அழைப்பது இறைவன்
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்று நாம் திருவிவிலியத்தில் இயேசு கூறிய ஒரு உவமையைப் நினைவுப்படுத்த விரும்புகிறோன். ஒரு தந்தையானவர் தனது மூத்த மகனை நோக்கி வயலுக்குச் சென்று வேலை பார்த்து வா எனக் கூறுகிறார். அதற்கு அந்த மகன் என்னால் செல்ல இயலாது எனக் கூறிவிட்டு சென்று விட்டான். பிறகு தந்தை தனது இளைய மகனை நோக்கி தோட்டத்திற்குச் சென்று வேலை பார்த்து வா எனக் கூறுகிறார். அவனோ இதோ செல்கிறேன் தந்தையே எனக் கூறுனான். ஆனால் தோட்டத்திற்கு செல்லாமல் இருந்துவிட்டான். மூத்த மகனோ தன் தந்தை சொன்னதை நினைவுகூர்ந்து சொல்ல மாட்டேன் என சொல்லி இருந்தாலும் தோட்டத்திற்குச் சென்று வேலை பார்த்து விட்டு வீடு திரும்பி வருவான். இவர்கள் இருவரில் சிறந்தவர்கள் யார் என்ற கேள்வியை எழுப்பினால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்? பெரும்பாலானோர் சொல்லுவார்கள் மூத்த மகனே சிறந்தவன் என சொல்வார்கள். சிலர் இளைய மகன் சிறந்தவன் என சொல்லலாம் இதில் யார் சிறந்தவன் என்பதை நாம் எதை கொண்டு தீர்மானிக்கிறோம் என்றால் நாம் யாருடைய இடத்தில் இருந்து கொண்டு சிந்திக்கிறோமோ அதுவே நம் முடிவை தீர்மாணிக்கிறது. பொதுவாக இன்றைய உலகில் நம்மிடையே இரு விதமான வாய்ப்புகள் உள்ளன. வேலைக்குச் சென்று வா என தந்தை கூறும் போது செல்கிறேன் அல்லது செல்லவில்லை என்று கூறுவதற்கான முழு உரிமையும் மகன்களுக்கு உண்டு. இதனையே இன்றைய வாசகங்கள் வழியாக நாம் சிந்திக்கவிருக்கிறோம். இனறைய வாசகங்கள் வழியாக நமக்கு இறைவன் கொடுக்கக்கூடிய சிந்தனை அழைப்பு பற்றிதாகும். அது நம் அனைவருக்கும் இரு விதமான வாய்ப்புகள் உள்ளன என்பதை வெளிகாட்டுகின்றன. ஒன்று அழைப்பை ஏற்பதற்கும் மற்றொன்று அழைப்பை ஏற்காமல் மறுப்பதற்கும். ஆனால், நாம் எதைச் செய்யப் போகிறோம் என்பது ஒவ்வொருவரையும் பொறுத்தது அழைப்பை ஏற்க போகிறோமா? அல்லது அழைப்பை ஏற்காமல் இருக்க போகிறோமா? என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் எலியா வழியாக எலிசாவை அழைக்கின்றார். யார் இந்த எலிசா? என்று பார்க்கும் போது இவர் ஒரு உழவு தொழில் செய்யக் கூடியவர். கடவுள் பார்வையில் உயர்வு, தாழ்வு என்பது கிடையாது. உயர்வு, தாழ்வு என்பது மனித மனங்களில்தான் உள்ளது. அது போலவே இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மூவரை அழைப்பதை நாம் பார்க்கலாம். ஒருவர் தாமாக வந்து இயேசுவிடம் “நீர் எங்கு சென்றாலும் நானும் உன்னுடன் வருவேன்” என்கிறார். ஆனால் இயேசு தன்னை தெளிவாக அவருக்கு விளக்கிக் காட்டுகிறார். தன்னிடம் வருபவரை ஏற்றுக் கொள்ள ஆண்டவர் இயேசுவுக்கு விருப்பம். ஆனால், அதேசமயம் தனது நிலையை அவருக்கு உணர்த்துகிறார். “மானிட மகனுக்கு தலைச் சாய்ப்பதற்கு கூட இடமில்லை” என்ற கருத்தினை அவரிடம் பதியவைக்கிறார். அவரை தொடர்ந்து இயேசு ஒருவரை அழைக்கிறார். அவனோ நான் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வருகிறேன் என்றார். அதுப்போலவே மூன்றாவதாக ஒரு நபர் தாமாக வந்து உன்னை பின்பற்றுவேன் ஆனால் எனது வீட்டிற்கு சென்று விடைபெற்று வருகிறேன் என்றான். ஆனால் இயேசு கலப்பையில் கை வைத்தபின் திரும்பி பார்த்தல் ஆகாது எனக் குறிப்பிடுகிறார். இதன் மூலம் இன்றைய வாசகங்கள் நமக்கு கொடுக்கக்கூடிய செய்தி அழைப்பு என்பது இறைவனால் தரப்படுவது. இதில் உயர்வு, தாழ்வு என்பது இல்லை. ஏழை, பணக்காரன் என்பது இல்லை. உயர்ந்த குலத்தவர், தாழ்ந்த குலத்தவர் என்ற வேறுபாடு இல்லை. மனிதனாக பிறந்த அனைவருக்கும் அழைப்பு என்பது பொதுவானது. ஆண்டவர் அனைவரையும் அழைக்கிறார். அவரிடம் நான் வருகிறேன் என்று கூறுவதற்கும் இல்லை வரவில்லை என்பதற்குமான உரிமையை இறைவன் நமக்கு வழங்கியுள்ளார். ஆனால் அனைவரும் நம்பிக்கைக்கு உரியவராக வாழ வேண்டும். பெயரளவில் நான் உன்னை பின் தொடர்ந்து வருகிறேன் எனக் கூறிவிட்டு அவரை விட்டுவிட்டு போகக்கூடியவர்களாக நாம் இருத்தலாகாது. அதுபோல அவர் அழைக்கும் பொழுது இதோ வருகிறேன் என்று கூறிவிட்டு அவர் அவர் பின்பு வராமல் அவர் கூறியதை செய்யாமலிருக்க கூடியவர்களாகவும் நாம் இருத்தலாகாது. இவ்வாறு இன்றைய வாசகங்கள் நமக்கு தெளிவாக கூறுவது ஒன்றே ஒன்று. அது இறைவன் அனைவரையும் அழைக்கிறார் அவரிடத்தில் எந்தவித உயர்வு தாழ்வும் இல்லை என்பதாகும். ஆனால் ஏன் அழைக்கிறார்?, எதற்காக நாம் அழைக்கப்படுகிறோம்? என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதை உணர்த்தும் வகையில் தான் இன்றைய இரண்டாம் வாசகம் அமைந்திருக்கிறது. புனித பவுல் கலாத்திய நகர மக்களுக்கு எழுதிய கடிதத்தில் இயேசுவின் கட்டளையை குறிப்பிடுகிறார். “உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” இதுவே ஆண்டவர் இயேசு கிறிஸ்து தந்த ஒரே கட்டளை. இந்த கட்டளையை நிறைவு செய்வதற்காகவே நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். நாம் அனைவரும் ஒருவர் மற்றவரை அன்பு செய்யவும், ஒருவர் மற்றவரை புரிந்து கொள்ளவும், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து, மற்றவர் துயரத்தில் பங்கெடுக்க கூடியவர்களாக வாழ்வதற்காகவும், நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் நம்மை அழைத்ததன் நோக்கம் ஒருவர் மற்றவரை அன்பு செய்து வாழவே நாம் தொடக்க நூலில் படிக்கலாம் கடவுள் மனிதனை படைக்கும்போது “தன் உருவிலும் சாயலிலும் அவனை படைத்தார்” அப்படியானால் ஒவ்வொரு மனிதனும் இறைவனின் சாயல். நாம் ஒவ்வொரு மனிதனையும் அன்பு செய்வது இறைவனை அன்பு செய்வதற்கு சமம். இறைவன் ஒருவர் மற்றவரை அன்பு செய்வதற்காக அழைக்கிறார். அழைக்கக் கூடிய அவரைப் பின்தொடரவும், பின்தொடராமல் இருப்பதற்கும் நாம் உரிமை உடையவர்கள். ஆனால் நாம் அவரை பின் தொடரப் போகிறோமா? இல்லையா?; என்பதை இன்றைய நாளில் நாம் சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம். மேலும் இதனை இறை அழைத்தல் என்ற கண்ணோட்டத்தில் நாம் காணலாம்;. இறையழைத்தல் என்பது அகிலத்தில் உள்ள அனைவரின்; நலனுக்காக ஒருவர் மற்றவரை அன்புச் செய்து வாழ வேண்டும் என்பதன் வவழியாக அனைவரையும் ஆண்டவரிடம் அழைத்துச் செல்ல உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தமது வாழ்வை அர்ப்பணிப்பதாகும். இந்த பணியை குருக்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்பதல்ல. மாறாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே இது பொதுவானது. குருத்துவப் பயிற்சி பெறுவதற்கான அழைப்பு ஆலயத்தில் வழங்கப்படுகிறது. இந்த அழைப்பில் உயர்ந்த குலத்தவர், தாழ்ந்த குலத்தவர் என்பது இல்லை. இயேசுவுக்காக பணிசெய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. இயேசுவின் நற்செய்தி பணியை செய்ய நாம் நமது குழந்தைகளை அனுப்பலாம். அவர்கள் குருக்களாக உருவாகி இயேசுவின் நற்செய்தியை எடுத்துச் சொல்லக்கூடியவர்களாக மாற்றறம் பெறுவர். இதில் உயர்வு, தாழ்வு என்பது கிடையாது. ஆண்டவர் அழைக்கிறார் அவரது குரலுக்கு செவி கொடுக்கக் கூடியவர்களாக நாம் இருக்கிறோமா? என சிந்தித்துப் பார்ப்போம். நமது குழந்தைகளை இறைவனின் பணியாற்றுவதற்க்காக நாம் அனுப்ப வேண்டும் என்றும் இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. எனவே நமது குழந்தைகளுக்காக செபியுங்கள். தொடர்ந்து இந்த உலகில் இறையழைத்தல் அதிகமாக உருவாக வேண்டும் என்பதற்க்காக செபிக்க இன்றைய நாளில் நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். எனவே நாம் அனைவரும் தொடர்ந்து ஒருவர் மற்றவரை அன்பு செய்து வாழுவதற்கான வரம் வேண்டி தொடர்ந்து செபிப்போம்.
என்றும் அன்புடன் உங்கள்
சகோ. ஜே. சகாயராஜ்
இரண்டாம் ஆண்டு இறையியல்
தூய பவுல் இறையியல் கல்லூரி
அம்மாபேட்டை
திருச்சி மறைமாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக