செபமே நமது வாழ்வு....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய வாசகங்கள் நமது செபம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. இந்தத் தவக்காலத்தில் பல நேரங்களில் நாம் தவக்கால பயிற்சியாக பல ஆலயங்களுக்கு சென்று சிலுவைப்பாதை செய்வதும், செபமாலை செபிப்பதும், புனிதப் பயணங்கள் மேற்கொள்வதும், நாம் முன்னெடுக்கின்ற தவ முயற்சிகளுள் ஒன்றாக அமைகின்றன.
இப்படிப்பட்ட முயற்சிகள் வாயிலாக நாம் ஆலயத்திற்கு செல்லும் பொழுது நமது செபங்கள் எப்படிப்பட்டதாக இருக்கின்றன? நமது செபங்கள் நமது மனம் தேடுவதை எல்லாம் மட்டுமே இறைவனிடத்தில் கேட்கின்ற ஒன்றாக இருக்கின்றதா? அல்லது மற்றவரின் நலனை மையப்படுத்தியதாக, அகிலத்தின் நலனை முன்னிறுத்தக் கூடியதாக, நமது அருகில் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றக் கூடியதாக நமது செபம் இருக்கின்றதா? நமது செபத்தால் நாம் நமது பெருமைகளை பேசுபவர்களாக இருக்கின்றோமா? அல்லது நம்மை தாழ்த்திக் கொண்டவர்களாய் அடுத்தவர்களின் நலனுக்காக செபிக்கக் கூடியவர்களாக இருக்கின்றோமா? சிந்திப்போம்.
ஆண்டவரிடம் அச்சம்கொள்ளுதல் ஞானத்தைத் தரும் பயிற்சி; மேன்மை அடையத் தாழ்மையே வழி.
நீதிமொழிகள் 15:33
இந்த இறை வார்த்தைக்கேற்ப ஆண்டவர் திருமுன் நம்மை தாழ்த்தியவர்களாக, நமது செபத்தில் ஆண்டவரைக் கண்டு கொள்ளக் கூடியவர்களாக, ஆண்டவரது சாயலாகப் படைக்கப்பட்ட நம் அருகிலிருக்கும் அடுத்தவர்களை கண்டு கொள்ளக் கூடியவர்களாக நமது செபங்கள் அமைந்திட இறையருள் வேண்டி இன்றைய நாளில் இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக