கடவுளோடு நாமும், நம்மோடு கடவுளும் உரையாடிட...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தவக்காலமானது இறைவனோடு உள்ள உறவில் ஆழப்பட நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைவனோடு உள்ள உறவில் ஆழப்பட வேண்டுமாயின் அதற்கு செபம் இன்றியமையாத ஒன்று.
அன்றைய காலகட்டத்தில் செபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர்கள் யூதர்கள். அனைத்திலும் முதன்மையானது செபம் என்பது அவர்களின் எண்ணம். செபத்தைப்பற்றி யூதர்களுக்கு ஏதாவது கவலை இருந்தததென்றால், அது நாள்முழுவதும் நம்மால் செபிக்க முடியவில்லையே என்பதுதான். அந்த அளவுக்கு செபத்திற்கு வாழ்வில் முக்கிய இடத்தை கொடுத்திருந்தார்கள். யூதர்களுடைய வாழ்வே செபத்தை மையப்படுத்தியதாகத்தான் இருந்தது. இத்தகைய பின்புலத்தில் இயேசு, செபிப்பதால் கிடைக்கும் பலன்களை நமக்குச்சொல்கிறார். இறைவன் நம் செபத்தைக் கேட்கிறாரா? நாம் கேட்பதை இறைவன் நமக்குத்தருவாரா? இறைவன் எப்படிப்பட்டவர்? போன்ற கேள்விகளுக்கு பதிலையும் இன்றைய நற்செய்தியிலே தருகிறார்.
செபம் இறைவனோடு பேசுவதற்கு மட்டுமல்ல, இறை ஆற்றலை நிறைய பெற்றுக்கொள்வதற்கான பலமான ஆயுதம் என்பதை இயேசு ஆணித்தரமாக வலியுறுத்துகிறார்.
நாம் கடவுளோடு கொள்ளுகின்ற உறவானது தந்தை மகனுக்குரிய உறவு போல இருக்க வேண்டும்
என்பதை இயேசு எடுத்துரைக்கிறார். தந்தையிடம் கேட்கின்ற போது தந்தை எப்படி நமக்கு நலமானதை நல்குவாரோ, அதுபோலவே இறைவனும் நமது தேவைகளை அறிந்தவராய் நாம் கேட்பதை நமக்கு தரக்கூடியவராக இருக்கிறார். ஆனால் ஆண்டவரோடு உரையாடும் போது நம்பிக்கையோடு உரையாட நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
நம்பிக்கையால் எல்லாம் கூடும். நம்பிக்கையால் ஆண்டவரையும் நலமானதை, நாம் விரும்புவதை நமக்கு தர வைக்கும். நாம் நம்பிக்கையோடு கேட்கிற போது நமது செபம் கேட்கப்படும். நாம் நமது செபத்தில் இறைவனோடு உள்ள உறவில் இன்னும் ஆழப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த தவக்காலம் தரப்பட்டுள்ளது. செபம் என்பதே கடவுளோடு கொள்ளுகின்ற உரையாடல். இந்த உரையாடலில் இருவரும் உரையாடவேண்டும். ஒருவர் மட்டும் பேசுவதும் மற்றவர் கேட்டுக் கொண்டிருப்பதும் முறையான செபம் ஆகாது.
இறைவன் எப்படி என்னோடு பேசுவார்? அன்று சாமுவேலை நோக்கி சாமுவேல்! சாமுவேல்! என அழைத்தது போல நம்மை அழைத்து பேசுவாரா? அல்லது அன்று எரேமியாவினிடத்தில் தோன்றி பேசிய வானதூதர்கள் வழியாக பேசியவர் போல நம்மிடம் தோன்றிப் பேசுவாரா? என்ற கேள்வி இதயத்தில் எழலாம். ஆனால் அமைதியில் அமருகின்ற போது ஆண்டவரின் குரலை நாம் உணர முடியும். கடவுளின் ஆவியார் குடி கொண்டிருப்பது நமது உடலாகிய இந்த ஆலயத்திற்குள்.
நமக்குள் இருந்து கொண்டு நமக்கு நல்லது கெட்டதை சொல்லித் தரக்கூடிய இந்த ஆவியானவரின் குரலுக்கு செவி கொடுக்கும் போது நாம் இறைவனின் குரலைக் கண்டு கொள்ள முடிகிறது. நாம் இறைவனை எங்கெங்கோ தேடுவதை நிறுத்தி, நமக்குள்ளே உறைந்திருக்கும் இறைவனை நமக்குள்ளாக தேடுவோம். நமக்குள் இருந்து கொண்டு நன்மை தீமையை எடுத்துரைக்கக்கூடிய அவரின் குரலுக்கு கவனத்தோடு செவி கொடுப்போம். இத்தகைய செபத்தின் வாயிலாக கடவுளோடு நாமும், நம்மோடு கடவுளும் உரையாடுவோம். உரையாடல் வழியாக உறவுகளை பலப்படுத்திக் கொள்ள இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக