நமது வாழ்வும்...நோம்பும்...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்கள் நோன்பை குறித்து சிந்திக்க நமக்கு அழைப்பு தருகின்றன.
யோவானுடைய சீடர்கள் இயேசுவினிடத்தில் நாங்கள் அதிகமாக நோன்பு இருக்க உமது சீடர்கள் நோன்பு இருக்கவில்லை எனக் கூறுகிறார்கள். யோவானுடைய சீடர்கள் நோன்பு இருப்பதற்கான பின்னணி என்ன? என ஆராய்கின்ற போது, யோவான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சூழலில் இந்த உரையாடல் நடக்கிறது. எனவே, தங்களுடைய வழிகாட்டியாக இருந்த திருமுழுக்கு யோவான் சிறையில் இருப்பதால் வருத்தத்தோடும், முகவாட்டத்தோடும், நோன்பினை மேற்கொள்ளக் கூடியவர்களாக யோவானுடைய சீடர்கள் இருந்தார்கள்.
அவர்களைப் போல இந்த நோன்பு முயற்சிகளை இயேசுவின் சீடர்கள் பின்பற்றவில்லை, என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருந்தது. நாம் செய்கின்ற ஒரு செயலை அடுத்தவரும் செய்தாக வேண்டும் என எண்ணுவது ஏற்புடைமை ஆகாது. ஒவ்வொருவரும் அவரவர் நிலையில் இருந்து நல்ல செயல்களை, தர்மச் செயல்களை, தவச் செயல்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை இயேசு வலியுறுத்துகிறார்.
இன்றைய வாசகங்களில் இயேசு, தன்னுடைய சீடர்கள் நோன்பு இருக்க மாட்டார்கள் எனக் கூறவில்லை. மணமகன் தங்களோடு இல்லாதபோது அவர்களும் நோன்பு இருப்பார்கள் என்பதை வலியுறுத்துகிறார்.
சபை உரையாளர் புத்தகம் மூன்றாம் அதிகாரம் 1 ஆம் வசனம் கூறுகிறது,
"ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு" என்று.
அவ்வார்த்தைகளின் அடிப்படையில் ஆண்டவர் இயேசுவின் அன்பை உணர்ந்த நாம் அவரை விட்டுப் பிரிந்து போன நேரங்களை நினைத்துப் பார்ப்பதற்கான ஒரு காலமாகவே இந்த தவக்காலம் நமக்குத் தரப்பட்டிருக்கிறது. இந்தத் தவக்காலத்தில் உண்ணாதிருப்பதன் வாயிலாக நாம் கடவுளின் உடனிருப்பை உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். நாம் செய்கின்ற உண்ணா நோன்பானது, இறைவனுக்கும் நமக்கும் இடையேயான உறவை குறித்து சிந்திக்க நமக்கு வழி வகுக்கிறது. இறைவனது உடனிருப்பை, நாம் தவறிய நேரங்களை, நினைவுகூர, நம்மை ஒறுத்து அவரோடு உள்ள உறவை சரி செய்து கொள்ள இந்த தவக்காலம் நமக்கு அழைப்புத் தருகிறது. இவ்வார்த்தைகளின் அடிப்படையில் நாம் ஆண்டவரோடு கொண்டுள்ள உறவு குறித்து சிந்திப்போம். உண்ணாநோன்பு இருப்போம்.
நாம் நோன்பு என்ற பெயரில் உண்ணாது இருக்கின்ற உணவை, இல்லாதவரோடு பகிர்வோம். நம்மை நாம் ஒறுத்து செய்கின்ற தவ முயற்சிகளால் தர்மச் செயல்களுக்கு வழிவகுப்போம். நாம் உண்ணாத உணவை மற்றவரும் உண்ணக்கூடாது என எண்ணுவதை விட, நாம் உண்ணாத உணவை மற்றவர் உண்ண, தர்ம செயல்களை மேற்கொள்ள, இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன. அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய் நம்மை நாம் சரி செய்து கொள்ள முயல்வோம்.
எல்லாம் அருமையக உள்ளது
பதிலளிநீக்கு