செவ்வாய், 30 நவம்பர், 2021

பரிவு காட்டிட...(1.12.2021)

   பரிவு காட்டிட...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையை அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறான்.

இன்றைய நாள் வாசகங்களின் வழியாக இறைவன் நமக்கு உணர்த்தும் பாடங்கள் பல....

நாம் பின்பற்றுகின்ற இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து நோயையும் பசியையும் போக்கி மனித வாழ்வை வளமாக்கும்  தெய்வம். இதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

ஆண்டவர் இயேசு கிறிஸ்து மலை மீது ஏறி அமர்ந்து தன்னிடம் வந்து ஒவ்வொருவருக்கும் தேவையானதை தந்தார் என இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கிறது. மலை என்பது உயரத்தின் அடையாளம். வாழ்வில் கடவுளுக்கு நாம் உயர்ந்த இடத்தை கொடுக்கிறோம். மலை ஏறுதல் என்பது கடவுளின் துணையை நாடுவதல் எனப் பொருள் கொள்ளப்படுகிறது.

பலவிதமான உடல் மற்றும் மன நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவால் மட்டுமே தங்களுக்கு நலன் தர முடியும் என நம்பி  அவரை தேடி வந்தார்கள். தன்னைத் தேடி வருபவர்களின் தேவையை நிவர்த்தி செய்யக் கூடியவராக இயேசு செயல்பட்டார். நாம் பின்பற்றுகின்ற இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்வு நமக்கு கற்றுத் தரும் பாடமும் அதுவே. தேவையில் நம்மைத் தேடி வருபவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்ய இன்றைய நாள் வாசகங்களைப் தருகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மக்களின் மீது பரிவு கொண்டார். அவர்களின் பசியை அறிந்திருந்தார் எனவே அவர்களுக்கு உணவு கொடுக்க கூடிய மாபெரும்  வல்ல செயலைச் செய்தார்.
 இன்று நாம் வாழுகின்ற இவ்வுலகத்தில் நமது அருகாமையில் இருப்பவர்களின் பசியை உணர்ந்து கொள்ள நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம்.

 அன்னை தெரசா கூறுவார் நாம் வாழும் சமூகத்தில் ஒரு மனிதன் உணவின்றி இறக்கின்றன் என்றால் அது இறைவன் அவனை பராமரிக்கவில்லை என்பதால் அல்ல... மாறாக உன்னையும் என்னையும் போன்றவர்கள் அவர்களை பராமரிக்காதனால் நிகழ்ந்தது என குறிப்பிடுகிறார்.

நாம் வாழும் சமூகத்தில் நமது அருகில் உள்ளவர்கள் மீது பரிவு கொள்ளவும் அவர்களின் தேவைகளின் போது அவர்களது தேவைகளை நிறைவேற்றவும் நாம் அழைக்கப்படுகிறோம். நாம் துன்புறும் போது எப்படி அடுத்தவர் உதவ வேண்டும் என எண்ணுகிறோமோ. அது போல அடுத்தவர் வாழ்விலும் நாம் அவர்களின் துன்ப நேரங்களில் அவர்களோடு நாமும் ஒருவராக பங்கெடுக்கவும், அவர்கள் மீது பரிவு காட்டவும், இறைவன் அழைப்பு தருகிறார். இத்தகைய செயல்களை நமது வாழ்க்கை முறையாக மாற்றிக் கொண்டு பயணிக்கும் போது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்குகின்ற நம்மால் அவரை நமது உள்ளத்திலும் இல்லத்திலும் பிறக்க வைக்க முடியும் என்பதை உணர்ந்தவர்களாக நமது சொல்லிலும் செயலிலும் ஆண்டவரின் வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தர இறைவன் அருளை இணைந்து வேண்டுவோம்.

திங்கள், 29 நவம்பர், 2021

புனித அந்திரேயாவும் நம்பிக்கையும்...(30.11.2021)

புனித அந்திரேயாவும் நம்பிக்கையும்

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஆண்டவரின் வருகையை ஆவலோடு எதிர்நோக்கி கொண்டிருக்கின்ற நாம் இன்று தாய் திரு அவையாக  இணைந்து திருத்தூதர் அந்திரேயாவை நினைவு கூறுகிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம் சீடர்களை பெயர் சொல்லி அழைத்தார். அழைக்கப்பட்டவர்கள் அனைத்தையும் விட்டுவிட்டு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றினர்கள். இந்த இயேசு கிறிஸ்துவின் மீது ஆழமான அதீத நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையின் நிமித்தமாய் தாங்கள் அறிந்து கொண்ட ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பற்றி அகிலத்தில் உள்ளவர்களுக்கு நற்செய்தியை அறிவித்து பலரையும் இந்த இயேசுவின் பால் ஈர்த்தார்கள்.
அவர்களுள் ஒருவரான புனித அந்திரேயாவை இன்று நாம் நினைவு கூறுகின்றோம்..
இந்த அந்திரேயா ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் விண்ணேற்ப்புக்கு பிறகாக ஆண்டவரின் மீது கொண்ட அதீத நம்பிக்கையின் காரணமாக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்தியை  பல்வேறு பகுதிகளுக்கு அறிவிக்கச் சென்றார். இவரது வார்த்தைகளை கேட்டு மனம் மாறியவர்கள் பலர் அவர்களுள் மாக்ஸிமில்லா என்ற ஆளுநர் ஏஜியுஸ் என்பவரின் மனைவியும் அடங்குவார். தன் மனைவி மனம்மாறி ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதை விரும்பாத ஆளுநர் ஏஜியுஸ் அந்திரேயா அழைத்து ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பற்றி நற்செய்தி அறிவிப்பதை நிறுத்திட கூறினார். நிறுத்தவில்லை என்றால் உயிரை இழக்க வேண்டிய சூழல் உருவாகும் என எச்சரித்தார். ஆனால் அந்திரேயா எதையும் கண்டு அஞ்சவில்லை. ஆண்டவர் மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படையில் ஆண்டவரின் நற்செய்தியை அடுத்தவருக்கு அறிவிக்கும் பணியை தடையின்றி செய்து வந்தார். இவரது பணியை கண்டு பொறுக்க இயலாத  ஆளுநர் ஏஜியுஸ் இவரை எக்ஸ் X வடிவ சிலுவையில் அறைந்தான். எக்ஸ் X வடிவ சிலுவையில் அறையப்பட்ட அந்திரேயாவின் உடலில் இருந்து உயிர் மூன்று நாட்கள் பிரியாமல் இருந்தது. அந்த மூன்று நாட்களும் கூட அவரைப் பார்க்க வந்த கூட்டத்தினருக்கு நற்செய்தியை அறிவிக்க கூடிய பணியினை செய்தார். இறுதியில் மூன்று நாளுக்குப் பிறகு தனது இன்னுயிரை இழந்தார்.

இயேசுகிறிஸ்துவின் வருகைக்கு நம்மை நாம் தயாரித்துக் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் நாம் நினைவு கூறுகின்ற இந்த புனித அந்திரேயாவின் வாழ்வு நமக்கு தருகின்ற பாடம். ஆண்டவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாய் நாம் இருக்க வேண்டும் என்பதாகும். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவால் நாம் ஒவ்வொருவருமே அழைக்கப்பட்டிருக்கிறோம். அழைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவருமே அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நமது வாழ்வில், நமது சொல்லாலும், செயலாலும் வெளிகாட்ட வேண்டும். அவர் மீது ஆழமான நம்பிக்கையில் தொடர்ந்து வளரவும், அந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஆண்டவரின் வருகையை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கும் இன்றைய நாள் நமக்கு அழைப்பு தருகிறது.

 ஆண்டவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாய் நாம் அவரது வருகைக்கு நம்மை தயாரிக்க இறைவனது அருளை இணைந்து தொடர்ந்து வேண்டுவோம்....

ஞாயிறு, 28 நவம்பர், 2021

மனித நேயத்தோடு ...(29.11.2021)

மனித நேயத்தோடு ...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நூற்றுவர் தலைவன், தனது பணியாளனுக்காக,  ஆண்டவர் இயேசுவை நாடி வந்ததை குறித்து வாசிக்கக் கேட்டோம். நூற்றுவர் தலைவன் என்றால்  தனக்கு கீழ் பணி புரிவதற்கு 100 பேரை கொண்டிருக்கக்கூடிய இந்த நூற்றுவர் தலைவன், தனது பணியாளர்களின் நலனில் அக்கறை கொள்ள கூடிய மனிதனாக இருந்தார்.  எனவேதான் நோயுற்றிருந்த தனது பணியாளனுக்காக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தேடி செல்லக்கூடிய மனிதராக தென்பட்டார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் தெளிவாக எடுத்துரைக்கிறது.

      பொதுவாக நாம் வாழுகின்ற சமூகத்தில் நமது தேவைகளை முன்னிறுத்தி நமது குடும்ப உறவுகளின்  தேவைகளை மட்டுமே முன்னிறுத்தி பயணம் செய்கின்ற நாம், நமது தேவைகளை முன்னிறுத்துவதை விட அடுத்தவரின் தேவைகளை முன்னிறுத்தவும் அழைக்கப்படுகிறோம். 

ஒரு மனிதன் ஒரு சமூகத்தில் பசியால் வாடுகிறான் என்றால் அது அவன் செய்த குற்றமல்ல. உன்னையும் என்னையும் போன்றவர்கள் அவனை பராமரிக்காததன் விளைவு, என அன்னைத் தெரசாள் குறிப்பிடுகின்றார். 


                       தனக்குக் கீழ் பணி புரிபவர்களை தன் விருப்பம் போல வேலை வாங்கக் கூடிய அதிகாரம் நூற்றுவர் தலைவரிடம் இருந்தபோதும் கூட,  தனக்கு கீழ் வேலை பெறுகின்றவனது உடல் நலனின் மீது அக்கறை கொண்ட மனித நேயமிக்க மனிதனாக இந்த நூற்றுவர் தலைவனை நாம் பார்க்க இயலும்.  ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையை எதிர் நோக்கி நம்மை நாம் தயாரித்துக் கொண்டு இருக்கக்கூடிய இந்த நாட்களில் இன்றைய நாள் வாசகங்கள் நமக்குத் தருகின்ற செய்தி எது என பார்க்கின்ற போது, நாம் மனித நேயம் கொண்ட மனிதர்களாக வாழவேண்டும் என்பதே இறைவன் இன்றைய நாளில் நமக்குத் தருகின்ற செய்தியாக உள்ளது.  


தன்னுடன் வேலை பார்த்த தனது பணியாளனின் மீது அக்கறை கொண்டிருந்த நூற்றுவர் தலைவனைப் போல, நாமும் நாம் வாழுகின்ற சமூகத்தில் துன்பத்தில் வாடுகிறவர்களையும் நம்மை விட வலிமை குறைந்தவர்களையும் சமூகத்தில் காணுகின்ற போது, அவர்களின் நலனை முன்னிறுத்தியவர்களாய் அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்க கூடிய மனிதர்களாய் வாழவும்,  அவர்கள் நலனில் நாம் மகிழவும் இறைவன் இன்றைய நாளில் அழைப்பு தருகின்றார்.  இறைவன் தருகின்ற அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாக, நாம் வாழ்கின்ற இச்சமூகத்தில் அருகாமையில் இருக்கக்கூடிய மனிதர்களை மனிதநேயத்தோடு நோக்கவும், அவர்களின் நலனை நமது நலனாக எண்ணி  செயல்படவும், இன்றைய நாளில் இறைவன் அழைப்பு தருகின்றார்.  இறைவனின் அழைப்பிற்கு செவி கொடுத்து நமது உள்ளத்தில் மாற்றத்தை
 ஏற்படுத்திக் கொண்டு பயணிக்க இறையருளை வேண்டுவோம்.

சனி, 27 நவம்பர், 2021

விழிப்போடு எதிர்நோக்கிட.... (28.11.2021)

விழிப்போடு  எதிர்நோக்கிட.... (28.11.2021)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இன்று  நாம் தாய் திருஅவையாக இணைந்து திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். இந்த நல்ல நாளில் விழிப்போடு இருந்து ஆண்டவரை எதிர்நோக்க கூடியவர்களாக வாழ நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம்.
பாடலிபுத்திரம் என்ற ஒரு அழகிய கிராமம் இருந்தது. அக்கிராமத்தில் ஒரு அரண்மனை அந்த அரண்மனையில் ஒரு அழகிய பெண்மணி இருந்தால். இந்தப் பெண்மணியின் பார்வை தன் மீது படாதா என்ற எண்ணத்தோடு பல இளைஞர்கள் அரண்மனையின் வாயிற்  கதவருகே காத்து கிடப்பார்கள். ஆனால் அந்தப் பெண்ணின் பார்வையோ முற்றும் துறந்த ஒரு முனிவரின் மீது பட்டது. அரண்மனையில் இருந்து இறங்கி வந்த அந்தப் பெண்மணி முனிவரை பார்த்து வாருங்கள் என்னோடு அமர்ந்து உணவு அருந்துங்கள் என அழைத்தாள். அப்போது அந்தப் பெண்மணியைப் பார்த்து வர வேண்டிய நேரத்தில் வருகிறேன் என கூறிவிட்டுச் சென்றார்.  காலங்கள் சில கடந்தன மீண்டும் அதே அரண்மனை வாயிலை நோக்கி முனிவர் வந்தார். ஆனால் ஒரே ஆச்சரியம் எப்போதும் நிறைந்து காணப்படுகின்ற கூட்டம் அன்று அங்கு இல்லை. அரண்மனையின்  வாயிற்கதவை அடைந்தார். முக்கலும் முனகலுமாக ஒரு ஓசை. ஓசை கேட்டு அத்திசை நோக்கி நடந்தார். உடல் முழுவதும் தொழுநோயால் பாதிக்கப்பட்டு அந்த அழகிய பெண்மணி வீதியில் படுத்திருந்தாள். அப்பெண்மணியை தன் கரங்களால் தூக்கி அவளது காயங்களுக்கு மருந்திட்டு கொண்டே அப்பெண்மணியை நோக்கிச் சொன்னார். வரவேண்டிய நேரத்தில் வருகிறேன் என்றேன் அல்லவா இதோ வந்துவிட்டேன் என்றார். 


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்று நாம் ஒவ்வொருவருமே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கி கொண்டிருக்கிறோம். கடந்த வாரம் முழுவதும் நாம் வாசித்த வாசகங்களும் இன்றைய நாளின் நற்செய்தி வாசகமும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை குறித்து நமக்கு சிந்திக்க அழைப்பு தருகின்றன. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை எதிர்நோக்கி நாம் நமது சொல்லிலும் செயலிலும் ஆண்டவருக்கு உகந்த மக்களாக வாழ அழைக்கப்படுகின்றம். அவரது வருகை எப்போது வரும் என அறியாத வண்ணம் உள்ளது. ஆனால் வர வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக வந்தே தீரும் ஆண்டவரின் வருகைக்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள இன்றைய நாள் அழைப்பு தருகிறது.

திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு. இம் மண்ணில் அவதரித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நாளை நினைவு கூறுவதற்கும், ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் மனிதனாக வாழ்ந்த போது கற்பித்த அவைகளை எல்லாம் நமது வாழ்வை மாற்றிக் கொள்வதற்கும் இன்றைய நாள் வாசகங்கள் வழியாக அழைப்பு தரப்படுகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு என்பது அகிலத்தில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒன்று. எனவேதான் நாம் காலத்தை கிறிஸ்து பிறப்புக்கு முன் கிறிஸ்து பிறப்புக்குப் பின் கி.பி. கி.மு. என பிறக்கின்றோம்.

இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து வாக்களிக்கப்பட்ட இறைவன் எனவேதான் இன்றைய முதல் வாசகம் இவரை தாவீதின் வழிமரபில் இருந்து தளிர் ஒன்று தோன்றுகிறது என இவரை பற்றி குறிக்கப்படுகிறது.. தொடக்க காலத்திலிருந்தே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையை மக்கள் எதிர்நோக்கி இருந்தார்கள். ஆனால் இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் மனிதனாக பிறந்த போது அரசனுக்குரிய பண்புகளோடு அல்ல மாறாக ஏழைகளுக்கும் ஏழையாக இவ்வுலகில் பிறந்தார். 

இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இம்மண்ணில் வாழ்ந்த போது மனிதர்களாகிய நாம் எப்படி வாழ வேண்டும்? என்ன செய்ய வேண்டும், என்பதை எல்லாம் தன் வாழ்வில் நமக்கு வெளிக்காட்டினார். அவர் காட்டிய வழியில்  அவரை பின் தொடரக்கூடிய மனிதர்களாகிட,  மேலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது அவரை எதிர் கொள்ளக் கூடிய மக்களாக அவரது திருமுன்னிலையில் தலை நிமிர்ந்து நிற்கக் கூடியவர் களாக மாறிட வேண்டும். 

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கர் பகுதியில் வாழ்ந்த மக்களின் தவறான வாழ்வு முறைகளை சுட்டிக் காண்பித்து அவைகளிலிருந்து அவர்கள் மாற்றம் பெற்று, கடவுள் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு ஏற்ப அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவம் இவைகளின் அடிப்படையில் உங்கள் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என பவுல் தெசலோனிக்கருக்க பகுதியில்  வாழ்ந்த மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.

  பவுலின் வார்த்தைகளைக் கேட்டு மாற்றமடைந்த மனிதர்களாக தெசலோனிக்கர் பகுதி மக்கள் ஆண்டவர் இயேசுவின் இறையாட்சியை விழுமியங்களை வாழ்வாக்கி  கொண்டார்கள். இயேசு கிறிஸ்துவின் ஆவலோடு எதிர்நோக்கி கொண்டிருக்கக்கூடிய நாமும் இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து மண்ணில் வாழ்ந்த போது நமக்கு கற்பித்த பாடங்களை வாழவாக்குவோம். இறுதி நாளில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்கொள்ள நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொள்ளவும்.இன்றைய நாளில் இறைவனது அருளை இணைந்து வேண்டுவோம். 

ஆண்டவரை எதிர்நோக்கி....(28.11.2021)

ஆண்டவரை எதிர்நோக்கி....(28.11.2021

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை  உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கடந்த வாரங்களில் முழுவதும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை குறித்து சிந்தித்து அவரின் வருகைக்கு நம்மை தகுதி உள்ளவர்களாக மாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நாம் இன்று திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறை சிறப்பிக்கின்றோம்.

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை இந்த அகிலமே ஏற்றுக்கொண்டது அதன் விளைவுதான் காலத்தை நாம் கிறிஸ்து பிறப்புக்கு முன் கிறிஸ்து பிறப்புக்குப் பின் எனப் பிரிக்கின்றோம். 

கடவுள் தான் படைத்த அனைத்தையும் உற்று நோக்கினார் அவை மிகவும் அழகாய் இருந்தன.

இறைவன் படைத்த இந்த அழகிய உலகத்தில் மனிதனின் சுய நல எண்ணங்களும், இவ்வுலகை இச்சைகளும் இணைந்து மனித வாழ்வில் பலவிதமான அழங்கோலங்கள் அரங்கேற வைத்து விட்டன. இறைவன் படைத்த இந்த அழகிய உலகமானது அதன் அழகு நிலையை இழந்து வருகிறது.

ஆண்டவரால் படைக்கப்பட்ட நாம் நமது சுதந்திரத்தின் அடிப்படையில் பல நேரங்களில் ஆண்டவரின் படைப்பின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளாது மனம் போன போக்கில் தவறான வழிகளிலும் பயணம் செய்து கொண்டிருக்கின்றோம். 

அன்று மக்களின் தவறான வாழ்வு முறைகளையும் அதனால் அவர்கள் அடைந்த துன்பங்களையும்  கண்டு அவர்களுக்கு மத்தியில் மனிதனாக அவதரித்து மண்ணில் வாழும் மனிதர்கள் அனைவரையுமே பாவத்தில் இருந்து மீட்கும் நோக்கத்தோடு இறைவன் இந்த மண்ணில் அவதரித்தார். 

மனிதன் சமூகத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை தன் வாழ்வால் நமக்கு கற்பித்து, தான் கற்பித்தவகைகளுக்கு ஏற்ற வகையில் வாழ்ந்தும் காட்டியவர் இந்த இயேசு. அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவினை நினைவு கூறும் வண்ணமாய் அவரது பிறப்பை எதிர்நோக்கி இருக்கக்கூடிய நாம்   நம்மை  தயாரித்துக் கொள்வதற்காக  இந்த நான்கு வாரங்களை திருஅவை நமக்கு தருகிறது.

 இன்றைய நாள் நற்செய்தி வாசகங்கள் ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகையை குறித்ததாகும்..

ஆண்டவர் இயேசு கிறிஸ்து தான் கூறிய வார்த்தைகளின் அடிப்படையில் நம்மை மீண்டும் ஆட்சி உரிமையோடு சந்திக்க வருவார். நம்மை சந்திக்க வருகின்ற இறைவனை நாம் எதிர்கொள்ள நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொள்ளவே இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.

ஆண்டவர் படைத்த இந்த அழகிய உலகத்தில் அவரின் பிறப்பு இந்த மனு குலத்திற்கு பலவிதமான பாடங்களை கற்பிக்கிறது. ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? எப்படி பட்ட ஒரு மனிதனாக இருக்க வேண்டும்? என எல்லாவற்றையும் நமக்கு கற்பித்தவர் இந்த இயேசு. அவரது வார்த்தைகளின் படி நாம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். 

இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்கி இருக்கக்கூடிய நாம் நமது சொல்லாலும் செயலாலும் அவருக்கு ஏற்புடைய செயல்களைப் பின்பற்றி இந்த சமூகத்தில் அன்பும் சமத்துவமும் சமூக நீதியும் மேலும் காணப்படுகின்ற மனிதர்களாக நாம் வாழ வேண்டும் அவ்வாறு மாறும்போது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இறுதி வருகையின் போது நாம் அவரை எதிர்கொள்ள முடியும் அவரின் வருகையை எதிர்நோக்கி இருக்கும் நாம் நம்மை அவரது வருகைக்கு ஏற்ற வகையில் தகுதிப்படுத்திக் கொள்ள இன்றைய நற்செய்தி வாசகம் அழைப்பு தருகிறது.


இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்கியவர்களாய் தகுதி உள்ள மக்களாக நாம் மாற வேண்டும் என்பதையே திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய கடிதங்களின் மையமாக உள்ளது.  அப்பகுதியில் இருந்த மக்களின்  தவறான எண்ணங்களையும் தவறான செயல் பாடுகளையும் சுட்டிக் காண்பித்து அவைகளிலிருந்து மாற்றம் பெற்று ஆண்டவரின் திருமுன் நிலையில் தலை நிமிர்ந்து நிற்கக் கூடிய தகுதி உள்ள மக்களாக நாம் மாற வேண்டும் என அழைப்புவிடுத்தார். பவுலின் வார்த்தைகளுக்கு ஏற்ப அவர்களும் மனமாற்றம் அடைந்தார்கள். இதை குறித்து இன்றைய இரண்டாம் வாசகத்தில் வாசிக்க கேட்போம்....

தூதர் பவுலின் அழைப்பை ஏற்று மனம் மாறிய தெசலோனிக்கர் பகுதி மக்களைப் போலவே நாமும் மனமாற்றம் அடைந்தவர்களாய் பிறக்கவிருக்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஆவலோடு எதிர்நோக்கியயவர்களாய் சமூகத்தில் வாழ வேண்டும் என்பதே இறைவன் இன்று நமக்குத் தருகின்ற மையச் செய்தியாக உள்ளது.


இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து வாக்களிக்கப்பட்ட கடவுள் நம்மை மீட்பதற்காக மண்ணிற்கு வந்தவர் எனவே தான் இவரை தாவீதின் குளத்திலிருந்து தளிர் ஒன்று தோன்றுகிறது என்று முதல் வாசகம் குறிப்பிடுகிறது.

நம்மைத் தேடி வருகின்ற வாக்கு மாறாத இந்த கடவுளை ஆவலோடு எதிர்நோக்கி இருக்கும் நாம் அவரின் திருமுன்னிலையில் நம்மை நாம் தகுதி உள்ளவர்களாக மாற்றிக்கொள்ளவும் இறுதி நாளில் அந்த ஆண்டவரின் திருமுன் நிலையில் தலை நிமிர்ந்து நிற்கக் கூடிய மனிதர்களாகவும்  இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு அழைப்பு தருகின்றார்.

 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும் என் வார்த்தைகள் என்றும் அறிய மாட்டாய் என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப ஆண்டவர் உரைத்த அவரது இரண்டாம் வருகையைப் பற்றிய வார்த்தைகள் என்றும் பொய்த்துப் போகாது. அந்த ஆண்டவர் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாய் அந்த ஆண்டவரை சந்திக்க அவரது ஆட்சியில் ஆட்சியிலும் பங்குபெற நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொள்வோம். அவ்வாறு தகுதிப் படுத்திக் கொள்வதே பிறக்கவிருக்கும் ஆண்டவரை நம் உள்ளத்தில் பிறக்க வைப்பதற்கான வழியாகும். இதோ இந்த திருவருகைக் காலம் என்பது ஆண்டவர் இயேசுவின் பிறப்பை ஆவலோடு எதிர் நோக்குகின்ற இந்த காலங்களில் நாம் நமது செயல்களை சீர்தூக்கிப் பார்த்து பிறக்கவிருக்க உள்ள ஆண்டவரை நமது உள்ளத்திலும் இல்லங்களிலும் பிறக்க வைக்க நாம் நம்மை தகுதிப்படுத்திக் கொண்டவர்களாய் இச்சமூகத்தில் பயணம் செய்ய இன்றைய நாள் நமக்கு அழைப்பு தருகிறது இறைவன் தருகின்ற இந்த அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாய் நாம் நமது செயல்கள் மூலமாக ஆண்டவர் இயேசுவின் உண்மை சீடர்களாக மாறுவோம். பிறக்கவிருக்கும் இறைவனை உள்ளத்திலும் இல்லத்திலும் பிறக்க வைக்க நமது செயல்களில் மாற்றத்தை முன்னெடுத்தவர்கள் ஆண்டவரை எதிர் நோக்கிச் செல்ல உங்களை இறைவன் அருளை இணைந்து வேண்டும்.

வெள்ளி, 26 நவம்பர், 2021

உள்ளத்தை மந்தமடைய செய்வது எவை?(27.11.2021)

உள்ளத்தை மந்தமடைய செய்வது எவை?

அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் வழியாக என் சிந்தனைகளை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

உள்ளம் மந்தம் அடைவதற்கு மூன்று காரணங்களை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கிறது. 
முதலாவது  குடிவெறி 
இரண்டாவது  களியாட்டம் 
மூன்றாவது இவ்வுலக வாழ்வுகுரிய கவலைகள்...

இவை மூன்றுமே ஒரு மனிதனின் வாழ்வையும், உள்ளத்தையும் மந்தம் அடையச் செய்கின்றன. ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மூன்று நிலைகளில் இருந்தும் விடுபட்டவர்களாக  வாழ அழைப்பு தருகின்றார்.

நம்மை மந்தமடையச் செய்வதற்கான முதல் குறியீடாக ஆண்டவர் உரைப்பது குடிவெறி....

மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உடலுக்கும் கேடு என்பது அனைவரும் அறிந்த ஒன்றே... கேடு என அறிந்த போதும் அதை தேடுபவர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்பத்திலும் குடிப்பது துன்பத்திலும் குடிப்பது என குடிப்பது மட்டுமே வாழ்க்கையாக மாறிவிட்டது . இந்நிலை மாற்றப்பட வேண்டிய ஒன்றாகும்.

அதுபோலவே உள்ளத்தை மந்தம் அடையச்செய்யும் இரண்டாவது குறியீடாக ஆண்டவர் உரைப்பது களியாட்டம்....

நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் இன்று களியாட்டங்கள் பல தலை தூக்க தொடங்கியுள்ளன...
ஆடம்பரமான வாழ்வு என்ற பெயரில், அனுதினமும் தொலைக்காட்சி தொடரும், உல்லாச பயணங்களுமே நமது வாழ்நாளில் பெரும்பான்மையான நேரங்களில் எடுத்துக் கொள்கின்றன. இந்த நாகரீக வளர்ச்சி நயமாக நம்மை மந்தம் அடையச் செய்வதற்கான முயற்சி என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.


உள்ளத்தை மந்தம் அடையச்செய்யும் மூன்றாவது குறியீடாக ஆண்டவர் உரைப்பது வாழ்க்கை பற்றிய கவலைகள்.... கவலைகள் இல்லாத மனிதன் உலகில் இல்லை. எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒன்றைப் பற்றி கவலைப்படுகிறோம். கவலைப்படுவது தவறில்லை கவலைப்பட்டுக் கொண்டே இருப்பது தவறாகும். 

எதிர்காலத்தை எண்ணி  நிகழ்காலத்தை இழப்பவர்கள் பலர்... மண்ணில் வாழுகின்ற ஒவ்வொரு நொடியும் மகிழ்வோடு நிம்மதியோடு மந்தமடையாது வாழ நாம் அழைக்கப்படுகிறோம். இதுவே இன்றைய நாள் நமக்குத் தருகின்ற பாடமாக உள்ளது.

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை குறித்து சிந்திக்கின்ற இந்நாட்களில் இந்த 
குடிவெறி 
களியாட்டம் 
உலகக் கவலைகள் 
இவை மூன்றையும் தவிர்த்து இறைவன் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாய் இறுதிநாளில் அவரை எதிர் கொண்டு செல்ல நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொண்டு அவரது பாதையில் பயணம் செய்ய இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்போம் .... 

இறைவன் தம் ஆசியால் நம்மை வழி நடத்துவாராக ....

வியாழன், 25 நவம்பர், 2021

வாக்கு மாறாத கடவுள்...(26.11.2021)

வாக்கு மாறாத கடவுள்...

அன்பர்களே! என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நடக்கும் நிகழ்வுகளை கொண்டு காலத்தை அறிந்து கொள்வது போல, கடவுளின் வார்த்தைகளைக் கொண்டு அவரின் வருகையை அறிந்து கொள்ள நாம் அனைவரும் அழைக்கப்படுகின்றோம்.

 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா. ' என்ற இந்த இறைவன் வாக்கு மாறாத கடவுள் என்பதை விவிலியத்திலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியும். 

 தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. 
என்ற யோவான் 1:1 ஏற்ப...

வாக்குறுதியின் கடவுளான இவரது வாக்குறுதிகள் என்றும் பொய்ததுப் போகாது...


எல்லாவற்றையும் விட்டுவிட்டு என்னைப் பின் தொடர்... நீ காணுகின்ற நாட்டை நான் உனக்கு உரிமைச் சொத்தாக்குவேன்... கடற்கரை மணலை போல உன் மக்கள் இனங்களை பெருகச் செய்வேன்... என்ற ஆண்டவரின் வார்த்தைகள் ஆபிரகாமின் வாழ்வில்  நிறைவேறியதை நாம் அனைவரும் அறிவோம்.

அதுபோல முதிர்ந்த வயதில் பிள்ளை பெற முடியாத நிலையில் இருந்த சாராவை பார்த்து அடுத்த மாதம் இதேநாளில் நீர் ஒரு மகனைப் பெற்றெடுப்பீர் என்று கூறியபோது தன் நிலையை உணர்ந்தவளாக சாராள் சிரித்தாள் ஆனால் ஆண்டவரின் வார்த்தை மெய்யானது....

இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு தருகின்ற வாக்குறுதி அவரது இரண்டாம் வருகையை பற்றியதாகும்....

வாக்குறுதியின் கடவுளான இறைவன் நம்மை மீண்டும் சந்திக்க வருவதாக குறிப்பிடுகின்றார். அவர்  வருகின்ற போது அவரது வாக்கின பின்பற்றும் மனிதர்களாக நாம் இச்சமூகத்தில் வாழக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதுவே இன்றைய நாள் வாசகங்கள் நமக்குத் தருகின்ற செய்தியாக உள்ளது.

வாக்கு மாறாத கடவுள் நம்மை சந்திக்க மீண்டும் வருவார் நம்மை சந்திக்க வருகின்ற அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் முன்னிலையில் நாமும் அவரது ஆட்சியிலும், மாட்சியிலும் பங்குபெற நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொள்ள இறைவனது அருளை இணைந்து வேண்டுவோம். 

புதன், 24 நவம்பர், 2021

அவரது பின்னே பயணம் செய்ய...(25.11.2021)

 அவரது பின்னே பயணம் செய்ய....

இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வாழ்க்கை என்பது எதிர்பாராத நிகழ்வுகளால் பின்னப்படுவது... இந்த வாழ்வில் கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவருமே ஒவ்வொரு வருடமும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரு வருகையை குறித்து சிந்திக்கின்றோம். 

ஒன்று மனுகுலத்தை  மீட்பதற்கு இயேசு   மனுவுருவெடுத்து இவ்வுலகிற்கு வந்த அவரது பிறபப்பு வருகை. 
மற்றொன்று இறுதி நாளில் ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகை.

 இன்றைய நாள் நற்செய்தி வாசகமானது இரண்டாம் வருகையை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. ஆண்டவர் வருகையின் போது நாம் தகுதி உள்ளவர்களாக அவர் முன்னிலையில் தலை நிமிர்ந்து நிற்கக் கூடிய மனிதர்களாக வேண்டும் என்ற சிந்தனை இன்றைய நாளிலும் இந்த வாரங்கள் முழுவதிலும் நமக்குத் தரப்படுகிறது.

ஆண்டவரின் திருமுன் நிலையில் தலை நிமிர்ந்து நிற்பது எப்படி? என சிந்திக்கின்ற போது ஆண்டவர் இயேசுவின் இறையாட்சியின் விழுமியங்களை வாழ்வாக்குவாதனாலே சாத்தியமாகும்.  ஆனால் நமது உன்னியல்புகள் பல நேரங்களில் நம்மை ஆண்டவர் இயேசுவின் இறையாட்சி விழுமியங்களின் படி வாழ விடாது மனம் போன போக்கில் வாழ நம்மை தூண்டுகிறது. நாமும் பல நேரங்களில் நமது உன்னியல்புகளுக்கு அடிமையானவர்களா நம் மனம் போன போக்கில் வாழ்ந்து ஆண்டவர் இயேசுவின் இறையாட்சி மதிப்பீடுகளை புறம்தள்ளியவர்களாக வாழ்ந்திருக்கக்கூடும். அத்தகைய நாட்களை எல்லாம் ஆண்டவர் இயேசுவின் இறுதி வருகையைப் பற்றி சிந்திக்கின்ற இந்த நாட்களில் நினைவுகூர்ந்து, உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு மீண்டும் அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் முன்னிலையில் அவரது இரண்டாம் வருகையின்போது தகுதி உள்ளவர்களாக  நிற்பதற்கு இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு அழைப்பு தருகின்றார். 

ஆண்டவரின் திருமுன் நிலையில் தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமானால் நாம் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்த்து தவறிய தருணங்களை எல்லாம் நினைத்து மனம் வருந்தி வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 


இந்த மாற்றத்தை நாம் அனுதினமும் உள்ளத்தில் ஏற்க வேண்டும் என்பதற்காகவே தான் திருஅவை ஒப்புரவு அருள்சாதனத்தை தந்திருக்கிறது. ஒப்புரவு அருள்சாதனத்தை முதல்முறையாக நற்கருணை பெறும்போதும், பின் என்றாவது ஒருநாள் விரும்புகின்ற போது செய்துகொள்ளலாம் என்ற எண்ணத்தில் பின்பற்றுபவர்கள் பலர். ஆனால் ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகையை குறித்து சிந்துகின்ற நாம் ஒவ்வொருவருமே நமது வாழ்வில் நாம் கடந்து வந்த பாதையில் ஆண்டவரின் இறையாட்சி விழுமியங்களை விட்டு விலகிச் சென்று இருப்போமாயின் அதற்காக மனம் வருந்தி ஒப்புரவு அருள்சாதனம் வழியாக மன்னிப்புப் பெற்று... மீண்டும் ஆண்டவர் இயேசு விரும்பக்கூடிய அவரது இறையாட்சியின் மதிப்பீடுகளை பின்பற்றக்கூடிய மனிதர்களாக நாம் வாழ்ந்து இறுதி நாளில் அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திரு முன்நிலையில்  அவரது இரண்டாம் வருகையின் போது தலை நிமிர்ந்து நிற்கக் கூடிய மனிதர்களாக மாறிட இறைவன் அழைக்கின்றார். 
எனவே கடந்து வந்த பாதைகளை நினைத்துப்பார்த்து கண்ணீரோடு நமது குற்றம் குறைகளுக்காக மனம் வருந்தி வாழ்வில் மாற்றத்தை உருவாக்கிக்கொண்டு, ஆண்டவர் இயேசு காட்டும் பாதையில் அவரது பின்னே பயணம் செய்ய இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது. இறைவன் தாமே நம்மோடு இருந்து நம்மை காத்து வழிநடத்தி நம்மை தனது நலன்களால்  நிரப்பி நம்மை அவரது பாதையில் செல்லும் மக்களாக வழி நடத்திட இறையருள் வேண்டி இணைவோம்.

செவ்வாய், 23 நவம்பர், 2021

வலிகள் இல்லாமல் நமக்கான பாதைகள் பிறப்பதில்லை...(24.11.2021)

 வலிகள் இல்லாமல் நமக்கான பாதைகள் பிறப்பதில்லை...


அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

துன்பம் துன்பமா? என்ற கேள்விக்கு விடை தேடிய போது உள்ளத்தில் எழுந்த ஒரு உணர்வு துன்பங்கள் துன்பங்களே அல்ல, மாறாக துன்பங்கள் நமது வாழ்வை செதுக்கும் உளிகளை போன்றவை....


உளித் தொடும் முன்னே வலி என அழுதால் சிலையாகிட முடியாது ...

வலிகள் இல்லாமல் நமக்கான பாதைகள் பிறப்பதில்லை...

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவர் காட்டுகின்ற விழுமியங்களின் படி வாழ்வை அமைத்துக் கொண்டு இந்தச் சமூகத்தில் அவரை பிரதிபலிக்கும் மக்களாக வாழுகின்ற போது பலவிதமான துன்பங்களை நாம் சந்திக்க நேரிடும் என்பதை எடுத்துரைக்கின்றன.

மனித வாழ்வே இன்பமும் துன்பமும் கலந்த ஒன்று... எது எப்போது வரும் என அறியாத வண்ணம் இறைவன் இரண்டையும் நமது வாழ்வில் அனுமதிக்கிறார். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் நமது வாழ்வாக மாறும் போது துன்பங்கள் வழியாக நமது வாழ்வை நெறிபிறழ செய்கின்ற செயலில் பலர் ஈடுபடலாம். ஆனால் துன்ப நேரத்தில் துணையாக இருப்பவர் ஆண்டவர் அவர் மீது நம்பிக்கை கொண்ட மக்களாக நாம் தொடர்ந்து அவர் காட்டும் பாதையில் பயணம் செய்திட இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.

துன்ப நேரத்தில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் தருவேன் என ஆண்டவர் குறிப்பிடுகின்றார். 
நம்மால் தாங்க முடியாத துன்பத்தை இறைவன் நமக்குத் தருவதில்லை துன்பங்கள் வழியாக அவர் நம்மை செதுக்கி நல்வழிப்படுத்த முயலுகிறார்...
துன்பம் இல்லாத மனிதன் இவ்வுலகத்தில் இல்லை.... உலகெங்கிலும் உள்ள சகோதர சகோதரிகள் நம்மைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள்... ஆனால் துன்பங்களுக்கு மத்தியில் நாம் ஆண்டவரோடு கொண்டுள்ள நம்பிக்கையில் நிலைத்திருக்க வேண்டும்.

இதையே 1பேதுரு 5 அதிகாரம் 10 - 11 வசனங்கள் இவ்வாறு கூறுகின்றன சிறிது காலத் துன்பங்களுக்குப்பின் அவர் உங்களைப் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார்.
அவரது வல்லமை என்றென்றைக்கும் உள்ளது. ஆமென். என்று...

எனவே துன்ப நேரங்களில் ஆண்டவர் துணை இருக்கின்றார் என்ற ஆழமான நம்பிக்கையின் அடிப்படையில் ஆண்டவர் இயேசுவின் இறையாட்சி விழுமியங்களை நமது வாழ்வாக மாற்றிக்கொண்டு நாம் வாழுகின்ற சமூகத்தில் நமது செயல்களால் ஆண்டவர் இயேசுவின் சீடர்கள் நாம் என்பதை பறைசாற்ற இறைவனது அருளை இணைந்து தொடர்ந்து ஜெபிப்போம்



திங்கள், 22 நவம்பர், 2021

வெளிப்புறமா...? உட்புறமா...?(23.11.2011)

வெளிப்புறமா...?  உட்புறமா...?


இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கானல் நீர் கண்களுக்கு புலப்படும் ஆனால் அது நீரே அல்ல... அந்த நீரை குடித்து தாகத்தைப் போக்க இயலாது... அதுபோல வாழ்வில் வெளிப்புற தோற்றத்தை கொண்டு எதையும் நாம் எடைபோட்டு விடமுடியாது...

வெளிப்புற தோற்றத்தை விட உட்புறத்தோற்றம் அவசியமானதாகும்...


இன்றைய நற்செய்தி வாசகத்தில் எருசலேம் தேவாலயத்தின் கவின்மிகு அழகை கண்டு வியந்து போற்றுகின்ற மனிதர்களுக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஆலயம் என்பது ஆடம்பரத்தின் அடையாளம் அல்ல. இந்த ஆலயத்தை கொண்டு உடலாகிய ஆலயத்தை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

வெளிப்படையாக பார்க்கின்ற போது இன்றைய நாள் நற்செய்தி வாசகம் எருசலேம் தேவாலயத்தை குறித்து பேசுவது போல தோன்றினாலும், உலக முடிவின் போது நாம் நம்மை தகுதி உள்ளவர்களாக மாற்றிக் கொள்வதற்கான வழிகளையும் கற்பிக்கின்றது.

ஆலயம் என்பது இறைவனோடு உரையாடுகின்ற ஒரு இல்லம். ஆலயம் என்பது நேர்மறையான எண்ணங்களின் சங்கமம்.  ஆலயம் என்பது நமது வாழ்வை மெருகூட்டுவதற்கான ஒரு அழகு நிலையம்.

ஆனால் பல நேரங்களில் நாம் இந்த ஆலயத்தினை பயன்படுத்தி நமது வாழ்வை அழகுற வடிவமைப்பதற்கு பதிலாக, பல நேரங்களில் அழகுற கட்டப்பட்டுள்ள இந்த ஆலயங்களை குறித்தது மகிழ கூடியவர்களாகவும், பெருமை கொள்ளக் கூடியவர்களாகவும்  இருக்கின்றோம்.

 அன்றைய காலகட்டத்தில் எருசலேம் தேவாலயத்தை குறித்து  பெருமை கொள்ளக்கூடிய மனிதர்களாகத் தான் அம்மக்கள் வாழ்ந்தார்கள். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பெருமை கொள்ள வேண்டியது ஆலயத்தின் அழகை கண்டு அல்ல... மாறாக இவ்வாலயத்தை கொண்டு  உங்கள் உடலாகிய ஆலயம் அடைந்த மாற்றத்தை  கொண்டே பெருமை கொள்ள இன்றைய நாள் வாசகங்கள் வழியாக அழைப்பு தருகின்றார்.

வெளிப்புற தோற்றத்தை விடுத்து நமது உட்புற தோற்றத்தை அழகுற வடிவமைத்து கொள்ள இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகிறோம்.


சபை உரையாளர் தனது புத்தகத்தில் 3 ஆம் அதிகாரம்...

 ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச் சிக்கும் ஒரு காலமுண்டு.

பிறப்புக்கு ஒரு காலம், 
இறப்புக்கு ஒரு காலம்; 
நடவுக்கு ஒரு காலம், 
அறுவடைக்கு ஒரு காலம்;
சிரிப்புக்கு ஒரு காலம் 
அழுகைக்கு ஒரு காலம் 
பேச ஒரு காலம் 
பேசாதிருப்பதற்கு ஒரு காலம் என ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம் வரும் என குறிப்பிடுகிறார். 

 ஆண்டவர் இயேசு கிறிஸ்துவம் ஒரு காலம் வரும் என குறிப்பிடுகிறார். அந்த ஒரு காலம் என்பது அவரின் வருகையை, உலகின் முடிவை வலியுறுத்துகின்ற காலமாகும். அந்த உலக முடிவின் போதும், ஆண்டவரின் நாளின் போதும் நாம் தகுதியுள்ளவர்களாக மாறிட அழைப்பு தருகின்றார். 

பல நேரங்களில் ஆண்டவரின் வருகை இப்போது, நாளை என்று மக்களை ஏமாற்றக் கூடிய மனிதர்கள் பலர் உண்டு.  
ஆனால் விவிலியம் தெளிவாக கூறுகிறது ... மாற்கு 13:32-33

ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.
கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது. என்று..

எனவே ஏமாற்றுபவர்களின் குரலுக்கு செவி கொடுத்து நாம் ஏமாந்து விடாது ஒவ்வொரு நாளும் நாம் ஆண்டவரின் வருகையை எதிர்நோக்கியவர்களாய், நமது வாழ்வை சீரமைத்துக் கொண்டு, ஆண்டவர் இயேசுவின் சீடர்களாக... வெளிப்புற தோற்றத்தை விட உட்புறத்தோற்றத்தை அழகுற அமைத்து கொண்டவர்களாய் ...இச்சமூகத்தில் பயணம் செய்ய இறைவனது அருளை இணைந்து வேண்டுவோம்

ஞாயிறு, 21 நவம்பர், 2021

இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு (கல்லறைத் திருவிழா) 02.11.2011

 இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு (கல்லறைத் திருவிழா) 02.11.2011


முன்னுரை:

இறையேசுவில் பிரியமானவர்களே! இன்று கல்லறையில் மரித்தவர்களுக்காக நாம் விழா எடுக்கிறோம்.  நாம் எடுக்கும் இந்த விழா, நமது வாழ்வு வளர்ந்து கொண்டிருக்கும் முடிவற்ற திருப்பயணம் என்பதை உலகிற்கு எடுத்துகாட்டுகிறது. இறைவன் நமக்கு வழங்கியுள்ள வாழ்வு என்னும் அருள்கொடை மயானத்துடன் முடிந்துவிடும் மாயை அல்ல. மாறாக இது உண்மை, அன்பு, சகோதரத்துவம் என்னும் இறையாட்சி விழுமியங்களை கட்டியெழுப்ப நடத்திக்காட்டிய போராட்டங்களின் வரலாற்றுக் கல்வெட்டுக் காப்பியங்கள். கிறிஸ்தவனின் சாவு அழிவாக பார்க்கப்படுவதில்லை மாறாக வாழ்வுக்குச் செல்லும் வழியாக பார்க்கப்படுகின்றது. 


இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புதான் கிறிஸ்தவனின் சாவை ஒளிர்விக்கிறது. வாழ்வின் முடிவு மரணம் ஆனால் அது நிலைவாழ்வின் தொடக்கம். இயேசுவில் நம்பிக்கை கொள்வோர் என்றுமே வாழ்வர். நாம் வாழ்வை மிகுதியாய் பெரும் பொருட்டே நம்மிடையே கறிஸ்து வந்தார். இறப்பிற்குப் பின் இறை அமைதியில் நிம்மதி பெற இயலாத ஆன்மாக்களுக்கு பாவங்கள் தடையாய் உள்ளன. இத்தடைகளிலிருந்து விடுபடுவதற்கு நமது மன்றாட்டுகளும.   திருப்பலி, பிறரன்புச் செயல்கள் போன்றவையும் தேவைப்படுகின்றன. எனவே தான் திருச்சபை இறந்தவர்களுக்காக மன்றாடுவதில் அக்கறை காட்டுகிறது எனவே அவற்றை உணர்ந்தவர்களாக இறந்த ஆன்மாக்களுக்காக இந்த திருப்பிலியில் மிக உருக்கமுடன் மன்றாடுவோம்.


முதல் வாசக முன்னுரை: (எசா25:6,7-9)

நம் துன்பங்களை, துயரங்களை, பாவங்களை நாமே மேற்கொள்ளும் அளவிற்கு நாம் பெரியவர்கள் அல்ல மாறாக கடவுளிடம் சரணடைவதே மேல். ஏனென்றால் அவர் ஒருவரே சாவை வெல்ல செய்து நமக்கு மறுவாழ்வெனும் சந்தோசத்தை, அவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்திருக்க அருள்தருபவர் அவர் ஒருவரே எனக்கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.


இரண்டாம் வாசக முன்னுரை: (1கொரி 15:20-28)

சாவு என்பது கடந்து செல்வதாக இருக்கின்றது. இவற்றில் இரு இயக்கங்கள் உள்ளன. ஒன்று மனிதன் தம்மை முற்றிலும் இறைவனுக்கு கொடுத்தல், மற்றொன்று மனிதனின் அச்செயலை இறைவன் ஏற்றுக்கொள்ளல். கல்வாரி மலையில் இயேசு தம்மையே தந்தையிடம் அர்பணித்தார், தந்தையும் அவரை ஏற்றுக்கொண்டார் அதன் அடையாளம்தான் உயிர்ப்பு என்று கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.


மன்றாட்டுகள்:

எம் இறைவா, உம் அன்புத் திருச்சபையை காத்து வழிநடத்தி இறந்த திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், அனைவரும் உம் இரக்கமும் அருளையும் பொழிந்து உம் வானக வீட்டில் சேர்த்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நீதியின் இறைவா, எம் நாட்டை ஆண்டு இறந்த தலைவர்கள், பொதுமக்கள், தியாகிகள் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். உயிர்தெழுதலும், வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்வோர் இறப்பிலும் வாழ்வார் என்ற உம்வார்த்தையில் நம்பிக்கைகொண்டு இறந்த அனைவரின் பாவங்களை போக்கி அவர்களை உம் வானக வீட்டில் சேர்த்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்பு இறைவா, எம் பங்கை வழிநடத்தி இறந்த பங்கு குருவுக்காவும், பங்குமக்களுக்காகவும் மன்றாடுகிறோம். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் என்பதிற்கினங்க உம்மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்து இறந்த ஆன்மாக்கள் அனைத்தும் தங்களுடைய பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்களை நிறைவாக ஆசிர்வதித்து உம் வானக வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்பின் இறைவா, யாரும் நினையாத ஆன்மாக்களுக்காக சிறப்பாக மன்றாடுகிறோம். அவர்கள் தாங்கள் செய்த பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்கள் வேதனை குறைந்து உம் தெய்வீக விருந்தில் பங்குபெற அவர்களை ஆசிர்வதித்து உம்மிடம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


கடவுளின் கவனத்தைப் பெற்றிட...(22.11.2021)

கடவுளின் கவனத்தைப் பெற்றிட...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பெறுவதில் அல்ல, கொடுப்பதில் இன்பம் காண்போம்...

கொடை வழங்கும்போதெல்லாம் முகமலர்ச்சியோடு கொடு. பத்திலொரு பங்கை மகிழ்ச்சியோடு கடவுளுக்கு உரித்தாக்கு’ (சீஞா 35:8) என்கிறது இறைவார்த்தை. 

எருசலேம் திருக்கோயிலில் நடைபெற்ற பல்வேறு பணிகளுக்காகவும், பல்வேறு தேவைகளுக்காகவும் அங்கே காணிக்கைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இன்று ஆலயத்தில் இருக்கும் காணிக்கை பெட்டிகளின் நோக்கமும் அதுவே ... இவற்றில் மக்கள் காணிக்கை செலுத்தினார்கள். 
சில செல்வந்தர்கள் அதில் காணிக்கை செலுத்திய போதும்.... வறுமையில் வாடிய ஒரு கைம்பெண் தன்னிடம் இருந்த இரண்டு காசுகளைக் காணிக்கையாகச் செலுத்துகின்றார்.

மற்றவர்கள் மிகுதியாகக் காணிக்கை செலுத்தினாலும், இரண்டு காசுகளைக் காணிக்கையாகச் செலுத்திய இந்தக் கைம்பெண் இயேசுவின் கவனத்தை ஈர்க்கின்றார். 

அதுபோலவே முதல் வாசகத்தில் தானியேலும் அவருடைய மூன்று நண்பர்கள் சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்ண மாட்டோம் என்று கடவுளுக்குத் தங்களை முழுமையாக கையளித்து வாழ்கின்றார்கள். கடவுளின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

இன்று நாமும் கடவுளின் கவனத்தை ஈர்க்க அழைக்கப்படுகின்றோம்.

ஏழைக் கைம்பெண் கடவுளின் கவனத்தை ஈர்க்க காரணம், இவர் தன்னுடைய பற்றாக்குறையிலிருந்து காணிக்கை செலுத்தியதால். அதுபோலவே தானியேலும் அவருடைய நண்பர்களும் கடவுளின் கவனத்தை ஈர்க்க காரணம் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையால் அவரது கட்டளைகளை பின்பற்றி நடந்ததன் விளைவு....

இன்று நாம் கடவுளின் கவனத்தைப் பெற வேண்டுமாயின் ஆண்டவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாய், இருப்பதை இழக்க துணிந்தவர்களாய், எல்லா நேரத்திலும் இறைவனை நம்பி, ஒவ்வொரு நாளும் பயணம் செய்யக்கடியவர்களாய், அவரது கட்டளைகளில் நிலைத்திருந்து இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து வாழக்கூடிய மனிதர்களாக நாம் வாழுகின்ற போது இச்சமூகத்தில்  கடவுளின் கவனத்தை நம்மால் ஈர்க்க முடியும். கடவுளின் கவனத்தை பெற்றிட நமது சொல்லிலும் செயலிலும் ஆண்டவர் இயேசுவின் இறையாட்சி விழுமியங்களை வாழ்வார்க்குவோம். அதற்கான இறைவனது அருள் வேண்டி இணைந்து ஜெபிப்போம் இன்றைய நாள் திருப்பலியில்...

சனி, 20 நவம்பர், 2021

கிறிஸ்து அரசர் பெருவிழா...(21.11.2021)

கிறிஸ்து அரசர் பெருவிழா

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நம் தாய்த்திரு அவையானது கிறிஸ்து அரசர் பெருவிழாவை கொண்டாட நமக்கு அழைப்பு தருகிறது...

இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே உண்மையான உலகின் அரசர் என்பதை எடுத்துரைக்கின்றன.
அதுபோலவே இன்றைய நாளின் நற்செய்தி வாசகமானது அன்றைய காலகட்டத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து உண்மையான அரசாக இருப்பாரோ என்று அஞ்சிய உரோமை அரச அதிகாரிகளை குறித்தது தெளிவுபடுத்துகின்றது.

பொதுவாக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தந்தையாக, தாயாக உறவாக, நண்பராக, நல்லாசிரியராக பார்த்துப் பழகிய நமக்கு இன்று திருஅவையானது உலகத்தின் அரசராக பார்க்க அழைப்பு தருகின்றது. 


அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே எனக் கூறுவார்கள்.


அரசன் என்று சொன்னாலே அதிகாரத்தின் உச்சம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.....

உலகையே ஆள வேண்டும் என்ற 
அலெக்சாண்டரின் கல்லறை வாசகங்கள் .... " இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக ஆகிவிட்டது

இந்த உலகம் அகிலத்தையே ஆளவேண்டும் என்ற அரசனையும் பார்த்திருக்கிறது. அடுத்தவர் நலனில் அக்கறை கொள்ளக்கூடிய அரசனையும் பார்த்திருக்கிறது.

 நீதியை நிலை நாட்ட தன் மகனுக்கு மரண தண்டனை விதித்த அரசர்களும் உண்டு...  தன் மக்களின் மகிழ்வே தன் மகிழ்வு என எண்ணிய அரசர்களும் இவ்வுலகத்தில் உண்டு... அது போல  அரசனாக இருப்பதற்கு ஆசைகொண்டு பல அட்டூழியங்களை செய்தவர்களும் இவ்வுலகத்தில் உண்டு. அரசன் என்ற பதவியை அடைந்த பிறகு அதில் உள்ள அனைவரையும் தனக்கு கீழ் மண்டியிட வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும் வரலாற்றில் உண்டு..

 இன்று நாம் நினைவு கூறுகின்ற இந்த
 கிறிஸ்து அரசர் பெருவிழா உருவான பின்னணியும் இதை ஒட்டியதே...

முதலாம் உலகப் போருக்குப் பின்னும் ஆட்சியையும் அதிகாரத்தையும் அடிப்படையாகக்கொண்டு அடுத்தவர் நாட்டை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்ட அரசர்களுக்கு புத்தி புகட்டும் வண்ணமாக அப்போதைய திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் அவர்கள் 1925 ஆம் ஆண்டு கிறிஸ்துவே உலகத்தின் அரசர் என அறிவித்து இந்த நாளை கிறிஸ்து அரசர் பெருவிழாவாகக் கொண்டாட வழி வகுத்துத் தந்தவர்.


 அகிலத்தில் நானே சிறந்தவன், அனைவரும் எனக்கு கட்டுப்பட்டவர்கள் என்ற மமதையோடு செயல்பட்ட அரசருக்கு திருஅவை தந்த  பதில் உலகத்தின் அரசர் இந்த இயேசுகிறிஸ்துவே ...

அகிலத்திற்கு அரசராக,  ஆட்சி அதிகாரத்தில்  விளங்குகின்றவர்கள் அனைவரும்  ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றிய நல்லதொரு தலைவராக இச்சமூகத்தில் உதயமாக வேண்டும் என்பதே இன்றைய நாள் நமக்கு தருகின்ற பாடமாக உள்ளது. 


ஆட்சியும் அதிகாரமும் தன் கையில் இருந்தால் தான் விரும்புவதை எல்லாம் செய்ய முடியும் என்ற மமதையில் பலநேரங்களில் நம்மை மனிதர்களாக செயல்பட விடாது தடுக்கிறது. ஆனால் ஆட்சியும் அதிகாரமும் கிடைக்கின்ற போது அதனை பயன்படுத்தி  மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதும், மக்களின் நலனை முன்னிறுத்துவதும் அரசனின் தலையாய பணியாக இருத்தல்வேண்டும். 

ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது அன்பையும் அடிப்படையாக கொண்டு சமத்துவத்தையும் சமூக நீதியையும்  தனது அனைத்து பணிகளிலும் முன் நிறுத்தினார். இந்த இயேசுவை பின்தொடர கண்டு நாமும் அவரைப் போல அன்பை அடிப்படையாகக் கொண்டு சமத்துவத்தையும் சமூக நீதியையும் நமது பணிகளில் முன்னிறுத்த கடமைப்பட்டுள்ளோம்.

ஆனால் இன்றைய எதார்த்த நிலை என்ன என சிந்திக்கின்ற போது ஆட்சியும் அதிகாரமும் கையில் வருகின்றபோது அனைவரும் நமது அடிமைகள் என்ற எண்ணமே மேலோங்கி காணப்படுகின்றது ... ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்க வைப்பதற்கான பல பொய்கள் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன.  பல நாடகங்கள் நடந்தேறுகின்றன. பொது நலனை முன்னிறுத்தி ஆட்சியையும் அதிகாரத்தையும் பெற்று தன்னலத்தை மட்டும் முன்னிறுத்தக் கூடிய மனிதர்களாக இந்த தரணியில் பலரும் உதயமாகிக் கொண்டே இருக்கின்றார்கள்.  ஆனால் அகிலத்தின் அரசராக விளங்கிய ஆண்டவர் இயேசு கிறிஸ்து மக்களுக்காக தன் இன்னுயிரைத் தியாகம் செய்தார். மனிதனை மனிதன் மதித்து வாழ வேண்டும் என கற்பித்தார். கற்பித்ததை செயல்வடிவ மாக்கினார். இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி அவரின் பாதையில் வழி நடக்கக்கூடிய நாமும் ஒவ்வொரு நாளும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் போல வாழ அழைக்கப்படுகிறோம் 

தலைமைத்துவம் என்பதும் ஆட்சி அதிகாரம் என்பதும் அடுத்தவரை அடக்கியாள வேண்டும் என்பதற்காக அல்ல.... மாறாக  அன்பு சமூகத்தை உருவாக்குவதற்கான தளம் என்பதை உணர்ந்து கொண்டவர்களாய் நாம் வாழுகின்ற காலத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் போல நாம் ஒவ்வொருவரும் நல்ல தலைவர்களாக இச்சமூகத்தில் உருவாகிட நல்லெண்ணங்களை நமதாக்குவோம். அந்த எண்ணங்களை நமது வாழ்வாக மாற்றுவோம்...   


 மனிதனாக பிறந்த நம் ஒவ்வொருவருக்குமே இந்த சமூகத்தில் பொறுப்புகள் இருக்கின்றன. குடும்பத்தில் நல்லதொரு குடும்ப  தலைவனாக,
சகோதரர்களுக்கு நல்ல ஒரு சகோதரனாக... 
நண்பர்களுக்கு நல்லதொரு நண்பராக... 
உறவுகளுக்கு நல்ல ஒரு உறவினராக இருக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நம் அனைவருக்கும் உண்டு. அதனை நாம் திறம்பட செய்ய.... நல்ல தலைவர்களாக இயேசுவைப் போல இச்சமூகத்தில்  விளங்கிட....  இன்றைய நாள் நமக்கு அழைப்பு தருகிறது.

 கிறிஸ்து அரசர் பெருவிழாவை கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாமும் நம் தலைவனாம் இயேசுவைப் பின்பற்றிய நல்ல தலைவர்களாக ஆட்சி அதிகாரங்களைக் கொண்டு அன்பால் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் நல்ல தலைவர்களாக மாறிட இறைவனது அருளை திருப்பலி வழியாக தொடர்ந்து வேண்டும்.

வெள்ளி, 19 நவம்பர், 2021

வானதூதர்கள் போல வாழ....(20.11.2021)

வானதூதர்கள் போல வாழ....

இறைவன் இயேசுவில் இனியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
குறள் : 314

விளக்கம் :
இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.

இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை சோதிக்கும் நோக்குடன் இறப்புக்குப்பின் உயிர்ப்பு உண்டு என்பதில் நம்பிக்கையற்ற சதுசேயர்கள் இயேசுவை நோக்கி இறப்புக்குப்பின் எத்தகைய வாழ்வு இருக்கும்? என்பது குறித்து ஐயங்களை எழுப்புவது போல ஆண்டவர் இயேசுவின் மீது குற்றம் கண்டுபிடிக்க முயலுகிறார்கள்...

ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறப்புக்குப்பின் உள்ள வாழ்வில் நாம் மனித உடலோடு அல்ல மாட்சி பொருந்திய உடலோடு இருப்போம் எனவும், அவ்வாழ்வில் நாம் வானதூதர் களைப்போல இருப்போம் எனவும் தெளிவுபடுத்துகிறார்.

உயிர்ப்பின் மீது நம்பிக்கையற்ற சதுசேயர்களின் வஞ்சகமான இக்கேள்விக்கு ஆண்டவர் அவர்களும் ஆண்டவரின் மக்கள் என்பதை உணர்த்தும் வண்ணமாக நாம் அனைவரும் வானதூதர்கள் போல் இருப்போம் என குறிப்பிடுகிறார்.

இறந்தவர்களை நினைவு கூறுகின்ற இந்த நவம்பர் மாதத்தில் நமது உடன் பயணித்து, நம்மை விட்டு பிரிந்து விண்ணக வாழ்வுக்கு சென்றிருக்கக்கூடிய நமது உறவுகள் அனைவரம் ஆண்டவரின் முன்பாக வானதூதர்களைப் போல இருந்து அவரை போற்றியும், புகழ்ந்தும் அங்கிருந்து நமக்காக ஜெபித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

 நம்பிக்கையோடு நாம் மரித்துப்போன ஆன்மாக்களை நினைவுகூரவும், அவர்களின் குற்றம் குறைகளை மன்னித்து இறைவன் தனது வானக வீட்டில் அவர்களை இணைத்துக் கொள்ளவும், தொடர்ந்து அவர்களுக்காக ஜெபிக்கவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

இறப்புக்கு பின்னால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவால் உயிர்ப்பில் பங்குபெற இருக்கின்ற நாம் நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொள்ள இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு தருகின்றது.

நாம் வாழும் சமூகத்தில் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மனிதர்களுக்கு மத்தியில், நாம் அனைவரையும் அன்பு செய்ய கூடியவர்களாக, அதிலும் குறிப்பாக நமக்கு இன்னல்களை ஏற்படுத்துகின்றவர்களுக்கு நல்லது செய்யக்கூடிய மனிதர்களாக மாறிடவும், அச்செயல்கள் மூலமாக ஆண்டவரின் உயிர்ப்பில் இறுதிநாளில் பங்கேற்று வானதூதர்கள் போல திகழ்ந்திட, நமது செயல்களை இம்மண்ணக வாழ்வில் சீர்தூக்கிப் பார்த்து, சரியான பாதையில் பயணித்து ஆண்டவரின் மாட்சியில் ஆட்சியில் பங்கு பெற தயாராகிட அருள் வேண்டி இந்த திருப்பலியில் தொடர்ந்து ஜெபிப்போம்.


வியாழன், 18 நவம்பர், 2021

ஆலயத்தின் மகத்துவம் அறிவிப்பது நமது கடமை ...(19.11.2021)

 ஆலயத்தின் மகத்துவம் அறிவிப்பது நமது கடமை ...

அன்புக்குரியவர்களை இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கோவில் இல்லா ஊரில் குடியிருக்க ஆகாது என்பார்கள்.


ஆலயம் என்பது நமது அடையாளம்....

ஆலயம்ஆண்டவரோடு உரையாடுகின்ற இடம்...

ஆலயத்திற்கு வருவது அமைதியைத் தரும்.

ஆலயத்தில் அமர்ந்து இறைவார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்க்கலாம்.

ஆலயத்தில் நடக்கின்ற வழிபாடுகளில் பக்தியோடு பங்கேற்பதன் அடிப்படையில் ஆண்டவர் இயேசுவின் பாடுகளை தியானிக்கலாம்....

ஆலயம் நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும்....

நேற்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு எருசலேம் தேவாலயத்தை பார்த்து கண்ணீர் சிந்தினார் என வாசித்தோம்.. இன்றைய நாளில் அந்த ஆலயத்தை சீர் படுத்தும் பணியில் இயேசு செயல்படுவதை வாசிக்க கேட்டோம்....
ஆலயம் என்பது இறை வேண்டுதலின் வீடாகக் இயேசு குறிப்பிடுகிறார்.
இந்த இறைவேண்டலில் வீட்டில் நம்பிக்கையோடு வரவும், ஆண்டவரோடு உரையாடவும், அவரிடமிருந்து ஆசிகளை பெற்றுச் செல்லவும், பெற்றவர்களை மற்றவரோடு பகிரவும் நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம்.

இதைச் செய்வதற்கு பதிலாக ஆண்டவரின் இல்லத்தை வியாபாரத்தின் இடமாகவும், ஆடம்பரத்தின் அச்சாணியாகவும், காட்சியகமாகவும் மாற்றுவதை இறைவன் பொறுத்துக் கொள்ளார் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றன.

அன்று ஆலயத்தின் மகத்துவத்தை உணராதவர்களாய் தங்களின் மனம் போன போக்கில் தங்கள் விருப்பம் போல சட்டங்களை வளைத்துக் கொண்டு ஆண்டவரின் பெயரால் ஆலயத்தில் அநீதிகள் அரங்கேற காரணமாக அமைந்த மறைநூல் அறிஞர்களை ஆண்டவர் இயேசு கிறிஸ்து சாட்டையால் சாடக்கூடியவராகவும், அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, அவர்களோடு இணைந்து ஆண்டவரின்  இல்லத்தை பாழ்படுத்தியவர்களை சாட்டை கொண்டு விரட்டக் கூடியவராக  இயேசு செயல்பட்டார். 

நாமும் நமது ஆலயங்களில் ஆண்டவரோடு உரையாடுவதற்கான இடம் இது என்பதனை நமது வருங்கால தலைமுறையினருக்கு சொல்லித் தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இன்று வளர்ந்து வருகின்ற இளம் தலைமுறையினருக்கு ஆலயத்தின் மகத்துவம் என்பது அறியாத ஒன்றாகவே இருக்கிறது ...
ஆண்டவரின் இல்லமாகிய ஆலயத்தில்  நமது குழந்தைகள், நமது உறவுகளும் அமர்ந்து ஆண்டவரோடு உரையாடி உறவை வளர்த்துக்கொள்ள நம்பிக்கையில் ஆழப்பட கற்பிக்க வேண்டியது நம்பிக்கையாளர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை. இக்கடமையை சிறப்புடன் செய்து ஆலயத்தின் மகத்துவத்தை அகிலத்தில் உள்ள அனைவரும் அறிந்து கொள்ள கூடிய வகையில் நமது செயல்பாடுகள் அமைய   இறைவனது அருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்.

புதன், 17 நவம்பர், 2021

ஆண்டவர் விரும்பும் மக்களாக மாறிட...(18.11.2021)

ஆண்டவர் விரும்பும் மக்களாக மாறிட...


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நமது கிறிஸ்தவ மறையில் இறைவன் நம்மீது கொண்டிருக்கின்ற  உறவை பொதுவாக  கோழிக்கும் அதன் குஞ்சுகளுக்கும் இடையே இருக்கக்கூடிய உறவோடு ஒப்பிட்டு பார்ப்பார்கள்....

கோழி தனது குஞ்சுகளோடு இருக்கும் பொழுது தனது குஞ்சுகளை நோக்கி ஏதேனும் ஆபத்து நெருங்கி வருகிறது. அல்லது தனது குஞ்சுகள் ஏதேனும் தவறான வழிக்குச் செல்லுகிறது என தெரிந்தால்.... உடனே தாய் கோழி குரல் எழுப்பும். தாய்க்கோழயின் குரலுக்கு செவி கொடுத்து அதன் குஞ்சுகள் அனைத்தும் ஓடி வந்து தாயின் இறக்கைகளில் தங்கிக்கொள்ளும். தாய் கோழி தன் இறக்கைகளால் தனது குஞ்சுகளைக் காப்பது போல, இறைவன் நம்மை ஒவ்வொரு நாளும் பாதுகாத்து வருகின்றார். 

இந்த இறைவன் நமக்குத் தருகின்ற அழைப்பை உணர்ந்து கொண்டு நாம் நமது வாழ்வில் அவரின் இறையாட்சியின் மதிப்பீடுகளை பின்பற்றக்கூடிய மனிதர்களாக வாழ அழைக்கப்படுகிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்து எருசலேம் தேவாலயத்தை பார்த்து கண்ணீர் சிந்துகிறார். 
ஏன் இவர் எருசலேம் தேவாலயத்தை பார்த்து கண்ணீர் சிந்த வேண்டும்? என்ற கேள்வியை நமக்குளாக எழுப்பி பார்க்கின்றபோது.... ஆலயம் என்பது ஆண்டவன் குடியிருக்கும் இல்லம். இந்த இல்லத்தில் நம்மிடையே எந்தவித ஏற்றத்தாழ்வுகளுக்கும், வேறுபாடுகளுக்கும் இடமில்லை. ஆனால் அன்றைய காலகட்டத்தில் எருசலேம் தேவாலயத்தை வைத்து பல விதமான அரசியல் அரங்கேறிக் கொண்டிருந்தன. ஆலயத்திற்குள் வியாபாரிகள் ஒருபுறம்,  மறுபுறமோ ஆண்டவரின் பெயரால் தாங்கள் விரும்புகிறவற்றையெல்லாம் செய்யக்கூடிய மனிதர்களும் நிரம்பி இருந்தார்கள். ஆண்டவர் கற்பித்த இறையாட்சியின் மதிப்பீடுகளை ஏற்றுக் கொள்ளவோ... செயல்படுத்தவும்... அவர்கள் முன்வரவில்லை. 

இயேசு அவர்களுக்கு மத்தியில் வாழ்ந்த போது ஒரு மனிதன்  எப்படி வாழவேண்டும்? என்பதை கற்பித்தார். தான் கற்பித்ததை வாழ்ந்தும் காண்பித்தார். ஆனால் இந்த இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை தங்கள் செவியில் ஏற்று செயலில் வெளிப்படுத்துவதற்கு பதிலாக எருசலேம் மக்கள்  இந்த இயேசு கிறிஸ்துவை ஒழித்துவிட எண்ணினார். ஆண்டவர் விரும்புகின்ற நல்லதொரு மாற்றத்தை உருவாக்குவதை விட மாற்றத்தை உருவாக்க விரும்பியவரை இந்த உலகத்தில் இருந்து மறைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டார்கள்.
 மனம் மாறாத அவர்களின் நிலையை கண்ட இயேசு அன்று கண்ணீர் சிந்தினார். ஆண்டவர் இயேசு கிறிஸ்து நாமும் நமது வாழ்வில் நாம் தவறு இழைக்கின்ற நேரங்களில் நம்மை சரிசெய்து கொண்டு அவரின் மக்களாக வாழ்வதற்கான அழைப்பினை பல மனிதர்கள் வழியாக நமக்கு கற்பிக்கின்றார். கடவுள் கற்பித்தவைகளை கற்றுக்கண்டு அவர் விரும்பும் மனிதர்களாக இச்சமூகத்தில் நாம் பயணம் செய்ய அழைக்கப்படுகின்றோம்.... 

 ஆண்டவரின் சன்னதியில் அமர்ந்து உள்ள நாமும் நமது வாழ்வில் இறைவன் நம்மைத் தேடி வந்து நல்வழிப்படுத்துகின்ற தருணங்களை எல்லாம் கண்டு கொண்டு ஆண்டவர் விரும்பும் மக்களாக மாறிட இறைவனது அருளை இணைந்து வேண்டுவோம்.

செவ்வாய், 16 நவம்பர், 2021

பொறுப்போடு செயல் பட்டால் புது வாழ்வு கிட்டும் ....(17.11.2021)

 பொறுப்போடு செயல் பட்டால் புது வாழ்வு கிட்டும் ....


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


காற்றில் ஒரு மயிலிறகு பறந்து வந்தது. அந்த மயிலிறகை எடுத்த ஒரு ஓவியன் அதைக்கொண்டு ஒரு அழகிய ஓவியத்தை வரைந்தார். அதே மயில்இறகு மீண்டும் பறந்து சென்றது. அது ஒரு மருத்துவரின் கையை அடைந்தது. மருத்துவர் அதை எடுத்து காயப்பட்ட ஒருவனின் காயங்களுக்கு மருந்திட்டார். மீண்டும் அதே மயிலிறகு பறந்து சென்று ஒரு இளைஞனின் கைக்குச் சென்றது. அவன் அதில் இருக்கக்கூடிய சிலவற்றை நீக்கிவிட்டு அதைக் கொண்டு தனது காதைக் குடைய கூடியவனாக இருந்தான். ஒரே மயிலிறகு தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அதனை பயன்படுத்தினர். இறைவனும் இந்த மயிலிறகை போலத்தான் இந்த மனித வாழ்வை நம் அனைவருக்கும் ஒன்றாகவே தந்திருக்கின்றார். இறைவன் தந்திருக்கும் இந்த அழகிய வாழ்வில் நாம் நமது பொறுப்புக்களையும், கடமைகளையும் உணர்ந்து சிறப்புடன் செயல்படக் கூடியவர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம். 


இன்றைய நற்செய்தி வாசகத்தில் சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவனாக இருந்தவர், பெரிய பொறுப்புகளில் அமர வைக்கப்பட்டதை வாசிக்க கேட்டோம். நம்மிடமும் இறைவன் பலவிதமான பொறுப்புகளை கொடுத்து இருக்கிறார். இறைவன் கொடுத்துள்ள பொருப்புகளை எல்லாம் உணர்ந்துகொண்டு... நாம் வாழுகின்ற இச்சமூகத்தில் நலமான நல்ல பணிகளை அனுதினமும் முன்னெடுக்க கூடியவர்களாக, சின்னஞ்சிறிய காரியங்களில் கூட நமது பொறுப்புகளை உணர்ந்து செயல்படக் கூடியவர்களாக இருக்க இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு தருகின்றன. நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்புகளை உணர்ந்து இறைவன் படைத்த இந்த அழகிய உலகத்தில் அவர் நமக்கு தந்திருக்கின்ற விலைமதிக்க முடியாத வாழ்க்கை என்ற இந்த பரிசினை நாம் பயனுள்ள விதத்தில் பயன்படுத்தி பலருக்கும் பலன் தரக்கூடிய வாழ்வை வாழ இறைவன் அருள் வேண்டி இணைவோம் இந்த திருப்பலியில்...


திங்கள், 15 நவம்பர், 2021

இறைவனை ஏற்றால் மண்ணகத்தில் மீட்பு சாத்தியமாகும்....(16.11.2021)

இறைவனை ஏற்றால் மண்ணகத்தில் மீட்பு சாத்தியமாகும்....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று என்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள். மீட்பு என்பது இறப்புக்குப்பன் நடக்கின்ற ஒன்று அல்ல, மாறாக இன்றே இப்போதே நாம் விரும்பினால் மீட்புப் பெற முடியும் என்பதனை இன்றைய நற்செய்தி வாசகம் வழியாக நமக்கு தெளிவுபடுத்துகிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் சக்கேயுவை பற்றி வாசிக்கக் கேட்டேம். இந்த சக்கேயு சமூகத்தில் வரி வசூலிக்கும் பணியினை செய்து வந்தவர். எனவே உரோமை அரசுக்கு மிகவும் நெருக்கமான மனிதராக இருந்தவர். இந்தக் காரணத்தினால்தான் இவரை மக்கள் பாவி என கருதினர், அடியோடு வெறுத்து ஒதுக்கினர்.

கல்லுக்குள் ஈரம் இருப்பது போல சக்கேயுவின் உள்ளத்தில் இருந்த இறை உணர்வு இன்று வெளிப்பட்டதை நாம் வாசிக்க கேட்டோம்.

மக்கள் இவரை பாவி என அழைத்தாலும், இந்தப் பாவியின் மனம் ஆண்டவர் இயேசுவை காண வேண்டும் என்ற ஆவல் கொண்டு இருந்தது. 

பாவி என மக்கள் அழைத்ததால் உள்ளத்து அளவிலும், தான் குட்டையாக இருப்பதால் உடலளவிலும் பாதிக்கப்பட்டிருந்தார்.  ஆனால் ஆண்டவர் இயேசுவை காண வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் இருந்த அனைத்து விதமான பாதிப்புகளையும் கடந்து, அவரை விரைந்து செயல்பட வைத்தது.  

கூடியிருக்கின்ற கூட்டத்திற்கு மத்தியில் தன்னால் ஆண்டவர் இயேசுவை பார்க்க இயலாது என்பதை அறிந்தவராய், அருகில் இருந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்து ஆண்டவர் இயேசுவின் முகத்தை பார்த்து விட வண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டார்.

அவரின் உள்ளத்து ஆர்வத்தை உணர்ந்தவரான இயேசு... நின்று, அன்னார்ந்து பார்த்து, சக்கேயு இறங்கி வா இன்று நான் உன் வீட்டில் விருந்துண்ண போகிறேன் என அழைத்து அவனோடு சென்று விருந்து உண்டார். இயேசுவின் வருகையால் மனத்தூய்மை பெற்ற சக்கேயு தன்னிடம் இருப்பதை இழக்கத் தயாரானார். அதட்டி பெற்றவர்களை எல்லாம் அள்ளித் தர முன்வந்தார். அதுவும் 4 மடங்காகத் திருப்பித் தரக் கூடிய மனிதராக மாறினார். எனவே தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று என கூறினார்.

சக்கேயு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால் தன்னிடம் இருக்கின்ற அனைத்தையும் இழக்கத் தயாரானார்.  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கும்பொழுது அவரை விட உயர்ந்த செல்வம் இவ்வுலகத்தில் வேறு எதுவும் இல்லை நாம் நிலையானது என கருதுகின்ற அனைத்துமே நிலையற்றது இதையே பட்டினத்தார் இவ்வாறு கூறுவார்.

"ஊருஞ் சதமல்ல 
உற்றார் சதமல்ல 
பேரும் சதமல்ல 
பெண்டீர் சதமல்ல 
பிள்ளையும் சீரும் சதமல்ல 
நின் தேசத்தில் யாதும் சதமல்ல 
ஒன்றை சதம் கச்சியேகம்பனே" என்பார்.

அதாவது...,
ஊரும் நிரந்தரமல்ல 
பெற்ற பெயரும் நிரந்தரமல்ல 
கட்டிய மனைவி
பெற்ற பிள்ளை 
கொண்டுவந்த சீர் எதுவும் நிரந்தரமல்ல இந்த உலகத்தில் ஒன்றே  நிரந்தரம்.
அது இறைவன் ஒருவனே....! 


நிலையற்றவைகளின் மீது பற்றுக் கொள்வதை விடுத்து, நிலையான இறைவன் மீது பற்று கொண்டவர்களாய், சக்கேயுவைப் போல வாழவும், இம் மண்ணுலக வாழ்வில் மீட்பை உரிமையாக்கிக் கொள்ளவும்.... இறைவனது அருளை இந்த திருப்பலியில் இணைந்து வேண்டுவோம்....

ஞாயிறு, 14 நவம்பர், 2021

பார்வை பெறுவோம்....((15.11.2021)

 பார்வை பெறுவோம்....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆண்டவரே நான் மீண்டும் பார்வை பெற வேண்டும் என்ற வார்த்தைகள் பார்வையோடு இருந்த மனிதன் பார்வையற்றவனாக மாறி இருந்தார் என்பதை வெளிப்படுத்துகின்றது.

பார்வையற்ற இந்த மனிதன் நமக்கு கற்பிக்கின்ற பாடங்கள் ஏராளம்.... குறிப்பாக சில என பார்க்கும் பொழுது...

முதலில் விழிப்புணர்வு கொண்ட மனிதராக இவர் தென்படுகிறார்.

பார்வையை இழந்த அந்தச் சூழ்நிலையில் சமூகத்தாலும் உறவுகளாலும் ஒதுக்கப்பட்ட நிலையில் ஏதோ நடக்கிறது என்று இருந்து விடாது என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் விழிப்புநிலை கொண்ட மனிதராக இவர் இருக்கிறார். அதன் அடையாளமே இது என்ன? என்ற கேள்வி எழுப்பி நடப்பவற்றை அறிந்து கொள்ள முயலுகிறார். நாம் வாழுகின்ற சமூகத்திலும் நம்மைச் சுற்றி நடப்பவைகளை குறித்து விழிப்போடு இருப்பதற்கு இந்த மனிதன் இன்றைய நாளில் நமக்கு பாடம் கற்பிக்கிறார்.

இரண்டாவது இயேசுவைப் பற்றிய ஆழமான புரிதல் கொண்டவராக தென்படுகிறார்.
உடன் இருந்த சீடர்கள் கூட அவரை முழுமையாக அறிந்து கொள்ளாத நிலையில் இந்த பார்வையற்ற மனிதர் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தாவீதின் மகன் என அழைத்து இவரே உண்மையான மெசியா என்பதை எடுத்துரைக்க கூடிய மனிதராக தென்படுகிறார். இவர் இடத்தில் காணப்பட்ட இறைவன் மீதான ஆழமான புரிதல் நமது பொருளாக மாற வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

 மூன்றாவதாக நம்பிக்கை கொண்ட மனிதனாக இவர் தென்படுகிறார்.
பார்வையற்ற மனிதன் தன்னை இயேசுவால் மீண்டும் பார்வை பெற வைக்க முடியும் என்று ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தான். எனவேதான் ஆண்டவர் இயேசுவின் இடத்தில் நான் மீண்டும் பார்வை பெற வேண்டும் என்று கேட்டு பார்வையை பெற்றுக் கொண்டான். நாம் பின்பற்றுகின்ற இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை நம்மிடத்தில் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த பார்வையற்ற மனிதர் சான்றாக அமைகிறார்.


பார்வையற்ற மனிதன் நமக்கு கற்பிக்கின்ற பாடங்கள் ஏராளமாக இருந்தாலும்  நாம் வாழுகின்ற இவ்வுலகத்தில் பல நேரங்களில் நாம் பார்க்கிறோம். ஆனால் பார்வையற்ற மனிதர்களாக இருக்கிறோம். இதற்கு சிறந்த உதாரணமாக அமைவதே இன்றைய முதல் வாசகம்.. ஆண்டவரின் பராமரிப்பால் அடிமைத்தனத்தில் இருந்து மீட்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள் அவரிடம் இருந்து விலகிச் சென்று தங்கள் விருப்பம் போல செயல்படுவதை இன்றைய நாள் முதல் வாசகத்தில் வாசிக்க கேட்போம் .
தங்களை பகலில் மேக தூணாகவும் இரவில் நெருப்பு தூணாகவும் இருந்து பாதுகாத்து அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்த ஆண்டவரை மறந்தவர்களாக பார்வையற்ற நிலையில் இருந்தவர்கள் பலர் ஆனால் அவர்களுள் சிலர்  தங்களை பாதுகாத்து பராமரித்து வந்த ஆண்டவரை அறிந்தவர்களாக அவரோடு செய்த உடன்படிக்கையை பின்பற்றுபவர்களாக இருந்தார்கள் என வாசிக்க கேட்டோம்.

நாம் வாழுகின்ற இவ்வுலகத்தில் பல நேரங்களில் ஆண்டவரின் மீது ஆழமான நம்பிக்கையும், நம்மைச் சுற்றி  நடக்கின்ற நிகழ்வுகளை பற்றிய விழிப்புணர்வும், ஆண்டவரின் திட்டங்களை குறித்த ஆழமான புரிதலும் நமக்குள் வளர்த்துக் கொண்டு எப்போதும் பார்வை பெற்ற மனிதனாக இச்சமூகத்தில் வலம்வர இறைவனது அருளை இணைந்து வேண்டுகோள் இந்த திருப்பலியில்.

வெள்ளி, 12 நவம்பர், 2021

இறை வார்த்தைகள் வாழ்வாகட்டும்...இறுதி நாள் நமதாகட்டும்.....(14.11.2021)

இறை வார்த்தைகள் வாழ்வாகட்டும்...
இறுதி நாள்  நமதாகட்டும்.....

அன்புக்குரியவர்களே! ...
மனித வாழ்க்கையை பத்து பத்தாக  பிரிக்கலாம். 
10 வயதில் குழந்தை 
20 வயதில் இளைஞன் 
30 வயது என்பது முறுக்கேறிய பருவம் (எதையாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பு காணப்படும்) 
40 வயது என்பது பொறுப்புகளின் காலம் (எப்படியாவது நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் திருமணம் முடிக்க வேண்டும்) 
50 வயது என்பது ஆசைகளின் காலம் (இன்னும் சில வருடத்தில் ஓய்வு தரப்பட்டு விடும் அதற்குள் நல்ல வீடு கட்டவேண்டும் குழந்தைகளை நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்ற எண்ணங்கள் மேலோங்குகின்ற  காலம்) 
60 வயது என்பது ஓய்வின் காலம் (விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஓய்வு தரப்பட்டு விடும்)
70 வயது என்பது ஏக்கங்களின் காலம் (நல்ல நிலையில் இருந்தபோது ஓடி ஆடிய நேரங்களில் இதை இப்படி செய்திருக்கலாம் அப்படி செய்திருக்கலாம் என்ற ஏக்கங்கள் உள்ளத்தில் அரங்கேறுகின்ற காலம்) 
80 வயது என்பது எதிர்பார்ப்பின் காலம் (அடுத்தவரின் துணையை எதிர்பார்த்து வயதான காலத்தில் தன்னை தன் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் கவனித்துக் கொள்ளவேண்டும் என அனைத்திற்கும் அடுத்தவரை சார்ந்திருக்கின்ற ஒரு எதிர்பார்ப்பின் காலம்)
90 வயது என்பது நடுக்கத்தின் காலம்  (தள்ளாடும் வயதில் தாங்கும் பிள்ளைகளின் உதவியோடு தடுமாறி நடக்கின்ற காலம்)
100 வயது என்பது அடக்கத்தின் காலம்.
 (மண்ணிலிருந்து மறைந்த நிலையில் விண்ணை நோக்கிய பயணத்திற்கான அடக்கத்தின் காலம்)

மனித வாழ்வை இவ்வாறு பத்து பத்தாக பிரித்தாளும் இன்று அறுபது தொடுவது கூட ஆச்சரியமாக பார்க்கப்படுகின்ற நிலைதான் நிலவிக் கொண்டு இருக்கின்றது.... ஆனால் இன்றைய நாள் வாசகங்கள் அனைத்துமே இறுதி நாளினை குறித்து சிந்திக்கவும் செயலாற்றவும் நமக்கு அழைப்பு தருகின்றன.

மனிதர்களாகிய நமக்கு இறைவன் தந்த விலைமதிப்பில்லாத பரிசு இந்த வாழ்வு இந்த வாழ்வை ஆண்டவர் இயேசு கிறிஸ்து விரும்புகின்ற இறையாட்சியின் மதிப்பீடுகளின் படி அமைத்துக் கொண்டு இறுதிநாளில் அவரை எதிர்கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்புமாக உள்ளது.

இன்றைய நாள் வாசகங்கள் அனைத்துமே உலக  முடிவினை பற்றியும், இறுதி நாட்களைப் பற்றியும், ஆண்டவரின் இரண்டாம் வருகையைப் பற்றியும் எடுத்துரைக்கின்றன.  இறந்தவர்களை நினைவு கூறுகின்ற இந்த நவம்பர் மாதத்தில் இன்றைய நாள் இறைவார்த்தைகள் அடிப்படையில் நம் எதிர்கால வாழ்வை நோக்கி சிந்திப்பது  அவசியமான ஒன்றாகும்.

மண்ணில் பிறந்த ஒவ்வொருவருமே மரணத்தை சந்திப்போம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ...மரணத்திற்கு பிறகாக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவால் உயிர்த்தெழுவோம் என்பதும், அன்று அவரது ஆட்சியில், மாட்சியில் பங்கு பெற நாம் வாழுகின்ற இந்த மண்ணுலக வாழ்வில் நம்மை நாம் தகுதி உள்ளவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே இன்றைய வாசகங்கள் நமக்குத் தருகின்ற படிப்பினையாக உள்ளது.

இறுதி நாட்கள் என்பதும், உலக முடிவு என்பதும், ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகை என்பதும் உள்ளத்தில் ஒரு விதமான கலகத்தை உருவாக்கும்... காரணம் நமது வாழ்வு முறை ... இறைவன் படைத்த இந்த அழகிய உலகத்தில் நமது படைப்பின் மகத்துவத்தை உணர்ந்தவர்களாய் நான் என்ற மனநிலையோடு பயணிக்காது எப்போதும் விழிப்பாய் இருந்து  ஆண்டவரை எதிர்கொள்ள நம்மை நாம்  தகுதி படுத்தவேண்டும்.

எசாயா இறைவாக்கினர் 62 அதிகாரம் 3 வசனத்தில் கூறுவதுபோல 

ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்; உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய்.
என்ற வார்த்தைகளின் படி நமது வாழ்வு அமைந்திட வேண்டும் ... அதற்கு நாம் வாழுகின்ற இச்சமூகத்தில் எப்போதும் விழிப்பாய் இருந்திட வேண்டும்.


இன்பமும் - துன்பமும், நன்மையும் -  தீமையும், வெற்றியும் - தோல்வியும் நிறைந்த இவ்வுலகத்தில் நமது வாழ்வு இறைவார்த்தையின் அடிப்படையில் அமைந்திட வேண்டும்.  

மண்ணில் வாழுகின்ற மனிதர்களாகிய நாம் நமது வாழ்வில் பின்பற்றுவதற்கான பலவிதமான கட்டளைகளையும் பாடங்களையும் விவிலியத்திலிருந்து பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம் ....  ஆனால் அனைத்துக்கும் அடிப்படையானது
இணைச் சட்டம் 6 அதிகாரம் :5வசனம் குறிப்பிடுவதுபோல 


உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!

என்ற பழைய ஏற்பாட்டு இறை வார்த்தைக்கு மெருகேற்றிய ஆண்டவர் இயேசு கிறிஸ்து ...

மத்தேயு 22 அதிகாரம் :37- 39 வசனங்கள் வழியாக ....

"உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.

இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை.

‘உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை."

என்று குறிப்பிடுகிறார்.... ஆண்டவர் தந்த இந்த கட்டளைகளின்படி நமது வாழ்வை அமைத்துக் கொள்ளுகின்ற போது... மத்தேயு நற்செய்தி ஐந்தாம் அதிகாரத்தில் இடம்பெறுகின்ற  இயேசுவின் மலைப்பொழிவு இறைவார்த்தைகள் நமது வாழ்வில் செயலாக மாறும்...

இறைவன் விரும்புவது வெறும் வார்த்தைகள் அல்ல, நமது செயல்களை...

நமது செயல்களால் இந்த சமூகத்தில் ஏழை எளிய வரை தேடிச் செல்லவும், நீதியை நிலைநாட்டவும், இரக்கமற்றவருக்கு இரக்கம் தரவும், இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து வாழவும்,  இழப்பதிலும், கொடுப்பதிலும் இனிமை காணவும்  உள்ளத்தில் உறுதி ஏற்போம்...

இவ்வாறு இறை வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும் போது ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகையின் போதும் இறுதி நாளின் போதும் உலக முடிவின் போதும் நம் ஆண்டவர் இயேசு விரும்பும் மக்களாகிட முடியும் ...

எனவே அன்புக்குரியவர்களே விழிப்போடு இருந்து இறைவார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாள் நமக்கு அழைப்பு தருகிறது. 

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறுதியில் நாம் வாசித்தோம்... மாற்கு நற்செய்தி 13 அதிகாரம் 31  வசனத்தில் 

"விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா" என்று...

இறைவனது வார்த்தைகளின் படி நமது வாழ்வை அமைத்துக் கொண்டு, இறுதிநாளில் அவரை எதிர்கொள்ள, நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொள்ள, இறைவனது அருளை இணைந்து இந்த திருப்பலி வழியாக தொடர்ந்து வேண்டும் ...






நம்பிக்கையால் இணைந்திருப்போம்.....(13.11.2021)

நம்பிக்கையால் இணைந்திருப்போம்.....

 அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

கருவறையில் இருக்கும் குழந்தைக்கும் கற்பாறையில் இருக்கும் தேரைக்கும் உணவளித்து பாதுகாத்து பராமரித்து வருகின்றவர் இறைவன். இந்த இறைவன் மீது ஆழமான பக்தியையும் நம்பிக்கையையும் கொண்டிருக்க நாம் ஒவ்வொருவரும் நாளில் அழைக்கப்படுகின்றோம். 

மனிதன் தன் வாழ்நாளில் மிகப்பெரிய ஆறுதலை ஜெபத்தின் மூலமாக அடைகிறான் என்பார்கள்....

ஜெபம் என்பது வெறுமனே தேவைகளை கேட்பது மட்டுமல்ல. நம்மை நாம் சுய ஆய்வு செய்வது. நாம் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்ப்பது. சரியான பாதையை நோக்கி பயணிக்க நமக்கு நாமே வழிவகை செய்து கொடுப்பது....

ஜெபத்தின் வாயிலாக மனிதன் கடவுளோடு உரையாடுகிறார். கடவுளும் மனிதனும் உரையாடுகின்ற இடம் ஜெபமாக இருக்கின்றது. பல நேரங்களில் இந்த உரையாடலில் மனிதன் பேசிக்கொண்டிருக்கிறான். கடவுள் மௌனமாக இருக்கிறார் ஏனென்றால் மனிதன் கடவுள் பேசுவதை கேட்க விரும்பவில்லை. தான் பேசுவதை கடவுள் கேட்க வேண்டும் என்ற எண்ணமே நமது ஜெபங்களில் மேலோங்கி காணப்படுகிறது. 

 நாம் கேட்பதை நாம் தொந்தரவின் பொருட்டாவது இறைவன் செய்து தருவார் என்ற மையச் செய்தி நற்செய்தி வாசகத்தின் வாயிலாக தரப்பட்டாலும், நாம் கேட்பதற்கு முன்பாகவே நம் தேவைகளை அறிந்தவராக இருக்கின்றவர் இறைவன். இந்த இறைவன் தகுந்த நேரத்தில் நமது மன்றாட்டு களுக்கு செவிசாய்த்து அவைகளை நிறைவு பெறச் செய்வார். 

இந்த இறைவன் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு பயணிக்க நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம்.

இதையே  1 பேதுரு 5:6- 11 கூறுகின்றது...


கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்; அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார்.

உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்.

அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது.

அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள். உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகள் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா?

எல்லா அருளும் நிறைந்த கடவுள், இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார். சிறிது காலத் துன்பங்களுக்குப்பின் அவர் உங்களைப் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார்.
அவரது வல்லமை என்றென்றைக்கும் உள்ளது. ஆமென்.
1 பேதுரு 5:6- 11


இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் நாம் ஜெபத்தின் வாயிலாக  இறைவனோடு இணைந்திருக்க இறைவனது அருளை இந்த திருப்பலி வழியாக தொடர்ந்து வேண்டுவோம்....




வியாழன், 11 நவம்பர், 2021

இயேசுவின் பிம்பமாக....(12.11.2021)

இயேசுவின் பிம்பமாக....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களை இன்றைய இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


பகல் இரவு காக காத்திருக்கிறது. 

இரவு பகல் உகாக காத்திருக்கிறது.

சூரியன் நிலவுகாக காத்திருக்கிறது.

நிலவு சூரியனுக்காக காத்திருக்கிறது.

காத்திருத்தல் என்பது ஒருவிதமான சுகம்... கிறிஸ்தவர்களாகிய நாமும் ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகைக்காக காத்திருக்கின்றோம்.


எப்போது வரும் எப்படி வரும் என தெரியாது ஆனால் திடீரென நாம் எதிர்பாராத நேரத்தில் மானிட மகன் வந்தே தீருவான்... ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகையை எதிர்நோக்கி இருக்கக்கூடிய நாம் நமது வாழ்வில் இறைவன் வெளிப்படுத்துகின்ற அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு நமது வாழ்வை சீர் தூக்கிப் பார்த்து அவரின் வருகைக்கு நம்மை தயார் படுத்த இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு தருகின்றன.

உலகில் உள்ள துன்பங்கள், அழிவுகள் அனைத்தும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் மூலம் முடிவுக்கு வரும். அனைத்துப் படைப்புகளும் கிறிஸ்துவினால் புத்துயிர் பெறும். நோவாவின் காலத்தில் ஏற்பட்ட வெள்ள அழிவுக்குப் பிறகும், லோத்துவின் காலத்தில் சோதோம் கொமாரா வில் ஏற்பட்ட அழிவுகளிலும் கடவுளின் மாட்சி வெளிப்பட்டது போல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது கடவுளின் மாட்சி இந்த உலகில் வெளிப்படும். அப்போது கிறிஸ்துவின் பிம்பங்களாக இருந்து பிறருக்கு உதவி செய்த நல்லவர்கள் முதலில் மீட்படைவர். இதுதான் நம் நம்பிக்கை.  

இன்று வெள்ளப்பெருக்கு, பெருந்தொற்று போன்றவற்றால் அவதிப்படுகின்ற மக்களுக்கு இயேசுவின் பிம்பமாக இருந்து உதவி செய்ய வேண்டும். நாம் கிறிஸ்துவின் பிம்பமாக மாறி கடவுளை மாட்சி படுத்த வேண்டும்.

நம் வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளிலும் அடையாளங்களிலும் கடவுள் தன்னை வெளிப்படுத்துகிறார் என்பதையும் உணரக்கூடிய ஞானத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுகிறார். மானிட மகன் வருகையின் போது ஏற்படும் அடையாளங்களைக் அறிய ஞானத்தோடு நம்மையே நாம் தயார் செய்ய வேண்டும் என இயேசு கூறுகிறார்.எனவே ஞானத்தோடு கடவுளை அறிந்து அவருடைய வருகைக்காக தயார் செய்ய முயற்சி செய்வோம்.



புதன், 10 நவம்பர், 2021

கிறிஸ்துவின் மனநிலையில் ...(11.11.2021)

கிறிஸ்துவின் மனநிலையில் ...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்
இன்று நம் அன்னையாம் திருஅவை புனித மார்ட்டின் அவர்களை நினைவு கூறுகிறது.

பட்டங்களையும் பதவிகளையும் தேடி திரிகின்ற மனிதர்களுக்கு மத்தியில் எளிமையை தேடித் திரிந்தவர் தான் இன்று நாம் நினைவு கூறுகின்ற புனித மார்ட்டின் அவர்கள்.

இவரை ஆயராக்க வேண்டும் என அனைவரும் ஆசைப்பட்டார்கள் ஆனால் இவர் அதனை வேண்டாம் என மறுத்து வந்தார். ஒரு நாள் நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒரு நபருக்கு நோயில் பூசுதல் அருள்சாதனம் வழங்கவேண்டுமென இவரிடத்தில் வேண்டியபோது உடனே ஒப்புக்கொண்டு விரைந்து பயணித்தார். சென்று சேர்ந்த இடம் ஒரு ஆலயமாக இருந்தது. அங்கு அனைத்து சக குருக்களும் கூடியிருந்தார்கள். அனைவரும் இணைந்து இவரை ஆயராக அங்கு திருப்பொழிவு செய்தார்கள். பதவியையும், பட்டத்தையும் விரும்பாத நபராக இருந்த இவர் தன் மீது தனக்கு கொடுக்கப்பட்ட இந்தப் பொறுப்புக்களை எல்லாம் இறைவனின் விருப்பம் என உணர்ந்து ஏற்றுக் கொண்டார். திறம்பட செயல்பட்டார் என்பதை வரலாற்றில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

இன்று நாம் நினைவு கூறுகின்ற புனித மார்ட்டினை போல அனைத்து செயல்பாடுகளிலும் நாம் கிறிஸ்துவின் மனநிலையை அறிந்தவர்களாக இந்தச் சமூகத்தில் ஒருவர் மற்றவர் நலனில் அக்கறை காட்ட கூடியவர்களாக வாழ அழைக்கப்படுகிறோம். இன்றைய நாள் வாசகங்கள் இதைத் தான் வலியுறுத்துகின்றன.

ஏழைகளை தேடிச் செல்வதும்... சிறைப்பட்டோரை தேடிச் செல்வதும்... எளியவருக்கு உதவி செய்வதும்..... நீதியை நிலைநாட்டுவது.... நம் ஒவ்வொருவரின் கடமையாகவுள்ளது. நாம் இருக்கின்ற இடத்தில் நம்மால் செய்யக்கூடிய அனைத்து விதமான நற்செயல்களையும் செய்திட அழைக்கப்படுகின்றோம். நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் எந்நிலையில் இருந்தாலும் நாம் கிறிஸ்துவின் மனநிலையை நமது மனநிலையை கொண்டு இந்த சமூகத்தில் இறையாட்சி மலர்வதற்கான விதைகளை விதைத்து கொண்டே செல்ல அழைக்கப்படுகின்றோம்.

இறையாட்சியை இம்மண்ணில் மலரச் செய்யும் வகையில் நாம் செய்யக்கூடிய சின்னஞ்சிறு செயல்கள் கூட இறைவனுக்கு செய்ததாக கருதப்படுகின்றது. செயல்களுக்கான கைமாறு இறைவன் கண்டிப்பாக நமக்குத் தருவார். ஆனால் கைமாறு எதிர்பார்த்து அல்ல, இறையாட்சியின் மதிப்பீடுகளை மண்ணில் மலரச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்ந்தவர்களாக நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் அடுத்தவர் நலன் பேணும் நல்ல செயல்களில் ஈடுபடவும், அச் செயல்கள் மூலமாக இற வார்த்தைக்கு உயிரோட்டம் தரவும், இறையாட்சியை மண்ணில் மலரச் செய்யவும், இறைவனது அருளை வேண்டி தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக இணைந்து ஜெபிப்போம்.

செவ்வாய், 9 நவம்பர், 2021

நன்றியுள்ளவர்களாகிட....(10.11.2021)

நன்றியுள்ளவர்களாகிட....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகம், கடவுளின் பணியாளர்களான நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது. 
இன்றைய நற்செய்தி வாசகத்தில் 10 தொழு நோயாளர்கள் இயேசுவிடம் வந்தார்கள்.  நோய்வாய்ப்பட்டிருக்கும் போது அனைவரும் இணைந்து இருந்தார்கள்.  ஆனால் அவர்கள் நலம் பெற்ற போது ஆளாளுக்கொரு திசையில் என பிரிந்து சென்றார்கள்.  ஒருவன் மட்டுமே ஆண்டவரை நோக்கி வந்தான். 


நமது வாழ்வில் துன்பங்கள் வருகின்ற போது நாம் அனைவரும் இறைவனை நோக்கி வேண்டுகிறோம். துன்பங்களின் மறைக்கின்ற போது அந்த இறைவனை கண்டு கொள்ளாமல் செல்கிறோம். 

 ஒரு பிரச்சினையின் போது ஒன்று சேருகின்றன நாம், நல்லது செய்வதற்காக ஒன்று சேரத் தயங்குகிறோம். ஆனால், இன்றைய
முதல் வாசகம், நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது. நம் எண்ணங்களையும், 
நமது திட்டங்களையும் ஆய்ந்து அறிந்தவர் இந்த இயேசு கிறிஸ்து.  நாம் அவருடைய பார்வையில் நேர்மையானவர்களாகவும், அவருடைய திருச்சட்டத்தை  கடைப்பிடிப்பவர்களாகவும் திகழ வேண்டும். அதில் நாம் நடக்கின்ற போது, அவர் நம்மை பாதுகாப்பார், பராமரிப்பார்.  இந்த ஆண்டவரிடமிருந்து,  ஞானத்தை பெற்றுக் கொண்டு, தூய்மையான வாழ்க்கை வாழ இன்றைய நாளில் இறையருள் வேண்டுவோம்.

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...