ஞாயிறு, 20 மார்ச், 2022

நம்பிக்கையே.... உதாரணமாகிட வழி...(21.3.2022)

நம்பிக்கையே.... உதாரணமாகிட வழி...

இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இயேசு தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்தில் போதிக்கிறார். நாசரேத் என்பது இயேசுவின் சொந்த ஊர். இயேசுவின் போதனையைக்கேட்டு அவருடைய சொந்தமக்கள் இயேசுவிடத்தில் கோபப்படுகிறார்கள்.


ஏன் இயேசுவின் மீது கோபம் கொண்டார்கள்? என சிந்திக்கின்ற போது ...  சீதோனும், சிரியாவும் புற இனத்துப்பகுதிகள். இயேசு பிறஇனத்தவரை உயர்த்திப்பேசுவதுதான் மக்களுக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில், யூதர்கள் தாங்கள் தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம், கடவுள் பார்வையில் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தவர்கள். எனவே, யூதர் அல்லாத மற்றவர்களை அவர்கள் இழிவாகக்கருதினர். இப்படித்தாங்கள் இழிவாகக்கருதும் பிறஇனத்தவரை, யூதரான இயேசு, புகழ்ந்துகூறியதை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. எனவே, அவரை வெளியே துரத்தி, மலைஉச்சியிலிருந்து கீழே தள்ளிவிட முயன்றனர். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு எதற்காகப் பிற இனத்தவரை உயர்த்திப்பேச வேண்டும்? எதற்காக அதை யூதர்களுக்கு மத்தியில் சொல்ல வேண்டும்?  ஏன் இயேசு சாரிபாத்தில் வாழ்ந்த கைம்பெண்ணையும், நாமானையும் உதாரணமாகச்சொல்கிறார் என்று சிந்தித்தால்  இவர்கள் இரண்டுபேருமே பிறஇனத்தவர்கள். ஆனால், இவர்கள் இருவரிடத்திலும் காணப்பட்ட  பொதுவான பண்பு: அவர்களின் நம்பிக்கை. 


நாடு முழுவதும் பஞ்சம் தலைவிரித்தாடிய போது கைம்பெண்ணிடம் மற்றவர்களுக்குக்கொடுக்கக்கூடிய அளவுக்கு மாவோ, எண்ணெயோ இல்லை. அதுதான் அவளிடம் கடைசியாக இருந்தது. இருக்கிற மாவும், எண்ணெயும் முடிந்தவுடன் அவளும், அவளுடைய பிள்ளையும் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான். ஆனாலும், எலியாவின் வார்த்தைகளை நம்பி, இருந்ததையும் எலியாவோடு பகிர்ந்துகொள்கிறார்.


 அதேபோல, நாமான் பெரிய படைத்தளபதி. செல்வந்தன். இருந்தாலும், எலிசாவின் வார்த்தைகளை நம்பி, அவருக்குப்பணிகிறார். அவர் சொன்னதைச்செய்கிறார். தொழு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நலமடைகிறார். 

நம்பிக்கையே இவர்கள் இருவரும் இயேசுவால் உதாரணம் கட்டப்படுவதற்கான காரணம். 

நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவருமே கடவுளின் பார்வையில் சரி சமமானவர்கள் என்பதை உணர்ந்தவர்களாய் பாகுபாடுகளைக் கடந்து நம்பிக்கையால் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்பதை உணர்ந்து வாழ இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து ஜெபிப்போம் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...