திங்கள், 8 பிப்ரவரி, 2021

மரபுகள் கற்பிக்கும் பாடம் என்ன? (9.2.2021)

மரபுகள் கற்பிக்கும் பாடம் என்ன?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய வாசகங்கள் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்....

 இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் உயிரினங்களை படைப்பதை நாம் வாசிக்க  கேட்கின்றோம்.  கடல் வாழ் உயிரினங்கள், தரையில் நடமாடக் கூடிய கால்நடைகள் என அனைத்தையும் இறைவன் படைக்கின்றார்.  இறைவனின் படைப்பு அனைத்தும்   இறைவனின் அன்பை இவ்வுலகத்திற்கு வெளிப்படுத்துவதற்காகவே படைக்கப்பட்டன. இந்த படைப்புகள் அனைத்தும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பாடத்தை நமக்கு கற்பிக்கின்றன. அவைகளுள் சில மரபுகளாக மாறுகின்றன. நேர்மறையான மரபுகளை புறம் தள்ளிவிட்டு மனிதன் தனக்கு சாதகமான  மரபுகளை மட்டும் இறுக பிடித்துக்கொண்டு மரபுகளின் அடிப்படையில் ஒருவரை ஒருவர் குறைகாணக் கூடியவர்களாக இருக்கின்ற தன்மையை தான் இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக இயேசு சுட்டிக்காட்டுகிறார்.

நமது முன்னோர்களின் மரபுகளை படிப்பதையும், அம்மரபுகளின் அடிப்படையில் நமது வாழ்க்கைமுறை தொடரும் பொழுதும் நம் முன்னோர் காலத்தில் இருந்தது போன்ற பொற்காலத்தை இப்போது உருவாக்கலாம் என்று மரபுகளை பின்பற்றும் சிலர் கூறுவார்கள்.

ஆனால் நவீன கவிதை கூறுகிறது பொற்காலத்தை பற்றி படிப்பதைவிட அதை உருவாக்க முயற்சி எடுப்போம் என்று ...

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சீடர்கள் செய்த செயல்களை சுட்டிக் காண்பித்து முன்னோரின்  மரபுபடி நடவாமல் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டினை இயேசுவின் சீடர்கள் மீது  வைக்கும்பொழுது கடவுளின் கட்டளையை கைவிட்டுவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறீர்கள் என்று மரபுகள் குறித்து தாங்கள் கொண்டிருந்த எண்ணங்களை சீர்தூக்கி பார்க்க அழைப்பு தருகிறார்.  
ஆபிரகாமின் பிள்ளைகள் என மார்தட்டிக் கொள்ளக்கூடிய ஒவ்வொருவருமே ஆபிரகாமிடம் இருந்தும் ஈசாக்கிடம் இருந்தும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அன்று கடவுளின் வார்த்தைக்கு இணங்கி ஆபிரகாம் தன் மகனை அழைத்துக்கொண்டு பலியிடுவதற்காக மலைக்குச் சென்றார். தன்னைத்தான் பலியிட போகிறார் என்பதை அறியாதவராய் பலிக்கு தேவையான விறகு கட்டையை சுமந்துகொண்டு தந்தையின் பின் சென்றவர் ஈசாக்கு.
ஆபிரகாம் கடவுளின் வார்த்தைக்கு செவி கொடுத்து கடவுள் மீது தான் கொண்டிருந்த  நம்பிக்கையை வெளிக்காட்டினார் . 
முன்னோர்கள் வகுத்துத் தந்த மரபுகளை எல்லாம் பிடித்துக் கொள்ள கூடிய ஒவ்வொருவரும் ஆபிரகாமிடம் காணப்பட்ட கடவுள் மீதான நம்பிக்கையை இருக பிடித்துக்கொள்ள வேண்டும். ஆனால் அதைச் செய்யத் தவறிய பரிசேயர்களை இயேசு சுட்டிக்காட்டுகிறார்.

சுட்டிக் காட்டக்கூடிய இயேசு முன்னோரின் மரபுகளை பின்பற்றதவறல்ல இவர். ஆபிரகாமை விட ஒரு படி உயர்ந்து ஈசாக்கின் இடத்தைப் பெறுகிறார்.  தன்னைத்தான் பலியிட போகிறார்கள் என அறியாமல் சென்ற ஈசாக்கை விட, தான் இந்த உலகத்தில் மக்களுக்காக பலியாக போகிறேன். இது கடவுளின் விருப்பம் என்று உணர்ந்தவராய் தன்னை முழுவதும் பலியாக ஒப்படைத்தவர்தான் இயேசு. இவரிடம் காணப்பட்ட நம்பிக்கைதான் பலவிதமான நற்செயல்களை இவர் மண்ணில் செய்வதற்கு காரணமாக அமைந்தது. ஆபிரகாம், ஈசாக்கு,யாக்கோபு என்ற மூதாதையர் கொண்டிருந்த கடவுள் மீதான ஆழமான நம்பிக்கையின் அடிப்படையில் தான் செயல்படுவதால். நீங்களும் நம்புங்கள் உங்களால் நலமான பணிகளைச் செய்ய முடியும் என்ற பாடத்தை தன் வாழ்க்கை மூலமாக நமக்கு கற்பித்தவர் இயேசு.  
இறைவனால் உருவாக்கப்பட்ட உயிரினங்களிடமிருந்து இத்தகைய நேர்மறையான மரபுசார்ந்த  வாழ்க்கைப் பாடங்களை உள்வாங்கிக் கொண்டவர்களாக,நாம் நமது வாழ்க்கையில்  மாற்றத்தை முன்னெடுக்க கூடிய  மனிதர்களாகிட இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு அழைப்பு தருகிறார்.

இறைவனோடும் மனிதரோடும் உள்ளார்ந்த விதத்தில் உன்னதமான உறவில் வளர, மரபுகள் வழியாக விதைக்கப்படும் நம்பிக்கையை உள்வாங்கி கொண்டு இயேசுவைப் போல மனிதநேய பணிகளைச் செய்து ஒருவரை ஒருவர் அன்பு செய்து படைத்தவரை பறைச்சாற்றுவோம். 

1 கருத்து:

  1. ஏதோ பழமையானவை என்று நினைத்து விடாமல் மரபுகளின் மேன்மையை உணர்ந்து வாழ்வாக்க அர்த்தம் நிறைந்த கருத்துகளை அழகாக வழங்கிய அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது நன்றிகள்! 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...