சட்டங்கள் தரும் வழிபாடுகளா?
மனிதநேயச் செயல்பாடுகளா?
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வுலகில் நாம் வாழ்வதற்காக பிறக்கிறோம். ஆனால் வளர வளர நம்முடைய கருத்துக்கள், பிடிவாதமான நம்பிக்கைகள் இவற்றால் அழிவின் பாதையை தேர்ந்து கொள்கிறோம். மனிதர்களாகிய நாம் அனைவரும் வாழ்வு பெற வேண்டும். அதிலும் நிறைவாகப் பெற்று வாழ வேண்டும் என்று இறைமகன் இயேசு பல வழிமுறைகளை எடுத்துக்காட்டுகிறார். குறிப்பாக சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து செல்வதற்கான வழிமுறைகளை, நெறிமுறைகளை இன்றைய இரண்டு வாசகங்களும் நமக்கு எடுத்துக் கூறுகின்றன. வாழ்விற்கான நெறிமுறைகள் பழைய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டிருந்தாலும், சட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்பதை விவிலிய வரலாறுகள் கூறுகின்றன.
பழைய ஏற்பாட்டின் பின்னணியில் பரிசேயர்களின் வாழ்வு முறையும் சட்டங்களை மையப்படுத்தியதாய் அமைந்திருந்தது. சட்டங்களின் வழியாக மட்டுமே கடவுள் நமக்கு மீட்பு தருகிறார் என்ற நம்பிக்கை மேலோங்கி இருந்தது. ஆனால் இறைமகன் இயேசு மனித நேயம் காத்திடாத சட்டத்தை தூக்கி எறிகிறார். ஒவ்வொரு மனிதரும் சட்டங்களின் வழியாக வாழ்வு பெற வேண்டும். பிறரையும் வாழ வைக்க வேண்டும் என்ற மையக்கருத்தை இன்றைய நற்செய்தியில் வலியுறுத்துகின்றார். ஏனென்றால், இயேசுவின் ஆன்மீகம், வாழ்வை, மனிதநேயத்தை, உறவை மையப்படுத்தியதாய் அமைந்திருந்தது.
அவரது சிந்தனைப்படி சட்டங்கள் கொடுக்கப்பட்டது மனிதர்கள் வாழ்வை நிறைவாக வாழ உதவி செய்யவே. சட்டங்கள் வாழ்விற்கு நிறைவாக இருக்க வேண்டுமே ஒழிய, தடையாக இருக்கக்கூடாது என்பதே அவரது நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டின் பின்னணியில், பரிசேயர்களின் வாழ்க்கையை விட உங்களது வாழ்க்கை நெறி சிறந்திருக்க வேண்டும் என்று கூறுகின்றார்.
அவரது சட்டம் மனித நேயம் காக்கும் உறவின் சட்டம். மானிட வாழ்வுக்கு உயர்வு தரும் மன்னிப்பின் சட்டம். சாதியம் கடந்து நிற்கும் சமத்துவத்தின் சட்டம். பகைமையை மறந்து உறவை மலரச் செய்யும் அன்புச் சட்டம். சமூக சீர்கேடுகளை களைந்தெறியும் புரட்சிகரமான சட்டம். இதுவே வாழ்வின் சட்டம். இவ்வாறாக பரிசேயர்கள் கடைபிடிக்கும் சட்டங்களிலிருந்து தனது சட்டத்தை இயேசு சற்று வேற்றுமைப்படுத்திக் காட்டுகிறார்.
இன்றைய நாளில் நாம் சட்டங்கள், பாரம்பரியம், சம்பிரதாயம், சடங்கு முறைகள் போன்றவற்றில் வாழ்வு தராத செயல்பாடுகளை களைந்துவிட்டு, இயேசு காட்டும் வாழ்விற்கான நெறிமுறைகளைப் பின்பற்றி வாழ்வோம். சாவின் நெறிமுறைகளை களைந்தெறிவதன் மூலம் வாழ்வை நிறைவாகப் பெற்றுக் கொள்வோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக