இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்ற வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்று நாம் அனைவரும் ஒரே திருஅவையாக இணைந்து புனித ஜான் டி பிரிட்டோ அவர்களை நினைவு கூறுகிறோம்.
புனிதரின் பெயரை தங்களின் பெயராக வைத்துள்ள ஒவ்வொருவருக்கும் இன்றைய நாளிலே நாம விழா வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.
இவரை நமது மண்ணிலே செம்மண் புனிதர் என்றும், அருளானந்தர் என்றும் அழைக்கின்றார்கள்.
இவர் சிறு வயதில் உடல் நலமற்று இருந்தார். இவரது தாய் இவர் உடல் நலம் பெற வேண்டும் என்று புனித சவேரியார் வழியாக இறைவனிடம் வேண்டினார். மகன் குணம் பெற்றால் புனித சவேரியாரை போல காவி உடையை தன் மகனுக்கு அணிவிப்பதாக இறைவனிடத்தில் வாக்கு கொடுத்தார். குழந்தை குணம் பெற்றதால் அத்தாய் கொடுத்த வாக்கை நிறைவேற்றினாள்.
தாயிடம் இருந்து பெற்றுக்கொண்ட இறைநம்பிக்கையை இறுதிவரை பற்றிக் கொண்டு வாழ்ந்தவர் நம் புனிதர்.
சிறுவயதில் பலரும் பல வண்ணப் பட்டு உடுத்த தாயின் சொல்லை தாரகமந்திரமாக ஏற்று காவியுடை அணிந்தவர்.
கடவுளிடம் கொடுத்த வாக்கைக் காத்த தாயின் குணம் நம் புனிதரிடத்தில் குழந்தை பருவம் முதல் இறுதி மூச்சு நிற்கும் வரை காணப்பட்டது.
இவர் இயேசுவை ஏற்றவர் பெயரளவில் அல்ல.... மாறாக அவருக்காக தன் உயிரையும் கொடுக்கும் அளவில்....
இன்றைய முதல் வாசகத்தில் அடிப்படையில் நான் எல்லாரையும் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன் என்று (1 கொரிந்தியர் 9: 19) பவுல் கூறக்கூடிய வார்த்தைகளுக்கு ஏற்ப தன் தாய் வழியாக தான் அறிந்து கொண்ட ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் அனைவரையும் கொண்டுவர தன் நாடு, வீடு, உறவுகள் என அனைத்தையும் விட்டுவிட்டு... எப்படி தொடக்க நூலில் ஆபிரகாம் ஆண்டவரின் வார்த்தையை மட்டும் நம்பி தன்னிடமிருந்த அனைத்தையும் விட்டு விட்டு வந்தாரோ, அவரைப்போல அனைத்தையும் விட்டுவிட்டு ஆண்டவர் இயேசுவை மட்டும் இறுகப்பிடித்து கொண்டவராய் நம் நாட்டிற்கு வந்தவர் தான் நமது புனித ஜான் டி பிரிட்டோ அவர்கள்.
இவர் நம் நாட்டிற்கு வந்து, நமது மொழியை கற்று, நமது உணவையும், பண்பாட்டையும் தமதாக்கிக் கொண்டவர்.இதன் விளைவாக தன் பெயரையும் அருளானந்தர் என மாற்றிக்கொண்டு இயேசுவைப் போல சமூகத்தில் நீதிக்கு துணையாகவும், உண்மைக்கு சான்றாகவும் வாழ எல்லாருக்கும் எல்லாமுமாய் மாறியவர் இவர்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். மடிந்தால் தான் மிகுந்த விளைச்சலை தரும் என (யோவான் 12: 24 ) கூறுகிறார். இந்த வார்த்தைகளுக்கு ஏற்ப அன்று இந்த சமூகத்தில் பிராமணர்களை மட்டுமே மையப்படுத்திய கிறிஸ்துவ மத போதகர்களும், பாமர மக்களை மையப்படுத்திய கிறிஸ்தவ மத போதகர்களும் இருந்த சூழலில், இச்சமூகத்தில் தன்னை பாமர விளிம்பு நிலை மக்களுக்கு பணியாற்றும் பண்டார சாமிகளுள் ஒருவராக்கிக்கொண்டவர்.
அரசனும் அறநெறி தவறி வாழ்ந்தால் அது தவறு எனச் சுட்டிக்காட்டி, அடுத்தவர் வாழ்வை நெறிப்படுத்தியதன் விளைவாக தலை வெட்டுண்டு கோதுமை மணி போல விதைக்கப்பட்டார் நமது ஓரியூர் மண்ணிலே.இவர் தலை வெட்டப்பட்டு சிந்திய இரத்தம் பட்ட மண் அனைத்தும் சிவந்து போனது...மறைசாட்சியான இச்செம்மண் புனிதரின் வாழ்வு இன்று விளைந்த கோதுமை மணி போல பலரும் பயன்பெற உதவுகிறது.
இப்புனிதரின் வாழ்வு இன்று நமக்கு தரக்கூடிய செய்தி என்னவென்று இறைவார்த்தைகளின் அடிப்படையில் சிந்திக்கும்போது.... தனக்கென வாழ்வோர் தன் வாழ்வை இழந்து விடுவர் (யோவான் 12 :25) என்ற இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கப்பட்ட வார்த்தைகளுக்கு ஏற்ப அடுத்தவரின் நலனுக்காக வாழ்ந்த இயேசுவையும், அவரைப் பின்பற்றிய பல புனிதர்களுள் ஒருவரான, நாம் இன்று நினைவுகூரக்கூடிய நம் புனித ஜான் டி பிரிட்டோ அவர்களையும் மனதில் கொண்டவர்களாய்....இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவைத் தேடி வந்த கிரேக்கர்களைப் போல, நாமும் இயேசுவைத் தேடிச்சென்று கோதுமை மணியாக மண்ணில் விழுந்து அடுத்தவர் வாழ்வு பெற நான் எல்லாருக்கும் எல்லாமுமானேன் என்ற (1கொரிந்தியர் 9:2) வார்த்தைகளின் படி நமது வாழ்வை மாற்றுவோம்.
கடவுளிடம் கொடுத்த வாக்கைக் காத்த தாயின் குணம் நம் புனிதரிடத்தில் குழந்தைப் பருவம் முதல் இறுதி மூச்சு நிற்கும் வரை காணப்பட்டது. ஆம்! நாமும் நமது இறை விசுவாசத்தில் இறுதிவரை நிலைத்திருக்க இன்றைய புனிதர் வகையாக நம்மை அழைக்கும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுடன் நாமும் நமது விசுவாசத்தை பலப்படுத்த இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்!
பதிலளிநீக்கு