வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

அன்புக் கட்டளை... (27.2.2021)

அன்புக் கட்டளை...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒருமுறை ஒரு இளைஞன் ஒருவன் நேர்முகத் தேர்வுக்காக ஒரு மிகப்பெரிய அலுவலகத்திற்கு சென்றான். அப்பொழுது அங்கு நுழைவாயிலின் அருகே தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதற்கு அங்கே இருந்த குழாயில் தண்ணீர் ஒழுகிக் கொண்டிருந்தது. "கண்ணா! பைப்ல தண்ணி போய்க்கிட்டே இருக்கு. அத அடைச்சு வை" என தந்தை தனது காதில் சொல்வது போலிருந்தது அவனுக்கு. சற்று கோபம் வந்தாலும் அந்தக் குழாயை அவன் சென்று அடைத்தான்.
அவன் தொடர்ந்து நடந்த பொழுது கதவிற்கு வெளியே போடப்பட்டிருந்த கால்மிதியடி ஒழுங்கு இல்லாமல் கோணலாக இருந்தது. "கண்ணா! அதை எடுத்து நேராக போடு!" என மீண்டும் தந்தை சொல்வது போல இருந்தது. எங்க போனாலும் இவரோட ஞாபகம் வந்துகிட்டே இருக்கே! என்று சற்று எரிச்சல் அடைந்தாலும், அந்த கால்மிதியடியை நேராக போட்டுவிட்டு தொடர்ந்து உள்ளே சென்றான். அங்கே நேர்முகத் தேர்வுக்காக வந்திருந்தவர்கள் எல்லாம் மாடிப்படியில் ஏறி மேலே செல்ல வேண்டியிருந்தது. அவனும் அந்தப் படியின் வழியாக மேலே ஏறிச் சென்றான். அப்பொழுது தந்தையின் குரல் காதில் கேட்பது போலிருந்தது. "கண்ணா! மாடிக்கு போற வழியில விளக்கு எரிந்து கொண்டே இருக்குது! அதை அணைத்து வைத்து விட்டு போ!" என்று சொல்வது போல இருந்தது. அங்கு சுவற்றில் இருந்த மின் விளக்கின் பொத்தானை அழுத்தி அதை அணைத்துவிட்டு, தொடர்ந்து நேர்முகத் தேர்வுக்கான அறைக்கு அருகில் சென்று அங்கு இருந்தவர்களோடு இவனும் காத்திருந்தான். இவனுக்கு அழைப்பு வந்தது. உள்ளே சென்றான். நேர்முகத் தேர்வை நடத்துபவர் புன்னகையோடு அவனை வரவேற்றார். அவனது பெயர் மற்றும் கல்வித் தகுதியை கேட்டுவிட்டு, அவனது சான்றிதழ்களையும் சரிபார்த்து வாங்கி வைத்துக் கொண்டார். பின்னர் அந்த அலுவலகத்தில் மேலாளர் பணிக்கான பணி நியமன ஆணையை அவனிடத்தில் கொடுத்தார். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. நீங்கள் என்னிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லையே!ஆனால் உடனே எனக்கு பணி நியமன ஆணை வழங்கிவிட்டீர்களே! என்று விழிகள் விரிய ஆச்சரியத்தோடு கேட்டான். 

தம்பி! நீ வாசலில் நுழைந்ததில் இருந்து, இந்த அறைக்குள் வந்த நேரம் வரை உனக்கான நேர்முகத்தேர்வு உனக்கும் தெரியாமல் நடந்து கொண்டிருந்தது. எல்லோருக்கும் அப்படியே. ஒழுகிக்கொண்டிருந்த தண்ணீரை அடைத்தது, கால்மிதியடியை சரி செய்தது, மாடிப்படியில் எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைத்து வைத்தது. இச்செயல்பாடுகள் தான் நேர்முகத்தேர்வில் நாங்கள் எதிர்பார்த்த நடைமுறைக் கேள்விகள். இந்தத் தேர்வில் நீ வெற்றி பெற்று இந்த அறையினுள் நுழைந்தாய்!  என்று அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மகிழ்வோடு அவனது கரங்களை குலுக்கி அவனை அந்த நிறுவனத்தின் மேலாளர் பணிக்கு  வரவேற்றார். கண்ணா தன் தந்தையை நினைத்து உள்ளத்தின் ஆழத்தில் அன்று இறைவனுக்கு நன்றி செலுத்தினான். 

ஆம் அன்புக்குரியவர்களே! இன்றைய முதல் வாசகம் நமக்கு ஆண்டவரின் நியமங்களை, அவரின் வாழ்வை  வளப்படுத்தும் கட்டளைகளை எடுத்துரைக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகமானது, ஆண்டவர் நமக்கு அளித்த கட்டளைகள் அன்பின் கட்டளைகள் நிறைவின் கட்டளைகள் என்பதை நமக்கு தெளிவுபடுத்துகிறது. 
நிறைவானது வரும் போது அரைகுறையானது ஒழிந்துபோம்.
1 கொரிந்தியர் 13:10

என்ற இறை வார்த்தைக்கு ஏற்ப நிறைவான தந்தையின் வாரிசுகளான நாமும் அவரில் நம்மை இணைத்துக் கொள்ளும் பொழுது, அவரது அன்பில் நம்மை வளர்த்துக் கொள்ளும் பொழுது நம்மிடம் அரைகுறையாக இருக்கின்ற நமது தீய நாட்டங்களும், தானெனும் அகந்தையும், தான் மட்டுமே என்னும் அதிகார செருக்கும் நம்மை விட்டு ஒழிந்து போகும். 

அன்பினால் அமைதியும், அமைதியால் சிந்தனைத் தெளிவும், சிந்தனைத்தெளிவால் நல் எண்ணங்களும், நல்ல எண்ணங்களால் நற்செயல்களும், நற்செயல்களால் நிறைவான மகிழ்வும், இவ்வுலகில் பரவிடும். 

            கண்ணாவிற்கு அவனது குடும்பத்தில், அவனது தந்தை பயிற்றுவித்த நற்பழக்கங்கள் அவற்றைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதில், அவனது உள்ளத்தில் சிறிது மனச்சோர்வை வெளிப்படுத்தினாலும் அன்று அந்தத் தொடர்பயிற்சியே அவனுக்கு அந்த அலுவலகத்தில் மேலான பணியைப் பெற்றுத் தந்தது. 

               ஆண்டவரின் அன்பு நிலையானது, நிறைவானது, என்பதை இன்றைய வாசகங்கள் வெளிப்படுத்துகின்றன. நிறைவானது வருகின்ற பொழுது, நம்மில் எல்லாம் நிறைவாகும். 

              நாம் உலகிற்கே ஒளி கொடுக்கின்ற சூரியனைப் போல அனைத்து சக்தியும் நிறைந்தவர்களாக இல்லாவிட்டாலும், சிறு ஒளியை தாங்கிய அகல் விளக்காக நம்மை உருவாக்கிக் கொள்வோம். அன்பு என்னும் எண்ணெயால், நமது விளக்குகள் நிரம்பட்டும். தீமைகளும் பொறாமைகளும் அவ நம்பிக்கைகளும் மனச்சோர்வுகளும் நம்மை விட்டு அகலட்டும். 

     ஆண்டவரின் அன்புக் கட்டளைகள் நமக்கு வாழ்வு கொடுக்கட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...