மன மாற்றமே நம் மாற்றத்திற்கான முதல் படி
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவர்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு கடலின் அருகில் ஒரு மலை இருந்தது. கடலிலிருந்து எழும்பிய அலைகள் மலையின் மீது மோதிக்கொண்டேயிருந்தன. மலை சொன்னது, நான் உறுதியானவன். என் மீது மோதாதே என்று. மோதுவது எங்கள் இயல்பு. நாங்கள் இப்படித்தான் மோதிக்கொண்டே இருப்போம் எனக் கூறியவாறு மோதிக்கொண்டே இருந்தன. ஈராயிரம் ஆண்டுகள் கடந்த நிலையில் இங்கு அலைகள் இருந்தன. ஆனால் மலை இல்லை.
மலையைப் போல உறுதியான இதயம் படைத்த மனிதர்களுக்கு மத்தியில், ஆண்டவர் மாற்றத்திற்கான விதையை விதைக்க கூடியவராக இந்த மண்ணில் இருந்தார். பல விதமான சட்ட திட்டங்களை உருவாக்கிக் கொண்டு மனிதர்களை மனிதர்களே அடிமைப்படுத்துகின்ற செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, சட்டங்களின் பெயரால் மக்கள் நசுக்கப்பட்ட போது, ஆண்டவர் இயேசு கிறிஸ்து, சட்டங்களை விட மனித நேயமே முதன்மையானது என்பதை வலியுறுத்தக் கூடிய நபராக சமூகத்தில் நடக்கின்ற அவலங்களை எல்லாம் கண்டும் காணாதவராக இல்லாமல், கண்டு அதனை எதிர்த்து குரல் எழுப்பக் கூடிய ஒரு நபராக தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டே இருந்தார் என்பதை இயேசுவின் வாழ்வு நமக்கு சுட்டிக் காட்டுகிறது.
சமூகத்தில் நடக்கும் அனைத்து விதமான துன்பங்களையும் கண்டும் காணாமல் இருப்பவர் அல்ல நாம் பின்பற்றுகின்ற இறைவன். அநீதிகளை காணுகின்ற போதெல்லாம் அதனை எதிர்த்து குரல் கொடுக்க கூடியவராக, அதனைக் களைவதற்கான செயலில் ஈடுபடக் கூடியவராக இருப்பவர் நம் கடவுள் இருக்கிறார் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன.
வலியுறுத்துவதோடு மட்டும் அல்லது நாமும் அந்த இயேசு கிறிஸ்துவை போல இந்த சமூகத்தில் அவலங்கள் அரங்கேறுகின்ற போதெல்லாம், அதனை சரி செய்ய கூடியவர்களாக சரிசெய்வதற்கான முயற்சியில் ஈடுபடக் கூடியவர்களாக இருக்க இந்த நாள் அழைப்பு தருகிறது.
இன்றைய முதல் வாசகத்தில் அடிமைத்தனத்தில் இருந்த
இஸ்ரயேல் மக்களின் அழுகுரலை இறைவன் கேட்கிறார். கேட்ட இறைவன் தன் மக்கள் படும் துன்பத்தை அறிந்தவராய் அத்துன்பத்தில் இருந்து அவர்களை விடுவிக்க கூடிய செயலில் ஈடுபடக் கூடிய ஒரு மனிதராக துன்பத்தில் வாடும் மக்களை துன்பத்தில் இருந்து மீட்டு வருவதற்காக மோசேயை அனுப்புகிறார்.
பலவிதமான தயக்கம் மனதில் இருந்த போதும், மோசேயை அனுப்புகிறார். ஆண்டவரின் அழைப்பைக் கேட்டு அவரது வார்த்தைகளை வாழ்வாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, மோசே எகிப்தை நோக்கி பயணப்படலாம் என எண்ணினாலும் அவரின் உள்ளத்தில் பலவிதமான கேள்விகள் அரங்கேறின.
யாரை நம்பி நான் செல்வது? எந்த கடவுள் உன்னை அனுப்பினார் என கேட்டால் நான் எதை சொல்வது என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது. என்னை நம்பாத மக்களுக்கு அவர்கள் நம்பும்படியாக நான் என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது.
