செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

உயர்ந்த எண்ணங்களால் உள்ளத்தை அலங்கரிப்போம்... (24.2.2021)

உயர்ந்த எண்ணங்களால் உள்ளத் அலங்கரிப்போம்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய இரண்டு வாசகங்களும் மனம் மாறுதலைப் பற்றிய ஒரு விளக்கத்தை, அதன் தாக்கத்தை இன்று நமக்கு வெளிப்படுத்துகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் நாம் காணும் இறைவாக்கினர் யோனா ஒரு இஸ்ரயேலர். யூதப் பின்னணியோடு பிறந்தவர். யோனா என்பதற்கு புறா என்பது பொருள். யோனா நினிவே நகருக்கு இறைவாக்கு உரைக்க கடவுளால் அனுப்பப்படுகிறார். ஆனால் யோனாவிற்கு அங்கு செல்ல விருப்பமில்லை. 
              நினிவே மிகப்பெரிய அழகு மிக்க, செல்வாக்கு மிக்க, பலம் மிக்க நகரம். கிழக்கு நோக்கி இருந்த இந்த நினிவே நகரத்திற்கு செல்லாமல், மேற்கு நோக்கி இருந்த தர்சு நகரை நோக்கி தப்பிச் செல்கின்றார். 
                         நினிவே நகரத்தில் இருந்த மக்கள் ஏழை எளியவரை சுரண்டினர். போரில் மிகக் கொடூரமாக நடந்து கொண்டனர். கடவுளுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டினர். பில்லி சூனியங்களில் ஈடுபட்டனர். விலை மகளிரை நாடினர். 
         மீன் வயிற்றில் இருந்து நினிவே நகரத்திற்கு வந்த யோனாவின் காட்சி, அவர் மரித்து உயிர்த்தவர் என்ற அடையாளத்தைக் கொடுத்தது. "மரித்தவர்" என்றால் கடவுளுக்கு கீழ்படியாத காரணத்தினால் கடவுளின் தண்டனையாக மரணத்தை தழுவியவர் என்பது பொருளாகும். "உயிர்த்தவர்" என்றால் கடவுளின் இரக்கத்தினால் அவரது விருப்பத்தை செய்யும்படி நினிவேக்கு அனுப்பப்பட்டவர் என்பது பொருளாகும். நினிவே நகர மக்கள் யோனாவின் செய்தியைக் கேட்டு இதயத்தில் குத்துண்டவர்களாய், தாங்கள் பாவிகள் என்ற உணர்வை பெற்றார்கள். அரசன் முதல் விலங்குகள் வரை நோன்பு காத்தனர். சாக்கு உடை அணிந்து சாம்பலில் அமர்ந்தனர். சாக்கு உடையும் சாம்பலும் மனமாற்றத்தின் அடையாளம்.
                தவக்காலம் மனமாற்றத்தின் தெய்வீகத்தை காண அழைக்கும் காலம். தவக்காலம் என்றால் தளிர்க்கும் காலம்.  அன்பும் இரக்கமும் துளிர்க்கும் காலம். தூய்மையும் நற்செயல்களும் மிளிரும் காலம். மனமாற்றம் மலரும் காலம். புதுவாழ்வில் புனிதம் புலரும் காலம். எனவே நாம் யோனாவின் அடையாளத்தை நமது வாழ்வின் அடையாளமாக்குவோம். 

மாற்றம் என்பது வளர்ச்சியின் அடையாளம். 
ஏற்றம் என்பது எழுச்சியின் அடையாளம். 
வளர்ச்சி என்பது வாழ்வின் அடையாளம். 

மாற்றம், ஏற்றம், வளர்ச்சி இவை ஒரு மனிதனை தெய்வீக நிலையை அடைய உதவுகின்றது. இறைவாக்கினர் யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு எந்த அடையாளமும் உங்களுக்கு கொடுக்கப்பட மாட்டாது என்று இயேசுகிறிஸ்து இன்றைய நற்செய்தியில் கூறுகிறார். யோனாவை விட பெரிய அடையாளமாக நம் கண்முன் இருக்கும் இயேசு ஆண்டவர் இருக்கிறார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காண்கிறோம். கீழ்படிதலின் உச்சகட்டம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் வெளிப்படுவதை நாம் காண்கிறோம். "தந்தையே! இத்துன்ப கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனால் அது என் விருப்பப்படி அல்ல. மாறாக உம் விருப்பப்படியே நிகழட்டும்" என்று தந்தையின் திருவுளத்திற்கு தன்னை முற்றும் கையளித்தவர் தான் நமது நற்செய்தியின் நாயகனாம் இயேசு கிறிஸ்து. 
          அவரது இறை வார்த்தைகளுக்கு அனுதினமும் செவி கொடுக்கின்ற நாம், நமது வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றம் எத்தகையது என்பதை இன்று சிந்திப்போம்.
                        இன்றைய நாளில் நமது மனமாற்றம் நம்மில் வளர்த்துள்ள நல்ல எண்ணங்களை, உயர்ந்த எண்ணங்களை உள்ளத்தில் நினைத்துப் பார்ப்போம். 

                  நல்ல எண்ணங்கள் நம்மில் வளர்த்துள்ள நற்செயல்கள் என்னும் அன்பின் கனிகளை நினைத்துப் பார்ப்போம். 

         தந்தையே என் விருப்பப்படி அல்ல. உமது விருப்பப்படியே  உமது திருவுளம் எமது வாழ்வில் நிறைவேற, எம்மை உமது கருவியாக்கும் என்று இன்றைய பலியில் இணைந்து ஜெபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...