இறைவனை ஏற்றால் மண்ணகத்தில் மீட்பு சாத்தியமாகும்....
இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று என்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள். மீட்பு என்பது இறப்புக்குப்பன் நடக்கின்ற ஒன்று அல்ல, மாறாக இன்றே இப்போதே நாம் விரும்பினால் மீட்புப் பெற முடியும் என்பதனை இன்றைய நற்செய்தி வாசகம் வழியாக நமக்கு தெளிவுபடுத்துகிறார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் சக்கேயுவை பற்றி வாசிக்கக் கேட்டேம். இந்த சக்கேயு சமூகத்தில் வரி வசூலிக்கும் பணியினை செய்து வந்தவர். எனவே உரோமை அரசுக்கு மிகவும் நெருக்கமான மனிதராக இருந்தவர். இந்தக் காரணத்தினால்தான் இவரை மக்கள் பாவி என கருதினர், அடியோடு வெறுத்து ஒதுக்கினர்.
கல்லுக்குள் ஈரம் இருப்பது போல சக்கேயுவின் உள்ளத்தில் இருந்த இறை உணர்வு இன்று வெளிப்பட்டதை நாம் வாசிக்க கேட்டோம்.
மக்கள் இவரை பாவி என அழைத்தாலும், இந்தப் பாவியின் மனம் ஆண்டவர் இயேசுவை காண வேண்டும் என்ற ஆவல் கொண்டு இருந்தது.
பாவி என மக்கள் அழைத்ததால் உள்ளத்து அளவிலும், தான் குட்டையாக இருப்பதால் உடலளவிலும் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் ஆண்டவர் இயேசுவை காண வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் இருந்த அனைத்து விதமான பாதிப்புகளையும் கடந்து, அவரை விரைந்து செயல்பட வைத்தது.
கூடியிருக்கின்ற கூட்டத்திற்கு மத்தியில் தன்னால் ஆண்டவர் இயேசுவை பார்க்க இயலாது என்பதை அறிந்தவராய், அருகில் இருந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்து ஆண்டவர் இயேசுவின் முகத்தை பார்த்து விட வண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டார்.
அவரின் உள்ளத்து ஆர்வத்தை உணர்ந்தவரான இயேசு... நின்று, அன்னார்ந்து பார்த்து, சக்கேயு இறங்கி வா இன்று நான் உன் வீட்டில் விருந்துண்ண போகிறேன் என அழைத்து அவனோடு சென்று விருந்து உண்டார். இயேசுவின் வருகையால் மனத்தூய்மை பெற்ற சக்கேயு தன்னிடம் இருப்பதை இழக்கத் தயாரானார். அதட்டி பெற்றவர்களை எல்லாம் அள்ளித் தர முன்வந்தார். அதுவும் 4 மடங்காகத் திருப்பித் தரக் கூடிய மனிதராக மாறினார். எனவே தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று என கூறினார்.
சக்கேயு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால் தன்னிடம் இருக்கின்ற அனைத்தையும் இழக்கத் தயாரானார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கும்பொழுது அவரை விட உயர்ந்த செல்வம் இவ்வுலகத்தில் வேறு எதுவும் இல்லை நாம் நிலையானது என கருதுகின்ற அனைத்துமே நிலையற்றது இதையே பட்டினத்தார் இவ்வாறு கூறுவார்.
"ஊருஞ் சதமல்ல
உற்றார் சதமல்ல
பேரும் சதமல்ல
பெண்டீர் சதமல்ல
பிள்ளையும் சீரும் சதமல்ல
நின் தேசத்தில் யாதும் சதமல்ல
ஒன்றை சதம் கச்சியேகம்பனே" என்பார்.
அதாவது...,
ஊரும் நிரந்தரமல்ல
பெற்ற பெயரும் நிரந்தரமல்ல
கட்டிய மனைவி
பெற்ற பிள்ளை
கொண்டுவந்த சீர் எதுவும் நிரந்தரமல்ல இந்த உலகத்தில் ஒன்றே நிரந்தரம்.
அது இறைவன் ஒருவனே....!
நிலையற்றவைகளின் மீது பற்றுக் கொள்வதை விடுத்து, நிலையான இறைவன் மீது பற்று கொண்டவர்களாய், சக்கேயுவைப் போல வாழவும், இம் மண்ணுலக வாழ்வில் மீட்பை உரிமையாக்கிக் கொள்ளவும்.... இறைவனது அருளை இந்த திருப்பலியில் இணைந்து வேண்டுவோம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக