செவ்வாய், 8 செப்டம்பர், 2020

இருப்பதை கொண்டு நம்முடையவராக்குவோம்!


நம்மிடம் இருப்பதை கொண்டு..
நம் அருகில் இருப்பவர்களை நம்முடையவராக்குவோம்!

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு எதிரே ஸ்ரீ மாருதி என்ற பெயரில் டீ கடை வைத்திருக்கிறார் ஹரி. அங்கு வரும் ஏழைகள் பலர்அடக்கம் செய்வதற்கு காசில்லாமல் சவத்தை வீட்டிற்குக் கூட எடுத்துச் செல்ல முடியாமல் தவித்த சூழ்நிலை ஹரியின் மனதை உலுக்கியது. இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த அவர் தனது சொற்ப நிலத்தை விற்று ஆம்புலன்ஸ் வாங்கினார். பணம் இல்லாதவர்களின் சடலங்களை ஏற்றி செல்வதோடு, அவர்களது அடக்கத்திற்கு தேவையான உதவிகளையும் கடந்த 19 வருடங்களாக செய்து வருகிறார் ஹரி. இறந்து போனவர்களை இறைவனாகப் பாவித்து குணங்களையும் கூட நல்லடக்கம் செய்கின்ற பணியில் அயராது செயலாற்றி வருகின்றார் ஹரி.

    இன்று இறைவார்த்தையின் வழியாக நம்மோடு பேசுகின்ற ஆண்டவர் ஏழைகளே நீங்கள் பேறுபெற்றோர். ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியது என்கிறார். 

ஏழையாக இருக்கும் ஒருவரிடத்தில் பசியும் பட்டினியும் வறுமையும் சூழ்ந்திருக்கும். அவரிடம் பணம் இருக்காது. ஆனால் அவர் தம்மைப் படைத்த இறைவனையே எல்லாவற்றுக்கும் சார்ந்து இருப்பதால், இறை அருளால் மட்டுமே தன்னுடைய வாழ்வை வழி நடத்துவதால் அவர் பேறு பெற்றோர். அவருக்கே இறையாட்சி உரியது என்று இயேசு கூறுகிறார். சீராக்கின் ஞான நூல் கூறுவதுபோல ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு. இன்று இருக்கக்கூடிய ஏழ்மையும் வறுமையும் மாற்றம் பெறும். அப்பொழுது நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள் நிறைவு பெறுவீர்கள் என்கிறார் ஆண்டவர். 

ஆனால் இப்பொழுது செல்வராய் இருப்போரே! உங்களுக்கு ஐயோ கேடு! நீங்கள் எல்லாவற்றையும் அனுபவித்து விட்டீர்கள் என்று சாடுகிறார். நம்மிடம் இருப்பதை நாம் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று எண்ணி வாழ்வதால் எவ்வித பயனும் இல்லை. அதில் எவ்வித இறை அனுபவமும் இல்லை. செல்வர் தமது செல்வத்தில் அதீத நம்பிக்கை கொண்டு, தனது செல்வத்தால் எதையும் செய்ய முடியும் என்று ஆணவத்தோடு இருந்தால் அவருக்கு ஐயோ கேடு என்று ஆண்டவர் இயேசு கூறுகிறார்.  நம்மிடம் இருப்பதை நாம் மட்டுமே வைத்துக்கொண்டு பிறரது தேவைகளை கண்டும் காணாததுபோல் இருப்போமாயின்  நாமும் ஆண்டவரால் சாடப்பட்டு துயரத்திற்கு உள்ளாவோம். ஆனால் இந்த துயரங்களை நாம் மாற்றிக் கொள்ள முடியும். நம்மிடம் இருக்கின்ற செல்வங்களைக் கொண்டு நமக்கு அருகில் இருக்கக்கூடிய ஏழைகளின் பசியைப் போக்கவும், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை செய்திடவும், அவர்களின் கல்வி திருமணம் வேலைவாய்ப்பு போன்ற காரியங்களில் நாம் உதவி செய்து அவர்களின் துயர் துடைக்கவும் முன் வருகின்ற பொழுது, நாமும் இறையாட்சிக்கு  நம்மை தகுதிப் படுத்திக் கொள்கிறோம்.
எனவே இன்றைய நாளில் நமது பொருள் உதவி தேவைப்படுவோருக்கு அவற்றை வழங்குவோம். மனம் சோர்ந்து உள்ளடங்கிப் போயிருக்கும் நபர்களின் உள்ளங்களை நமது அன்பான அக்கறையான வார்த்தைகளால் தேற்றுவோம். வாழ்வில் நம்பிக்கையூட்டுவோம். பிறர் நம்மை நாடி வரவேண்டும் என்று காத்துக் கொண்டிருக்காமல், நமது கண் முன்னே காணும் அயலாரின் தேவைகளை சந்திப்போம். இயேசுவின் உண்மை சீடர்களாய் இறையரசை மண்ணில் மலரச் செய்வோம்.


பிறக்கும்போதே யாரும் மகிழ்ச்சியுடன் பிறந்திருக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் வாழும் தகுதியுடன் பிறந்திருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...