நல்லதொரு மனமாற்றத்தை நம்முடையதாக்கிக் கொள்ள...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தைகள் யூதர்கள் இயேசுவின் மீது கோபம் கொண்டதை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. ஏன் யூதர்கள் இயேசுவின் மீது கோபம் கொண்டார்கள்? எனப் பார்க்கிற போது, பொதுவாகவே ஒரு மனிதன் தன்னை கடவுள் எனவும், தான் கடவுளிடமிருந்து வந்தவர் எனவும் போதித்தால், அவன் கடவுளை பழிக்கிறான் என யூதர்கள் கருதினர். இதனை மாற்கு நற்செய்தி 14ஆம் அதிகாரம் 61, 63 இறை வசனங்களில் நாம் வாசிக்க கேட்கலாம்.
இயேசு தன்னை மெசியா என்றதும், நான் கடவுளிடம் இருந்து வந்தேன் எனக் கூறியதும் யூதர்களின் வெறுப்புக்கு ஆளாக்கத் தூண்டியது. இரண்டாவதாக யூதர்கள் தங்களை கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட மக்கள் என நம்பிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் இயேசுவோ, நீங்கள் கடவுளை அறியாதவர்கள். நீங்கள் கடவுளை அறியவில்லை எனக் கூறி அவர்களிடம் காணப்பட்ட கடவுளைப் பற்றிய தவறான புரிதல்களை சுட்டிக் காண்பித்தார். இந்த இரண்டையும் அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. எனவே தான் இயேசுவின் மீது கோபம் கொண்டார்கள். அவரை பிடித்து சிலுவையில் அறைந்து கொல்லும் அளவிற்கு துணிந்தார்கள். இயேசுவின் சிலுவை மரணத்திற்கு தீர்ப்பிட்ட போது கூட இயேசுவுக்கு எதிரான அவர்களது குற்றச்சாட்டுகளுள் ஒன்று, இவன் தன்னையே கடவுளென சொல்லிக்கொண்டான் என்பதாகும்.
இன்றைய இந்த இறை வார்த்தைகள் மூலம் இறைவன் இன்று நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன? என சந்திக்கும் போது மனிதர்களாகிய நாம் பல நேரங்களில், நாம் செய்கிற தவறுகளை சுட்டிக் காண்பிக்கிற போது, நாம் செய்கிற தவறுகளை சரி செய்து கொள்வதை விட, தாங்கள் செய்கின்ற செயல்களை நியாயப்படுத்தக் கூடிய நபர்களாகத் தான் பல நேரங்களில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் நாம் செய்வது தவறு என சுட்டிக் காட்டப்படும் போதெல்லாம் நாம் செய்கின்ற தவறுகளை நியாயப்படுத்துவதற்கு பதிலாக, நாம் செய்கின்ற செயல்களை குறித்து சிந்தித்துப் பார்த்து, நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இறைவன் இந்த நாளில் அழைப்பு தருகிறார். இறைவன் தருகின்ற இந்த அழைப்பை உணர்ந்தவர்களாக, நமது தவறான செயல்களை கண்டு கொண்டு, நல்லதொரு மனமாற்றத்தை நம்முடையதாக்கிக் கொள்ள இறையருள் வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக