வெள்ளி, 7 ஜூன், 2019

துணிவு கொள்வோம்

               துணிவு கொள்வோம்
வரலாறு தெரியாதவன் வாழத்தெரியாதவன் என்பார்கள். அன்று நடந்தவைகளை இன்று நாம் தெரிந்து கொள்ள உதவுவது இந்த வரலாறு. இவ்வுலகில் அனைத்திற்குமே வரலாறு உண்டு தன் வாழும் காலத்தில் தனக்கான வரலாறு உருவாக்குவதற்கு மனிதன் பெரிதும் முயற்சித்துக் கொண்டிருக்கிறான்.
தொடக்ககால கிறிஸ்தவர்களின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது அவர்கள் பல இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் ஆளாகி தனது இன்னுயிரை ஈந்தவர்கள் என்பது மறுக்க இயலாத உண்மையாகும். தொடக்க கால கிறிஸ்தவர்கள் இரவில் கூடி செபித்தார்கள். இரவில் கூடி செபிப்பவர்கள் அரசுக்கு எதிரானவர்கள் என்று கூறி ஒரு மரத்தில் கட்டி வைத்து விளக்குபோல எரியவிட்டு கொன்ற நிகழ்வு நமது வரலாற்றில் உண்டு. தொடக்ககால கிறிஸ்தவர்கள் மனிதனை உண்ண கூடியவர்கள் என்று கூறி அவர்களை கொன்று குவித்த நிகழ்வும் நமது வரலாற்றில் உண்டு. ஒற்றை கடவுள் கொள்கையைப் பற்றி பேசியதால் தொடக்ககால கிறிஸ்தவர்கள் நாத்திகவாதிகள் என கருதப்பட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வும் நமது வரலாற்றில் உண்டு. இது போன்று பல விதமான துன்பங்களையும், துயரங்களையும் சந்தித்தவர்கள் நமது தொடக்ககால கிறிஸ்தவர்கள். ஆனால், துன்பத்தையும், துயரத்தையும்; கண்டு அஞ்சியவர்கள் அல்ல இவர்கள். மாறாக துணிவு கொண்டவர்களாக துன்பத்துயரங்களை எதிர்கெண்டவர்கள்.
திருவிவிலியத்தில் மக்கப்பேறு இரண்டாம் புத்தகத்தில் ஏழு குழந்தைகளை கொண்ட ஒரு தாயின் நிகழ்வானது குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த தாய் இறைவன் மீது அசையாத நம்பிக்கை கொண்டவராய் அவரை ஏற்றுக் கொண்டு, அவரின் கட்டளைகள் மீது ஆழமான பற்றுக்கொண்டு, அதன்படி வாழ்ந்து வந்தாள். தன் மகன்களையும் அதன்படி வளர்த்து இறைவனின் கட்டளைகளின்படி வாழ பயிற்றுவித்தாள். இறைவன் மீதுக் கொண்டுள்ள பற்றிலிருந்து விடுபட்டு வாழ நிர்பந்தம்படுத்திய போது இறைவன் மீது கொண்டுள்ள பற்றாலும், கடவுளின் கட்டளையை மீறக்கூடாது என்பதற்காக மறுப்பு தெரிவித்தால்.  மேலும் தனது குழந்தைகளையும் கடவுளின் கட்டளையை விட்டு விலகுவதைவிட உயிரை இழக்க ஊக்கப்படுத்தினால். அத்தாயின் கண் முன்பாகவே அவளது மகன்கள் ஒவ்வொருவரையும் கடுமையாக துன்புருத்தி கொலை செய்யப்பட்டார்கள். தனது ஏழு மகன்களையும் இழந்த பின்பும் கூட கடவுள் மீது அசைக்க முடியாத பற்று கொண்டுடவளாய் துணிவோடு எதிர்த்து நின்று தான் உயிரையும் இழந்தாள் என்பதை அறியலாம்.
சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் கூட சிறுபான்மை மக்கள் எதிர்பார்த்தது போல தேர்தல் முடிவானது அமையவில்லை. தமிழகத்தில் எதிர்பார்த்தது நிறைவேறி இருந்தாலும் பெரும்பான்மையான மாநிலங்களில் அவை நிறைவேறவில்லை. இன்று  சிறுபான்மையினரான பலருடைய மனதில் அச்ச உணர்வு காணப்படுகிறது. அச்ச உணர்வு அழிவைத்தரும். இது நாம் அச்சமுற வேண்டிய நேரம் அல்ல மாறாக வரக்கூடிய இடர்களை எல்லாம் எதிர்த்து நிற்க வேண்டிய நேரம். சில நாட்களுக்கு முன் பாஸ்கா காலத்தை நிறைவு செய்த நாம் இயேசுவின் சிலுவை பாடுகளை நினைத்து பார்ப்போம். தவறு எதுவும் செய்யாமல் மனுகுல மீட்புக்காக இயேசு துணிவுடன் சிலுவை மரணத்தை ஏற்று முன் செல்கிறார். அவரிடம் நலம் பெற்றவர்களோ, அவரின் புதுமைகளைக் கண்டு வியந்து போனவர்களோ, ஏன் அவருடன் இருந்த சீடர்கள் என அனைவரும் அச்சத்தால் அவரை விட்டுவிட்டு ஓடி மறைந்த போது. துணிவோடு முன் வந்தால் வீரப்பெண் வெரோணிக்கா இயேசுவின் முகத்தை துடைத்தால் அவளது துணிவும், பரிவும் வரலாற்றில் இன்றும் நினைக்கப்படுகிறது.
உலகில் துணிவோடு செயல்பட்ட எத்தனையோ நபர்கள் மரித்து போனார்கள் ஆனால், அவர்கள் யாரும் மறைக்கப்படவில்லை. மண்ணில் மடிந்த அவர்கள் அனைவரும் மடிந்ததாக கருதப்படுவதில்லை. மாறாக அவர்கள் அனைவரும் புதைக்கப்பட்டதாக கருதப்படுகிறார்கள். புதைக்கப்பட்ட அவர்கள் இன்றம் பலருடைய உள்ளங்களில் துணிவை தந்து கொண்டிருக்கிறார்கள். நாம் யாருக்கு துணிவை தரப்போகிறோம்? முதலில் நம்மை சூழ்ந்து இருக்கக்கூடிய சவால்களை கண்டு அஞ்சி ஓடிப்போகிறோமா? அல்லது துணிவோடு எழுந்து நின்று அதனை எதிர்த்துப் போராடப் போகிறோமா? என்பது தான் இன்று நம்முன் இருக்கக்கூடிய கேள்வி ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம் சீடர்களைப் பார்த்து கூறினார் “துணிவோடு இருங்கள்” என்று. அதே வார்த்தையை தான் இன்று நம்மிடமும் கூறுவார். வரக்கூடிய இடர்பாடுகள் எதுவாயினும் அதனை எதிர்த்து நின்று இறைவன் மீது நம்பிக்கை கொண்டவர்களாய், அச்ச உணர்வை தவிர்த்து, துணிவோடு எழுந்து நின்று புதிய சமுதாயம் படைத்திட  முடிவெடுப்போம். அதற்கான செயல்பாட்டில் இறங்குவோம்.
                      

                      என்றும் அன்புடன் உங்கள்
              ஜே. சகாயராஜ்
இரண்டாம் ஆண்டு இறையியல்
தூய பவுல் இறையியல் கல்லூரி
அம்மாபேட்டை
திருச்சி மறைமாவட்டம்

2 கருத்துகள்:

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...