வெள்ளி, 7 ஜூன், 2019

இறைவன் விரும்பும் வளர்ச்சி


இறைவன் விரும்பும் வளர்ச்சி

     இன்பக் கனவு ஒன்று நான் கண்டேன்
     இறை ஆட்சி மலர கண்டேன்
      எங்கும் மனங்கள் மகிழ கண்டேன்
வளர்ச்சி என்னும் பெயரில் இன்று பல கவர்ச்சிகள் உதயமாகிக் கொண்டிருக்கும் இவ்வுலகில் கவர்ச்சிகளுக்கு இடையே சிக்கி தவிக்கிறது இந்த உலகமும், இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும். இச்சூழலில் இறையாட்சி மலர்வதே இறைவன் விரும்பும் வளர்ச்சி எனலாம். இறையாட்சி  மலரும்பொழுது அன்பு உதயமாகிறது. அன்பே அனைத்திற்கும் ஆணிவேர்.  “என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை” (1கொரி13:2) என்ற புனித பவுலடியாரின் வார்த்தைகளுக்கு ஏற்ப அன்பு இன்றி அணுவும் அசையாது இவ்வுலகில். இறையாட்சியின் மூலமே இந்த அன்பு இவ்வுலகில் சாத்தியமாகும். அனைவரும் ஒன்றினைந்து மகிழ்வோடும், அன்போடும் வாழ்வதற்கான சூழல் இறையாட்சி மலர்வதில் தான் சாத்தியமாகும்.
திருவிவிலியத்தில் இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் வளர்ச்சி என்று பார்க்கும் பொழுது அவர்கள் ஆண்டவரிடம் அன்பு கொண்டிருந்தார்கள் ஆண்டவரும் அவர்கள் மேல் அன்பு கொண்டிருந்தார் எப்பொழுதெல்லாம் அவர்கள் அண்டவரோடு இருந்தார்களோ அப்போதெல்லாம் அவர்கள் பல போர்களில் வெற்றி கண்டார்கள், பல இடங்களை உரிமையாக்கிக் கொண்டார்கள். அடிமை நிலையிலிருந்து உரிமை வாழ்வை நோக்கி வளர்ச்சி அடைந்தவர்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள இயலும். ஆண்டவரோடு இருப்பதே வாழ்வில் வளர்ச்சியைக் கொடுக்கும் என்பதை இஸ்ரயேல் மக்கள் நன்றாக அறிந்திருந்தார்கள் எனவே ஆண்டவரோடு இருந்தார்கள். எப்பொழுதெல்லாம் அவர்கள் ஆண்டவரை விட்டு அவர்கள் விலகிச் சென்றார்களோ அப்போதெல்லாம் கடுமையான துயரத்திற்கு ஆளானார்கள். ஆனால் செய்த தவறை உணர்ந்து மீண்டும் இறைவன்பால் திரும்பி வந்தார்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்து ஒற்றுமையோடு வாழ்ந்தார்கள். நாம் ஆண்டவரோடு இருப்பதும் அவரது கட்டளைகளை கடைபிடித்து அயலானை அன்பு செய்வதும் இறைவன் விரும்பும் வளர்சிக்கு அடிப்படையானது.
சமீபத்தில் ஆப்ரகாம் லிங்கன் பற்றி வாசித்த ஒரு பதிவு ஆப்ரகாம் லிங்கன் அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்படுகிறார் அப்போது அவருடன் இருந்த அவரது நண்பர் கூறினார் “ஆண்டவர் எப்போதும் உன்னுடன் இருக்கிறார் அதன் விளைவே நாளுக்கு நாள் உன் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது என்றார். ஆப்ரகாம் லிங்கன் அதனை கேட்டுவிட்டு தன் நண்பரிடம் கூறினாராம் “ஆண்டவர் என்னோடு இருக்கிறார் என்பதில் என்பதில் எனக்கு சிறிதளவும் சந்தேகமில்லை. ஆனால், நான் ஆண்டவரோடு இருக்கின்றேனா? என்பதுதான் அவ்வப்போது என்னை உறுத்திக் கொண்டிருக்க கூடிய ஒரு கேள்வி என்றாராம். அகிலத்தில் உள்ள அனைவருடனும் ஆண்டவர் ஒரே இயல்புடன் தான் இருக்கிறார். ஆனால் சிலர் தம்மிடம் இருக்கும் ஆண்டவர் அடுத்தவரிடமும் இருக்கிறார் என்பதை உணராது ஒருவர் மற்றவரை சாதி, மதம், மொழி, இனம் இன்னும் பலவகையான பெயர்களால் பிரித்து சிறு சிறு குழுக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நாட்டிற்கு வளர்ச்சியை தர வேண்டும் என்று கூறிக்கொண்டு சில கட்சிகளும், சில தலைவர்களும் முன்வருகிறார்கள். நம் நாடு ஒளிர்கிறது என்கிறார்கள் ஆனால், இன்றும் ஒளி இல்லாத கிராமங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அவைகள் எல்லாம் ஒளியேற்ற முடியாமல் இப்படி இருக்கின்றன என்பது அல்ல மறாக ஒளிதர மனமில்லாதவர்கள் இருப்பதனால்தான் இத்தகைய நிலை இன்றும் நிலவுகிறது. ஒரு மனிதன் தன் சுய மதிப்பையும், மாண்பையும் இழந்து இன்னொரு மனிதனின் முன்பு கைகட்டி நிற்பதுதான் வேலை வாய்ப்பு உள்ளது. அறிவைப் அதிகப்படுத்த கல்விக்கூடம் செல்லும் குழந்தைகள் வாழ்வில் கூட இன்று அரசியல் விளையாடுகிறது. சுhதி, மதம், இனம், மொழி, என பலவகையான பிளவுகளால் பிளவுபட்டு சிறு சிறு குழுக்களாக வாழும் மனிதர்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு காட்டவும், சாதி, மதம், இனம், மொழி, இவைகளை கடந்து நானும் மனிதன் அவனம் மனிதன் என்பதை சிந்திக்கத் தவறுகிறான். சிலர் சில மலர்கள் இங்கே மலர்ந்தே தீரும் என கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் இவ்வுலகில் இன்று மலர வேண்டியது மலர்களோ,கட்சிகளோ, பிரிவுகளோ அல்ல. மாறாக மலர வேண்டியது இறையாட்சியே. இறையாட்சி அன்பு வடிவமானது சாதி, மதம், மொழி, தொழில், வாழும் ஊரின் பெயர் எனப் பிளவுபட்டு வாழும் எல்லோருடைய மனதிலும் இறையாட்சியை பற்றிய எண்ணம் வளர்ச்சி அடைய வேண்டும்.
நம்முடைய எண்ணமே நமது வாழ்வை தீர்மானிக்கிறது என்பார்கள். நாம் எவ்வாறு எண்ணுகிறோமோ அவ்வாறே நம் செயல்பாடுகள் அமைகின்றன. இறைவன் விரும்பும் வளர்ச்சியான இறையாட்சி மலர நமது எண்ணங்கள் வளர்ச்சி அடைய வேண்டியது அவசியம். பலவிதமான கவர்ச்சிகளுக்குள் சிக்கித் தவிக்கும் இளையோரை பரந்த மனம் கொண்டு, பிரிவினைகளைக் கடந்து, நமது பார்வையை விரிவு படுத்திப்பார்ப்போம். நம்மில் சிலர் இறையாட்சியின் விழுமியமான அன்பினை சமூக சேவைகள் மூலமாகவும், ஆன்மீக வழிகளிலும், அடுத்தவர் துயரம் துடைக்கும் துணையாளனாகவோ, உரிமைக்கு குரல் உயர்த்தும் இளைஞனாகவோ வலம் வருகிறார்கள். இவர்களை போல நாம் எப்போது எண்ணத்தில் ஏற்றம் பெற்றவர்களாக மாறி இறைவன் விரும்பும் வளர்ச்சியான இறையாட்சியை உருவாக்கப் போகிறோம்? “எல்லோரும் ஒன்றாய் இருப்பார்களாக” (யோவான் 17:21) என்ற இறைவன் இயேசுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப நம்மில் உள்ள பிரிவுகளை நீக்கி “சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது” (தி.பா 133: 1) என்ற இறைவார்த்தைக்கேற்ப இணைவோம் இறைவன் விரும்பும் வளர்சியான இறையாட்சியின் விதையாக மாறி இவ்வுலகில் இறையாட்சி மலர்ந்திட வழிவகுத்திடுவோம்.

சகோ. ஜே. சகாய ராஜ்
இரண்டாம் ஆண்டு இறையியல்
புனித பவுல் குருமடம்
திருச்சி மறைமாவட்டம்


1 கருத்து:

  1. Sagayam! Your invitation for the growth of the kingdom of God is true! The true love unifies man with the true God and also with the deserving neighbours! Also Your invitation to rethink whether I am with God or with some other, is really thought provoking! Jesus, Jose and Mary ma always bless your mission and your vision!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...