திங்கள், 15 பிப்ரவரி, 2021

இயற்கையில் இறைவனைக் காண்போம்! (16.2.2021)

இயற்கையில் இறைவனைக் காண்போம்! 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

         ஒரு முறை குப்புசாமி போலீஸ் வேலைக்கு நடந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டார்.
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது யார் தெரியுமா? என்று அவரிடம் கேட்கப்பட்டது.

உடனே அவர் தேர்வு அதிகாரியிடம், எனக்கு கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் என்றார்.

அதிகாரியும் சிரித்துக் கொண்டே, சரி! ஒரு வாரம் தருகிறோம். விடையுடன் வா என்றார். அவர் வீடு திரும்பினார்.

வேலை கிடைத்து விட்டதா? என்று அவர் மனைவி கேட்டாள்.

அவர் சொன்னார், அநேகமாக வேலை கிடைத்த மாதிரிதான். இல்லாவிட்டால் நேர்முகத் தேர்வின் போதே கண்டுபிடிக்க எனக்கு ஒரு கேசைத் தருவார்களா? 

15 நாட்களுக்குள் அந்தக் கொலையாளியை நான் கண்டு பிடிக்க வேண்டும் என்று கூறினாராம். 
    
           அன்புக்குரியவர்களே! இன்றைய முதல் வாசகத்தில் மனிதரின் பொறுப்பற்ற தனத்தால் உருவான தீய செயல்களை காண்கின்ற கடவுள் மனம் வருந்துகிறார். உண்மையில் கடவுள் இந்த உலகத்தை படைத்த அந்த முதல் பொழுது, மனிதன் இந்த உலகத்தை ஆண்டு மகிழ்ந்திருக்க வேண்டுமென்று மிகுந்த ஆவல் கொண்டார். அவ்வாறு அனைத்தையும் படைத்த பின்னர், தான் படைத்த இயற்கை அனைத்தையும் மனிதனின் கரங்களில் ஒப்படைத்தார். மனிதனுக்கு துணையாக ஏவாளையும் கொடுத்தார். ஒவ்வொரு நாளும்  அவர்களோடு மாலையில் தோட்டத்தில் வந்து உலாவினார். அவர்களோடு உறவாடினார், உரையாடினார்.
அன்று ஆண்டவரோடு மகிழாந்திருந்த மனிதனும் அவனுடைய சந்ததியினரும் மெல்ல மெல்ல தாங்கள் விரும்பிய காரியங்களை விரும்பிய போதெல்லாம் செய்ய ஆரம்பித்தார்கள். அதனால் மனித வாழ்விலும் ஆண்டவர் படைத்த இயற்கையிலும் ஒரு கட்டுப்பாடற்ற சூழல் நிலவியது. ஒருவரோடு ஒருவர் இணக்கமாக வாழ முடியாமல் தீமைகள் பெருக ஆரம்பித்தன. இதனைக் கண்டு, தான் வருந்துவதாக இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் கூறுகிறார். 

              இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, சீடர்கள் தம் வாழ்வில் கொண்டிருக்க வேண்டிய விழிப்புணர்வின் முக்கியத்துவம் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். அதனைத்தான், "பரிசேயர் மற்றும் ஏரோதியரின் புளிப்பு மாவைக் குறித்து கவனமாக இருங்கள்" என்று கூறுகிறார்.
பரிசேயர்கள், ஏரோதியர்கள், மற்றும் அங்கு வாழ்ந்த தலைமை குருக்கள் அனைவரும், தாங்கள் வகுத்த சட்ட திட்டங்களின் வழியாக தங்களது சுய நலத்திற்கு தூபமிட்டனர். தங்களது பதவி மோகத்திலும் அனைவரையும் அவர்களுக்கு கீழ்ப்படுத்தி மக்களின் இயல்பான வாழ்க்கையை, கடவுளின் பெயரால் கடினப்படுத்தினர். இக் காரியங்களைக் குறித்து ஆண்டவர் இயேசு பேசிக்கொண்டிருக்கும் பொழுது, அவருடைய சீடர்கள் இதனைப் புரிந்து கொள்ளாமல், தாங்கள் அப்பங்கள் கொண்டு வர மறந்து விட்டோமே என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். தங்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உணராமல் இருப்பதை பார்க்கின்ற இயேசு,  "உங்களுக்கு புரியவில்லையா?"  நீங்கள் என்னை நம்பவில்லையா?  என்று அவர்களின் நிலை குறித்து உள்ளத்தில் வருத்தம் அடைகிறார்.
     
                நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும்,  

 என்ற தனது சுற்று மடலில், இறைவன் படைத்த இயற்கையைப் பற்றி குறிப்பிடுகின்ற பொழுது, இறைவனால் படைக்கப்பட்ட இந்த இயற்கையானது எல்லோரும் மகிழ்ந்து வாழக்கூடிய வீடு என்கிறார். இந்த இயற்கையின் வீட்டில் இயற்கையோடும் மனிதர் அனைவரோடும் அன்போடு உறவோடு மகிழ்ந்திருந்த காலங்கள் இன்று மாறி, மனிதன் இந்த இயற்கையை தனது சுயநலத்திற்காக, தனது சொத்துக்களை பெருக்கிக் கொள்வதற்காக அழிக்கின்ற ஒரு சூழ்நிலையை இந்த நூற்றாண்டில் நாம் காண்கிறோம். இந்த இயற்கை இன்று நம்மால் அழிக்கப்படுகின்றதா? என்று நமது உள்ளத்தில் நாம் கேள்வி எழுப்பினால், நான் சிறிதளவு மரங்களைத் தானே வெட்டினேன்! நான் ஒரு வீடு கட்டுவதற்கு தானே ஆற்றில் மணல் அள்ளினேன்! எளிதாக அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தானே ஆழ்துளை கிணறுகளை உருவாக்கினேன்! என்று நாம் செய்த தவறுகளை குறைவாக மதிப்பிட்டு நாம் கூறலாம். ஆனால் ஒரு சிறிய தவறு தான் ஒரு மிகப்பெரிய அழிவிற்கு வழிவகுக்கிறது. நாம் உண்ணுகின்ற உணவில் காரமோ, ஈப்போ, அல்லது வேறு ஏதேனும் ஒன்றோ, அதிகமாகிவிட்டால் நம்மால் அதனை சாப்பிட இயலாது. அதனை தயாரித்தவர்களை நமது பார்வையாலேயே நாம் எரித்து விடுவோம். ஆனால் அது போலத்தான் நாம் இயற்கைக்கு எதிராக செயல்படுகின்ற நமது சுயநல காரியங்களும் அமைகின்றன என்பதை இன்றைய நாளில் நாம் உணர்வோம். 

                  நாம் வாழுகின்ற இந்த இயற்கையானது, நமது எதிர்கால சந்ததியினரிடம் இருந்து நாம் பெற்றிருக்கின்ற கடன் என்பதை உணர்வோம். நமது கரங்களில் இருக்கின்ற இந்த இயற்கையை நாம் பத்திரமாகப் பாதுகாத்து, நமது சந்ததியினர் சரிவிகித வளம் பெற்ற இயற்கையை கொடையாக பெற்றுக் கொள்ள இன்றைய நாளில் நமது பங்களிப்பு என்ன? என்பதை உள்ளத்தில் சிந்திப்போம். 
          நாம் வாழும் இடங்களில் நமது வீடுகளைச் சுற்றி மரங்கள் நட உறுதி ஏற்போம். பொருட்கள் வாங்குவதற்கு கடைகளுக்குச் செல்லும் பொழுது நெகிழிப் பைகளை நாடாமல் நமது வீட்டிலிருந்து துணிப் பைகளையும் அல்லது சணல் பைகளையும் கொண்டு செல்ல உறுதி ஏற்போம். துரித உணவுகளுக்கு அடிமையாகாமல் இயற்கை அன்னை நமக்கு வழங்குகின்ற இயற்கையான உணவினை அன்போடும் மகிழ்வோடும் நாமும் உண்ணவும் நமது அடுத்த தலைமுறையினருக்கும் அதனை கற்றுக் கொடுக்கவும் உள்ளத்தில் உறுதி ஏற்போம். 

  மொத்தத்தில் இயற்கையை நேசிப்போம்! இயற்கையை பாதுகாப்போம்! இயற்கையில் இறைவனைக் காண்போம்! இயற்கையின் வழி மனிதர்கள் அனைவரையும் அன்பு செய்து ஆண்டவரை மகிழ்விப்போம்!

1 கருத்து:

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...