வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

பிறர் மகிழ நீ மகிழ்வாய்! (6.2.2021)

பிறர் மகிழ நீ மகிழ்வாய்!

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 


இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சீடர்கள் இயேசுவிடம் வந்து நாங்கள் சென்ற இடங்களிலெல்லாம் நீர் சொன்னவற்றை எல்லாம் கற்பித்தோம் என்று அவரிடம் தெரிவித்தார்கள். அவர்களது உழைப்பையும், அதனால் அவர்கள் அடைந்திருக்கக் கூடிய களைப்பையும் உணர்ந்துகொண்ட இயேசு, அவர்களுக்கு தேவையானது ஓய்வு என்பதை உணர்ந்தவராய் போய் ஓய்வெடுங்கள் என்று கூறுகிறார். உடல் உழைப்பால் சோர்வுற்று இருக்கக்கூடிய ஒவ்வொரு மனமும் தேடுவது ஓய்வை.  அந்த ஓய்வை பெறும்பொழுது நாம் மகிழுகிறோம். அடுத்தவருக்கு தேவையானது எது என்பதை உணர்ந்துகொள்ளக் கூடியவராய் இறைவன் இயேசு செயல்பட்டார். சீடர்களை ஓய்வுக்கு செல்லுமாறு கூறி விட்டு, அவர்களோடு பயணிக்கிறார். ஆனால் இயேசுவை பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக அவருக்கு முன்பாகவே அவர் செல்லக் கூடிய இடத்திருக்கு நாடோடிகளாக ஓடி வந்து நிற்கிறார்கள்.  அவர்களை பார்க்கும் பொழுது மன மகிழ்வு கொண்டவராய்,  ஆயனற்ற ஆடுகள் போல இருக்கும் இவர்கள் மகிழ்வே என் மகிழ்வு என்று உணர்ந்தவராய் அவர்களைத் தேடிச் சென்று, அவர்களிடையே, அவர்களது துயரங்களைத் நீக்கக் கூடியவராக இயேசு செயல்படுவதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்கின்றோம்.  இதே கருத்தில் தான், பிறர் மகிழ நீ மகிழலாம் என்ற வார்த்தைகளுக்கு ஏற்ற வகையில், இன்றைய முதல் வாசகமும் அமைந்திருக்கிறது. இன்றைய முதல் வாசகத்தில், ஒவ்வொருவரும் நன்மை செய்யவும் பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள் என, 
 எபிரேயர் 13: 16ல் வலியுறுத்தப்படுகிறது.  நன்மை செய்வது என்பது நாம் அடுத்தவருக்கு செய்யக்கூடிய செயல்களை குறிக்கிறது. அடுத்தவர்களுக்கு நல்ல செயல்களை செய்யும் பொழுது, அவர் மனம் மகிழ்கிறார். அவர் மகிழும் போது நாமும் மகிழலாம். நம்மிடம் இருப்பதை பிறரோடு பகிர்ந்து வாழ அழைக்கப்படுகிறோம். அப்படி மகிழும்போது பெற்றவர் மகிழ்வார். பெற்றவரோடு இணைந்து கொடுத்தவராகிய நாமும் மகிழலாம்.  எப்படி ஆயனற்ற ஆடுகளாக இருந்த மக்கள் இயேசுவின் உடனிருப்பைத் தேடி வந்தபோது அதை உணர்ந்து கொண்டவராக தனது துயரத்தை, தனது துன்பத்தை பொருட்படுத்தாது அவர்கள் தேவையை நிறைவு செய்ய இயேசு சென்றாரோ, அவரைப்போல நாமும் ஒருவர் மற்றவரோடு நம்மிடம் இருக்க கூடியவைகளை பகிரவும் அடுத்தவருக்கு நன்மைகளைச் செய்யவும் இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்று நம் முன்னோர் கூறுவார்கள். நம்மிடம் இருக்கக்கூடிய உணவு, உடைகள், பொருட்களை சிறுவயது முதலாக பகிர்ந்து கொள்ள நமது குழந்தைகளுக்கும் பயிற்றுவிக்கும் பொழுது அவர்களது ஆளுமை வளர்ச்சியிலும் கூட அனைவரையும் மதிக்கக் கூடிய நல்லதொரு பண்பினில் நமது குழந்தைகள் வளர முடியும்.  நாம் ஒரே குடும்பமாக இணைந்து அடுத்தவரை மகிழ்விப்போம்.   அவரது மகிழ்வு நமது மகிழ்வாக மாறும். 
நன்மை செய்யும் ஒவ்வொருவரும் ஆண்டவரிடமிருந்து நன்மையே பெறுவர். இது உங்களுக்குத் தெரியும் அன்றோ! 
எபேசியர் 6:8, என்றஇறைவார்த்தையின் ஒளியிலே வழி நடந்தவர்களாக,
அடுத்தவர் மகிழ்வே நம் மகிழ்வு என்பதை உணர்ந்தவர்களாக, இன்றைய நாளில் கண்ணில் காணும் மனிதர்களை எல்லாம் மகிழ்விக்கக் கூடியவர்களாக நம்மிடம் இருப்பதை அவர்களோடு பகிரக் கூடியவர்களாக நாம் வளர்ந்திட இறையருளை வேண்டி இணைந்து ஜெபிப்போம்!!!

1 கருத்து:

  1. பிறர் மகிழ நீ மகிழ்வாய்! இதை சொல்லும் பொழுதே உள்ளத்திற்குள் மகிழ்வு பிறக்கின்றது. அகமும் முகமும் மலர்கின்றது. அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது அன்பான வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...