நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒருமுறை ஒரு கணவனும் மனைவியும் வீட்டில் பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது வீட்டு வாயிலில் இருந்த அழைப்பு மணி ஒலித்தது. உடனே கணவர் வாயில் அருகே சென்று பார்த்தார். ராணி! அம்மா வந்திருக்காங்க என்று மகிழ்ச்சியோடு மனைவியை நோக்கி சப்தமாக கூறினார். உடனே மனைவி கத்த ஆரம்பித்தாள். இந்த குடும்பத்தில் நான் எத்தனை பேருக்கு தான் சமைப்பது? வீட்டுக்கு வருவோர் போவோருக்கு எல்லாம் எப்படி தினமும் சமைப்பது? அம்மா என்றால் அவர்களுக்கும் வீடு இருக்கிறது தானே! அங்கேயே சமைத்து சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டியது தானே! அவ்வப்போது மகனை பார்க்கிறேன் என்று சொல்லி இந்த வீட்டுக்கு வந்து, எனக்கு கிடைக்கும் கொஞ்ச நேர ஓய்வையும் எடுக்கவிடாமல் செய்கிறார்களே! இதுதான் அம்மாவா? இதுதான் அவரின் லட்சணமா? என்று அம்மாவின் காதில் கேட்கும்படியாக கத்த ஆரம்பித்தாள். கணவன் அவள் அருகில் வந்து அவளை அமைதிப்படுத்த முயன்றான். ஆனால் மனைவியோ எதற்கும் செவி கொடாமல் தான் மனதில் உதித்திருந்த அத்தனை வார்த்தைகளையும் கொட்டித் தீர்த்தாள்.
ஒரு நிமிட அமைதிக்குப் பின் கணவன், வருத்தமாக, "அம்மா இங்கே இருந்து திரும்பிப் போய் விட்டார்கள்" என்று கூறினான். உடனே மனைவி புன்னகை பூக்க, அப்பாடா! தொல்லை ஒழிந்தது! என்று கூறினாள்.
உடனே கணவன் மனைவியிடம், "உன்னுடைய அம்மா உன்னைப் பார்ப்பதற்காக முதன் முதலாக நமது வீட்டிற்கு வந்திருக்கும் இந்த நேரத்தில் இப்படிப் பேசி அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டாயே? இத்தனை ஆண்டு காலமாக உன்னுடைய அம்மா எப்படித்தான் உன்னை கவனித்துக் கொண்டார்களோ?" என்று ஆதங்கப்பட்டுக் கூறினான். உடனே மனைவி வாசலை நோக்கி ஓடினாள். ஆனால் அவள் வாசலை சென்றடைவதற்குள் அவளுடைய அம்மா அந்த வீதியை கடந்து சென்று விட்டாள்.
ஆம் அன்புக்குரியவர்களே!
இன்றைய முதல் வாசகமானது மாட்சிமைக்குரிய இறைவனின் வல்லமையைப் பற்றியும், அதனை எதிர்த்து செயல்படுகின்ற மனிதனின் பாவ நிலையை பற்றியும் எடுத்துக் கூறுகின்றது. ஆண்டவருடைய கட்டளைகளின்படி, அவரது கட்டளைக்கு கீழ்படிந்து நடப்போரிடம், ஆண்டவர் தனது உடன்படிக்கையை நிலைநிறுத்துகின்றார். ஆனால் அவரது வார்த்தைகளுக்கு செவி கொடாமல் தனது உள்ளத்தின் தீய எண்ணங்களின் படிவாதத்தின்படி, மனம் போன போக்கிலே செயல்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒவ்வொருவருக்கும், அவர்களது எண்ணங்களின் பயனாக, அவர்களது தீய செயல்களின் பயனாக, அவர்களுக்கு சாபமும் அவமானமுமே கிடைக்கும். இவற்றையும் அவர்கள் தங்களுக்குத் தாங்களே வருவித்துக் கொள்கிறார்கள் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, தந்தையாம் இறைவன் இரக்கம் உள்ளவராக இருப்பது போல நம் ஒவ்வொருவரையும் இரக்கம் உள்ளவராக வாழ அழைப்பு தருகின்றார். நாம் பிறரை தீர்ப்பிடாமலும், பிறரை கண்டனத்திற்கு உள்ளாக்காமலும், பிறர் நமக்கு எதிராக செய்த குற்றங்களை மன்னித்து அவர்களை ஏற்றுக்கொண்டு வாழவும் ஆண்டவர் அழைப்பு தருகின்றார். மேலும் நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும் என்று கூறுகிறார்.
இன்றைய நாளில் நாம் நமது உள்ளத்தில் ஒவ்வொரு நாளும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஆண்டவரின் குரலுக்கு அமைதியில் செவி கொடுப்போம்.
நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்.
யோவான் 13:15
நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன் என்று கூறிய நம் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவை போல, பிறர் நமக்கு எதிராக செய்த குற்றங்களை நாம் மனதார மன்னிக்க அழைக்கப்படுகிறோம்.
மன்னிப்பதால் - நமது மனதின் பாரம் குறைகிறது.
மன்னிப்பதால் - நமது உள்ளத்தில் அமைதி பிறக்கிறது.
மன்னிப்பதால் - நமது உள்ளத்தில் மகிழ்ச்சி ஊற்றெடுக்கிறது.
மன்னிப்பதால் - அகமும் முகமும் மலர்கின்றன.
மன்னிப்பதால் - நாம் உடல் நலமும் மன நலமும் பெறுகிறோம்.
மன்னிப்பதால் - உள்ளத்தில் பலம் பெறுகிறோம்.
மன்னிப்பதால் - நாமும் நமது அயலாரும் வாழ்வு பெறுகிறோம்.
கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்று ஒரு முன்மாதிரியை வைத்துச் சென்றுள்ளார். எனவே, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்; இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளீர்கள்.
1 பேதுரு 2:21
எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும் என்று இன்றைய நாளில் ஆண்டவர் இயேசு நம்மைப் பார்த்து கூறுகிறார். நம்மை எந்த அளவிற்கு இறைவன் மன்னிக்க வேண்டும் என விரும்புகிறோமோ, அந்த அளவிற்கு நாம் நமது அயலாரையும் நமது அருகில் இருப்பவர்களையும் மன்னித்து, மகிழ்வோடு வாழ இன்றைய நாளை இறைவனின் கரங்களில் அர்ப்பணிப்போம். நம்மை இறைவன் ஆசீர்வதிக்கவும் பிறரை மன்னிப்பதற்கு தேவையான நல்ல மனதை இறைவன் இன்று நமக்குத் தரவும் சிறப்பாக செபிப்போம்.
இறைவனிடமிருந்து பெற்று கொண்ட மன்னிப்பின் இதயத்தின் வழியாக ஆண்டவரைப் போல நாம் மாறிட அவரின் அருள் கேட்போம்.
கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரிக்கேற்ப நீங்கள் ஒரே மனத்தினராய் இருக்குமாறு மன உறுதியையும் ஊக்கத்தையும் தரும் கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக!
உரோமையர் 15:5.
ஆமென்.
மன்னிப்பில் இத்தனை மகத்துவங்களா! நமக்கு முன்மாதிரி காட்டும் நம் ஆண்டவர் இயேசுவுக்கு கோடான கோடி நன்றிகள்! நமது சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்! மற்றும் நன்றிகள்!
பதிலளிநீக்கு