அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்
என்பதை கூறும் திருக்குறளின் வழியாக அஞ்ச வேண்டிய காரியங்களுக்கு மட்டுமே அஞ்ச வேண்டும் என திருவள்ளுவர் கூறுகிறார்.
நடந்தவற்றை அறிந்து ஏரோது மனம் குழம்பினான் என்பது இன்றைய நற்செய்தியின் முதல் வாக்கியமாக அமைந்துள்ளது.
புயலுக்கு பின் அமைதி என்று கூறுவார்கள். எந்தவொரு சூழலிலும் எந்த ஒரு நிகழ்விலும் குழப்பத்தை உற்று நோக்கினால், ஆர்வத்தோடு தேடினால் தெளிவு பிறக்கும். தெளிவான விடை கிடைக்கும் என்பார்கள்.
இன்றைய வாசகத்தில் ஏரோதுவின் குழப்பமும் அவன் இயேசுவைக் காண வாய்ப்பு தேடுவதும் அவனது உண்மையான தேடுதலின் வாய்ப்பு அல்ல. இதே ஏரோதின் முன்னோர் தான் இயேசு பிறந்த போதும் கூட ஞானியரின் வழியாக அவர் பிறந்த இடத்தை தேடி கண்டுபிடிக்க முயற்சித்தானர்.
இயேசுவை காணாததால் இரண்டு வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகள் அனைத்தையும் கொல்லச் செய்து பெரும் பாவத்தை ஈட்டினார். இன்றைய வாசகத்திலும் கூட ஏரோது இயேசுவை காண வாய்ப்பு தேடுவது இயேசுவை அறிந்துஅவரைப்போல நன்மைகள் செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தால் அல்ல. மாறாக நீதியற்ற முறையில் கொலை செய்த திருமுழுக்கு யோவான் தான் உயிர்த்தெழுந்து விட்டாரோ என்ற அச்ச உணர்வு, மேலும் இயேசுசெய்கின்ற அற்புதங்கள் மற்றும் வல்ல செயல்கள் வழியாக இயேசு அரசர் ஆகிவிடுவாரோ, தன்னுடைய பதவி பறிபோய்விடுமோ எனும் அச்ச உணர்வினால் தான். அரசனாக இருந்தும்கூட உள்ளத்தில் பாதுகாப்பற்ற சூழல் அவனை குழப்பத்திற்கு தள்ளியது. குழப்பத்தில் இருந்து தெளிவுபெற மனம் இல்லாதவனாக இயேசுவைக் காண வாய்ப்பு தேடுகிறான்.
இன்று நமது வாழ்க்கையிலும் கூட நம்மைச் சுற்றி நடக்கின்ற நிகழ்வுகள் நமக்கு சற்று இடறலாக இருந்தால் நாம் அதனை ஏற்றுக்கொள்ள அஞ்சுகிறோம். மனம் குழம்புகிறோம். ஆனால் காலங்களை எல்லாம் கடந்த இறைவன் முக்காலமும் வாழ்கின்ற கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாக செய்கிறார் என்பதை உணர்வோம். இறைவனின் கரம் நம்மை வழி நடத்துகின்ற பொழுது நமக்கு நடக்கின்ற அனைத்து காரியங்களுமே நம்மை வளர்ப்பதாகவோ அல்லது நம்மை பக்குவப்படுத்துவதாகவோ இருக்கும் என்பதை உணர்ந்தவர்களாக நமது அன்றாட நிகழ்வில் இறை வல்லமையை உணர இன்றைய நாளில் இறையருளை இறைஞ்சுவோம்!
ஆண்டவரின் பிரசன்னத்தை உணர்வோம்! அவரது வழிநடத்துதலில் வாழ்க்கையை வளமாக்குவோம்!
பதிலளிநீக்கு