கேள்விகளை இறைவனிடத்தில் எழுப்பினார். இறைவனும் தன்னை இருக்கின்றவராக இருக்கின்றவர் நான் என்பதை வலியுறுத்தினார் . அதுபோலவே ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள், என வழி வழியாக இந்த மக்களை வழி நடத்திக் கொண்டிருப்பவர் தான் என்பதை மோசேக்கு அறிவுறுத்தி, நான் தான் உன்னை இம்மக்களிடம் அனுப்புகிறேன் எனச் சொல்லி, அந்த அடிமைத்தனத்திலிருந்த மக்களின் துயரத்தைக் கண்ட இறைவன், அவற்றைத் துடைப்பதற்கான முயற்சிக்கு மோசேயை அனுப்புவதை முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. ஆனால் மோசேயால் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வரப்பட்ட மக்கள் அனைவருமே தங்களை மீட்டு வந்த இறைவனை முழுமையாக நம்பி, அவரோடு உள்ள உறவில் நிலைத்திருந்தார்களா என எண்ணுகின்ற போது, அவர்களின் வாழ்வு எதிர்மறையாக இருந்தது என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு வலியுறுத்துகின்றது.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய கடிதத்தில் அந்த மக்களுக்கு பலவிதமான ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் போதனைகளை அறிவுறுத்தி இருந்த நிலையிலும், அவர்கள் பல நேரங்களில் நினைவுறுத்திய இறை வார்த்தைகளை எல்லாம் புறம் தள்ளிவிட்டு, தங்கள் மனம் போன போக்கில் வாழக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களின் செயலை நயமாக வரலாற்றுப் பின்னணியோடு, பவுல் சுட்டிக் காண்பிக்கின்றார்.
அன்று எகிப்தில் இருந்து அழைத்து வரப்பட்ட மக்கள் அனைவரையும் இறைவன் ஒன்று என கருதினார்.
எப்படி உதிக்கின்ற ஒரு சூரியன், நல்லோர் தீயோர் எனப் பாராமல் அனைவர் மீதும் தனது ஒளிக்கீற்றை மனிதர்கள் மீது வீசுகிறதோ, அதுபோல இவரையும் இறைவன் அழைத்து வந்தார்.
அழைத்து வரப்பட்ட மக்கள் அனைவருமே ஆண்டவரின் வார்த்தைக்கு ஏற்ப தமது வாழ்வை அமைத்துக் கொண்டார்களா? என்று பார்க்கும் போது, அவர்களில் சிலர் மட்டுமே ஆண்டவரது வார்த்தைக்கு ஏற்ப தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் என்பது வெள்ளிடை மலையாகப் புலப்படுகிறது.
இத்தகைய ஒரு நிலை தான் இன்று கொரிந்து நகர மக்களின் வாழ்விலும் இருக்கிறது என்பதைப் பவுல் எடுத்துரைக்கிறார். இவ்வாறு எடுத்துரைப்பதன் வழியாக சமூகத்தில் இறைவன் விரும்பாத வகையில் தமது வாழ்வை அமைத்திருக்கக்கூடிய மனிதர்களின் குற்றங்களை சுட்டிக் காண்பித்து, நாள்தோறும் மனமாற்றத்தை பெற்றவர்களாய், மனமாற ஒரு அழைப்பினை தருகிறார். இந்த மனமாற்றத்தையே இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு வலியுறுத்துகிறது.
பலன் தரும் என்ற எண்ணத்தோடு வைக்கப்பட்ட ஒரு அத்தி மரம், பருவ காலம் வந்த பிறகும் கூட நல்லதொரு கனியைத் தராத காரணத்தினால், இந்த மரத்தினை வெட்டி விட வேண்டும் என எண்ணியதோடு, மீண்டும் ஒரு வாய்ப்பினை அந்த மரத்திற்கு கொடுப்போம். மரத்தினை சுற்றிக் கொத்தி, உரமிட்டு, நீர்ப் பாய்ச்சுவோம். கண்டிப்பாக இன்னொரு வருடத்தில் இந்த மரம் கனி தரும் என எதிர்பார்ப்போம் என்ற எண்ணத்தோடு, அத்திமர உவமையை இறைவன் பயன்படுத்தி இந்த சமூகத்தில் இறைவன் அவரது வார்த்தைகளுக்கேற்ப நாம், நமது வாழ்வை அமைத்துக் கொள்ளாத நேரங்களில் எல்லாம் அவர் அத்தி மரத்திற்கு ஒரு வாய்ப்பைத் தந்தது போல, நமக்கும் ஒரு வாய்ப்பை தருகிறார்.
நம்மை நாம் சரி செய்து கொண்டவர்களாய், ஆண்டவரின் வார்த்தைகளை வாழ்வாக மாற்றிக் கொண்ட மனிதர்களாக இந்த சமூகத்தில் நாம் மாறிட இன்னொரு வாய்ப்பை இறைவன் தருகிறார். அது போல தரப் பட்டது தான் இந்த தவக்காலம்.
தவக்காலம் என்பதே நாம் நம்மை குறித்தும், நமக்கும் - கடவுளுக்கும், நமக்கும் நமது வார்த்தைகளுக்கும் நமது செயல்களுக்கும் நமக்கும் பிறருக்கும் இடையேயான உறவை குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும். அதில் இருக்கின்ற தேவையற்றவற்றை எல்லாம் விலக்கிவிட்டு, நம்மை நாம் சரி செய்து கொண்டு, மீண்டும் நல்லதொரு உறவில் வளர தரப்பட்டது தான் இந்த தவக்காலம்.
இந்தத் தவக்காலத்தில் நம்மை குறித்தும், நமது செயல்களை குறித்தும், நமது அருகில் இருக்கின்ற நபர்களை குறித்தும் சந்திக்கின்ற நாம், நல்லதொரு மனமாற்றத்தை உள்வாங்கிக் கொண்டு, நல்லதொரு மனமாற்றத்தை நமக்குள் உருவாக்கிக் கொண்டு, ஆண்டவர் விரும்பும் மக்களாக, கீழ்ப்படியக் கூடிய மக்களாக அவரைப் போலவே இந்த சமூகத்தில் அரங்கேறுகின்ற அநீதிகளை எல்லாம் எதிர்த்துக் குரல் எழுப்புகிற மக்களாக இந்த சமூகத்தில் வாழ வேண்டும் என்பதை இறைவன் இன்றைய நாளில் நமக்கு வலியுறுத்துகிறார்.
இறைவன் வலியுறுத்துகின்ற இந்த வாழ்வுக்கான பாடத்தை உணர்ந்து கொண்டவர்களாக, வாழ்வில் துன்பங்கள் வருகிற போதெல்லாம், அந்தத் துன்பங்களை எல்லாம் கடந்து, நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துகின்ற இறைவனின் இருப்பை உணர்ந்து கொண்டவர்களாக எப்படி இஸ்ரயேல் மக்களை பகலில் மேகத்தூணாகவும், இரவில் நெருப்பு தூணாகவும் இறைவன் இருந்து வழிநடத்தினாரோ, அதுபோல நாம் நமது வாழ்விலும் துன்பங்களையும் துயரங்களையும் சந்திக்கின்ற போது, இந்து சமூகத்திலும் துன்பங்களையும் துயரங்களையும் அவலங்களையும் சந்திக்கின்ற போதெல்லாம் இறைவன், நம்மை வழி நடத்துகிறார் என்பதை உணர்ந்து கொண்டவர்களாக, நல்லதொரு மனமாற்றத்தை நமக்குள் உருவாக்கிக் கொண்டு, ஆண்டவரின் வார்த்தைகளை வாழ்வாக்கிக் கொண்டு இந்த சமூகத்தில் பயணம் செய்ய இறைவன் இன்றைய நாளில் நமக்கு அழைப்பு தருகிறார். இறைவனது அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாய் நல்லதொரு மனமாற்றத்தை நமக்குள்ளாக விதைத்துக் கொள்ள இந்த நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்றவர்களாய் இனி வருகின்ற இயேசுவின் இறப்பை, உயிர்ப்பை எதிர்கொள்ளவிருக்கின்ற நாம், இதுநாள் வரை நம்மை நாம் மாற்றிக் கொள்ளாதே இருந்து இருப்போமாயின், இனி நம்மை மாற்றிக் கொண்டு, தவறான நமது செயல்களை மாற்றிக் கொண்டு, ஆண்டவருக்கு உகந்த செயல்களை நமது செயல்களாக மாற்றிட இறையருள் வேண்டி தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக ஜெபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக