சனி, 29 ஜூன், 2019

அழைப்பது இறைவன்

அழைப்பது இறைவன்
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்று நாம் திருவிவிலியத்தில் இயேசு கூறிய ஒரு உவமையைப் நினைவுப்படுத்த விரும்புகிறோன். ஒரு தந்தையானவர் தனது மூத்த மகனை நோக்கி வயலுக்குச் சென்று வேலை பார்த்து வா எனக் கூறுகிறார். அதற்கு அந்த மகன் என்னால் செல்ல இயலாது எனக் கூறிவிட்டு சென்று விட்டான். பிறகு தந்தை தனது இளைய மகனை நோக்கி தோட்டத்திற்குச் சென்று வேலை பார்த்து வா எனக் கூறுகிறார். அவனோ இதோ செல்கிறேன் தந்தையே எனக் கூறுனான். ஆனால் தோட்டத்திற்கு செல்லாமல் இருந்துவிட்டான். மூத்த மகனோ தன் தந்தை சொன்னதை நினைவுகூர்ந்து சொல்ல மாட்டேன் என சொல்லி இருந்தாலும் தோட்டத்திற்குச் சென்று வேலை பார்த்து விட்டு வீடு திரும்பி வருவான். இவர்கள் இருவரில் சிறந்தவர்கள் யார் என்ற கேள்வியை எழுப்பினால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்? பெரும்பாலானோர் சொல்லுவார்கள் மூத்த மகனே சிறந்தவன் என சொல்வார்கள். சிலர் இளைய மகன் சிறந்தவன் என சொல்லலாம் இதில் யார் சிறந்தவன் என்பதை நாம் எதை கொண்டு தீர்மானிக்கிறோம் என்றால் நாம் யாருடைய இடத்தில் இருந்து கொண்டு சிந்திக்கிறோமோ அதுவே நம் முடிவை தீர்மாணிக்கிறது. பொதுவாக இன்றைய உலகில் நம்மிடையே இரு விதமான வாய்ப்புகள் உள்ளன. வேலைக்குச் சென்று வா என தந்தை கூறும் போது செல்கிறேன் அல்லது செல்லவில்லை என்று கூறுவதற்கான முழு உரிமையும் மகன்களுக்கு உண்டு. இதனையே இன்றைய வாசகங்கள் வழியாக நாம் சிந்திக்கவிருக்கிறோம். இனறைய வாசகங்கள் வழியாக நமக்கு இறைவன் கொடுக்கக்கூடிய சிந்தனை அழைப்பு பற்றிதாகும். அது நம் அனைவருக்கும் இரு விதமான வாய்ப்புகள் உள்ளன என்பதை வெளிகாட்டுகின்றன. ஒன்று அழைப்பை ஏற்பதற்கும் மற்றொன்று அழைப்பை ஏற்காமல் மறுப்பதற்கும். ஆனால், நாம் எதைச் செய்யப் போகிறோம் என்பது ஒவ்வொருவரையும் பொறுத்தது அழைப்பை ஏற்க போகிறோமா? அல்லது அழைப்பை ஏற்காமல் இருக்க போகிறோமா? என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் எலியா வழியாக எலிசாவை அழைக்கின்றார். யார் இந்த எலிசா? என்று பார்க்கும் போது இவர் ஒரு உழவு தொழில் செய்யக் கூடியவர். கடவுள் பார்வையில் உயர்வு, தாழ்வு என்பது கிடையாது. உயர்வு, தாழ்வு என்பது மனித மனங்களில்தான் உள்ளது. அது போலவே இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மூவரை அழைப்பதை நாம் பார்க்கலாம். ஒருவர் தாமாக வந்து இயேசுவிடம் “நீர் எங்கு சென்றாலும் நானும் உன்னுடன் வருவேன்” என்கிறார். ஆனால் இயேசு தன்னை தெளிவாக அவருக்கு விளக்கிக் காட்டுகிறார். தன்னிடம் வருபவரை ஏற்றுக் கொள்ள ஆண்டவர் இயேசுவுக்கு விருப்பம். ஆனால், அதேசமயம் தனது நிலையை அவருக்கு உணர்த்துகிறார். “மானிட மகனுக்கு தலைச் சாய்ப்பதற்கு கூட இடமில்லை” என்ற கருத்தினை அவரிடம் பதியவைக்கிறார். அவரை தொடர்ந்து இயேசு ஒருவரை அழைக்கிறார். அவனோ நான் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வருகிறேன் என்றார். அதுப்போலவே மூன்றாவதாக ஒரு நபர் தாமாக வந்து உன்னை பின்பற்றுவேன் ஆனால் எனது வீட்டிற்கு சென்று விடைபெற்று வருகிறேன் என்றான். ஆனால் இயேசு கலப்பையில் கை வைத்தபின் திரும்பி பார்த்தல் ஆகாது எனக் குறிப்பிடுகிறார். இதன் மூலம் இன்றைய வாசகங்கள் நமக்கு கொடுக்கக்கூடிய செய்தி அழைப்பு என்பது இறைவனால் தரப்படுவது. இதில் உயர்வு, தாழ்வு என்பது இல்லை. ஏழை, பணக்காரன் என்பது இல்லை. உயர்ந்த குலத்தவர், தாழ்ந்த குலத்தவர் என்ற வேறுபாடு இல்லை. மனிதனாக பிறந்த அனைவருக்கும் அழைப்பு என்பது பொதுவானது. ஆண்டவர் அனைவரையும் அழைக்கிறார். அவரிடம் நான் வருகிறேன் என்று கூறுவதற்கும் இல்லை வரவில்லை என்பதற்குமான உரிமையை இறைவன் நமக்கு வழங்கியுள்ளார். ஆனால் அனைவரும் நம்பிக்கைக்கு உரியவராக வாழ வேண்டும். பெயரளவில் நான் உன்னை பின் தொடர்ந்து வருகிறேன் எனக் கூறிவிட்டு அவரை விட்டுவிட்டு போகக்கூடியவர்களாக நாம் இருத்தலாகாது. அதுபோல அவர் அழைக்கும் பொழுது இதோ வருகிறேன் என்று கூறிவிட்டு அவர் அவர் பின்பு வராமல் அவர் கூறியதை செய்யாமலிருக்க கூடியவர்களாகவும் நாம் இருத்தலாகாது. இவ்வாறு இன்றைய வாசகங்கள் நமக்கு தெளிவாக கூறுவது ஒன்றே ஒன்று. அது இறைவன் அனைவரையும் அழைக்கிறார் அவரிடத்தில் எந்தவித உயர்வு தாழ்வும் இல்லை என்பதாகும். ஆனால் ஏன் அழைக்கிறார்?, எதற்காக நாம் அழைக்கப்படுகிறோம்? என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதை உணர்த்தும் வகையில் தான் இன்றைய இரண்டாம் வாசகம் அமைந்திருக்கிறது. புனித பவுல் கலாத்திய நகர மக்களுக்கு எழுதிய கடிதத்தில் இயேசுவின் கட்டளையை குறிப்பிடுகிறார். “உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” இதுவே ஆண்டவர் இயேசு கிறிஸ்து தந்த ஒரே கட்டளை. இந்த கட்டளையை நிறைவு செய்வதற்காகவே நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். நாம் அனைவரும் ஒருவர் மற்றவரை அன்பு செய்யவும், ஒருவர் மற்றவரை புரிந்து கொள்ளவும், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து, மற்றவர் துயரத்தில் பங்கெடுக்க கூடியவர்களாக வாழ்வதற்காகவும், நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் நம்மை அழைத்ததன் நோக்கம் ஒருவர் மற்றவரை அன்பு செய்து வாழவே நாம் தொடக்க நூலில் படிக்கலாம் கடவுள் மனிதனை படைக்கும்போது “தன் உருவிலும் சாயலிலும் அவனை படைத்தார்” அப்படியானால் ஒவ்வொரு மனிதனும் இறைவனின் சாயல். நாம் ஒவ்வொரு மனிதனையும் அன்பு செய்வது இறைவனை அன்பு செய்வதற்கு சமம். இறைவன் ஒருவர் மற்றவரை அன்பு செய்வதற்காக அழைக்கிறார். அழைக்கக் கூடிய அவரைப் பின்தொடரவும், பின்தொடராமல் இருப்பதற்கும் நாம் உரிமை உடையவர்கள். ஆனால் நாம் அவரை பின் தொடரப் போகிறோமா? இல்லையா?; என்பதை இன்றைய நாளில் நாம் சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம். மேலும் இதனை இறை அழைத்தல் என்ற கண்ணோட்டத்தில் நாம் காணலாம்;. இறையழைத்தல் என்பது அகிலத்தில் உள்ள அனைவரின்; நலனுக்காக ஒருவர் மற்றவரை அன்புச் செய்து வாழ வேண்டும் என்பதன் வவழியாக அனைவரையும் ஆண்டவரிடம் அழைத்துச் செல்ல உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தமது வாழ்வை அர்ப்பணிப்பதாகும். இந்த பணியை குருக்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்பதல்ல. மாறாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே இது பொதுவானது. குருத்துவப் பயிற்சி பெறுவதற்கான அழைப்பு ஆலயத்தில் வழங்கப்படுகிறது. இந்த அழைப்பில் உயர்ந்த குலத்தவர், தாழ்ந்த குலத்தவர் என்பது இல்லை. இயேசுவுக்காக பணிசெய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. இயேசுவின் நற்செய்தி பணியை செய்ய நாம் நமது குழந்தைகளை அனுப்பலாம். அவர்கள் குருக்களாக உருவாகி இயேசுவின் நற்செய்தியை எடுத்துச் சொல்லக்கூடியவர்களாக மாற்றறம் பெறுவர். இதில் உயர்வு, தாழ்வு என்பது கிடையாது. ஆண்டவர் அழைக்கிறார் அவரது குரலுக்கு செவி கொடுக்கக் கூடியவர்களாக நாம் இருக்கிறோமா? என சிந்தித்துப் பார்ப்போம். நமது குழந்தைகளை இறைவனின் பணியாற்றுவதற்க்காக நாம் அனுப்ப வேண்டும் என்றும் இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. எனவே நமது குழந்தைகளுக்காக செபியுங்கள். தொடர்ந்து இந்த உலகில் இறையழைத்தல் அதிகமாக உருவாக வேண்டும் என்பதற்க்காக செபிக்க இன்றைய நாளில் நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். எனவே நாம் அனைவரும் தொடர்ந்து ஒருவர் மற்றவரை அன்பு செய்து வாழுவதற்கான வரம் வேண்டி தொடர்ந்து செபிப்போம்.

என்றும் அன்புடன் உங்கள்
சகோ. ஜே. சகாயராஜ்
இரண்டாம் ஆண்டு இறையியல்
தூய பவுல் இறையியல் கல்லூரி
அம்மாபேட்டை
திருச்சி மறைமாவட்டம்

சனி, 22 ஜூன், 2019

புனித தோமையாரின் நினைவு

இயேசுவுடன் உடனிருத்த தோமையார்
“உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைச்சாற்றுங்கள்” (மாற்கு 16: 15) என்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு ஏற்ப, ஐயம் தவிர்த்து ஆண்டவர் இயேசுவின் மீது பற்றுக் கொண்டு இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதற்காக ஆசியா கண்டத்தில் உள்ள இந்தியாவின் தமிழகப் பகுதிக்கு வந்த முதல் திருத்தூதர் புனித தோமையார் அவர்கள். இவர் இயேசுவின் பணியை உலகிற்கு அறிவித்து தனது இன்னுயிரையும் இழந்து இயேசுவின் சாட்சியாக இன்றும் நம் மண்ணில் மனம் வீசிக்கொண்டிருக்க கூடியவர். இத்தகைய சிறப்புமிக்க ஒருவரான புனித தோமையாரின் நினைவு நாளை இன்று நம் தாய் திருஅவையானது நினைவு கூறுகிறது. இந்த நேரத்தில் அவரின் பெயரை தாங்கி இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் நாம விழா வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்கிறேன். தோமையார் என்ற பெயரைக் கூறிய உடனேயே நமக்குள் தோன்றுவது என்ன? அவர் சந்தேகப்படக் கூடியவர், இவர் இயேசுவின் சீடர், இவர் கூறிய வார்த்தைகள், இவர் இந்தியாவிற்கு வந்த முதல் திருத்தூதர், இவர் மறைபரப்பு பணியை செய்தவர் என பலவாறு நாம் கூறிக்கொண்டே செல்லலாம். ஆனால் இன்று புனித தோமையாரின் வாழ்வில் இருந்து நாம் நமது சிந்தனைக்கு எடுத்துக் கொண்ட தலைப்பு “இயேசுவுடன் உடனிருத்த தோமையார்”. இயேசு மண்ணில் வாழ்ந்த போது பலவிதமான மக்கள் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். உதாரணமாக அவர் கூறுவதெல்லாம் கேட்டுக்கொண்டே அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் ஆக ஓடிச் சென்ற மக்கள் கூட்டம் ஒருபுறம். மற்றொருபுறம் இவர் மீது எப்படி குற்றத்தை சுமத்தலாம். எங்கு இவரை எப்படி சிக்க வைக்கலாம் என்று, இயேசுவைக் கொலை செய்யும் நோக்கத்தோடு அவருடன் தொடர்ந்து வந்தது ஒரு கூட்டம். இன்னும் ஒருபுறமோ இயேசு பெயர் சொல்லி அழைக்க அவரை பின்தொடர்ந்து, அவரோடு தங்கி நற்செய்திப் பணியை அகிலத்திற்கு அறிவிப்பதற்காக அவரால் பயிற்ச்சிக்கப்பட்ட கூட்டம். இக்கூட்டத்தில் ஒருவர் தான் நாம் இன்று நினைவு கூறக் கூடிய நமது புனித தோமையார் அவர்கள். இயேசு மண்ணில் வாழ்ந்த போது உண்மையை எடுத்துரைத்தார். சமூகத்தில் அநீதி இழைக்கப்படும் பொழுது அந்த அநீதியை எதிர்த்தார், சட்டத்தால் மனிதன் அடிமைப்படுத்த போது சட்டத்தை விட மனிதன் என்பவனே முதன்மையாணவன் என்ற கருத்தை ஆழமாக பதிவு செய்தார். இயேசு என்ற இந்த ஒரு மனிதனை கொலை செய்வதற்கு ஒரு கூட்டம் தேடுகிறது. இவரை சிக்க வைக்க ஒரு கூட்டம்; சூழ்ச்சிகள் பல செய்கிறார்கள் என்பதை எல்லாம் அறிந்து இருந்தபோதும் அந்த இயேசுவுக்கு துணை நிற்பதற்காக அவர் அழைத்தார் என்ற ஒரே காரணத்திற்காக ஏன்? எதற்கு? என்ற கேள்விகளை எழுப்பாமல் அழைத்தது இயேசு என்பதை மட்டும் மனதில் இருத்திக் கொண்டு அவர் பின்னே சென்று அவரோடு பயணித்தவர் நாம் இன்று நினைவு கூறக்கூடியவர்  புனித தோமையார் அவர்கள். சமூகத்தின் அநீதிகளை தட்டி கேட்டுக் கொண்டே சென்ற இயேசுவை நானும் பின் தொடர்ந்து வருகிறேன் என்று கூறி அவரோடு தொடர்ந்து பயணித்து. இயேசுiவைப் போல தானும் ஒருநாள் உயிர் விட வேண்டிய சூழல் உருவாகும் என்பதை அறிந்தவராய் நம் புனிதர் இயேசுவுடன் இருந்தார். இயேசு கிறிஸ்து இம்மண்ணில் ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை கற்பித்து அதன்படி வாழ்ந்து காட்டினார். அவரின் அடிச்சுவட்டை பின்பற்றி தொடர்ந்து பயணித்தவர் நாம் நினைவு கூறும் புனித தோமையார் அவர்கள். இயேசுவை கைதுச் செய்யப்பட்ட போது அவரை விட்டுவிட்டு அஞ்சி ஓடியவர்தான் இவரும். ஆனால், திரும்பி வந்தார் இயேசுவின் உயிர்ப்பால் மனமாற்றம் பெற்றார். “நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்” (யோவான் 11: 16)  என்று அறிக்கையிட்டவர் அதை நிறைவும் செய்தார். இயேசுவுடன் உடனிருந்த தோமையார் இன்று நாம் இச்சமூகத்தில் எந்த விதமான மக்களுடன் உடனிருக்கிறோம் என்பதை சிந்திக்க நம்மை அழைப்பு தருகிறார். இன்று நாம் வாழும் சமூகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நமது நாட்டில் நாம் வாழும் நமது சமூகத்தில் நடந்தேறக் கூடிய அநீதிகள் ஏராளம், அதேசமயம் அந்த அநீதிகளை எதிர்க்கும் வகையில் உதயமான மனிதர்களும் ஏராளம். இதற்கு சிறந்த உதாரணமாக மெரினா புரட்சி, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்பு அலைகள் என பலவற்றை நாம் பலவற்றைக் கூறிக்கொண்டே செல்லலாம். உண்மைக்கும் உரிமைக்கும் இடையேயான போராட்டத்தில் உயிர் போவது உறுதி என தெரிந்த நிலையிலும் பலர் இன்று இயேசுவாகவே உதயமாகி உண்மைக்கும், பொய்மைக்கும் மனித வாழ்வுக்கும் எதிரானவற்றை எதிர்த்த போது அவர்களில் பலர் உயிர் நீத்தார்கள், இரத்தம் சிந்தி பலர் காயங்களோடு இன்றும் நம் முன் வலம் வருகிறார்கள். இத்தகைய மனிதர்கள் இன்று உலகில் வலம் வந்து கொண்டிருக்கும் பொழுது இவர்களில் யாரிடம் நாம் நமது உடனிருப்பை கொடுத்தோம் என்பதை சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம். தோமையார் என்றால் உடனே நம் நினைவுக்கு வருவது சந்தேகம்... சந்தேகம்... சந்தேகம்... என்பது தான். இவர் சந்தேகித்தார் என்பது உண்மைதான் ஆனால், அந்த சந்தேகத்தினை எதற்கும் அஞ்சாது துணிவோடு அறிக்கையிட்டவர் இவர். நாங்கள் ஆண்டவரை கண்டோம் என அனைத்து சீடர்களும் கூறியபோது “நான் ஆவரடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்ப மாட்டேன்” என்று துணிவுடன் கூறியவர் இவர் இதனையே இன்றைய நற்செய்தி வாசகங்கள் (யோவான் 20: 25) நமக்கு தெளிவுபடுத்திக் காட்டுகின்றன. அவரிடமிருந்து துணிவு இன்று நம்மில் எத்தனை நபரிடம் இருக்கிறது என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம். உயிர்த்த ஆண்டவர் அவர் முன் தோன்றி “இதோ என் கைகள்! உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்” என்றபோது “என் ஆண்டவரே நீரே என் கடவுள்” (யோவான் 20: 27-28) என்று கூறிய ஆண்டவரிடத்தில் சரணடைந்தவர் நம் புனிதர் புனித தோமையார். ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளின் படி தன் வாழ்வை அமைத்துக் கொண்டு நற்செய்தியைப் பறைசாற்ற நம் இந்திய நாட்டிற்கு வந்து வேத சாட்சியாக மரித்தவர் இவர். அகிலத்தில் சிலரின் கல்லறைகள் மீது தான் ஆலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன அவர்களுள் நாம் இன்று நினைவு கூறும் புனித தோமையாரின் கல்லறையின் மீது தமிழ்நாட்டில் சென்னையில் ஒரு ஆலயமானது நிறுவப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. “நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்” (யோவான் 11: 16) என்ற எழுச்சி வார்த்தைகளின் சொந்தக்காரரான புனித தோமையார் இயேசுவைப் பற்றிய நற்செய்தி பணியை பல இடங்கள் அறிவித்து இயேசுவுக்காக உயிர் துறந்து தம்முடைய வார்த்தைகளுக்கு செயல் வடிவம் கொடுத்தவர். புனித தோமையாரை நினைவுகூரும் நாம் வெறும் விழாவாக இன்றைய நாளில் அவரை பற்றி அறிந்து கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவரை போல அகிலத்தின் நன்மைக்கு உரிமைக்கும் எதிராக உருவாகும் அநீதிகளை எதிர்க்கக்கூடிய இயேசுவாகவும், தேவையில் இருப்பவர்களுக்கு நண்பர்களாகவும், நீதியை நிலைநாட்ட முயலும் தோழர்களுக்கு உறுதுணையாகவும் இருந்து இயேசுவுடன் இருந்த தோமையாரைப் போல நாமும் இவர்களுடன் நமது உடனிருப்பை வழங்கக்கூடிய நல்ல மனிதர்களாக நமது வாழ்வு அமைந்திட அருள் வேண்டி தொடர்ந்து இந்த வழிபாட்டில் பக்தியோடு இணைவோம்....

என்றும் அன்புடன் உங்கள்
ஜே. சகாயராஜ்
இரண்டாம் ஆண்டு இறையியல்
தூய பவுல் இறையியல் கல்லூரி
அம்மாபேட்டை
திருச்சி மறைமாவட்டம்

இயேசுவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா

இறைவன் இயேசுவில் அன்புக்குரிய இறைமக்களே இன்று மனித வாழ்வில் பசி என்பது இல்லையென்றால் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்பார்கள். புசியை நீக்க அன்றாட உணவு அவசியமாகிறது. ஆரை சாண் வயிற்றுக்காக தான் மனிதன் அனுதினமும் அலைந்து திரிகிறான். மனிதன் பாடுபட்டு உழைத்தாலும் அதனால் பயனேன்றுமில்லை என்கிறார் சபை உரையாளர். இன்று நம் தாய்த்திரு அவையானது ஆண்டவர் இயேசுவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா கொண்டாடுகிறது. அதாவது ஆண்டவர் இயேசு கிறிஸ்து சிலுவையில் நமக்காக தன் உடலையும், இரத்தத்தையும் கையளித்ததை நினைவுகூறும் வகையில் அவர் ஏற்படுத்திய நற்கருணை அருட்சாதனத்தை இன்று நாம் நினைவு கூறுகிறோம். இயேசு கிறிஸ்து இதனை நாம் அனுதினமும் நினைவுகூற அறிவுறுத்தியதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். இயேசு காட்டிக் கொடுக்கப்பட்ட அந்த இரவில் அப்பத்தை எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தி அதைப்பிட்டு இது உங்களுக்கான என் உடல் இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்றார். அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள் என்றார். என்று அன்று இயேசு கூறிய வார்த்தைகளை புனித பவுலடியார் கொரிந்து நகர மக்களுக்கு  எடுத்துக்கூறி நற்கருணை அருள் சாதனத்தினை கொண்டாடுகிறார். இன்றைய முதல் வாசகத்தில் அன்று நாம் பயன் படுத்தும் கோதுமை அப்பமும், திராட்சை இரசமும் பலங்காலமாகவே இறைவனுக்கு என்று பயன் படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதை இன்றையமுதல் வாசகம் நமக்கு விளக்குகிறது. இதையே மெல்கிசேதேக்கு அப்பமும் இரசமும் வைத்திருந்தார்கள். அவர் உன்னத கடவுளின் அர்ச்சகராக இருந்தார். என குழுக்களுக்குள் முதன்மையானவரான மெல்கிசேதேக்கு பற்றி இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம். இன்று திருப்பலியில் பயன்படுத்தப்படும் இந்த அப்பத்தையும் இரசத்தையும் இயேசு கூறிய வார்த்தைகளை கூறி ஒரு குருவானவர் செபிக்கும்போது அந்த அப்பமும், திராட்சை இரசமும் ஆண்டவரின் உடலாகவும், இரத்தமாகவும் மாறுகிறது. இதுவே நம் திருஅவையின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை ஏற்று அதை பின்பற்றி வாழக் கூடியவர்களாகிய நாம் இதன் உண்மையான நோக்கம் என்ன என்பதை அறிந்திட முயலுதல் வேண்டும். இயேசு எவ்வாறு தன் உயிரை தவறு ஏதும் செய்யாத போதும் நமக்காக கையளித்தாரோ அதுபோல நாம் ஒருவர் மற்றவருக்கு நம்மால் இயன்றதை கொடுத்து உதவ வேண்டும் என்பதையே இன்றைய நாளில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றாக திருஅவை கூறுகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டிருப்போம் பெருந்திரளான மக்கள் ஆண்டவர் இயேசுவின் போதனைகளை கேட்பதற்காக கூடி வந்தார்கள் மாலை நேரமான போது அவர்களை இயேசு அனுப்பிவிட சீடர்கள் எண்ணினார்கள். ஆனால், அவர்கள் பசியாய் இருப்பதை உணர்ந்து அவர்களுக்கு உணவு கொடுக்குமாறு தம் சீடர்களிடம் இயேசு கூறியபோது அவர்கள் தங்களிடத்தில் எதுவுமில்லை இவர்களுக்கு உணவு வாங்க நம்மால் இயலாது என்று பதில் தருகிறார்கள். ஆனால், இயேசு உங்களிடம் என்ன இருக்கிறது அதை கொண்டு வாருங்கள் என்று கூறியபோது கூட்டத்தில் இருந்த ஒருவர் தன்னிடம்  இருந்த ஐந்து அப்பத்தையும் இரண்டும் இணையும் கொண்டு சென்று இயேசுவிடம் கொடுத்தார். அதை கொடுப்பதற்கான மனம் அவரிடம் இருந்தது. அத்தகைய மனதினை கொண்டவர்களாக நாமும் வாழ வேண்டும் என்பதையே இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. நம்மிடம் இருப்பதை நாம் பிறரிடம் பகிரும் பொழுது நம் தேவையை இறைவன் பார்த்துக் கொள்வார், நமக்கு தேவையானதை அவர் தருவார் என்ற நம்பிக்கையோடு நாம் இருத்தல் வேண்டும். .நம் அனைவருக்கும் தெரியும் புனித அன்னை தெரசா அவர்கள் அனுதினமும் ஆண்டவர் இயேசுவின் முன்பு அமர்ந்து தங்களுக்கு தேவையானவற்றை கேட்பார்கள் ஆனால் மகிழ்ச்சியோடு அந்த அன்னை தெரசா அவர்கள் கூறுவார் இதுநாள் வரை நாங்கள் பட்டினியில் வாடியது இல்லை ஏனெனில் நாங்கள் கேட்கும் போதெல்லாம் இறைவன் யார் மூலமாவது எங்களுக்கும் எங்களிடையே இருக்கக்கூடிய குழந்தைகளுக்கும் உணவு தந்து கொண்டிருக்கிறார் என்று புனித அன்னை தெரசா அவர்கள் கூறுவார். அன்னை தெராசா அவர்கள் தன் வாழ்வில் நடந்த ஒரு மகிழ்ச்சியான நிகழ்வினை ஒரு முறை பகிர்ந்து கொண்டார். அதாவது ஒருமுறை அன்னை தெரசா அவர்கள் தனது சக சகோதரர்களிடம் பக்கத்தில் இருக்கக்கூடிய கிராமத்திற்குச் சென்று அங்கு உள்ள ஏழைகளுக்கு நம்மிடம் இருப்பதை கொடுத்து வாருங்கள் எனக்கூறி அனுப்பினாராம். அப்போது அங்கு சென்ற சகோதரி ஒருவர் தன்னிடம் இருந்த சிறிதளவு உணவை இன்னொரு கஷ்டப்படக் கூடிய ஒரு பெண்மணியிடம் கொடுத்தார். அந்த பெண்மணியோ அதை வாங்கிக்கொண்டு இதோ வந்து விடுகிறேன் என்று கூறி விட்டு சிறிது நேரம் கழித்து வந்தார். அம்மா எங்கே சென்று இருந்தீர்கள்? ஏன் இவ்வளவு நேரம்? என்று கேள்வி எழுப்பிய போது அந்த தாயார் கூறினாராம் நான் எனது பசியைத் தாங்கிக் கொள்வேன் ஆனால் எனது பக்கத்து தெருவில் ஒரு வயதான பாட்டி இருக்கிறார்கள் அவர்கள் பசியால் மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார.; எனவே தான் அவருக்கு இதில் பாதியை கொடுத்து விட்டு வந்து விடலாம் என்று சென்றேன் என்று கூறினாராம். அந்த சகோதரி இந்த நிகழ்வை அன்னை தெரசாவிடம் கூறியபோது அன்னை தெரசாவின் கண்கள் கலங்கியது. இதுவல்லவா மனிதநேயம் தான் பசியாக இருந்தாலும் பரவாயில்லை மற்றவர் வயிறார உணவு உண்ண வேண்டும் என்ற எண்ணம் அல்லவா நம்மிடத்தில் என்று இருக்க வேண்டும் இதையே இன்றைய நற்செய்தி வாசகங்கள் நமக்கு கற்பிக்கின்றன. ஆண்டவரின் திருவுடல், திருரத்த பெருவிழாவை கொண்டாட கூடிய நாம் ஒவ்வொருவரும் இந்த நாளில் இந்த கருத்துக்களை மனதில் உள்வாங்கியவர்களாக சிந்திப்போம.; தொடர்ந்து  இறைவனது ஆசியை பெற முயல்வோம். நம்மிலிருந்து நம் வழியாக ஒருவர் மற்றவர் உதவி பெற நல்ல மனம் கொண்டவர்களாக வாழ வரம் வேண்டி தொடர்ந்து செபிப்போம்;.

என்றும் அன்புடன் உங்கள்
ஜே. சகாயராஜ்
இரண்டாம் ஆண்டு இறையியல்
தூய பவுல் இறையியல் கல்லூரி
அம்மாபேட்டை
திருச்சி மறைமாவட்டம்










இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...