புனித அந்திரேயாவும் நம்பிக்கையும்
ஆண்டவரின் வருகையை ஆவலோடு எதிர்நோக்கி கொண்டிருக்கின்ற நாம் இன்று தாய் திரு அவையாக இணைந்து திருத்தூதர் அந்திரேயாவை நினைவு கூறுகிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம் சீடர்களை பெயர் சொல்லி அழைத்தார். அழைக்கப்பட்டவர்கள் அனைத்தையும் விட்டுவிட்டு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றினர்கள். இந்த இயேசு கிறிஸ்துவின் மீது ஆழமான அதீத நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையின் நிமித்தமாய் தாங்கள் அறிந்து கொண்ட ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பற்றி அகிலத்தில் உள்ளவர்களுக்கு நற்செய்தியை அறிவித்து பலரையும் இந்த இயேசுவின் பால் ஈர்த்தார்கள்.
அவர்களுள் ஒருவரான புனித அந்திரேயாவை இன்று நாம் நினைவு கூறுகின்றோம்..
இந்த அந்திரேயா ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் விண்ணேற்ப்புக்கு பிறகாக ஆண்டவரின் மீது கொண்ட அதீத நம்பிக்கையின் காரணமாக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்தியை பல்வேறு பகுதிகளுக்கு அறிவிக்கச் சென்றார். இவரது வார்த்தைகளை கேட்டு மனம் மாறியவர்கள் பலர் அவர்களுள் மாக்ஸிமில்லா என்ற ஆளுநர் ஏஜியுஸ் என்பவரின் மனைவியும் அடங்குவார். தன் மனைவி மனம்மாறி ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதை விரும்பாத ஆளுநர் ஏஜியுஸ் அந்திரேயா அழைத்து ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பற்றி நற்செய்தி அறிவிப்பதை நிறுத்திட கூறினார். நிறுத்தவில்லை என்றால் உயிரை இழக்க வேண்டிய சூழல் உருவாகும் என எச்சரித்தார். ஆனால் அந்திரேயா எதையும் கண்டு அஞ்சவில்லை. ஆண்டவர் மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படையில் ஆண்டவரின் நற்செய்தியை அடுத்தவருக்கு அறிவிக்கும் பணியை தடையின்றி செய்து வந்தார். இவரது பணியை கண்டு பொறுக்க இயலாத ஆளுநர் ஏஜியுஸ் இவரை எக்ஸ் X வடிவ சிலுவையில் அறைந்தான். எக்ஸ் X வடிவ சிலுவையில் அறையப்பட்ட அந்திரேயாவின் உடலில் இருந்து உயிர் மூன்று நாட்கள் பிரியாமல் இருந்தது. அந்த மூன்று நாட்களும் கூட அவரைப் பார்க்க வந்த கூட்டத்தினருக்கு நற்செய்தியை அறிவிக்க கூடிய பணியினை செய்தார். இறுதியில் மூன்று நாளுக்குப் பிறகு தனது இன்னுயிரை இழந்தார்.
இயேசுகிறிஸ்துவின் வருகைக்கு நம்மை நாம் தயாரித்துக் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் நாம் நினைவு கூறுகின்ற இந்த புனித அந்திரேயாவின் வாழ்வு நமக்கு தருகின்ற பாடம். ஆண்டவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாய் நாம் இருக்க வேண்டும் என்பதாகும். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவால் நாம் ஒவ்வொருவருமே அழைக்கப்பட்டிருக்கிறோம். அழைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவருமே அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நமது வாழ்வில், நமது சொல்லாலும், செயலாலும் வெளிகாட்ட வேண்டும். அவர் மீது ஆழமான நம்பிக்கையில் தொடர்ந்து வளரவும், அந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஆண்டவரின் வருகையை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கும் இன்றைய நாள் நமக்கு அழைப்பு தருகிறது.
ஆண்டவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாய் நாம் அவரது வருகைக்கு நம்மை தயாரிக்க இறைவனது அருளை இணைந்து தொடர்ந்து வேண்டுவோம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக