நம்மை அந்நியப்படுத்திக் கொள்ள வேண்டாம்....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாளின் இறைவார்த்தைகளின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு அறிஞரின் அனுபவப்பகிர்வு இவ்வாறாக அமைந்திருந்தது.
நமது வீட்டிற்கு வந்து போகும் உறவினர் போலவே இந்த உலகத்தில் நாம் ஒவ்வொருவரும் பிறந்திருக்கிறோம். அவரவர்களுக்கு என்ன பாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தவிர நாம் வேறு எதையும் செய்து காட்ட முடியாது.
நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப்பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும், தீமை வந்தாலும் , உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும் . அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்.
இன்பமானாலும் துன்பமானாலும் அதை நீயே சந்திக்கக் கற்றுக்கொள். அதை பகிர்ந்து கொள்வதற்கு கண்டிப்பாக ஒரு துணை இருந்தே ஆகவேண்டும் எனத் தேடாதே.
நீ பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.
மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.
அழுவதாலும் சோர்ந்து போவதாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும். அழுது சுமப்பதை காட்டிலும். ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.
ஆம் அன்புக்குரியவர்களே!
இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களுள் தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் எவ்வாறு பாளையத்திற்கு வெளியே தனிமைப்படுத்தப்படுகிறார் என்பதை நமக்கு எடுத்துரைக்கிறது. அவர் தனிமைப்படுத்தப்பட வேண்டுமா? இல்லையா? என்பதை அங்கு இருக்கின்ற குரு ஆராய்ந்து பார்த்து முடிவு செய்வார் என்பதையும் கூறுகின்றது.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் நமது வாழ்வில் நாம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அது உண்டாலும் குடித்தாலும் இன்னும் பல்வேறு மேன்மையான செயல்களைச் செய்தாலும் நாம் நற்பேறு பெற்றாலும் அனைத்தையும் ஆண்டவருக்காக செய்திட அழைப்பு தருகின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன்னை நாடி வந்து நம்பிக்கையோடு தன்னிடம் குணம் பெறுவதற்காக வந்திருந்த தொழுநோயாளரை இயேசு குணப்படுத்தியதை எடுத்துரைக்கிறது.
இன்றைய முதல் வாசகத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் தன்னை சுற்றி இருக்கின்ற மனிதர்களால் தனிமைப்படுத்தப்பட்ட சூழ்நிலையை விவரிக்கின்றது. இந்நிலையில் பெரும்பாலான மனிதர்கள் தனது நிலையை எண்ணி வருந்தியவர்களாக, தனக்கு அருகில் யாராவது மனிதர் வருகின்ற பொழுது 'தீட்டு, தீட்டு' என்று சொல்லி மற்ற மனிதர்களிடம் இருந்து தன்னைத் தானே விலக்கிக் கொள்ள வேண்டிய ஒரு கடினமான சூழ்நிலையை முதல் வாசகம் நமக்கு விளக்குகின்றது.
இன்றைய இரண்டாம் வாசகத்தின் வழியாக புனித பவுல், ஆண்டவரை நோக்கி நமது கண்களை உயர்த்திட நமக்கு அழைப்பு விடுக்கின்றார். நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும் கடவுளுடைய மகிமைக்காக அதனை செய்யுங்கள் என்று கூறுகின்ற வேளையில், நமது வாழ்வின் இன்பத்தில் மட்டுமல்ல, துன்ப வேளையிலும், சோதனைகளின் மத்தியிலும், நாம் மனமுடைந்து போகும் நிலையிலும், நாம் எத்தகையதொரு கடினமான சூழ்நிலையில் இருந்தாலும் ஆண்டவர் இயேசுவை நோக்கி பார்க்க புனித பவுல் அழைப்பு தருகிறார்.
இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகங்களின் நிறைவாக இன்றைய நற்செய்தி வாசகத்தை நாம் வாசிக்க கேட்கிறோம். இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கின்ற தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர் தனது இன்னல்களையும் கடந்தவராக, ஆண்டவரை நோக்கி பார்க்க வேண்டும் என்ற ஆவல் கொண்டவராக ஆண்டவர் இயேசுவை தேடி வருகின்றார். தனது நிலை குறித்து மனம் நொந்து தன்னை ஒடுக்கிக் கொள்ளாமல், ஆண்டவர் இயேசுவின் வழியாக புதிய வாழ்வை பெற்றுக்கொள்ள, விடுதலை வாழ்வை பெற்றுக்கொள்ள, நம்பிக்கையோடு ஆண்டவரை நோக்கிப் பார்த்தவராக இயேசுவை அணுகுகின்றார்.
இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார்.
திருப்பாடல்கள் 34:6
என்ற திருப்பாடலின் வரிகளுக்கு ஏற்ப நம்பிக்கையோடு ஆண்டவர் இயேசுவை நோக்கி கூவி அழைக்கின்றார்.
அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
திருப்பாடல்கள் 34:5
என்று இறை வார்த்தைக்கேற்ப, தனது நிலையினையும் கடந்து, ஆண்டவர் இயேசுவை நோக்கிப் பார்த்த அந்த தொழுநோயாளர், அன்று தன்னுடைய வாழ்வில் நிலைத்த பேரின்பத்தை கண்டு கொண்டார். அவரது முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது.
இவ்வாறாக இன்றைய வாசகங்கள் அனைத்தும் நமது கண்களை ஆண்டவரை நோக்கித் திருப்ப நமக்கு அழைப்பு தருகின்றன. நம்முடன் எப்பொழுதும் வருகின்ற நமது நிழல் போல நமது சோதனைகளும் இடர்பாடுகளும் தடைகளும் எதிர்மறைத் தாக்கங்களும் நம்மைப் பின்தொடர்ந்து நமது வாழ்வில் வந்து கொண்டே இருக்கலாம். ஆனால் நாம் அதனை வலிந்து பற்றிக்கொண்டு ஆண்டவரிடமிருந்து நம்மை அந்நியப்படுத்திக் கொள்ளாமல், வாழ்வின் ஊற்றாம், ஒளியின் ஊற்றாம், ஆண்டவரை நோக்கிப் பார்த்து நமது கண்களுக்கு ஒளியையும், நமது உடலுக்கு வலிமையையும், நமது உள்ளத்திற்கு இறை ஞானத்தையும் ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொள்ள இன்றைய நாளில் உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் ஆண்டவரை நோக்கிப் பார்ப்போம். அவரது உறவினில் நம்மையும் இணைப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக