வெளிப்புறமா...? உட்புறமா...?
கானல் நீர் கண்களுக்கு புலப்படும் ஆனால் அது நீரே அல்ல... அந்த நீரை குடித்து தாகத்தைப் போக்க இயலாது... அதுபோல வாழ்வில் வெளிப்புற தோற்றத்தை கொண்டு எதையும் நாம் எடைபோட்டு விடமுடியாது...
வெளிப்புற தோற்றத்தை விட உட்புறத்தோற்றம் அவசியமானதாகும்...
இன்றைய நற்செய்தி வாசகத்தில் எருசலேம் தேவாலயத்தின் கவின்மிகு அழகை கண்டு வியந்து போற்றுகின்ற மனிதர்களுக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஆலயம் என்பது ஆடம்பரத்தின் அடையாளம் அல்ல. இந்த ஆலயத்தை கொண்டு உடலாகிய ஆலயத்தை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.
வெளிப்படையாக பார்க்கின்ற போது இன்றைய நாள் நற்செய்தி வாசகம் எருசலேம் தேவாலயத்தை குறித்து பேசுவது போல தோன்றினாலும், உலக முடிவின் போது நாம் நம்மை தகுதி உள்ளவர்களாக மாற்றிக் கொள்வதற்கான வழிகளையும் கற்பிக்கின்றது.
ஆலயம் என்பது இறைவனோடு உரையாடுகின்ற ஒரு இல்லம். ஆலயம் என்பது நேர்மறையான எண்ணங்களின் சங்கமம். ஆலயம் என்பது நமது வாழ்வை மெருகூட்டுவதற்கான ஒரு அழகு நிலையம்.
ஆனால் பல நேரங்களில் நாம் இந்த ஆலயத்தினை பயன்படுத்தி நமது வாழ்வை அழகுற வடிவமைப்பதற்கு பதிலாக, பல நேரங்களில் அழகுற கட்டப்பட்டுள்ள இந்த ஆலயங்களை குறித்தது மகிழ கூடியவர்களாகவும், பெருமை கொள்ளக் கூடியவர்களாகவும் இருக்கின்றோம்.
அன்றைய காலகட்டத்தில் எருசலேம் தேவாலயத்தை குறித்து பெருமை கொள்ளக்கூடிய மனிதர்களாகத் தான் அம்மக்கள் வாழ்ந்தார்கள். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பெருமை கொள்ள வேண்டியது ஆலயத்தின் அழகை கண்டு அல்ல... மாறாக இவ்வாலயத்தை கொண்டு உங்கள் உடலாகிய ஆலயம் அடைந்த மாற்றத்தை கொண்டே பெருமை கொள்ள இன்றைய நாள் வாசகங்கள் வழியாக அழைப்பு தருகின்றார்.
வெளிப்புற தோற்றத்தை விடுத்து நமது உட்புற தோற்றத்தை அழகுற வடிவமைத்து கொள்ள இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகிறோம்.
சபை உரையாளர் தனது புத்தகத்தில் 3 ஆம் அதிகாரம்...
ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச் சிக்கும் ஒரு காலமுண்டு.
பிறப்புக்கு ஒரு காலம்,
இறப்புக்கு ஒரு காலம்;
நடவுக்கு ஒரு காலம்,
அறுவடைக்கு ஒரு காலம்;
சிரிப்புக்கு ஒரு காலம்
அழுகைக்கு ஒரு காலம்
பேச ஒரு காலம்
பேசாதிருப்பதற்கு ஒரு காலம் என ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம் வரும் என குறிப்பிடுகிறார்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவம் ஒரு காலம் வரும் என குறிப்பிடுகிறார். அந்த ஒரு காலம் என்பது அவரின் வருகையை, உலகின் முடிவை வலியுறுத்துகின்ற காலமாகும். அந்த உலக முடிவின் போதும், ஆண்டவரின் நாளின் போதும் நாம் தகுதியுள்ளவர்களாக மாறிட அழைப்பு தருகின்றார்.
பல நேரங்களில் ஆண்டவரின் வருகை இப்போது, நாளை என்று மக்களை ஏமாற்றக் கூடிய மனிதர்கள் பலர் உண்டு.
ஆனால் விவிலியம் தெளிவாக கூறுகிறது ... மாற்கு 13:32-33
ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.
கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது. என்று..
எனவே ஏமாற்றுபவர்களின் குரலுக்கு செவி கொடுத்து நாம் ஏமாந்து விடாது ஒவ்வொரு நாளும் நாம் ஆண்டவரின் வருகையை எதிர்நோக்கியவர்களாய், நமது வாழ்வை சீரமைத்துக் கொண்டு, ஆண்டவர் இயேசுவின் சீடர்களாக... வெளிப்புற தோற்றத்தை விட உட்புறத்தோற்றத்தை அழகுற அமைத்து கொண்டவர்களாய் ...இச்சமூகத்தில் பயணம் செய்ய இறைவனது அருளை இணைந்து வேண்டுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக