வாருங்கள் சோதனையை எதிர்கொள்வோம்...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறுவார்,
அச்சத்தால் பின்வாங்கும் குளிரான அல்லது வெதுவெதுப்பான கிறிஸ்தவர்கள் அல்ல நாம். தூய ஆவியால் பற்றி எரியும் கிறிஸ்தவர்களே நாம்.... இன்று திருஅவைக்கு நாம்மை போன்றோர் தேவை... என்று கூறுவார்.
இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் நன்மைகளை விரும்பும் நாம், சோதனைகளை எதிர் கொள்ள தயங்குகிறோம். இந்த உலகத்தில், இறப்பு என்பது எல்லோருக்கும் வந்தே தீரும். ஆனால் யாரும் இறக்க விரும்புவது இல்லை.
உணவு எல்லோருக்கும் தேவையான ஒன்று தான். ஆனால் நம்மில் பலர் பயிரிட விரும்புவது இல்லை.
தண்ணீர் எல்லோருக்கும் தேவையான ஒன்று. ஆனால் நம்மில் பலர் அதை சேமிக்க விரும்புவதில்லை.
பால் எல்லோருக்கும் தேவையான ஒரு பொருளாக இருக்கிறது. ஆனால் நம்மில் பலர் பசுவை வளர்க்க விரும்புவதில்லை.
நிழல் எல்லோருக்கும் தேவையான ஒன்றாக இருக்கிறது. ஆனால் நம்மில் பலர் மரம் வளர்க்க விரும்புவதில்லை.
ஒரு குடும்பத்தில் மருமகள் எல்லோருக்கும் தேவையான ஒரு உறவாக இருக்கிறாள். ஆனால் நம்மில் பலர் மகள்களை பெற்றெடுப்பதற்கு விரும்புவதில்லை.
நல்ல செய்தி எல்லோருக்கும் தேவைப்படுகிறது ஆனால் படித்த நல்ல செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல நம்மில் பலர் முன் வருவதில்லை.
அந்த அடிப்படையில் தான் வாழ்வில் வெற்றி அடைய, வாழ்வில் நம்பிக்கையை பெற, துணிச்சலை கற்றுக் கொள்ள சோதனைகளை நாம் கடக்க வேண்டும். ஆனால் யாரும் சோதனைகளை கடக்க முன்வருவதில்லை. இன்றைய நற்செய்தி வாசகத்தில் தூய ஆவியானவர் துணையோடு, சோதனைகளை இயேசு எதிர் நோக்கிச் செல்கிறார்.இந்த தூய ஆவியானவர், மன உறுதியோடு சோதனைகளை எதிர் கொள்ளவும் சோதனைகளின் போது எப்படி இயேசுவை வழிநடத்தினாரோ, அவ்வாறு தான் நம் ஒவ்வொருவரையும் வழிநடத்துகிறார்.
இந்த தூய ஆவியானவர் நமது திருமுழுக்கின் வழியாக நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறார். இதைத் தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் வாசிக்க கேட்கின்றோம். திருமுழுக்கின் வழியாக தூய ஆவியைப் பெற்ற இயேசு நமது பாவங்களுக்காக இறந்தை முன்னிட்டு இறைவன் நமது குற்றம் குறைகளை மன்னிக்கிறார். நாமும் திருமுழுக்கு வழியாக தூய ஆவியாரை பெற்றுக் கொண்டுள்ளோம். நாமும் துன்பங்களை சோதனைகளை எதிர் கொள்ள துணிவு கொள்ள வேண்டும்.
உரோமையர் 5: 5 கூறுகிறது, எதிர்நோக்கு ஒரு போதும் ஏமாற்றம் தராது. ஏனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாக கடவுள்களின் அன்பு நம் உள்ளங்களில் பொழியைப் பட்டுள்ளது. இந்த அன்பானது, நம்மை சோதனைகளை எதிர் கொள்ள நம்மை அடுத்தவரின் வாழ்வுக்கான வழிகாட்ட தைரியத்தை தருகிறது.
திருத்தூதர் பணிகள் 1: 8ல் நாம் வாசிக்கிறோம், தூய ஆவி அவர்களிடம் வரும் போது, நீங்கள் கடவுளது வல்லமையை பெற்று, எருசலேமிலும், யூதேயா சமாரியா முழுவதிலும், உலகின் கடை எல்லை வரைக்கும் எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள் என்று இயேசு கூறுகிறார். தூய ஆவியைப் பெற்றுக் கொண்டுள்ள நாம் அனைவரும், சோதனைகளை இயேசுவைப் போல எதிர் கொண்டு, அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய், உலகின் கடை எல்லை வரை இயேசுவின் சீடர்கள் நாம் என்பதற்கு சாட்சிகளாக திகழ அழைக்கப்படுகிறோம். நம் ஒவ்வொருவரையும் இறைவன் பார்த்து பார்த்து மிகவும் அழகாகவும் அன்பாகவும், நமது வாழ்வுக்கு தேவயானதை எல்லாம் சொல்லிக் கொடுத்து, வருகிறார். வாழ்வில் நாம் சந்திக்கும் துன்பங்கள் எல்லாம் அவர் நமக்கு கற்றுத்தரும் பாடங்கள் என்பதை உணர்ந்து, கொள்ள அழைக்கப்படுகிறோம்.
இன்றைய முதல் வாசகத்தில் தொடக்கத்தில் மனிதன் தவறிழைத்த போது தான் படைத்த மனிதனை நினைத்து மனம் வருந்திய கடவுள், இவ்வுலகை அழிக்க எண்ணினார். இருந்த போதிலும் சிலரைத் தேர்வு செய்தார். நோவாவையும் அவரது குடும்பத்தையும் தேர்வு செய்து, அவர்களை பாதுகாத்து பராமரித்தார். அழிவுக்கு பிறகு அவர்களை, பேழையிலிருந்து நிலத்தில் இறங்கச் செய்யும் முன், அவர்களோடு ஓர் உடன்படிக்கையை நிறுவினார். அந்த உடன்படிக்கை மீண்டும் ஒரு முறை உலகம் முழுவதையும் இவ்வாறு அழிக்க கூடாது என்ற கடவுளின் இரக்கத்தின் வெளிப்பாடாய் வந்த அந்த உடன்படிக்கையானது நிறுவப்பட்டது. பல நேரங்களில் பல நல்ல செயல்களை செய்யும் போதும், துன்பங்களை ஏற்றுக் கொள்ளாமல் ஒதுங்கி ஓடும் போதும், நம்பிக்கை இழந்து இருக்கக்கூடிய சூழலிலும், இறைவன் நம்மை கண்ணோக்குகின்றார். ஆனால் கைவிடுவதில்லை. நம்மோடு பயணிக்கின்றார். நமக்கு வழிகாட்ட நம்மோடு இருக்கின்றார். திருவிவிலியத்தில் அதிகமான துன்பங்களை அனுபவித்த ஒரு நபராக, யோபு அவர்களை நாம் காணலாம். இந்த யோபு செல்வ செழிப்போடு இருந்த போதும், அந்த செல்வ செழிப்பு எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில், அவரை விட்டு அகன்று உடல் முழுவதும் கொப்புளங்களால் சூழப்பட்டு குப்பைத் தொட்டிக்கு அருகே ஏழைகளிலும் ஏழையாக, தொட மறுக்கக் கூடிய நிலையை மிகவும் அருவருப்பான ஒரு நிலையை அடைந்த போதும் கூட நம்பிக்கையோடு கூறினார், குழந்தை பருவம் முதல் அவர் என்னை தந்தையை போல் வளர்த்தார். என் தாய் வயிற்றிலிருந்து என்னை வழிநடத்தினார் என கடவுளை குறித்து யோபு கூறுவதை யோபு நூல் 31: 18ம் வசனத்தில் நாம் வாசிக்கலாம். நாம் நமது வாழ்வில் துன்பங்கள் துயரங்கள் சூழும்போது நாம் நம்பிக்கையை இழந்துவிடாது ஆண்டவர் இயேசுவை உறுதியாகப் பிடித்துக் கொண்டு பயணிக்க அழைக்கப்படுகிறோம்.
துன்ப நேரங்களில் எல்லாம் நம்மை வழிநடத்த கூடிய தூய ஆவியானவரின் உடன் இருப்பை உணர்ந்து கொள்வோம். துன்பங்களையும் சோதனைகளையும் எதிர்கொள்ள வலிமை பெறுவோம். அந்த துன்பங்களையும் சோதனைகளையும் நாம் எதிர்கொள்ளும் போது தான் வாழ்வுக்கான பாடத்தை உள்வாங்கிக் கொள்கிறோம். இதையே தான் இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு உணர்த்துகிறார். நாம் துன்ப நேரங்களிலும் சோதனைகளை எதிர் கொள்ளக்கூடிய நேரங்களிலும் அமைதியில் ஆவியானவரின் குரலுக்கு செவி கொடுப்போம். அப்போது கண்டிப்பாக எசாயா இறைவாக்கினரைப் போல நாமும் தூய ஆவியின் குரல் ஒலியை கேட்கலாம். இறைவாக்கினர் எசாயா நூல் அதிகாரம் 30, 21வது வசனம் கூறுகிறது, நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும், இதுதான் வழி. இதில் நடந்து செல்லுங்கள் என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும் என்ற எசாயா இறைவாக்கினரின் வார்த்தைகளுக்கு ஏற்ப, நமக்குள் இருந்து ஒலித்துக் கொண்டிருக்க கூடிய தூய ஆவியானவரின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய் நாம் சோதனைகளை இயேசுவைப் போல இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு பயணிப்போம். சோதனைகளிலிருந்து வென்று வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொள்ள தூய ஆவியானவர் நமக்கு துணையாக இருக்கிறார். இதனை உணர்ந்தவர்களாக திருமுழுக்கு நாம் பெற்ற தூய ஆவியை இன்றைய நாளில் நினைவு கூர்ந்து, நமது வாழ்வை அர்த்தமுள்ள ஒரு நல்ல வாழ்வாக அமைத்துக் கொள்ளவும், துன்பங்கள் சோதனைகளிலும் மனம் தளராது அதனை எதிர்கொண்டு வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்ள இன்றைய நாளில் அழைக்கின்றது, இறைவார்த்தை. இந்த இறை வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்வை அமைத்துக் கொண்டு இயேசுவின் பாதையில் பயணம் செய்து, இந்த தவக்காலம் முழுவதும் நாம் சந்திக்கக் கூடிய சோதனைகளை துணிச்சலோடு எதிர் கொள்ள இறையருளை வேண்டுவோம்.
🙇🙇🙇🙇🙇🙇
பதிலளிநீக்கு