சனி, 19 செப்டம்பர், 2020

பணிக்கு தயாராவோம் ...(20.09.2020)


பார்வையற்ற பிச்சைக்காரன் ஒருவனுக்கு அரசன் மதிய உணவு கொண்டுவந்து தருவதாக கூறி சென்றான்.மறுநாள் பிச்சைக்காரன் அரசன் கொண்டுவரும் உணவை வயிறார சாப்பிட வேண்டும் என்ற ஆவலுடன் காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல் காத்திருந்தான். வழக்கம்போல அவனுக்கு பல நபர்கள் உணவு கொண்டு வந்து கொடுத்தனர் அவன் அவற்றை வாங்க மறுத்து விட்டான். மணி இரண்டானது , மூன்றானது, ஐந்தானது. பார்வையற்ற பிச்சைக்காரனுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. இறுதியாக 6 மணியளவில் அரசன் வந்தான். இன்று அரச உணவு உண்டாயா? எங்கே பொற்காசுகள்? குதிரை? என்று அரசன் கேட்டான்.
அப்போது பிச்சைக்காரன் நீங்கள் இப்போதுதானே வருகிறீர்கள். நான் உங்களுக்காக காலையிலிருந்து சாப்பிடாமல் காத்துக்கொண்டிருக்கிறேன் என்று வருத்தத்தோடு கூறினான். அப்பொழுது அங்கிருந்த சாது ஒருவர் கூறினார், அரசே உங்களது காவலன் கொண்டுவந்த உணவை இவன் வாங்க மறுத்து விட்டான். எனவே அவன் அருகில் இருந்த மற்ற பிச்சைக்காரனுக்கு அந்த உணவை கொடுத்து விட்டுச் சென்று விட்டான் என்றார்.
         அவ்வாறே அரசன் கொடுத்த பொற்காசு மூட்டையை கொண்டு வந்த இரண்டாவது பாதுகாவலன் அரச உணவை உண்டு கொண்டு இருந்த மற்றொரு பிச்சைக்காரனிடமே அந்த பொற்காசு மூட்டையையும் அரசர் கொடுத்ததாக கொடுத்துச் சென்றான். 
         மூன்றாவதாக வந்த பாதுகாவலன் அரசன் கொடுத்தனுப்பிய குதிரையை பொற்காசு மூட்டை வைத்திருந்த பிச்சைக்காரனிடமே கொடுத்துவிட்டு சென்றான். 
           அந்த பார்வையற்ற பிச்சைக்காரன் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை தவற விட்டதினால் அவனது வாழ்வு திசைமாறிப் போனது. அவனுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு மற்றவனுக்கு வாழ்வாக மாறியது. 
             இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவரை காண்பதற்கு வாய்ப்புள்ள போதே அவரைத் தேடுங்கள். அவர் அருகில் இருக்கும் போது அவரைக் கண்டு கொள்ளுங்கள் என்று இறைவாக்கினர் எசாயா அழைப்பு விடுக்கின்றார்.

இன்று நம்மோடு பேசி மகிழ்ந்த பல உறவுகள் நம்முடன் இல்லை என்பதை நாம் அறிவோம். இவ்வுலகில் பிறந்து இருக்கும் அனைவருக்கும் ஒரு நாள் இறப்பு என்பது உண்டு. ஆனால் அந்த இறப்பு எப்பொழுது நிகழும் என்பது யாருக்கும் தெரியாது.எனவே நாம் உயிரோடு வாழ்கின்ற காலத்திலேயே ஆண்டவரை ஆர்வமாய் நாடி தேட நம் அருகில் இருப்பவர்களில் ஆண்டவரை கண்டுகொள்ள அவர்களின் துன்பத்தில் உடனிருந்து ஆண்டவருக்கு பணி செய்ய இறைவாக்கினர் எசாயா அழைக்கின்றார்.
          
         இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே. நான் இறந்தாலும் ஆண்டவரோடு இணைந்து இருப்பதால் அது எனக்கு ஆதாயமே என்று கூறுகிறார். இவ்வாறு வாழ்விலும் சாவிலும் ஆண்டவரோடு இணைந்து இருக்கிறார். அவரைப்போலவே நாமும் கிறிஸ்துவின் பிள்ளைகளாக வாழ நாம் கற்றுக்கொண்ட விசுவாசத்தில் நிலைத்திருக்க நமது துன்பங்களிலும், சோதனைகளிலும் ஆண்டவரோடு இணைந்து இருக்க அழைப்பு விடுக்கின்றார். 
           இன்று இந்த கொரோனாவின் காரணமாக நமக்கும் நோய் வந்துவிடுமோ, நாமும் இழப்பை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம் பரவலாக உள்ளது. ஆயினும் புனித பவுலடியாரைப்போன்று இரவு பகல் பாராது தனது கடமையாற்றிய எண்ணற்ற மருத்துவர்களையும், செவிலியர்களையும், காவல்துறையினரையும், துப்புரவு பணியாளர்களையும் நன்றியுடன் நினைத்துப் பார்ப்போம். அவர்களை, அவர்களின் பணிகளை இறைவன் ஆசிர்வதிக்க ஜெபிப்போம். 

          இன்றைய நற்செய்தி வாசகத்தில் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தன்னுடைய தோட்டப் பணியாளர்களை விடியற்காலையிலேயே வேலைக்கு அமர்த்தி விடுகின்றார்.
              பிறகு சற்று நேரம் கழித்து சந்தை வெளியில் வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களை தனது தோட்டத்தில் பணியமர்த்துகிறார். இன்னும் மற்ற இடங்களுக்கு 3 மணிக்கும் மாலை 5 மணிக்கும் கூட சென்று பணியாளர்களை வேலைக்கு அமர்த்தினார். இங்கு திராட்சைத் தோட்ட பணி என்பது இறையாட்சி பணியாக அமைகின்றது. உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள் என்று கூறிய இயேசு ஆண்டவர் இன்றைய வாசகத்தின் வழியாக அவரோடு இணைந்து பணியாற்ற நமக்கு அழைப்பு விடுக்கின்றார். அன்று ஊர் ஊராய் நகர் நகராய் மக்களைத் தேடிச் சென்ற இயேசு அவரோடு இணைந்து என்றும் இறைபணியில் உடல் உள்ளம் மற்றும் ஆன்ம தேவையில் இருப்பவர்களை தேடிச்சென்று இறை பணியாற்ற அழைப்பு விடுக்கின்றார். 
               இன்றைய நாட்களில் பல நேரங்களில் மற்றவர்களை நேரில் சந்திப்பதற்கு நமக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டாலும் கூட அலைபேசி வழியாகவோ அல்லது இணையத்தின் வழியாகவோ பிறரை சந்தித்து ஆற்றுப்படுத்த ஆறுதல்படுத்த இயேசுவின் திராட்சைத் தோட்டத்தின் உண்மை பணியாளர்களாக இறையாட்சி பணிபுரிய நம்மை தயார் செய்வோம்!

2 கருத்துகள்:

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...