ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்.... (1.3.2021)

நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒருமுறை ஒரு கணவனும் மனைவியும் வீட்டில் பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது வீட்டு வாயிலில் இருந்த அழைப்பு மணி ஒலித்தது. உடனே கணவர் வாயில் அருகே சென்று பார்த்தார். ராணி!  அம்மா வந்திருக்காங்க என்று மகிழ்ச்சியோடு மனைவியை நோக்கி சப்தமாக கூறினார். உடனே மனைவி கத்த ஆரம்பித்தாள். இந்த குடும்பத்தில் நான் எத்தனை பேருக்கு தான் சமைப்பது? வீட்டுக்கு வருவோர் போவோருக்கு எல்லாம் எப்படி தினமும் சமைப்பது? அம்மா என்றால் அவர்களுக்கும் வீடு இருக்கிறது தானே! அங்கேயே சமைத்து சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டியது தானே! அவ்வப்போது மகனை பார்க்கிறேன் என்று சொல்லி இந்த வீட்டுக்கு வந்து, எனக்கு கிடைக்கும் கொஞ்ச நேர ஓய்வையும் எடுக்கவிடாமல் செய்கிறார்களே! இதுதான் அம்மாவா? இதுதான் அவரின் லட்சணமா? என்று அம்மாவின் காதில் கேட்கும்படியாக கத்த ஆரம்பித்தாள். கணவன் அவள் அருகில் வந்து அவளை அமைதிப்படுத்த முயன்றான். ஆனால் மனைவியோ எதற்கும் செவி கொடாமல் தான் மனதில் உதித்திருந்த அத்தனை வார்த்தைகளையும் கொட்டித் தீர்த்தாள். 

ஒரு நிமிட அமைதிக்குப் பின் கணவன், வருத்தமாக, "அம்மா இங்கே இருந்து திரும்பிப் போய் விட்டார்கள்" என்று கூறினான். உடனே மனைவி புன்னகை பூக்க, அப்பாடா! தொல்லை ஒழிந்தது! என்று கூறினாள். 

                      உடனே கணவன் மனைவியிடம், "உன்னுடைய அம்மா உன்னைப் பார்ப்பதற்காக முதன் முதலாக நமது வீட்டிற்கு வந்திருக்கும் இந்த நேரத்தில் இப்படிப் பேசி அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டாயே? இத்தனை ஆண்டு காலமாக உன்னுடைய அம்மா எப்படித்தான் உன்னை கவனித்துக் கொண்டார்களோ?" என்று ஆதங்கப்பட்டுக் கூறினான். உடனே மனைவி வாசலை நோக்கி ஓடினாள். ஆனால் அவள் வாசலை சென்றடைவதற்குள் அவளுடைய அம்மா அந்த வீதியை கடந்து சென்று விட்டாள். 

          ஆம் அன்புக்குரியவர்களே!
இன்றைய முதல் வாசகமானது மாட்சிமைக்குரிய இறைவனின் வல்லமையைப் பற்றியும், அதனை எதிர்த்து செயல்படுகின்ற மனிதனின் பாவ நிலையை பற்றியும் எடுத்துக் கூறுகின்றது. ஆண்டவருடைய கட்டளைகளின்படி, அவரது கட்டளைக்கு கீழ்படிந்து நடப்போரிடம், ஆண்டவர் தனது உடன்படிக்கையை நிலைநிறுத்துகின்றார். ஆனால் அவரது வார்த்தைகளுக்கு செவி கொடாமல் தனது உள்ளத்தின் தீய எண்ணங்களின் படிவாதத்தின்படி, மனம் போன போக்கிலே செயல்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒவ்வொருவருக்கும், அவர்களது எண்ணங்களின் பயனாக, அவர்களது தீய செயல்களின் பயனாக, அவர்களுக்கு சாபமும் அவமானமுமே கிடைக்கும். இவற்றையும் அவர்கள் தங்களுக்குத் தாங்களே வருவித்துக் கொள்கிறார்கள் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, தந்தையாம் இறைவன் இரக்கம் உள்ளவராக இருப்பது போல நம் ஒவ்வொருவரையும் இரக்கம் உள்ளவராக வாழ அழைப்பு தருகின்றார். நாம் பிறரை தீர்ப்பிடாமலும், பிறரை கண்டனத்திற்கு உள்ளாக்காமலும், பிறர் நமக்கு எதிராக செய்த குற்றங்களை மன்னித்து அவர்களை ஏற்றுக்கொண்டு வாழவும் ஆண்டவர் அழைப்பு தருகின்றார். மேலும் நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும் என்று கூறுகிறார். 
 
இன்றைய நாளில் நாம் நமது உள்ளத்தில் ஒவ்வொரு நாளும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஆண்டவரின் குரலுக்கு அமைதியில் செவி கொடுப்போம். 

 நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்.
யோவான் 13:15


நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன் என்று கூறிய நம் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவை போல, பிறர் நமக்கு எதிராக செய்த குற்றங்களை நாம் மனதார மன்னிக்க அழைக்கப்படுகிறோம். 

மன்னிப்பதால் - நமது மனதின் பாரம் குறைகிறது.
மன்னிப்பதால் - நமது உள்ளத்தில் அமைதி பிறக்கிறது.
மன்னிப்பதால் - நமது உள்ளத்தில் மகிழ்ச்சி ஊற்றெடுக்கிறது.
மன்னிப்பதால் - அகமும் முகமும் மலர்கின்றன.
மன்னிப்பதால் - நாம் உடல் நலமும் மன நலமும் பெறுகிறோம்.
மன்னிப்பதால் - உள்ளத்தில் பலம் பெறுகிறோம்.
மன்னிப்பதால் - நாமும் நமது அயலாரும் வாழ்வு பெறுகிறோம்.

கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்று ஒரு முன்மாதிரியை வைத்துச் சென்றுள்ளார். எனவே, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்; இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளீர்கள்.
1 பேதுரு 2:21

        எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும் என்று இன்றைய நாளில் ஆண்டவர் இயேசு நம்மைப் பார்த்து கூறுகிறார். நம்மை எந்த அளவிற்கு இறைவன் மன்னிக்க வேண்டும் என விரும்புகிறோமோ, அந்த அளவிற்கு நாம் நமது அயலாரையும் நமது அருகில் இருப்பவர்களையும் மன்னித்து, மகிழ்வோடு வாழ இன்றைய நாளை இறைவனின் கரங்களில் அர்ப்பணிப்போம். நம்மை இறைவன் ஆசீர்வதிக்கவும் பிறரை மன்னிப்பதற்கு தேவையான நல்ல மனதை இறைவன் இன்று நமக்குத் தரவும் சிறப்பாக செபிப்போம்.
இறைவனிடமிருந்து பெற்று கொண்ட மன்னிப்பின் இதயத்தின் வழியாக ஆண்டவரைப் போல  நாம் மாறிட அவரின் அருள் கேட்போம்.

கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரிக்கேற்ப நீங்கள் ஒரே மனத்தினராய் இருக்குமாறு மன உறுதியையும் ஊக்கத்தையும் தரும் கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக!
உரோமையர் 15:5.

                  ஆமென்.

சனி, 27 பிப்ரவரி, 2021

தொடர்ந்து பயணம் செய்வோம்.... (28.2.2021)

தொடர்ந்து பயணம் செய்வோம், 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
 விதையிலிருந்து மரம் வெடித்து வெளி வருகிறது. ஆனால் விதையைப் பற்றிக் கொண்டிருக்க எண்ணுவதில்லை. 

முட்டையிலிருந்து வெளி வருகிறது கோழிக்குஞ்சு. ஆனால், ஓடுகளை உயிர் என  கருதி ஒட்டிக்கொண்டு இருப்பதில்லை. 

மேகமாய் இருப்பதே மேன்மை. கீழே இறங்கி சேற்றுடன் கலப்பது கீழ்மை என மழை எண்ணுவதில்லை.  மேகம் பருவம் வந்தால் பெய்து விடுகிறது. 

மனிதனும் அப்படியே. 
பேறுகாலம் வந்தால் விடுபட்டுத் தான் ஆக வேண்டும்,தாயின் வயிற்றிலிருந்து ஒரு குழந்தையாக.  

வன்மையாக தெரிந்தாலும் தொப்புள் கொடியை வெட்டி விடத்தான் வேண்டும். அது வெட்டி பிரித்தல் அல்ல. விடுபட்டு  பிழைத்தல் என்பார்கள். 

 தாயும் சேயும் வேறு வேறு அல்ல என்ற நிலை மாறி, வேறு வேறு உடல் ஆகிறது.

இவ்வாறு இன்று மனித மனங்கள் பல ஓட்டை உயிரென பிடித்துக் கொண்டும்... மேகமாய் மேல் இருப்பதே மேன்மை என எண்ணிக் கொண்டும்.... இருக்கலாம் என எண்ணுகிறார்கள் ஆனால் நேரமும் சூழலும் கூடி வரும் பொழுது கண்டிப்பாக நாம் பிடித்துக்கொண்டு இருக்கக்கூடிய எதுவும் நம்மைக் காக்காது. நம்மை காக்க  நாம் செயலில் இறங்க வேண்டும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இதுநாள்வரை மறைத்த பலரின் உண்மை முகங்கள் வெளியாக தொடங்கிவிட்டன ... 

தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு விழா நடத்த வைத்தவரின் வீட்டில் சமஸ்கிரதம் அரங்கேறுகிறது.
ஐந்தாண்டுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் ஐந்தாம் ஆண்டு முடியும் சில நாட்களுக்கு முன்பாக அமலாக்கம் செய்யப்படும் தந்திரம் மிக்க செயல்.
கோட்டையை நான் பிடிக்கப் போகின்றேன் என பாட்டாலே பட்டிதொட்டியெங்கும் விளம்பரப்படுத்தப்படும் சிலர்.
என பரபரப்புகளுக்கு மத்தியில் 
 இன்று நாம் நினைவு கூறக் கூடிய இந்த தவக்காலமும் நமது வாழ்வை சீர்தூக்கி பார்க்க அழைப்பு தருகின்ற ஒரு காலமாகும். 

இந்த தவக்காலம் என்பது தன்னலத்தை அகற்றி, பிறரை முன்னிறுத்தி, சிந்தித்து செயலாற்ற, நம்மை அழைக்கின்றது. 

பலரும் பல நேரங்களில் இறைவனிடம் கையேந்துகிறார்கள். ஆனால் இறைவனிடம் கையேந்தி உதவி கேட்கும் நபர்களிடம் சிலர் கையேந்தி தங்களுக்கான உதவியை வேண்டுவார்கள்.  நாம் நம்மிடம் கைகளை ஏந்தி உதவி கேட்கும் நபருக்கு உதவும் போது அவருக்கு நாம் கடவுளாக தெரிகின்றோம்.  

இன்று  கடவுள் செய்யக்கூடிய அனைத்தையும் மனிதனால் செய்ய இயலும் என்பதை உணர்த்தவே, ஆண்டவர் இயேசு கிறிஸ்து மனிதனாக இம்மண்ணில் பிறந்தார்.  மண்ணில் மனிதனாக வாழ்ந்தார். மனிதன் இவ்வுலகில் அனுபவிக்கக்கூடிய அனைத்து விதமான இன்னல்களையும் அனுபவித்தார். என்னால் முடியும் என்றால், அது உங்களாலும் முடியும் என்பதை நமக்கு ஆழமாக எடுத்துக் கூறியவர் இந்த இறைவன்.  

அன்புக்குரியவர்களே! இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாமிடம் கடவுள் தன்னுடைய ஒரே மகனை தனக்கு பலியிடுமாறு கூறுகின்றார். கொடுத்தவர் இறைவன்.  இன்று கேட்பதும் அவரே என்பதை உணர்ந்தவராய்,  அவர் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவராய், கடவுளின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்து தனது ஒரே மகனை அழைத்துக் கொண்டு அவனை கடவுளுக்கு பலியிடுவதற்காக மலையை நோக்கி ஏறிச் செல்கிறார் ஆபிரகாம்.  கடவுளுக்கு பலியிடுவதற்காக பலிபீடம் கட்டி, தன் மகன் தோளில் சுமந்து வந்த விறகுகளை அதில் அடுக்கி விட்டு தனது மகனின் கைகளையும் கால்களையும் கட்டி அவனை அந்த பலிபீடத்தின் மீது படுக்க வைத்து தனது இடையில் இருந்த கூரிய வாளினை எடுத்து  பலியிடுவதற்காக கைகளை உயர்த்தினார். ஆனால்,  கடவுளின் தூதர் அவரை தடுத்து நிறுத்துகிறார். நீர் எந்த அளவிற்கு கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர் என்பதை நான் கண்டு கொண்டேன்.  உன் மகனுக்கு எத்தீங்கும் செய்யாதே எனக் கூறி, கடவுளுக்கு பலியிடுவதற்காக ஒரு ஆட்டுக்குட்டியை காண்பிக்கின்றார். இதே நிகழ்வுதான் தந்தையாம் இறைவனிடத்திலும் நாம் காண்கின்றோம். இவ்வுலக மக்களின் பாவங்களுக்காக தன்னுடைய ஒரே மகனை நமக்காக பலியிட அனுப்பி வைத்தார்.  இந்த இறைவனை போலத்தான், அன்று ஆபிரகாமும் செயல்பட்டார். கடவுளுக்காக என்ற நோக்கத்தோடு, கடவுள் கேட்கின்றார் என்று, கடவுள் கொடுத்த மகனை  கடவுளுக்கே  பலியிட முன் வருகின்றார்.இவரைப்போலவே ஆண்டவரும் மக்களுக்காக தன் ஒரே மகனை கைளிக்கின்றார்.
கடவுள் நம்மைப் படைத்தது அடுத்தவரை மகிழ்வித்து தன்னைப் போலவே அனைவரும்  இவ்வுலகத்தில் இன்புற்று வாழ வேண்டுமென விரும்புகிறார். ஆனால் இந்த உலகிலே மனிதன் பெரும்பாலான நேரங்களில் நம்மால் கடவுளை போல மாற இயலாது. கடவுளுக்கும் நமக்கும் இடையே பல விதமான வேறுபாடுகள் முரண்பாடுகள் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு, உண்மையாக இயேசுவைப் போல இவ்வுலகத்தில் உண்மைக்கும், நீதிக்கும், அன்புக்கும், நட்புக்கும், சாட்சிகளாய் திகழ்வதை விட்டுவிட்டு தன்னுடைய சுயநலப் போக்கில் இவ்வுலக இச்சைகளை எல்லாம் பிடித்துக்கொண்டு பயணம் செய்கின்றான். இதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காண்கின்றோம். 

ஆண்டவர் இயேசுவின் உருமாற்றத்தைத் தான் நாம் இன்று நற்செய்தியாக வாசிக்கக் கேட்டோம்.

ஏன் இந்த ஒரு உருமாற்றம்?
எதற்காக நிகழ்ந்தது? 
என்பது யாரும் அறியாத வண்ணம் இருக்க.. 
இறையியலாளர்கள் சிலர் இயேசு எதிர்கொள்ளவிருக்கும் பாடுகளை குறித்து மோசேயும் எலியாவும் உரையாடுகிறார் என விளக்கம் தருகிறார்கள்.ஆனால் இயேசுவோடு இருந்த சீடர்கள் இவ்வுரு மாற்றத்தின் உண்மை தன்மையை உணர்ந்து கொள்ள மறுத்து, நாம் இங்கேயே இருப்பது நல்லது. ஆளுக்கு ஒரு கூடாரம் என தனித்தனியாக அமைத்துக்கொண்டு நாம் இங்கேயே இருந்து விடுவோம் என்று கூறுகிறார்கள். அங்கு தாபோர் மலையில் நடக்கக்கூடிய இறை அனுபவத்தை ஆழமாக உள்வாங்கிக் கொள்வதை விடுத்து விட்டு,  மேலோட்டமாக, மகிழ்வோடு அங்கேயே தங்கிவிட வேண்டும் என்பதைத்தான் உள்ளத்தில் இறுகப் பிடித்துக் கொள்கிறார்கள்.
            நாம் வாழும் உலகில் பல நேரங்களில், நாமும்  மேலோட்டமாக சிறிது நேரத்தில் இன்பம் தரக்கூடிய சில செயல்களை பிடித்துக்கொண்டு இறைவனது உண்மையான உடனிருப்பையும் அவர் நமக்கு வெளிப்படுத்தும் நல்ல செயல்களையும், உள்வாங்கி கொள்ளாதவர்களாக இருந்துவிடுகிறோம். இதைத்தான் இறைவனும், செவிகள் இருந்தும் கேட்காத வர்களாக இருக்கிறார்கள் எனக் குறிப்பிடுகிறார். இத்தகைய செயல்களிலிருந்து நம்மை நாம் விடுவித்துக் கொண்டு, மேலோட்டமான செயல்களை எல்லாம் விடுத்துவிட்டு நம்மால் கடவுளை போல மாற முடியும். இயேசுவைப் போல, அனைத்து விதமான துன்பங்களுக்கு மத்தியிலும் மனிதநேயத்தோடு, நல்ல ஒரு மனிதனாக, மனித நிலையிலிருந்து கடவுளாக மாறக் கூடிய நிலையை நம்மால் அடைய முடியும் என்பதை உள்ளத்தில் ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டு பயணிக்க நாம் அழைக்கப்படுகின்றோம்.

இன்று நாம் வாழும் இந்த உலகத்தில் நம்மில் பலர் நமது நாட்டில் நடக்கும் பல நிகழ்வுகளை வெறும் செய்திகளாக மட்டுமே மேலோட்டமாக எடுத்துக்கொண்டு பயணிக்கின்றோம். ஆனால் 
அன்று இயேசு இவ்வுலகில் வாழ்ந்த போது தான் வாழ்ந்த சமூகத்தில் நிலவிய அநீதிகளை எதிர்த்து குரல் கொடுத்தார். அவர் எதையும் மேலோட்டமாக எடுத்துக் கொள்ளவில்லை. அதன் உண்மை தன்மையை ஆய்ந்து அறிந்தார்  என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. அதன் விளைவே அவரது மரணம் என்பது ஒரு அரசியல் கொலையாக சித்தரிக்கப்படுகிறது இன்றுவரை.அவரைப் பின் சென்ற பலர் இன்று நாம் வாழும் உலகில் நாம் நினைவுகூரக் கூடிய  புனிதர்களாக உள்ளனர்.எனவேதான் இன்று அவர்கள் வழியாக நாம் இறைவனிடத்தில் மன்றாடி கொண்டிருக்கிறோம்.  கடவுள் நம்மோடு இருக்கிறார். நமது மேலோட்டமான எண்ணங்களை எல்லாம் விடுத்து விட்டு, இறைவன் வெளிப்படுத்தக் கூடிய உண்மையை தூய ஆவியானவரின்  துணை கொண்டு அறிந்து கொண்டு,
அதற்கேற்ற வகையில் நலமான செயல்களை முன்னெடுக்க கூடிய நல்ல இயேசுவின் சீடர்களாக நாம் பயணம் செய்து இவ்வுலகில் இறைவனது ஆட்சியை மலரச் செய்ய அழைக்கப்படுகிறோம். 


இத்தகைய அழைப்பை வெறும் வார்த்தைகளாக எடுத்துக் கொள்ளாமல், உள்ளத்தில் ஆழமாக இருத்தி, நாம் வாழும் இவ்வுலகில் நலமான செயல்களை முன்னெடுக்கக் கூடிய இயேசுவின் சீடர்களாய் நாம் மாறிடுவதற்கு, இந்த தவக்காலம் நமக்கு அழைப்பு தருகிறது. 40 நாட்கள் நாம் பலவிதமான முயற்சிகளை எடுக்க வேண்டும் என தீர்மானித்திருக்கலாம். கடந்த ஒரு வாரமாக அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம். பல நேரங்களில் சின்னஞ் சிறு தவறுகள் மனித பலவீனத்தின் காரணமாக சிலவற்றை நம்மால் கடைப்பிடிக்க முடியாமல் சென்றிருக்கலாம். அவற்றை எண்ணி வருந்துவதை விடுத்து விட்டு, இனி வரும் காலங்களில் மேலோட்டமான பார்வைகளை அகற்றி,  நமது பார்வைகளை ஆழப்படுத்தி, ஆண்டவர் நமக்கு வெளிப்படுத்தக்கூடிய வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை நலமான நல்ல வாழ்வாக அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் தொடர்ந்து இறையருளை வேண்டி இணைந்து, செபித்த வண்ணம், நமது தவக்கால பயணத்தில் தொடர்ந்து பயணம் செய்வோம், இயேசுவின் பாடுகளை மனதில் கொண்டவர்களாக!

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

அன்புக் கட்டளை... (27.2.2021)

அன்புக் கட்டளை...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒருமுறை ஒரு இளைஞன் ஒருவன் நேர்முகத் தேர்வுக்காக ஒரு மிகப்பெரிய அலுவலகத்திற்கு சென்றான். அப்பொழுது அங்கு நுழைவாயிலின் அருகே தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதற்கு அங்கே இருந்த குழாயில் தண்ணீர் ஒழுகிக் கொண்டிருந்தது. "கண்ணா! பைப்ல தண்ணி போய்க்கிட்டே இருக்கு. அத அடைச்சு வை" என தந்தை தனது காதில் சொல்வது போலிருந்தது அவனுக்கு. சற்று கோபம் வந்தாலும் அந்தக் குழாயை அவன் சென்று அடைத்தான்.
அவன் தொடர்ந்து நடந்த பொழுது கதவிற்கு வெளியே போடப்பட்டிருந்த கால்மிதியடி ஒழுங்கு இல்லாமல் கோணலாக இருந்தது. "கண்ணா! அதை எடுத்து நேராக போடு!" என மீண்டும் தந்தை சொல்வது போல இருந்தது. எங்க போனாலும் இவரோட ஞாபகம் வந்துகிட்டே இருக்கே! என்று சற்று எரிச்சல் அடைந்தாலும், அந்த கால்மிதியடியை நேராக போட்டுவிட்டு தொடர்ந்து உள்ளே சென்றான். அங்கே நேர்முகத் தேர்வுக்காக வந்திருந்தவர்கள் எல்லாம் மாடிப்படியில் ஏறி மேலே செல்ல வேண்டியிருந்தது. அவனும் அந்தப் படியின் வழியாக மேலே ஏறிச் சென்றான். அப்பொழுது தந்தையின் குரல் காதில் கேட்பது போலிருந்தது. "கண்ணா! மாடிக்கு போற வழியில விளக்கு எரிந்து கொண்டே இருக்குது! அதை அணைத்து வைத்து விட்டு போ!" என்று சொல்வது போல இருந்தது. அங்கு சுவற்றில் இருந்த மின் விளக்கின் பொத்தானை அழுத்தி அதை அணைத்துவிட்டு, தொடர்ந்து நேர்முகத் தேர்வுக்கான அறைக்கு அருகில் சென்று அங்கு இருந்தவர்களோடு இவனும் காத்திருந்தான். இவனுக்கு அழைப்பு வந்தது. உள்ளே சென்றான். நேர்முகத் தேர்வை நடத்துபவர் புன்னகையோடு அவனை வரவேற்றார். அவனது பெயர் மற்றும் கல்வித் தகுதியை கேட்டுவிட்டு, அவனது சான்றிதழ்களையும் சரிபார்த்து வாங்கி வைத்துக் கொண்டார். பின்னர் அந்த அலுவலகத்தில் மேலாளர் பணிக்கான பணி நியமன ஆணையை அவனிடத்தில் கொடுத்தார். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. நீங்கள் என்னிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லையே!ஆனால் உடனே எனக்கு பணி நியமன ஆணை வழங்கிவிட்டீர்களே! என்று விழிகள் விரிய ஆச்சரியத்தோடு கேட்டான். 

தம்பி! நீ வாசலில் நுழைந்ததில் இருந்து, இந்த அறைக்குள் வந்த நேரம் வரை உனக்கான நேர்முகத்தேர்வு உனக்கும் தெரியாமல் நடந்து கொண்டிருந்தது. எல்லோருக்கும் அப்படியே. ஒழுகிக்கொண்டிருந்த தண்ணீரை அடைத்தது, கால்மிதியடியை சரி செய்தது, மாடிப்படியில் எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைத்து வைத்தது. இச்செயல்பாடுகள் தான் நேர்முகத்தேர்வில் நாங்கள் எதிர்பார்த்த நடைமுறைக் கேள்விகள். இந்தத் தேர்வில் நீ வெற்றி பெற்று இந்த அறையினுள் நுழைந்தாய்!  என்று அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மகிழ்வோடு அவனது கரங்களை குலுக்கி அவனை அந்த நிறுவனத்தின் மேலாளர் பணிக்கு  வரவேற்றார். கண்ணா தன் தந்தையை நினைத்து உள்ளத்தின் ஆழத்தில் அன்று இறைவனுக்கு நன்றி செலுத்தினான். 

ஆம் அன்புக்குரியவர்களே! இன்றைய முதல் வாசகம் நமக்கு ஆண்டவரின் நியமங்களை, அவரின் வாழ்வை  வளப்படுத்தும் கட்டளைகளை எடுத்துரைக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகமானது, ஆண்டவர் நமக்கு அளித்த கட்டளைகள் அன்பின் கட்டளைகள் நிறைவின் கட்டளைகள் என்பதை நமக்கு தெளிவுபடுத்துகிறது. 
நிறைவானது வரும் போது அரைகுறையானது ஒழிந்துபோம்.
1 கொரிந்தியர் 13:10

என்ற இறை வார்த்தைக்கு ஏற்ப நிறைவான தந்தையின் வாரிசுகளான நாமும் அவரில் நம்மை இணைத்துக் கொள்ளும் பொழுது, அவரது அன்பில் நம்மை வளர்த்துக் கொள்ளும் பொழுது நம்மிடம் அரைகுறையாக இருக்கின்ற நமது தீய நாட்டங்களும், தானெனும் அகந்தையும், தான் மட்டுமே என்னும் அதிகார செருக்கும் நம்மை விட்டு ஒழிந்து போகும். 

அன்பினால் அமைதியும், அமைதியால் சிந்தனைத் தெளிவும், சிந்தனைத்தெளிவால் நல் எண்ணங்களும், நல்ல எண்ணங்களால் நற்செயல்களும், நற்செயல்களால் நிறைவான மகிழ்வும், இவ்வுலகில் பரவிடும். 

            கண்ணாவிற்கு அவனது குடும்பத்தில், அவனது தந்தை பயிற்றுவித்த நற்பழக்கங்கள் அவற்றைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதில், அவனது உள்ளத்தில் சிறிது மனச்சோர்வை வெளிப்படுத்தினாலும் அன்று அந்தத் தொடர்பயிற்சியே அவனுக்கு அந்த அலுவலகத்தில் மேலான பணியைப் பெற்றுத் தந்தது. 

               ஆண்டவரின் அன்பு நிலையானது, நிறைவானது, என்பதை இன்றைய வாசகங்கள் வெளிப்படுத்துகின்றன. நிறைவானது வருகின்ற பொழுது, நம்மில் எல்லாம் நிறைவாகும். 

              நாம் உலகிற்கே ஒளி கொடுக்கின்ற சூரியனைப் போல அனைத்து சக்தியும் நிறைந்தவர்களாக இல்லாவிட்டாலும், சிறு ஒளியை தாங்கிய அகல் விளக்காக நம்மை உருவாக்கிக் கொள்வோம். அன்பு என்னும் எண்ணெயால், நமது விளக்குகள் நிரம்பட்டும். தீமைகளும் பொறாமைகளும் அவ நம்பிக்கைகளும் மனச்சோர்வுகளும் நம்மை விட்டு அகலட்டும். 

     ஆண்டவரின் அன்புக் கட்டளைகள் நமக்கு வாழ்வு கொடுக்கட்டும்!

வியாழன், 25 பிப்ரவரி, 2021

சட்டங்கள் தரும் வழிபாடுகளா?மனிதநேயச் செயல்பாடுகளா? (26.2.2021)

சட்டங்கள் தரும் வழிபாடுகளா?
மனிதநேயச் செயல்பாடுகளா?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வுலகில் நாம் வாழ்வதற்காக பிறக்கிறோம். ஆனால் வளர வளர நம்முடைய கருத்துக்கள்,  பிடிவாதமான நம்பிக்கைகள் இவற்றால் அழிவின் பாதையை தேர்ந்து கொள்கிறோம். மனிதர்களாகிய நாம் அனைவரும் வாழ்வு பெற வேண்டும். அதிலும் நிறைவாகப் பெற்று வாழ வேண்டும் என்று இறைமகன் இயேசு பல வழிமுறைகளை எடுத்துக்காட்டுகிறார். குறிப்பாக சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து செல்வதற்கான வழிமுறைகளை,  நெறிமுறைகளை இன்றைய இரண்டு வாசகங்களும் நமக்கு எடுத்துக் கூறுகின்றன. வாழ்விற்கான நெறிமுறைகள் பழைய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டிருந்தாலும், சட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்பதை விவிலிய வரலாறுகள் கூறுகின்றன. 

 பழைய ஏற்பாட்டின் பின்னணியில் பரிசேயர்களின் வாழ்வு முறையும் சட்டங்களை மையப்படுத்தியதாய் அமைந்திருந்தது. சட்டங்களின் வழியாக மட்டுமே கடவுள் நமக்கு மீட்பு தருகிறார் என்ற நம்பிக்கை மேலோங்கி இருந்தது.  ஆனால் இறைமகன் இயேசு மனித நேயம் காத்திடாத சட்டத்தை தூக்கி எறிகிறார். ஒவ்வொரு மனிதரும் சட்டங்களின் வழியாக வாழ்வு பெற வேண்டும். பிறரையும் வாழ வைக்க வேண்டும் என்ற மையக்கருத்தை இன்றைய நற்செய்தியில் வலியுறுத்துகின்றார்.  ஏனென்றால், இயேசுவின் ஆன்மீகம்,  வாழ்வை, மனிதநேயத்தை, உறவை மையப்படுத்தியதாய் அமைந்திருந்தது. 
               அவரது சிந்தனைப்படி சட்டங்கள் கொடுக்கப்பட்டது மனிதர்கள் வாழ்வை நிறைவாக வாழ உதவி செய்யவே. சட்டங்கள் வாழ்விற்கு நிறைவாக இருக்க வேண்டுமே ஒழிய, தடையாக இருக்கக்கூடாது என்பதே அவரது நிலைப்பாடு.  இந்த நிலைப்பாட்டின் பின்னணியில், பரிசேயர்களின் வாழ்க்கையை விட உங்களது வாழ்க்கை நெறி சிறந்திருக்க வேண்டும் என்று கூறுகின்றார். 

                அவரது சட்டம் மனித நேயம் காக்கும் உறவின் சட்டம்.  மானிட வாழ்வுக்கு உயர்வு தரும் மன்னிப்பின் சட்டம்.  சாதியம் கடந்து நிற்கும் சமத்துவத்தின் சட்டம். பகைமையை மறந்து உறவை மலரச் செய்யும் அன்புச் சட்டம். சமூக சீர்கேடுகளை களைந்தெறியும் புரட்சிகரமான சட்டம். இதுவே வாழ்வின் சட்டம்.  இவ்வாறாக பரிசேயர்கள் கடைபிடிக்கும் சட்டங்களிலிருந்து தனது சட்டத்தை இயேசு சற்று வேற்றுமைப்படுத்திக் காட்டுகிறார். 

இன்றைய நாளில் நாம் சட்டங்கள், பாரம்பரியம், சம்பிரதாயம், சடங்கு முறைகள் போன்றவற்றில் வாழ்வு தராத செயல்பாடுகளை களைந்துவிட்டு, இயேசு காட்டும் வாழ்விற்கான நெறிமுறைகளைப் பின்பற்றி வாழ்வோம். சாவின் நெறிமுறைகளை களைந்தெறிவதன் மூலம் வாழ்வை நிறைவாகப் பெற்றுக் கொள்வோம்!

புதன், 24 பிப்ரவரி, 2021

செபமே ஆற்றல்... (25.2.2021)

செபமே ஆற்றல்... 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாளின் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் அகம் மகிழ்கிறேன்.
இன்றைய இரண்டு வாசகங்களும் ஆண்டவரை நோக்கி நமது செபங்களை எழுப்புவதைப் பற்றி கூறுகின்றன. முதல் வாசகத்தில் எஸ்தர் அரசியும் மொர்தெக்காயும் விண்ணக ஆண்டவருக்கு மட்டுமே  ஆராதனை செய்வதாக தாங்கள் கொண்டிருந்த உறுதிப்பாட்டின் காரணமாக அரச அலுவலரால் தமக்கு ஏற்பட்ட சாவின் கண்ணிகளில் இருந்து தம்மையும், தமது மக்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என்று செபித்துக் கொண்டிருந்தார்கள். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில், "கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும், தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும், தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்", என்று ஆண்டவர் இயேசு கூறுகிறார்.


இன்றைய வாசகங்கள் வழியாக நம்முடைய தேவை என்ன? நம்முடைய பசி என்ன? நம்முடைய தேடல்கள் தான் என்ன? என்பதைப்பற்றி சிந்திக்க ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்று நமக்கு அழைப்பு தருகின்றார். 

             

இன்றைய உலகில் யாருக்கு தாகம் ஏற்படுகிறதோ அவன் ஒருவனே அங்கு நிறைவு பெறுகிறான். யாருக்கு பசி ஏற்படுகிறதோ அவன் மட்டுமே உணவை சுவைத்து உண்ண முடியும். அதுபோலவே யாருக்குத் தேவை ஏற்படுகிறதோ அவரால் மட்டுமே கேட்க முடியும், தேட முடியும், தட்ட முடியும். 

                      இன்று துரித உணவும், துரித உணவும், துரித பயன்பாடும், துரித அறிவும் என்று, அனைத்தையும் துரிதமாக தேடித்தேடி நமது வாழ்வும் கூட துரிதமாக முடிந்து விடுகின்றது என்பது இன்றைய எதார்த்தமாக இருக்கின்றது. 

இந்த அவசரமான உலகத்திலே பரபரப்பான உலகத்திலே, நாம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என சற்று நமது பயணத்தை நிறுத்தி சிந்தித்துப் பார்க்க நமது பயணத்தை நெறிப்படுத்த ஆண்டவர் இயேசு இன்று நம்மை அழைக்கின்றார். 

பகலில் பறந்து திரியும் பறவைகள் இரவில் தன்னுடைய தாய் தந்தையரோடும், குஞ்சுகளோடும், இணைந்து விடுகின்றன. 

வேட்டையாடச் சென்ற விலங்குகள் கூட இரவின் பொழுதில் தனது குட்டிகளோடு தன்னை இணைத்துக் கொள்கின்றன. 

நாள் முழுவதும் வீதியில் சுற்றி விளையாடி மகிழும் குழந்தை, மாலையானதும் தன் அம்மாவைத் தேடி தன்னை இணைத்துக் கொள்கிறது.

இவ்வுலகில் இன்று நமது மனம் விரும்பும் எதை எதையோ தேடிக் கொண்டிருக்கும் நாம், நம்மைப் படைத்த ஆண்டவரை தேடுகின்றோமா? என சிந்திப்போம்.

நமக்குள் தனது உயிர் மூச்சை நமது உயிராக தந்திருக்கும் ஆண்டவரை தேடுகின்றோமா? என சிந்திப்போம். 


அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்.
திருப்பாடல்கள் 34:5,

          என்ற இறைவார்த்தைக்கேற்ப ஆண்டவர் நமது தேடலாக அமைந்தால் நமது உள்ளம் மகிழ்ச்சியால் மிளிரும் என திருப்பாடல் ஆசிரியர் இன்று நமக்கு வெளிப்படுத்துகின்றார். 
ஆண்டவரைத் தேட நமக்கு வழியாக அமைந்திருப்பது,  ஆண்டவரோடு நமக்கு ஒரு உறவாக அமைந்திருப்பது, அவரது நிறை மகிழ்ச்சியை, இன்ப சாந்தத்தை நமது உள்ளத்தில் உணர்ந்து மணம் பரப்ப நமக்கு உதவுவது நமது அருளின் நேரமாகிய செபத்தின் நேரம் என்பதை இன்றைய நாளில் கண்டுகொள்வோம்.

விவிலியத்தில் நாம் காண்பது போல,

தாவீது அரசரைப் போல அதிகாலையில் செபிப்போம்! 

தானியேலைப் போல மதிய வேளையில் செபிப்போம்! 

பவுல், சீலாவைப் போல, நடு இரவில் செபிப்போம்!

பேதுருவைப் போல ஆபத்திலே செபிப்போம்!

 அன்னாவைப் போல கவலையிலே செபிப்போம்! 

யோபுவை போல துன்பத்திலும், நோயிலும், இகழ்ச்சியிலும் செபிப்போம்!

 சாலமோனைப் போல வேலையின் முடிவில் செபிப்போம்! 

இயேசுவைப் போல எப்பொழுதும் செபிப்போம்!

செபத்தின் வழியாக ஆற்றல் பெற்று, ஆண்டவரை நோக்கிப் பார்த்து மகிழ்ச்சியால் மிளிர்ந்திட, ஆண்டவரிடம் கேட்போம்! அவரின் அருளைப் பெற்றுக் கொள்வோம்!

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

உயர்ந்த எண்ணங்களால் உள்ளத்தை அலங்கரிப்போம்... (24.2.2021)

உயர்ந்த எண்ணங்களால் உள்ளத் அலங்கரிப்போம்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய இரண்டு வாசகங்களும் மனம் மாறுதலைப் பற்றிய ஒரு விளக்கத்தை, அதன் தாக்கத்தை இன்று நமக்கு வெளிப்படுத்துகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் நாம் காணும் இறைவாக்கினர் யோனா ஒரு இஸ்ரயேலர். யூதப் பின்னணியோடு பிறந்தவர். யோனா என்பதற்கு புறா என்பது பொருள். யோனா நினிவே நகருக்கு இறைவாக்கு உரைக்க கடவுளால் அனுப்பப்படுகிறார். ஆனால் யோனாவிற்கு அங்கு செல்ல விருப்பமில்லை. 
              நினிவே மிகப்பெரிய அழகு மிக்க, செல்வாக்கு மிக்க, பலம் மிக்க நகரம். கிழக்கு நோக்கி இருந்த இந்த நினிவே நகரத்திற்கு செல்லாமல், மேற்கு நோக்கி இருந்த தர்சு நகரை நோக்கி தப்பிச் செல்கின்றார். 
                         நினிவே நகரத்தில் இருந்த மக்கள் ஏழை எளியவரை சுரண்டினர். போரில் மிகக் கொடூரமாக நடந்து கொண்டனர். கடவுளுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டினர். பில்லி சூனியங்களில் ஈடுபட்டனர். விலை மகளிரை நாடினர். 
         மீன் வயிற்றில் இருந்து நினிவே நகரத்திற்கு வந்த யோனாவின் காட்சி, அவர் மரித்து உயிர்த்தவர் என்ற அடையாளத்தைக் கொடுத்தது. "மரித்தவர்" என்றால் கடவுளுக்கு கீழ்படியாத காரணத்தினால் கடவுளின் தண்டனையாக மரணத்தை தழுவியவர் என்பது பொருளாகும். "உயிர்த்தவர்" என்றால் கடவுளின் இரக்கத்தினால் அவரது விருப்பத்தை செய்யும்படி நினிவேக்கு அனுப்பப்பட்டவர் என்பது பொருளாகும். நினிவே நகர மக்கள் யோனாவின் செய்தியைக் கேட்டு இதயத்தில் குத்துண்டவர்களாய், தாங்கள் பாவிகள் என்ற உணர்வை பெற்றார்கள். அரசன் முதல் விலங்குகள் வரை நோன்பு காத்தனர். சாக்கு உடை அணிந்து சாம்பலில் அமர்ந்தனர். சாக்கு உடையும் சாம்பலும் மனமாற்றத்தின் அடையாளம்.
                தவக்காலம் மனமாற்றத்தின் தெய்வீகத்தை காண அழைக்கும் காலம். தவக்காலம் என்றால் தளிர்க்கும் காலம்.  அன்பும் இரக்கமும் துளிர்க்கும் காலம். தூய்மையும் நற்செயல்களும் மிளிரும் காலம். மனமாற்றம் மலரும் காலம். புதுவாழ்வில் புனிதம் புலரும் காலம். எனவே நாம் யோனாவின் அடையாளத்தை நமது வாழ்வின் அடையாளமாக்குவோம். 

மாற்றம் என்பது வளர்ச்சியின் அடையாளம். 
ஏற்றம் என்பது எழுச்சியின் அடையாளம். 
வளர்ச்சி என்பது வாழ்வின் அடையாளம். 

மாற்றம், ஏற்றம், வளர்ச்சி இவை ஒரு மனிதனை தெய்வீக நிலையை அடைய உதவுகின்றது. இறைவாக்கினர் யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு எந்த அடையாளமும் உங்களுக்கு கொடுக்கப்பட மாட்டாது என்று இயேசுகிறிஸ்து இன்றைய நற்செய்தியில் கூறுகிறார். யோனாவை விட பெரிய அடையாளமாக நம் கண்முன் இருக்கும் இயேசு ஆண்டவர் இருக்கிறார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காண்கிறோம். கீழ்படிதலின் உச்சகட்டம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் வெளிப்படுவதை நாம் காண்கிறோம். "தந்தையே! இத்துன்ப கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனால் அது என் விருப்பப்படி அல்ல. மாறாக உம் விருப்பப்படியே நிகழட்டும்" என்று தந்தையின் திருவுளத்திற்கு தன்னை முற்றும் கையளித்தவர் தான் நமது நற்செய்தியின் நாயகனாம் இயேசு கிறிஸ்து. 
          அவரது இறை வார்த்தைகளுக்கு அனுதினமும் செவி கொடுக்கின்ற நாம், நமது வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றம் எத்தகையது என்பதை இன்று சிந்திப்போம்.
                        இன்றைய நாளில் நமது மனமாற்றம் நம்மில் வளர்த்துள்ள நல்ல எண்ணங்களை, உயர்ந்த எண்ணங்களை உள்ளத்தில் நினைத்துப் பார்ப்போம். 

                  நல்ல எண்ணங்கள் நம்மில் வளர்த்துள்ள நற்செயல்கள் என்னும் அன்பின் கனிகளை நினைத்துப் பார்ப்போம். 

         தந்தையே என் விருப்பப்படி அல்ல. உமது விருப்பப்படியே  உமது திருவுளம் எமது வாழ்வில் நிறைவேற, எம்மை உமது கருவியாக்கும் என்று இன்றைய பலியில் இணைந்து ஜெபிப்போம்.

திங்கள், 22 பிப்ரவரி, 2021

பண்பான மனிதர்களாக வாழ்வோம்... (23.2.2021)

பண்பான மனிதர்களாக வாழ்வோம்... 

இறைவன்  இயேசுவில் அன்புக்குரியவர்களே! 
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைய இரு வாசகங்களும் இறைவார்த்தையின் வலிமையைப் பற்றி, அவற்றின் மேன்மையைப் பற்றி, நமக்கு விளக்குகின்றன.


மனித உள்ளத்தில் இருந்து
வீசப்படும் வார்த்தைகள்
ஒவ்வொன்றும் ஒன்றித்து
வாழ்க்கையின் வசமாகி
பல்திறன் படைக்கின்றன.

பரம்பொருளாம் இறைவனின்
பரிசுத்தமான வார்த்தைகள்
வாழ்க்கையை வசமாக்கி
பக்குவமாய் வழிநடத்தி
பேரின்பம் பெருக்குகின்றன.

ஆம்! இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் அனுப்புகின்ற வார்த்தைகள், இறைவனது மிகப் பெரும் பணியை ஆற்றுகின்றன. இறைவனின் வார்த்தைகள் செயல் திறன் மிக்கவை. எவ்வாறு மழையும் பனியும் நிலத்தை நனைத்து, இறுகிய நிலத்தினுள் மறைந்திருக்கும் விதையை முளைத்து அரும்பி வளரச் செய்து, அதன் பலனாக அனைவருக்கும் அன்றாடம் வாழத் தேவையான வயிறாரும் உணவையும், 
உணவின் ஆதாரமான விதையையும் மனிதன் பேணிப் பாதுகாக்கும் விதமாக, எல்லோரும் வாழ்வடையும் விதமாக, இரவிலும் பகலிலும் ஒவ்வொரு நொடியிலும் அயர்வுறாது செயல்பட்டு, ஒவ்வொரு உயிரையும் இவ்வுலகில் வாழச் செய்கின்றன என்பதை
இறைவாக்கினர் எசாயா வழியாக  இறைவன் இன்று கூறுகிறார். 
இன்றைய நற்செய்தி வாசகத்தில் வானக விருந்தாக, வார்த்தையின் வடிவமாக, உடல் எடுத்து இம்மண்ணில் பிறந்து, தான் செல்கின்ற இடமெல்லாம் இறைவார்த்தையை விதைத்துச் செல்கின்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நாளில் சிறப்பாக நமது வார்த்தைகளின் வழியாக இறைவனோடு உறவு கொள்ள ஒரு மிகச்சிறந்த  செபத்தினை இன்று நமக்கு கற்பிக்கின்றார்.

ஆண்டவர் இன்று நமக்கு கற்பிக்கும் செபத்தின் அனைத்து வாக்கியங்களும் கடவுளாம் ஆண்டவர், கண் துஞ்சாதவராக, அல்லும் பகலும் தம் மக்களை கண்ணோக்குபவராக,  என்றென்றும் புகழ்ச்சிக்கும் ஆராதனைக்கும் உரியவராக, தம் மக்களுக்குத் தேவையான உணவை,  அன்றன்று வழங்குபவராக,  நாம் எத்தனை முறை குற்றங்கள் புரிந்தாலும் நம்மை மன்னித்து ஏற்றுக் கொள்பவராக இருக்கின்றார் என்பதையும், 

                       அந்த மன்னிப்பின் மூலம் மனமாற்றம் பெற்றவர்களாக,  அவரது பிரசன்னத்தின் மூலமாக தூய ஆவியானவரின் வல்லமையால் புத்தொளி பெற்றவர்களாக, நாம் செல்கின்ற இடமெல்லாம் நாம் உள்ளத்தில் தாங்கியிருக்கின்ற பேரொளியை நமது அன்பான வார்த்தைகளால்,  அக்கறையான புரிந்துணர்வால், கண்டிப்பின் கரிசனைகளால், தள்ளாடும் முதியோரை தாங்கிப்பிடிக்கும் அன்பான கரங்களால், எல்லோரும் ஏற்றம் பெற ஏங்கும் எதார்த்தமான எண்ணங்களால், 

          ஆண்டவரின் அன்புக் கட்டளைகளை ஆர்வத்தோடு செயல்படுத்தும் மழையையும் பனியையும் போல, நாமும் வார்த்தை வடிவான இறைவனின் வழித்தோன்றல்களாய், இறையாட்சியின் விழுமியங்களை வல்லமையோடு செயல்படுத்திட இறைவாக்கின் வழியாக  இறைவன் நம்மை அழைக்கின்றார். 

              இன்று நாம் இறுகிப்போன நிலமாக இருக்க விரும்புகின்றோமா?
அல்லது ஈரமான இதயத்திலிருந்து பெருகியோடும் வல்லமையான அருளின் நதியாக, பரந்த மனதோடு 
பண்பான மனிதர்களாக வாழப் போகின்றோமா? 
 
இறைவனின் கரங்களில் நம்மை ஒப்புவித்து ஆண்டவர் இயேசுவின் கல்வாரிப்  பலியில் இணைவோம்.

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

தலைமை பண்பினை வளர்த்துக் கொள்வோம்... (22.2.2021)

தலைமை பண்பினை வளர்த்துக் கொள்வோம்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே 

இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.
இன்று நாம் புனித பேதுருவின் தலைமை பீட விழாவினை கொண்டாடுகிறோம். 

தலைமை பொறுப்பு என்பது தன்னையும் பிறரையும் முன்னோக்கிச் செல்ல வேண்டிய சரியான பாதையை தேர்வு செய்து சரியான முறையில் அனைவரையும் அதில் வழி நடத்திச் செல்வதாகும். 

இன்றைய முதல் வாசகம் ஒரு தலைமைப் பொறுப்பில் இருக்கின்ற ஆயர் இவ்வாறு தன் பணியை மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் விருப்பத்தோடு நேர்மையோடும் செய்திட வேண்டும் என எடுத்துக் கூறுகிறது. 

இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவால் முதன்முதலில் அழைக்கப்பட்ட சீடர்களில் ஒருவரான புனித பேதுருவின் ஆண்டவரை பற்றிய உண்மையை அறிக்கை இடுவதை எடுத்துரைக்கிறது.
                                 
                                   இன்றைய வாசகத்தின் மைய நிகழ்வாக ஆண்டவர் இயேசு தான் யாரென தன் சீடர்களைப் பார்த்து கேட்கிறார். அப்பொழுது தான் ஆண்டவர் இயேசு மெசியா என்று தூய ஆவியானவர் வழியாக புனித பேதுருவுக்கு எடுத்துரைக்கின்றார். இன்றைய நாளில் ஆண்டவர் இயேசு நமக்கு வெளிப்படுத்தவிருக்கின்ற தலைமை பண்பை பற்றி இன்று சற்று சிந்திப்போம்.

                     தலைமை என்பது ஏதோ சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு மற்றவர்களை அடக்கி ஆளும் செயல்முறையல்ல. மாறாக தான் சார்ந்திருக்கிற குழுவின் மேம்பாட்டிற்காகவும், ஒற்றுமைக்காகவும் தேவையான செயல்களை விருப்பு வெறுப்பின்றி மேற்கொள்ளக்கூடிய பொறுப்பு.


தலைமை பண்பு என்பது ஒவ்வொரு மனிதருக்கும் உள்ளார்ந்து இருக்கின்ற ஆற்றல். இதை சிலர் வெகு எளிதாக கண்டுணர்ந்து விடுகிறார்கள். இன்னும் சிலர் அதை கண்டுபிடிக்காமலே ஏதோ வாழ்ந்துவிட்டு போவோம் என்று இருந்து விடுகின்றனர். தலைமை பண்பினை வளர்த்துக் கொள்ள தேடுதல் இருந்திட வேண்டும். இதற்கு அடிப்படையாக ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கைக்கு முதலில் பொறுப்பேற்க வேண்டும். 

இன்றைய நாளில் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள இறை வார்த்தைகளுக்கு ஏற்ப நமது குடும்பங்களும் நம்மை சுற்றி வாழும் உறவுகளும் தனது அன்றாட வாழ்வின் அலுவல்களுக்கு பொறுப்பேற்று ஆண்டவர் யார் என கண்டுகொள்வோம்.  அவர் தரும் அருளில் நம்மையும் இணைத்துக் கொள்வோம்.

விருப்போடு பணி செய்ய புறப்படுவோம்...(22.2.2021)

விருப்போடு பணி செய்ய புறப்படுவோம்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே 

இன்று நாம் திரு அவையாக இணைந்து  திருத்தூதர் பேதுருவின் தலைமைப் பீட விழாவினை சிறப்பிக்கின்றோம்.
இவ்விழாவானது புனித பேதுருவுக்கு அகில உலகத்தின் மீதுள்ள அதிகாரத்தை காட்டுகிறது. இவரது அதிகாரத்திற்கு மேம்பட்ட அதிகாரம் பூமியில் கிடையாது. இயேசு இவரை தமது திரு அவையை கட்ட பாறையாகவும் திருத்தூதர்களுக்கு தலைவராகவும் நியமித்தார். இந்த பேதுரு இயேசுவின் பிரதிநிதி. அதிகாரம் அனைத்திற்கும் ஊற்று.இதனை நினைவு கூறும் வகையில்தான் இன்று திரு அவையாக இணைந்து நாம் இவ்விழாவினை சிறப்பிக்கின்றார்.

 இவ்விழாவானது பேதுருவை பற்றியும் அவரது பணி பொறுப்புகளை பற்றியும் அவர் கொண்டிருந்த நம்பிக்கையை பற்றியும் நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள என்னால் ஆனது நமக்கு அழைப்பு தருகிறது.

யார் இந்த பேதுரு? என பார்க்கும்போது ....
இவர் கப்பர்நாகும் என்ற ஊரில் பிறந்தவர். 
படிப்பறிவு அற்றவர்.
மீனவர் தொழிலை செய்து வந்தவர்.
பயந்தவர்.
பதட்டம் நிறைந்தவர்.
உணர்ச்சிவசப்படக் கூடிய நபர்.
பாரம்பரியத்தை காக்க வேண்டும் என எண்ணக்கூடிய ஒரு நபராக இருந்தவர்.
யூதர்களின்  திருத்தூதராக இருந்தவர்.
இயேசு உடன் பயணித்த நபர்.
இயேசுவை மெசியா என அறிவித்தவர்.
இத்தகைய சிறப்புமிக்க நபர் தன்னுடைய வாழ்வில் எத்தகைய தலைமை பண்பை கொண்டிருந்தார் என்பதை தான் இன்றைய முதல் வாசகம் வழியாக நாம் வாசிக்க கேட்கின்றோம். தகுதியற்ற நிலையில் இருப்பதாக எண்ணிய இவரை இயேசு திரு அவையின் தலைவராக  இருந்து திருஅவையை கட்டும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார்.தனக்கு கொடுத்தப் பணியை சிறப்புடன் செய்த இவர். இன்றைய நாளில் நமக்கு தரக்கூடிய செய்தி முதல் வாசகத்தின் அடிப்படையில் விருப்போடு பணி செய்யுங்கள் என்ற செய்தியினை இன்று நமக்குத் தருகிறார்.
இவர் இயேசுவோடு வாழ்ந்த காலத்தில் இயேசு கொடுத்த பணிகளை இன்முகத்தோடும், விருப்பத்தோடும் செய்து வந்தவர். அவ்வபோது ஐயங்கள் ஏற்படும்போது அஞ்சாது ஆண்டவரிடத்தில் தெளிவைத் தேடியவர் இவர். இவரை இயேசுவும் பல நேரங்களில் சோதிக்கும் நோக்குடன் பலவிதமான கேள்விகளை எழுப்புகிறார். இன்று கூட நாம் வாசித்த நற்செய்தி பகுதியானது இயேசு இவரோடு உரையாடக்கூடிய பகுதியை மையப்படுத்தியதே. இவர் ஆண்டவர் இயேசுவை மெசியா என அறிவித்ததை தான் இன்று நாம் நற்செய்தியில் வாசிக்க கேட்கின்றோம்.  இந்த மெசியாவுக்காக தனது இன்னுயிரையும் இன்முகத்தோடு இழந்தவர் தான் நாம் இன்று நினைவு கூறக் கூடிய புனித பேதுரு. எனவேதான் திருஅவை இவரை தனிப்பட்ட விதத்தில் நினைவு கூறவும், இவருக்கு இருக்கக்கூடிய அதிகாரங்கள் அனைத்தும் நேரடியாக இவருக்கு வழங்கப்பட்டது என்பதை நினைவுறுத்தவும் இன்றைய நாளில் இவ்விழாவினை சிறப்பிக்கின்றது. இவரைப் போலவே விருப்பத்தோடு இறைவனது பணியை செய்து இயேசுவின் உண்மைச் சீடராகிட முயல்வோம்.

சனி, 20 பிப்ரவரி, 2021

உடன்படிக்கையை நிறுவுவோமா...? (21.2.2021)

உடன்படிக்கையை நிறுவுவோமா...?

இறைவனில் அன்புக்குரியவர்களே
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன்.

ஒருவரோடு ஒருவர் அன்பிலும் உறவிலும் வளர வேண்டும் என்பதற்காக இறைவன் இவ்வுலகில் மனிதனை உருவாக்கினார். ஆனால் மனிதன் தன் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை மறந்து பகைமையை பகிர கூடியவனாக மாறினான். பொறுமையிழந்த இறைவன் படைத்த அனைவரையும் அழிக்கலானார். ஆனால் நேர்மையோடு செயல்பட்ட சிலரை காத்து பலரை அன்று நீரால் அழித்தார்.அதனைத் தொடர்ந்து நேர்மையோடு செயல்பட்ட அந்த சிலருக்கு முன்பாக இறைவன் தனக்குத் தானே மக்களோடு  ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தினார்.இனி நீரால் இந்த உலகத்தை இப்போது செய்தது போல் எப்போதும் செய்வதில்லை  என்ற உடன்படிக்கையை ஏற்படுத்தினார். அந்த உடன்படிக்கையின் அடையாளமாக வானவில்லை வானில் வைத்தார் என இன்றைய முதல் வாசகம் வழியாக நாம் வாசிக்க அறிகின்றோம்.
அன்று கடவுள் மனிதர்களோடு செய்த உடன்படிக்கையை போல இன்று நாம் நமது உடலுக்கும் உள்ளத்துக்கும் இடையே உடன்படிக்கையை செய்து கொள்ள அழைக்கப்படுகிறோம். 
ஏன் இந்த உடன்படிக்கை?
எதற்காக நாம் நமக்கு நாமே உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டும்? என்ற கேள்வி எழலாம்.

நாம் தற்போது தவக்காலத்தை தொடங்கியிருக்கிறோம்.
தவக்காலம் என்பது.... 

ன்னார்வத்துடன்  
ம்செய்து 
தர்க்கம் எதுவுமின்றி 
பிறருக்காக 
தன்னத்தை விடுத்து 
தரணியில் இணைவோம்...என்பதை உணர்த்தும் காலம்.

இந்த தவக் காலத்தில் நமது தவமானது பல நிலைகளில் இருக்கலாம்.
உண்ணாமை என்பது ஒரு தவமே... 
இன்சொல் மட்டுமே பேசுவேன் என்பதும் ஒருவித தவமே... 
அடுத்தவருக்கு என்னிடம் இருப்பதை பகிர்வேன் என்பதும் ஒருவித தவமே... 
மதிப்போடும் மரியாதையோடும் அனைவரையும் நோக்குவேன் என்பதும் ஒருவித தவமே ..

இவ்வாறு இக்காலத்தில் நாம் மேற்கொள்ளக்கூடிய தவத்தின் வடிவம் ஏராளம்.
இந்த தவத்தினை மேற்கொள்ளும்போது நம் தவத்தினை கலைக்க நேரிடும்  பல விதமான சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இயேசு தன் வாழ்வில் மேற்கொண்ட சோதனைகளை தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்கின்றோம். 
ஒளி தொடாத எந்த ஒரு கல்லும் சிலையாக முடியாது.
அதுபோலவே சோதனைகளை எதிர் கொள்ளாத எவனாலும் வெற்றியை நிலைநாட்ட முடியாது.

இயேசு சோதனைகளின் போது மனம் தளராத உறுதியோடு நிலைத்து நின்று இயேசு சோதனைகளை எதிர்கொண்டு வெற்றி கண்டார். இயேசுவின் வெற்றி என்பது அவர் நமக்காக நமது பாவங்களுக்காக சிலுவையில் தன் இன்னுயிரை இழந்ததைதான் அவரது வெற்றியாக இன்றைய இரண்டாம் வாசகமமானது நமக்கு தெளிவு படுத்திக் காட்டுகிறது.

இந்த நாற்பது நாட்களும் பலவிதமான தவ முயற்சிகளில் ஈடுபடக் கூடிய நாம் நமது தவத்தினை கலைப்பதற்கு பலவிதமான இடையூறுகளை  சந்திக்கலாம். பொதுவாகவே நாம் மேற்கொள்ளும் தவமானது நமது உடலுக்கும் உள்ளத்துக்கும் இடையேயான மனப் போராட்டத்தை உருவாக்கலாம். 
உடலும் உள்ளமும் இணைந்து செல்ல நிலையை பல நேரங்களில் நமக்குள் நாமே உணரலாம் .
அச் சூழ்நிலைகளில் அஞ்சாது தூய ஆவியின் துணையோடு இயேசு எப்படி சோதனைகளை மேற்கொண்டாரோ அவரைப்போல நாமும் மேற்கொள்ள இன்றைய நாள் வாசகங்கள் வழியாக நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்.
திருமுழுக்கு என்னும் அருள் சாதனத்தின் வழியாக நாம் ஒவ்வொருவரும் தூய ஆவியானவரை பெற்றுள்ளோம். இந்தத் தூய ஆவியானவர் நமக்கு அன்பை வழங்குகிறார். இதனை உரோமையர் 5:5 நாம் வாசிக்கின்றோம்." நம் எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது ஏனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது".
தூய ஆவியார் வழியாக நமக்குள் பொழியப்பட்டுள்ள அந்த அன்பினை அடிப்படையாகக் கொண்டு நாம் வாழும் இவ்வுலகத்தில் அறச் செயல்கள் பல செய்து அர்த்தமுள்ள வகையில் இந்த தவக்காலத்தை மாற்றிக் கொள்ள நாம் சோதனைகளை எதிர் நோக்கி நமது பயணத்தை தொடருவோம். 
வானில் நிறுவப்பட்ட வானவில்லானது பார்க்கும்போதெல்லாம் கடவுள் நம்மோடு செய்து கொண்ட உடன்படிக்கையை நினைவுறுத்துவது போல நாம் நமக்குளாக சிலுவையில் தொங்கும் இயேசுவை உடன்படிக்கையாக மனதில் நிறுத்திக் கொள்வோம். அதை உற்று நோக்கும் போதெல்லாம் நாம் நமது உள்ளத்துக்கும் உடலுக்கும் இடையே செய்துகொண்ட உடன்படிக்கையை அது நினைவுறுத்தட்டும். அதனடிப்படையில் அறச்செயல்களால் இந்த அகிலத்தில் அறம் செய்யும் மனிதர்களாக மாறிட இந்த தவக்காலத்தில்  தூய ஆவியின் துணையோடு தொடர்ந்து பயணிப்போம்.

வாருங்கள் சோதனையை எதிர்கொள்வோம் ...(21.2.2021)

வாருங்கள் சோதனையை எதிர்கொள்வோம்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறுவார்,  

அச்சத்தால் பின்வாங்கும் குளிரான அல்லது வெதுவெதுப்பான கிறிஸ்தவர்கள் அல்ல நாம். தூய ஆவியால் பற்றி எரியும் கிறிஸ்தவர்களே நாம்.... இன்று திருஅவைக்கு நாம்மை போன்றோர் தேவை...  என்று கூறுவார். 

இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் நன்மைகளை விரும்பும் நாம், சோதனைகளை எதிர் கொள்ள தயங்குகிறோம். இந்த உலகத்தில், இறப்பு என்பது எல்லோருக்கும் வந்தே தீரும். ஆனால் யாரும் இறக்க விரும்புவது இல்லை. 
உணவு எல்லோருக்கும் தேவையான ஒன்று தான். ஆனால் நம்மில் பலர் பயிரிட விரும்புவது இல்லை. 
தண்ணீர் எல்லோருக்கும் தேவையான ஒன்று. ஆனால் நம்மில் பலர் அதை சேமிக்க விரும்புவதில்லை. 
பால் எல்லோருக்கும் தேவையான ஒரு பொருளாக இருக்கிறது.  ஆனால் நம்மில் பலர் பசுவை வளர்க்க விரும்புவதில்லை. 
நிழல் எல்லோருக்கும் தேவையான ஒன்றாக இருக்கிறது. ஆனால் நம்மில் பலர் மரம் வளர்க்க விரும்புவதில்லை. 
ஒரு குடும்பத்தில் மருமகள் எல்லோருக்கும் தேவையான ஒரு உறவாக இருக்கிறாள். ஆனால் நம்மில் பலர் மகள்களை பெற்றெடுப்பதற்கு விரும்புவதில்லை. 
நல்ல செய்தி எல்லோருக்கும் தேவைப்படுகிறது ஆனால் படித்த நல்ல செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல நம்மில் பலர் முன் வருவதில்லை. 

அந்த அடிப்படையில் தான் வாழ்வில் வெற்றி அடைய, வாழ்வில் நம்பிக்கையை பெற, துணிச்சலை கற்றுக் கொள்ள சோதனைகளை நாம் கடக்க வேண்டும். ஆனால் யாரும் சோதனைகளை கடக்க முன்வருவதில்லை. இன்றைய நற்செய்தி வாசகத்தில் தூய ஆவியானவர் துணையோடு,  சோதனைகளை இயேசு எதிர் நோக்கிச் செல்கிறார்.இந்த தூய ஆவியானவர்,  மன உறுதியோடு சோதனைகளை எதிர் கொள்ளவும்  சோதனைகளின் போது எப்படி இயேசுவை வழிநடத்தினாரோ, அவ்வாறு தான் நம் ஒவ்வொருவரையும் வழிநடத்துகிறார். 

இந்த தூய ஆவியானவர் நமது திருமுழுக்கின் வழியாக நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறார். இதைத் தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் வாசிக்க கேட்கின்றோம். திருமுழுக்கின் வழியாக தூய ஆவியைப் பெற்ற இயேசு நமது பாவங்களுக்காக இறந்தை  முன்னிட்டு இறைவன் நமது குற்றம் குறைகளை மன்னிக்கிறார். நாமும் திருமுழுக்கு வழியாக தூய ஆவியாரை பெற்றுக் கொண்டுள்ளோம்.  நாமும் துன்பங்களை சோதனைகளை எதிர் கொள்ள துணிவு கொள்ள வேண்டும். 
உரோமையர் 5: 5 கூறுகிறது, எதிர்நோக்கு ஒரு போதும் ஏமாற்றம் தராது. ஏனெனில் நாம் பெற்றுள்ள  தூய ஆவியின் வழியாக கடவுள்களின் அன்பு நம் உள்ளங்களில் பொழியைப் பட்டுள்ளது. இந்த அன்பானது,  நம்மை சோதனைகளை எதிர் கொள்ள நம்மை அடுத்தவரின்  வாழ்வுக்கான  வழிகாட்ட தைரியத்தை தருகிறது. 
திருத்தூதர் பணிகள் 1: 8ல் நாம் வாசிக்கிறோம்,  தூய ஆவி அவர்களிடம் வரும் போது,  நீங்கள் கடவுளது வல்லமையை பெற்று, எருசலேமிலும், யூதேயா சமாரியா முழுவதிலும், உலகின் கடை எல்லை வரைக்கும் எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள் என்று இயேசு கூறுகிறார். தூய ஆவியைப் பெற்றுக் கொண்டுள்ள நாம் அனைவரும், சோதனைகளை இயேசுவைப் போல எதிர் கொண்டு, அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய், உலகின் கடை எல்லை வரை இயேசுவின் சீடர்கள் நாம் என்பதற்கு சாட்சிகளாக திகழ அழைக்கப்படுகிறோம். நம் ஒவ்வொருவரையும் இறைவன் பார்த்து பார்த்து மிகவும் அழகாகவும் அன்பாகவும், நமது வாழ்வுக்கு தேவயானதை எல்லாம் சொல்லிக் கொடுத்து,  வருகிறார். வாழ்வில் நாம் சந்திக்கும் துன்பங்கள் எல்லாம் அவர் நமக்கு கற்றுத்தரும் பாடங்கள் என்பதை உணர்ந்து, கொள்ள அழைக்கப்படுகிறோம். 
  இன்றைய முதல் வாசகத்தில் தொடக்கத்தில்  மனிதன் தவறிழைத்த போது தான் படைத்த  மனிதனை நினைத்து மனம் வருந்திய கடவுள், இவ்வுலகை அழிக்க எண்ணினார். இருந்த போதிலும் சிலரைத் தேர்வு செய்தார். நோவாவையும் அவரது குடும்பத்தையும் தேர்வு செய்து,  அவர்களை பாதுகாத்து பராமரித்தார்.  அழிவுக்கு பிறகு அவர்களை, பேழையிலிருந்து நிலத்தில் இறங்கச் செய்யும் முன், அவர்களோடு ஓர் உடன்படிக்கையை நிறுவினார். அந்த உடன்படிக்கை மீண்டும் ஒரு முறை உலகம் முழுவதையும் இவ்வாறு அழிக்க கூடாது என்ற கடவுளின் இரக்கத்தின் வெளிப்பாடாய் வந்த அந்த உடன்படிக்கையானது நிறுவப்பட்டது. பல நேரங்களில் பல நல்ல செயல்களை செய்யும் போதும், துன்பங்களை ஏற்றுக் கொள்ளாமல் ஒதுங்கி ஓடும் போதும், நம்பிக்கை இழந்து இருக்கக்கூடிய சூழலிலும், இறைவன் நம்மை கண்ணோக்குகின்றார். ஆனால் கைவிடுவதில்லை. நம்மோடு பயணிக்கின்றார். நமக்கு வழிகாட்ட நம்மோடு இருக்கின்றார். திருவிவிலியத்தில் அதிகமான துன்பங்களை அனுபவித்த ஒரு நபராக, யோபு அவர்களை நாம் காணலாம். இந்த யோபு செல்வ செழிப்போடு இருந்த போதும், அந்த செல்வ செழிப்பு எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில், அவரை விட்டு அகன்று உடல் முழுவதும் கொப்புளங்களால் சூழப்பட்டு குப்பைத் தொட்டிக்கு அருகே ஏழைகளிலும் ஏழையாக,  தொட மறுக்கக் கூடிய நிலையை மிகவும் அருவருப்பான ஒரு நிலையை அடைந்த போதும் கூட நம்பிக்கையோடு கூறினார், குழந்தை பருவம் முதல் அவர் என்னை தந்தையை போல் வளர்த்தார். என் தாய் வயிற்றிலிருந்து என்னை வழிநடத்தினார் என கடவுளை குறித்து யோபு கூறுவதை யோபு நூல் 31: 18ம் வசனத்தில் நாம் வாசிக்கலாம்.  நாம் நமது வாழ்வில் துன்பங்கள் துயரங்கள் சூழும்போது நாம் நம்பிக்கையை இழந்துவிடாது ஆண்டவர் இயேசுவை உறுதியாகப் பிடித்துக் கொண்டு பயணிக்க அழைக்கப்படுகிறோம். 

துன்ப நேரங்களில் எல்லாம் நம்மை வழிநடத்த கூடிய தூய ஆவியானவரின் உடன் இருப்பை உணர்ந்து கொள்வோம். துன்பங்களையும் சோதனைகளையும் எதிர்கொள்ள வலிமை பெறுவோம். அந்த துன்பங்களையும் சோதனைகளையும் நாம் எதிர்கொள்ளும் போது தான் வாழ்வுக்கான பாடத்தை உள்வாங்கிக் கொள்கிறோம்.  இதையே தான் இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு உணர்த்துகிறார்.  நாம் துன்ப நேரங்களிலும் சோதனைகளை எதிர் கொள்ளக்கூடிய நேரங்களிலும் அமைதியில் ஆவியானவரின் குரலுக்கு செவி கொடுப்போம். அப்போது கண்டிப்பாக எசாயா இறைவாக்கினரைப் போல நாமும் தூய ஆவியின் குரல் ஒலியை கேட்கலாம். இறைவாக்கினர் எசாயா நூல் அதிகாரம் 30,  21வது வசனம் கூறுகிறது,  நீங்கள் வலப்புறமோ,  இடப்புறமோ  எப்பக்கம் சென்றாலும்,  இதுதான் வழி.  இதில் நடந்து செல்லுங்கள் என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும் என்ற எசாயா இறைவாக்கினரின் வார்த்தைகளுக்கு ஏற்ப,  நமக்குள் இருந்து ஒலித்துக் கொண்டிருக்க கூடிய தூய ஆவியானவரின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய் நாம் சோதனைகளை இயேசுவைப் போல இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு பயணிப்போம். சோதனைகளிலிருந்து வென்று வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொள்ள தூய ஆவியானவர் நமக்கு துணையாக இருக்கிறார். இதனை உணர்ந்தவர்களாக திருமுழுக்கு நாம் பெற்ற தூய ஆவியை இன்றைய நாளில் நினைவு கூர்ந்து, நமது வாழ்வை அர்த்தமுள்ள ஒரு நல்ல வாழ்வாக அமைத்துக் கொள்ளவும், துன்பங்கள் சோதனைகளிலும் மனம் தளராது அதனை எதிர்கொண்டு வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்ள இன்றைய நாளில் அழைக்கின்றது, இறைவார்த்தை.  இந்த இறை வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்வை அமைத்துக் கொண்டு இயேசுவின் பாதையில் பயணம் செய்து, இந்த தவக்காலம் முழுவதும் நாம் சந்திக்கக் கூடிய சோதனைகளை துணிச்சலோடு எதிர் கொள்ள இறையருளை வேண்டுவோம்.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

வாருங்கள் இருள் நடுவே ஒளியாவோம்..... (20.2.2021)

வாருங்கள் இருள் நடுவே ஒளியாவோம்..... 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

 இன்றைய முதல் வாசகமானது, நாம்  ஆண்டவருக்கு உகந்தவர்களாக வாழ்வதற்கு வழிகாட்டுகிறது. உதாரணமாக, அடுத்தவரை குற்றம் சாட்டக் கூடிய செயலையும், பொல்லாது பேசுவதையும் நிறுத்தவும், பசித்திருப்போருக்கு உதவி செய்யவும், வறியவருக்கு தேவையானதை செய்யவும், இருள் நடுவே ஒளியாக இருக்க இறைவன் இன்றைய வாசகம் வழியாக நம்மை அழைக்கின்றார்.  

இதே இறைவன் தான் இன்றைய நற்செய்தி வாசகத்திலும், லேவி என்னும் பெயருடைய ஒரு வரிதண்டுபவரை அழைக்கின்றார். வரி தண்டுபவர் என்றாலே அன்று சமூகத்தில் பாவிகளாக கருதப்பட்டவர்கள். ஏனென்றால், அவர்கள் சுங்கச்சாவடியில் அமர்ந்து மக்களிடம் வரி வசூலிப்பார்கள். 
இந்தச் சுங்கச் சாவடிகளில் அமர்ந்து வரி வசூலிப்பவர்கள் எல்லாம் உரோமை ஆட்சியாளர்களுக்கு நெருக்கத்தில் இருப்பவர்கள். உரோமை அரசோடு நெருக்கத்தில் இருப்பவர்களை எல்லாம் தங்களுக்கு எதிரிகளாகவும் பாவிகளாகவும் தான் அன்றைய சூழலில் யூத சமூகத்தில் உள்ளவர்கள் எல்லாம் நோக்கினார்கள். சமீபத்தில் கூட நாம் கேள்விப்பட்டிருப்போம், ஆங்காங்கே சுங்கச்சாவடிகளில் விலையேற்றத்தின் காரணமாக சுங்கச்சாவடியில் வேலை செய்தவர்கள் அடித்து உதைத்து தாக்கப்பட்டார்கள் என்ற செய்தியை நாம் செய்தித்தாள்கள் மூலம் வாசித்திருக்கலாம்.  இவர்கள் எல்லாம் பணிக்கு அமர்த்தப்பட்டவர்கள் தான். மேலிருக்கக்கூடிய அதிகாரிகள் சொல்வதை செய்யக்கூடியவர்கள். இவர்களை தண்டிப்பதோ, இவர்களை பாவிகள் என்று ஒதுக்குவதோ முறையல்ல. இவர்கள் தங்கள் வேலையை செய்து கொண்டிருந்தார்கள். இத்தகைய வேலை செய்யும்பொழுது மக்கள் நேரடியாக ஆளக்கூடியவர்களை எதிர்க்கவும்,  ஆளக் கூடியவர்கள் மேல் உள்ள கோபத்தை எல்லாம் இடையில் இருக்கக் கூடிய இந்த இடைநிலையர்கள் மேல் தான்  காட்டுகிறார்கள். இச்சூழல் தான் அன்றும் நிலவியது. எனவே இச்சமூகம் பாவி என சித்தரிக்கக்கூடிய ஒரு மனிதனை, ஆண்டவர் இயேசு கிறிஸ்து, "அவர் பாவி அல்ல. அவரும் கடவுளுக்கு உகந்த வாழ்க்கையை வாழக் கூடியவர். அவரும் நல்லவர்" என்பதை காட்டும் வண்ணமாக அவரைப் பின்பற்ற அழைக்கிறார்.  அவரும் தன்னிடமிருந்த  அனைத்தையும் விட்டுவிட்டு ஆண்டவர் இயேசுவை பின்பற்றிச் செல்கிறார். 
ஒடுக்கப்படுபவர்களை தேடிச் செல்வதே ஆண்டவர் இயேசுவின் பணியாக இருக்கிறது.
எனவே ஆண்டவர் அவரோடு அமர்ந்து உணவருந்துகிறார்.  இதைப் பார்த்து பொறுக்க முடியாத சிலர் கேள்வி கேட்கும் போது,  அவர்களுக்கு இயேசு சொல்கிறார், நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல. பாவிகள் மனம் மாறுவதற்கே அழைக்க வந்தேன் என்கிறார். இதே இறைவன் இன்று நம்மையும் அழைக்கிறார்.  நாம் ஒருபோதும் வற்றாத நீரூற்றாய் இருப்பதற்கு இன்றைய  வாசகங்கள் வழியாக இறைவனால் அழைக்கப்படுகிறோம்.  லேவியைப் போல நாமும் அழைக்கும் இறைவனின் குரலுக்குச் செவிகொடுத்து பயணிக்கும் போது,  நாம் இருள் நடுவே ஒளியாக இருப்போம்.  ஒளியாக இருந்து மற்றவருக்கு ஒளிகாட்ட, வழிகாட்ட, இயேசுவின் பாதையில் அவர் பின்னே பயணம் செய்ய நாம் அழைக்கப்படுகிறோம்.  வாருங்கள் அவர் பின்னே செல்வோம். ஏனெனில் இது ஆண்டவரது மகிழ்ச்சியின் நாள்! புனித நாள்! ஆண்டவரது ஒளியின் நாள்!.

வியாழன், 18 பிப்ரவரி, 2021

வாருங்கள் நோன்பு இருப்போம்.....( 19.2.2021)

வாருங்கள் நோன்பு இருப்போம்.....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயாவின் வழியாக, மக்களின் வாழ்வு நிலை பற்றி ஆண்டவர் கூறுகிறார். மக்கள் தாங்கள் மிகவும் நேர்மையாளர்கள் போல ஆண்டவரை அணுகி வருவதையும்,  அவர்கள் உண்ணாநோன்பு இருக்கும் பொழுது ஆண்டவர் தமக்கு செவி கொடுக்க வேண்டும் எனக் கேட்பதையும் கூறுகிறார். 

மக்கள் நோன்புகள் ஏற்ற பொழுதும் அண்டை அயலாரோடு வீண் சச்சரவுகளிலும், சண்டைகளிலும், ஈடுபட்டு மற்றவர்களை துன்புறுத்துகின்றனர். தமது சொந்த ஆதாயத்தை நாடுகின்றனர். இதனை ஆண்டவர் விரும்பவில்லை என இறைவாக்கினர் எசாயா வழியாக நமக்கு எடுத்துரைக்கிறார்.
   
 இன்றைய நற்செய்தி வாசகத்தில் யோவானின் சீடர்கள், பரிசேயர்களும் தாங்களும் அதிகமாக நோன்பு இருப்பதையும், இயேசுவின் சீடர்கள் நோன்பை கடைபிடிக்காமல் இருப்பதையும் கேட்கின்றனர். ஆண்டவர் இயேசுவோ, மணமகன் தங்களோடு இருக்கும் வரை மண விருந்தினர்கள் நோன்பு இருக்க மாட்டார்கள். மணமகன் தங்களை விட்டு பிரிகின்ற காலத்தில் தான் அவர்கள் நோன்பு இருப்பார்கள் என்று கூறுகிறார். 
இன்றைய இரண்டு வாசகங்களும் இவ்வுலகை பொருத்தமட்டில், இறைவனின் பார்வை வேறு, மனிதரின் பார்வை வேறு என்பதை வெளிப்படுத்துகின்றன. இன்றைய நாட்களில் மனிதர்கள் பல்வேறு காரணங்களுக்காக நோன்பு இருக்கிறார்கள். சிலர் தாங்கள் வேண்டிய பொருத்தனைக் காரியங்கள் நிறைவேறுவதற்காக நோன்பு இருக்கிறார்கள். சிலர் தேர்வில் வெற்றிபெற நோன்பு இருக்கிறார்கள். சிலர் விவசாயம் செழிக்க, வியாபாரம் சிறக்க நோன்பு இருக்கிறார்கள்.  சிலர் தம் பெற்றோர் அல்லது பிள்ளைகளின் நல்ல உடல் நலனுக்காக நோன்பு இருக்கிறார்கள். சிலர் தங்கள் உடல் பருமனை குறைக்க முன்பு இருக்கிறார்கள். சிலர் தம்மிடம் காணப்படும் தீய பண்புகள் குறைந்து நல்ல பண்புகள் வளர நோன்பு இருக்கிறார்கள். ஆனால் இவ்வகை நோன்புகள் அனைத்தும் நமது ஆதாயத்திற்காகவே செய்யப்படுகின்றவையாகும். 
இத்தகைய நோன்பை கடவுள் விரும்பவில்லை என முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா வழியாக கூறுகிறார். 

இன்று நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறுவது போல,

 நமது சோகங்களை களைந்திடும் நோன்பிருந்து நன்றி உணர்வை வளர்த்துக் கொள்ளவும், 

பிறரை புண்படுத்தும் வார்த்தைகளில் நோன்பிருந்து, ஆறுதல் தரும் வார்த்தைகளை வளர்த்துக் கொள்ளவும், 

கோபத்தை அகற்றும் நோன்பிருந்து பொறுமையைக் கடைபிடித்து வாழவும், 

கவலைகளையும், அவநம்பிக்கைகளையும் அப்புறப்படுத்தும் நோன்பிருந்து, ஆண்டவரில் முழு நம்பிக்கை வைத்து வாழவும்,


மனக் கசப்புகளை நம்மிடம் இருந்து முழுமையாக அகற்றும் நோன்பிருந்து, இதயங்களை மகிழ்ச்சியினால் நிரப்பவும், 

குற்றம் சாட்டுவதை நிறுத்தும் நோன்பிருந்து போதுமென்ற மனதோடு வாழவும், 

மன அழுத்தங்களிலிருந்து விடுபடும் நோன்பிருந்து செபத்தினால் நம்மை நிரப்பவும்,

நான் என்ற சுயநல நிலையிலிருந்து விடுபடும் நோன்பு இருந்து, பிறர் மீது கருணையுள்ளம் கொண்டவர்களாக வாழவும், 

மன்னிக்க முடியாத நிலையில் இருந்து மீண்டு எழும் நோன்பு இருந்து மன்னிக்கும் மனப்பான்மையில் வளரவும், 

அதிகம் பேசுவதை தவிர்த்து, அமைதியை நிலைநாட்டும் நோன்பிருந்து, மற்றவர்கள் சொல்வதையும் அமைதியாக கேட்கும் மனப்பான்மையில் வளரவும்,

இவ்வாறாக உண்மையான நோன்பை வாழ்வில் கடைபிடிக்க ஆண்டவர் இயேசு அழைப்பு விடுக்கின்றார். இத்தகைய நோன்புகளை நாமும் வாழ்வில் கடைப்பிடிக்க முற்படுவோம். இவற்றில் ஒன்றையேனும் அல்லது ஒரு சிலவற்றையேனும் இன்றைய நாளில் கடைபிடிக்க உள்ளத்தில் உறுதி கொள்வோம். அதற்கான அருளை இறைவனிடத்தில் வேண்டி இணைந்து ஜெபிப்போம். உண்மையான நோன்பு இருக்க கற்றுக் கொள்வோம்.

புதன், 17 பிப்ரவரி, 2021

எதை நாம் தேர்வு செய்யப் போகிறோம்...? (18.2.2021)

எதை நாம் தேர்வு செய்யப் போகிறோம்...?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் உளம் மகிழ்கிறேன். 

       ஒரு ஆலயத்தில் ஞாயிறு திருப்பலியில் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. குருவானவர் மறையுரையாற்றிக் கொண்டிருந்தார். முகமூடி அணிந்த இருவர் கைகளில் ஏகே47 ரக துப்பாக்கிகளை ஏந்தி கொண்டு ஆலய வாயில் வழியாக நுழைந்து பீடத்துக்கு முன் வந்து நின்றனர். மக்கள் அச்சத்தினால் அலறியடித்து கூச்சலிட்டனர். குருவானவர் மறையுரையை நிறுத்தி விட்டார். துப்பாக்கி வைத்திருந்த ஒருவன் மேல் நோக்கி ஒரு முறை சுட்டான்
 எல்லோரும் அமைதி ஆனார்கள். துப்பாக்கி வைத்திருந்த இன்னொருவன் சொன்னான், இயேசு கிறிஸ்துவுக்காக உயிரை இழக்க தயாராக இருப்பவர்கள் மட்டும் ஆலயத்திற்குள் இருங்கள் என்றான். உடனே மக்கள் தங்கள் உயிரைப் பாதுகாக்க, தப்பித்துக்கொள்ள, அலறியடித்துக்கொண்டு ஆலயத்திற்கு வெளியே சென்றனர். ஆயிரம் பேர் இருந்த ஆலயத்தில் 20 பேர் மட்டுமே பீடத்திற்கு முன் துணிச்சலுடன் நின்றனர். துப்பாக்கி வைத்திருந்த இருவரும் பீடத்தில் நின்ற குருவானவரை நோக்கி, தந்தையே!  நாங்கள் வெளிவேடக்காரர்களை வெளியேற்றிவிட்டோம். நீங்கள் தொடர்ந்து திருப்பலியை நிறைவேற்றுங்கள் என்றனர்.

              இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவரையே பற்றிக்கொள்.  அவரே உனது வாழ்வு. அவரரே நித்திய வாழ்வைக் கொடுப்பவர். அவருக்கு செவிகொடு. அவரை பின்பற்ற அவர் வார்த்தைகளை கேட்டு அதன்படி நட என்று இணைச்சட்ட நூல் 30: 15- 20 நமக்கு அறிவுறுத்துகிறது.  

வாழ்வின் ஊற்றாக இருக்கும் இறைவனைப் பற்றிக்கொள்ள உலகப் பற்றுகளை விட்டு விட வேண்டும். இதற்கு மாறாக பணம், பதவி, அதிகாரம், இனம், ஜாதி போன்றவற்றை நாம் இறுகத் தழுவிக் கொண்டுள்ளோம்.  இந்நிலையில் இறைவனை எப்படி நம்மால் பற்றிக் கொள்ள முடியும்? சாட்சியாக வாழ முடியும்? 

          இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அவரை பின்பற்ற விரும்பும் ஒவ்வொருவருக்கும் தன்னலம் துறந்து தன் சிலுவையை சுமந்து செல்லவேண்டும் என்ற ஒரு கட்டளையை கொடுக்கின்றார்.

    நாமோ, நமது சிந்தனையில் பணம் சம்பாதிக்கும் அறிவை சுமந்து கொண்டும், மனதின் மேடையிலே பேராசையை நிறுத்திக்கொண்டும், அதிகார நாற்காலியில் அமர்ந்து கொண்டும் நாம் நிலை வாழ்வைத் தேடி பயன் இல்லை. மாறாக துணிவோடு எல்லாவற்றையும் விட்டுவிட்டு நம்மை வெற்றுக் கலன்களாக்குவோம். வாழ்வின் ஊற்றாகிய ஆண்டவரை உண்மையாக அன்பு செய்வோம்.  அவரின் பணியை நாம் தொடர்வோம். அவர் நமக்கு நிச்சயம் நீடிய வாழ்வை கொடுப்பார். நம் வாழ்வில் வரும் துன்பங்களை அன்போடு ஏற்றுக் கொண்டால் மட்டுமே அவரின் பணியை நிறைவாக செய்ய முடியும்.  நமது சிலுவைகளை ஏற்றுக் கொள்ளும்போது மட்டுமே, பிறரின் குறைகளை கண்டுணர்ந்து கொள்ள முடியும். பிறருக்கு வாழ்வு கொடுக்க முடியும். நமது வாழ்வும் சாரமுள்ளதாக மாறும் என்பதை இன்றைய நாளில் உணர்வோம்.
       ஆண்டவரை அன்பு செய்வதற்கும் அவரிடமிருந்து வாழ்வைப் பெற்றுக் கொள்வதற்கும் தடையாக இருக்கின்ற ஆடம்பரமான வாழ்வுக்கான ஆசைகளை விட்டுவிட்டு, அடிப்படைத் தேவைகள் கூட நிறைவேறாத, தேவையில் இருக்கும் மனிதரை நமது பொருட்களால் சந்தித்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முயற்சிகள் மேற்கொள்வோம். 
நம் அருகில் இருப்பவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்கும் பொறாமை எண்ணங்களை விட்டுவிட்டு, ஆண்டவர் நமக்குக் கொடுத்திருக்கும் அருள் வரங்களுக்காக, குறிப்பாக ஆண்டவரைப் பற்றி தியானித்து நமது வாழ்வை திருப்பி பார்த்து நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள ஆண்டவர் கொடுத்திருக்கின்ற இந்த அருளின் நேரங்களுக்காக நன்றி கூறி,  இயேசுவின் மனநிலையோடு பிறரன்புப் பணிகளில் ஈடுபடுவோம். 

இவ்வுலகில் மனிதர்கள் மத்தியில் பிளவுகள் தேவையில்லை என்பதே உணர்ந்தவர்களாய், மனிதனால் உருவாக்கப்பட்ட வேறுபாடுகளைக் களைந்து விட்டு அனைவரையும் ஆண்டவரின் பிள்ளைகளாக அன்பு செய்திடவும்,  அதன் மூலம் சிறப்பாக ஆண்டவர் நம் கண் முன் வைத்திருக்கின்ற வாழ்வின் உரிமையாளர்களாக நாம் ஆகிட  இன்றைய நாளில் அவரின் அருளை வேண்டுவோம்.ஆண்டவரின் வார்த்தைகளின் படி நமது வாழ்வை அமைத்துக் கொள்வதும் ஆண்டவரின் வார்த்தை களுக்கு எதிரான வகையில் நம் வாழ்வை அமைத்துக் கொள்வதும் நம் முன்பாக இருக்கின்ற வாய்ப்பு எதை நாம் தேர்வு செய்யப் போகிறோம்...?
 சிந்தித்து செயலாற்றுவோம்...

செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

தவக்காலம் - திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தையில் தவக்காலம் பற்றிய பார்வைகள்
இந்த தவக்காலத்தில் நோன்பிருக்க வேண்டுமா ? 

காயப்படுத்தும் வார்த்தைகளிலிருந்து  நல்வார்த்தை பேசுங்கள்.
கோபத்திலிருந்து பொறுமையில் நிறைந்திடுங்கள்.
எதிர்மறை எண்ணங்களிலிருந்து எதிர்நோக்கால் நிறைந்திடுங்கள்.
கவலைகளிலிருந்து கடவுளிடம் நம்பிக்கை வைத்திருங்கள்.
குறை கூறுவதிலிருந்து எளிமையைப் பற்றி சிந்தியுங்கள்.
மன அழுத்தத்திலிருந்து செபித்திருங்கள். 
கசப்பான உணர்வுகளிலிருந்து மன மகிழ்வோடிருங்கள்.
சுய நலத்திலிருந்து இரக்கம் கொண்டிருங்கள். 
பகைமையிலிருந்து சமாதானத்தோடு இருங்கள். 
அதிகம் பேசுவதிலிருந்து அமைதியோடிருந்து கேளுங்கள்.

சாம்பல் புதன் - வாருங்கள் வாழ்வைத் திருப்பி பார்ப்போம் (17.2.2021)

சாம்பல் புதன் - வாருங்கள் வாழ்வைத் திருப்பி பார்ப்போம் 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே 

இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தவக்காலம் ஒவ்வொரு ஆண்டும் தவறாது நம்மை சந்திக்கும் காலம். 
கடந்த கொரோனா கால ஊரடங்கு மூலம் நமது தனித்திருந்த காலத்தில் நாம் ஒரு 
விதப் "பாலைவன" அனுபவத்தைப் பெற்றிருப்போம். 
பெரும்பாலும் நாம் வீட்டுக்குள் முடங்கியே வாழ்ந்திருப்போம். 
இது தண்ணீர் அல்லது உணவு பற்றாக்குறையால் அல்ல, 
நம் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த செய்யப்பட்ட ஒரு ஏற்பாடு. 
இது ஒரு சிலரை முன்னேற்றப் 
பாதைக்கும், பலரைக் கடினமானப் பாதைக்கும் வளர்த்திருக்கலாம். 
      ஆனால் இன்று கொரோனாவின் பிடியிலிருந்து நம்மை விடுவித்துக் கொண்டு, இயல்பு வாழ்க்கையில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள பரபரப்பாக முயன்று கொண்டிருக்கும் நாம் இன்றைய நாளில் சற்று நின்று நிதானிக்கவும், பல்வேறு வளர்ச்சிகள், தளர்ச்சிகள், போராட்டங்கள் மத்தியில், நாம் உண்ணா நோன்புக்கென நாள் குறிக்கவும், உண்ணா நோன்பின் வழியாக நமது உணவை குறைத்து, பசியை உணர்ந்து, அடுத்தவரின் பசியை நீக்கவும், நமது மனதை ஆண்டவரின் பக்கம் திருப்பி, நமது உடைக்கப்பட்ட, பாரமான  இதயத்தோடு ஆண்டவரிடம் திரும்பி வரவும், இரக்கம் மிகுந்த ஆண்டவரின் பேரன்பினை கண்டுணர்ந்து கொள்ளவும்  இன்றைய முதல் வாசகம் நமக்கு அழைப்பு தருகிறது.  

இறைவன் நம்மீது கொண்ட பேரன்பின் காரணமாகவே நமக்காக பாடுகளையும் ஏற்றுக்கொண்டார் நமக்காக தனது உயிரை ஈந்தார். இத்தகைய ஆண்டவரின்  பேரன்பில்  நம்மை இணைத்துக் கொள்ள இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. 
           
நமது வாழ்வில் நாம் முக்கியமாகக் கருதுபவற்றை பெரும்பாலான நேரங்களில் வீட்டுக்குள்ளாக, தாழிடப்பட்டு மற்றவர்கள் அறியாத வண்ணமாக பத்திரமாக வைத்து இருப்போம். நமது உடலில் கூட மிகவும் முக்கியமான உறுப்புகளான இதயம் போன்ற உறுப்புகள் அனைத்தும் உள்ளுறுப்புகளாகவே இருக்கின்றன. அது போலவே இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட,  நமது அக வாழ்வின் மலர்ச்சியின் வெளிப்பாடாக நாம் செய்கின்ற அறச்செயல்களையும் நாம் கடைப்பிடிக்கின்ற நோன்புகளையும், நாம் பிறருக்கு செய்கின்ற தானங்களையும், நமது உள்ளார்ந்த இதயத்தை, உடைபட்ட இதயத்தை காணக்கூடிய ஆண்டவர் ஒருவர் மட்டுமே அறியும் வண்ணமாக, வெளிப்புறத்தே இருக்கின்ற மனிதர்கள் அறியாத வண்ணம், நாம் செய்திட வேண்டும் என்று ஆண்டவர் இயேசு அழைப்பு தருகின்றார்.
                                இன்று நாம்
ஆண்டவரின் வழியில் அவரது ஒளியைக் காண, நம்மையே ஒடுக்கி, நம் வாழ்வைச் 
செம்மைப்படுத்த, ஒரு குறுகிய, கடினமான பாதையில் நடப்பது சற்று சங்கடமாகத்தான் 
இருக்கும். இந்த ஊரடங்கின் போது, உலகப் போக்கினுள் சிக்காமல் நம்மால் வாழ முடியும் 
என்பதைக் கண்டுணர்ந்தது போல, இந்த தவக்காலப் 'பாலைவன" வாழ்வில் நாம் சுதந்திரமாக நுழையும் 
போது, இறைவன் தரவிருக்கும் கொடைகள் பலவற்றை நாமும் கண்டறியலாம். நாம் செல்ல வேண்டிய
குறுகிய பாதை இறைவார்த்தையால் நமக்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தவக்காலத்தில் இறைவார்த்தையை 
வாசித்து, செவி கொடுத்து, அதிலுள்ள நம் தந்தையாகிய இறைவனுடைய நிலையான, 
என்றும் பொருத்தமான ஞானத்தை உணர்ந்து கொள்வோம். இறைவார்த்தைக்கு நம் நேரத்தை 
செலவழிப்பது நம் ஆன்மீக வாழ்வுக்கு அதிக லாபம் என்பதை உணர்வோம். ஏனெனில் இறைவார்த்தை உயிருள்ளது, 
ஆற்றல் மிக்கது. மனுவுருவான இயேசு கிறிஸ்து என்ற வார்த்தையால் நாம் மீட்கப்படுகிறோம். 
வார்த்தை காட்டும் பாதையில் நடப்பதால் நாம் நம் ஆசைகளையும் எதிர்நோக்குகளையும் 
நெறிப்படுத்த அழைக்கப்படுகிறோம்.
எது சரி, எது தவறு என்பதைக் குறித்த சலசலப்பும் கவனச்சிதறல்களும் நிறைந்த இந்த உலக 
வாழ்வுக்கு, இறைவார்த்தையைக் கலங்கரை விளக்கமாகத் தாழ்மையுடன் ஏற்க இத்தவக்காலம் 
நமக்கு உதவிடும். 
வாழ்வில் ஆர்வத்தோடும், தாகத்தோடும், இறைவார்த்தை வாசித்து, சிந்தித்து, ஏற்று வாழ்பவர்கள் 
மட்டுமே இறைவனின் ஞானத்தைக் காண முடியும்.
இத்தவக்காலம் என்பது நம் ஆன்மாவோடும் நம் அயலாரோடும் நாம் மேற்கொள்ளும் பயணமாக
இருக்கவும், உள்ளார்ந்ததாகவும், ஆண்டவர் இயேசுவை வெளிப்படுத்தக் கூடியதாகவும் இருக்கவும் உறுதி கொள்வோம்.
இத்தவக்காலத்தை  வீரியத்துடனும் விடாமுயற்சியுடனும் தொடர இறைவனின் அருள் நம்மை வழிநடத்த நம்மை அவர் பாதம் தாழ்ச்சியோடு அர்ப்பணிப்போம்.


http://sahayaraj1166.blogspot.com/2021/02/blog-post_16.html

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...