நாம் வைத்த பெயர்களை நினைவு கூர்வோம்!...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைய முதல் வாசகத்தில் மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று, அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன் என்று, ஆண்டவர் தகுந்த துணையை உருவாக்கியும் இவ்வுலகில் அவர் உருவாக்கிய உயிரினங்கள் அனைத்தையும் மனிதனின் முன்பாகக் கொண்டுவந்து நிறுத்தி இவற்றுக்கு மனிதன் என்ன பெயரிடுகிறான் என்று பார்க்க அனைத்தையும் அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என பெயரிட்டானோ அதுவே அவைகளின் பெயராக மாறியது. படைத்தவருக்கு பெயரிடத் தெரியாமல் அல்ல. மாறாக படைத்தவர் படைப்புகளின் மகிழ்வை தன் மகிழ்வாக எண்ணினார். அதன் விளைவே அனைத்திற்கும் பெயரிட அனைத்தையும் மனிதனிடம் கொண்டு வந்தார். மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல என்று உணர்ந்து கடவுள் அவனுக்கு தகுந்த துணையை உருவாக்கி, அந்த துணையையும் அவனிடம் கொண்டுவந்தார். அந்த துணையை கண்ட மனிதன், இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள். ஆணிடம் இருந்து எடுக்கப்பட்டதால் இவள் பெண் என்று அழைக்கப்படுவாள் என பெண் என பெயரிட்டதை இன்றைய முதல் வாசகம் வழியாக நாம் வாசிக்கிறோம். பொதுவாகவே நாம் பெயர்களைக் குறித்து மகிழக் கூடியவர்களாக இருக்கிறோம். நான் என்னுடைய களப்பணியை திருச்சியில் இருக்கக்கூடிய நாசரேத்து என்னும் ஊரில் உள்ள புனித வளனார் குழந்தைகள் இல்லத்தில் எனது களப்பணி யை நான் செய்திட, முதன்முதலாக அந்த இடத்திற்குச் சென்றபோது அங்கிருந்த குழந்தைகளின் பெயர்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அனைவரையும் வட்டமாக அமர வைத்து, உங்கள் பெயர்களை எனக்கு அறிமுகப்படுத்துங்கள். ஆனால் நான் என்றும் உங்கள் பெயரை மீண்டும் மறந்து விடாத படி, மறந்துவிட்டு உங்களிடம் கேட்காதபடி நீங்கள் ஏதாவது ஒரு புனைப் பெயரை வைத்துக் கொண்டு உங்கள் பெயரை எனக்கு அறிமுகப்படுத்துங்கள் என்று கூறினேன். வட்டமாக அமர்ந்து உங்கள் பெயர்களை எனக்கு அறிமுகப்படுத்துங்கள் என்றேன். உடனே ஒவ்வொருவராக எழுந்து தங்கள் பெயருக்கு முன்பாக ஒரு அடைமொழியை வைத்துக் கொண்டு தங்களின் பெயர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். அவைகளுள் சில,
சந்தோஷ சந்தோஷ்,
பெயர் ராகுல், விளையாட்டு வீரர் ராகுல் சர்மா என்று கூறினான்.
சாந்தமான சாம்சன்,
என பலர் தங்கள் பெயர்களை அறிமுகப்படுத்தினார்கள்.
நான் அவர்களிடம், சரி! இப்போது நீங்கள் எல்லோரும் ஒரு புனை பெயரோடு உங்கள் பெயர்களை எனக்கு சொன்னீர்கள். இருந்தாலும் அதை மனதில் வைத்துக் கொள்வது என்றால், அனைத்தையும் உடனடியாக மனதில் ஏற்றிக் கொள்ள முடியவில்லை. எனவே வருகிற நாட்களில் உங்கள் பெயர்கள் அனைத்தையும் மனதில் வைத்துக் கொள்கிறேன். இன்னும் எளிமையாக எனக்கு பெயர்களை உங்களால் சொல்ல முடியுமா என்று கேட்டேன். அப்போது அவர்கள், அடுத்தவரின் பெயரை உங்களுக்கு எங்களால் நினைவூட்ட முடியும் என்று கூறினார்கள். ஒவ்வொரு நபருக்கும் ஒரு அடைமொழி பெயர் வைத்து, இவனை இப்படி மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அவனை அப்படி மனதில் வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி, ஒவ்வொருவருக்கும் ஒரு புனைப் பெயர் வைத்தார்கள். அப்போது குழந்தைகளிடத்தில் நான் கூறியது, நமக்கு நாம் பெயர் வைத்துக் கொள்ளும் பொழுது மிகவும் அழகான அன்பான சாந்தமான பெயர்களையும் புகழ்மிக்கவர்களின் பெயர்களையும் நமது பெயரோடு இணைத்து கூறினோம். அதேபோல் அடுத்தவருக்கு பெயர் வைக்கச் சொல்லும் பொழுது, அது அடுத்தவருக்கு என்றால், மிகவும் இழிவான, பலரும் கேட்டு நகைக்கக்கூடிய ஒரு அடைமொழியை பெயருக்கு முன்னால் சேர்க்கிறோம். நம்மைப்போல அடுத்தவரையும் நாம் நேசிக்க வேண்டும் என்ற பாடத்தை என்று அவர்களுக்கு கற்பித்தேன். அதே சமயம் நானும் பலரின் பெயர்களை மனதில் உள்வாங்கிக் கொண்டேன். பலருக்கு பெயர் வைக்கும் பொழுது நமக்கு நல்ல பெயர்களை வைத்துக் கொள்ள விரும்பும் நாம், அடுத்தவருக்கு நல்ல பெயர்களை வைப்பதற்கு பதிலாக, தரக்குறைவான, இழிவான பெயர்களை வைக்கக்கூடிய ஒரு செயலை அங்கு நான் கண்டுணர முடிந்தது. அச்செயலை நான் தொடரக் கூடாது என்ற பாடத்தை அன்று நானும் கற்றுக்கொண்டேன், குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுத்தேன். இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இச்சமுதாயம் ஒரு பெண்ணை, நாய் எனக் கருதி அழைப்பதை இயேசு சுட்டிக்காட்டுகிறார். இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது இயேசு என்பவர் யூத இனத்தில் பிறந்தவர். எனவே, மெசியா என்பவர், யூதர்களுக்கு மட்டுமே என்ற சிந்தனை மேலோங்கி காணப்பட்டது. யூதர்கள் தாங்கள் மட்டுமே நேர்மையானவர்கள், கடவுளுக்கு உகந்தவர்கள், கடவுளின் பிள்ளைகள் எனக் கருதினார்கள். யூதரல்லாத கலப்பின மக்கள் அனைவரும் புறவினத்தார். அவர்களுக்கு கடவுளுடைய மீட்புத் திட்டத்தில் பங்கு இல்லை. நமது கடவுள் அவர்களுக்கான கடவுள் இல்லை என்ற எண்ணத்தில் அவர்களை ஒதுக்கியும், சமுதாயத்தில் வேறுபாடுகளை உருவாக்கிக் கொண்டும் வாழ்ந்து வந்தார்கள். இச்சூழலில் தான் நாய்கள் எனக் கூறக் கூடிய வழக்கம் இருந்தது, இத்தகைய பண்பை இயேசு இன்று சுட்டிக்காட்டுகிறார். தன்னை சுற்றி இருக்கக் கூடிய சீடர்கள், சதுசேயர்கள், பரிசேயர்கள், யூதர்களுக்கு மத்தியில், ஒரு கனானியப் பெண் உதவி கேட்டு வரும்பொழுது,
பிள்ளைக்குரிய உணவை எடுத்த நாய்க்கு போடுவதில்லை என்று இயேசு பயன்படுத்தக்கூடிய வார்த்தையானது, அன்று அச்சமூகத்தில் கனானிய பெண்கள், புறவினத்துப் பெண்கள் எப்படி நடத்தப்பட்டனர் என்பதை சுட்டிக்காட்டுகிறது. நமக்கு நல்ல பெயர்களை வைத்துக் கொள்ள விரும்பக்கூடிய ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு இழிவான பெயர்களை சூட்டுகிறோம். நாய் நன்றியுள்ள விலங்கு தான். அது இழிவானது எனக் கூறவில்லை. ஆனால் மனிதனை நாய் எனக் கூறுவது இழிவாக பார்க்கப்படுகிறது. இயேசுவும் அதே வார்த்தைகளை பயன்படுத்தினார். ஆனால் கானானிய பெண்ணோ, தாழ்ச்சியோடு மேஜையின் மேலிருந்து கீழே விழும் துண்டுகளை நாய்கள் தின்னுமே என்று தன்னுடைய உள்ளத்தில் இயேசுவின் மீது தான் கொண்டிருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியதன் விளைவாக, இயேசு அன்று அங்குச் கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் தன்னுடைய சீடர்களுக்கும், மெசியா ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் உரியவர்.
மேஜை மீது அமர்ந்திருக்கும் பிள்ளைகள் ஆனாலும் சரி, நாய்கள் என்று நீங்கள் சொல்லக்கூடிய மேஜைக்கு கீழே இருப்பவர்கள் ஆனாலும் சரி, அனைவரும் உண்பது ஒரே வகையான உணவையே!
அதுபோலவே மெசியா என்பவர் அனைவருக்குமானவர் என்ற பாடத்தையும் அங்கு கற்பிக்கின்றார். மனிதனை மனிதன் தாழ்வாகவும் இழிவாகவும் நடத்தக் கூடிய செயல் தவறானது என்பதை தன் வார்த்தைகள் வழியாக எதார்த்தமாக அங்குள்ளவர்களுக்கு, அவர்களின் மனநிலையை அறிந்தவராக இயேசு அவர்கள் வழியில் அவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றார். இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் பல நேரங்களில் பலருக்கு நாம் இழிவான பெயர்களைச் சூட்டி மகிழ்ந்திருக்கிறோம். நமக்கு யாரேனும் ஒருவர் இழிவான பெயர் சூட்டினால் நாம் எவ்வாறு துன்புறுகிறோமோ அதுபோல அடுத்தவர்களும். பெயர் என்பது மனிதனின் உடலில் உயிர் உள்ளவரை மட்டுமே. உடலை விட்டு உயிர் பிரிந்தால் உடலை எடுங்கள் என்று தான் கூறுவார்களே தவிர, பெயரைச் சொல்லி அவரை எடுங்கள் என்று கூற மாட்டார்கள். நாம் இருக்கும் இந்த உலகத்தில் நாம் காணக்கூடிய ஒவ்வொரு மனிதரையும் நம்மைப் போலவே நேசிப்போம். நம்மைப் போலவே அவர்களையும் ஏற்றுக்கொள்வோம். நமக்கு இருப்பதுபோலவே சிறப்பு பண்புகள் அவர்களுக்கும் இருக்கின்றன என்பதை உணர்ந்தவர்களாக, ஒருவர் மற்றவரை அன்போடு நேசிக்கவும் அரவணைத்து வாழவும் உள்ளத்தில் உறுதி ஏற்றுக் கொள்வோம். எப்படி கடவுள் தொடக்கத்தில் தான் படைத்த அனைத்துக்கும் தான் பெயரிட்டு மகிழாமல் அடுத்தவன் மகிழ வேண்டும் என்ற எண்ணத்தோடு தனது படைப்பின் சிகரமான மனிதன் முன் கொண்டு வந்து நிறுத்தி, அனைத்திற்கும் பெயர் வைக்கச் சொல்லி அவன் வைத்த பெயரை குறித்து மகிழ்ந்தாரோ, அந்த இறைவன் இன்று நாம் வாழும் சமூகத்தில் அடுத்தவர்களுக்கு நாம் கொடுக்கக்கூடிய பெயர்களைக் குறித்து மகிழவேண்டும். சாதி மத இன மொழி அடிப்படையில் ஒருவரை ஒருவர் நம்மை விட தாழ்ந்தவர்கள் என மதிப்பிட்டுக்கொள்வதையும் இழிவாக நடத்துவதையும் இழிவான பெயர்களால் அவர்களை அழைப்பதையும் இறைவன் விரும்புவதில்லை. இத்தகைய பெயர்களில் நாம் மற்றவர்களை அழைக்கக் கூடியவர்களாக இருப்போமாயின், கண்டிப்பாக கனானியப் பெண்ணின் அருகில் நின்ற இயேசு, இன்று நம் அருகில் நின்று நமக்கு கற்றுத்தரும் பாடம், இவ்வாறு செய்யாதே என்பதாகும். அனைவரையும் அன்போடு ஏற்றுக் கொள்கின்ற பாடமாகும். இயேசு கற்பித்த இந்த பாடத்தை உணர்ந்து கொண்டவர்களாக வாழ்வில் மாற்றத்தை உருவாக்கிக் கொண்டு, காணும் மனிதர்களிடம் இயேசுவை கண்டு கொள்ள, இன்றைய நாளில் தொடர்ந்து இறையருள் வேண்டி பயணிப்போம்.
பெயரில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா! என ஆச்சரியப்பட்டதோடு அனைவரையும் சிந்திக்கவும் அழைக்கும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு அவரின் பெயருக்கேற்ப ஆண்டவருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் சகாயமாக அன்புடன் பணியாற்றிட அன்புடன் ஜெபிக்கின்றோம்!
பதிலளிநீக்கு