திங்கள், 7 மார்ச், 2022

அர்த்தம் உணர்ந்து செபிப்போம்....(8.3.2022)

அர்த்தம் உணர்ந்து  செபிப்போம்....


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தவக்காலம் என்பது செபத்தின் வாயிலாக ஆண்டவரோடு இணைந்து இருக்க அழைப்பு விடுக்கின்ற ஒரு காலம்.  இந்த காலத்தில் நாம் ஏறெடுக்கின்ற செபம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு உணர்த்துகின்றார். 

 அன்றைய காலகட்டத்தில் 
ஒரு சில யூதர்கள் மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக செபித்தார்கள். அதற்கு யூதர்களின் செபமுறையும் உகந்ததாக இருந்தது. யூதர்கள் செபிக்கிறபோது, நின்றுகொண்டு செபித்தார்கள். அவர்களின் இருகரங்களம் விரிக்கப்பட்டு, உள்ளங்கைகள் வானத்தை நோக்கியும், அவர்களின் சிரம் தாழ்த்தியும் செபித்தார்கள். காலையும், மாலையும் அவர்கள் செபித்தார்கள். எந்த வேலையைச் செய்தாலும், இந்த வேளைகளில் எங்கிருந்தாலும் அவர்கள் செபிக்க ஆரம்பித்தார்கள். தாங்கள் எப்படி செபிக்கிறோம்? என்பது மற்றவர்களுக்கு தெரிய வேண்டுமென்று செபித்தார்கள். குறிப்பாக தொழுகைக்கூடங்களின் முன்நின்று, நீண்ட நேரம், மற்றவர்கள் கண்ணில்படும்படி நின்றுகொண்டு செபித்தார்கள்.

ஒரு சில யூதப்போதகர்களே, மக்களை இத்தகைய செயலுக்காக கடுமையாக கண்டித்திருக்கிறார்கள். எனவே தான், வெளிவேடத்தனத்தோடு வேண்டப்படுகிற செபம், இறைவனால் கேட்கப்படாது என்று விளக்கம் கொடுத்தார்கள்.


நாம் கடவுளோடு எத்தகைய உறவை செபத்தின் வாயிலாக கொண்டிருக்க வேண்டும் என்பதை இயேசு என்று உணர்த்துகிறார்.  ஆண்டவர் இயேசு நாம் எப்படி செபிக்க வேண்டும் என்பதற்காக நமக்கு கற்றுக்கொடுத்த ஜெபத்தினை அனுதினமும் நாம் பல நேரங்களில் பல இடங்களில் பயன்படுத்துகிறோம்.  சில நேரங்களில் நாம் செய்கின்ற இந்த செபத்தினை குறித்து சிலர் கேலி செய்வதும் உண்டு. ஏன் இவர்கள் திரும்பத் திரும்ப ஒரே வார்த்தைகளை உச்சரித்து கொண்டே இருக்கிறார்கள் என்று கூட. ஆனால் இந்த வார்த்தைகளுக்குள் அடங்கி இருக்கக்கூடிய  மகத்துவத்தை அறியாத நிலையில் தான் அவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள். 

 "இந்த விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே" என்ற செபத்தின் வாயிலாக நாம் கடவுளை புகழுகிறோம்.  நமது அன்றாட தேவைக்காக இறைவனிடத்தில் மன்றாடுகிறோம். நாம் எப்படி இருக்க வேண்டும்? நாம் எப்படி இருந்தால் கடவுள் எப்படி இருப்பார் என்பதையும் இந்த செபமானது நமக்கு வலியுறுத்துகிறது. 

மன்னிப்பை பற்றி பேசுகிற நாம் மன்னித்தால் தான் கடவுள் நம்மை மன்னிப்பார் என்பதை இந்தச் செபம் வலியுறுத்துகிறது.  மனிதனின் அடிப்படைத் தேவை ஆகிய உணவுக்கு இறைவனுக்கு நன்றி கூற வேண்டும் என்ற உன்னத பாடத்தை இந்த செபம் நமக்குக் கற்பிக்கிறது. 

     இந்த ஜெபத்தை பத்தோடு பதினொன்று அத்தோடு நான் ஒன்று என்ற மனநிலையோடு நாம் சொல்லாது, மன நிறைவோடு அர்த்தம் உணர்ந்த வகையில்,  நாம் அனைவரும் இணைந்து வார்த்தைகளின் அர்த்தத்தை உணர்ந்தவர்களாக ஆண்டவர் இயேசு அர்த்தமுடன் ஜெபித்தது போல நாமும் அர்த்தத்தை உணர்ந்தவர்களாக, பிறரைப் போல அல்லாமல், அர்த்தத்தை உணர்ந்து செபிக்கக் கூடிய மக்களாக இருக்க வேண்டும் என்பதை இந்த நாள் நமக்கு வலியுறுத்துகிறது.  இத்தகைய சிந்தனையை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டவர்களாய், உள்ளார்ந்த எண்ணத்தோடு,  உண்மையான மன நிலையில் ஆண்டவர் கற்பித்த செபத்தை  அனைவரும் இணைந்து செபிப்போம். இணைந்து சொல்லுவோம். 


விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே! உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக! எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்! எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும்! எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும்! தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

   என்று நாம் செபிக்கின்ற இந்த செபமானது, 
நமது வாழ்வை நெறிப்படுத்துவதாகவும் நமக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள உறவை இன்னும் ஆழப்படுத்தவும்,   உதவும் என்பதை மனதில் இருத்தியவர்களாய்,  நேரம் கிடைக்கிற போதெல்லாம் அர்த்தத்தை உணர்ந்தவர்களாக  இந்த செபத்தை நமது வாழ்வில் நாம் மேற்கொள்ள இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...