தன்னலம் துறக்க!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இயேசுவைப்பின்பற்ற வேண்டுமானால் ....
ஒருவர் தன்னலம் துறக்க வேண்டும்,
நாள்தோறும் சிலுவையைத்தூக்க வேண்டும்.
தன்னலம் என்பது தன்னை முன்னிறுத்துவது. தன் நலனுக்கான காரியங்களை மட்டும் செய்வது. தன் நலனுக்காக மற்றவர்களைப் பயன்படுத்துவது. தனக்கு எந்த துன்பமும் வரக்கூடாது, தான் மட்டும் நன்றாக இருந்தால் போதுமானது, மற்றவர்களைப்பற்றிய கவலையும், அக்கறையும் இல்லாத மனநிலை தன்னலம்.
இயேசுவைப் பின்பற்ற வேண்டுமானால் இந்த தன்னலத்தை துறக்க வேண்டும். அதாவது, தன் ‘நலம்’ துறந்து மற்றவர் நலன் காக்க வேண்டும்.
இயேசுவைப் பின்பற்ற ஒவ்வொருநாளும் நாம் சிலுவையைத் தூக்க வேண்டும்.
இயேசுவின் சீடனாக வாழ சிலுவையைச் சுமப்பதைத் தவிற வேறு வழி இல்லை. இயேசுவுக்காக வாழ்வதே அச்சிலுவை. இயேசுவின் போதனையின்படி வாழ்வதே அச்சிலுவை. இயேசுவின் போதனை விசித்திரமான போதனை அல்ல, மனிதத்துக்கு முரணான போதனை அல்ல. மனிதன் தன் நல்வாழ்வுக்காக கடைபிடிக்க வேண்டிய அன்றாட வாழ்க்கை நடைமுறை.
நமது வாழ்வில் தினமும் தனித்தனி சிலுவைகள் போல பல பிரச்சனைகள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனை என்ற சிலுவை தொடர்கிறது.
தினமும் நம் வாழ்வின் சுமைகளை மகிழ்வோடு ஏற்று சுமக்க வேண்டும் , அதுவே உண்மைச் சீடனின் பண்பாகும்.
தன்னலத்தை துறந்து நமது சிலுவைகளை நாமே சுமந்து கொண்டு ஆண்டவர் காட்டுகின்ற பாதையில் பயணம் செய்து அவரது உயிர்ப்பு பெருவிழாவிற்கு நம்மை நாம் தகுதி உள்ளவர்களாக மாற்றிக்கொள்ள இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக