வாருங்கள் இருள் நடுவே ஒளியாவோம்.....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகமானது, நாம் ஆண்டவருக்கு உகந்தவர்களாக வாழ்வதற்கு வழிகாட்டுகிறது. உதாரணமாக, அடுத்தவரை குற்றம் சாட்டக் கூடிய செயலையும், பொல்லாது பேசுவதையும் நிறுத்தவும், பசித்திருப்போருக்கு உதவி செய்யவும், வறியவருக்கு தேவையானதை செய்யவும், இருள் நடுவே ஒளியாக இருக்க இறைவன் இன்றைய வாசகம் வழியாக நம்மை அழைக்கின்றார்.
இதே இறைவன் தான் இன்றைய நற்செய்தி வாசகத்திலும், லேவி என்னும் பெயருடைய ஒரு வரிதண்டுபவரை அழைக்கின்றார். வரி தண்டுபவர் என்றாலே அன்று சமூகத்தில் பாவிகளாக கருதப்பட்டவர்கள். ஏனென்றால், அவர்கள் சுங்கச்சாவடியில் அமர்ந்து மக்களிடம் வரி வசூலிப்பார்கள்.
இந்தச் சுங்கச் சாவடிகளில் அமர்ந்து வரி வசூலிப்பவர்கள் எல்லாம் உரோமை ஆட்சியாளர்களுக்கு நெருக்கத்தில் இருப்பவர்கள். உரோமை அரசோடு நெருக்கத்தில் இருப்பவர்களை எல்லாம் தங்களுக்கு எதிரிகளாகவும் பாவிகளாகவும் தான் அன்றைய சூழலில் யூத சமூகத்தில் உள்ளவர்கள் எல்லாம் நோக்கினார்கள். சமீபத்தில் கூட நாம் கேள்விப்பட்டிருப்போம், ஆங்காங்கே சுங்கச்சாவடிகளில் விலையேற்றத்தின் காரணமாக சுங்கச்சாவடியில் வேலை செய்தவர்கள் அடித்து உதைத்து தாக்கப்பட்டார்கள் என்ற செய்தியை நாம் செய்தித்தாள்கள் மூலம் வாசித்திருக்கலாம். இவர்கள் எல்லாம் பணிக்கு அமர்த்தப்பட்டவர்கள் தான். மேலிருக்கக்கூடிய அதிகாரிகள் சொல்வதை செய்யக்கூடியவர்கள். இவர்களை தண்டிப்பதோ, இவர்களை பாவிகள் என்று ஒதுக்குவதோ முறையல்ல. இவர்கள் தங்கள் வேலையை செய்து கொண்டிருந்தார்கள். இத்தகைய வேலை செய்யும்பொழுது மக்கள் நேரடியாக ஆளக்கூடியவர்களை எதிர்க்கவும், ஆளக் கூடியவர்கள் மேல் உள்ள கோபத்தை எல்லாம் இடையில் இருக்கக் கூடிய இந்த இடைநிலையர்கள் மேல் தான் காட்டுகிறார்கள். இச்சூழல் தான் அன்றும் நிலவியது. எனவே இச்சமூகம் பாவி என சித்தரிக்கக்கூடிய ஒரு மனிதனை, ஆண்டவர் இயேசு கிறிஸ்து, "அவர் பாவி அல்ல. அவரும் கடவுளுக்கு உகந்த வாழ்க்கையை வாழக் கூடியவர். அவரும் நல்லவர்" என்பதை காட்டும் வண்ணமாக அவரைப் பின்பற்ற அழைக்கிறார். அவரும் தன்னிடமிருந்த அனைத்தையும் விட்டுவிட்டு ஆண்டவர் இயேசுவை பின்பற்றிச் செல்கிறார்.
ஒடுக்கப்படுபவர்களை தேடிச் செல்வதே ஆண்டவர் இயேசுவின் பணியாக இருக்கிறது.
எனவே ஆண்டவர் அவரோடு அமர்ந்து உணவருந்துகிறார். இதைப் பார்த்து பொறுக்க முடியாத சிலர் கேள்வி கேட்கும் போது, அவர்களுக்கு இயேசு சொல்கிறார், நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல. பாவிகள் மனம் மாறுவதற்கே அழைக்க வந்தேன் என்கிறார். இதே இறைவன் இன்று நம்மையும் அழைக்கிறார். நாம் ஒருபோதும் வற்றாத நீரூற்றாய் இருப்பதற்கு இன்றைய வாசகங்கள் வழியாக இறைவனால் அழைக்கப்படுகிறோம். லேவியைப் போல நாமும் அழைக்கும் இறைவனின் குரலுக்குச் செவிகொடுத்து பயணிக்கும் போது, நாம் இருள் நடுவே ஒளியாக இருப்போம். ஒளியாக இருந்து மற்றவருக்கு ஒளிகாட்ட, வழிகாட்ட, இயேசுவின் பாதையில் அவர் பின்னே பயணம் செய்ய நாம் அழைக்கப்படுகிறோம். வாருங்கள் அவர் பின்னே செல்வோம். ஏனெனில் இது ஆண்டவரது மகிழ்ச்சியின் நாள்! புனித நாள்! ஆண்டவரது ஒளியின் நாள்!.
இருளின் நடுவே ஒளியாக இருப்பது எத்துணை சிறப்பு! ஒளியாக வாழ்ந்திட, தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ அழைக்கும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது மகிழ்வின் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு