நாம் காவலாளிகள்....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
மனித மனமானது தனது வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவரிடத்தில் பரிபூரண மோகம் கொள்கின்றது.
அங்கம் கொள்ளும் ஆசை பங்கம் விளைவிக்கின்றது. காரணம், ஆசை என்பது மனித மூளையை வியாபிக்கிறது. ஒருவரது ஆசையை உற்றவரே அறியாவிடில் மற்றவர் இவ்வாறு அறிந்து கொள்வார்கள்? நிறைவேறும் என்று நம்பிய ஆசைகள் நிறைவேறாமல் போனால், ஆசை கொண்ட மனமானது நிராசை அடைகிறது. நிராசை அடைந்த அந்த மனதில் போராட்டம் பிறக்கிறது. அங்குதான் அழிவு ஆரம்பமாகிறது.
இன்றைய முதல் வாசகத்திலும் ஆண்டவரிடம் காயினும் ஆபேலும் காணிக்கைகளைக் கொண்டு செல்கின்றனர். கடவுள் ஆபேலின் காணிக்கையை ஏற்றார். காயினின் காணிக்கையை ஏற்கவில்லை. தன் காணிக்கையை இறைவன் ஏற்பார் என்ற மனநிலையோடு கடவுளிடம் சென்ற காயின், ஏமாற்றம் அடைந்ததால் வருத்தமுற்றான். வருத்தமுற்ற அவனிடம் கடவுள் கேட்டார், நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா! என்றார். இக்கூற்று அவனிடம் ஏதோ ஒரு நன்மையற்ற தனம் இருப்பதை நமக்கு சுட்டிக் காட்டுகிறது. ஆனால் தன்னை சரி செய்து கொள்வதை விட்டு விட்டு இறைவன் நம் காணிக்கையை நிராகரித்தார் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தன் சகோதரனின் மீது கோபம் கொண்டு, அவனது இன்னுயிரை பறிக்கக்கூடிய செயலில் காயின் ஈடுபடுகிறான். காயினின் இச்செயல் கண்டு கடவுள் காயினை நோக்கி, உன் சகோதரன் எங்கே? என்று கேட்டபோது, நான் என்ன என் சகோதரனுக்கு காவலாளியா? என கடவுளிடம் மறு கேள்வி கேட்டான், காயின்.
இன்று நம்மில் பலரும் பல நேரங்களில் நமது மனதில் இருக்கக்கூடிய ஆசைகள் நிறைவேறாமல் போகின்ற போது, நிராசை அடைந்த ஆசைகளின் காரணமாக, நமது உள்ளத்தில் போராட்டமானது பிறக்கிறது. நாம் நினைத்ததை, நமது ஆசையை எப்படியாவது அடையவேண்டும் என்ற எண்ணத்தோடு பலவிதமான தவறான வழிகளில் ஈடுபடுகிறோம். நமது வழிகளை சிலர் தவறு எனச் சுட்டிக் காட்டினாலும் அவர்களிடம் பதிலுக்கு வாக்குவாதம் செய்கின்றோம். உண்மையில் காயின் கேட்ட கேள்விக்கு ஏற்ற வகையில், நான் என்ன என் சகோதரனுக்கு காவலாளியா? என காயின் கேட்ட கேள்விக்கு பதில், ஆம்! நாம் அனைவரும் ஒவ்வொருவருக்கும் காவலாளிகள் தான்.
அன்னை தெரசா கூறுவார், இந்த உலகத்தில் ஒரு மனிதன் உணவின்றி இறக்கிறான் என்றால், அவனை கடவுள் பாதுகாக்கவில்லை என்று அர்த்தமல்ல. உன்னையும் என்னையும் போன்றவர்கள் அவனைப் பராமரிக்கத் தவறியதன் விளைவுதான் எனக் கூறுவார்.
இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் ஒருவர் மற்றவருக்கு பாதுகாப்பாகவும் காவலாளிகளாகவுமாகத் தான் இருக்க அழைக்கப்படுகின்றோம். இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது தான் சந்தித்த மக்களுக்கு தன்னாலான உதவிகளைச் செய்தார். துன்பத்தில் இருந்தவரின் துயர் துடைத்தார். நோயோடு வருந்தியவர்களுக்கு குணம் கொடுத்தார். சட்டத்தால் நசுக்கியவர்களுக்கு அச்செயல் தவறு எனச் சுட்டிக் காட்டினார். ஆனால் இயேசுவின் மீது பொறாமை கொண்டவர்களாக, இயேசுவை ஏற்றுக் கொள்ளாமல், எப்போதும் அவரை குற்றம் காணும் நோக்குடனும், அவரை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்ற எண்ணத்துடனும், ஒரு கூட்டம் அவரைப் பின் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. பலவழிகளில் அவரிடம் தங்களது வார்த்தைகளால் அவரை வெல்ல வேண்டும் என எண்ணினார்கள். அந்த எண்ணங்கள், ஆசைகளாக அவர்களுக்குள் வேரூன்றியது. அதன் அடையாளமாகத்தான் இன்று ஆண்டவர் இயேசுவிடம், எங்களுக்கு ஒரு அடையாளத்தை காட்டும் என அவர்கள் கேட்டதை நாம் நற்செய்தி வாசகத்தில் வாசிக்கின்றோம். உங்களுக்கு உங்கள் ஆசைகளை முன்னிட்டு, உங்கள் உள்ளத்தின் சோதிக்கும் நோக்கத்திலான எண்ணங்களின் அடிப்படையில் நீங்கள் என்னிடம் கேட்பதால், உறுதியாக உங்களுக்கு எந்த ஒரு அடையாளமும் காட்டப்படாது எனக் கூறிவிட்டு, தன் பணியைச் செய்யப் புறப்படுகிறார் இயேசு. இன்று நாமும் நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் பல நேரங்களில், நம்முள் இருக்கக்கூடிய ஆசைகளுக்கு அடி பணிந்தவர்களாக நமது ஆசைகள் நிறைவேறாத போது, எப்படி அடுத்தவரை அழிக்கலாம் என சிந்திக்கக் கூடியவர்களாக இருப்போமாயின், அந்நிலையிலிருந்து மாற்றம் பெற்று, நம்மிடம் இருக்கக்கூடிய ஆசைகளையும் நெறிப்படுத்தி வாழக் கூடியவர்களாக, நடக்கும் அனைத்தையும் இறைவனின் திட்டத்திற்கு ஏற்ற வகையில் ஏற்றுக்கொண்டு, நமது ஆசைகள் நிராகரிக்கப்படும் பொழுது, ஏன் நிராகரிக்கப்பட்டது? நம்மில் எழ வேண்டிய மாற்றம் என்ன? என நம்மையே நாம் சுய ஆய்வு செய்து கொண்டவர்களாக, வாழ்க்கையில் மாற்றங்களை உருவாக்கிக் கொண்டு, அதன் வழி இறைவனால் நம் எண்ணங்கள் ஈடேறும் வகையில் நாம் நல்லதொரு வாழ்வை வாழ உள்ளத்தில் உறுதி ஏற்றவர்களாய், இந்நாளில் தொடர்ந்து பயணிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக