சீடராகிட....
ஒரு ஊரில் ஒரு குரு இருந்தார். அந்த குருவினிடத்தில் ஒரு சீடன் பயிற்சி பெற்று வந்தான். அந்த சீடனின் வாழ்நாள் இலட்சியம் தான் இறக்கும் வரை இந்த குருவுக்கு சீடனாகவே இருந்து மரித்துப் போக வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தான். ஆனால் குரு அவனுக்கு பலவிதமான பயிற்சிகளை கொடுத்த பிறகு அவனிடத்தில் சொன்னார். நான் உனக்கு இன்று ஒரு மந்திரத்தைக் கற்றுத்தர விருகின்றேன். இந்த மந்திரத்தை உச்சரித்தால் உன் எதிரே இருப்பவர்கள் எத்தகைய நோயினால் ஆட்கொள்ளப்பபட்டு இருந்தாலும் அந்த நோயிலிருந்து அவர்கள் குணம் பெறுவார்கள் என்று கூறி அந்த மந்திரத்தை அவனுக்கு கற்றுக் கொடுத்தார். கற்றுக் கொடுத்து முடித்த பிறகு சொன்னார். இந்த மந்திரத்தை நீ பயன்படுத்தினால் நீ என்னுடைய சீடனாக இருக்க முடியாது என்று. பிறகு அவனை அருகில் இருந்த ஊருக்குச் சென்று வருமாறு அனுப்பி வைத்தார். அவனும் அருகில் இருந்த ஊருக்குச் சென்றான். அங்கு இருந்த மக்களெல்லாம் ஒரு கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு இறந்து கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த அவனால் பொறுக்க இயலாது குரு தனக்கு சொல்லிய மந்திரத்தை பயன்படுத்தி அந்த நோயை மக்களிடம் இருந்து அகற்றினான். பிறகு குருவிடம் வந்து என்னை மன்னித்தருள நீங்கள் கூறிய மந்திரத்தை நான் பயன்படுத்தி விட்டேன். என்னை மன்னித்து என்னை உங்கள் சீடனாக இருப்பதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பை தாருங்கள் என்று கேட்டான். அப்போது குரு அவனிடத்தில் சொன்னாராம் எப்போது நீ உனது வாழ்நாள் இலட்சியத்தை விட அடுத்தவர் நலன் முக்கியம் என கருதி நான் உனக்கு கற்பித்தவற்றை அடுத்தவரின் நலனுக்காக நீ பயன்படுத்தினாயே அப்போதே நீ என்னுடைய சீடனாக இருப்பதற்கான தகுதியை இழந்து விட்டாய். இனி நீயும் ஒரு குருவே. உன்னிடமிருந்து தான் இனி உன்னைப் போன்ற பல சீடர்கள் உருவாக வேண்டும் என்று கூறி அவனை அனுப்பி வைத்தாராம்...
ஆண்டவர் இயேசுவின் சீடராக இருப்பதற்கான வழிகளை தான் இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. ஆண்டவர் இயேசுவின் சீடராக இருப்பது எளிதான காரியமல்ல. பலவிதமான சவால்கள் நிறைந்தது. இன்று நாம் வாழுகின்ற காலகட்டத்தில் திரையில் தோன்றும் சிலரை தலைவர்களாக நினைத்துக் கொண்டு அவர்களுக்காக பலவிதமான தியாகங்களை செய்ய முன் வருகின்ற இளைஞர்கள் இச்சமூகத்தில் நலமான பணிகளை செய்வதற்கு முன் வருவதற்கு தயக்கம் காட்ட கூடியவர்களாக இருக்கின்றார்கள் என்பது எதார்த்தமான உண்மையாக இருக்கிறது.
ஆண்டவரின் சீடராக வேண்டுமென்றால் நாம் நம் சிலுவையை சுமந்து கொண்டு வரவேண்டும். நம்மிடம் இருப்பதையெல்லாம் இழக்க முன்வர வேண்டும். இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது மானிட மகனுக்கு தலைசாய்க்க கூட இடமில்லை என்றார். இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்தார். பகிராதோரையும் பகிருமாறு அறிவுறுத்தினார். அடுத்தவரை அன்பு செய்ய சொன்னார் அதுவே சீடத்துவ வாழ்வின் நோக்கம் என்றார். இயேசு தான் சொன்னதை வெறும் வாய் வார்த்தையாக மட்டும் சொல்லி விட்டு செல்லவில்லை, தான் சொன்னதன் அடிப்படையில் தன் வாழ்வை அமைத்துக் கொண்டு நம் மீது கொண்ட அன்பின் காரணமாக தனது இன்னுயிரையும் தியாகம் செய்யக்கூடிய தலைவனாக மாறினார். இந்த தலைவனை பின்பற்றக்கூடிய நாம் இவரின் சீடர்களாக மாற வேண்டுமாயின் இன்றைய நாள் இறை வார்த்தைகளின் அடிப்படையில் நமது சிலுவைகளை நாமே சுமந்து கொண்டு, அடுத்தவரை அன்பு செய்யக் கூடிய, அடுத்தவருக்கு நலமானது எதுவோ அதனை செய்யக்கூடிய நபர்களாக இச்சமூகத்தில் பயணம் செய்யவும், நான் என்ற ஆணவத்தை தவிர்த்து பிறர் என்பதை முன்னிறுத்தி ஆண்டவரின் சீடராக அகிலத்தில் திகழ்ந்திட இறைவனது அருளை இணைந்து வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக