நாமும் முன்மாதிரிகளாக மாறிடுவோம்....
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
மனித வாழ்வில் இன்பம் அதிகமா? துன்பம் அதிகமா? என்று கேட்டால் துன்பம் தான் அதிகம் இன்று.
உலகம் முக்காற் பங்கு தண்ணீரால் ஆனது. மனித வாழ்க்கையும் முக்கால் பங்கு கண்ணீரால் ஆனது என்பார்கள்.
இன்பங்களை எண்ணி சொல்லி விடலாம். ஆனால் துன்பங்களின் வகைக்கோ கணக்கே இல்லை.
எத்தனை வகையான துயரங்கள் மனிதனுக்கு. அத்தனையையும் அவன் தாங்கிக் கொண்டு தானே வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
மனித இதயம் அதிசயமான ஆற்றல் உடையது. அது எத்தகைய துயரத்தையும் தாங்கிக் கொள்கிறது.
துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் சக்தி இதயத்திற்கு இல்லை என்றால் முதல் துயரத்தில் மனிதர் எல்லோரும் இடிந்து போயிருப்பார். இன்று உலகில் மனிதன் இருந்திருக்கவே மாட்டான்.
துன்பங்களில் தாங்கிக் கொள்ள முடியாதது எது? என்று சிந்திக்கும் பொழுது உடல் உபாதைகள் தான் மிகவும் ஒருவரை வாட்டுகின்ற ஒன்றாக உள்ளது.
இன்றைய முதல் வாசகத்தில் உடல்மீது ஏற்படக்கூடிய தொழுநோய் பற்றி நாம் வாசிக்கின்றோம். தொழுநோய் என்பது பரவக்கூடிய ஒரு நோயாக பார்க்கப்பட்டது. எனவே தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மக்களோடு தொடர்பில் இருத்தலாகாது. எனவே அவர்கள் தனித்து வைக்கப்பட்டனர். பல நேரங்களில் இந்த உடல் உபாதைகள் எல்லாம் கடவுளால் தரப்படுவது என மக்கள் நம்பி நோய்த் தொற்று ஏற்பட்டதால் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டார்கள்.
பிற்காலத்தில் தனித்து வைக்கப்பட்டவர்கள் எல்லாம் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாக சித்தரித்து. சமூகம் அவர்களோடு தொடர்பில் இல்லாமல் அவர்களை பாவிகள் என்று கூறி ஒதுக்கி வைத்தது. ஆனால் ஒதுக்கி வைக்கப் படுவது அல்ல நமது நோக்கம். நோய்த்தொற்று காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு ஆறுதலும் ஆதரவும் தருவது தான் நமது நோக்கமாகும். தற்போது கூட கோரோனா நோய் தொற்று காரணமாக ஆங்காங்கே மக்கள் தனிமையில் இருந்தபோது பல நல்ல உள்ளங்கள் இந்த தனிமையில் வாடும் உள்ளங்களுக்கு தேவையானவைகளை செய்தார்கள் என்பது நம்மில் யாரும் மறுக்க முடியாத ஒன்று.
இத்தகைய பணியை தான் இயேசு அன்று அந்தச் சமூகத்தில் செய்தார். தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவரை இயேசு தொட்டு குணப்படுத்தினார். மேலும் ஒருவன் குணம் பெற்றதன் அடையாளமாக கோவிலில் செலுத்தவேண்டிய காணிக்கைகளை செலுத்தி... தான் நோயிலிருந்து முற்றிலும் குணம் பெற்றான் என்பதை அனைவரும் அறியும் வகையில் அறியச் செய்து உன் வாழ்க்கை பயணத்தில் அடுத்தவருக்கு உதவி செய்ய கூடியவனாக வாழ்வதற்கு வழி செய்து கொடுத்தவர் தான் இந்த இயேசு.
அன்று சமூகத்தால் நோயின் காரணமாக ஒதுக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைக்காமல் அவர்களை தொட்டு அவர்களோடு உறவாடி இயேசுவைப் போல நாம் ஒவ்வொருவரும் வாழ வேண்டும் என்ற செய்தியை தான் இன்றைய இரண்டாம் வாசகம் வழியாகவும் பவுலடியார் நமக்கு உணர்த்துகிறார்.
பவுல் தான் வாழ்ந்த காலங்களில் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் போது பலவிதமான இன்னல்களையும், ஒடுக்குமுறைகளையும், அடக்குமுறைகளையும் சந்தித்தார்.ஆனால் மனம் தளராமல் எங்கெல்லாம் இயேசுவை ஏற்றுக் கொள்பவர்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் நம்பிக்கையை தரக்கூடிய வார்த்தைகளை விதைத்தார்.
ஒரு காலத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரை அறிவிப்பவர்களையெல்லாம் அழித்து, அவர்களை கொல்ல தேடிக் கொண்டிருந்த இவர் இன்று அதே ஆண்டவரின் பெயரை அறிவிக்கக்கூடியவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டும் நல்ல ஒரு முன்மாதிரியாக மாறினார்.
நாமும் பவுலைப் போல முன்மாதிரிகளாக மாறிட இறையருளை வேண்டி நமது செயல்களில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்கி கொண்டு சொல்வதை நிறுத்தி செயலில் காட்டக்கூடிய இயேசுவின் சீடர்களாக இவ்வுலகில் வலம்வர இறையருளை வேண்டுவோம்.
ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றி, அவரைப்போல பணியாற்றி அனைவருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்திட குருத்துவப் பணியினை ஏற்க இருக்கும் தங்களின் பணிகள் இறைவனால் நிறைவாக ஆசீர்வதிக்கப்பட அன்புடன் ஜெபிக்கிறோம்!
பதிலளிநீக்கு