புதன், 31 மே, 2023

நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்! (2-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

           இன்றைய இறை வார்த்தையில் இயேசுவும் தந்தையும் இணைந்திருப்பது போல நீங்களும் நானும் இறைவனோடு இணைந்திருக்க வேண்டும் என்ற மைய சிந்தனையானது நமக்கு வழங்கப்படுகிறது. கடவுளோடு நாம் இணைந்திருக்கிற போது நமது வாழ்வு நெறிப்படும். அவரோடு இணைந்திருக்கிற போது அவரது குரலுக்கு செவி கொடுக்கின்ற மக்களாக நமது வாழ்வை ஒவ்வொரு நாளும் நாம் அமைத்துக் கொள்ள முடியும். 

            நாம் அவரது குரலுக்கு செவி கொடுத்து அவரது பாதையில் அவரை பின்தொடருகின்ற மனிதர்களாக நாளும் பயணிக்க வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தை நமக்கு சுட்டிக் காட்டுகிறது. இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு இயேசுவின் பாதையில் தொடர்ந்து பயணிக்க இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

எனது குரலுக்கு செவி கொடுங்கள்! (1-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
         நல்ல ஆயனாகிய ஆண்டவரின் குரலுக்கு செவி கொடுக்கின்ற மந்தைகளாக நாம் இருப்பதற்கான அழைப்பு இன்று நமக்கு தரப்படுகிறது. கடவுளின் குரலுக்கு செவி கொடுக்கிற போது, நமது வாழ்வு நெறிப்படும் என்பதை உணர்ந்தவர்களாக, கடவுளின் குரலுக்கு செவி கொடுத்து, நல்ல ஆயனை பின்பற்றிய நல்லதொரு மக்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

ஆடுகளுக்கு வாயில் நானே! (30-4-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

       ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பில் நம்பிக்கை கொண்ட சீடர்கள், இயேசுவை குறித்த செய்தியை துணிவோடு எடுத்துரைத்தார்கள். நம்பிக்கை கொண்டு மனமாற்றமடைந்து வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு இயேசுவின் பாதையில் பயணம் செய்ய இயேசுவின் சீடர்கள் அழைப்பு கொடுத்தார்கள்.  இதை குறித்து தான் இன்றைய முதல் வாசகம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. இந்த அழைப்பினை இதயத்தில் ஏற்றுக்கொண்டு இந்த இயேசுவைப்போல நாமும் வாழவும், இயேசுவை அறிவித்த சீடர்களின் வார்த்தைகளை இதயத்தில் இருத்தி, நல்லதொரு மனமாற்றத்தோடு, நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு நாளும் இயேசுவின் பாதையில் பின்தொடரவும் நாம் அழைக்கப்படுகிறோம். இந்த இயேசுவின் வாழ்வை பின் தொடர்கிற போது பலவிதமான துன்பங்களை நாம் சந்திக்க நேரிடலாம். நன்மைகள் செய்திருந்த போதும் துன்பங்கள் நமக்கு பரிசாக கிடைக்கலாம்.  அந்த துன்பங்களுக்கு மத்தியிலும், கடவுள் நம்மை காக்க வல்லவர் என்பதை இதயத்தில் இருத்தியவர்களாக, பொறுமையோடு காத்திருந்து கடவுளை கண்டு கொள்ளவும்,  அவர் காட்டிய பாதையை பின்பற்றி அவரின் பின்னே பயணம் செய்கின்ற மனிதர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொண்டு நல்ல ஆயனாகிய இந்த ஆண்டவரைப் பின்பற்றுகின்ற மனிதர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

நிலை வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன! (29-4-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

         இன்றைய இறை வார்த்தைகள் இயேசுவைப்போல நமது வாழ்வை அமைத்துக் கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கின்றன.  இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது நன்மைத்தனத்தை பலருக்கு எடுத்துரைத்தார். அவர் பேசுவதை கேட்டு பலரும் முணுமுணுத்துக் கொண்டு, வாழ்வில் பின்பற்றுவதற்கு சாத்தியம் இல்லை என்று சொல்லிவிட்டு அவரை விட்டு அகன்று போனார்கள். 

    தன்னை விட்டு பலர் அகன்று சென்ற போதும் கூட இயேசு தம் சீடர்களை நோக்கி, நீங்களும் செல்லவிருக்கிறீர்களா? என்ற கேள்வியை எழுப்பினார். ஆனால் இயேசுவின் சீடர்கள் அவரோடு இருந்து அவரை புரிந்து கொண்டார்கள். இயேசுவின் வார்த்தைகள் பின்பற்றுவதற்கு கடினம் என எண்ணியவர்கள் கூட, காலப்போக்கில் இந்த இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்க முடியும் என்பதில் நிலைத்திருந்தார்கள். இதற்கு அடிப்படையான காரணம் இயேசுவோடு உடன் பயணித்து, இயேசுவின் வார்த்தைகளை தங்கள் வாழ்வாக மாற்றிக் கண்ட திருத்தூதர்களின் வாழ்வு சாட்சிய வாழ்வாக அமைந்தது. இந்த திருத்தூதர்களின் வாழ்வைப் போல நமது வாழ்வும் சாட்சிய வாழ்வாக அமைய ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

ஆண்டவரை முழுமையாக அறிந்திடுவோம்! (28-4-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

        இயேசுவைப் பற்றி அறிவிப்பவர்களை எல்லாம் அடியோடு அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தனது பயணத்தை தொடங்கிய சவுலை ஆண்டவர் ஆட்கொள்வதை குறித்து இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம்.  ஏன் என்னை துன்புறுத்துகிறாய்?  என்ற இயேசுவின் கேள்விக்கு, நான் எங்கே உம்மை துன்புறுத்தினேன்? என்று கூறிய சவுலிடம், நீ துன்புறுத்தும் இயேசு நான்! என்று சொல்லி, தன்னை வெளிப்படுத்திய இயேசுவை இதயத்தில் ஏற்றுக்கொண்டு இதுநாள் வரை செய்த அத்தனை தீமைகளையும் புறம் தள்ளிவிட்டு, யாரைப் பற்றி பேசுபவர்களை கொல்ல வேண்டும் என்று தன் பயணத்தை துவங்கினாரோ, அந்த இயேசுவைப் பற்றி யார் கொல்லச் சொன்னார்களோ அவர்களிடத்தில் சென்று துணிவோடு எடுத்துரைக்கின்ற மனிதனாக இந்த பவுல் மாறியதை நாம் இன்றைய நாளில் சிந்திக்க அழைக்கப்படுகின்றோம். இந்த பவுலை நமது முன்மாதிரியாக எடுத்துக்கொள்வோம்.  சவுல் என்ற நிலையில் இருந்து பவுல் என்ற நிலைக்கு அவர் கடந்து வந்த போது, ஆண்டவரை முழுவதுமாக அறிந்திருந்தார்.  அறிந்த ஆண்டவருக்காக தன் வாழ்வையே அர்ப்பணிக்க துணிந்தார். இவரைப் போல நமது வாழ்வை நாமும் வாழ அழைக்கப்படுகின்றோம்.  நமக்காக தனது இன்னுயிரை தந்த இயேசுவை இதயத்தில் இருத்தி, நமக்கு முன்மாதிரியாக பவுலை முன்னிறுத்தி நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு இயேசுவின் பாதையில் இனிதே பயணிப்போம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கடவுள் அனைத்தையும் கற்றுத் தருவார்! (27-4-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

     கடவுள் அனைத்தையும் நமக்கு கற்றுத் தருவார் என இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. கடவுள் கற்றுத் தருகின்றவற்றை மனதில் இருத்திக் கொண்டு நமது செயல்களில் அதனை வெளிப்படுத்துகின்ற நபர்களாக நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.

      முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்ட பிலிப்பின் வாழ்வு அப்படித்தான் அமைந்திருந்தது. ஆண்டவரின் ஆவியார் அவரை எழுந்து ஒரு இடத்திற்கு செல்ல சொல்கிறார். அவரும் அங்கு செல்லுகின்றார். அவ்வழியே வருகின்ற எத்தியோப்பியா நகர அரசின் நிதி அமைச்சருக்கு எசாயாவின் நூலை விளக்கிச் செல்லுமாறு தூய ஆவியானவர் துண்ட பிலிப்பும் அத்தேரின் அருகில் சென்று அவருக்கு இயேசுவைப் பற்றி விளக்கி கூறி, அவருக்கு திருமுழுக்கு கொடுப்பதை நாம் இன்றைய முதல் வாசகமாக வாசிக்கக் கேட்டோம். 

   இயேசுவின் வார்த்தைகளை இதயத்தில் இருத்திக் கொண்டு நாமும் ஒவ்வொரு நாளும் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டவைகளை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கின்ற நபர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் ஆண்டவரிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.


       

மகனை அன்பு செய்வோர் நிலை வாழ்வை உரிமை பேறாக பெறுவர்! (26-4-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

         தொடக்க காலத்தில் இயேசுவைப் பற்றி அறிவித்தவர்கள் எல்லாம் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளானார்கள் என்பதை விவிலியத்தின் வாயிலாக நாம் உணர்ந்து கொள்கிறோம். ஆனால் அத்தனை இன்னல்களுக்கு மத்தியிலும் ஆண்டவரின் பணியை செய்கின்றவர்களாக, அடுத்தவர்களுக்கு நன்மை செய்கின்ற நபர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்கள் அப்படி வாழ்ந்ததற்கான அடிப்படை காரணம், அவர்கள் இயேசுவிடமிருந்து கற்றுக் கொண்ட வாழ்வுக்கான பாடம். என்னிடம் வருவோருக்கு தாகும் இராது என்று சொன்ன அந்த இயேசுவை நம்பி, அவரின் வார்த்தைகளை வாழ்வாக்க முயற்சித்து அதில் வெற்றி கண்டவர்கள், நாம் காணுகின்ற அத்தனை புனிதர்களும் இயேசுவின் சீடர்களும்.

    இவர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு நாமும் இயேசுவின் வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற நபர்களாக, துன்பங்களுக்கு மத்தியிலும் துணிவோடு இயேசுவை அறிவிப்பவர்களாக இருக்க ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள்! (25-4-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
               இன்றைய இறை வார்த்தைகள் இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொள்ள நமக்கு அழைப்பு கொடுக்கின்றன.  கடவுளின் வல்லமை மிக்க கரத்தின் கீழ் நம்மை தாழ்த்த கூடியவர்களாகவும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாகவும் நாம் இருக்க வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தை வழியாக, அதிலும் முதல் வாசகம் வாயிலாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம்.

      இயேசுவும் தன்னுடைய சீடர்களுக்கு உலகெங்கும் சென்று நற்செய்தியை பறைசாற்றுங்கள் என்று சொல்லி, பலவிதமான அதிகாரங்களையும் ஆற்றல்களையும் வழங்கினார் என விவிலியம் சுட்டிக்காட்டுகிறது. இந்த இயேசுவை அறிந்திருக்கின்ற ஒவ்வொருவரும் அவரை அறிக்கை இடுகின்ற போது அத்தனை ஆசிகளையும் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை இதயத்தில் இருத்தியவர்களாக, நாம் வாழுகின்ற இந்தச் சமூகத்தில் தொடர்ந்து இயேசுவின் பணியை செய்கிறவர்களாகவும், இயேசுவின் நற்செய்தியை அறிவிப்பவர்களாகவும், அவரின் வல்லமை மிக்க கரத்தின் கீழ் நம்மை தாழ்த்தி அவரிடமிருந்து ஆசிகளை பெற்று கொள்ளக் கூடியவர்களுமாக இருப்பதற்கான ஆற்றலை இன்றைய நாளில் இறைவனிடத்தில் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

நிலை வாழ்வு தரும் உணவுக்கே உழையுங்கள்! (24-4-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

       
           இன்றைய இறை வார்த்தையானது இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட மனிதர்களாக சாட்சிய வாழ்வு வாழக்கூடிய சான்று பகரும் மனிதர்களாக நீங்களும் நானும் நம் வாழ்வை அமைத்துக் கொள்ள அழைப்பு விடுக்கின்றன. இயேசுவை அறிந்து கொண்ட ஸ்தேவான் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எடுத்துரைத்தார்.  ஆனால் அவர் மீது பொய் சுமத்தினார்கள். 
  ஆனாலும் துணிவோடு தான் அறிந்த இயேசுவைப் பற்றி எடுத்துரைத்த அவரது முகமானது வான தூதரின் முகம் போல இருந்ததை இன்றைய முதல் வாசகம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. 

                   நற்செய்தி வாசகத்திலும் கூட இயேசுவை தேடி வந்தவர்கள் அவர் செய்த அரும் அடையாளங்களுக்காக வயிரார அப்பங்களை உண்பதற்காக தேடி வந்தார்களே ஒழிய, அவர்கள் ஆன்மீக உணவை பெறுவதற்காக, ஆண்டவரின் வார்த்தையை உள்வாங்குவதற்காக வரவில்லை என்பதை இயேசு சுட்டிக்காட்டுகின்றார். இயேசுவின் பணியை செய்கின்ற ஒவ்வொருவருமே வாழ்வில் வருகின்ற அத்தனை இடர்பாடுகளிலும், நன்மை தீமை எது என்பதை அறிந்தவர்களாக நன்மைத்தனத்தை ஊக்குவிப்பவர்களாகவும், தீமையானதை எதிர்க்கின்ற நபர்களாகவும், அது தீமை என்பதை எடுத்துரைக்கின்ற மனிதர்களாகவும் நம் வாழ்வை அமைத்துக் கொள்ள ஆற்றல் வேண்டிட அழைக்கப்படுகின்றோம்.  நாம் இத்தகைய செயல்பாடுகளை நமது வாழ்வாக மாற்றுகிற போது, பலரின் நிராகரிப்புகளையும் எதிர்ப்புகளையும் நாம் சந்திக்க நேரிடும்.  சந்திக்கின்ற போதெல்லாம் இயேசுவை இதயத்தில் இருத்திக்கொண்டு ஸ்தேவானைப் போல சாட்சிய வாழ்வு வாழ இன்றைய நாளில் ஆண்டவரிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.      

சீடர்கள் இயேசுவை அடையாளம் கண்டு கொண்டனர்! (23-4-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

     பாஸ்கா காலத்தில் மூன்றாம் வாரத்தில் இருக்கின்ற நமக்கு ஆண்டவரின் மீதான ஆழமான நம்பிக்கையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள ஆண்டவரின் வார்த்தைகளை இதயத்தில் இருத்தி ஆழமாக சிந்திக்க நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம்.  அச்சத்தோடு மாடியறையில் முடங்கி கிடந்தவர்கள் தூய ஆவியாரின் தூண்டுதல் பெற்றவர்களாக இயேசுவை குறித்து அனைவருக்கு மத்தியிலும் சான்று பகர்ந்தார்கள் என்பதை நாம் அறிவோம். இந்த இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட நாம் ஒவ்வொருவருமே இந்த இயேசுவின் வார்த்தைகளை அனுதினமும் இதயத்தில் இருத்தி சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.


     தொடக்க காலத்தில் இயேசுவின் சீடர்கள் நம்பிக்கையற்றிருந்த போதும், மறை நூலை சரியாக உணர்ந்து கொள்ளாது இருந்த போதும், ஆண்டவர் அவர்களிடையே தோன்றி அவர்களோடு ஒருவராக இருந்து மறை நூல்களை விளக்கிச் சொல்லி, அவர்களுக்கு தெளிவுபடுத்தினார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

              இந்த இறை வார்த்தைகளின் அடிப்படையில் நாம் நமது வாழ்வில் எப்போதெல்லாம் விவிலியத்தை கையில் ஏந்துகிறோமோ அப்போதெல்லாம் நமது வாழ்வு மாற்றம் பெறுகிறது என்பதை உணர்ந்து கொள்ளவும், விவிலியத்தை அதிகமாக வாசிக்கவும், வாசித்த வார்த்தைகளை இதயத்தில் இருத்தி சிந்திக்கவும், அதன் அடிப்படையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு இயேசுவின் சீடர்களைப் போல தெளிவு பெற்றவர்களாக, இயேசுவை அடுத்தவருக்கு அறிவிக்கின்ற மனிதர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

இயேசு கடல் மீது நடந்து வருவதை சீடர்கள் கண்டனர்! (22-4-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !

    இன்றைய இறை வார்த்தையின் வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து அச்சத்தை களைவதற்கு சீடர்களுக்கு அழைப்பு விடுக்கின்றார். படகில் சென்று கொண்டிருந்த சீடர்கள் கடல் மீது நடந்து வருகின்ற இயேசுவை கண்டு அஞ்சிய போது, அஞ்சாதீர்கள்! நான்தான் என்று சொல்லி அவர்களுக்கு நம்பிக்கையை தருகின்றார். கடவுள் தண்ணீரின் மீது நடந்து அவர்களின் நம்பிக்கையை ஆழப்படுத்துகின்றார். இப்படி இயேசுவிடமிருந்து கற்றுக் கொண்ட,  அவரிடமிருந்து உள்வாங்கிக் கொண்ட மனிதர்களாகத் தான் இந்த இயேசுவை பற்றிய நற்செய்தியை பலருக்கும்
அறிவிக்கின்ற மனிதர்களாக இருந்தார்கள். இணைந்து வாழ்ந்த போது பலவிதமான இன்னல்கள் அவர்களுக்கு இடையே ஏற்பட்டது. அப்படி இன்னல்கள் வருகின்ற போதெல்லாம் கலக்கம் கொள்ளுகின்ற மனிதர்களாக இருந்து விடாமல், அஞ்சாது, ஆண்டவரின் துணையை நாடி தேடுகின்ற மனிதர்களாக இயேசுவின் சீடர்கள் செயல்பட்டார்கள் என்பதை இன்றைய முதல் வாசகத்தின் வாயிலாக நாம் அறிந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம்.

                   இந்த இறை வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு வாழ்வில் வருகின்ற அத்தனை துயரங்களிலும் இன்னல்களிலும் ஆண்டவரின் துணையோடு அனைத்தையும் எதிர்கொள்ள ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

அப்பங்களை பகிர்ந்து அளித்தார்! மக்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது! (21-4-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

           ஆண்டவருக்கு உகந்த காரியங்களை நாம் செய்ய வேண்டும் என்பதை இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது நமக்கு கற்றுக் கொடுத்தார். ஐயாயிரம் பேருக்கு இயேசு உணவு கொடுத்த நிகழ்வை இன்று நாம் வாசிக்க கேட்டோம். நம்மிடம் இருப்பதை பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்பதை ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொல்லித்தருகின்ற விதத்தில் இந்நிகழ்வு அமைந்ததாக விவிலிய அறிஞர்கள் குறிப்பிடுவார்கள். இயேசு இருப்பதை பகிர்ந்து உண்ண கற்றுக் கொடுத்தார். இந்த பகிர்வு மனப்பான்மை தான் தொடக்க கால கிறிஸ்தவர்களிடத்தில் காணப்பட்டது என்பதை விவிலியத்தின் துணைகொண்டு நாம் அறிந்து கொள்ளுகிறோம். இயேசுவின் வார்த்தைகளை பின்பற்றுகின்ற மனிதர்களை குறித்து பலரும் அஞ்சினார்கள். எங்கே இந்த புதிய நெறியை இயேசு என்ற மனிதனை பின்பற்றுகின்ற புதிய நெறியை பின்பற்றி பலர் சென்றுவிடுவார்களோ என்ற ஐய உணர்வு அவர்களுக்குள் எழுந்த போது, கடவுளுக்கு உகந்ததாக இது இல்லையென்றால் காலப்போக்கில்  மறைந்து போகும் என்று சொல்லக்கூடியவராக கமாலியல் என்ற மனிதர் இருப்பதை இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம்.

        காலங்கள் பல கடந்தும் இந்த இயேசுவைப் பற்றி இன்றும் நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் உண்மையின் வடிவமாகவும் இந்த சமூகத்திற்கு தேவையானதையும் தன் வாழ்வால் வெளிகாட்டியவர் இந்த இயேசு என்பதை நீங்களும் நானும் உணர்ந்து கொண்டு இன்னும் அதிகமாக இந்த இயேசுவின் வாழ்வுக்கான பாடங்கள், அவர் நமக்கு கற்றுக் கொடுத்தவைகளை நமது வாழ்வில் பிரதிபலிப்பதற்கான ஆற்றலை இறைவன் நமக்கு தர வேண்டுமாய் இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

தந்தை மகன் மேல் நிறைவாக அன்பு கூர்ந்தார்! (20-4-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

                 இன்றைய இறை வார்த்தைகள் ஆண்டவர் இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொள்கிறவர்கள் நிலை வாழ்வை பெறுவார்கள் என்ற வாழ்வுக்கான உறுதியை நமக்குத் தருகின்றன. 

 இன்றைய முதல் வாசகத்தில் கூட இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்த காரணத்தினால் பேதுரு பலவிதமான இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகின்றார். இன்னல்களுக்கு மத்தியிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களின் அதட்டல்களுக்கு மத்தியிலும் கூட, மனிதருக்கு கீழ்ப்படிவதை விட கடவுளுக்கு கீழ்ப்படிபவர்களாகவே நாங்கள் இருப்போம் என்று சொல்லி தாங்கள் அறிந்த கடவுளைப் பற்றி தரணி முழுவதும் பேசுகின்ற நபர்களாக தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்ட இந்த திருத்தூதர்களை இதயத்தில் இருத்தியவர்களாக நாமும் இயேசுவின் மீது ஆழமான  நம்பிக்கை கொண்டவர்களாக நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

அசைக்க முடியாத நம்பிக்கை கொள்வோம்! (19-4-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

           ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது ஆழமான நம்பிக்கை கொள்ளுகின்ற ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வை ஒளியின் வாழ்வாக அமைத்துக் கொள்ளுகிறார்கள்; உண்மை நிறைந்த வாழ்வாக அமைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் செய்கின்ற அத்தனை செயல்களும் கடவுளோடு இணைந்து செய்கின்ற செயல்களாக கருதப்படுகின்றன என்பதை இன்றைய இறை வார்த்தை வழியாக நீங்களும் நானும் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம்.

                இன்றைய முதல் வாசகத்தில் கூட இயேசுவைப் பற்றி அறிவித்ததன் விளைவாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை கடவுள் உடனிருந்து பாதுகாப்பதை குறித்தும் அவர்கள் இந்த துன்பங்களுக்கு மத்தியிலும் துணிவோடு இயேசுவைப் பற்றி எடுத்துரைத்ததை குறித்தும் நாம் வாசிக்க கேட்டோம். இந்த சீடர்களிடத்தில் காணப்பட்ட அசைக்க முடியாத நம்பிக்கையும் ஆழமான பற்றுறுதியும் இன்று நம்மிடம் வளர வேண்டும் என்பதைத்தான் இன்றைய இறை வார்த்தைகள் நமக்கு வலியுறுத்துகின்றன. இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொண்டு நாளும் நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு அவரோடு இணைந்து பல காரியங்களை செய்கின்றவர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

மானிட மகனே விண்ணகம் சென்றார்! ( 18-4-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !

      
    உயிர்த்த ஆண்டவர் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக நம் உள்ளங்கள் உயர வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தை வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். இந்த உயிர்த்த இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டதன் அடிப்படையில் தான் தொடக்க கால கிறிஸ்தவர்கள் இந்த இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்குவதற்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்தார்கள். இந்த இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது நற்செய்தியின் விழுமியமாக இறையாட்சியின் மதிப்பீடாக கற்றுக் கொடுத்த அத்தனை பண்புகளுக்கும் செயல் வடிவம் தருகின்ற நபர்களாக தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். இருப்பதையெல்லாம் விற்று அதனை பகிர்ந்து கொடுப்பதற்காக திருத்தூதர்களின் காலடிகளில் கொண்டு வந்து வைக்கின்ற மனநிலை கொண்ட மனிதர்களாக தொடக்க கால கிறிஸ்தவர்கள் இருந்தார்கள். இவர்களின் மனமாற்றத்திற்கு அடிப்படை காரணம் ஆண்டவர் இயேசுவின் மீது அவர்கள் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கை.  இத்தகைய நம்பிக்கை நமது நம்பிக்கையாக மாற வேண்டும் என்பதைத்தான் இன்றைய இறை வார்த்தைகள் நமக்கு வலியுறுத்துகின்றன. இந்த இறை வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்த்து நாமும் இந்த உயிர்த்த ஆண்டவரின் மீது இன்னும் ஆழமான நம்பிக்கையில் நாளும் வளர்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இணைந்து ஜெபிப்போம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

மறுபடியும் பிறந்தால் அன்றி இறையாட்சியை காண முடியாது! (17-4-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

  தூய ஆவியாரால் மறுபிறப்படைந்தவர்களாக நீங்களும் நானும் இருப்பதற்கான அழைப்பு இன்றைய இறை வார்த்தை வழியாக நமக்கு தரப்படுகிறது. ஆவியில் பிறப்பவர்கள் ஆண்டவருக்கு உரியவற்றை நாடுகிறவர்களாகவும், இறையாட்சியின் மதிப்பீடுகளை இதயத்தில் இருத்தி  சொல்லிலும் செயலிலும் இந்த இறையாட்சி இந்த மண்ணில் மலர்வதற்கு ஏற்ற வகையில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளக்கூடியவர்களுமாக இருப்பார்கள் என்பதை இன்றைய இறைவார்த்தை வாயிலாக நீங்களும் நானும் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம். ஆண்டவரிடத்தில் அபரிமிதமான ஆசிகளை பெற்று அனுதினமும் இந்த அகிலத்தில் வாழ்ந்து கொண்டிருக்க கூடிய நாம் ஒவ்வொருவருமே தூய ஆவியாரின் துணையை நாடி, தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப அவரின் குரலுக்கு செவிகொடுத்து, நமது சொல்லையும் செயலையும் சரி செய்து கொண்டு, கடவுளுக்கு உகந்த மனிதர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

   


 

எட்டு நாட்களுக்குப் பின் இயேசு சீடர்களுக்கு தோன்றினார்! (16-4-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !
        ஆண்டவர் இயேசு கிறிஸ்து உயிர்ப்பு செய்தியை பலரும் நம்பிய போது, ஐயம் கொண்ட ஒரு மனிதனாக, உயிர்த்த ஆண்டவரை நான் கண்ணால் காண வேண்டும்; ஆணிகள் துளைக்கப்பட்ட அவரது கைகளையும் விலாவையும் நான் தொட்டு பார்க்க வேண்டும் என சொல்லிய தோமாவிற்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்து காட்சி கொடுக்கின்றார்.  ஆண்டவரை பார்த்த மாத்திரமே, என் ஆண்டவரே! என் தேவனே! என்று சொல்லி தன்னை முழுவதுமாக அவரிடத்தில் சரணாகதி அடையச் செய்கின்றார் தோமா. இந்த தோமாவிடத்தில்  நீ கண்டதால் நம்பினாய்;  காணாமலே நம்புவோர்  பேறுபெற்றோர் என்று இயேசு சொன்ன அந்த வார்த்தையின் அடிப்படையில்
இன்று வரை நாம் கடவுளை நேரடியாக காணவில்லை என்றாலும், இந்த கடவுளை நமது வாழ்வில் பல்வேறு தருணங்களில் பலவிதமான அனுபவங்கள் வாயிலாக நாம் அறிந்திருக்கின்றோம். நம்பிக்கையில் நிறைந்திருக்கின்ற நீங்களும் நானும் தொடர்ந்து நம்பிக்கையில் நிலைத்திருக்கவும், ஆழமான நம்பிக்கையில் நிலைத்திருக்கின்ற போது ஆண்டவரிடமிருந்து அபரிமிதமான ஆசிகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்தவர்களாக நாம் ஆண்டவர் இயேசுவின் மீது நமது நம்பிக்கையை பதிய வைத்து சொல்லிலும் செயலிலும் அவருக்கு சான்று பகர்கின்ற மனிதர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறையருள் வேண்டுவோம் இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

உலகெங்கும் சென்று நற்செய்தியை பறைசாற்றுங்கள்! (15-4-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

       
     உலகெங்கும் சென்று படைப்பிற்கு எல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள் என்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தையை இதயத்தில் சுமந்தவர்களாக இயேசுவை பற்றிய நற்செய்தியை  உலகெங்கும் சென்று அறிவித்த சீடர்களை போல, நீங்களும் நானும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறை வார்த்தை வழியாக இறைவன் அழைப்பு தருகின்றார். இறைவன் தருகின்ற அழைப்பை இதயத்தில் இருத்தியவர்களாக, நாம் அறிந்த இறைவனை நாம் அருகில் இருப்பவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அறிவிப்பதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

இறைவன் நம்மோடு! (14-4-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

      
        ஆண்டவர் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததற்கு பிறகாக, தன்னுடைய சீடர்களை சந்தித்து, அவர்கள் நம்பிக்கையில் ஆழப்படவும், தளர்ந்து போயிருந்த அவர்கள் மனதிற்கு உறுதியை தருகின்ற வகையிலும், அவர்களோடு உடன் பயணித்து அவர்களோடு ஒருவராக இருந்து அவர்களை ஊக்கப்படுத்தி தனது பணியை செய்வதற்கு அவர்களை தகுதி உள்ளவர்களாக மாற்றினார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக உணர்ந்து கொள்ள நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை சீர்தூக்குகிற போது, நாம் சந்திக்கின்ற மனிதர்கள் வாயிலாக கடவுள் நம்மையும் ஊக்கப்படுத்தி அவரது பணியை செய்வதற்கான ஆற்றலை அனுதினமும் தந்து கொண்டிருக்கிறார். இந்த இறைவனை உடன் இருப்பவர்கள் மத்தியில் கண்டுகொள்ளவும் அவருக்கு உகந்த மனிதர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ளவும் ஆண்டவரிடத்தில் அருள் வேண்டி இன்றைய நாளில் இணைந்து ஜெபிப்போம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

இயேசு துன்புற்றார்; மாட்சியோடு உயிர்த்தெழுந்தார்! (13-4-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
நேற்றைய வாசகங்களின் தொடர்ச்சியாகவே இன்றைய வாசகங்கள் அமைகின்றன. பேதுருவால் நலம் பெற்ற மனிதன் பேதுருவை பின்பற்றிக்கொண்டு அவரோடு உடன் இருக்க, அந்த மனிதனை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து, இந்த மனிதனை குணப்படுத்தியது எங்கள் வல்லமையால் அல்ல; நாங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது கொண்டிருந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் இந்த வல்ல செயல் நிகழ்ந்தது என்று சொல்லி, தன்னை முன்னிலைப்படுத்தாது இயேசுவை முன்னிலைப்படுத்தும்  நபராக பேதுரு விளங்குவதை முதல் வாசகம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. 

      அதுபோலவே நற்செய்தி வாசகத்திலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களோடு உரையாடுகிறார். அவர்களோடு மீன் துண்டை பகிர்ந்து உண்ணுகிறார். அவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்து,  நீங்கள் மனமாற்றம் பெற்றவர்களாக பாவத்தை விலக்கிவிட்டு நல்லதொரு மன மாற்றத்தோடு ஆண்டவர் இயேசுவின் சாட்சிகளாக இறைவனின் திட்டத்தை இம்மண்ணில் நிலை நாட்டுகின்ற மனிதர்களாக இருப்பதற்கான அழைப்பை அன்று இயேசுவின் சீடர்களுக்கு இயேசு கொடுத்ததை தான் நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்க கேட்கிறோம்.

    இந்த இரண்டு வாசகங்களையும் நமது வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, இயேசுவை ஏற்றுக் கொண்டிருக்கின்ற நாம் நம்மை முன்னிலைப்படுத்தாது, கடவுளுக்குரிய காரியங்களை முன்னிலைப்படுத்தக் கூடியவர்களாக, கடவுளுடைய திட்டத்திற்கு சான்று பகருகின்ற மனிதர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
      

இயேசுவை அடையாளம் கண்டு கொண்டார்கள்! (12-4-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
         இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டவர்களாக, துணிச்சல் மிக்கவர்களாக இயேசுவின் உயிர்ப்புக்குச் சான்று பகர்கின்ற பேதுரு, தான் கொண்டிருந்த நம்பிக்கையினை வெளிப்படுத்தும் வண்ணமாக தன்னிடத்தில் யாசகம் கேட்கின்ற ஒரு மனிதனிடத்தில், என்னிடம் உனக்கு கொடுப்பதற்கு பொன்னோ பொருளோ இல்லை. ஆனால் என்னிடம் இருப்பதை உனக்கு தருகிறேன். நாசரேத்து இயேசுவின் பெயரால் சொல்கிறேன், எழுந்து நடை என்று சொல்லி அவருக்கு நலம் தருவதை இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம். 


     நற்செய்தி வாசகத்தில் கூட ஆண்டவர் இயேசுவின் சீடர்கள் இயேசுவின் உயிர்ப்பின் மீது ஐயமுற்ற நிலையில் அவர்கள் எம்மாவூசுக்கு சென்று கொண்டிருந்தபோது இயேசுவும் அவர்களோடு உடன் பயணித்து மறை நூல்களை விளக்கிச் சொல்லி இறுதியில் அவர்களோடு தங்கி, அப்பம் பிடுகிற போது தங்களோடு வந்தவர் தங்களுக்கு திருச்சட்டத்தை எல்லாம் விளக்கிச் சொன்னவர்,  அப்பத்தை பிட்டுக் கொடுத்தவர் ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்பதைக் கண்டுணர்ந்தவர்களாக  நம்பிக்கை பெற்றவர்களாக  புத்துணர்வோடு மீண்டுமாக ஆண்டவர் இயேசுவின் பணியை ஆர்வத்தோடு செய்ய புறப்படுவதைத் தான் இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம். இந்த வாசகங்களின் அடிப்படையில் நமது வாழ்வை சீர்தூக்குகிற போது, நம்மிடம் பொன்னும் பொருளும் நிறைய இருந்தாலும், நம்மிடம் அடிப்படையாக இருக்க வேண்டியது இந்த இயேசுவின் மனநிலை என்பதை உணர்ந்தவர்களாக நாம் சொல்லிலும் செயலிலும் இயேசுவை வெளிப்படுத்துகின்ற  மனிதர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ளவும், இந்த இயேசுவுக்கு சான்று பகருகின்ற நல்ல சாட்சியாளர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ளவும்,  ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

நான் ஆண்டவரைக் கண்டேன்! (11-4-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
       ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை கண்டுகொண்ட மகதலா மரியா மகிழ்ச்சியுறுவதை குறித்து இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்கக் கேட்டோம்.

உயிர்த்த ஆண்டவரின் மீது நம்பிக்கை கொண்டவராக திருத்தூதர் பேதுரு அனைவரும் மத்தியிலும் எழுந்து நின்று நல்லதொரு மனமாற்றத்தை பெற்றவர்களாக இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள் என நற்செய்தி அறிவிப்பதை இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்கக் கேட்டோம். 

    இந்த இரண்டு வாசகங்களையும் நமது வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்கிறபோது நாம் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பில் மகிழ்ந்து கொண்டிருக்கின்ற இந்நாட்களில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை துணிவோடு அருகில் இருப்பவர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தை வழியாக மீண்டும் மீண்டுமாக அறிந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். இறைவன் உணர்த்துகின்ற இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வுக்கான சிந்தனைகளை இதயத்தில் இருத்திக் கொண்டவர்களாக அனுதின வாழ்வில் ஆண்டவரைப் பற்றி கிடைக்கின்ற நேரங்களில் எல்லாம் ஒருவர் மற்றவரோடு உரையாடவும் நற்செய்தி அறிவிக்கின்ற நல்ல பணியாளர்களாக நம் வாழ்வை நாம் அமைத்துக் கொள்ளவும் இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

புதன், 17 மே, 2023

இயேசுவை அறிவிப்போம்! (10-4-2023)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வாழ்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புக்குப் பிறகாக துணிச்சல் பெற்றவர்களாக சீடர்கள் எல்லாம் இயேசுவின் உயிர்ப்பு செய்தியை உலகெங்கும் சென்று பறைசாற்றக் கூடியவர்களாக இருந்தார்கள் இப்பணியை அவர்கள் செய்வதற்கு பல்வேறு விதமான தடைகளை வாழ்வில் எதிர்கொண்டார்கள். குறிப்பாக யூதர்கள் ஆகிய பரிசேயரும் சதுசேயரும் மறைநூல் அறிஞர்களும் இயேசுவின் உயிர்ப்பு என்பது ஒரு கட்டுக்கதை என்று சொல்லி பலருக்கு பலவிதமான பொருளாதார உதவிகளை செய்து கட்டுக்கதைகளை பரப்பவும் செய்தார்கள். ஆனால் அத்தனை கட்டுக்கதைகளுக்கு மத்தியிலும் கூட உண்மையை உரக்கச் சொல்லுகின்ற மனிதர்களாக இயேசுவின் சீடர்கள் செயல்பட்டார்கள். அதன் விளைவுதான் இன்று வரை ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பில் நாம் மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பில் இன்றும் என்றும் ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக தொடர்ந்து பயணிக்க ஆற்றல் வேண்டி இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

வெள்ளி, 12 மே, 2023

பெரிய சனி (8-4-2023)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

                      கடவுள் வடிவில் இருக்காமல் மனிதன் மீது கொண்ட அன்பின் காரணமாக மனித வடிவம் எடுத்து வந்து ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை நமக்கு கற்றுக் கொடுத்த இயேசு கிறிஸ்துவுக்கு மரண தண்டனையை பரிசாக கொடுத்து கல்லறைக்குள் அடக்கினோம்.

       கல்லறையில் இருக்கின்ற ஆண்டவரை இதயத்திலிருத்துவோம்.  பல நேரங்களில் நமது வாழ்வில் எத்தனையோ தடைகளுக்கு மத்தியிலும் எழுந்து நிற்க வேண்டும், சாதிக்க வேண்டும் இயேசுவின் இறையாட்சியின் மதிப்பீடுகளை வாழ்வாக்க வேண்டும் என முயலுகிற போதெல்லாம் பல நேரங்களில் பல மனிதர்கள் வாயிலாகவும் அல்லது நம்மிடம் இருக்கின்ற சோம்பேறித்தனத்தின் வாயிலாகவும் நமக்கு நாமே கல்லறைக்குள் அடக்கப்பட்டவர்களாக அடக்கிக் கொள்ளுகின்ற நிலையானது மேலோங்குகிறது.  கல்லறைக்குள் முடங்கி இருப்பதற்காக நாம் படைக்கப்படவில்லை. மாறாக, இயேசுவைப் போல மாற்றத்தை உருவாக்கவே இந்த மண்ணில் பிறந்திருக்கிறோம் என்பதை உணர்ந்தவர்களாக, நம் வாழ்வும் இயேசுவின் வாழ்வாக மாறிட இன்றைய நாள் முழுவதும் இயேசுவின் பாடுகளையும் இயேசுவின் இறப்பையும் இதயத்திலிருத்தி ஆழமாக சிந்திப்போம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

பெரிய வெள்ளி! (7-4-2023)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

பெரிய வெள்ளி ஆகிய இன்று இயேசுவின் இறப்பை நாம் நினைவு கூருகின்றோம்.

            அகிலத்தின் மீட்புக்காக தன் உயிரை தியாகம் செய்த இயேசுவின் தியாகத்தை இதயத்தில் சுமந்தவர்களாக, எதற்காக இந்த இயேசு இறந்தார் என்பதை குறித்து சிந்தித்துப் பார்த்து அவர் இம்மண்ணில் வாழ்ந்த போது நம்மிடம் விட்டுச் சென்ற வாழ்வுக்கான பாடங்களை எல்லாம் இதயத்தில் ஏற்றுக்கொண்டு அதற்கு செயல் வடிவம் தருகின்ற மனிதர்களாக நாம் மாறுகிற போது தான் ஆண்டவர் இயேசுவின் இறப்பின் மகத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும். இயேசு நமக்கு கற்றுக் கொடுத்த பாதையில் தடைகள் வந்தாலும் அத்தடைகளுக்கு மத்தியில் தொடர்ந்து பயணிக்கவும்,  இயேசுவைப்போல இறுதிவரை கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுகின்ற மனிதர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ளவும் ஆண்டவரிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...