செபமே ஆற்றல்...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாளின் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் அகம் மகிழ்கிறேன்.
இன்றைய இரண்டு வாசகங்களும் ஆண்டவரை நோக்கி நமது செபங்களை எழுப்புவதைப் பற்றி கூறுகின்றன. முதல் வாசகத்தில் எஸ்தர் அரசியும் மொர்தெக்காயும் விண்ணக ஆண்டவருக்கு மட்டுமே ஆராதனை செய்வதாக தாங்கள் கொண்டிருந்த உறுதிப்பாட்டின் காரணமாக அரச அலுவலரால் தமக்கு ஏற்பட்ட சாவின் கண்ணிகளில் இருந்து தம்மையும், தமது மக்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என்று செபித்துக் கொண்டிருந்தார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், "கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும், தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும், தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்", என்று ஆண்டவர் இயேசு கூறுகிறார்.
இன்றைய வாசகங்கள் வழியாக நம்முடைய தேவை என்ன? நம்முடைய பசி என்ன? நம்முடைய தேடல்கள் தான் என்ன? என்பதைப்பற்றி சிந்திக்க ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்று நமக்கு அழைப்பு தருகின்றார்.
இன்றைய உலகில் யாருக்கு தாகம் ஏற்படுகிறதோ அவன் ஒருவனே அங்கு நிறைவு பெறுகிறான். யாருக்கு பசி ஏற்படுகிறதோ அவன் மட்டுமே உணவை சுவைத்து உண்ண முடியும். அதுபோலவே யாருக்குத் தேவை ஏற்படுகிறதோ அவரால் மட்டுமே கேட்க முடியும், தேட முடியும், தட்ட முடியும்.
இன்று துரித உணவும், துரித உணவும், துரித பயன்பாடும், துரித அறிவும் என்று, அனைத்தையும் துரிதமாக தேடித்தேடி நமது வாழ்வும் கூட துரிதமாக முடிந்து விடுகின்றது என்பது இன்றைய எதார்த்தமாக இருக்கின்றது.
இந்த அவசரமான உலகத்திலே பரபரப்பான உலகத்திலே, நாம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என சற்று நமது பயணத்தை நிறுத்தி சிந்தித்துப் பார்க்க நமது பயணத்தை நெறிப்படுத்த ஆண்டவர் இயேசு இன்று நம்மை அழைக்கின்றார்.
பகலில் பறந்து திரியும் பறவைகள் இரவில் தன்னுடைய தாய் தந்தையரோடும், குஞ்சுகளோடும், இணைந்து விடுகின்றன.
வேட்டையாடச் சென்ற விலங்குகள் கூட இரவின் பொழுதில் தனது குட்டிகளோடு தன்னை இணைத்துக் கொள்கின்றன.
நாள் முழுவதும் வீதியில் சுற்றி விளையாடி மகிழும் குழந்தை, மாலையானதும் தன் அம்மாவைத் தேடி தன்னை இணைத்துக் கொள்கிறது.
இவ்வுலகில் இன்று நமது மனம் விரும்பும் எதை எதையோ தேடிக் கொண்டிருக்கும் நாம், நம்மைப் படைத்த ஆண்டவரை தேடுகின்றோமா? என சிந்திப்போம்.
நமக்குள் தனது உயிர் மூச்சை நமது உயிராக தந்திருக்கும் ஆண்டவரை தேடுகின்றோமா? என சிந்திப்போம்.
அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்.
திருப்பாடல்கள் 34:5,
என்ற இறைவார்த்தைக்கேற்ப ஆண்டவர் நமது தேடலாக அமைந்தால் நமது உள்ளம் மகிழ்ச்சியால் மிளிரும் என திருப்பாடல் ஆசிரியர் இன்று நமக்கு வெளிப்படுத்துகின்றார்.
ஆண்டவரைத் தேட நமக்கு வழியாக அமைந்திருப்பது, ஆண்டவரோடு நமக்கு ஒரு உறவாக அமைந்திருப்பது, அவரது நிறை மகிழ்ச்சியை, இன்ப சாந்தத்தை நமது உள்ளத்தில் உணர்ந்து மணம் பரப்ப நமக்கு உதவுவது நமது அருளின் நேரமாகிய செபத்தின் நேரம் என்பதை இன்றைய நாளில் கண்டுகொள்வோம்.
விவிலியத்தில் நாம் காண்பது போல,
தாவீது அரசரைப் போல அதிகாலையில் செபிப்போம்!
தானியேலைப் போல மதிய வேளையில் செபிப்போம்!
பவுல், சீலாவைப் போல, நடு இரவில் செபிப்போம்!
பேதுருவைப் போல ஆபத்திலே செபிப்போம்!
அன்னாவைப் போல கவலையிலே செபிப்போம்!
யோபுவை போல துன்பத்திலும், நோயிலும், இகழ்ச்சியிலும் செபிப்போம்!
சாலமோனைப் போல வேலையின் முடிவில் செபிப்போம்!
இயேசுவைப் போல எப்பொழுதும் செபிப்போம்!
செபத்தின் வழியாக ஆற்றல் பெற்று, ஆண்டவரை நோக்கிப் பார்த்து மகிழ்ச்சியால் மிளிர்ந்திட, ஆண்டவரிடம் கேட்போம்! அவரின் அருளைப் பெற்றுக் கொள்வோம்!
ஆண்டவரை நோக்கி பார்ப்போம்! அவரிடம் இருந்து ஆற்றல் பெறுவோம்! என்று அன்புடன் ஆண்டவரில் நம் உறவினைப் புதுப்பிக்க நம்மை அழைக்கும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது அன்பின் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு