங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும் என்ற எண்ணத்தோடு இல்லாமல் எந்த கைமாறையும் எதிர்பாராமல் இயல்பாக நன்மை செய்யக் கூடியவர்கள். உதாரணமாக இயேசுவிடம் நான் உம்மை பின் தொடர்வேன் என்று கூறிய மனிதன். இயேசு
அவனிடம் நீ என்னை பின்தொடர்வதால் உனக்கு ஒன்றும் கிடைக்காது என்பதை அவனிடத்தில் தெளிவுபடுத்துகிறார். ஆயினும் அவன் இயேசுவின் போதனைகளால் பணிகளால் கவரப்பட்டு அவரைப்போல வாழ்ந்திட ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் அவரை பின்பற்றுகிறான். நாம் இந்த வகை மனிதர்களா?
இரண்டாம் வகை மனிதர்கள் அடுத்தவர்களுக்காக நன்மை செய்யக் கூடியவர்கள். இவர்கள் எப்போதும் நன்மை செய்து கொண்டிருப்பவர்கள் அல்ல. மாறாக, சில நேரங்களில் அடுத்தவருக்காக நன்மை செய்வார்கள். பல நேரங்களில் ஏன் நன்மைகள் செய்ய வில்லை என்று கேட்டால் பலவித காரணங்களை அடுக்கிக் கொண்டே போவார்கள். உதாரணமாக இயேசுவை பின்தொடர அழைத்தபோது அவன் தன் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வருவதாகக் கூறுகிறான். இவனைப் போலவே தன் நண்பர்களுக்கு நன்மை ஏதும் செய்யாமல் செய்ய இயலாததற்கான காரணத்தை மட்டும் கூறிக் கொண்டு இருப்பவர்கள்.
இந்த இரு வகை மனிதர்களில் நாம் எந்த வகை மனிதர்களாக இருக்கிறோம் என்பதை சிந்திக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. நாம் ஒரு செயலில் ஈடுபடுகிறோமென்றால் முழுமையான ஈடுபாட்டோடு துவக்கம் முதல் இறுதிவரை தொடர்ந்து அச்செயலில் ஈடுபட வேண்டும். சில நாட்கள் சிலருக்காக மட்டும் என்று அல்லாமல் முழுமையாக உண்மையாக தாமாகவே முன்வந்து பலனை எதிர்பாராது நற்செயல்கள் செய்ய முன்வர வேண்டும். அப்படி நான் செய்யும் போது கலப்பையில் கை வைத்த நாம் திரும்பி பார்க்காமல் கலப்பையை பிடித்தவர்களாக முன் செல்வோம்.
நாம் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் பொழுதுதான் தெரிகிறது , நாம் கடந்து வந்த பாதையை இன்னும் அழகாக கடந்து இருக்கலாமோ என்று. மீண்டும் நடக்கலாம் என்று எண்ணும்போது பாதை முடிந்துவிடுகிறது. நடக்கும்போதே அழகாய் கடந்திடுவோம் நமக்கான பாதைகளில் ...
நமது வாழ்க்கைப் பயணத்தின் லட்சிய பாதைகளை அழகாக மாற்றிட இயேசுவின் அருளை வேண்டி தொடர்ந்து இயேசுவின் பாதையில் பயணிப்போம்.
நமக்குள் இருந்து ஆண்டவருக்கு நிறைவாக கொடுப்போம்!
பதிலளிநீக்கு"கடவுள் பாதி மிருகம் பாதி" என்பது போல் நீங்கள் குறிப்பிட்டுள்ள இரண்டு வகையிலும் நான் பாதி பாதி தான்... �� என்ன செய்வது சகோ..?
பதிலளிநீக்கு