வியாழன், 31 மார்ச், 2022

நல்லதொரு மனமாற்றத்தை நம்முடையதாக்கிக் கொள்ள...(1.4.2022)

நல்லதொரு மனமாற்றத்தை நம்முடையதாக்கிக் கொள்ள...


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 
இன்றைய நாள் இறைவார்த்தைகள் யூதர்கள் இயேசுவின் மீது கோபம் கொண்டதை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.  ஏன் யூதர்கள் இயேசுவின் மீது கோபம் கொண்டார்கள்? எனப் பார்க்கிற போது,  பொதுவாகவே ஒரு மனிதன் தன்னை கடவுள் எனவும், தான் கடவுளிடமிருந்து வந்தவர் எனவும் போதித்தால், அவன் கடவுளை பழிக்கிறான் என யூதர்கள் கருதினர். இதனை மாற்கு நற்செய்தி 14ஆம் அதிகாரம் 61, 63 இறை வசனங்களில் நாம் வாசிக்க கேட்கலாம். 

       இயேசு தன்னை மெசியா என்றதும், நான் கடவுளிடம் இருந்து வந்தேன் எனக் கூறியதும் யூதர்களின் வெறுப்புக்கு ஆளாக்கத் தூண்டியது.  இரண்டாவதாக யூதர்கள் தங்களை கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட மக்கள் என நம்பிக் கொண்டிருந்தார்கள். 

          ஆனால் இயேசுவோ, நீங்கள் கடவுளை அறியாதவர்கள்.  நீங்கள் கடவுளை அறியவில்லை எனக் கூறி அவர்களிடம் காணப்பட்ட கடவுளைப் பற்றிய தவறான புரிதல்களை சுட்டிக் காண்பித்தார்.  இந்த இரண்டையும் அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.  எனவே தான் இயேசுவின் மீது கோபம் கொண்டார்கள்.  அவரை பிடித்து சிலுவையில் அறைந்து கொல்லும் அளவிற்கு துணிந்தார்கள்.  இயேசுவின் சிலுவை மரணத்திற்கு தீர்ப்பிட்ட போது கூட இயேசுவுக்கு எதிரான அவர்களது குற்றச்சாட்டுகளுள் ஒன்று, இவன் தன்னையே கடவுளென சொல்லிக்கொண்டான் என்பதாகும். 

        இன்றைய இந்த இறை வார்த்தைகள் மூலம் இறைவன் இன்று  நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன? என  சந்திக்கும் போது மனிதர்களாகிய நாம் பல நேரங்களில், நாம் செய்கிற தவறுகளை சுட்டிக் காண்பிக்கிற போது, நாம் செய்கிற தவறுகளை சரி செய்து கொள்வதை விட,  தாங்கள் செய்கின்ற செயல்களை நியாயப்படுத்தக் கூடிய நபர்களாகத் தான் பல நேரங்களில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் நாம் செய்வது தவறு என சுட்டிக் காட்டப்படும் போதெல்லாம் நாம் செய்கின்ற தவறுகளை நியாயப்படுத்துவதற்கு பதிலாக, நாம் செய்கின்ற செயல்களை குறித்து சிந்தித்துப் பார்த்து, நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இறைவன் இந்த நாளில் அழைப்பு தருகிறார்.  இறைவன் தருகின்ற இந்த அழைப்பை உணர்ந்தவர்களாக, நமது தவறான செயல்களை கண்டு கொண்டு, நல்லதொரு மனமாற்றத்தை நம்முடையதாக்கிக் கொள்ள இறையருள் வேண்டுவோம்.

புதன், 30 மார்ச், 2022

நமது வாழ்வால் நாம் சான்று பகரும் மனிதர்களாக மாறுவோம்!...(31.3.2022)

நமது வாழ்வால் நாம் சான்று பகரும் மனிதர்களாக மாறுவோம்!

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
யூத சமூகத்தைப் பொறுத்தவரை ஒருவர் தன்னைக் குறித்து
 தானே சான்று பகர்ந்தால் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒருவரை குறித்து இருவர் அல்லது மூவர் கூறக்கூடிய சான்றுகளின் அடிப்படையில் மட்டுமே ஒன்றின் உண்மை தன்மையை உணர்ந்து கொள்வார்கள்.  அவ்வடிப்படையில் இயேசு தன்னை கடவுளின் மகன் என அறிக்கையிட்டபோது அதை யூதர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.  ஆனால் இயேசு விவிலியத்தின் துணை கொண்டும்  திருமுழுக்கு யோவானின் வார்த்தைகளைக் கொண்டும் இறைவாக்கினர் மோசேயின் சட்ட திட்டங்களை கொண்டும் தன்னை மெசியா எனவும் இறைமகன் எனவும் சான்று பகர்கின்றார்.  இயேசு கொடுத்த வார்த்தைகளின் அடிப்படையில் இயேசுவே உண்மையான இறைமகன் என்பதை உணர்ந்து கொள்ள மறுத்து அவரை கொலை செய்வதற்கும், அவரை அழிப்பதற்கும் வழி தேடக்கூடிய மனிதர்களாகத்தான் யூதர்களும் சதுசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் செயல்பட்டார்கள் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. 

             இன்று இந்த இறை வார்த்தை பகுதி நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன என சந்திக்கின்ற போது நாம் ஒவ்வொருவருமே நமது வாழ்வால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு சான்று பகரக் கூடிய மனிதர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம்.

                நாம் ஆண்டவருக்கு சான்று பகர வேண்டுமாயின் நமது வாழ்வானது ஆண்டவரின் வார்த்தைகளை மையப்படுத்திய வாழ்வாக அமைய வேண்டும்.  இறைவனது வார்த்தைகளை நமது வாழ்வாக நாம் மாற்றிக் கொள்ளுகிற போது நமது வாழ்வால் இறைவனுக்கு சான்று  பகரக்கூடிய மனிதர்களாக நாம் மாறிட முடியும். அதற்கான அருள்வேண்டி இன்றைய நாளில் தொடர்ந்து இறைவனிடத்தில் செபிப்போம்.

செவ்வாய், 29 மார்ச், 2022

நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள ...(30.3.2022)

நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள ...


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
        இன்றைய நற்செய்தியில், இயேசு தன்னை இறைத்தந்தையோடு இணைத்துப்பேசுகிறார். கடவுள் எப்படி இருக்கிறார் என்பதை இயேசுவிடமிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

       ஏனென்றால், இயேசுவின் வார்த்தைகள் கடவுளின் வார்த்தைகள். இயேசுவின் உணர்வுகள் கடவுளின் உணர்வுகள். இயேசுவின் செயல்பாடுகள் கடவுளின் செயல்பாடுகள். பாவத்திற்கு எதிராக, கடவுள் எப்படி எழுகிறார் என்பதை இயேசுவின் வாழ்விலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். மனிதர்களைக் கடவுள் எப்படி பார்க்கிறார் என்பதையும், இயேசுவின் வார்த்தைகள் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம்.

           இயேசுவை முழுமையாக அறிந்துகொண்டவர்கள், நிச்சயம் தந்தையாகிற இறைவனை அறிந்திருப்பார்கள். ஏனென்றால், இயேசு கடவுளின் பிரதி பிம்பம். இயேசுவின் வார்த்தைகளையும், அவருடைய போதனைகளையும் நாம் நன்கு அறிந்துகொண்டால், கடவுளை நாம் முழுமையாக அறிந்துகொள்ளலாம்.

       சிலுவையில் இயேசுவை அறையத் தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுள் ஒன்று, இயேசு தன்னை தந்தை இறைவனோடு இணையாக்கினார் என்பது. தந்தை இறைவனும் இயேசுவும்ஆள்தன்மையில் மட்டுமே வேறுபட்டவர்கள். சிந்தனை, செயல்பாடு அனைத்திலும் ஒன்றுபட்டவர்கள்.

             "மகன் தாமாக எதையும் செய்ய இயலாது; தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும்."(மத்5:19)

                  எனவே இன்றைய நாளில் தந்தை இறைவனோடு தன்னை இணைத்துக் கொண்டு அவரது பணியை நிறைவேற்றுவதில், மனிதனாக இம்மண்ணில் பிறந்து சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்கு தன்னை தாழ்த்திக் கொண்ட நம் ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றி, நாமும் அவரைப்போல தந்தை இறைவனை முழுமையாக அறிந்து கொள்வதிலும், இன்னும் அதிகமாக ஆண்டவரோடு உறவாடுவதிலும், தந்தை இறைவனோடு உறவாடுவதிலும் நமது செப நேரத்தை அர்த்தமுள்ளதாக, பயனுள்ளதாக, மேன்மையான ஒரு நேரமாக நம்மை நாமே உருவாக்கிக் கொண்டு, தந்தை இறைவனோடும் ஆண்டவர் இயேசுவோடும் உள்ள உறவில் நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள இன்றைய நாளில் இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து ஜெபிப்போம்.

திங்கள், 28 மார்ச், 2022

நம்பிக்கையில் நிலைத்தவர்களாக...(29.3.2022)

நம்பிக்கையில் நிலைத்தவர்களாக...


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
           முப்பத்து எட்டு ஆண்டுகளாக உடல் நலமற்று இருந்த தன்னை குணமாக்க இயலாத நிலையில் இருந்த ஒரு நபரை இயேசு அவரது நம்பிக்கையின் நிமித்தமாக குணமாக்குவதை இன்றைய நாளில் நாம் வாசிக்கக் கேட்டோம்.  38 ஆண்டுகளாக குளத்தில் தன்னை இறக்கி விட ஆள் இல்லாத காரணத்தினால், எப்படியாவது குணம் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு குளத்தின் அருகில் காத்துக் கிடந்த ஒரு மனிதனை இறைவன் இயேசு கண்ணோக்குகின்றார். 

         பொதுவாகவே இந்த யூத சமூகத்தில் பெத்சாய்தா என்ற அந்த குளத்தை நம்பி பலர் வாழ்ந்து கொண்டிருந்தனர். 38 ஆண்டுகளாக இஸ்ரயேல் மக்களிடையே பலவிதமான நம்பிக்கைகள் இருந்தன.   யூதர்களிடையே பலவிதமான வழக்கங்கள் இருந்தன. 

            அவைகளுள் ஒன்று தான் இந்த பெத்சாய்தா குளத்தினை வானதூதர் கலக்குவதாகவும், 
 கலங்குகின்ற நேரத்தில் இறங்குபவர் நலம் பெறுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களிடத்தில் மேலோங்கி காணப்பட்டது. 

    அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் எப்படியாவது முதலில் குளத்தில் இறங்கி நலம் பெற வேண்டுமென முப்பத்து எட்டு ஆண்டுகளாக ஒரு மனிதன் காத்திருந்தான். காத்திருந்து காத்திருந்து கடவுளின் அருளைப் பெற முடியாத நிலையில் இருந்தான். அந்த மனிதனுக்கு இயேசுவின் அருள் கிடைத்தது. 

         38 ஆண்டுகளாக நம்பிக்கையோடு காத்திருந்ததன் விளைவு, இயேசு அவரை ஒரே நிமிடத்தில் நலமாக்குகிறார். இயேசு நலமாக்குவதற்கு முன்பாக , அந்த முடக்குவாதமுற்ற மனிதனை நோக்கி ஒரு கேள்வியை எழுப்புகிறார். நீர் நலம் பெற விரும்புகிறீரா? என்று கேட்கிறார். அவரும் விரும்புகிறேன் என்று கூறுகிறார். அவர் கொண்டிருந்த நம்பிக்கையின் நிமித்தமாகவே, இயேசு அவரை குணப்படுத்துகிறார். 

           நாமும் அத்தகைய நம்பிக்கையை கொண்டிருக்க வேண்டும். ஆண்டவர் மீது நம்பிக்கையோடு இருக்கிற போது அவர் நமது வாழ்வில் பலவிதமான நல்ல காரியங்களை செய்வார் என்பதை இன்றைய வாசகங்கள் வெளிப்படுத்துகின்றன. 
                எனவே நாமும் இந்தத் தவக்காலத்தில் ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவர்களாக, நம்பிக்கையில் நிலைத்தவர்களாக, ஆண்டவர் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையில் ஆழப்பட இறையருள் வேண்டி இன்றைய நாளில் இந்த திருப்பலி வழியாக இணைந்து தொடர்ந்து செபிப்போம்.

ஞாயிறு, 27 மார்ச், 2022

நம்பிக்கையில் வேரூன்றியவர்களாக மாறிட...(28.3.2022)

நம்பிக்கையில் வேரூன்றியவர்களாக மாறிட...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
     பதவிக்கு வருவதற்கு முன்பாக மக்களை தேடிச் செல்வதும், பதவியைப் பெற்ற பிறகு தன்னை தேடி மக்களை வர செய்வதுமே இன்றைய அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களின் போக்காக இருந்து கொண்டிருக்கக்கூடிய எதார்த்தமான  சூழ்நிலையில் இன்று பிலாத்துவின் அரண்மனையில் பணி ஆற்றிய ஒரு படைத் தலைவன் தன் மகனின் நலனுக்காக ஆண்டவர் இயேசுவை நாடிச் செல்வது குறித்து நாம் வாசிக்க கேட்டோம். 

      பொதுவாகவே மனிதர்கள் தங்கள் வாழ்வில் துன்பங்கள் வருகிறபோது இறைவனை நாடக் கூடியவர்களாக இருக்கிறார்கள். சில நேரங்களில் நாமும் அப்படிப்பட்ட மனிதர்களாக இருந்திருக்கலாம்.  ஆனால் இந்த நாளில் இறைவன் மீது நம்பிக்கை கொண்ட மனிதர்களாக நாம் வாழ நமக்கு அழைப்பினை தருகிறார். நாம் பதவியில் இருந்தாலோ, சமூகத்தில்  மதிக்கத்தக்க மனிதர்களாக இருந்தாலோ, அல்லது பாமர ஏழை மக்களாக இருந்தாலோ, கடவுளின் பார்வையில் நாம் சமமானவர்கள். நம்பிக்கையோடு அவரை நாடிச் சொல்லுகிற போது அவர் நமது தேவைகளை 
நிறைவேற்றக்கூடியவராக இருக்கிறார்.

                      இந்த தவக்காலம் என்பதே ஆண்டவரோடு உள்ள உறவில் நாம் ஆழப்பட  வேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்துகிறது. இந்தத் தவக்காலத்தில் நாம்
நம்பிக்கையோடு ஆண்டவரை நாடிச்செல்ல அழைக்கப்படுகிறோம்.  நம்பிக்கையோடு நாடிச் செல்லுகின்ற போது நாம் அவரிடமிருந்து பல நலன்களை  பெற்றுக் கொள்ளலாம். 

                     நம்பிக்கையில் வேரூன்றியவர்களாக மாறிட, இறைவனிடத்தில் அருள்வேண்டி தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம்.

சனி, 26 மார்ச், 2022

இறைவனோடு ஒப்புரவாவோம்....(27.3.2022)

இறைவனோடு ஒப்புரவாவோம்....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையானது, கடவுளோடு ஒப்புரவாகிட நமக்கு ஒரு அழைப்பினை தருகிறது. பொதுவாகவே நமது கிறிஸ்தவ இறையியலை கோழிக்குஞ்சு இறை இயல் என்று குறிப்பிடுவார்கள். அதாவது ஒரு தாய் கோழியானது தனது குஞ்சுகளுக்கு ஏதேனும் ஆபத்து வருகிறது என்றால் ஒரு விதமான குரல் ஓசையை எழுப்பும்.  உடனே அனைத்துக் குஞ்சுகளும் ஓடிச்சென்று தாயின் இறக்கைகளுக்குள் மறைந்து கொள்ளும்.  இது போலத்தான் நாம் பின்பற்றுகின்ற கிறிஸ்தவ மறையின் இறையியலானது இருக்கின்றது. 

 பல நேரங்களில் நாம் மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற போது நாம் செல்லுகின்ற பாதை தவறு என்பதை உணர்த்துவதற்கு இறைவன் பல வழிகளில் வாழ்வில் குறுக்கீடு செய்கிறார்.  அவர் குறிக்கீடு செய்யும் போதெல்லாம்,  அதை கடவுளின் அறிவுறுத்துதல் என்பதை உணர்ந்து கொண்ட மக்களாக நம்மை நாம் சரி செய்து கொண்டு,  மீண்டுமாக ஆண்டவர் காட்டுகின்ற பாதையில் பயணம் செய்ய, கடவுளின் உறவில் நிலைத்திருக்க  நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம்.

          இந்த தவக்காலம் கூட அதற்கான ஒரு அழைப்பு தான். கடவுளின் குறுக்கீடு என்றுதான் நாம் இதனை பார்க்கவேண்டும். வெகு விரைவில் தவக் காலத்தின் நிறைவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்க கூடிய நாம் ஒவ்வொருவருமே இந்த தவக்காலத்தில் பல விதமான ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொள்ளுகிறோம். இந்த ஒறுத்தல் முயற்சிகளின்  காரணம் என்ன என சிந்திக்கின்ற போது,  கடவுளோடு உள்ள உறவையும்
நாம் புதுப்பித்துக் கொள்ள முயல்கிறோம்.  நாம் தவறிழைத்த தருணங்களை எண்ணிப் பார்த்து மனம் வருந்தி ஆண்டவரிடத்தில் மன்னிப்பு வேண்டி பிரிந்து போன உறவுகளை சரிசெய்து கொள்ள முயலுகிறோம். 

கடவுளோடு பிரிந்திருந்தாலும், உறவுகளோடு விலகி இருந்தாலும்,  அதையெல்லாம் சரி செய்துகொண்டு, மீண்டும் ஆண்டவரின் உறவில்  இணைந்து வாழ்ந்திட இன்றைய நாள் நமக்கு அழைப்பு தருகிறது. 

         இந்தத் தவக்காலத்தில் நாம் ஒவ்வொருவருமே கடவுளோடு ஒப்புரவாகிட அழைக்கப்படுகின்றோம். இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு எதிராக  பலவிதமான தவறுகளைச் செய்தவர்கள் தான்.  ஆனால் தவறுகளை செய்து கொண்டே இருந்தாலும் அவ்வப்போது கடவுள் அவர்கள் வாழ்வில் அறிவுறுத்துகின்ற, அவர்களது வாழ்வின் செய்கின்ற குறியீடுகளின் அடிப்படையில் கடவுளின் வார்த்தைகளுக்கு புறம்பாக நாங்கள் நடக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டவர்களாக பல நேரங்களில் அவரிடத்தில் மண்டியிட்டு மன்னித்து வேண்டக் கூடிய மனிதர்களாக இருந்தார்கள்.  தங்களை சரி செய்து கொண்டு ஆண்டவரோடு உள்ள உறவைப் புதுப்பித்துக் கொண்டார்கள்.  அவர்கள் கடவுளோடு இருந்த போது உணவின்றி தவித்த நாட்களுக்கு மன்னா வழியாக உணவு வழங்கிய இறைவன்,  உலகம் உள்ளங்கையில் இறைவன் உரிய காலத்தில் அவர்களை தகுதி உள்ளவர்களாக மாற்றி அவர்களை பெயரிட செய்து அந்த பயிர்களை பயிரிட செய்து அதில் கிடைக்கின்ற அறைகூவல் மூலமாக அவர்களது தேவைகளை நிறைவு செய்துகொள்ள வைத்தார். எனவே,  விளைச்சலை கொடுத்தவுடன் மன்னாவை நிறுத்தினார் இறைவன்.  

                தான் தேர்ந்தெடுத்த மக்களின், தன்னை நாடி வந்த மக்களின்  துயரத்தை  எண்ணி அவர்களை உறுதிப்படுத்தி, பக்குவப்படுத்தி, வலுப்படுத்தி, அவர்களை தன்னிறைவு பெறக்கூடிய மனிதர்களாக மாற்றுகிறார் கடவுள் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு வலியுறுத்துகிறது. 

                  இன்று அதே வாசகத்தின் அடிப்படையில் தான் இன்று நாம் நமது வாழ்வை ஒப்பிட்டுப் பார்க்க அழைக்கப்படுகிறோம். நற்செய்தி வாசகத்தில் ஊதாரி மைந்தனின் நிகழ்வினை வாசிக்க கேட்டோம். 



பல நேரங்களில் கடவுளின் பராமரிப்பின் கீழ் இருக்கக்கூடிய நாம்,  பல நேரங்களில் ஊதாரி மைந்தனைப்போல கடவுளோடு உள்ள உறவில் இருந்து விலகிச் செல்லுகிறோம்.  விலகிச் சென்ற மனிதர்கள் எல்லாம் ஒரு நாள் கடவுளின் வல்லமையையும், பராமரிப்பையும்,  பாதுகாப்பையும்,  நினைந்தவர்களாக தாங்கள் செய்த குற்றம் குறைகளை எண்ணி வருந்துகிறவர்களாக மீண்டும் ஆண்டவரை நோக்கி வருகின்ற போது,  கடவுள் அவர்களை இன்முகத்துடன் ஏற்றுக் கொள்ளக் கூடியவராக இருக்கிறார். 
        ஊதாரி மைந்தனின் தந்தையைப் போல இன்முகத்தோடு, இணைத்து ஏற்றுக் கொள்ளக் கூடியவராக கடவுள் இருக்கிறார்.

       ஆனால் மனம் வருந்தி மன்னிப்பு வேண்டியவர்களாய் ஆண்டவரை நோக்கிச் செல்லக் கூடிய ஊதாரி மகன்களாக நாம் இருக்கின்றோமா என்ற கேள்வியை இன்று நமக்குள்ளாக எழுப்பி பார்ப்போம்.

              பல நேரங்களில் நாம் குற்றங்குறைகள் புரிந்திருந்தாலும், மன்னிப்பு வேண்டி ஆண்டவரை நாடிச் செல்லும் பொழுது, அவர் நம்மை ஏற்றுக் கொள்கிறார். அவர் நம்மை ஏற்றுக் கொள்கிறார் என்பதை உணர்ந்து நாம் மகிழ்கிறோம். 

             ஆனால் பல நேரங்களில் நாம் நமக்கு எதிராக குற்றம் இழைத்த சக மனிதர்கள் தாங்கள் செய்த தவறுகளை உணர்ந்து மனம் வருந்தி மன்னிப்பு வேண்டி நம்மை நோக்கி வருகின்ற போது, பல நேரங்களில் மூத்த மகனைப் போல, வந்தவர்களை ஏற்றுக்கொள்ள இயலாத மனநிலையில்தான் மனிதர்களாகிய நாம் இருக்கிறோம். 

            நம்மை இறைவன் மன்னித்து நமது குற்றம் குறைகளை எல்லாம், மன்னித்து நம்மை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என எண்ணுகின்ற நாம், பட்ட மனிதர்களை ஏற்றுக்கொள்ள தயங்குகிறோம். அப்படிப்பட்ட மனிதர்களாக நாம் இருப்போமாயின், நம்மை நாம் சரி செய்து கொள்ள,  நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள, இறைவன் இன்றைய நாளில் அழைப்பு தருகிறார். 

             புனித பயணங்களும் திருப்பயணங்களும் மேற்கொள்வதால் மட்டும், நேற்று நமது குடும்பத்திற்கு கிடைத்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. இந்த திருப் பயணங்கள் வழியாக இறைவன் உணர்த்துவது இதைத்தான். 

             நாம் எந்நிலையில் இருந்தாலும் நாம் செய்த அனைத்து குற்றங்குறைகளையும் இறைவன் மன்னித்து ஏற்றுக் கொள்கிறார். நாம் சக மனிதர்களை ஏற்றுக் கொள்ள முயலுவோம். யாரோடெல்லாம் நாம் உறவை துண்டித்து இருந்தோமோ, அவர்களோடு உள்ள உறவை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய ஆற்றலை இந்த திருப்பலியில் இறைவனிடத்தில் வேண்டுவோம். யாரையெல்லாம் வாழ்வில் ஏற்றுக்கொள்ள இயலாது என எண்ணுகிறோமோ, அவர்களையெல்லாம் ஏற்றுக் கொள்வதற்கான மனப்பக்குவத்தை இந்த திருப்பயணம் நமக்குத் தர வேண்டுமாய் செபிப்போம்.  

            திருப்பயணத்தில் நமக்காக,  நமது நலனுக்காக மட்டுமே மன்றாட்டுக்களை முன்னெடுப்பதை நிறுத்தி நம்மோடு வந்த அடுத்தவருக்காக, நம்மோடு வர இயலாதவர்களின் நலனையும் முன்னிருத்தி, இறைவனிடத்தில் வேண்டுவோம். 

                    மரித்துப்போன நமது ஆன்மாக்களுக்காக, குடும்ப உறவுகளுக்காக, நமது பங்கு உறவுகளுக்காக இன்றைய நாளில்  இறைவனிடத்தில் மன்றாடுவோம். 

                     அடுத்தவருக்கு செய்கின்ற செபமே நாம் செய்யும் மிகப்பெரிய தியாகம் என்பதை உணர்ந்து கொள்வோம். இறைவன் இதுநாள் வரை நம்மை வழிநடத்தியவர்.  இனியும் அவர் நடத்துவார். 

        நமது ஊனியல்புக்கு ஏற்ற மனிதத் தன்மையில் நாம் செய்த குற்றம் குறைகளை எல்லாம் விடுத்து இறைவனை முன்னிறுத்தி,  இறைவன் மன்னித்து ஏற்றுக் கொள்வது போல, நாம் சக மனிதர்களை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக மாறிட இறைவனிடத்தில் இறையருள் வேண்டுவோம். அதற்கு நாம் நம்மை தகுதியுடையவர்களாக மாற்றிக் கொள்ள, நாம் செய்த குற்றங்களை எண்ணிப் பார்த்து, மனம் வருந்தி மன்னிப்பு வேண்டி, இறைவனோடு உள்ள உறவில் ஒப்புரவாகுவோம். இறைவனோடு ஒப்புரவாக, நாம் சில மனிதர்களோடு, ஒப்புரவாக வேண்டும் என்பதை இதயத்தில் இருத்தியவர்களாய், சக மனிதர்களோடு ஒப்புரவாகவும், அதன்வழி இறைவனோடு ஒப்புரவாகவும், இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இந்தத் திருப்பலி வழியாக செபிப்போம்.

வெள்ளி, 25 மார்ச், 2022

செபமே நமது வாழ்வு....(26.03. 2022)



செபமே நமது வாழ்வு....


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
         
              இன்றைய வாசகங்கள் நமது செபம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. இந்தத் தவக்காலத்தில் பல நேரங்களில் நாம் தவக்கால பயிற்சியாக பல ஆலயங்களுக்கு சென்று சிலுவைப்பாதை செய்வதும், செபமாலை செபிப்பதும், புனிதப் பயணங்கள் மேற்கொள்வதும், நாம் முன்னெடுக்கின்ற தவ முயற்சிகளுள் ஒன்றாக அமைகின்றன. 

          இப்படிப்பட்ட முயற்சிகள் வாயிலாக நாம் ஆலயத்திற்கு செல்லும் பொழுது நமது செபங்கள் எப்படிப்பட்டதாக இருக்கின்றன? நமது செபங்கள் நமது மனம் தேடுவதை எல்லாம் மட்டுமே இறைவனிடத்தில் கேட்கின்ற ஒன்றாக இருக்கின்றதா? அல்லது மற்றவரின் நலனை மையப்படுத்தியதாக, அகிலத்தின் நலனை முன்னிறுத்தக் கூடியதாக, நமது அருகில் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றக் கூடியதாக நமது செபம் இருக்கின்றதா? நமது செபத்தால் நாம் நமது பெருமைகளை பேசுபவர்களாக இருக்கின்றோமா? அல்லது நம்மை தாழ்த்திக் கொண்டவர்களாய் அடுத்தவர்களின் நலனுக்காக செபிக்கக் கூடியவர்களாக இருக்கின்றோமா? சிந்திப்போம்.

ஆண்டவரிடம் அச்சம்கொள்ளுதல் ஞானத்தைத் தரும் பயிற்சி; மேன்மை அடையத் தாழ்மையே வழி.

            நீதிமொழிகள் 15:33

             இந்த இறை வார்த்தைக்கேற்ப ஆண்டவர் திருமுன் நம்மை தாழ்த்தியவர்களாக, நமது செபத்தில் ஆண்டவரைக் கண்டு கொள்ளக் கூடியவர்களாக, ஆண்டவரது சாயலாகப் படைக்கப்பட்ட நம் அருகிலிருக்கும் அடுத்தவர்களை கண்டு கொள்ளக் கூடியவர்களாக நமது செபங்கள் அமைந்திட இறையருள் வேண்டி இன்றைய நாளில் இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

வியாழன், 24 மார்ச், 2022

அர்ப்பணிப்பதே ஆண்டவருக்கு உகந்த வாழ்வு...(25.3.2022)

அர்ப்பணிப்பதே ஆண்டவருக்கு உகந்த வாழ்வு


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
           இன்று நம் தாய்த் திரு அவையானது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்ட தினத்தை கொண்டாட நமக்கு அழைப்பு தருகிறது.   இன்றைய நாளில் நாம் வாசிக்கக் கேட்ட முதல் வாசகம் நமக்காக ஒரு ஆண்மகவு அடையாளமாக தரப்படும் என்பதை எடுத்துரைத்தது.  அந்த அடையாளமாக தரப்பட்ட நபரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.  இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இவ்வுலகத்திற்கு, நமது பாவங்களிலிருந்து நம்மை மீட்க வந்தவர்.  எனவே இவரை செம்மறியின் வெள்ளாட்டுக் கிடாய்க்கு ஒப்பிட்டு இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது.

            இன்றைய  நற்செய்தி வாசகத்தில் இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அறிவிப்பை நாம் வாசிக்கக் கேட்டோம்.  ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு  அறிவிப்பு பெருவிழா இன்று நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன என சிந்திக்கின்ற போது இந்த மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதர்களும் மண்ணில் வாழ்கின்ற மற்ற மனிதர்களுக்கு  அடையாளமாகத் திகழ வேண்டும்.  நமக்கு எப்படி ஆண்டவர் இயேசு கிறிஸ்து அடையாளமாக தரப்பட்டாரோ, அவரை பின்பற்றுகின்ற நாமும் அடையாளங்களாக மாறிட வேண்டும். இயேசுவின் வாழ்வு செம்மறி ஆட்டுக் கிடாயோடு ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது. பலியிடப்படக் கூடிய செம்மறியாடாய் இயேசு தன்னை தந்தையின் விருப்பத்திற்கு கையளித்தார்.


          நாமும் அவரைப் போல நம்மை கடவுளின் விருப்பத்திற்கு, கடவுளின் வார்த்தைகளுக்கு ஏற்ப வாழக் கூடியவர்களாக நம்மையே நாம் கையளிக்க இந்த நாள் அழைப்பு தருகிறது.  இதோ! உமது திருவுளத்தை நிறைவேற்ற வருகிறேன் என்று கூறக்கூடிய மனிதர்களாக கடவுளின் திட்டத்தை அறிந்து கொண்டு, அத்திட்டத்திற்கு நம்மை முழுவதும் கையளிக்க இந்த நாள் நமக்கு வலியுறுத்துகிறது. 

        அன்று யூத சமூகத்தில் திருமணத்திற்கு முன்பாக ஒரு பெண் கருவுற்றால் பலவிதமான இன்னல்களை சந்திக்க வேண்டும் என்பதை அறிந்திருந்த நிலையிலும் கூட அன்னை மரியாள் கடவுளின் திருவுளத்திற்கு தன்னை ஆம் எனக் கூறி கையளித்தார். 

           அன்னை மரியாவிடம் காணப்பட்ட அந்த அர்ப்பணிப்பு இன்று நமது அர்ப்பணிப்பாக மாறவேண்டும். தவக்காலத்தில் பலவிதமான தவ முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்க கூடிய நாம் நம்முடைய வாழ்வை கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப அர்ப்பணிக்கக் கூடிய ஒரு வாழ்வாக மாற்றிக் கொள்ள இந்த நாள் நமக்கு அழைப்புத் தருகிறது. இறைவன் தருகின்ற இந்த அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாக நமது வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணிப்போம். அவரின் வார்த்தைகளுக்கு ஏற்ப நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இறையருள் பெற்று  இந்த வாழ்வை அடுத்தவரின் நலனுக்காக இயேசுவைப் போல கையளிக்க,  அன்னை மரியாவைப் போல ஆம் எனக் கூறி,  ஆண்டவருக்கு அர்ப்பணிக்க, அகிலத்தின் நன்மைக்காக அர்ப்பணிக்க  இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலியில் செபிப்போம்.

புதன், 23 மார்ச், 2022

நம்மைப் போலவே பிறரும்....(24.3.2022)

நம்மைப் போலவே பிறரும்....


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இயேசு பெயல்செபூலைக் கொண்டே பேய்களை ஓட்டுவதாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் பரிசேயர் கூறுவதை நாம் வாசிக்க கேட்டோம். 

 பல நேரங்களில் இந்த பரிசேயர்களை போலத்தான் நாமும் இருக்கின்றோம். ஏனென்றால், பரிசேயர்களைச் சார்ந்தவர்கள் பேய்களை ஓட்டிய பொழுது, அது கடவுளின் வல்லமையால் செய்யப்பட்டது என அவர்கள் மார் தட்டிக் கொண்டனர். அதே வல்ல செயலை இயேசு செய்கின்ற பொழுது, அவர் தீய ஆவியின் துணை கொண்டு அவ்வாறு செய்வதாக கூறினர். 

       இவ்வாறு தனக்கு ஒரு நீதி மற்றவருக்கு ஒரு நீதி என சிந்திக்கவும் பேசவும் கூடிய மன நிலையை அவர்கள் கொண்டிருந்தனர். இதே மனநிலைதான் இன்று பலநேரங்களில் நம்மிடமும் இருக்கின்றது. 

              பல நேரங்களில் நாம் ஒரு காரியத்தை செய்தால் அது மிகவும் சரி எனவும், அதே காரியத்தை மற்றவர்கள் செய்தால் அது கண்டிக்கத்தக்கது, தவறு எனவும் சொல்லக்கூடிய மனப்பாங்கு இன்று மனிதர்களின் மத்தியில் பரவலாக அதிகரித்துக் கொண்டே வருகின்றது. 

         இத்தகைய இரட்டை மனநிலையினைக் கொண்ட நிலைப்பாட்டை களைந்து, நேரிய செயல்களை நாமும் செய்ய இறைவன் இன்றைய நாளில் அழைப்பு தருகின்றார். 

      இன்றைய இறைவார்த்தையின் வழியாக இறைவன் நம்மோடு பேசவிருக்கின்ற செய்தி என்னவென சந்திக்கின்ற பொழுது,      தவக்காலம் என்பது நமது செயல்களை நாமே சீர்தூக்கிப் பார்த்து, சரிப்படுத்திக் கொள்ள அழைப்பு தருகின்ற ஒரு காலம். இத்தவக்க்காலத்தின் அடிப்படையில், நாம் வாழுகின்ற இந்த உலகத்தில்,  நாம் செய்கின்ற செயல்கள் குறித்து சிந்தித்துப் பார்ப்போம். பிறரை குற்றம் சாட்டிய தருணங்களை நினைத்து பார்ப்போம். 

           மற்றவர் நம்மை குறை சொல்லும் பொழுது ஏற்றுக் கொள்ளாத நாம், மற்றவரை குற்றவாளி என தீர்ப்பிட்டுக் கொண்டே இருக்கிறோம். மற்றவர்களை குற்றவாளி என குறை சொல்லும் போதெல்லாம் நாம் குற்றவாளியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது வெள்ளிடை மலை. 

            இன்று  நான் செய்தால் சரி,  மற்றவர் செய்தால் தவறு என்று சொல்லக்கூடிய சுயநலமான நிலைப்பாடு நம்மிடம் இருக்கிறது என்றால் அதனை சரி செய்து கொண்டு, நம்மைப் போலவே மற்றவர்களும் சில நேரங்களில் தவறு இழைக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டு, தவறிழைத்தவர்களை மன்னிக்கக் கூடிய மனநிலை உடையவர்களாக வாழ இன்றைய நாளில் இந்த திருப்பலி வழியாக தொடர்ந்து இணைந்து செபிப்போம்.

செவ்வாய், 22 மார்ச், 2022

இறைவனது விருப்பம் எது?...(23.3.2022)

இறைவனது விருப்பம் எது?


இறைவனின் செயல் அன்புக்குரியவர்களே!...


 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் 


திருச்சட்டத்தை அழிப்பதற்காக இயேசு இந்த உலகத்திற்கு வரவில்லை. மாறாக, திருச்சட்டத்தை நிறைவுசெய்வதற்காகவே இந்த உலகத்திற்கு வந்ததாக, இயேசு சொல்கிறார். 


திருச்சட்டம் பற்றிய இயேசுவின்  விளக்கம் என்பது நாம் எதைச்செய்தாலும் கடவுளின் பார்வையில் இருந்து செய்ய வேண்டும். அவரின் திருவுளத்திற்கு ஏற்றதா? என்று ஆராய்ந்து செய்ய வேண்டும். இதைச்செய்தால், நாம் திருச்சட்டத்தை கடைப்பிடிக்கிறோம், என்பது இயேசுவின் விளக்கம். 



விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களை தோரா என்றும் திருச்சட்ட நூல்கள் எனவும் யூதர்கள் கருதுகின்றனர்.


திருச்சட்டம் என்கிற மோசேயின் சட்டத்தினை, கடவுள் கொடுத்திருந்தாலும், அதனுடைய முழுமையான புரிதல், அதனை விளக்கக்கூடிய பரிசேயர்களுக்கும், சதுசேயர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும் இல்லை. அவர்கள் அதனை தவறாகத்தான் மக்களுக்குப் போதித்தார்கள். அதனுடைய உண்மையான அர்த்தத்தை போதிக்கவில்லை. போதிக்கவில்லை என்பதைக்காட்டிலும், அவர்கள் அதை புரிந்து கொள்ள இயலவில்லை, என்பதுதான் உண்மை. ஆனால், இயேசு அந்த புரிதலை தனது போதனையின் மூலமாக முழுமைப்படுத்துகிறார். அந்த முழுமையை, உண்மையென பரிசேயர்களாலும், மற்றவர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


எந்த ஒரு கோட்பாடும் முழுமையாக, உடனடியாக புரிந்து கொள்ள முடியாதது. கொஞ்சம், கொஞ்சமாக காலப்போக்கில் அதனை நாம், நமது அனுபவத்தில் முழுமையாகப் புரிந்து கொள்கிறோம். அதேபோலத்தான், 

துன்பப்படுகிற மனிதனைக் கண்டு அவனது துன்பத்தை போக்குகிற முயற்சியில் நாம் ஈடுபடுவது முறையா அல்லது அவர்கள் துன்பப்படுகிறார்கள் என எண்ணியவர்களாய் நகர்ந்து சென்று விடுவது முறையா? என சிந்தித்துப் பார்ப்போம்... இறைவனின் விருப்பம் மனிதனின் தேவையை பூர்த்தி செய்வது, என்பதாகத்தான் இருக்கும். அதுதான் கடவுளின் பார்வையில் சரியானதாகவும் இருக்கும். அதை இயேசு செய்வதற்கு அழைக்கிறார்.


அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவி கொடுத்து நமது வாழ்வை ஆண்டவர் இயேசுவின் மனநிலையோடு நகர்த்துகின்றதாக மாற்றிக்கொள்ள இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து செபிப்போம்.

திங்கள், 21 மார்ச், 2022

அன்பை பகிர்ந்து வாழ்ந்திட....(22.3.2022)

 அன்பை பகிர்ந்து வாழ்ந்திட....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்ல மனம் வேண்டும் நாடு போற்ற வாழ என்று முன்னோர்கள் கூறியிருக்கின்றார்கள். 
நல்ல மனம் உடையவரின் கண்களில் ஆனந்தம் மிளிரும்.
நல்ல மனம் உடையவரால் இந்த உலகம் எழில் நிறைந்ததாய் காணப்படும். 
நல்ல மனம் உடையவரால் இந்த பூமி அழகாய் சிரித்துக் கொண்டிருக்கும்.

ஆம்! அன்புக்குரியவர்களே!
இன்றைய நற்செய்தி வாசகமானது நாம் வாழ நமக்காக படைக்கப்பட்ட இந்த உலகத்தை நமது மேன்மையான எண்ணங்களால் மகிழ்விக்கவும், நான் எனும் தன்முனைப்பை தவிடுபடியாக்கி
 நாம் என்னும் நல்லுறவை வளர்த்துக் கொள்ள நமக்கு அழைப்பு தருகிறது.

உயர்ந்திருந்தாலும் குறைந்திருந்தாலும் ஒரே கருத்தில் இணைக்கப்பட்டுள்ளன நமது விரல்களைப் போல ஆண்டவனால் படைக்கப்பட்ட நாமும் கூட பணத்தால், பதவியால், படித்துப் பெற்ற பட்டங்களால், சமூக அந்தஸ்தால் உயர்ந்திருந்தாலும் குறைந்திருந்தாலும், நாம் அனைவரும் அன்பு தந்தை இறைவனால் படைக்கப்பட்ட அன்பு மக்களே என்பதை உணர்ந்துகொள்ள இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். 


வண்ணங்கள் இணைந்தால் வானவில் உண்டு.

இதயங்கள் இணைந்தால் அன்பு உண்டு.

இதழ்கள் இணைந்தால் மலர் உண்டு.

வண்டுகள் இணைந்தால் தேன் உண்டு. 


ஆண்டவரின் சாயலில் படைக்கப்பட்ட மனிதர்கள் நாம் ஒவ்வொருவரும் இணைந்து வாழ அழைக்கப்படுகிறோம்.

ஆண்டவர் திருமுன் அல்லும் பகலும் அமர்ந்து

 ஆண்டவரே!

 எனக்கு அதைக் கொடு! எனக்கு இதைக் கொடு! என்று சதாகாலமும் நமது கண்ணுக்கு முன்பாக தெரிகின்ற காரியங்களை மட்டுமே ஆண்டவரிடத்தில் கேட்டுக் கொண்டிருக்கின்ற
நாம், ஆண்டவர் நம்மிடம் விரும்புகின்றன மேலான காரியமான அன்போடு இணைந்த மன்னிப்பையும், அன்போடு இணைந்த அரவணைப்பையும், நம்மில் வளர்த்து இருக்கின்றோமா என்பதை சிந்திப்போம்.

இந்த உலகில் மன்னிப்பு வழங்க தயாராக இருப்பவர்களே மிகத் திடமானவர்கள். மன்னிக்க முடியாத தவறு என்று ஒன்று இந்த உலகத்தில் இல்லவே இல்லை. பிறரது குற்றங்களை நாம் மனதார மன்னிக்கும் போது, நமது உள்ளத்திற்கு நாமே விடுதலை கொடுத்து கொள்கிறோம். 


இரக்கமுடையோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்” என்று மத்தேயு 5: 7 ல் பார்க்கிறோம். இயேசு கற்பித்த  செபத்தில், நாம் மற்றவர்களை மன்னிப்பதுபோல, நமது பாவங்களை கடவுள் மன்னிக்கிறார் என்பதற்கு அழுத்தம் கொடுக்கிறார். அதைத்தொடர்ந்து மீண்டும் பாவங்களை மன்னிப்பதைச் சொல்கிறார். ”மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்” மத்தேயு 6: 15.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கப்பட்ட உவமையில் பெரிய கடன் தொகையைக் கொண்டவன், அரசனிடம் என் கடனையெல்லாம் மன்னித்து விடுங்கள் என்றெல்லாம் கேட்கவில்லை. ஆனால் அரசனோ பெருந்தன்மையுடன் அவன் மேல் கருணை கூர்ந்து அவனது கடனையும், தண்டனையையும் நீக்குகிறார். அவனுக்கு விடுதலைக் கொடுக்கிறார். இவனுடைய விடுதலை கண்டிப்பாக அடுத்தவருக்கு விடுதலையைக் கொடுக்க வேண்டுமே தவிர அடுத்தவர்களை அடிமைப்படுத்தக் கூடாது. இவனின் மிகப்பெரிய கடன்தொகையை (குற்றத்தை) மன்னித்து, அரசன் இவனிடமிருந்து எதிர்பார்ப்பதும் கருணையையும், மன்னிப்பையுமே! அதை அவன் செய்ய தவறுகிறான் எனவே தண்டனைக்கு உள்ளாக்கப் படுகிறான்.

அன்பும், இரக்கமும், மன்னிப்பும் இந்த உலகத்தின் வளர்ச்சியில் நம்மை வழிநடத்திச் செல்லக் கூடியவை. இவற்றை நமது ஆடையாக அணிந்து கொண்டு வெறுப்பு என்னும் தடைக்கல்லை படிக்கல்லாக மாற்றி, ஆண்டவரை சந்தித்து அன்பை பகிர்ந்து வாழ்ந்திட இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

ஞாயிறு, 20 மார்ச், 2022

DN. J. SAHAYA RAJ PRISTLY ORDINATION

                        DN. J. SAHAYARAJ
PRISTLY ORDINATION
DATE: 08.05.2022
TIME : 5:30 P.M.
PLACE: ST. MARY'S CATHEDRAL, TRICHY.
FIRST THANKSGIVING MASS
DATE : 09.05.2022
TIME : 10:30 A.M.
PLACE : ST. JAMES'CHURCH, AMMAPETTAI
LIVE ON FIRST THANKGIVING HOLY MASS
https://youtube.com/c/AllBeUnited

நம்பிக்கையே.... உதாரணமாகிட வழி...(21.3.2022)

நம்பிக்கையே.... உதாரணமாகிட வழி...

இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இயேசு தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்தில் போதிக்கிறார். நாசரேத் என்பது இயேசுவின் சொந்த ஊர். இயேசுவின் போதனையைக்கேட்டு அவருடைய சொந்தமக்கள் இயேசுவிடத்தில் கோபப்படுகிறார்கள்.


ஏன் இயேசுவின் மீது கோபம் கொண்டார்கள்? என சிந்திக்கின்ற போது ...  சீதோனும், சிரியாவும் புற இனத்துப்பகுதிகள். இயேசு பிறஇனத்தவரை உயர்த்திப்பேசுவதுதான் மக்களுக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில், யூதர்கள் தாங்கள் தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம், கடவுள் பார்வையில் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தவர்கள். எனவே, யூதர் அல்லாத மற்றவர்களை அவர்கள் இழிவாகக்கருதினர். இப்படித்தாங்கள் இழிவாகக்கருதும் பிறஇனத்தவரை, யூதரான இயேசு, புகழ்ந்துகூறியதை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. எனவே, அவரை வெளியே துரத்தி, மலைஉச்சியிலிருந்து கீழே தள்ளிவிட முயன்றனர். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு எதற்காகப் பிற இனத்தவரை உயர்த்திப்பேச வேண்டும்? எதற்காக அதை யூதர்களுக்கு மத்தியில் சொல்ல வேண்டும்?  ஏன் இயேசு சாரிபாத்தில் வாழ்ந்த கைம்பெண்ணையும், நாமானையும் உதாரணமாகச்சொல்கிறார் என்று சிந்தித்தால்  இவர்கள் இரண்டுபேருமே பிறஇனத்தவர்கள். ஆனால், இவர்கள் இருவரிடத்திலும் காணப்பட்ட  பொதுவான பண்பு: அவர்களின் நம்பிக்கை. 


நாடு முழுவதும் பஞ்சம் தலைவிரித்தாடிய போது கைம்பெண்ணிடம் மற்றவர்களுக்குக்கொடுக்கக்கூடிய அளவுக்கு மாவோ, எண்ணெயோ இல்லை. அதுதான் அவளிடம் கடைசியாக இருந்தது. இருக்கிற மாவும், எண்ணெயும் முடிந்தவுடன் அவளும், அவளுடைய பிள்ளையும் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான். ஆனாலும், எலியாவின் வார்த்தைகளை நம்பி, இருந்ததையும் எலியாவோடு பகிர்ந்துகொள்கிறார்.


 அதேபோல, நாமான் பெரிய படைத்தளபதி. செல்வந்தன். இருந்தாலும், எலிசாவின் வார்த்தைகளை நம்பி, அவருக்குப்பணிகிறார். அவர் சொன்னதைச்செய்கிறார். தொழு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நலமடைகிறார். 

நம்பிக்கையே இவர்கள் இருவரும் இயேசுவால் உதாரணம் கட்டப்படுவதற்கான காரணம். 

நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவருமே கடவுளின் பார்வையில் சரி சமமானவர்கள் என்பதை உணர்ந்தவர்களாய் பாகுபாடுகளைக் கடந்து நம்பிக்கையால் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்பதை உணர்ந்து வாழ இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து ஜெபிப்போம் ...

சனி, 19 மார்ச், 2022

மன மாற்றமே நம் மாற்றத்திற்கான முதல் படி ....(20.03.2022)

மன மாற்றமே நம் மாற்றத்திற்கான முதல் படி 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவர்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
 
         ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு  கடலின் அருகில் ஒரு மலை இருந்தது.  கடலிலிருந்து எழும்பிய அலைகள் மலையின் மீது மோதிக்கொண்டேயிருந்தன. மலை சொன்னது, நான் உறுதியானவன். என் மீது மோதாதே  என்று. மோதுவது எங்கள் இயல்பு.  நாங்கள் இப்படித்தான் மோதிக்கொண்டே இருப்போம் எனக் கூறியவாறு மோதிக்கொண்டே இருந்தன.  ஈராயிரம் ஆண்டுகள் கடந்த நிலையில் இங்கு அலைகள் இருந்தன. ஆனால் மலை இல்லை. 


மலையைப் போல உறுதியான  இதயம் படைத்த மனிதர்களுக்கு மத்தியில், ஆண்டவர் மாற்றத்திற்கான விதையை விதைக்க கூடியவராக இந்த மண்ணில் இருந்தார்.  பல விதமான சட்ட திட்டங்களை உருவாக்கிக் கொண்டு மனிதர்களை மனிதர்களே அடிமைப்படுத்துகின்ற செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, சட்டங்களின் பெயரால் மக்கள் நசுக்கப்பட்ட போது, ஆண்டவர் இயேசு கிறிஸ்து, சட்டங்களை விட மனித நேயமே முதன்மையானது என்பதை வலியுறுத்தக் கூடிய நபராக சமூகத்தில் நடக்கின்ற அவலங்களை எல்லாம் கண்டும் காணாதவராக இல்லாமல்,  கண்டு அதனை எதிர்த்து குரல் எழுப்பக் கூடிய ஒரு நபராக தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டே இருந்தார் என்பதை இயேசுவின் வாழ்வு நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

       சமூகத்தில் நடக்கும் அனைத்து விதமான துன்பங்களையும் கண்டும் காணாமல் இருப்பவர் அல்ல நாம் பின்பற்றுகின்ற இறைவன். அநீதிகளை காணுகின்ற போதெல்லாம் அதனை எதிர்த்து குரல் கொடுக்க கூடியவராக, அதனைக் களைவதற்கான செயலில் ஈடுபடக் கூடியவராக இருப்பவர் நம் கடவுள் இருக்கிறார்  என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன.

  வலியுறுத்துவதோடு மட்டும் அல்லது நாமும் அந்த இயேசு கிறிஸ்துவை போல இந்த சமூகத்தில் அவலங்கள் அரங்கேறுகின்ற போதெல்லாம்,  அதனை சரி செய்ய கூடியவர்களாக சரிசெய்வதற்கான முயற்சியில் ஈடுபடக் கூடியவர்களாக இருக்க இந்த நாள் அழைப்பு தருகிறது. 

     இன்றைய முதல் வாசகத்தில் அடிமைத்தனத்தில் இருந்த 
இஸ்ரயேல் மக்களின் அழுகுரலை இறைவன் கேட்கிறார். கேட்ட  இறைவன் தன் மக்கள் படும் துன்பத்தை அறிந்தவராய் அத்துன்பத்தில் இருந்து அவர்களை விடுவிக்க கூடிய செயலில் ஈடுபடக் கூடிய ஒரு மனிதராக துன்பத்தில் வாடும் மக்களை துன்பத்தில் இருந்து மீட்டு வருவதற்காக மோசேயை அனுப்புகிறார். 
பலவிதமான தயக்கம் மனதில் இருந்த போதும், மோசேயை அனுப்புகிறார்.  ஆண்டவரின் அழைப்பைக் கேட்டு அவரது வார்த்தைகளை வாழ்வாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, மோசே எகிப்தை நோக்கி பயணப்படலாம் என எண்ணினாலும் அவரின் உள்ளத்தில் பலவிதமான கேள்விகள் அரங்கேறின. 

          யாரை நம்பி நான் செல்வது? எந்த கடவுள் உன்னை அனுப்பினார் என கேட்டால் நான் எதை சொல்வது என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது. என்னை நம்பாத மக்களுக்கு அவர்கள் நம்பும்படியாக நான் என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது.
கேள்விகளை இறைவனிடத்தில் எழுப்பினார். இறைவனும் தன்னை இருக்கின்றவராக இருக்கின்றவர் நான் என்பதை வலியுறுத்தினார் ‌. அதுபோலவே ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள், என வழி வழியாக இந்த மக்களை வழி நடத்திக் கொண்டிருப்பவர் தான் என்பதை மோசேக்கு அறிவுறுத்தி, நான் தான் உன்னை இம்மக்களிடம் அனுப்புகிறேன் எனச் சொல்லி, அந்த அடிமைத்தனத்திலிருந்த மக்களின் துயரத்தைக் கண்ட இறைவன், அவற்றைத் துடைப்பதற்கான முயற்சிக்கு மோசேயை அனுப்புவதை முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. ஆனால் மோசேயால் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வரப்பட்ட மக்கள் அனைவருமே தங்களை மீட்டு வந்த இறைவனை முழுமையாக நம்பி, அவரோடு உள்ள உறவில் நிலைத்திருந்தார்களா என எண்ணுகின்ற போது, அவர்களின் வாழ்வு எதிர்மறையாக இருந்தது என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு வலியுறுத்துகின்றது. 

               திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய கடிதத்தில் அந்த மக்களுக்கு பலவிதமான  ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின்    போதனைகளை அறிவுறுத்தி இருந்த நிலையிலும், அவர்கள் பல நேரங்களில் நினைவுறுத்திய இறை வார்த்தைகளை எல்லாம் புறம் தள்ளிவிட்டு, தங்கள் மனம் போன போக்கில் வாழக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களின் செயலை நயமாக வரலாற்றுப் பின்னணியோடு, பவுல் சுட்டிக் காண்பிக்கின்றார். 
அன்று எகிப்தில் இருந்து அழைத்து வரப்பட்ட மக்கள் அனைவரையும் இறைவன் ஒன்று என கருதினார். 

              எப்படி உதிக்கின்ற ஒரு சூரியன், நல்லோர் தீயோர் எனப் பாராமல் அனைவர் மீதும் தனது ஒளிக்கீற்றை மனிதர்கள் மீது வீசுகிறதோ, அதுபோல இவரையும் இறைவன் அழைத்து வந்தார். 

அழைத்து வரப்பட்ட மக்கள் அனைவருமே ஆண்டவரின் வார்த்தைக்கு ஏற்ப தமது வாழ்வை அமைத்துக் கொண்டார்களா? என்று பார்க்கும் போது, அவர்களில் சிலர் மட்டுமே ஆண்டவரது வார்த்தைக்கு ஏற்ப தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் என்பது வெள்ளிடை மலையாகப் புலப்படுகிறது. 

              இத்தகைய ஒரு நிலை தான் இன்று கொரிந்து நகர மக்களின் வாழ்விலும் இருக்கிறது என்பதைப் பவுல் எடுத்துரைக்கிறார். இவ்வாறு எடுத்துரைப்பதன் வழியாக சமூகத்தில் இறைவன் விரும்பாத வகையில் தமது வாழ்வை அமைத்திருக்கக்கூடிய மனிதர்களின் குற்றங்களை சுட்டிக் காண்பித்து, நாள்தோறும் மனமாற்றத்தை பெற்றவர்களாய், மனமாற ஒரு அழைப்பினை தருகிறார். இந்த மனமாற்றத்தையே இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு வலியுறுத்துகிறது. 

          பலன் தரும் என்ற எண்ணத்தோடு வைக்கப்பட்ட ஒரு அத்தி மரம், பருவ காலம் வந்த பிறகும் கூட நல்லதொரு கனியைத் தராத காரணத்தினால், இந்த மரத்தினை வெட்டி விட வேண்டும் என எண்ணியதோடு, மீண்டும் ஒரு வாய்ப்பினை அந்த மரத்திற்கு கொடுப்போம். மரத்தினை சுற்றிக் கொத்தி, உரமிட்டு, நீர்ப் பாய்ச்சுவோம். கண்டிப்பாக இன்னொரு வருடத்தில் இந்த மரம் கனி தரும் என எதிர்பார்ப்போம் என்ற எண்ணத்தோடு, அத்திமர உவமையை இறைவன் பயன்படுத்தி இந்த சமூகத்தில் இறைவன் அவரது வார்த்தைகளுக்கேற்ப நாம், நமது வாழ்வை அமைத்துக் கொள்ளாத நேரங்களில் எல்லாம் அவர் அத்தி மரத்திற்கு ஒரு வாய்ப்பைத் தந்தது போல, நமக்கும் ஒரு வாய்ப்பை தருகிறார். 

         நம்மை நாம் சரி செய்து கொண்டவர்களாய், ஆண்டவரின் வார்த்தைகளை வாழ்வாக மாற்றிக் கொண்ட மனிதர்களாக இந்த சமூகத்தில் நாம் மாறிட இன்னொரு வாய்ப்பை இறைவன் தருகிறார். அது போல தரப் பட்டது தான் இந்த தவக்காலம். 

      தவக்காலம் என்பதே நாம் நம்மை குறித்தும், நமக்கும் - கடவுளுக்கும், நமக்கும் நமது வார்த்தைகளுக்கும் நமது செயல்களுக்கும் நமக்கும் பிறருக்கும் இடையேயான உறவை குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும். அதில் இருக்கின்ற தேவையற்றவற்றை எல்லாம் விலக்கிவிட்டு, நம்மை நாம் சரி செய்து கொண்டு, மீண்டும் நல்லதொரு உறவில் வளர தரப்பட்டது தான் இந்த தவக்காலம். 

             இந்தத் தவக்காலத்தில் நம்மை குறித்தும், நமது செயல்களை குறித்தும், நமது அருகில் இருக்கின்ற நபர்களை குறித்தும் சந்திக்கின்ற நாம், நல்லதொரு மனமாற்றத்தை உள்வாங்கிக் கொண்டு, நல்லதொரு மனமாற்றத்தை நமக்குள் உருவாக்கிக் கொண்டு, ஆண்டவர் விரும்பும் மக்களாக, கீழ்ப்படியக் கூடிய மக்களாக அவரைப் போலவே இந்த சமூகத்தில் அரங்கேறுகின்ற அநீதிகளை எல்லாம் எதிர்த்துக் குரல் எழுப்புகிற மக்களாக இந்த சமூகத்தில் வாழ வேண்டும் என்பதை இறைவன் இன்றைய நாளில் நமக்கு வலியுறுத்துகிறார். 

           இறைவன் வலியுறுத்துகின்ற இந்த வாழ்வுக்கான பாடத்தை உணர்ந்து கொண்டவர்களாக, வாழ்வில் துன்பங்கள் வருகிற போதெல்லாம்,  அந்தத் துன்பங்களை எல்லாம் கடந்து, நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துகின்ற இறைவனின் இருப்பை உணர்ந்து கொண்டவர்களாக எப்படி இஸ்ரயேல் மக்களை பகலில் மேகத்தூணாகவும், இரவில் நெருப்பு தூணாகவும் இறைவன் இருந்து வழிநடத்தினாரோ, அதுபோல நாம் நமது வாழ்விலும் துன்பங்களையும் துயரங்களையும் சந்திக்கின்ற போது, இந்து சமூகத்திலும் துன்பங்களையும் துயரங்களையும் அவலங்களையும் சந்திக்கின்ற போதெல்லாம் இறைவன், நம்மை வழி நடத்துகிறார் என்பதை உணர்ந்து கொண்டவர்களாக, நல்லதொரு மனமாற்றத்தை நமக்குள் உருவாக்கிக் கொண்டு, ஆண்டவரின் வார்த்தைகளை வாழ்வாக்கிக் கொண்டு இந்த சமூகத்தில் பயணம் செய்ய இறைவன் இன்றைய நாளில் நமக்கு அழைப்பு தருகிறார். இறைவனது அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாய் நல்லதொரு மனமாற்றத்தை நமக்குள்ளாக விதைத்துக் கொள்ள இந்த நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்றவர்களாய் இனி வருகின்ற இயேசுவின்  இறப்பை, உயிர்ப்பை எதிர்கொள்ளவிருக்கின்ற நாம், இதுநாள் வரை நம்மை நாம் மாற்றிக் கொள்ளாதே இருந்து இருப்போமாயின், இனி நம்மை மாற்றிக் கொண்டு, தவறான நமது செயல்களை மாற்றிக் கொண்டு, ஆண்டவருக்கு உகந்த செயல்களை நமது செயல்களாக மாற்றிட இறையருள் வேண்டி தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக ஜெபிப்போம்.

வெள்ளி, 18 மார்ச், 2022

வளனாரின் வாழ்வு காட்டும் வாழ்க்கை பாடம்...(19.3.2022)

வளனாரின் வாழ்வு காட்டும் வாழ்க்கை பாடம்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
 இன்று நம் தாய் திரு அவையானது  புனித வளனாரின் திருநாளை  சிறப்பிக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. 
 'யோசேப்பு' என்றால் 'அவர் சேர்ப்பார்,' '(கடவுள்) சேர்த்துக் கொடுப்பார்' என்று பொருள் தரப்படுகின்றது.

யோசேப்பைக் குறித்து விவிலியத்தின் துணை கொண்டு நாம் ஆராய்கின்ற போது அவர் ஒரு நேர்மையாளர், நீதிமான் என விவிலியம் சுட்டிக்காட்டுகிறது.

கனவில் இறைவன் தூதரோடு உரையாடியவர் இவர். 
இறைவனின் தூதர் கூறிய வார்த்தைகளுக்கு ஏற்ப தன் வாழ்வை அமைத்துக் கொண்டவர் இவர். 
தன் வாழ் நாள் முழுவதையுமே அன்னை மரியாவையும் இயேசுவையும் பாதுகாத்து பராமரிக்கின்ற பணியிலேயே செலவழித்த ஒரு நபர் இந்த வளனார் அவர்கள்.  திருக்குடும்பத்தின் தலைவராக விளங்குகின்ற இந்த வளனாரின் வாழ்வோடு நமது வாழ்வை ஒப்பிட்டுப் பார்க்க இன்றைய நாள் நமக்கு அழைப்பு விடுக்கிறது. 

    ஒரு குடும்பம் என்றால் அங்கு தாயும் தந்தையும் இன்றியமையாதவர்கள். இருவரின் தியாகமும்  ஒரே தராசில் வைத்துப் பார்க்கின்ற போது அது சரிநிகராகவே இருக்கும்.  ஆனால் பெரும்பாலான நேரங்களில் தாய்மார்களின் தியாகமானது பலரால் போற்றப்படுகிறது. தந்தையர்களின் தியாகமானது மௌனம் ஆக்கப்படுகிறது.

   மனித வாழ்வில் பொதுவாக கூறுவார்கள், ஒரு தந்தையானவர் குடும்பத்தில் உள்ள குழந்தைகளை கண்டிக்கின்ற போது தாயானவள், பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தனக்குத்தான் வலியும் வேதனையும் தெரியும் எனக் கூறி குழந்தைகளுக்கு ஆதரவாக தனது குரலோசையை எழுப்புவார்.  ஆனால் உண்மையில் பார்க்கின்ற போது தியாகத்தில் இருவரும் குறைந்தவர்கள் அல்ல. தாயையும் சேயையும் மருத்துவமனைக்குள் அனுப்பி விட்டு, பல  தந்தைமார்கள் இரண்டு உயிர்களும் இறைவனின் அருளால் பாதுகாக்கப்பட வேண்டுமென அவர்கள் மனம் படுகின்ற வேதனையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். தங்களின் தியாகங்களை தங்களுக்குள்ளாக புதைத்துக் கொண்டு,  தங்களின் தேவைகளை சுருக்கிக் கொண்டு, தன்னை நம்பி வந்த மனைவியின் எண்ணங்களையும், மனைவியின் தேவைகளையும்,  தங்களுக்கு இறைவனின் அருளால் கிடைத்த குழந்தைகளின் தேவைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதில் தங்களையே கரைத்துக்கொள்ளக் கூடிய தந்தைமார்கள் பலர் உண்டு.  அவர்களைக் குறித்து நினைவுகூர இந்த நாள் நமக்கு அழைப்பு விடுக்கிறது. புனித வளனார் திருக்குடும்பத்தின் தலைவராக இருந்து, இயேசுவை வளர்த்தெடுத்தது போல, நாமும் இந்த சமூகத்தில் தந்தைக்குரிய பாங்கோடு, நம்மைச் சுற்றி உள்ளவர்களையும், நம்மைச் சார்ந்தவர்களையும் வளர்த்தெடுக்க கடமைப்பட்டு இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டவர்களாக, மாறிட இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது. 

    தவக்காலம் என்பதே நம்மைக் குறித்து நாம் சிந்திப்பதற்கும்,   நமக்கும் கடவுளுக்கும் இடையேயான உறவை சரிசெய்து கொள்வதற்குமான ஒரு அழைப்பை தருகின்ற காலம் என்பதை உணர்ந்தவர்களாக, சற்று நிதானமாக, நமது வாழ்வில் நமக்காக நமது தந்தையர்கள், நமது பெற்றோர்கள் செய்கின்ற தியாகத்தை நினைவு கூர்வோம். அதுபோல நாம் செய்து கொண்டிருக்கின்ற தியாகங்களை நினைவு கூர்வோம். நமக்காக தியாகங்களை செய்கின்றவர்களை நினைவு கூர்வோம். அவர்களுக்காக செபிக்க இந்த நாளில் நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்.  வளனாரின் வாழ்வு நமக்கு நீதியோடும், நேர்மையோடும் தங்கள் வாழ்வை அடுத்தவருக்கு அர்ப்பணிக்கக் கூடியவர்களாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது என்பதை உணர்ந்து கொண்டவர்களாக,  நமது வாழ்வை அடுத்தவருக்கான வாழ்வாக மாற்றிட இறையருள் வேண்டி தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம்.

வியாழன், 17 மார்ச், 2022

மாற்றம் அது நமக்குள் நிகழ வேண்டும் ...(18.3.2022)

மாற்றம் அது நமக்குள் நிகழ வேண்டும் 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
        இன்று கொடிய குத்தகைக்காரர் உவமையை நாம் வாசிக்க கேட்டோம். இந்த உவமை வாயிலாக இறைவன் நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம்: 

       இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் இந்த அழகிய வாழ்வை கொடுத்திருக்கிறார்.  இந்த வாழ்வில் பல நேரங்களில் நாம் நமது சுயநலத்தை மட்டும் முன்னிறுத்தி, பலவிதமான தீமைகளை மற்றவருக்கு இழைக்கிறோம்.  வாழ்வைக் கொடுத்த இறைவனை மறந்து போனவர்களாய்,  மற்றவர்களுக்கு தீமையை கொடுக்கிறோம்.  நமது நலனுக்காக நமக்கு இந்த  வாழ்வை தந்த இறைவனது மதிப்பீடுகளை மறந்த மக்களாக வாழுகின்றோம்.  ஆனால் இறைவன்  நாம் மனமாற்றம் பெற வேண்டும் என பல வழிகளில் நமக்கு அழைப்பை தருகின்றார்.  அந்த அழைப்பை உணர்ந்து கொண்டு, நல்லதொரு மன மாற்றத்தை நாம் பெற்றுக்கொண்டு வாழ வேண்டும் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன. 

       இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்ட திராட்சை தோட்டம் என்பது நமது வாழ்வை குறிக்கிறது. இஸ்ரயேல் மக்கள் தங்கள் வாழ்வைத் திராட்சை தோட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தார்கள் என எசாயா  5: 7ல் நாம் வாசிக்கின்றோம். 

     படைகளின் ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே என எசாயா  5 ஆம் அதிகாரம் 7 ஆம் வசனம் குறிப்பிடுகிறது.  இந்த இஸ்ரயேல் மக்கள் தான் கட்டுவோரால் புறக்கணிக்கப்பட்ட கல். 

                  யோசேப்பு ஆட்சி அதிகாரத்தில் இருந்த 
போது எகிப்தில் சென்று குடியேறியவர்களை எண்ணிக்கையில்  மிகுதியாகிறார்கள் என்று எண்ணிய எகிப்தியர்கள், நம்மை விட வலிமை வாய்ந்தவர்களாக இவர்கள் மாறி விடக் கூடும் என்ற எண்ணத்தோடு அவர்களை அடக்கி ஆளக் கூடிய பணியினை  செய்தார்கள்.  புறக்கணிக்கப்பட்ட ஒரு கல்லாக மாறிப் போனார்கள். இந்த புறக்கணிக்கப்பட்ட மக்களையே இறைவன் தனது திட்டத்திற்கு பயன்படுத்துகிறார். அவர்களை மீட்டு வருகிறார். அவர்களை மூலைக் கல்லாக மாற்றுகிறார். உதறித் தள்ளப்பட்ட மக்களை கட்டிடத்தின் மூலைக்கல்லாக மாற்றக் கூடியவராக இயேசு இருக்கின்றார்.   நாமும் பல நேரங்களில்  ஆண்டவரின் வார்த்தைகளுக்கு ஏற்ப நமது வாழ்வை அமைத்துக் கொள்ளாது, நமது செயல்பாடுகளை நமது மனம் போன போக்கில் அமைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.  அதனையெல்லாம் நினைத்துப் பார்த்து நம்மை நாம் சரி செய்து கொள்ளவே இந்த தவக்காலம் நமக்கு தரப்படுகிறது.  இதனை உணர்ந்து கொண்டவர்களாக நல்லதொரு மன மாற்றத்தை நாம் பெற்றவர்களாய், ஆண்டவரை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன. வாசகங்கள் வலியுறுத்தும் வாழ்க்கைப் பாடத்தை உணர்ந்தவர்களாக, தவக்காலத்தை தகுந்த காலம் என எண்ணி, நல்லதொரு மன மாற்றத்தை நாம் நமக்குள் உருவாக்கிக் கொண்டு, ஆண்டவர் கொடுத்த இந்த அழகிய வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொண்டு, அடுத்தவர் நலனை பாதுகாப்பதும், ஆண்டவரின் வார்த்தைகளின் படி வாழ்வை அமைத்துக் கொள்வதுமே, நமது தலையாய கடமை என்பதை உணர்ந்தவர்களாய் செயல்பட  இறையருள் வேண்டி தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம்.

புதன், 16 மார்ச், 2022

நாம் வாழும் இச்சமூகத்தின் மீது அக்கறை கொண்ட மனிதர்களாக நாம் மாறிட ...(17.3.2022)

நாம் வாழும் இச்சமூகத்தின் மீது அக்கறை கொண்ட மனிதர்களாக நாம் மாறிட 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக நாம் செல்வந்தன், ஏழை லாசரைக் குறித்து வாசிக்க கேட்டோம்.  இந்த வாசகப் பகுதி நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன என சிந்திக்கின்ற போது, தவக்காலம் என்பது நமது செயல்களை சீர்தூக்கிப் பார்த்து,  நம்மை நாமே சரி செய்து கொள்வதற்கான ஒரு காலம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.  

              இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக சமூகத்தின் மீது அக்கறையற்று இருக்கக்கூடிய தன்மையை இயேசு சுட்டிக்காட்டுகிறார்.  பல நேரங்களில் நாம் செல்வந்த இளைஞனைப் போலத் தான் நம் அருகில் இருப்பவர்களின் துயரத்தை கண்டும் காணாதவர்களாக இருந்து கொண்டிருக்கிறோம்.  நாம் வாழுகின்ற சமூகத்தின் மீது அக்கறையற்ற மனிதர்களாக இருந்து கொண்டிருக்கிறோம். இத்தகைய செயலை தவறு என இறைவன் சுட்டிக்காட்டுகிறார்.  எப்படி செல்வந்த இளைஞன் தன் வீட்டுக்கருகில் இருந்த ஏழை லாசரைக் கண்டுகொள்ளாமல் இருந்தானோ,  அது போலத்தான் பல நேரங்களில் நாமும் நாம் வாழுகின்ற சமூகத்தில் பல்வேறு துன்பங்களைப் படுகின்ற மக்களை பார்க்கிற போது,  பார்த்தும் பாராதது போல இருந்து விட்டுச் செல்லக் கூடியவர்களாக இருக்கிறோம். 

         ஒரு பத்திரிகை ஆசிரியர் இவ்வாறு குறிப்பிடுகிறார்,  இந்த உலகத்தில் ஒரு இனத்திற்கு ஒரு துன்பம்  நேர்கிறது என்றால், அந்த இனத்தைச் சார்ந்த அனைத்தும் அதனை எதிர்த்துப் போராடும். ஆனால் மனித இனம் மட்டுமே புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் என்று.

 இன்று  நாம் வாழுகின்ற சமூகத்தில், இந்த சமூகத்தில் காணக்கூடிய அவலங்களை கண்டும் காணாமல் செல்வதற்காக நாம் படைக்கப்பட்டவர்கள் அல்ல.  நாம் காணுகின்ற அவலங்களை எல்லாம் சரி செய்வதற்கான ஆற்றலை இறைவன் நமக்குத் தந்திருக்கிறார். நமது மத்தியில் பசியோடு வாடுபவரை  காணும் போது, அவரது பசியைப் போக்கக் கூடியவர்களாகவும்,  துன்பத்தில் வாடுபவர்களைக் காணும் போது, அவர்களின் துன்பத்தில் அவர்களோடு உடனிருக்க கூடியவர்களாகவும் நாம் இருக்க வேண்டும் என்பதை இறைவன் வலியுறுத்துகிறார்.

     இறைவன் வலியுறுத்தும் இந்த வாழ்க்கைப் பாடத்தை உணர்ந்து கொண்டவர்களாக நாம் வாழும் இச்சமூகத்தின் மீது அக்கறை கொண்ட மனிதர்களாக நாம் மாறிட இறையருள் வேண்டி தொடர்ந்து திருப்பலி வழியாக செபிப்போம்.

செவ்வாய், 15 மார்ச், 2022

வாழ்வுக்கான முத்தான சிந்தனைகள்...(16.3.2022)

வாழ்வுக்கான மூன்று முத்தான சிந்தனைகள்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
   இன்றைய இறைவார்த்தை பகுதியானது வாழ்வுக்கான  முத்தான சிந்தனைகளை...வழங்குகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தனது சாவினை மூன்றாம் முறையாக சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார்.  தான் எத்தகைய துன்பங்களை எல்லாம் படப் போகிறோம் என்பதை நன்கு அறிந்திருந்த நிலையிலும் துன்பத்தை எதிர்கொள்வதற்கு துணிவோடு இயேசு செல்வதை இயேசுவின் வாழ்வு நமக்கு வெளிப்படுத்துகிறது.  

இன்றைய வாசகங்கள் இயேசு என்னுடைய துன்ப கிண்ணத்தில் உங்களால் பருக இயலுமா? என்ற கேள்வியை எழுப்புகிறார்.


பொதுவாக யூதர்கள் அப்பத்தை பகிர்தல் என்பதை மகிழ்வின் அடையாளமாகப் பார்த்தனர்.  அதே சமயம் யூத சமூகத்தில் கிண்ணத்தை பகிர்தல் என்பது துன்பத்தை பகிர்தல் என்ற அடிப்படையில் பார்க்கப்பட்டது.  

      என்னுடைய கிண்ணத்தில் உங்களால் பருக இயலுமா?  என்ற இயேசுவின் கேள்விக்கு சீடர்கள் அறிந்தும் அறியாமலும், இயலும் என்றார்கள். இயேசுவும் ஆம்! நீங்கள் என் கிண்ணத்தில் பருகுவீர்கள் என்று கூறினார்.  எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை அறிந்தவராய், இவர்கள் எந்த அளவிற்கு தனக்கு சாட்சி உள்ளவர்களாக இருப்பார்கள் என்பதை நன்கு அறிந்தவராய், இயேசு அவர்களின் வார்த்தைகளை கேட்டு அதற்கு பதில்  மொழி தருகிறார்.

         இன்று உம்மோடு இருப்போம்,  உமது துன்பத்தில் பங்கெடுப்போம் என சொல்லக் கூடியவர்கள் எல்லாம், தன்னை விட்டுவிட்டு ஓடி விடுவார்கள் என்பதையும் இயேசு அறிந்திருந்தார்.  அதே இயேசு தனது இறப்பு உயிர்ப்புக்கு பிறகாக இவர்கள் மீண்டும் நம்பிக்கைக்குரிய சாட்சிய வாழ்வு வாழ்வார்கள் என்பதையும் அறிந்திருந்தார்.


துன்பங்களுக்கு மத்தியிலும் தன்னுடன் இருப்பவர்கள் தன்னை விட்டுவிட்டு செல்வார்கள் என்பதை அறிந்திருந்த நிலையிலும் ஆண்டவர் இயேசுகிறிஸ்து அனைத்தையும் ஏற்றுக்கொள்ள தன்னை தகுதி படுத்திக் கொண்டார்.  துணி போட்டு துன்பத்தையும் துரோகத்தையும் ஏற்றுக்கொள்ள தயாரானார் வளர வேண்டும் என்பதை இறைவன் நமக்கு உணர்த்துகின்றன பாடமாக உள்ளது. 
 இயேசு கொண்டிருந்த அதே மன நிலையை நாமும் கொண்டிருக்க இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கிறன.



இயேசு தனது துன்பத்தை பற்றி பேசிக்கொண்டிருக்க,   தன்னுடைய மகனின் நலன்களை மட்டுமே முன்னிறுத்தியவளாய் செபதேயுவின் மனைவியானவள் தன் பிள்ளைகளுக்கு பதவி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, வலப்புறமும் இடப்புறமும் அரியணையில் இடம் கேட்டு நிற்கிறாள். 

      தாய்மார்களின் குணம் பெரும்பாலும் தன் குழந்தைக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான். இன்று தன் குழந்தைக்கு எல்லாம் கிடைக்க வேண்டுமென சேர்த்து வைப்பதை விட தன் குழந்தைக்கு தேவையானதை அவர்களே உழைத்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பாடத்தினை கற்பிக்க வேண்டிய கட்டாயம் நம் மனதில் இருக்கிறது. பிள்ளைகளின் மீது நாம் கொண்டிருக்கின்ற பாசம் என்பது அவர்களுக்கான இடத்தினை, அவர்களுக்கான வாழ்வை ஏற்படுத்திக் கொடுப்பதில் அல்ல. மாறாக, அவர்களுக்கான வாழ்வை அவர்களே ஏற்படுத்திக்கொள்ள அவர்களை தகுதிப்படுத்துவது என்பதை உணர்ந்துகொள்ள இன்றைய வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. 


 

    இன்றைய வாசகம் நமக்கு வெளிப்படுத்துகிற வாழ்வுக்கான பாடத்தை கற்க முயல்வோம்.

 

திங்கள், 14 மார்ச், 2022

செயல்களே சீடர்கள் என்பதன் அடையாளம் ...(15.03.2022)

செயல்களே சீடர்கள் என்பதன் அடையாளம் ...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்
சொல்லை விட சிறந்தது செயல் என்பதை இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன.

அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த யூதர்களின் மனநிலையை இயேசு சுட்டிக்காட்டி நமது மனநிலை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கான வாழ்வுக்கான பாடத்தை இயேசு என்ற என்னால் நற்செய்தி வாசகத்தில் வழியாக நமக்கு முன்மொழிகிறார்.

 அன்றைய காலத்தில் யூதர்கள் தாங்கள் ரபி என அழைக்கப்பட வேண்டும் என விரும்பினார்கள்.  எனவே தங்களிடமிருந்த அதிகாரங்களை பயன்படுத்தி அடுத்தவரை பாவிகள் என சுட்டிக்காட்டி தங்களை முதன்மையான இடத்திற்கு உரியவர்கள்  என்பதையும், இறைவனோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் தாங்கள் மட்டுமே என்பதையும் வலியுறுத்த கூடியவர்களாக இருந்தார்கள். எனவேதான் முதன்மையான இருக்கைகளையும், மக்கள் பார்க்கக் கூடிய இடங்களில் ஜெபங்களையும் ஏரெடுக்கக்கூடிய மனிதர்களாக இருந்தார்கள். இவர்களின் இந்த தவறான முன்னுதாரணங்களை யே இயேசு சுட்டிக் காண்பித்தார். இறைவனோடு உறவில் இருக்கிறேன் என கூறி கொள்ளக் கூடியவர்கள் இறைவனோடு உள்ள உறவில் இருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் சக மனிதர்களை தங்கள் போல எண்ணாமல் அவர்களைவிட தங்களை உயர்ந்தவர்களாகக் கருதியவர்கள்.

எனவேதான் இயேசு விண்ணகத் தந்தையை தவிர நமக்கு வேறு ஒரு தந்தை இல்லை. விண்ணகத் தந்தையை விட உயர்ந்த ஆசிரியர் நீங்கள் இல்லை. விண்ணகத் தந்தையை விட பெரியவர் நீங்கள் இல்லை என்பதை அவர்களுக்கும் சுற்று இருந்தவர்களுக்கும் வெளிப்படுத்த கூடியவராக இருந்தார் என்று இதே வார்த்தைகளை தான் அவர் நமக்கும் வெளிப்படுத்துகிறார்.

உயர்ந்த இடத்தை தேட கூடியவர்களாகவும், அனைவரையும் விட பெரியவர் நாம் என எண்ணக் கூடியவர்களாகவும், இறைவனோடு உள்ள உறவில் நிலைத்திருப்பவர் நாம் மட்டுமே என்ற மமதையோடு வாழக் கூடியவர்களாக நாம் இருப்போமாயின் நமது எண்ணங்களையும் வார்த்தைகளையும் விட உயர்ந்தது நமது செயலாக இருக்க வேண்டும் நமது செயல்கள் அனைத்துமே ஆண்டவர் இயேசுவுக்கு உரிய செயல்களாக இருக்க வேண்டும் அதற்கு நாம் சக மனிதர்களை எந்தவித பாகுபாடுமின்றி நம்மில் வருவதாக எண்ணி அவர்களின் நலனில் அக்கறை காட்டக்கூடிய மனிதர்களாக இயேசுவைப் போல இருக்க வேண்டும்.  இந்த செயல் நம்மில் இல்லாதவரை வெற்று வார்த்தைகளால் வீண் பெருமை பேசக் கூடியவர்களாக மட்டுமே நாம் இருப்போம்..... நாம் இயேசுவுக்கு உகந்தவர்களாக இல்லை என்பதை இன்றைய நாள் வாசகம் நமக்கு வெளிக்காட்டுகிறது... 

இறைவனது வார்த்தைகளுக்கு ஏற்ப நமது வாழ்வை மாற்றிக் கொள்ளவே இந்த தவக்காலம் தரப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வோம். வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தி... நமது செயல்களை நல்ல செயல்களாக மாற்றுவோம் .... செயல்கள் வழியாக இறைவனின் உண்மை சீடர்களாக மாறிட இறையருள் வேண்டி தொடர்ந்து ஜெபிப்போம்... 

ஞாயிறு, 13 மார்ச், 2022

நாம் வாழ ...அவர் காட்டும் வழிகள்....(14.03.2022)

நாம் வாழ ...அவர் காட்டும் வழிகள்....


இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து நாம் எப்படி வாழவேண்டும் என்பதை  கற்பிக்கின்றார்.
மனிதர்களாகிய நாம் சக மனிதர்களை தீர்ப்படாது வாழ வேண்டும் என்பதே இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில்  இயேசுவின் முதல் படிப்பினையாக இருக்கிறது.


தீர்ப்பிடாதீர்கள், தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள் என்பது இயேசு சொல்கிற முதல் செய்தி. பிறரை குற்றவாளி என தீர்ப்பிட எழும்போதே நாம் குற்றவாளிகளாக இருந்து கொண்டிருக்கிறோம் என்பது மிகப் பெரிய அடையாளம் என்பார்கள். 

 தீர்ப்பிடுதல் என்பது கடவுளுடைய பணி, நமது பணி அல்ல. இந்த உலகத்தைப் படைத்தவர் கடவுள்.  நமக்கு வாழ்வு என்கிற கொடையைக் கொடுத்தவர் கடவுள். கடவுள் தந்த இந்த அழகிய உலகத்தில் அடுத்தவரை குற்றவாளிகள் என நான் தீர்ப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதை இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக இந்த தவக்காலம் நமக்கு நினைவூட்டுகிறது.

 அதனைத் தொடர்ந்து நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் இருப்பதை இல்லாதவரோடு பகிரக் கூடியவர்களாகவும் மன்னிக்கும் மனம் கொண்ட மாமனிதர்கள் ஆகவும் நாம் திகழ வேண்டும் என்பதை இயேசு வலியுறுத்துகிறார். இந்தத் தவக்காலத்தில் இறைவன் இறைவார்த்தை வழியாக நம்மோடு உரையாடுகின்ற இந்த வார்த்தைகளை மனதில் இருத்தி நமது செயல்களை நாம் சரி செய்து கொள்ள இந்த நாளில் இறைவன் அழைப்பு தருகிறார் . 

இறைவன் தருகின்ற அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாய் நாம் வாழுகிற சமூகத்தில் சக மனிதர்களை தீர்ப்பிடாமலும் மன்னிப்பை வழங்கக்கூடிய மனிதர்களாகவும் நம்மிடம் இருப்பதை இல்லாதவரோடு பகிரும் மனம் கொண்ட மனிதநேயமிக்கவர்களாகவும் வாழ  இந்த திருப்பலியில் தொடர்ந்து ஜெபிப்போம் ...

சனி, 12 மார்ச், 2022

நம்பிக்கையே ஆண்டவரோடு உள்ள உறவில் நம்மை ஆழப்படுத்தும்...(13.3.2022)

நம்பிக்கையே ஆண்டவரோடு உள்ள உறவில் நம்மை ஆழப்படுத்தும்...


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

 

தவக்காலம் என்பதே நமக்கும் - கடவுளுக்கும், நமக்கும் - நமது செயல்களுக்கும், நமக்கும் - நமது சகோதரர்களுக்கும் இடையே உள்ள உறவை குறித்து சிந்திப்பதும் ... நமது உறவை சரிப்படுத்திக் கொள்வதற்குமான ஒரு காலம் ...

நமக்கும் கடவுளுக்கும் இடையேயான உறவு சரியாக இருக்கும் பொழுது நமது செயல்களுக்கும் பிற சகோதரர்களுக்கும் இடையேயான உறவும் சரியானதாக அமையும்.

இன்றைய வாசகங்கள் அனைத்தும் ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருப்பதே நம் வாழ்வில் மகிழ்ச்சி என்பதை  நமக்கு வலியுறுத்துகின்றன ...


ஆண்டவரோடு உள்ள உறவில் நாம் நிலைத்திருக்க ஆபிரகாமிடம் காணப்பட்ட நம்பிக்கை நமது நம்பிக்கையாக இருக்க வேண்டும் என்பதை முதல் வாசகம் வலியுறுத்துகிறது ...

தொடக்க நூல் 12ல் நாம் வாசிக்கிறோம் ...


வசதி வாய்ப்புக்களோடு, உறவுகளோடு இணைந்திருந்த ஆபிரகாமை 
ஆண்டவர்  நோக்கி, “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்.

உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய்.

உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” என்றார்.

ஆபிரகாமும் ஆண்டவரின் வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொண்டவராய் ஆண்டவரின் வார்த்தைகளை தன் வாழ்வாக மாற்றுகிறார். நாள்கள் பல கடந்த நிலையிலும் தனக்கென ஒரு வாரிசு இல்லாத நபராகவே ஆபிரகாம் நெடுநாட்கள் வாழ்ந்தார். ஆனால் அவர் ஆண்டவரின் வார்த்தைகளின் மீது கொண்டிருந்த நம்பிக்கையிலிருந்து பின்வாங்கவில்லை. நம்பிக்கையில் நிலைத்திருந்தார்... பல நேரங்களில் கடவுள் அவரோடு உரையாடுகின்ற பொழுதெல்லாம் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாக அவருக்கு மீண்டும் மீண்டும் தன் வாக்குறுதிகளை நினைவுறுத்திக் கொண்டே இருந்தார்.  இதைத்தான் இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம்.... ஆபிரகாமை வெளியே அழைத்துச் சென்ற கடவுள், 

“வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்” என்றார்.

ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.
தொடக்கநூல் 15: 6-7

ஆண்டவர் இயேசுவின் மீது நாம் கொள்ளுகின்ற நம்பிக்கைதான் ஆண்டவரோடு உள்ள உறவில் நாம் நிலைத்திருக்க நமக்கு உந்து சக்தியாக இருக்கிறது என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு வலியுறுத்துகிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் பிலிப்பு நகர மக்களுக்கு எழுதிய கடிதத்தில் அவர்களிடத்தில் காணப்பட்ட தவறான நடைமுறைகளை சுட்டிக் காண்பித்து....

 சகோதர சகோதரிகளே, நீங்கள் அனைவரும் என்னைப்போல் வாழுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய முன்மாதிரியின்படி வாழ்பவர்களைப் பின்பற்றுங்கள்.
பிலிப்பியர் 3:18
என வலியுறுத்துகிறார் ....

பவுலைப் போல நாம் வாழ வேண்டுமாயின் பவுலிடத்தில் காணப்பட்ட ஆண்டவர் மீதான ஆழமான நம்பிக்கை நமது நம்பிக்கையாக இருக்க வேண்டும்.  அவர் முன்மாதிரியாகக் காட்டிய திருத்தூதர்களின் வாழ்வில் வெளிப்பட்ட நம்பிக்கை, நமது நம்பிக்கையாக இருக்க வேண்டும். இந்த நம்பிக்கை மட்டுமே ஆண்டவரோடு உள்ள உறவில் நாம் நிலைத்திருக்க வழிவகுக்கும்.  அதுவே நமது மகிழ்ச்சி என்பதையும் திருத்தூதர் பவுல் தனது கடிதத்தின் வாயிலாக நமக்கு இன்றைய இரண்டாம் வாசகம் வழியாக வலியுறுத்துகிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உருமாற்றத்தை குறித்து வாசிக்க கேட்டோம்.

பழைய ஏற்பாட்டு நூல்களில் மிகப் பெரிய ஆளுமையாக காட்டப்படக் கூடிய மோசேயுடனும், மிகப்பெரிய தீர்க்கதரிசியாக கருதப்பட்ட எலியாவுடனும் இயேசு மலைமீது உரையாடிக் கொண்டிருக்கிறார் ... அதனைக் கண்ட சீடர்கள் இந்த இயேசுவை யார் என அறியாதவர்களாய் வியப்புக்குள்ளானவர்களாய் வியந்து பார்த்த போது பேதுரு, ஆண்டவரே! மூவரும் தங்குவதற்கு இங்கே கூடாரம் அமைக்கட்டுமா? என, தான் சொல்வது என்னவென்று அறியாதவராய் அதைச் சொன்னார் என விவிலியம் சுட்டிக்காட்டுகிறது.  இயேசுவைப் பற்றிய தெளிவற்ற நிலையில் இருந்த சீடர்களுக்கு தெளிவை உணர்த்தும் விதமாக  மேகத்தினின்று, ″ இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள் ″ என்று ஒரு குரல் ஒலித்தது....

ஒலித்த இறைவனது வார்த்தைகளின் அடிப்படையில் தங்களோடு இருக்கின்ற இறைவன் இயேசுவின் மீதான நம்பிக்கையில் வேரூன்றியவர்களாக சீடர்களும் அவரைப் பின்தொடர்ந்தார்கள் என்பதை நாம் சீடர்களின் வாழ்விலிருந்து அறிகிறோம்.

 ஆனால் பல நேரங்களில் அவர்கள் தாங்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் இருந்து விலகியவர்களாய், மனித இயல்புக்கு ஏற்ப ஆண்டவர் இயேசுவை விட்டுவிட்டு ஓடக்கூடிய மனிதர்களாக இருந்தார்கள். அவரோடு கொண்டிருந்த உறவில் இருந்து தங்களை விலக்கிக் கொள்ளக் கூடிய நிலையிலும் அவர்கள் இருந்தார்கள் என்பதை வரலாறு நமக்கு சீடர்களின் வாழ்விலிருந்து வெளிப்படுத்துகிறது ...
 
சீடர்களைப் போலவே, ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டிருக்கக்கூடிய நாமும் பல நேரங்களில் அவரோடு கொண்டிருக்கின்ற நம்பிக்கையில் இருந்து விலகியவர்களாய் இயேசுவோடு உள்ள உறவிலிருந்து விடுபட்டுப் போகக்கூடிய சூழ்நிலைகளை நமது வாழ்வில் சந்திக்க நேரலாம்.  சந்திக்கின்ற போதெல்லாம் இதயத்தில் இருத்திக் கொள்ள வேண்டிய இறைவார்த்தை....

நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்புக்காகக் கடவுளுடைய வல்லமையால் பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள். இம்மீட்பு இறுதிக் காலத்தில் வெளிப்பட ஆயத்தமாய் உள்ளது.


இப்போது சிறிது காலம் நீங்கள் பல்வகைச் சோதனைகளால் துயருற வேண்டியிருப்பினும், அந்நாளிலே பேருவகை கொள்வீர்கள்.

அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள். இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது அந்நம்பிக்கை உங்களுக்குப் புகழும் மாண்பும் பெருமையும் தருவதாய் விளங்கும்.

நீங்கள் அவரைப் பார்த்ததில்லை; எனினும், அவர்மீது அன்பு செலுத்துகிறீர்கள். இப்பொழுதும் நீங்கள் அவரைக் கண்டதில்லை; எனினும், நம்பிக்கை கொண்டு சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து பேருவகை கொள்கிறீர்கள்.
                                  1 பேதுரு 1:5- 8
என்பதாகும் .... 

நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கையினால் தான் நாம் கடவுளோடு உள்ள உறவில் ஆழப்படப் போகிறோம் என்பதை உணர்ந்தவர்களாய் வாழ்வில் பல நேரங்களில் சோதனைகளை சந்திக்கின்ற சூழல்களை நாம் சந்தித்தாலும், சோதனைகளுக்கு மத்தியிலும் அதனையெல்லாம் துணிவோடு எதிர் கொண்டவர்களாய் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம்பிக்கையில் நிலைத்திருந்து ஆண்டவரோடு உள்ள உறவில் நாளும் வளரவேண்டும் என்பதற்காகவே இந்த தவக்காலம் நமக்குத் தரப்பட்டிருக்கிறது.  இந்த காலத்தில் நாம் மேற்கொள்கின்ற அனைத்து விதமான முயற்சிகளும் ஆண்டவரோடு உள்ள உறவில் நம்மை  இணையச் செய்கிறது என்பதை உணர்ந்தவளாய் நாம் நம்புகின்ற இறைவன் மீது இன்னும் ஆழமான நம்பிக்கை கொண்டு அவரைப் பின்தொடர்வோம். 
நம்பிக்கையே ஆண்டவரோடு உள்ள உறவில் நம்மை ஆழப்படுத்தும் என்பதை அறிந்தவர்களாய் இறைவனோடு உள்ள உறவில் ஆழப்பட ...
 இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து திருப்பலி வழியாக செபிப்போம் ...

வெள்ளி, 11 மார்ச், 2022

இயேசுவின் மனநிலையில் நமது பயணம்...(12.3.2022)

இயேசுவின் மனநிலையில் நமது பயணம்

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
உதிக்கின்ற சூரியனும்,  பெய்கின்ற மழையும்,  அகிலத்தில் உள்ள அனைவருக்கும் உரியதாக இருக்கிறது.  உதிக்கின்ற சூரியன் நல்லோர் தீயோர் என பார்த்து தனது ஒளிக் கதிர்களை அவர்கள் மீது வீசுவதில்லை.  அனைவர் மீதும் வீசுகிறது.  விழுகின்ற மழைத்துளியானது நல்லோர் தீயோர் என பார்த்து பெய்வதில்லை. மாறாக, அது அனைவருக்குமானதாக வந்து சேருகிறது.  இந்த மழையையும் வெயிலையும்,  கதிரவனின் ஒளியையும் இறைவனது இயல்புகளாக கண்டிட இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு தருகின்றன.  கடவுளின் பார்வையில் நாம் அனைவரும் சமமானவர்களே. நம்மிடையே பலவிதமான ஏற்றத்தாழ்வுகளும் பாகுபாடுகளும் பிரிவினைகளும் உருவெடுத்திருந்தாலும் கடவுளின் பார்வையில் நாம் அனைவரும் சமமானவர்கள்.  கடவுளின் இயல்பையே நாம் கொண்டிருக்க வேண்டும் என்பதை இந்த தவக்காலம் நமக்கு வலியுறுத்துகின்றது. 



ஏற்கெனவே இந்த தவக்காலத்தில், 
நாம் ஒவ்வொருவருமே ஒரு சில முயற்சிகளை மேற்கொண்டிருப்போம்.   மேற்கொள்ளுகின்ற இந்த தவ முயற்சிகளில் நாம் இன்னும் ஆழப்பட இன்றைய வாசகங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன. ஒவ்வொருவருமே ஆண்டவர் இயேசுவின் மனநிலையை நமது மனநிலையாகக் கொண்டிருக்கின்ற அழைக்கப்படுகிறோம்.  எப்படி கடவுள் பாகுபாடு பாராது,  நல்லோர் மேலும் தீயோர் மேலும் மழையைப் பெய்விக்கின்றாரோ, கதிரவனின் ஒளியை உதிக்கச் செய்கின்றாரோ,  அதுபோல நாமும் எந்தவித பாகுபாடுமின்றி அனைவரையும் ஏற்றுக் கொண்டு வாழக்கூடிய மனிதர்களாக இச்சமூகத்தில் இருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம்.  அதன் அடிப்படையில் தான் நாம் பகைவர்களையும் அன்பு செய்ய வேண்டும் என்பதை இன்றைய நாள் வாசகங்கள் வலியுறுத்துகின்றன. பகைவரையும் அன்பு  செய்வதற்கு சொல்லுவது எளிதாக இருக்கும். ஆனால் செயலில் காட்டுவதற்கு அது கடினமாகத் தோன்றலாம்.  ஆனால் இயேசு கிறிஸ்து இந்த சமூகத்தில் மனிதனாக வாழ்ந்த போது, தன்னை குற்றுயிரும் குலை உயிருமாக சிலுவையில் தொங்க வைத்தவர்களுக்கு மத்தியில், 
அந்த நிலைக்கு அவர்களை ஆளாக்கியவர்களை, மனனித்தார். அவர்களுக்காக தந்தையினிடத்தில் மன்றாடினார். 

இந்த இயேசுவைப் போல நீங்களும் நானும் மாற வேண்டும் என்பதுதான் இந்த தவக்காலம் நமக்கு வலியுறுத்துகின்ற  வாழ்வுக்கான பாடம்  என்பதை உணர்ந்து கொண்டவர்களாக,  நாம் ஆண்டவர் இயேசுவின் மனநிலையை நமது மனநிலையாக்கிக்கொள்ள இறையருள் வேண்டி இந்த தவகாலத்தில் தொடர்ந்து இணைந்து இந்த திருப்பலியில் பக்தியோடு செபிப்போம்.

வியாழன், 10 மார்ச், 2022

சரி செய்ய....(11.03.2022)

சரி செய்ய....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 இன்று நம் தாய் திரு அவையானது நமது சக உடன் பிறந்தவர்களோடு உள்ள உறவில் நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை நமக்கு எடுத்துரைக்கிறது.  சகோதர சகோதரிகளை முட்டாள் என திட்டுபவர் கூட,  கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள் என இறைவன் இயேசு வலியுறுத்துகிறார். நம்மோடு பிறந்தவர்களோடு நாம் நல்லுறவை கொண்டு வாழ வேண்டும் என்பதே இறைவன் இந்த நாளில் நமக்கு தருகின்ற செய்தி.  பல நேரங்களில் பல ஆண்டுகளாக நம் உடன் பிறந்தவர்களுடன் முறையான உறவு இல்லாமல் சண்டையோடும் சச்சரவுகளோடும் பிரிவினைகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் உறவுகளோடு மனவருத்தங்கள் உருவானாலும் அதனையெல்லாம் மன்னித்து அவர்களை ஏற்றுக் கொண்டு நல்ல முறையில் இணைந்து வாழ வேண்டும் என்பதே இறைவன் இன்றைய நாளில்
வலியுறுத்துகிறார். 

             இந்த தவக்காலத்தில் நமது உறவுகளை குறித்து நாம் சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம். பிரிந்து போன உறவுகளை சரி செய்து கொண்டு ஒருவர் மற்றவரை அன்பு செய்யவும், முழுமையான மனதோடு ஏற்றுக் கொள்ளவும் அருள் வேண்டி இந்த திருப்பலியில் பக்தியோடு இணைவோம்.

புதன், 9 மார்ச், 2022

கடவுளோடு நாமும், நம்மோடு கடவுளும் உரையாடிட...(10.3.2022)

கடவுளோடு நாமும், நம்மோடு கடவுளும் உரையாடிட...


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
தவக்காலமானது இறைவனோடு உள்ள உறவில் ஆழப்பட நமக்கு அழைப்பு விடுக்கிறது.  இறைவனோடு உள்ள உறவில் ஆழப்பட வேண்டுமாயின் அதற்கு செபம் இன்றியமையாத ஒன்று. 

 அன்றைய காலகட்டத்தில்  செபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர்கள் யூதர்கள். அனைத்திலும் முதன்மையானது செபம் என்பது அவர்களின் எண்ணம். செபத்தைப்பற்றி யூதர்களுக்கு ஏதாவது கவலை இருந்தததென்றால், அது நாள்முழுவதும் நம்மால் செபிக்க முடியவில்லையே என்பதுதான். அந்த அளவுக்கு செபத்திற்கு வாழ்வில் முக்கிய இடத்தை கொடுத்திருந்தார்கள். யூதர்களுடைய வாழ்வே செபத்தை மையப்படுத்தியதாகத்தான் இருந்தது. இத்தகைய பின்புலத்தில் இயேசு, செபிப்பதால் கிடைக்கும் பலன்களை நமக்குச்சொல்கிறார். இறைவன் நம் செபத்தைக் கேட்கிறாரா? நாம் கேட்பதை இறைவன் நமக்குத்தருவாரா? இறைவன் எப்படிப்பட்டவர்? போன்ற கேள்விகளுக்கு பதிலையும் இன்றைய நற்செய்தியிலே தருகிறார்.

செபம் இறைவனோடு பேசுவதற்கு மட்டுமல்ல, இறை ஆற்றலை நிறைய பெற்றுக்கொள்வதற்கான பலமான ஆயுதம் என்பதை இயேசு ஆணித்தரமாக வலியுறுத்துகிறார். 

நாம் கடவுளோடு கொள்ளுகின்ற உறவானது தந்தை மகனுக்குரிய உறவு போல இருக்க வேண்டும் 
என்பதை இயேசு எடுத்துரைக்கிறார். தந்தையிடம் கேட்கின்ற போது தந்தை எப்படி நமக்கு நலமானதை நல்குவாரோ, அதுபோலவே இறைவனும் நமது தேவைகளை அறிந்தவராய் நாம் கேட்பதை நமக்கு தரக்கூடியவராக இருக்கிறார்.  ஆனால் ஆண்டவரோடு உரையாடும் போது நம்பிக்கையோடு உரையாட நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

         நம்பிக்கையால் எல்லாம் கூடும்.  நம்பிக்கையால் ஆண்டவரையும் நலமானதை, நாம் விரும்புவதை நமக்கு தர வைக்கும்.  நாம் நம்பிக்கையோடு கேட்கிற போது நமது செபம்  கேட்கப்படும்.  நாம் நமது செபத்தில்  இறைவனோடு உள்ள உறவில் இன்னும் ஆழப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த தவக்காலம் தரப்பட்டுள்ளது. செபம் என்பதே கடவுளோடு கொள்ளுகின்ற உரையாடல். இந்த உரையாடலில் இருவரும் உரையாடவேண்டும்.  ஒருவர் மட்டும் பேசுவதும் மற்றவர் கேட்டுக் கொண்டிருப்பதும் முறையான செபம் ஆகாது. 

            இறைவன் எப்படி என்னோடு பேசுவார்?  அன்று சாமுவேலை நோக்கி சாமுவேல்! சாமுவேல்! என அழைத்தது போல நம்மை அழைத்து பேசுவாரா?  அல்லது அன்று எரேமியாவினிடத்தில் தோன்றி பேசிய வானதூதர்கள்  வழியாக பேசியவர் போல நம்மிடம் தோன்றிப் பேசுவாரா? என்ற கேள்வி இதயத்தில் எழலாம். ஆனால் அமைதியில் அமருகின்ற போது ஆண்டவரின் குரலை நாம் உணர முடியும். கடவுளின் ஆவியார் குடி கொண்டிருப்பது நமது உடலாகிய இந்த ஆலயத்திற்குள்.  

                    நமக்குள் இருந்து கொண்டு நமக்கு நல்லது கெட்டதை சொல்லித் தரக்கூடிய இந்த ஆவியானவரின் குரலுக்கு செவி கொடுக்கும் போது நாம் இறைவனின் குரலைக் கண்டு கொள்ள முடிகிறது.  நாம் இறைவனை எங்கெங்கோ தேடுவதை நிறுத்தி, நமக்குள்ளே உறைந்திருக்கும் இறைவனை நமக்குள்ளாக தேடுவோம்.  நமக்குள் இருந்து கொண்டு நன்மை தீமையை எடுத்துரைக்கக்கூடிய அவரின் குரலுக்கு கவனத்தோடு செவி கொடுப்போம்.  இத்தகைய செபத்தின் வாயிலாக கடவுளோடு நாமும், நம்மோடு கடவுளும் உரையாடுவோம்.  உரையாடல் வழியாக உறவுகளை பலப்படுத்திக் கொள்ள இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம்.

செவ்வாய், 8 மார்ச், 2022

அனுபவத்தின் வாயிலாக ஆண்டவரோடு உறவில் ஆழப்பட....

அனுபவத்தின் வாயிலாக ஆண்டவரோடு உறவில் ஆழப்பட....


அன்பர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 


நெற்றியில் சாம்பல் பூசியவர்களாய் கடந்த புதன் அன்று தொடங்கிய தவக்காலத்தை, இந்த புதன் கிழமையோடு ஒரு வாரத்தை நிறைவு செய்கிறோம்.  இந்த ஒரு வார காலத்தில் நாம் ஒரு சில உறுதிப்பாடுகளை நமக்கு நாமே எடுத்து இருப்போம். அந்த உறுதிப்பாடுகளில் நிலைத்தும் இருந்திருப்போம்.
சில நேரங்களில் அந்த உறுதிப்பாடுகளிலிருந்து அவ்வப்போது  நாம் தவறி போகின்ற சூழலிலும் கூட, நான் தட்டுத்தடுமாறி ஆண்டவர்மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கையின் அடிப்படையிலும், இந்த தவக்காலத்தை இதயத்தில் இருத்தியவர்களாய், சில ஒருத்தல் முயற்சிகளை செய்து கொண்டிருப்போம். ஒரு வார காலம் நாம் நன்றாக இருந்திருக்கிறோம். எனவே கடவுள் நமது வாழ்வில் அனைத்தையும் மாற்றி விடுவார் என்ற எண்ணம் நமக்குள் இருக்கலாம். ஆனால் நாம் எடுக்கின்ற ஒறுத்தல் முயற்சியிலும், நாம் மேற்கொள்கின்ற அனைத்து விதமான தவ முயற்சிகளும், ஆண்டவரோடு உள்ள உறவில் நாம் வளர்வதற்காகவே என்பதை மட்டுமே மனதில் இருத்த வேண்டுமே ஒழிய, பலனை எதிர்பார்த்து நாம் எதையும் செய்யக்கூடாது என்பதை இன்றைய வாசகங்கள் வலியுறுத்துகின்றன. 


யூதர்கள் பொதுவாக இயேசுவினிடத்தில் அடையாளத்தை கேட்டார்கள். ஏன் அவர்கள் அடையாளங்களை நாடினார்கள் என பார்க்கின்ற போது, மெசியா வருமுன் சில அடையாளங்கள் நிகழும் என அவர்கள் அறிந்திருந்தார்கள். அந்த அடிப்படையில் தான் இயேசுவை மெசியா என மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு, இவர் உண்மையாகவே மெசியாவாக இருப்பாரோ என்ற எண்ணம் அவர்களுக்குள் எழுந்தது. எனவே அவர் மெசியா என்பதை நிரூபிக்க அடையாளத்தை காட்டச் சொன்னார்கள். அடையாளத்தை கெட்ட மனிதர்களுக்கு இயேசு  அடையாளம் தரப்பட மாட்டாது என கூறினார். காரணம் ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் அவரவர் பெறுகின்ற அனுபவங்களின் வாயிலாகத் தான் கடவுளை உணர்ந்து கொள்ள முடியுமே தவிர, அரும் அடையாளங்களால் மட்டும் கடவுளை உணர்ந்து கொள்ள முடியும் என்பவர்கள், இதைவிட இன்னொரு அருள் அடையாளத்தை காணுகின்ற போது இடறி போகக்கூடிய ஆடுகளாக தான் இருப்பார்கள். எனவே தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, அடையாளங்களை காண்பித்து தம்மை யாரென மெய்ப்பித்து காண்பிக்க விரும்பாதவராக உங்களுக்கு அடையாளம் தரப்படமாட்டாது என்று கூறினார். 

உங்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் தரப்பட மாட்டாது என ஆண்டவர் இயேசு கூறுகிறார். இவ்வார்த்தைகளின் அர்த்தத்தை உணர்கின்ற போது அன்று யோனா நினைவே நகர மக்கள் தவறான வாழ்வில் ஈடுபடுகிறார்கள் என்பதை சுட்டி காண்பிப்பதற்காக கடவுள் அவரை அனுப்பி வைத்தார். ஆனால் யோனா செல்ல மறுத்தார். பிறகு கடவுளின் கட்டளைக்கு கீழ்படிந்தவராய்  நினிவே நகருக்குச் சென்று அவர்களின் தவறான வாழ்வை சுட்டிக் காண்பித்தார். யோனாவின் வார்த்தைகளைக் கேட்டு அவர்கள் மன மாற்றம் பெற்றார்கள். இந்தத் தவக்காலத்தில் நாமும் தகுந்த மனமாற்றத்தை பெற வேண்டும் என்பதே இறைவனது விருப்பம். அந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பல நேரங்களில் நமக்கு அருள்பணியாளர்கள் வாயிலாகவோ, அருட்சகோதரிகள் வாயிலாகவோ, நமது குடும்பத்தில் இருக்கும் மூத்த உறுப்பினர்கள் வாயிலாகவோ மனமாற்றத்திற்கான அழைப்பை இறைவன் தருகிறார். இறைவன் தருகின்ற இந்த மனமாற்றத்திற்கான அழைப்பை உணர்ந்து கொண்டு,  நமது மனங்களை மாற்றிக் கொண்டு அவரின்பால் திரும்ப நாம் அழைக்கப்படுகிறோம். அவரின்பால் திரும்புகிற போது பல நேரங்களில் நாம் கடந்த ஒரு வார காலமாக ஒறுத்தல் முயற்சிகள் பல செய்திருக்கலாம். இந்த ஒருத்தல் முயற்சிகளால் எனது வாழ்வில் நடந்த நன்மை என்ன? எனக்கு கிடைத்த பயன் என்ன? என்ற கேள்வி உள்ளத்தில் எழலாம். 


                   நாம் அடையாளங்களைக் கொண்டு அந்த கேள்விகளுக்கு விடை தேட கூடாது. அடையாளங்கள் ஏதேனும் தென்படுகிறதா என தேடிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு , அனுபவத்தின் வாயிலாக நாம் ஆண்டவரோடு இணைந்து இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ள இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.
நாம் மேற்கொள்ளுகின்ற தவா முயற்சிகளும் செபங்களும்,  அறச்செயல்களும் நம்மை ஆண்டவரோடு ஐக்கியப்படுத்தி இருக்கின்றன.

 ஆண்டவரோடு இன்னும் அதிகமான நெருக்கத்தை நமக்கு ஏற்படுத்தி இருக்கின்றன. அதனை நாம் அடையாளங்கள் கொண்டு உணர வேண்டிய அவசியமில்லை. நமது அனுபவம் கொண்டு உணர முடியும். இந்த அனுபவத்தின் வாயிலாக ஆண்டவரோடு உள்ள உறவில் இன்னும் ஆழப்பட இறையருளை வேண்டி, இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலியில் செபிப்போம்.

திங்கள், 7 மார்ச், 2022

அர்த்தம் உணர்ந்து செபிப்போம்....(8.3.2022)

அர்த்தம் உணர்ந்து  செபிப்போம்....


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தவக்காலம் என்பது செபத்தின் வாயிலாக ஆண்டவரோடு இணைந்து இருக்க அழைப்பு விடுக்கின்ற ஒரு காலம்.  இந்த காலத்தில் நாம் ஏறெடுக்கின்ற செபம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு உணர்த்துகின்றார். 

 அன்றைய காலகட்டத்தில் 
ஒரு சில யூதர்கள் மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக செபித்தார்கள். அதற்கு யூதர்களின் செபமுறையும் உகந்ததாக இருந்தது. யூதர்கள் செபிக்கிறபோது, நின்றுகொண்டு செபித்தார்கள். அவர்களின் இருகரங்களம் விரிக்கப்பட்டு, உள்ளங்கைகள் வானத்தை நோக்கியும், அவர்களின் சிரம் தாழ்த்தியும் செபித்தார்கள். காலையும், மாலையும் அவர்கள் செபித்தார்கள். எந்த வேலையைச் செய்தாலும், இந்த வேளைகளில் எங்கிருந்தாலும் அவர்கள் செபிக்க ஆரம்பித்தார்கள். தாங்கள் எப்படி செபிக்கிறோம்? என்பது மற்றவர்களுக்கு தெரிய வேண்டுமென்று செபித்தார்கள். குறிப்பாக தொழுகைக்கூடங்களின் முன்நின்று, நீண்ட நேரம், மற்றவர்கள் கண்ணில்படும்படி நின்றுகொண்டு செபித்தார்கள்.

ஒரு சில யூதப்போதகர்களே, மக்களை இத்தகைய செயலுக்காக கடுமையாக கண்டித்திருக்கிறார்கள். எனவே தான், வெளிவேடத்தனத்தோடு வேண்டப்படுகிற செபம், இறைவனால் கேட்கப்படாது என்று விளக்கம் கொடுத்தார்கள்.


நாம் கடவுளோடு எத்தகைய உறவை செபத்தின் வாயிலாக கொண்டிருக்க வேண்டும் என்பதை இயேசு என்று உணர்த்துகிறார்.  ஆண்டவர் இயேசு நாம் எப்படி செபிக்க வேண்டும் என்பதற்காக நமக்கு கற்றுக்கொடுத்த ஜெபத்தினை அனுதினமும் நாம் பல நேரங்களில் பல இடங்களில் பயன்படுத்துகிறோம்.  சில நேரங்களில் நாம் செய்கின்ற இந்த செபத்தினை குறித்து சிலர் கேலி செய்வதும் உண்டு. ஏன் இவர்கள் திரும்பத் திரும்ப ஒரே வார்த்தைகளை உச்சரித்து கொண்டே இருக்கிறார்கள் என்று கூட. ஆனால் இந்த வார்த்தைகளுக்குள் அடங்கி இருக்கக்கூடிய  மகத்துவத்தை அறியாத நிலையில் தான் அவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள். 

 "இந்த விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே" என்ற செபத்தின் வாயிலாக நாம் கடவுளை புகழுகிறோம்.  நமது அன்றாட தேவைக்காக இறைவனிடத்தில் மன்றாடுகிறோம். நாம் எப்படி இருக்க வேண்டும்? நாம் எப்படி இருந்தால் கடவுள் எப்படி இருப்பார் என்பதையும் இந்த செபமானது நமக்கு வலியுறுத்துகிறது. 

மன்னிப்பை பற்றி பேசுகிற நாம் மன்னித்தால் தான் கடவுள் நம்மை மன்னிப்பார் என்பதை இந்தச் செபம் வலியுறுத்துகிறது.  மனிதனின் அடிப்படைத் தேவை ஆகிய உணவுக்கு இறைவனுக்கு நன்றி கூற வேண்டும் என்ற உன்னத பாடத்தை இந்த செபம் நமக்குக் கற்பிக்கிறது. 

     இந்த ஜெபத்தை பத்தோடு பதினொன்று அத்தோடு நான் ஒன்று என்ற மனநிலையோடு நாம் சொல்லாது, மன நிறைவோடு அர்த்தம் உணர்ந்த வகையில்,  நாம் அனைவரும் இணைந்து வார்த்தைகளின் அர்த்தத்தை உணர்ந்தவர்களாக ஆண்டவர் இயேசு அர்த்தமுடன் ஜெபித்தது போல நாமும் அர்த்தத்தை உணர்ந்தவர்களாக, பிறரைப் போல அல்லாமல், அர்த்தத்தை உணர்ந்து செபிக்கக் கூடிய மக்களாக இருக்க வேண்டும் என்பதை இந்த நாள் நமக்கு வலியுறுத்துகிறது.  இத்தகைய சிந்தனையை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டவர்களாய், உள்ளார்ந்த எண்ணத்தோடு,  உண்மையான மன நிலையில் ஆண்டவர் கற்பித்த செபத்தை  அனைவரும் இணைந்து செபிப்போம். இணைந்து சொல்லுவோம். 


விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே! உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக! எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்! எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும்! எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும்! தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

   என்று நாம் செபிக்கின்ற இந்த செபமானது, 
நமது வாழ்வை நெறிப்படுத்துவதாகவும் நமக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள உறவை இன்னும் ஆழப்படுத்தவும்,   உதவும் என்பதை மனதில் இருத்தியவர்களாய்,  நேரம் கிடைக்கிற போதெல்லாம் அர்த்தத்தை உணர்ந்தவர்களாக  இந்த செபத்தை நமது வாழ்வில் நாம் மேற்கொள்ள இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

ஞாயிறு, 6 மார்ச், 2022

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண....(7.3.2022)

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது.

என்று வள்ளுவர் கூறுவார். 
நாம் ஒருவருக்கு உதவி செய்வதால் நமக்கு என்ன கிடைக்கும் என்பதை எதிர்பாராமல் ஒருவருக்கு செய்கின்ற உதவி, மற்றும் நாம் உதவி செய்கின்ற நபர் பெரியவரா? சிறியவரா? என்ற வேறுபாடு எதனையும் எண்ணாமல் கைமாறு கருதாமல் ஒருவர் செய்கின்ற உதவி கடலை விட மிகப் பெரிய பயனை விளைவிக்கும் என்று குறிப்பிடுகிறார்.

   இன்றைய உலகில்  பணம், பொருளை  செலவு செய்து தனக்கு நற்பெயரைத் தேடுவதில் ஆர்வம் கொள்ளும் மானுடச் சமூகம், தன் அருகில் இருக்கும் சின்னஞ்சிறியவர்களை கண்டு  கொள்ளாது இருக்கிற சூழல், இன்று அதிகம்.  சின்னஞ்சிறிய என் சகோதர சகோதரிகளுக்கு செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள் என இன்றைய வாசகத்தின் வழியாக இயேசு நமக்கு வெளிப்படுத்துகிறார். 

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று. 
    என்னும் பழமொழிக்கு ஏற்ப நாமும் குழந்தை உள்ளம் கொண்டவர்களாக குழந்தை மனநிலையில் நமது அண்டை அயலாரின் தேவைகளை கண்டுணர்ந்து உதவிகள் செய்யக் கூடிய மனித
 நேயம் கொண்ட மணிதர்களாக ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணக் கூடியவர்களாக நான் வாழ்ந்திட இன்றைய நாளில் இத்திருப்பலியில் இணைந்து ஜெபிப்போம்.

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...