ஏற்றுக்கொள்ள வேண்டுமா?
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைய வாசகங்கள் அனைத்துமே நாம் நம்மை ஏற்றுக் கொள்ள வேண்டும், நம்மை ஏற்றுக் கொள்வதன் வழியாக அடுத்தவரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பாடத்தை அருமையாக கற்பிக்கின்றன. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன்னைத் தேடி வந்த, தான் சொல்வதை கேட்கக் கூடியிருந்த பெருந்திரளான மக்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்கிறார். அவர்களை தன்னோடு இணைத்துப் பார்க்கிறார். நெடுநேரமாக நான் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருக்கக் கூடிய இம்மக்களை வீட்டிற்கு செல்லுங்கள் என அனுப்பி வைத்தால், பசியில் வழியில் மயக்கமுற நேரலாம். எனவே, அவர்களுடைய தேவையை தன்னுடைய தேவையாக பார்க்கிறார். அவர்களோடு தன்னை ஒப்பிட்டுப் பார்க்கிறார். அவர்களுடைய இன்ப துன்பங்களை தனது இன்ப துன்பமாக கருதுகிறார். அவர்களோடு தன்னை இணைத்து பார்க்கும் பொழுது அவர்களின் துன்பம் தனக்கு நேர்ந்தால் தான் என்ன செய்வேன் என்ற சிந்தனைக்கு உட்பட்டவாராய் அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரையும் இயேசு தன்னை ஏற்றுக் கொண்டது போல, அடுத்தவரையும் ஏற்றுக் கொள்கிறார். அதன் விளைவே அவர்களின் பசியை உணர்ந்தவராய், அவர்களின் உடல் நிலையை அறிந்தவராய், அவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்கிறார். இயேசு தான் தன்னை ஏற்றுக் கொண்டது போல இந்த மக்களை ஏற்றுக்கொண்ட செயலை தன்னோடு வைத்துக் கொள்ளாமல், தன் சீடர்களுக்கும் கற்பிக்க எண்ணுகிறார். எனவேதான் சீடர்களிடம் உணவு கொடுக்கச் சொல்கிறார். இயலாது என்று கூறும் போது கூட, உங்களிடம் இருப்பது என்ன? எனக் கேட்கிறார். ஏழு அப்பங்கள் என்கிறார்கள். அதை கொண்டு வரச் சொல்கிறார். அந்த அப்பங்களை அங்கிருந்த அனைவருக்கும் பகிர்வதற்கு இயேசு இறைவேண்டல் செய்து புதுமையை நிகழ்த்துகிறார். அப்பங்களைப் பலுகச் செய்தவருக்கு அதை பரிமாறத் தெரியாமல் இல்லை. ஆனால் அந்த அப்பங்களை எல்லாம் சீடர்களை பரிமாறச் சொல்கிறார். தான் அடுத்தவரை தன்னை ஏற்றுக் கொண்டது போல எப்படி அடுத்தவரையும் ஏற்றுக் கொண்டாரோ, அதே பாடத்தை தன்னுடைய சீடர்களும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற காரணத்தினால், அவர்களிடம் இருந்ததைப் பெற்று, அவர்களிடம் இருந்ததை மிகுதியாகி அதை அவர்கள் வழியாகவே அடுத்தவரோடு பகிரச் சொல்லி, ஒருவர் தன்னை ஏற்றுக் கொள்ளவும், ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளவும் பாடம் கற்பிக்கிறார் இயேசு. ஆனால்
இன்றைய முதல் வாசகத்தில் தன்னைத் தானே ஏற்றுக் கொள்ளாததாலும், அடுத்தவரை ஏற்றுக் கொள்ளாததாலும், விளைந்த ஒரு நிகழ்வை தான் வாசிக்க கேட்கின்றோம். என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள் என்று கூறிய ஆண், உண்ணக் கூடாது என்ற கனியை உண்ட பிறகு, கடவுள் நீ என்ன செய்தாய்? அந்த மரத்தின் கனியை உண்டாயா? என்று கேள்வி எழுப்பும் போது நீர் எனக்குத் தந்த அந்தப் பெண் எனக்கு கொடுத்தாள், நானும் உண்டேன் என்கிறான். அதுவரை என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் என்று கூறியவன் அவளை பிரித்துப் பார்க்கிறான். நீர் தந்த பெண் என்று கூறி அவளை தன்னிடமிருந்து அந்நியப்படுகிறான். தான் செய்த செயலை, தான் தவறியதை ஏற்றுக்கொள்ள இயலாத அவன், தன் தவறை, அது அடுத்தவரால் என, அடுத்தவரை அந்நியப்படுத்தி சுட்டிக் காட்டுகிறான். அதுபோலவே பெண்ணும் கடவுளின் கட்டளைக்கு செவி திறக்க, கடவுளின் கட்டளைக்கு இதயத்தை திறக்க மறுத்து, பாம்பின் குரலுக்கு இதயத்தைத் திறந்து அந்த கனியை தான் உண்டதோடு மட்டுமன்றி அடுத்தவருக்கும் கொடுத்தாள். உண்டு அடுத்தவருக்கும் கொடுத்த அந்தப் பெண் கடவுள் கேட்டபோது, பாம்பு என்னை ஏமாற்றியது. நான் ஏமாந்தேன் எனக் கூறுவதை விட அடுத்தவர் என்னை ஏமாற்றினார்கள் என, தான் செய்த செயலை தான் ஏற்றுக் கொள்ளாமல், அடுத்தவர் மீது ஏற்றி கூறக்கூடிய செயலை நாம் வாசிக்கின்றோம். எனவேதான் இரக்கமே உருவான இறைவன் அங்கு நியாயமான ஒரு நீதிபதியாக செயலாற்றுகிறார். இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில், நாம் நம்மை ஏற்றுக் கொள்ள வேண்டும். நம்மால் நமக்கு நிகழக்கூடிய இன்ப துன்பம் அனைத்தையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நம்மை ஏற்றுக் கொள்வது போலவே அடுத்தவரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஏற்றுக்கொள்ளும் பண்பை நாம் உள்வாங்கிக் கொள்ளும் போது நம்மிடையே வேறுபாடுகள் இல்லை. உயர்வு தாழ்வு என்பது இல்லை. நம் இடையில் சண்டைகள் இல்லை. இதை உணர்ந்தவர்களாக நம்மை நாம் ஏற்றுக் கொள்வது போல அடுத்தவரையும் ஏற்றுக்கொண்டு, ஆண்டவரின் அன்பு கட்டளையான உன்னை நீ அன்பு செய்வது போல அடுத்தவரையும் அன்பு செய் என்ற கட்டளைகளின்படி வாழ்வதற்கு நாம் தயாராவோம். அதற்கு நாம் நம்மை ஏற்றுக் கொள்வோம். பிறகு நம்மை ஏற்றுக் கொள்வது போல அடுத்தவரையும், அவர்களின் உணர்வுகளையும் எண்ணங்களையும் ஏக்கங்களையும் உணர்ந்து கொள்வோம், ஏற்றுக் கொள்வோம். இதற்கான அருளை வேண்டி இறைவனிடம் இறைஞ்சி மன்றாடி, இறைவனிடத்தில் பெற்றுக்கொள்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக