ஞாயிறு, 31 அக்டோபர், 2021

புனிதர் அனைவர் பெருவிழா(1.11.2021)

புனிதர் அனைவர் பெருவிழா


அன்புக்குரியவர்களே! இன்று திருஅவையாக நாம் இணைந்து புனிதர் அனைவர் பெருவிழாவை கொண்டாடி மகிழ அழைக்கப்படுகின்றோம். 
புனிதர்கள் என்றால் யார்? என்று கேட்ட ஒரு மறைக்கல்வி மாணவனுக்கு, ஒரு மறைக்கல்வி ஆசிரியர் தந்த பதில்: புனிதர்கள் என்றால் இயேசுவை பிரதீப்பலித்தவர்கள் என்றார்.  

இந்த புனிதர்கள் எல்லாம்  இவ்வுலகில் மனிதராகப் பிறந்தவர்கள்.
இவ்வுலகில் வாழ்ந்தபோது இறைவனுக்கு ஏற்புடையவர்களாய் திகழ்ந்தவர்கள்.
தங்களது  வாழ்வின் வழியாக இறைவனைப் பலருக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.
என்றும் இறைவனோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
தம்மை நோக்கி மன்றாடுபவர்களுக்காக இறைவனிடம் பரிந்துரைப்பவர்கள்.
தங்கள் உயிரையே இறைவனுக்காக  கையளித்தவர்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

அனைத்துப் புனிதர்களுடைய பெருவிழா பல்வேறு இடங்களில், பல்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வந்தபோது திருத்தந்தை மூன்றாம் கிரகோரியார்தான் (827 -844) இதனை ஒழுங்குபடுத்தி, நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி கொண்டாடப் வழிவகுத்துக் கொடுத்தார்.

திருஅவை ஒவ்வொரு நாளுக்கும் ஒரு புனிதரை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றபொழுது, புனிதர் அனைவருக்கும் என தனியாக ஒரு நாளை ஒதுக்கி, அவர்களுக்கு விழாக் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? என்ற கேள்வி எழலாம். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்வில் பிரதிபலித்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். அவர்களை எல்லாம் ஒரு ஆண்டில் நினைவுகூர்ந்து விட முடியாது. எனவே அனைத்து புனிதர்களையும்  நினைவுகூர்ந்து விழா கொண்டாட வேண்டும் என்பதற்குதான் திருஅவை நவம்பர் ஒன்றாம் தேதியை புனிதர்கள் அனைவரின் பெருவிழாவாகக் கொண்டாடுகின்றது.

அனைத்துப் புனிதர்களின் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்லநாளில் திருஅவை இறைவார்த்தை வழியாக  நமக்கு என்ன செய்தியை தருகிறது என்று சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம் 

இன்றைய முதல் வாசகத்தில் ‘எல்லா இனத்தைச் சேர்ந்த, பல மொழியைப் பேசக்கூடிய, எண்ணிக்கையில் அடங்காத மக்கள் அரியணைக்கும், ஆட்டுக்குட்டுக்கும் இடையில் இருந்து இறைவனை வாழ்த்திக் கொண்டிருந்தார்கள்’ என்று வாசிக்க கேட்டோம் . இவர்கள் எல்லாம்  யார்?. இவர்கள் வேறு யாருமல்ல, இயேசுவை அவரின் இறையாட்சி விழுமியங்களை  தங்கள் வாழ்வில் பிரதிபலித்தவர்கள்.
இவர்களைப் போன்று இறைவனின் திருமுன் நிற்பததற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பதற்கான பதிலைதான் இன்றைய நற்செய்தி வாசகத்திலே வாசிக்க கேட்டோம் . 

ஆண்டவர் இயேசு தந்த மலைப்பொழிவை யாராரெல்லாம் தங்களுடைய வாழ்வில் கடைப்பிடித்து வருகிறார்களோ, அவர்களே இறைவன் தரும் விண்ணரசை உரிமைச் சொத்தாகப் பெறமுடியும். புனிதர்களாக மாறமுடியும். ஆலயத்தில் இருக்கின்ற புனிதர்களின் ஓவியங்களும், சிருபங்களும் வெறும் பார்வைக்கானவை அல்ல, வாழ்க்கை பாடத்தை கற்பிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளவை.

எளிய உள்ளத்தோராய், 
தூய இதயத்தோராய், 
நீதியின்மீது தாகமுடையோராய்,
அமைதிக்காக உழைப்போராய்,
கனிவுடையோறாய், 
நீதிக்காக துன்பங்களை அனுபவிப்பவராய், 
இன்னும் பல்வேறு இறையாட்சியின் விழுமியங்களின்படி வாழுகின்றபோது இறைவன் தரும்  விண்ணரசில் நாம் புனிதர்களாக எப்போதும் விளங்க முடியும் என்பதில்  எந்தவித மாற்றுக் கருத்து இல்லை.

நாம் நமது அன்றாட வாழ்வில் புனிதர்களை போல  இயேசுவின் போதனைகளின் படி வாழ்கின்றோமா?  என்று சிந்தித்துப் பார்க்க நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம்.

மண்ணில் மனிதனாக மலர்ந்து புனிதனாக உயர்ந்து நிற்கின்ற ஒவ்வொரு புனிதர்களின் வாழ்வும் நாமும் புனிதர்களாக மாறிட வழிகாட்டுகின்றன. இறைவன் காட்டுகின்ற பாதையில் பயணம் செய்து மனித நிலையிலிருந்து புனித நிலைக்கு நம்மை தகுதியாக்கிக் கொள்ளும் வகையில் நமது செயல்கள் அமைந்திட, நம் செயல்களால் இறைவனை இச்சமூகத்தில் பிரதிபலித்திட  இறைவனது அருளை வேண்டி இணைந்து தொடர்ந்து ஜெபிப்போம் 

சனி, 30 அக்டோபர், 2021

அன்பு செய்து வாழ்வதே நம் இலக்கு ...(31.10.2021)

அன்பு செய்து வாழ்வதே நம் இலக்கு ...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பத்தில் - குழந்தை
இருபதில்- இளைஞன் 
முப்பதில் - முறுக்கு 
நாற்பதில் - பொறுப்பு 
ஐம்பதில் - ஆசை 
அறுபதில் - ஓய்வு 
எழுவதில் - ஏக்கம் 
என்பதில் - எதிர்பார்ப்பு 
தொன்னூறில் - நடுக்கம் 
நூறில் - அடக்கம் 

இவ்வாறு பத்து பத்தாக மனித வாழ்வை குறித்து பார்க்கலாம். 
10 வயது வரை குழந்தையாக கருதப்படுகின்ற நாம். இருபது வயதை தொடுகின்ற போது இளைஞனாக பார்க்கப்படுகிறோம். 
30 வயதில் எதையும் சாதிக்க வேண்டும் என்ற முறுக்கேறிய பருவத்தில் இருக்கின்றோம். 
40 வயதில் இன்னும் சிறிது காலமே இருக்கிறது அதற்குள் நமது பொறுப்புகளை எல்லாம் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பயணிக்கின்றோம். 50 வயதில் ஆசைப்படுகின்றோம். எப்படியாவது வீடு கட்டி விட வேண்டும். குழந்தைகளுக்கு திருமணம் முடித்து விட வேண்டும் என்றவாறு ஆசைப்படுகிறோம். 
60 வயதில் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஓய்வு தரப்படுகிறது. 
70 வயதில் ஏங்குகிறோம். நன்றாக இருந்த போது இதை செய்திருக்கலாம். அதை செய்திருக்கலாம். இதை இப்படி செய்திருக்கலாம். அப்படி செய்திருக்கலாம் என்றவாறு ஏக்கங்களின் அடிப்படையில் நகர்கின்றோம். 
80 வயதைத் தொடும்போது அடுத்தவரின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.
90 வயதில் உடல் முழுவதும் நடுக்கத்தோடு நகர்கின்றோம்.
100 வயதில் அடக்கம் செய்யப்படுகின்றார்.

இவ்வாறு வாழ்க்கையை பத்து பத்தாக புகைப்பார்கள் ஆனால் என்று அறுபதைத் தொடுவதே அதிசயமாக பார்க்கப்படுகின்ற நிலை தொடர்கின்றது.

இந்த மண்ணுலக வாழ்வில் மனிதனாக பிறந்த நாம் ஒவ்வொருவரும் கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்ட இருக்கின்றோம். உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டுள்ள நாம் மற்றவரை கடவுளின் உருவமாகவும் சாயலாகவும் கருத்தை ஒருவர் மற்றவரை அன்பு செய்து ஒருவர் மற்றவர் நலனில் அக்கறை காட்டக் கூடிய மனிதர்களால் வாழ இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு தருகின்றன.

இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் இரண்டு கட்டளைகள் தரப்படுகின்றன. 
ஒன்று இறைவனை அன்பு செய்வது. 
மற்றொன்று அடுத்து இருப்பவரை அன்பு செய்வது. 

நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் நிமிர்த்தமாக கடவுளை அன்பு செய்வது என்பது நம்மில் எப்போதும் வேரூன்றி இருக்கின்றது. ஆனால் அடுத்தவரை அன்பு செய்வதில்தான் பல சிக்கல்களை நாம் சந்திக்கின்றோம். 

அனைவரும் ஆண்டவரின் பார்வையில் விலையேறப் பெற்றவர்களாய் இருக்கின்றபோதும், நாம் நம் அருகில் இருக்கின்ற அடுத்தவரை அவர் இருப்பது போலவே ஏற்றுக் கொள்வதற்கும், அன்பு செய்வதற்கு பதிலாக பல நேரங்களில் நமது விருப்பங்களின் அடிப்படையில் அவர்கள் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாய் செயல்படுகின்றோம். நமது விருப்பப்படி அவர்கள் இல்லை என்றால் அவர்களை ஏற்றுக் கொள்ள தயங்குகின்றோம்.

உண்மையான அன்பு என்பது அடுத்தவரை அவர் இருப்பது போல ஏற்றுக்கொள்வதாகும். அதிலும் குறிப்பாக அடுத்தவரை அன்பு செய்வது குறித்து ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறுகின்ற போது உன்னை நீ அன்பு செய்வது போல உனக்கு அடுத்திருப்பவர் அன்பு செய்யுங்கள் என்கிறார். 

நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் நமக்கு எதிராக யாரும் தீங்கு நினைக்க கூடாது என எண்ணுகிறோம். நாம் வாழ்வில் இன்னல்களையும், இக்கட்டான  சூழ்நிலைகளையும் யாரும் நமக்கு பரிசாக தந்து விடக் கூடாது என எண்ணுகிறோம். அதே எண்ணம் நம்மிடமும் இருக்க வேண்டும். அதே எண்ணத்தோடு அடுத்தவரையும் நாம் நோக்க வேண்டும். இதையே இறைவன் இன்றைய நற்செய்தி வாசகங்கள் வழியாக நமக்கு உணர்த்துகின்றார். 

மனிதர்களாகிய நாம் பல நேரங்களில் அனைவரும் நம்மை அன்பு செய்ய வேண்டும் என எண்ணுகின்றோம். ஆனால் நாம் அனைவரையும் அன்பு செய்கின்றோமா? என்ற கேள்வியை இன்றைய நாளில் நமக்குள்ளாக எழுப்பி பார்ப்போம். 

இறைவன் படைத்த இந்த அழகிய உலகத்தில் ஒருவர் மற்றவரை அவர்கள் இருப்பது போலவே ஏற்றுக்கொண்டு, எல்லா நேரத்திலும் அவர்களோடு  இன்ப, துன்பங்களில் பங்கெடுக்கக் கூடியவர்களாக வாழ வேண்டுமென்பதுதான் இறைவன் நமக்குத் தருகின்ற செய்தி. இறைவன் தருகின்ற செய்திக்கு செவி கொடுத்து, நாம் நமது வாழ்வில் நம் அருகில் இருக்கக்கூடியவர்களை நமது சுய விருப்பு, வெறுப்புகளை எல்லாம் புறம்தள்ளி இம்மண்ணில் வாழுகின்ற காலத்தில் அவர்கள் அனைவரையும் அன்பு செய்யக்கடியவர்களாக வாழ இறைவனது அருளை இன்றைய நாளில் இணைந்து வேவேண்டுவோம்...

வெள்ளி, 29 அக்டோபர், 2021

முதன்மையான இடம் பெறுவதா? தரப்படுவதா? (30.10.2021)

முதன்மையான இடம் பெறுவதா? தரப்படுவதா? 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

வாழ்வில் எந்த நிலையில் இருந்தாலும் முன்னிலை என்பது அது எனக்கானதாகத் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பல நேரங்களில் பல இடங்களில் முதன்மையான இடத்தை நோக்கி பயணிக்க கூடிய சராசரி மனிதர்கள் நாமும் ஒருவராக தான் பல சூழல்களில் திகழ்கின்றோம். ஆனால் இயேசு கிறிஸ்து முதன்மையான இடம் நாம் தேடிப் பெறுவதல்ல தானாக நமக்கு தரப்பட வேண்டும்  என்பதை எடுத்துரைக்கிறார். 
இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது சென்ற இடமெல்லாம் நன்மையை செய்தால் அவர் பாராட்டையும் புகழையும் எதிர்பார்த்து எதையும் செய்யவில்லை மாறாக மனிதநேயத்தை மனதில்கொண்டு எப்போதும் நல்ல செயல்களை முன்னெடுத்தவர் ஆகிவிட்டார் எனவேதான்முதன்மையான இடம் என்பது இயேசுவைத் தேடி வந்தது.

நமது காலத்தில் வாழ்ந்து மறைந்து புனிதராக என்று திரு அவையால் நினைவுகூரப்பட்டு கொண்டிருக்கக்கூடிய புனித அன்னை தெரசா தனது வாழ்வில் முதன்மையான இடத்தை தேடி செல்லவில்லை மாறாக கடைநிலையில் இருந்த கவனிப்பாரற்றுக் கிடந்த ஏழை எளிய வரை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டார் அதன் விளைவு முதன்மையான இடம் அவரைத் தேடி வந்தது என்பதை நாம் அறிவோம். 



மற்றவர் பார்வைக்காகவும், மற்றவர் முன்பாக புகழ் பெறவேண்டும் என்ற எண்ணத்தோடும் முதன்மையான இடங்களை நோக்கிச் சொல்வதைவிட ஆண்டவரின் பார்வையில் முதன்மையான இடத்தைப் பெற தகுதி பெற்றவர்களாக நாம் விளங்க வேண்டும் என்ற மையச் சிந்தனையை இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு தருகின்றன.

ஆண்டவரின் பார்வையில் முதன்மையான இடத்தினைப் பெற நம்மை தகுதி பெற்றவர்களாக மாற்றிக்கொள்ள இறைவனது அருளையும்,  தூய ஆவியானவரின் துணையையும் வேண்டி இன்றைய நாள் இத்திருப்பலியில் இணைந்து ஜெபிப்போம் .

வியாழன், 28 அக்டோபர், 2021

நன்மை செய்து வாழ்வோம் ...29.10.2021



நன்மை செய்து வாழ்வோம் ...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
மனிதர்களாகிய நாம் செய்கின்ற அனைத்து விதமான செயல்களுக்கும் இரண்டு விதமான சாட்சிகள் உண்டு.
 ஒன்று இறைவன்,
இரண்டாவது நமது மனசாட்சி 
இந்த இரண்டு சாட்சிகள் தான் நாம் நமது வாழ்வில் எப்போதும் நேர்மையாகவும், காலம், நேரம், இடம் இவைகளை காரணம் காட்டி நல்லது செய்வதை தள்ளிப் போடாது எப்போதும் அடுத்தவருக்கு நலமான நல்ல பணிகளை முன்னெடுக்க கூடியவர்களாக நம்மை வாழ வைக்கின்றன.

மனிதர்களாகிய நம் ஒவ்வொருவருடைய மனதிற்குள்ளும் நன்மைகளும், தீமைகளும் நிறைந்திரக்கின்றன. ஒருவரின் பார்வையில் சரி எனப்படுவது மற்றவரின் பார்வையில் தவறாகப் படுகிறது. ஒருவரின் பார்வையில் தவறு எனப்படுவது மற்றவர்களின் பார்வையில் சரி எனப்படுகிறது. எப்போதும் எல்லார் பார்வையும் ஒரே கோணத்தில் இருப்பதில்லை காரணம் மனிதர்களாகிய நாம்  எண்ணங்களால்  அனுபவங்களால் மாறுபட்டு இருக்கின்றோம்.

மாறுபட்ட நிலையில் இருந்தாலும் நமது மனதிற்குள் எப்போதும் அடுத்தவருக்கு  நன்மைகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வேரூன்றி  காணப்பட வேண்டும்.

 இயேசு தனது வாழ்வில் எப்போதும் நன்மை செய்யக் கூடிய நபராக இருந்தார்.  இன்று கூட நற்செய்தி வாசகத்தில் நீர்க்கோவை நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணிக்கு ஓய்வுநாளில் இயேசு குணம் தருவதை நாம் வாசிக்க கேட்டோம்.  நன்மை செய்வதற்கு நேரம் காலம் வரவேண்டும் என காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பதைக் கொண்டு எல்லா நேரத்திலும் நன்மை செய்து நம்மால் வாழ முடியும். இத்தகைய வாழ்வை வாழவே இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.  நமக்குள் இருந்து செயலாற்றும் தூய ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்து கடவுளுக்கும் மனசாட்சிக்கும் ஏற்புடைய வகையில் ஒவ்வொரு நாளும் இயேசுவைப் போல நன்மை செய்து வாழ இன்றைய நாளில் தொடர்ந்து வேண்டுவோம். 

புதன், 27 அக்டோபர், 2021

திருத்தூதர்களின் பாதையில் பயணிக்க ...(28.10.2021)

திருத்தூதர்களின் பாதையில் பயணிக்க ...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
இன்று தாய்த்திரு அவையாக இணைந்து நாம் அனைவரும் திருத்தூதர்களான சீமோன், யூதா ஆகியோரின் விழாவினை சிறப்பிக்கின்றோம்.

இயேசுவைப் பின்தொடர்ந்த அனைத்து சீடர்களும் போற்றுதலுக்கும், மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவர்கள். ஆண்டவரின் வார்த்தைகளை உலகெங்கும் சென்று பறைசாற்றியவர்கள் இவர்கள்.
 மாற்கு நற்செய்தி 16 ஆம் அதிகாரம் 15 ஆம் வசனத்தில் குறிப்பிடுவதைப் போல "படைப்பிற்கு எல்லாம் சென்று நற்செய்தியை பறைசாற்றுங்கள்" என்ற வார்த்தையை வாழ்வாக்கியவர்கள். அவர்களுள் இருவரான திருத்தூதர் சீமான், திருத்தூதர் யூதா இவர்களை இன்று நாம் சிறப்பாக நினைவு கூறுகின்றோம்.

யார் இந்த யூதா? என்று பார்க்கின்றபோது...

பன்னிரு சீடர்களில் ஒருவரானவர் இந்த யூதா... தொடக்கத்தில் யூதா என்ற பெயருக்கும் யூதாஸ்காரியோத்து என்ற பெயருக்கும் இடையே பல புரிதல் மோதல்கள் ஏற்பட்டு, பலர் இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் இஸ்காரியோத்தையும்  யூதாவையும் ஒன்றாகக் கருதினார்கள். ஆனால் இவர்கள் ஒன்றல்ல வெவ்வேறானவர்கள். எனவேதான் யூதா என்ற பெயருக்கு பின்னால் ததேயு என்ற பெயர் இணைக்கப்பட்டது.

யூதா ததேயு  என்றால் அன்பானவர், துணிவுமிக்கவர், ஆற்றல் கொண்டவர் என்ற அர்த்தங்கள் உண்டு. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இறப்பு உயிர்ப்பு விண்ணேற்புக்கு பிறகாக, அஞ்சி நடுங்கி வாழ்ந்து கொண்டிருந்த சீடர்கள் தூய ஆவியாரின் தூண்டுதலால் ஆற்றல் பெற்றவர்களாக, படைப்பு எல்லாம் நற்செய்தியை பறைசாற்றும் பணியை மேற்கொண்டார்கள். அப்போது யூதேயா, சமாரியா, மெசபத்தோனியா போன்ற பகுதிகளில் இறைவனது நற்செய்திப் பணியை ஆற்றியவர் இன்று நாம் நினைவு கூறுகின்ற இந்த யூதா ததேயு அவர்கள்.

மத்தேயு நற்செய்தி 13: 15 வசனங்களில் இயேசுவைக் குறித்து  இவருடைய சகோதரர் யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா அல்லவா ? என்ற வார்த்தைகளின் அடிப்படையில் இவர் இயேசுவின் சகோதரராக அடையாளம் காட்டப்பட்டவர்.  இயேசுவின் நெருங்கிய உறவினர்களில் ஒருவராக கருதப்பட்டவர்.

 இந்த யூதா ததேயு அவர்கள் எழுதிய கடிதம் விவிலியத்தில் இடம்பெற்றிருக்கின்றது. அக்கடிதத்தில் அவர் தன்னை இயேசு கிறிஸ்துவின் பணியாளன் என குறிப்பிடுகிறார். இவ்வார்த்தைகள் இவர் கொண்டிருந்த தாழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன.
வெறும் 25 வசனங்களை மட்டுமே கொண்ட இந்த கடிதத்தில் இவர் தன்னை பணியாளன் என்றும், போலி இறைவாக்கினர்களின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்காதீர்கள் என்பதை ஆழமாகவும், தூய ஆவியாரின் துணையோடு வேண்டுதல் செய்யுங்கள் எனவும் இறையாச்சிக்கான பாதையை தெளிவுபடுத்தி காட்டியவர். இவரைத்தான் இன்றைய நாளில் நாம் நினைவு கூறுகின்றோம்.

இச்சமயம் இன்றைய நாளில் நினைவு கூறப்பட கூடிய மற்றொரு புனிதர் திருத்தூதர் சீமோன். இவர் விவிலியத்தில் தீவிரவாதியாய் இருந்த சீமோன் என அடையாளம் காட்டப்படுகிறார். எப்படி இன்று நாம் வாழும் சமூகத்தில் அநீதியை இழக்கக்கூடிய ஆட்சியாளர்களை எதிர்த்து குரல் எழுப்புகின்ற போது நாம் சமூக விரோதிகள் என முத்திரை குத்தப்படும் நிகழ்வு அரங்கேறுகிறதோ, அதுபோல அன்றைய காலகட்டத்தில் உரோமை  ஆட்சி அதிகாரத்தை எதிர்த்த ஒவ்வொருவரும் தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டார்கள். அவர்களுள்  ஒருவராகத்தான் இந்த சீமோனும் கருதப்பட்டார்  என்பது வரலாறு நமக்கு கற்பிக்கின்ற பாடமாக உள்ளது.

இயேசுவை பின்பற்றிய ஒவ்வொருவரும் தொடக்கத்தில்  ஏதோ ஒரு நோக்கத்திற்காக அவரை பின்தொடர்ந்தாவர்கள். 

சிலர் இவர் உரோமை அரசை எதிர்த்துப் போராடி நமக்கு உரிமையை பெற்றுத் தருவார் என்ற எண்ணத்தோடு பயணித்தார்கள். 
சிலர் இவர் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் பொழுது பதவியில் நாம் அமர வேண்டும் என்ற நோக்கத்தோடு பயணம் செய்தார்கள். 
சிலர் தங்களுக்குள் முதன்மையானவராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பயணம் செய்தார்கள். 

இயேசுவைப் பின்தொடர்ந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான எண்ணங்களை கொண்டு இருந்தார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவின் இறப்பு, உயிர்ப்பு,  விண்ணேற்றம் அவர்களுடைய எண்ணங்களை எல்லாம் மாற்றியமைத்தது. தங்களை முன்னிறுத்தி அவரை பின்தொடர்ந்து வந்த அத்தனை சீடர்களும் இயேசுவை முன்னிறுத்திய நற்செய்திப் பணியை ஆற்றும் நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளர்களாக மாறிப் போனார்கள் என்பது தான் வரலாறு நமக்கு கற்பிக்கின்ற பாடமாக உள்ளது.

இன்று நாம் நினைவு கூறுகின்ற இந்த இரண்டு திருத்தூதர்களின் வாழ்க்கையும் இதையே  நமக்கு கற்பிக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் குறிப்பிடப்படுவது போல கிறிஸ்துவை மூலைக்கல்லாக  கொண்டு கட்டப்பட்ட கட்டிடங்கள் நாம். நமது அடித்தளம் இடப்பட்டிருப்பதாக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மேல் என்பதை மனதில் நிறுத்தி,  அன்று இயேசுவின்  சீடர்கள் செய்தது போலவே நாமும் நமது வாழ்வில் நம்பிக்கையோடு நற்செய்தியை எடுத்துரைக்கும் நல்ல பணியாளர்களாக மாறிட இன்றைய நாளில் அழைப்பு தரப்படுகிறது.
 நற்செய்தியை அறிவிப்பது என்பது வெறும் வார்த்தை அல்ல, மாறாக செயலில்  வெளிப்பட வேண்டும். வார்த்தையும் வாழ்வும் இணைந்து போகின்ற போதுதான் அது அர்த்தமுள்ளதாக மாறுகிறது. திருத்தூதர்களின் வாழ்வும், வார்த்தையும்  இணைந்து இருந்தது எனவேதான் திருத்தூதர்கள் தங்கள் வாழ்வில் இறைவனுக்கு சாட்சியம் புரியக்கடிய வகையில் தங்கள் இன்னுயிரையும் இறைவனுக்காக தியாகம் செய்ய முன்வந்தார்கள்.... 

இந்த திருத்தூதர்களின் வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிந்து கொண்டு அவர் காட்டுகின்ற  பாதையில் பயணம் செய்கின்ற நாமும் நமது வாழ்வில் நல்லதொரு நற்செய்தி பணியாளர்களாக, எடுத்துக்காட்டான வாழ்வு வாழக் கூடியவர்களாக மாறி திருத்தூதர்களின் பாதையில் பயணிக்க  இறைவன் தாமே நம்மை வழிநடத்த வேண்டும் என இன்றைய நாளில் இணைந்து தொடர்ந்து வேண்டுவோம்.

செவ்வாய், 26 அக்டோபர், 2021

துணையாளரை கண்டுகொண்டு துணிவு பெற்று வாழ்வோம்.(27.10.2021)

துணையாளரை கண்டுகொண்டு துணிவு பெற்று வாழ்வோம்.

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
துணையாளரை கண்டுகொண்டு துணிவு பெற்று வாழ்வோம்.

பரந்து விரிந்த இந்த அழகிய உலகத்தில் எப்போதும் நம்மோடு இருப்பதற்கு இறைவன் தந்த ஒரு துணையாளர் தூய ஆவியார்


 ″ உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். யோவான் 14:16_17


நம்மோடு இருக்கின்ற துணையாளரான இந்தத் தூய ஆவியானவர். நாம் நமது வாழ்வில் மேற்கொள்கின்ற அனைத்துவிதமான முயற்சிகளிலும் நம்முடன் பக்கபலமாக இருப்பவர். 

இவர் நமக்காக இறைவனிடத்தில் பரிந்து பேசக்கூடியவர். நம்மையெல்லாம் முன்குறித்து அழைத்து வந்தவர். அழைத்த நம்மை ஏற்புடையவராக மாற்றுபவர். இந்த தூய ஆவியானவர் எப்போதும் நம்முடன் இருந்து நம் இன்ப துன்பங்களில் நம்மோடு உடன் வருகின்றார். இந்த  தூய ஆவியாரின் துணையை உணர்ந்துகொள்ள இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.


இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது நகர் நகராக, ஊர் ஊராகச் சென்று பலவற்றைக் கற்பித்தார். இயேசு கற்பித்தவற்றையெல்லாம் அவரைப் பின்பற்றிய சீடர்கள் தங்கள் வாழ்வாக மாற்றிக் கொள்வதற்கு தூய ஆவியானவர் அவர்களுக்கு தூண்டுகோலாய் இருந்து வழி நடத்தினார்.  அதே தூய ஆவியார் இன்று நம்மையும் வழிநடத்துகிறார். 

என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.” (யோவான் 14:26)

இயேசு கற்பித்தவற்றையெல்லாம் நாம் நமது வாழ்வில் செயலாக மாற்றி, அவரை பின்பற்ற வேண்டும் என்பதே நம் அனைவரின் எண்ணமாக இருக்க வேண்டும். இந்த எண்ணத்தை நமக்குள் உணர்த்துபவர் இந்தத் தூய ஆவியார். இந்த தூய ஆவியாரின் துணை கொண்டு இந்த சமூகத்தில் இயேசுவைப் போல வாழவும்,  இயேசு கற்பித்த வாழ்க்கை நெறிகளுக்கு ஏற்ப நமது வாழ்வை மாற்றிக் கொள்ளவும் இன்றைய நாள் வாசகங்கள் வழியாக நமக்கு அழைப்பு தரப்படுகின்றது.

அழைத்த இறைவன் தம் தூய ஆவியார் வழியாக நம்மை தன் பணிக்கு  ஏற்புடையவராக மாற்றுவார் என்ற ஆழமான  நம்பிக்கையோடு  இன்றைய நாளில் இறைவனது அருளை இணைந்து வேண்டுவோம்.

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

இறையாட்சி மலர்வது நம் செயல்களால் தான் ...(26.10.2021)

இறையாட்சி மலர்வது நம் செயல்களால் தான் ...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைய முதல் வாசகம் எதிர்நோக்கி மையப்படுத்துகிறது நற்செய்தி வாசகம் இறையாட்சியை மையப்படுத்துகிறது இறையாட்சி மலரும் என்ற எதிர் நோக்கோடு இந்த சமூகத்தில் நாம் நமது செயல்களை அமைத்துக் கொள்ள இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.

இறையாட்சி என்பது இறைவனது விருப்பத்தின்படி இந்த உலகத்தில் அனைவரது வாழ்விலும் அன்பு, அமைதி, நீதி, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம் மேலோங்கி நிற்கின்ற இறைவனது ஆட்சியை குறிக்கின்றது. இறைவனது ஆட்சியை இவ்வுலகத்தில் நிலைநாட்டிட இறைவன் தான் வர வேண்டும் என்பது அல்ல மனிதர்களாகிய நம்மால் இந்த இறையாட்சியை இம்மண்ணில் மலரச் செய்ய முடியும் என்பதைத்தான் இன்றைய நாள் வாசகங்கள் எடுத்துரைக்கின்றன நாம் செய்கின்ற சின்னஞ்சிறு நல்ல செயல்கள் கூட இறையாட்சியின் விதைகள் ஆகவே கருதப்படுகின்றன.

இதற்குச் சான்றாக நாம் குழந்தை இயேசுவின் புனித தெரசாவைக் கூறலாம்.நான்கு சுவற்றுக்குள் தான் இருந்த நிலையிலேயே தன்னுடைய சின்னச் சின்ன செயல்களால் இயேசு விதைக்க விரும்பிய இறையாட்சிக்கு அவர் சான்றானார். அவருடைய வாழ்வு இன்று உலகம் முழுதும் அறியப்பட்டு இறையாட்சியை அமைக்க விரும்புவோருக்கு  வழிகாட்டுதலாக உள்ளது.



இறைவன் படைத்த இந்த அழகிய உலகத்தில் நாம் நமது செயல்கள் மூலமாக இறையாட்சி மண்ணில் மலர உழைத்திட வேண்டும். மனிதர்களால் இது சாத்தியம் அல்ல என எண்ணிவிட முடியாது. இயேசு இந்த மண்ணில் மனிதனாய் வாழ்ந்த போது இறையாட்சியின் மதிப்பீடுகளை தன் வாழ்வின் தன் செயல்கள் மூலமாக வெளிக்காட்டி நமக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றார். 
தொடக்க நூல் 1:28 கூறுகிறது. "கடவுள் மனிதரைத் தம் உருவிலும் சாயலிலும் படைத்தார் " என்று. கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டுள்ள நாம் இந்த இயேசுவைப் பின்பற்றி நாமும் அவரைப் போல இந்த சமூகத்தில் இறையாட்சியின் மதிப்பீடுகளை மலர செய்வதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும்.

சிறிய கடுகு விதை பெரிய மரமாகி பலருக்கு பயனுள்ளதாக இருப்பதுபபோல, சிறிதளவு புளிப்பு மாவு பல மாவுகளை புளிப்பேற்றுவது போல நாம் செய்கின்ற சின்னஞ்சிறு செயல்கள் எல்லாம் இறையாட்சி இம்மண்ணில் மலரச் செய்யும் என்ற எதிர் நோக்கோடுதொடர்ந்திட வேண்டும்.

"ஒரு செயல் இருபதாயிரம் விற்று பேச்சுக்களை விட சிறந்தது" என்கிறார் விவேகானந்தர்.

இறையாட்சியின் மதிப்பீடுகளை மனதில் கொண்டு நாம் செய்கின்ற சிறு செயல் கூட நமக்கு பின் வருபவர்களுக்கும் நம்மைப் பார்த்து இச்சமூகத்தில் வளர்ப்பவர்களுக்கு  முன் உதாரணமாக அமைந்திட வேண்டும்.

இறைவன் இயேசுவை பின்பற்றுகின்ற நமது வாழ்வில் இறையாட்சியின் மதிப்பீடுகளான அன்பு, அமைதி, நீதி, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம் மேலோங்க கூடிய வகையில் நமது செயல்களை அமைத்துக் கொண்டு ஆண்டவர் இயேசுவின் பாதையில் பயணம் செய்திட இறைவன் இந்த புதிய நாளை நமக்குத் தந்திருக்கிறார். இந்த புதிய நாளில் இறையாட்சி இம்மண்ணில் மலர்வதற்கான விதைகளை நமது செயல்கள் வழியாக விதைத்திட இறைவனது அருளை வேண்டி இணைந்து தொடர்ந்து ஜெபிப்போம்.

தூய ஆவியாரால் இயக்கப்படும் மக்களாவோம்...(25.10.2021)

தூய ஆவியாரால் இயக்கப்படும் மக்களாவோம்...


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ..
கடவுளின் ஆவியால் இயக்கப்படுபவர்கள் கடவுளின் மக்கள்....

மண்ணில் வாழும் மனிதர்கள் அனைவரின் உள்ளத்திலும் நிறைந்து இருப்பவர் தூய ஆவியார்... இந்தத் தூய ஆவியானவர் நமக்குள் இருந்து நமக்கு நன்மை தீமைகளை எடுத்துரைத்து சரியான பாதையில் பயணம் செய்ய, கடவுளின் மக்களாக வாழ்வதற்கு நமக்கு வழிகாட்ட  கூடியவராக இருக்கின்றர்.

இவர் காட்டுகின்ற வழிகளைப் பின்பற்றி நமக்குள் இருக்கும் தூய ஆவியானவரின் குரலுக்கு செவிமடுத்து நாம் இந்த சமூகத்தில் பயணிக்கின்ற போது ... பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையை கொண்டவர்களாய் கடவுளை அப்பா என அழைக்கின்ற  உரிமை பெற்றவர்களாக மாறுகிறோம் ...இதையே இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கின்றது.


கடவுளின் பிள்ளைகள் என்று உரிமை பெற்றுக் கொண்ட நாம் அனைவரும் நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் இயேசுவைப் போல செயல் ஆற்றிட அழைக்கப்படுகின்றோம்.  

இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது கிடைக்கின்ற வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி கடவுள் விரும்பும் மக்களாக நாம் வாழ்ந்திட பல பாடங்களை நமக்கு தம் வாழ்வு வழியாக கற்பித்தார். அவற்றுள் ஒன்றுதான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வு. 

பல ஆண்டுகளாக  பேய்பிடித்து உடல் உபாதைகளை அனுபவித்து வந்த பெண்மணிக்கு ஆண்டவர் நலம் தருகின்றார் ஆனால் அதைப் ஏற்றுக்கொள்ள இயலாத மறைநூல் அறிஞர்கள் மக்களைச் சாடுகிறார்கள்.
இயேசுவின் பணிகளை ஏற்றுக்கொள்ள இயலாத பரிசேயரும், சதுசேயரும், மறைநூல் அறிஞர்களும் பல நேரங்களில் இயேசுவின் செயல்களில் குற்றம்சாட்ட கூடியவர்களாய் இயேசுவைத் தொடர்ந்து பின்தொடர்ந்தார்கள்.  ஆனால் இயேசு கிறிஸ்து இவர்களை பெரிய தடையாக எண்ணாது, தொடர்ந்து  எப்போதும் தான் செய்யக்கூடிய நல்ல பணிகளை முன்னெடுத்தவர் பயணித்துக் கொண்டிருந்தார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகங்கள் வழியாக நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகின்ற நாம் நமக்குள் இருந்த செயலாற்றுகின்றது தூய ஆவியாரின் தூண்டுதலை உணர்ந்தவர்களாய் எப்போதும் இறைவன் இயேசுவைப் போலவே நல்ல பணிகளை முன்னெடுத்த இந்த சமூகத்தில் பயணம் செய்ய வேண்டும்.  மனித மனங்களைக் கவர வேண்டும் என்ற வெளிவிடத்தன்மை இல்லாது, நாம் வாழும் சமூகத்தில் உள்ள மனிதர்கள் எல்லாம் நாம் செய்கின்ற நல்ல செயல்களை ஏற்கவேண்டும், முதன்மைப்படுத்த வேண்டும் என எண்ணிக்கொண்டு பயணிக்காது தொடர்ந்து தூய ஆவியாரின் தூண்டுதலால் இயக்கப்படக்கூடிய நல்ல மக்களாக இயேசுவைப் போல இச்சமூகத்தில் வாழவும் நம்மை சார்ந்து இருக்கின்ற உறவுகளை இயேசுவின் பாதையில் தூய ஆவியானவரின் தூண்டுதலால் இயக்கப்பட கூடிய மக்களாக வளர்த்தெடுக்கவும் இறைவன் அருள் தர வேண்டி தொடர்ந்து  ஜெபிப்போம் ...

வெள்ளி, 22 அக்டோபர், 2021

நம்பிக்கையின் மனிதர்களாக பிறந்திட ...(24.10.2021)

நம்பிக்கையின் மனிதர்களாக பிறந்திட ...


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் .


ஒரு காட்டின் ஒரு பகுதியில் இருந்து ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் நடந்து வந்தால்.அதேக் காட்டின் மறுமுனையில் இருந்து சமூகத்தில் நாம் சொல்லுகின்ற அனைத்து விதமான தீமைகளின் ஒட்டுமொத்த உருவமாக ஒரு மனிதன் நடந்து வந்தான். நடுக்காட்டை அடைந்தபோது பேருகால  வேதனையுற்று அந்த பெண்மணி ஒரு மரத்தின் நிழலில் சரிந்து விழுந்தாள். வலியும் வேதனையும் ஒருபுறமிருக்க துடிதுடித்துக் கொண்டிருந்தால் தன்னை காக்க யாரேனும் வரமாட்டார்களா? என்ற எண்ணத்தோடு வழி மேல் விழி வைத்து பார்த்தால் அவள் கண்ணில் பட்டது
 சமூகத்தின் ஒட்டுமொத்த தீமைகளின் உருவமாக கருதப்பட்ட அந்த மனிதன் மட்டுமே. இவரையா நான் காண வேண்டும்? இவரா எனக்கு உதவி செய்ய போகிறார்? என்ற எண்ணம் ஒருபுறம் இருக்க, வலியும் வேதனையும் மறுபுறம் துடி துடித்துக் கொண்டிருந்தாள். அவள் அருகில் வந்து நின்ற அந்த கொடூர மனிதன் தன் இடையில் கட்டியிருந்த வேட்டியை எடுத்து அந்த பெண்ணின் மீது விரித்தான். இரத்தத்தோடும் சதையோடு வெளிவந்த குழந்தையை கையில் ஏந்தினார். தன்னுடைய பாதுகாப்பிற்காகவும், அடுத்தவரை அச்சுறுத்துவதற்காக  தன் இடையில் வைத்திருக்கும் கூரிய கத்தியை எடுத்து தாய்க்கும் சேய்க்கும் இடையேயான தொப்புள் கொடியை துண்டித்தார். அரைமயக்கத்தில் முனகிக்கொண்டிருந்த தாய்க்கு அருகாமையில் இருந்த ஓடையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். பிறந்த குழந்தையின் பசியை தீர்க்க தாயின் மார்பக துணியை விலக்கி குழந்தை உணவு அருந்துவதற்காக  தாயின் மார்பகத்தில் குழந்தையை வைத்தார். இதை எதையும் அவர் இதற்கு முன்பு செய்ததில்லை. ஆனால் அன்று அவர் அதை செய்தார் இந்த கதையை எழுதிய வால்ட் விட்மன் அவர்கள் எழுதிய இந்த கதைக்கு அவர் வைத்த பெயர் ஒரு மனிதன் பிறந்தான் என்பதாகும்.

இறைவன் இயேசுவின் அன்புக்குரியவர்களே பார்வையோடு இருந்து பார்வையை இழந்து போன மனிதன் தான் கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் மீண்டும் பார்வை பெற்று புதிய மனிதனாக இச்சமூகத்தில் பிறப்பதை தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்க கேட்டோம்.

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி அவர் காட்டும் பாதையில் பயன்படுகின்ற  நாம் அனைவரும் நம்பிக்கையோடு இந்த ஆண்டவரை நோக்கி நமது குரலை எழுப்ப வேண்டும்  என்ற சிந்தனைகளை இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு தருகின்றன.

எரிக்கோ நகர் சாலையில் பார்வையிழந்த பர்த்திமேயு அமர்ந்திருந்த போது அவ்வழியே இயேசு  செல்கிறார் என்பதை கேள்விப்பட்டு அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நோக்கி தனது குரலை எழுப்ப கூடியவராக மாறுகிறார்.

 அன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதன் உடல் நலமற்று இருந்தாலோ அல்லது உடல் குறைபாடுகளோடு இருந்தாலோ அது அவர் செய்த பாவத்தின் அடையாளமாகக் கருதப்பட்ட சூழ்நிலை.

 எனவே அவனை அனைவரும் புறம் தள்ளிய சூழலில்  சாலையில் அமர்ந்து இருந்த அந்தப் பார்த்திமேயு தனிமனித  வாழ்விலும் பலவிதமான துன்பங்களை அனுபவித்தவராய் சமூகத்திலிருந்து பலவிதமான  தாக்கங்களை பெற்றவராய்  தெருவோரத்தில் அமர்ந்து இருந்திருக்கலாம் ஆனால்.... இந்த பார்த்திமேயு சமூகத்திலிருந்து பலவிதமான தாக்கங்களையும் தனிமனிதர் இடத்திலிருந்து பலவிதமான இன்னல்களையும் சந்தித்து இருந்தாலும் ஆண்டவரோடு கொண்டிருந்த நம்பிக்கையை இழக்காதவர். 

ஆண்டவர் இயேசுவோடு பயணித்த மனிதர்களை பல வகைகளில் பிரித்துப் பார்க்கலாம். இயேசுவினுடைய சீடர்கள் என்பதால் அவரை பின் தொடர்ந்தவர்கள்.  இவர் எதோ புதுமை செய்யப்போகிறார் வாருங்கள் சென்று பார்ப்போம் என சொல்லி அவரது செயல்களை காண வந்த கூட்டம். இவர் ஏதாவது ஏதாவது ஒரு தவறு செய்வார் ஏதாவது ஒரு வார்த்தை தவறாக பேசுவார் அதை வைத்து இவரை பிடித்து சிறையில் அடைத்து விடலாம் என்ற எண்ணத்தோடு பின் தொடர்ந்து ஒரு கூட்டம்.

 இத்தகைய மனிதர்களுக்கு மத்தியில் தெருவோரத்தில் அமர்ந்து இருந்த பார்த்திமேயு ஆண்டவர் இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டதன் அடிப்படையில் அவர் மீதான ஆழமான நம்பிக்கையை தனக்குள் வளர்த்துக் கொண்டு அந்த ஆண்டவர் செல்லுகின்ற போது அவரை நோக்கி தாவீதின் மகனே எனக்கு இரங்கும் என குரல் உயர்த்துகிறார். பலர் அவரை அடக்க நினைத்த போதும் அவர் தன் குரலை அடக்கி கொள்ளவில்லை. தான் கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில்  இன்னும் அதிகமாக குரல் எழுப்பி  ஆண்டவரை நிறுத்தி தான் கொண்ட இருந்த நம்பிக்கையின் அடிப்படையில அவரிடம் இருந்து தனக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்கிறார்.

நாம் பின்பற்றுகின்ற இந்த ஆண்டவர் நமது குரலை கேட்டு கடந்து செல்பவர் அல்ல. மாறாக நின்று நமக்கு பதில் தரக்கூடியவர். அனுதினமும் பலவிதமான எண்ணங்களோடும் ஏக்கங்களும் ஆண்டவரை நோக்கி வந்து அமர்ந்து ஜெபிக்கின்ற நாம் ஒவ்வொருவருக்கும் என்ன தேவை என்பதை இந்த ஆண்டவர் அரிந்திருக்கின்ரார். நம் தேவைகளை அறிந்த இறைவன் நமக்கு என்ன வேண்டும் என்பதை தேவையான நேரத்தில் தரவல்லவர் ....
இன்றைய முதல் வாசகம் குறிப்பிடுகிறது அழுகையோடு வந்தவர்களை எல்லாம் ஆறுதல் தந்து  நடத்திச் செல்வார் ஆண்டவர் என்று....

அவர்கள் என்னை நோக்கி மன்றாடும் போது அவர்களுக்குப் பதிலளிப்பேன் அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன் அவர்களை தப்புவித்து அவர்களை பெருமைப்படுத்துவேன் என்று திருப்பாடல் 90 :15 நமக்கு அவர் உறுதி அளித்திருக்கிறார்.

நமக்காக நம் பாவங்களுக்காக தன்னையே கையளித்த இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிற நாம் ஒவ்வொருவரும்  அவர் மீது நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கையை இழந்து விடாது பார்வையற்ற பார்த்திமேயு போல நம்பிக்கையோடு பயணித்து பார்வை பெற்ற புதிய மனிதர்களாக இச்சமூகத்தில் பிறந்திட பலருக்கு பார்வை பெற்ற மனிதர்களாக பாதை காட்டிட   ஜெபத்தால் ஆண்டவரோடு இணைந்து வாழ  அருள்வேண்டி தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக ஜெபிப்போம்...

வியாழன், 21 அக்டோபர், 2021

கனிகளால் கடவுளோடு இணைந்திடுவோம் ... (23.10.2021)

கனிகளால் கடவுளோடு இணைந்திடுவோம் ...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 ஆபிரகாம் லிங்கன் தன்னுடைய வாழ்வில் உயரிய இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தார்.அவர் அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்ற போது அவருடைய நண்பர் அவரிடம் சொன்னாராம். கடவுள் உன்னோடு இருக்கிறார் எனவே தான் ஒவ்வொரு நாளும் உனது புகழ்  ஓங்கிக் கொண்டே செல்கிறது என்றாராம். அதற்கு ஆபிரகாம் லிங்கன் தன் நண்பரிடம் கூறினாராம். கடவுள் என்னோடு இருக்கிறார் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. ஆனால் நான் அவரோடு இருக்கின்றேனா? நான் அவரோடு இணைந்து இருக்கின்றனா? என்பதுதான் என்னுள் இருக்கின்ற கேள்வியாக உள்ளது என்றாராம்.



மனிதர்களாகிய நாம் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் இறைவன் என்றும் நம்மோடு இருக்கின்றார். நம்மோடு உடன் பயணிக்கின்றார்.  பல நேரங்களில்  இந்த ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்பதை நாம் உணர்வதில்லை. ஆனால் இன்றைய  முதல் வாசகம்  இந்த ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்பதை உணர்ந்து, அவரோடு இணைந்து வாழ அழைக்கிறது. அவரோடு இணைந்து வாழும்போது தூய ஆவியார் நம்முள் இருந்து நம்முள் நல்லதொரு மாற்றத்தை உருவாக்கி இந்த சமூகத்தில் நலமான பணிகளைச் செய்யக்கூடிய நபராக நம்மை மாற்றுகிறார். இதையே இன்றைய நற்செய்தி வாசகம் வலியுறுத்துகிறது.

ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மிடம் எதிர்பார்ப்பது உண்மையான நல்லதொரு மனமாற்றத்தையே... ஒரு மனமாற்றம் பல மனங்களை மாற்றும் என கூறுவார்கள்.

 பரபரப்பான  இந்த உலகத்தில் பல பணிகளுக்கு மத்தியில் ஏதோ வாடிக்கையாக ஆண்டவரை தேடக்கூடிய கூடிய மக்களாக நாம் இல்லாது, எல்லா நேரத்திலும் சமூகத்திற்கான நலமான பணிகளை முன்னெடுக்க கூடியவர்களாய் மாறிட மனமாற்றம் பெற்றிட இன்றைய வாசகங்கள் அழைப்பு தருகின்றன.


அன்று தவறான வழியில் வாழ்ந்த மக்களுக்கு யோனாவின் இறைவாக்கு மனமாற்றத்தை மக்கள் பெற்றுக் கொள்ள வழிவகை செய்தது. அதுபோலவே  தவறான வழிமுறைகளில் தங்கள் வாழ்வை நகர்த்திக் கொண்டிருந்த தொடக்ககால திருஅவையில் திருத்தூதர் பவுலின் இறைவார்த்தைகள் நல்லதொரு மாற்றம் பெற்ற மனிதர்களாக வாழ வழிவகுத்தது. அந்த அடிப்படையில் இன்றைய நாள் நற்செய்தி வாசகம்

இறைவன் கொடுத்துள்ள இந்த புதிய நாளில் நல்ல கனிகளைக் கொடுத்து 
எப்போதும் எல்லா நேரத்திலும் ஆண்டவரோடு இணைந்து இருக்க கூடியவர்களாக வாழக்கூடிய நல்லதொரு மாற்றத்தை நம்முள் விதைத்துக் கொண்டு இந்த சமூகத்தில் பயணம் செய்ய நமக்கு அழைப்பு தருகிறது.

 இறைவன் தருகின்ற அழைப்பை உணர்ந்து கொண்டு, எப்போதும், எல்லா நேரத்திலும், ஆண்டவரோடு இணைந்து  இந்த சமூகத்தில் நலமான பணிகளை முன்னெடுக்க கூடிய இயேசுவின் சீடர்களாக மாறி நல்ல கனிகளை தந்திட  நாம் நல்லதொரு மனமாற்றம் அடைந்திட இறைவனது அருளை இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக ஜெபித்து பெற்றுக்கொள்வோம்.

புதன், 20 அக்டோபர், 2021

தன்னையறிதல் பலவீனத்தை பலமாக மாற்றும் ....(22.10.2021)

தன்னையறிதல் பலவீனத்தை பலமாக மாற்றும் ....

இறைவன் இயேசுவின் அன்புக்குரியவர்களை இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
ஒரு கடலில் மலை இருந்தது. அது கடல் அலையை நோக்கி  கூறியது நான் உறுதியானவன் என் மீது மோதாதே என்று.... ஆனால்  மலையை நோக்கி அலைகள் கூறின.... நாங்கள் மோதி கொண்டுதான் இருப்போம். ஏனென்றால் நாங்கள் பலவீனமானவர்கள் என்று..... சில ஆண்டுகளுக்கு பிறகு அந்தக் கடலில் அலை இருந்தது. ஆனால் மலை இல்லை.

பலவீனமான பலர் ஆண்டவரின் பணியில் பலம் பெற்றவர்களாக மாறியுள்ளார்கள். இதற்கு சிறந்த உதாரணம் இயேசுவின் சீடர்கள். 

இன்றைய முதல் வாசகத்தில் தன்னுடைய நிலையை நன்கு அறிந்த பவுல் தன்னை தான் இருப்பது போல  தன்னால் இயேசு கிறிஸ்துவை அறிந்து கொண்ட மக்களுக்கு வெளிப்படுத்துகிறார்.

நன்மை செய்யும் விருப்பம் என்னிடம் இல்லாமல் இல்லை, அதை செய்யத்தான் முடியவில்லை. நான் விரும்பும் நன்மையை செய்வதில்லை, விரும்பாத தீமையை செய்கின்றேன். நான் விரும்பாததை செய்கின்றேன் என்றால், அதை நானாக செய்யவில்லை எனில் குடிகொண்டிருக்கும் பாவமே செய்கிறது. நான் நன்மை செய்ய விரும்பினாலும், என்னால் தீமை தான் செய்ய முடிகிறது. இத்தகையதொரு செயல்முறையை என்னுள் காண்கின்றேன் என பவுல் தன் நிலையை எடுத்துரைக்கின்றார்.

திருத்தூதர் பவுலின் வாழ்வில் தென்பட்ட  இத்தகைய எண்ண ஓட்டங்கள் நமது வாழ்விலும் பல நேரங்களில் அரங்கேறுகின்றன என்பது நிதர்சனமான உண்மை.  சமூகத்தில் நிகழுகின்ற அநீதியை காணும் போது தட்டி கேட்க வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது, ஆனால் தன் குடும்பத்தை நினைக்கும் பொழுது மனதில் அச்சமும் பயமுமே மேலோங்கி நிற்கிறது. இருப்பதை இல்லாதவரோடு பகிர  வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் இருந்தாலும், நமது எதிர்காலத்தை எண்ணி அந்த எண்ணத்தை புறந்தள்ள கூடியவர்களாக தான் பல நேரங்களில் நாம் நமது பலவீனத்தின் அடிப்படையில் செயலாற்றுகின்றோம்.

இத்தகையதொரு மனப்பான்மையைத் தான் பாவேந்தர் பாரதிதாசன்....

தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு

சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன் சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன்..... என குறிப்பிடுகின்றார்.


இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் நாம் எத்தகைய (எண்ணம் கொண்டவர்களாக) உள்ளம் கொண்டவர்களாக இருக்கின்றோம் என்பதை சுய ஆய்வு செய்து பார்க்க நம்மை அழைக்கின்றன.

உன்னையறிந்தால்.... 

நீ உன்னையறிந்தால் .....

உலகத்தில் போராடலாம்.... 

என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப 

நம்மை பற்றிய ஆழமான அறிவே நம்மைப் போலவே மற்றவரும் என  அடுத்தவரை அறிந்து கொள்வதற்கான வழியாக அமைகிறது. திருத்தூதர் பவுல் தன்னை அறிந்திருந்தார். தன் எண்ண ஓட்டத்தை சீர் தூக்கி பார்த்தார். அதன் விளைவு ஆண்டவர் இயேசுவின்  பாதையில் சிறப்பான சீடராக மாறினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.


இன்று நாமும் நம்மை சுய ஆய்வு செய்து நமது பலவீனங்களுக்கு மத்தியில் நாம் ஆண்டவர் இயேசுவின் சீடர்களாக விளங்கிட அவரது அருளைப் பெற்றிட இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.


நமது செயல்களையும், சிந்தனையையும் சீர்தூக்கி பார்ப்பதன் அடிப்படையில் தேவையற்ற வாதங்கள், தேவையற்ற சண்டைகள், தேவையற்ற சச்சரவுகள், இவைகளையெல்லாம் முளையிலேயே கிள்ளி எரிவதற்கான  ஆற்றலை நாம் பெற்றுக்கொள்ள முடியும். இவைகளை சரிசெய்து கொண்டு நாம் இச்சமூகத்தில் பயணிக்கின்ற போது நலமான நல்ல பணிகளை திருத்தூதர் பவுலைப் போல முன்னெடுத்துச் செல்ல முடியும். 


மண்ணில் வாழுகின்ற நாட்களில் வஞ்சகத்தை மனதில் வளர்த்திக்கொண்டு, உறவுகளை விட்டு பிரிந்து நின்று வாழ்வதைவிட, கருத்து வேறுபாடுகளையும், சண்டை சச்சரவுகளையும் சரி செய்துகொண்டு ஆண்டவர் இயேசுவின் பாதையில் நம்மை முழுமையாக அறிந்தவர்களாய் இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிய கூடியவர்களாக மாறிட இறைவனது அருளை இன்றைய நாளில் தொடர்ந்து வேண்டுவோம்...

 இயேசு கிறிஸ்துவை பின்பற்றிய சீடர்கள் எல்லாம் படித்த மேதைகள் என்று நாம் எண்ணிவிட முடியாது அன்றாட பிழைப்புக்காக கடலில் வலை வீசிக் கொண்டிருந்த மீனவர்கள். 


செவ்வாய், 19 அக்டோபர், 2021

தூய வாழ்வு நிலை வாழ்வுக்கு வழிவகுக்கும்...(21.10.2021)

தூய வாழ்வு நிலை வாழ்வுக்கு வழிவகுக்கும் 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைய நாளில் நாம் வாசிக்கக் கேட்ட நற்செய்தி வாசகம் பல முரண்களை கொண்டதாக நமக்கு தோன்றலாம்...
ஆனால் இன்றைய வாசகங்கள் வாழ்க்கைக்கான உன்னதமான பாடங்களை நமக்கு என்று கற்பிக்கின்றன.

 இன்றைய முதல் வாசகமானது தூய வாழ்வு வாழ நம்மை அழைக்கின்றது. தூய வாழ்வு என்றால் அது நமது சுய விருப்பு, வெறுப்புகளை எல்லாம் புறம்தள்ளி ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை மனதில் இருத்தி எப்போதும் அவரை போல இந்த சமூகத்தில் அடுத்தவர் நலன் பேணும் பணியினை செய்வதாகும். இதன் அடிப்படையில் நமது வாழ்வு அமையும் பொழுது நாம் தூய வாழ்வை பெறுகின்றோம். 

இந்த தூய வாழ்வு நிலை வாழ்வை நமக்கு உரிமையாக்குகிறது. நிலை வாழ்வு என்பது ஆண்டவர் இயேசுவோடு இணைந்த வாழ்வைக் குறிக்கிறது.

இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது அடுத்தவர் நலனை முன்னிறுத்திய பணிகளையே தொடர்ந்து செய்து வந்தார். அவரை பின்தொடர நாமும் இப்பணியைச் செய்யவே அழைக்கப்படுகிறோம்.

சமூகத்தில் எங்கோ யாரோ ஒரு மனிதன் துன்புறுகிறான் என தெரிந்தால் அவன் துன்பத்தில் பங்கெடுக்க கூடியவர்களாக நாம் இருக்க வேண்டுமே தவிர பார்வையாளராக இருக்க கூடாது. பல நேரங்களில் நாம் பல இடங்களில் பார்வையாளர்களாக மட்டுமே இருந்து செல்கிறோம். எந்த ஒரு துன்பமும் தன்னை தீண்டாத வரை அதை தன்னுடைய துன்பம் அல்ல என எண்ணக் கூடியவர்களாக இருக்கின்றோம். ஆனால் நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள். அனைவருடைய இன்ப, துன்பங்களிலும் பங்கெடுக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.
இத்தகைய உண்மையை உணர்ந்தவர்களாய் நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ளும் பொழுது ஆண்டவர் இயேசுவோடு இணைந்த நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள முடியும்.

 ஆனால் நடைமுறை சிக்கல் என்னவென சிந்திக்கின்ற போது.....

நாம் பார்வையாளராக அல்லாது பங்கேற்பாளர்களாக மாறுகின்ற போது நமது வீட்டில் உள்ளவர்கள் கூட நம்மை நிராகரிக்கப்பட்ட கூடிய சூழலை சந்திக்கலாம். ஒரு அநீதி நடக்கிறது எனத் தெரிகின்ற போது, அந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கின்ற போது நம்முடன் இருப்பவர்களே நம்மை பார்த்து....

இது உனக்கு வேண்டாத வேலை என சொல்லலாம். பல நேரங்களில் என்ன சொன்னாலும் கேட்க மாட்டான் என்று சொல்லிவிட்டு நம்மை விட்டு நகர்ந்து செல்பவர்களாக கூட இருக்கலாம்.

 ஆனால் எல்லாச் சூழ்நிலையிலும் நம்மோடு இருப்பவர் இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து. இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை போல நாமும் இந்த சமூகத்தில் இறையாட்சியின் விழுமியங்களான நீதி, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம் இவைகளின் சார்பாக நிற்போம். இவைகளின் சார்பாக நிற்பதால் நாம் பல துன்பங்களை சந்திக்க நேர்ந்தாலும் நம்பிக்கையை இழந்து விடவேண்டாம் நாம் இணைந்திருப்பது ஆண்டவர் இயேசுவோடு. அவர் நம்மை நிலைவாழ்வு நோக்கி அழைத்துச் செல்வார். 

எனவே, நமது வாழ்வை தூய வாழ்வாக மாற்றி, நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொண்டு எப்போதும் ஆண்டவரோடு இணைந்து வாழக்கூடியவர்களாகிட இறைவனது அருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்.

திங்கள், 18 அக்டோபர், 2021

உங்கள் குரல் கேட்கப்படும்....( செபம்) (24.10.2021)

உங்கள் குரல் கேட்கப்படும்....

ஜெபம் என்பது நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் முக்கியமான ஒன்றாக உள்ளது. நாம் நம்மை படைத்த இறைவனுடன் உறவாடவும், அவருடன் பேசவும் ஜெபம் நமக்கு உறுதுணையாக இருக்கிறது. நம்முடைய ஒவ்வொரு தேவையின் போதும், வேதனை மற்றும் சோதனையின் போதும் நம்முடைய குரல் இறைவனை எட்ட வேண்டும் என்றால் அதற்கு அவரை நோக்கி ஜெபிப்பது ஒன்றுதான் வழி.

ஏனெனில் இறைவன் என்றுமே தன்னை நாடுபவர்களுக்கு குரலை கடந்து செல்பவராக அல்ல நம்முடைய குரலைக்கேட்டு நின்று நமக்கு பதில் தரக்கூடியவராக இருக்கின்றார்.

 அவர்கள் என்னை நோக்கி மன்றாடும் போது அவர்களுக்குப் பதிலளிப்பேன் அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன் அவர்களை தப்புவித்து அவர்களை பெருமைப்படுத்துவேன் என்று திருப்பாடல் 90 :15 நமக்கு அவர் உறுதி அளித்திருக்கிறார்.

கடவுள் என்றுமே நம்முடைய வேண்டுதல்களை, ஜெபத்தையோ புறக்கணிப்பவரல்ல. நிச்சயமாக முடிவினை தருபவர்.  எந்த ஒரு காரணத்திற்காகவும் நம்முடைய ஜெபத்தை நிறுத்தாமல் தொடர்ந்து ஜெபிப்பது மூலம் இறைவனின் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள முடியும்.

 இதற்கு சிறந்த உதாரணமாக விளங்குவது தான் எரிக்கோ செல்லும் வழியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பார்வை இழந்த ஒருவர். இவர் பிறவி பார்வையற்றவர் அல்ல பார்வையோடு இருந்து பார்வையை இழந்து போனவர். இவர் ஆண்டவர் இயேசுவை நோக்கி மன்றாடினார் இயேசுவே தாவீதின் மகனே எனக்கு இரங்கும் என கூக்குரலிட்டார். பலர் அவரை அதட்டிய போதும் கூட அவர் நிறுத்தாது மீண்டும் மீண்டும் ஆண்டவரை நோக்கி தனது குரலை உயர்த்தியவர்.

இயேசு அவரது குரலைக் கேட்டு நின்று அவரைத் தம்மிடம் அழைத்து நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறேன் எனக் கேட்டார் அதற்கு அவன் ஆண்டவரே நான் மீண்டும் பார்வை பெறவேண்டும் என்றார் இயேசு அவரிடம் பார்வை பெறும் உமது நம்பிக்கை உன்னை நலமாகிற்று... என்றார். நாம் நமது வாழ்வில் எப்போதும் நம்பிக்கையோடு தொடர்ந்து இறைவனிடத்தில் வேண்டும்போது வேண்டுவதை பெற்றுக் கொள்கிறோம்.


பார்வையற்றவர் ஆண்டவரை நோக்கி குரல் உயர்த்திய போது பலர் அவரை அமைதியாக இருக்கும்படி அதட்டினார் நாமும் நம்பிக்கையோடு இறைவனிடத்தில் வேண்டுகின்ற போது பலர் நமது நம்பிக்கையை இழக்கச் செய்யும் வகையில் பலவிதமானவற்றை நம்மிடையே கூறி நமது நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயலலாம். ஆனால் எல்லா நேரத்திலும் நம்பிக்கையை இழக்காத பார்வையற்ற மனிதரை போல தொடர்ந்து ஆண்டவரை நோக்கி நமது குரலை எழுப்பிக் கொண்டிருக்க நாம் அழைக்கப்படுகிறோம்.

 துன்ப வேளையில் என்னை கூப்பிடுங்கள் உங்களை காத்திடுவேன் அப்போது நீங்கள் என்னை மாட்சிப்படுத்துவீர்கள் என திருப்பாடல் 50 :15 கூறுகிறது.

இயேசு தன்னை நோக்கி அழைத்த பார்வையற்றவர்  குரலைக் கேட்டு பதில் கொடுத்தார். ஆனால் பார்வை பெற்றவர் மட்டுமல்ல அவரை அமைதியாக இருக்கும்படி அதட்டிய மக்களும் அவருடன் சேர்ந்து கடவுளை மகிமைப்படுத்தினார்கள்.

பழைய ஏற்பாட்டில் யோசுவா தன்னுடைய வேண்டுதலால் சூரியனை கிபியோன் மீதும் சந்திரனை அய்யலோன் பள்ளத்தாக்கிலும் நிற்கும்படி கூறினார். அவருடைய குரலை கேட்டு சூரியன் அஸ்தமிக்க நினைக்காமல் ஏறக்குறைய ஒரு பகல் முழுவதும் நடுவானத்தில் நின்றதாக விவிலியத்தில் கூறப்பட்டுள்ளது.

 யோசுவாவின் குரல் படைப்பை நிறுத்தியது ஆனால் இங்கு பார்வையற்றோரின் குரல் அனைத்தையும் படைத்தவரையே நிற்க வைத்தது. அவர் கூக்குரல் இட்டபோது இயேசு அதனை கடந்து செல்லாமல் அவருடைய குரலை கேட்டு நின்று அவருக்கு விடுதலையை கொடுத்தார். அதே இயேசு கிறிஸ்து இன்றும் நம் மத்தியில் உலவிக் கொண்டிருக்கிறார். இப்போதும் அவர் அவர்கள் என்னை நோக்கி மன்றாடும் போது அவர்களுக்குப் பதிலளிப்பேன் என்ற வாக்குத்தத்தத்தின் அடிப்படையில் நம்முடைய குரல்களை கடந்து செல்பவராக அல்ல அதற்கு பதிலளிப்பதாகவே இருக்கிறார் என்ற உறுதியுடன் நம்பிக்கையுடன் நாமும் ஜெபிப்போம் இறைவனது ஆசியுரை பெற்றுக் கொள்வோம்....

விருப்பப்படி வாழ அல்ல அவர் (இயேசு) விரும்பும்படி வாழவே...(20.10.2021)

விருப்பப்படி வாழ அல்ல அவர் (இயேசு) விரும்பும்படி வாழவே...

 அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
விருப்பப்படி வாழ அல்ல அவர் (இயேசு) விரும்பும்படி வாழவே...
 இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன...

இன்றைய முதல் வாசகம் நாம் நமது உடலை கொண்டு எவ்வாறு வாழ வேண்டும்? என்ற செய்தியினை வலியுறுத்துகிறது. பாவம் நம்மை ஆட்சி செய்யாதவாறு நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். நமது சுய விருப்பு வெறுப்புகளை மட்டுமே மனதில் கொண்டு பயணிப்பதை விட்டுவிட்டு ஆண்டவரின் விருப்பம் நமது சொல்லிலும் செயலிலும் வெளிப்பட வேண்டும் என்ற சிந்தனை இன்றைய முதல் வாசகம் வழங்குகிறது. இதற்கு மெருகூட்டும் வகையில் தான் இன்றைய நாளின நற்செய்தி வாசகம் அமைகிறது.

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவரது பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கின்ற நாம் ஒவ்வொருவரும் இந்தச் சமூகத்தில் இயேசுவாக மாறிட, இயேசுவாக செயலாற்றியட அழைக்கப்பட்டவர்கள். 

இந்த இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது 
ஏழை எளியவரின் சார்பாக நின்றார்.... துன்பத்தில் வாழ்வோரின் துயர் துடைப்பவராக இருந்தார்....
அழுகையில் தவிப்போருக்கு ஆறுதலாக இருந்தார்....
எல்லோருக்கும் எல்லாமுமாய் சமூகத்தில் சமத்துவத்தையும், சமூக நீதியையும் நிலைநட்ட கூடியவராக இருந்தார். 

இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிற நமது வாழ்வின் இவையெல்லாம் மேலோங்கி காணப்படுகிறதா? என்ற கேள்வியை இன்றைய நாளில் நாம் நமக்குளாக எழுப்பி பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.

 
தன்னை பின் செல்கின்ற மக்களை சந்திக்க இறைவன் வருகின்றபோது நாம் அவர் ஏற்றுக்கொள்ள கூடிய மக்களாக இந்த சமூகத்தில் இருக்க வேண்டும்..இதையே இன்றைய நற்செய்தி வாசகம் வலியுறுத்துகிறது.

தலைவர் வந்து சந்திக்கின்ற போது பொறுப்புடன் பணியாற்றும் பணியாளரை போல் நம்மை சந்திக்க ஆண்டவர் வருகின்றபோது அவர் நம்மை ஏற்றுக் கொள்ள கூடிய வகையில் பொறுப்புடன் நாம் இச்சமூகத்தில் அவரைப்போல் செயலாற்ற வேண்டும். அதற்கு  நமது சுய விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடாது, ஒவ்வொருநாளும் அடுத்தவர் நலனை மனதில் இருத்தி,  பிறருக்கான நலமான நல்ல பணிகளை முன்னெடுக்க கூடிய இயேசுவின் சீடர்களாக  சமூகத்தில் நாம் விளங்கிட வேண்டும்.


மிகுதியாக கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும்.... மிகுதியாக ஒப்படைக்கப்பட்டவரிடம்  மிகுதியாகவே கேட்கப்படும் என்ற வார்த்தைகள் மனதில் இருத்தி நமது வாழ்வில் நாம் ஆண்டவர் இயேசுவுக்கு ஏற்ற வகையில் அவரது திருவுளத்தை நிறைவேற்றும் மக்களாக வாழ இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.

1 கொரிந்தியர் 6:19
உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்கிறார்....

இந்த உடலாகிய ஆண்டவரின் ஆலயத்தை கொண்டு நாம் விரும்பியபடி வாழாது அவரது (இயேசுவின்) விருப்பப்படி வாழ கூடியவர்களாக மாறிட இன்றைய நாளில் தொடர்ந்து இறைவனிடத்தில் வேண்டுவோம் ....

விழிப்போடு செயல்பட....(19.10.2021)

விழிப்போடு செயல்பட....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
மண்ணில் படைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு உயிர்களுக்கும் இந்த உலகத்தில் பலவிதமான பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன நாம் நமது பொறுப்புகளையும் கடமைகளையும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற சிந்தனை இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு தருகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் விழிப்பாய் இருந்த ஒரு பணியாளன்  குறைத்த உவமையை இயேசு குறிப்பிடுகிறார். இந்த உவமை வழியாக இயேசு தருகின்ற செய்தி... எந்த நேரத்திலும் நாம் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை திறம்பட செய்ய வேண்டியவர்கள் ஆய் இருக்க வேண்டும் என்பதாகும். இந்த உலகத்தில் நாம் செய்கின்ற அனைத்து இருக்கும் இரண்டு விதமான சாட்சிகள் உண்டு. ஒன்று இறைவன் மற்றொன்று நமது மனசாட்சி. இந்த இருவருக்கு மட்டும் தான் தெரியும் நாம் எந்த எண்ணத்தோடு எந்த மனநிலையோடு இந்த சமூகத்தில் நாம் ஒரு செயலை செய்து கொண்டிருக்கின்றோம் என்று. இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் தருகின்ற பாடமும் அதுதான்.  நாம் செய்கின்ற பணிகளையும் பொறுப்புக்களையும் நமது கடமையை உணர்ந்து இறைவனை முன்னிறுத்தி திறம்படச் செய்வதற்கு இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகின்றோம்.

இன்று கடமையைக் கூட கடமைக்காக செய்பவர்கள்தான் அதிகமாக இருக்கின்றார்கள் ஆனால் இன்றைய நாள் வாசகங்கள் நாம் பொறுப்புணர்வோடு எப்போதும் விழிப்பாய் இருந்து ஆண்டவர் இயேசுவுக்கு புகுந்த வாழ்வை வாழ நமக்கு அழைப்பு தருகின்றன.

இயேசு இந்த மண்ணில் மனிதனாக பிறந்து தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதை மட்டுமே மனதில் கொண்டு அப்பணியை ஆற்றுவதில் விழிப்போடு இருந்து திறம்பட அதனைச் செய்து நாமும் அவரைப் போல எல்லா சூழ்நிலையிலும் விழிப்போடு இருந்து இறை விருப்பத்தை நிறைவேற்ற கூடியவர்களாய் நமக்கென இச்சமூகத்தில் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை திறம்பட செய்திட வேண்டும் என்ற சிந்தனை இன்றைய நாள் வாசகங்கள் வழியாக தருகின்றார்.

 இறைவன் உணர்த்துகின்ற பாடத்தை உணர்ந்து கொண்டு வாழ்வில் நாம் நல்லதொரு இயேசுவின் சீடர்களாக மாறிட இறைவனது அருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்.

ஞாயிறு, 17 அக்டோபர், 2021

இயேசுவின் பணியைசெய்ய....(17.10.2021)

இயேசுவின் பணியைசெய்ய....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நாம் தாய் திருஅவையாக இணைந்து புனித லூக்கா அவர்களின் திருநாளை நினைவு கூறுகிறோம்.

புனித லூக்கா அவர்கள் புனித பவுலின் நற்செய்தி அறிவிப்புப் பணியில் மிகவும் பக்கபலமாக இருந்தவர். புனித பவுலின் வார்த்தைகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்தவர் இந்த புனித லூக்கா அவர்கள்.... இந்த புனித லூக்கா ஒரு மருத்துவர். மருந்து கொடுப்பது மருத்துவர் பணி குணம் தருவது  இறைவனின் பணி என்பதை இவர் அதிகம் உணர்ந்தவர். இவர் எழுதிய லூக்கா நற்செய்தியில் அதிகமாக இயேசு நோயாளிகளுக்கு குணம் தருகின்ற நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இன்றைய முதல் வாசகத்தில் புனித லூக்கா தனக்கு எந்த வகையில் நற்செய்தி பணியாற்ற உதவினார் என்பதை பவுல் தனது கடிதத்தில் குறிப்பிடுகிறார். தன்னோடு இருந்தவர்களையும் தன்னைவிட்டு சென்றவர்களையும் அவர் குறிப்பிடுகிறார். அவர்களுக்கு மத்தியில் நல்ல ஒரு பங்கினை தெரிந்து கொண்டவராக, நற்செய்தி அறிவிப்புப் பணியில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பதை முதல் வாசகம் தெளிவுபடுத்தி காட்டுகிறது.


இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களை நற்செய்தி பணியாற்றுவதற்காக அனுப்பி வைக்கின்றார். எதையும் நம்பி செல்ல வேண்டாம் விவேகத்தோடு செல்லுங்கள் என்ற பாடத்தை அவர்களுக்கு கற்பிக்கின்றார்.

இன்றைய நாள் வாசகங்கள் வழியாக நாமும் நற்செய்தி பணியாற்ற கூடியவர்களாக மாறிட அழைக்கப்படுகின்றோம். அதற்கு நல்லதொரு முன் உதாரணமாக இருப்பவர் புனித லூக்கா அவர்கள். இந்த புனித லூக்கா படித்த மேதையாக இருந்தாலும், எழுத தெரிந்தவராக, மருத்துவராக இருந்தாலும். அவர் தனது திறமைகள் அனைத்தையும் ஆண்டவரின் பணியை செய்வதற்கு என அர்ப்பணித்தார். 

இன்று நாமும் நமது வாழ்வில் பல பணிகளிலும், பல பொறுப்புகளிலும் இருந்தாலும்... நாம் இருக்கும் தளத்தினை, நாம் கொண்டு இருக்கின்ற அனைத்து விதமான திறமைகளையும் அடிப்படையாக கொண்டு ஆண்டவரின் பணியை பறைசாற்றக் கூடிய சீடர்களாக இச்சமூகத்தில் வாழ அழைக்கப்படுகிறோம். 

ஏழை எளியவர்ககு உதவியும்....
பிறர் நலம் பேணும் பண்பும்.... 
மனித நேய குணமும்.... நமது சொல்லிலும் செயலிலும் வெளிப்பட வேண்டும். அதுவே இறைவனது பணியைச் செய்வதற்கான வாய்ப்புகளாகின்றன. நாம் நம்மிடம் இருக்கும் திறமையை கொண்டு ஆண்டவர் இயேசுவின் பணியை இன்று சமூகத்தில் செய்திட இன்றைய நாளில் இறைவனது அருளை இணைந்து வேண்டுவோம்.

சனி, 16 அக்டோபர், 2021

இயேசுவின் பாதையில்....(17.10.2021)

இயேசுவின் பாதையில்....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளில் உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் இந்த சமூகத்தில் நாம் ஒரு நல்ல தலைவர்களாக விளங்கிட வேண்டும் என்ற பாடத்தை நமக்கு தருகின்றன. இன்றைய முதல் வாசகத்தில் கடவுளின் கையில் சிறப்பு மிக்கவர்கள் நாம் என்ற செய்தியானது வழங்கப்படுகிறது. கடவுளால் இம்மண்ணில் படைக்கப்பட்டுள்ள நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரோடு இணைந்து அவர்களது விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் வாழுகின்ற போது சிறப்பு மிகுந்தவர்களாக அதாவது சிறந்த தலைவர்களாக இச்சமூகத்தில் வலம் வர முடியும். 

இன்றைய நாளில் இரண்டாம் வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே ஒப்புயர்வற்ற தலைவன். ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாக அவரது இரக்கமும் தியாகமும் முன்னிறுத்தி காட்டப்படுகின்றது.

இன்றைக்கு நாளில் நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் பார்க்கின்றபோது இயேசுவோடு இருந்த சீடர்கள் இயேசுவைப் போல இந்த சமூகத்தில் நல்லதொரு முன்மாதிரியாகவும், அடுத்தவர் நலனை முன்னிறுத்த கூடிய சிறந்த தலைவர்களாகவும் உருவாக்குவதற்கு பதிலாக உலக இச்சைகளுக்கு அடிமையாகி போனவர்களாய் பதவியையும், முதன்மையான இடத்தையும் விரும்பக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். 

ஆனால் இயேசு கிறிஸ்து அவர்களின் உள்ள எண்ணத்தை அறிந்தவராய் இந்த சமூகத்தில் அடுத்தவர் நலன் காக்கும் நல்ல தலைவர்களாக எந்தவித முன் சார்பு எண்ணமும் இன்றி மக்களின் நலனை முன்னிறுத்தக் கூடிய அடுத்தவருக்காக வாழ்வை இழக்க கூடிய நல்ல தலைவர்களாக மாறிட வேண்டும் என்ற பாடத்தை அவர்களுக்கு கற்பிக்கின்றார். 

அன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன் சீடர்களுக்கு கற்பித்த பாடத்தை தான் இன்றைய நாளில் நாமும் கற்றுக்கொள்ள அழைக்கப்படுகின்றோம். நாம் வாழும் இந்த உலகத்தில் எப்போதும் பணம் பதவி பட்டம் என உயரிய இடத்தை விரும்பக் கூடியவர்களாக இருக்கின்றனர். நமது வாழ்வை சுய ஆய்வு செய்து பார்ப்போம். நாம் பிறந்த நாளிலிருந்து இந்நாள் வரை நமது வளர்ச்சியில் நமது உருவாக்கத்தில் பலர் தங்கள் பங்களிப்பைத் தந்து இருக்கிறார்கள். ஆனால் நம்மாள் வளர்ந்தவர்கள் யார்? நம்மாள் ஊக்கப் படுத்தப் பட்டவர்கள் யார்? நம்மாள் உருவான தலைவர்கள் யார் ? என சிந்திக்க இன்று அழைக்கப்படும் பல நேரங்களில் நமது சுயநலத்தை மட்டுமே முன்னிறுத்தி நாம் இந்த சமூகத்தில் பலவிதமான உதவிகளை செய்கிறோம்.  அடுத்தவர் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும். அடுத்து வரும் நம்மை போல் நலமோடு வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு உயரிய இலக்கோடு ஒரு நல்ல தலைவனுக்குரிய பண்புகளை கொண்டவர்களாய் இந்த சமூகத்தில் நாம் உருவாக்க வேண்டும்.

 நாம் எத்தகைய மாற்றத்தை எல்லாம் இதுநாள் வரை விதைத்திருக்கும் சிந்தித்துப் பார்ப்போம். அன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கேட்டு அவர்களின் உண்மை அர்த்தத்தை உணர்ந்து கொண்ட சீடர்கள் இறைவார்த்தையின் அடிப்படையில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டு தங்களுக்கு முன்மாதிரியாக இருந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்விலும் தங்களுடைய சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்த கூடியவர்களாக மாறினார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இன்றும் 2000 ஆண்டுகளுக்கு பின்னும் இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றி அவரின் வார்த்தைகளின் படி வாழ்வை அமைத்துக்கொள்ள விருக்கிறோம்  என்று அனுதினமும் இந்த உலகத்தில்  ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை சார்ந்தவர்கள் நாம் என சொல்லிக்கொண்டு பயணம் செய்கின்ற நாம் நமது வாழ்வில் இந்த இயேசுவைப் பிரதிபலிக்கிறோமா? நாம் நமது வாழ்வில் நல்ல தலைவர்களை உருவாக்கிய இருக்கின்றோமா? நாமே நல்ல தலைவர்களாக இருக்கின்றோமா? கேள்விக்கணைகளை நமது உள்ளத்தில் எழுப்பி நல்லதொரு மாற்றத்தை நாம் உள்வாங்கிக் கொள்வோம்.  நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை போல அடுத்தவருக்காக தன் இன்னுயிரையும் தியாகம் செய்யக்கூடிய நல்ல தலைவர்களாக இந்த சமூகத்தை உருவாக்கிட இன்றைய நாள் அழைக்கப்படுகின்றது. அழைக்கின்ற இறைவன் குரலுக்கு செவி கொடுத்து  அடுத்தவர் நலனை முன்னிறுத்தும் நல்ல தலைவர்களாக மாறிட இன்றைய நாளில் இறைவனது அருளை இணைந்து வேண்டுவோம். நல்ல தலைவன் இயேசுவின் பாதையில்....

வெள்ளி, 15 அக்டோபர், 2021

எதிலும் நம்பி கை வைக்க என்ன தேவை ?...(16.10.2021)

எதிலும் நம்பி கை வைக்க என்ன தேவை ?...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.... 
நம்பிக்கையோடு வாழ்வதற்கு இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன. பரபரப்பான இந்த உலகத்தில் பல பணிகளுக்கு மத்தியில் அனுதினமும் விரைந்து சென்று கொண்டிருக்க கூடிய நாம் சற்று நிதானமாக நின்று நாம்  கொண்டிருக்கின்ற நம்பிக்கையை  உரசிப்பார்க்க இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு தருகின்றன.


 நம்பிக்கையின் தந்தையாக விளங்கிய ஆபிரகாமை உதாரணமாக கொண்டு இன்றைய முதல் வாசகம் அமைந்திருக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம்பிக்கையோடு ஆண்டவர் ஏசு கிறிஸ்துவுக்கு சாட்சியம் சொல்ல கூடியவர்களாய் நாம் வாழுகின்ற போது அவர் நமக்கு சான்று பகர கூடியவராக இருக்கிறார் என்ற செய்தியினை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு தருகின்றது.

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாய் நம்பிக்கையோடு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செயலையும் செய்ய நாம் அழைக்கப்படுகின்றோம். நம்பிக்கையோடு இருக்கின்ற போது இந்த உலகத்தில் பலவிதமான நலமான நல்ல பணிகளை நாம் முன்னெடுக்க முடியும். அத்தகைய பணிகளை முன்னெடுப்பதன் வழியாக ஆண்டவர் இயேசு விரும்பக்கூடிய இறையாட்சியை இந்த மண்ணில் மலரச் செய்ய முடியும்.

 நம்பிக்கை இருந்தால்...... 
எதிலும் நம்பி கை வைக்கலாம்..... என கூறுவார்கள் நம்பிக்கையோடு இந்த உலகத்தில் அனுதினமும் பல நல்ல பணிகளை முன்னெடுக்க தூய ஆவியானவர் நம்மை வழிநடத்த வேண்டும் என இன்றைய நாளில் இறைவனிடத்தில் வேண்டுவோம். மேலும் இறைவன் தாமே நம்மோடு இருந்து நம் மூலமாக சமூகத்தில் பலவிதமான நல்ல காரியங்களை முன்னெடுக்க கூடிய ஆற்றலை நமக்கு தர வேண்டும் என இன்றைய நாளில் இணைந்து ஜெபிப்போம்.

வியாழன், 14 அக்டோபர், 2021

இந்த உலகத்தில் நிலையானது எது? (15.10.2021)

இந்த உலகத்தில் நிலையானது எது? 



கடவுள் ஒருவரே. அவர் ஒருவரையே பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். அவர் ஒருவருக்கே அஞ்சுங்கள், என்ற செய்திதான் இன்றைய வாசகங்களின் மையமாக நமக்கு தரப்படுகிறது. 

    ஒரு மயில் இறகு ஒன்று காற்றில் பறந்து வந்தது. அது ஒரு ஓவியனுடைய கையில் கிடைத்தது. அந்த ஓவியன் அதை எடுத்து ஒரு அழகிய படத்தை அதை பயன்படுத்தி வரைந்தான். பின்னர் அந்த மயில் இறகு மீண்டும் காற்றில் பறந்து வந்து ஒரு மருத்துவனுடைய கையில் கிடைத்தது. அதை எடுத்து அவன் எண்ணெயை தொட்டு காயத்திற்கு மருந்திட்டான்.  அதே மயிலிறகு மீண்டும் காற்றில் பறந்து சென்றது.  இறுதியில் அது ஒரு இளைஞனுடைய கையில் கிடைத்தது. அவன் அதில் சில பகுதிகளை சரிசெய்து தனது காதுகளைக் குடைந்து கொண்டான். 

ஒரே இறகு தான், ஆனால் அதனை ஒவ்வொருவரும் பயன்படுத்திய விதம் வெவ்வேறாக இருந்தது. ஆண்டவர் ஒருவரே. அந்த ஆண்டவர் ஒருவருக்கே நாம் இந்த சமூகத்தில் அஞ்ச வேண்டும். அவர் ஒருவரையே நாம் ஆழமாக் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும். அவரைப் பற்றிப் பிடித்துக் கொண்டு இந்த சமூகத்தில் நாம் நலமான நல்ல பணிகளைச் செய்ய வேண்டும். இந்த ஆண்டவர் எங்கோ இருப்பவர் அல்ல. இவர் எப்போதும் நம்மோடு இருப்பவர். 

இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்ற  மத்தேயு 28:20, இறைவார்த்தைகளுக்கு ஏற்ப, எப்போதும் நம்மோடு இருப்பவர். நூம் அஞ்ச வேண்டியதும் அவர் ஒருவருக்கு மட்டுமே. அஞ்ச வேண்டிய ஆண்டவரை விட்டுவிட்டு இந்த அகிலத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகளுக்கு அஞ்சி அவர்களின் வழியில் நடக்கக் கூடியவர்களாக தான் பல நேரங்களில் நாம் இம்மண்ணில் இழந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இன்றைய முதல் வாசகத்தில் கூட ஆண்டவரை மட்டும் மனதிறக் கொண்டு நம்பிக்கையோடு தன் பணயத்தை மேற்கொண்ட ஆபிரகாமை ஆண்டவர் நீதியோடு நோக்கினார் என்று பவுல் சுட்டிக்காட்டுகிறார். 

நாம் வாழும் இவ்வுலகத்தில் பொதுவாக இந்தச் சமூகத்தில் தீமைகள் வளர்வதற்கான காரணம் தீமை செய்வோர் தீமை செய்து கொண்டே இருக்கிறார்கள் என்பதற்காக மட்டுமல்ல மாறாக நல்லவர்கள் பலரின் மௌனமும் தேவையற்ற அச்சமுமே காரணம் என்பார்கள். இன்றைய நற்செய்தி வாசகம் நாம் அஞ்ச வேண்டியது ஆண்டவருக்கு மட்டுமே என்பதை எடுத்துரைப்பதன் வழியாக தேவையற்ற அச்சங்களை கலைந்து எப்போதும் நம்மோடு எல்லாச்சூழலிலும் உடனிருக்கும் ஆண்டவரை மனதிற் கொண்டு துணிவோடு வாழ அழைப்பு தருகிறது.

இந்த இறைவனை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம்? இந்த இறைவனை பயன்படுத்தி இந்த சமூகத்தில் நல்ல செயல்களைச் செய்கிறோமா? அல்லது அவரைக் கண்டும் காணாமல் நகர்ந்து செல்கிறோமா? அல்லது நமது தேவைக்கு மட்டும் அவரை பயன்படுத்தக் கூடியவர்களாக இருக்கின்றோமா? கேள்வி உங்கள் முன்னால். பதில்களை நீங்களே சுய ஆய்வு செய்து, தெரிந்து கொள்ளுங்கள். இனி வருகின்ற நாட்களில் நம்மோடு என்றும் இருக்கும் இறைவனை உணர்ந்துக் கொண்டு, இச்சமூகத்தில் நலமான பணிகளை முன்னெடுக்க, இறையருளை வேண்டி இந்த திருப்பலியில் தொடர்ந்து செபிப்போம்.



அச்சம் நம்பிக்கையை மறைக்கிறது ... (15.10.2021)

அச்சம்  நம்பிக்கையை மறைக்கிறது ... 
இறைவன் இயேசுவின் அன்புக்குரியவர்களை இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் .

இந்த உலகத்தில் நாம் எல்லோரும் ஏதோ ஒன்றுக்கு அச்சப்பட்டு கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் அச்சத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான் இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தின் மைய சிந்தனையாக அமைந்துள்ளது. விவிலியத்தில் அச்சத்தை குறித்து பலவற்றை நாம் காணமுடியும்.
மத்தேயு நற்செய்தி 4 : 24  வசனத்தில் நாம் வாசிக்கலாம். இயேசுவின் சீடர்கள் இயற்கை சீற்றத்தைக் கண்டு அஞ்சினார்கள். இந்தத் இயேசுவின் சீடர்கள் எல்லாம் இயேசுவோடு இருந்தவர்கள். அவருடைய பணி வாழ்வில் அவரை பின் தொடர்ந்தவர்கள். இயேசு செய்த பல வல்ல செயல்களை கண்ணால் கண்டவர்கள். ஆனாலும் பயம் என்று வருகின்ற போது அவர்கள் அனைத்தையும் மறந்து போனார்கள். தங்களை மறந்தார்கள், தங்களோடு இருக்கின்ற ஆண்டவர் இயேசுவை மறந்தார்கள். எனவேதான் நாம் சாகப் போகிறோம் என இயேசுவினிடத்தில் கூறினார்கள். பல நேரங்களில் நமது வாழ்வில் அச்சம் ஏற்படுகின்ற போது நாமும் அனைத்தையும் மறக்க கூடியவர்களாக இருக்கின்றோம்.

 ஆனால் இன்றைய நாள் நற்செய்தி வாசகமானது  நாம் ஆண்டவருக்கு மட்டுமே அஞ்ச வேண்டும் வேறு எவருக்கும் அஞ்ச வேண்டியதில்லை என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. விவிலியத்திலும் அஞ்சாதே என்ற வார்த்தை 365 முறை இடம்பெறுகிறது. இது நமக்கு ஒரு விதமான ஊக்கத்த தரக்கூடியதாக அமைந்துள்ளது.

இயேசு மண்ணில் வாழ்ந்த போது பலவற்றை தன்னுடைய சீடர்களுக்கு கற்பித்தார். அவர் கற்பித்தவற்றுள் மிகவும் சிறந்தது என நான் கருதுவது "அஞ்சாதே " என்பது ஆகத்தான் இருக்க முடியும். இயேசு சீடர்களுக்கு அச்சத்தைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறினார். ஆனால் அவர்கள் அஞ்ச கூடியவர்களாக தான் இருந்தார்கள். எனவே தான் இயேசுவை கைது செய்த போது அனைவரும் அனைத்தையும் விட்டுவிட்டு ஓட கூடியவர்களாக இருந்தார்கள். அச்சத்தைத் தவிர்க்க வேண்டும் என்பது மிகவும் கடினமான ஒன்றுதான். ஆனால் அது முடியாத ஒன்று அல்ல. இது செய்யக் கூடிய ஒன்றுதான். 

நாம் அனைவரும் அறிவோம் தொடக்ககாலத் ஒரு அவையில் இயேசுவின் சீடர்களும், இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களும் யூதர்களை கண்டு அஞ்சினார்கள். எனவே குகைகளுக்குள் சென்று மறைந்து கொண்டார்கள். ஆனால் இவர்களெல்லாம் கடைசிவரை அந்த குகைகளுக்குள்ளே இருக்க வேண்டும் என எண்ண வில்லை. மாறாக குகையை விட்டு வெளியே வந்தார்கள், மறைவிடத்தில் இருந்து வெளியே வந்து ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை அறிவித்தார்கள். இவர்களின் இத்தகைய மாற்றத்திற்கான காரணம் அவர்கள் தங்களுக்குள்ளாக அஞ்ச வேண்டியது ஆண்டவர் ஒருவருக்கே மற்றவருக்கு அல்ல என்பதை உறுதியாக தங்களுக்குள் நிலை நிறுத்திக் கொண்டார்கள். எனவேதான் தங்கள் வாழ்வில் துணிவோடு யாரைக் கண்டு அஞ்சினார்களோ அவர்கள் முன்பாகவே வந்து நின்று ஆண்டவர் இயேசுவை பற்றிய நற்செய்தியைப் பறைசாற்ற கூடியவர்களாக மாறினார்கள். 


இன்றைய நாள் முதல் வாசகத்தில் அச்சத்திலிருந்து வெளிவந்த  ஒரு மனிதனைப் பற்றி அழகாக எடுத்துரைக்கிறார். அவர் வேறு யாரும் அல்ல நமது விசுவாசத்தின் தந்தை எனப்படக்கூடிய ஆபிரகாம் . கடவுள் ஆபிரகாமை அழைத்தார். ஆபிரகாம் கடவுளை நேரடியாக பார்க்கவில்லை. ஆனால் அவரது குரல் ஓசையை கேட்டார். அந்த வார்த்தைகளை நம்பி அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்ந்தார்.   இந்த ஆபிரகாம் தன் வாழ்வில் உணவை எண்ணியோ இடத்தை எண்ணியோ, நீரை எண்ணியோ அஞ்சியதாக நாம் எங்கும் காண முடியவில்லை. காரணம் இவர் ஆண்டவரின் வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொண்டவராய் அனைத்தையும் துறந்து ஆண்டவரை நோக்கி பயணப்பட்டார். நாமும் நமது வாழ்வில் அச்சத்தை தவிர்த்து இயேசுவின் சீடர்கள்  போலும், ஆபிரகாமை போலும் வாழ அழைக்கப்படுகின்றோம்.

 நாம் அச்சத்தை தவிர்த்து வாழுகின்ற போது இயேசுவின் சீடர்களை போல பலவிதமான மகத்துவமான செயல்களை நம்மால் இந்த உலகத்தில் செய்யமுடியும். அச்சத்தை கலைந்து ஆண்டவரை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் 99 அடி அவர் நம்மை நோக்கி எடுத்து வைப்பார் என்பது மறுக்கவியலாத உண்மையாக உள்ளது.

 அன்புக்குரியவர்களே நாம் அனைவரும் அறிந்திருக்கலாம் சிறந்த மேடைப் பேச்சாளர் பர்வீன் சுல்தான் அவர்கள் எப்போதும் சொல்லுவார் இந்த உலகத்தில் வலியை கண்டு அஞ்சுபவர்கள் சிலர் ஆனால் வலித்து விடுமோ என அஞ்சுபவர்கள் பலர் என்று.... எனவேதான் நாம் சொல்வதும், நாம் சிந்திப்பதும் சரியாக இருந்தாலும் கூட அச்சத்தின் காரணமாக அதனை சொல்லாமலும், செயலில் காட்டாமலும் இருக்க கூடியவர்களாக நாம் பல நேரங்களில் இருந்து கொண்டிருக்கிறோம். 


இன்றைய நாளில் அச்சத்தை கலைந்து ஆண்டவரை இறுகப் பிடித்துக் கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். அச்சம் இருக்கும் பொழுது நம்பிக்கை மறைக்கப்படுகிறது. நாம் அச்சத்தை தவிர்த்து அருகில் இருக்கக்கூடிய சகோதரர்களையும், அதிகாரிகளையும் உலகத்தில் உள்ள ஒவ்வொருவரையும் அன்போடு நோக்கவும் அச்சமின்றி அவர்களோடு வாழ அழைக்கப்படுகிறோம்.  இந்த உலகத்தில் நாம் அஞ்ச வேண்டியது ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒருவருக்கு மட்டுமே தவிர வேறு எவருக்கும் இல்லை காரணம் அவர் கூறினார் நாம் சிட்டுக்குருவிகளை விட மேலானவர்கள் என்று இந்த ஆண்டவரிடம் மட்டும் அச்சம் கொள்ளக் கூடியவர்களாக இந்த சமூகத்தில் அச்சம் தவிர்த்து ஆண்டவரின் சீடர்களாக வாழ இறையருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென் 

புதன், 13 அக்டோபர், 2021

ஆண்டவருக்கு ஏற்புடையவராக...(14.10.2021)

ஆண்டவருக்கு ஏற்புடையவராக...

 அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு இருந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய நாள் வாசகங்கள் ஆண்டவருக்கு ஏற்புடையவராகிட நமக்கு அழைப்பு தருகின்றன. 

நாம் ஒவ்வொருவருமே ஆண்டவருக்கு ஏற்புடைய வாழ்வை வாழ வேண்டும்.  நமக்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தியாகம் அதில் தான் முழுமை பெறுகிறது என நாம்  எண்ணலாம்.  ஆனால் இன்று ஆண்டவருக்கு ஏற்புடையவராக வாழ்வதற்கு பதிலாக நாம் இவ்வுலக வழக்கின் படி நாம் விரும்பும் நபர்களுக்கு பின்னால் அவர்கள் தான் உலகம் என என்ன கூடியவர்களாய் பல நேரங்களில் பயணம் செய்கிறோம்.  பலநேரங்களில் ஆண்டவருக்கு ஏற்புடைய வகையில் வாழக் கூடிய மனிதர்களையும் அவ்வாறு வாழ விடாது தடுக்க கூடியவர்களாக இருக்கின்றோம் இதையே இன்றைய நற்செய்தி வாசகம் தெளிவாக எடுத்துரைக்கிறது.... 


இறைவன் ஒவ்வொரு நாளும் நாம் எப்படி வாழவேண்டும் என்பதை தன் வாழ்வால் இந்த மண்ணில் வாழ்ந்த போது நமக்கு கற்பித்து சென்றார்.
 அவரது பாதையில் பயணத்தைத் தொடர்கின்ற நாம் முழுமையான நம்பிக்கை இல்லாது உலக போக்கிலான எண்ணத்தோடு பல நேரங்களில் ஆண்டவர் இயேசு கற்பித்த வார்த்தைகளின் அடிப்படையில் நம் வாழ்வை அமைத்துக் கொள்ளாதவர்களாய் இருக்கின்றோம். ஆனால் இன்றைய வாசகங்கள் அத்தகைய நிலையிலிருந்து மீண்டு வர நமக்கு அழைப்பு தருகின்றன. 

ஆண்டவர் இயேசு கிறிஸ்து நாம் எவ்வாறு வாழ வேண்டும் என நமக்கு முன்னுதாரணம் காட்டினாரோ அப்பாதையில் நாமும் அவரைப் பின்தொடர்ந்து இறையாட்சியின் மதிப்பீடுகளை மனதில் நிறுத்திக் அதனை நமது செயலில் வெளிக்காட்டக் கூடியவர்களாக இந்த சமூகத்தில் பயணம் செய்யவும், மற்றவரையும் அப்பாதையில் பயணம் செய்ய அறிவுறுத்தவும் இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நம்மோடு உரையாடுகிறார். இறைவனது உரையாடலை கேட்டு விட்டு நகர்ந்து விடாது வாழ்வில் அதனை செயல்படுத்த நமது சொல்லிலும் செயலிலும் இறைவனது விருப்பத்தை வெளிகாட்டும் மனிதர்களாக நாம் மாறிட இன்றைய நாளில் இறைவனது அருளை இணைந்து வேண்டுவோம் இறைவன் நம்மை வழிநடத்தி  இறையாட்சி மண்ணில் மலர நம்மை பண்படுத்தி பயன்படுத்துவாராக.....  ஆமென்

செவ்வாய், 12 அக்டோபர், 2021

நமது மனம் பரிசேயர்களின் மனதை போன்றதா? ....(13.10.2021)

 நமது மனம் பரிசேயர்களின் மனதை போன்றதா? ....

 
அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ...
நீ விரும்பும் மாற்றத்தின் முதல் விதையாக நீ இரு என்ற காந்தியடிகளின் வார்த்தைகளுக்கு ஏற்ப மண்ணில் வாழும் மனிதர்கள் அனைவரும்  தன்னை போல மற்றவரையும் அன்பு செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும்... இத்தகைய பண்பு குறைப்படுகின்ற காரணத்தினால்தான் மற்றவரை குறை சொல்லி நம்மை நியாயவான்களாக காட்டிக் கொள்ளக் கூடிய பரிசேயர்களின் மனப்பாங்கு இன்றும் நம்மிடம் நிலவுகிறது. 


யூத சமூகத்தில் பரிசேயர்கள் தங்களை உயர்ந்தவர்களாகவும், புனித மிக்கவர்களாகவும், நேர்மையாளராகவும்  மற்றவர்கள் முன்பாக காண்பித்துக் கொள்வதற்கு பிறரை குற்றவாளிகள் என தீர்ப்பிடக் கூடியவர்களாகவும், தாங்கள் மட்டுமே இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என சொல்லிக் கொள்ளக் கூடியவர்களாகவும் இருந்தார்கள் என்பது வரலாற்றிலிருந்து நாம் வெளிப்படையாகவே உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் இயேசுகிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது பரிசேயர்களிடம் காணப்பட்ட இத்தகைய மனப்பாங்கு தவறு எனச் சுட்டிக் காண்பித்தார். தன்னை நேசிப்பது போல அடுத்தவரையும் நேசிக்க வேண்டும் என்பதை வாழ்வால், வார்த்தையால் அவர்களுக்கு கற்பித்தார். தன்னைச் சூழ்ந்து கொண்டு இருந்தவர்களுக்கு எவ்வாறு வாழ வேண்டும் என்பதை கற்பித்தவராய் இயேசு இந்த மண்ணில் பயணப்பட்டார். 

இந்த இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி வாழும்  நாம் நம்முடைய  வாழ்வில்  நாம் மட்டுமே நேர்மையாளர்கள், மற்றவர்கள் எல்லாம் குற்றவாளிகள் என்று எண்ணக்கூடிய எண்ணமும், நம்மை முதன்மைப்படுத்திய போக்கும் கொண்டவர்களாய் இருக்கின்றோமா?  என நமது வாழ்வை சுய ஆய்வு செய்து பார்க்க இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு அழைப்பு தருகின்றார்.

 இறைவன் தருகின்ற அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாய் நமது வாழ்வை இன்றைய நாளில் சீர்தூக்கி பார்ப்போம். நமது வாழ்வில்  முதன்மையான இடத்தை நாடுவது, பிறரை மட்டம் தட்டுவது, நம்மை மட்டுமே உயர்ந்தவராக கருதி மற்றவரை தாழ்வாக எண்ணுவது, போன்ற பண்புகள் மேலோங்கி இருக்குமாயின் நம்மை நாம் சரிசெய்துகொண்டு ஆண்டவர் இயேசு காட்டும் பாதையில் பயணத்தைத் தொடர்ந்து இயேசுவின் சீடர்களாகிவிட இறையருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்.
இறைவன் தாமே தூய ஆவியார் வழியாக நம்மை நல்வழிப்படுத்தி வழிநடத்துவாராக .....ஆமென்.

திங்கள், 11 அக்டோபர், 2021

தூய்மையால் வாழ்வு சாத்தியம்...(12.10.2021)

தூய்மையால் வாழ்வு சாத்தியம்

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்
கடினமான வாழ்க்கைதான்....
புதுமையான சிந்தனைக்கு தாய்....
என்று கூறுவார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தின வழியாக இயேசு கிறிஸ்து பரிசேயரின் கடினம் உள்ளத்தை படம்பிடித்துக் காட்டுகின்றார்.

பரிசேயர்கள் உள்ளத்தில் வஞ்சத்தையும், தீமையையும் வைத்துக்கொண்டு வெளிப்புறத்தில் தூய்மையைப் பற்றி இயேசுவினிடத்தில் வாதிடுகிறார்கள். ஆனால் இயேசுவோ அவர்களின் உள்ளார்ந்த எண்ணங்களை அறிந்தவராய் உட்புற தூய்மையே அவசியமானது என்பதை அவர்களுக்கு கற்பிக்கின்றார்.

நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டம் இரண்டாம் அலை வீசிக் கொண்டிருக்க நாம் உள்ள தீமையை குறித்து சிந்திக்க இன்று அழைக்கப்படுகிறோம்.
 பரபரப்பான இந்த உலகத்தில் பல பணிகளுக்கு மத்தியில் பயணம் செய்து கொண்டிருக்கக்கூடிய நாமும் வெளிப்புற தூய்மையை விட உள்ளார்ந்த தூய்மையை பின்பற்றக் கூடியவர்களாக இருக்க அழைக்கப்படுகின்றோம். 

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய கடிதத்தில் நேர்மையாளர் நம்பிக்கையால் வாழ்வு பெறுவர் என மறைநூலில் எழுதப்பட்டிருப்பதை குறிப்பிட்டு அங்கு வாழ்ந்த மக்களுக்கு நம்பிக்கை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள அழைப்பு தருகின்றார். 

நம்பிக்கையால் வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள வேண்டுமென்றால் உள்ளத் தூய்மை என்பது அவசியமானதாகும். மனதிற்குள் போட்டி, பொறாமை, வஞ்சகம் போன்றவைகளை வைத்துக்கொண்டு வெளிவரும் மற்றவரும் முன்பாக நல்லவர்கள் போல நம்மை காட்டிக் கொள்ளக் கூடிய செயலை இறைவன் எப்போதும் ஏற்பதில்லை. நாம் நமக்குள் தூய்மையை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றால்  நமது முன் சார்பு எண்ணங்களை புறம் தள்ளிவிட்டு அனைவரையும் அன்பு செய்யக்கூடிய இயேசுவின் சீடர்களாக இந்த சமூகத்தில் உள்ளார்ந்த மாற்றத்தை உரிமையாக்கிக் கொண்டவர்களாக வாழ வேண்டும். அத்தகைய வாழ்வு வாழும் பொழுது நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கையின் அடிப்படையில் இயேசுவின் வாழ்வோடு நமது வாழ்வை இணைத்துக் கொண்டவர்களாக இந்த சமூகத்தில் பயணிக்க முடியும்.
இன்றைய நாளில் இறைவனிடத்தில் நம்மை முழுமையாக அர்ப்பணித்து உட்புற தூய்மையை அதாவது மனத்தூய்மையை மனதில் இருத்தி இன்றைய நாள் முழுவதும் சொல்லிலும், செயலிலும் தூய்மை உடையவர்களாய் நாம் காணும் மனிதர்களை அணுக இறைவனது அருளை இணைந்து வேண்டுவோம்.

எல்லாம் வல்ல இறைவன் நம்மோடு இருந்து   நம்மை ஆசீர்வதிப்பாராக.... ஆமேன்.

ஞாயிறு, 10 அக்டோபர், 2021

அடையாளங்களைத் தேடுவதை விட நாமே அடையாளமாவோம்...(11.10.2021)

அடையாளங்களைத் தேடுவதை விட நாமே அடையாளமாவோம்...

இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

உழைக்காமல் வரும் பணமும்...
உடைந்த பானைகள் ஊற்றப்படும் பானமும் ஒன்றுதான்... என்பார்கள் அது போலத்தான் நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் நாம் அடையாளங்களாக மாறாமல் அடையாளத்தை தேடி அலைவதில் பயனில்லை என்பதை இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு உணர்த்துகின்றார் இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவினிடத்தில் தங்களுக்கு அடையாளத்தை காட்டுமாறு  வேண்டியபோது யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் கொடுக்கப்பட மாட்டாது என அவர் இயேசு குறிப்பிடுகிறார். 

யார் இந்த யோனா ? என சிந்திக்கின்ற போது விவிலியம் இவரை நினிவே நகர மக்களின் அடையாளம் என சுட்டிக்கட்டுகிறது. தவறான வழியில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு ஆண்டவரின் வார்த்தைகளை எடுத்துரைத்து அம்மாக்கள் மீண்டும் தங்கள் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு ஆண்டவரிடம் திரும்பி வருவதற்கான அடையாளமாகத் இருந்தவர்தான் இந்த யோனா. இந்த யோனாவைப் போலத்தான் நாம் ஒவ்வொருவரும் இந்த சமூகத்தில் பல நல்ல மாற்றங்கள் உதயமாவதற்கான அடையாளங்களாக மாறிட இறைவன் நம்மை இன்றைய நாளில் அழைக்கின்றார். 

இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது அனைவருக்கும் முன்மாதிரியான ஒரு அடையாளமாகத் திகழ்ந்தார். இந்த இயேசு கிறிஸ்துவை பின்பற்றியவர்களும் தங்கள் வாழ்வில் இந்த இயேசுவை அடையாளப்படுத்த கூடிய மிகப் பெரிய அடையாளமாக மாறிப் போனார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  அவர்களுள் ஒருவரான பவுல்  உரோமையருக்கு எழுதிய கடிதத்திலிருந்து தான் இன்றைய முதல் வாசகம் அமைந்துள்ளது. இவ்வாசகத்தின் வழியாக நம் அனைவரையும் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாக இருக்க அழைப்பு தருகின்றார் பவுல்.


பவுல் தரும் அழைப்பிற்கு நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் இந்தச் சமூகத்தில் அடையாளங்களைத் தேடுவதை விட நாமே  இறைவார்த்தையின் அடிப்படையில் வாழ்வை அமைத்துக் கொண்டு வாழக்கூடிய நல்லதொரு அடையாளங்களாக மாறிட வேண்டும். 
இயேசுவின் வார்த்தைகளின் படி தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டு இன்றும் இந்த சமூகத்தில் நல்லதொரு அடையாளங்களாக திகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய புனிதர்களை மனதில் இருத்தி, இனி வருகின்ற நாட்களில் நாம் அடையாளங்களை வெளியே தேடுவதை நிறுத்தி விட்டு நாமே நல்லதொரு அடையாளங்களாக மாறிட இறைவனது அருளை இணைந்து இன்றைய நாளில் இறைவனிடத்தில் வேண்டி பெற்றுக்கொள்வோம். 

எல்லாம் வல்ல இறைவன் நம்மோடு இருந்து  இச்சமூகத்தில் நன்மை செய்து பரிவு காட்டக்கடிய நல்ல அடையாளங்களாக நாம் திகழ நம்மை ஆசீர்வதிப்பாராக.... ஆமேன்.

சனி, 9 அக்டோபர், 2021

நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள வழி என்ன?(10.10.2021)

நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள வழி என்ன?


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள வழி என்ன என்ற கேள்விக்கு விடை தரும் வகையில் தான் இன்றைய வாசகங்கள் அனைத்தும் அமைந்துள்ளன.

இன்றைய முதல் வாசகம் ஞானத்தையும் இரண்டாம் வாசகம் இறை வார்த்தையையும் நற்செய்தி வாசகம் நிலை வாழ்வையும் பற்றி பேசுகின்றன.

ஞானம் - இறை வார்த்தை -  நிலைவாழ்வு மூன்றிறகும் உள்ள தொடர்பைக் குறித்து சிந்திப்பதே  நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்வதற்கான வழியாகும்..

ஒரு விவசாயி, தனது விவசாய நிலங்களுக்கு நீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார்.அச்சமயம் ஒரு தந்திரமான விவசாயிடம் இருந்து கிணற்றை விலைக்கு வாங்கினார். பின் அந்தத் தந்திரமான நபர், அந்த விவசாயியைக் கிணற்றில் இருந்து நீர் எடுக்கக் கூடாது என்று ஆணையிட்டார்.விவசாயி,” ஏன் நீர் எடுக்கக்கூடாது?” என்று கேட்டதற்கு, “நான் உனக்கு கிணற்றை தான் விற்றேன். நீரை அல்ல!”என்று கூறி விட்டு அலட்சியமாக நடந்து சென்றார்.



இதை குறித்து விவசாயி, அக்பர் அரசின் மிகச்சிறந்த அறிவாளியாக விளங்கிய ‘நீதியரசர் பீர்பால்’ அமைச்சராக இருக்கும் நீதிமன்றத்தில் முறையிட்டார். வழக்கை நன்கு கேட்டறிந்த பீர்பால் வழக்கின் தந்திரத்தைப் புரிந்து கொண்டு வழக்கை விசாரிக்கத் தொடங்கினார்.

அச்சமயம் இருவரின் வாதத்தையும் கேட்டுவிட்டு, பீர்பால்,” தந்திரமான விவசாயி கூறுவது நியாயம்தான்.” என்று கூறி,ஒரு நிபந்தை இட்டார். “கிணறு விற்கப்பட்டது; ஆனால் நீர் விற்கப்படவில்லை; ஆகையால், நீங்கள் கிணற்றில் இருக்கும் நீரை இன்றே அகற்றிவிட வேண்டும்; இல்லையேல் நீர் அவருக்கே சொந்தமாகிவிடும்.” என்று அந்த நிபந்தனையே தீர்ப்பாக வாசித்தார்.

அந்த தந்திரமான விவசாயியும், தன் தவறை உணர்ந்து விவசாயி நண்பரிடம் மன்னிப்பு கேட்டார்.

ஞானம் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியமான ஒன்று இந்த ஞானமே இறைவனது வார்த்தைகளை வாழ்வாக மாற்றிக்கொண்டு இந்த சமூகத்தில் நலமான நல்ல பணிகளை முன்னெடுக்க நம்மை அழைத்துச் செல்கிறது. இந்த ஞானமே நம்மை சிறுமைப்படுத்தி மற்றவரை பெருமைப்படுத்தும் இந்த சமூகத்தில் பல நல்ல காரியங்கள் அரங்கேறும் அதற்கு வழிவகுக்கின்றன என்றால் அது மிகையாகாது. 


ஞானத்தின் துணைகொண்டு இறை வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொண்டு நம்மிடம் இருப்பதை இல்லாதவர்களுக்க பகிர்ந்து வாழுகின்ற போது தான் நிலை வாழ்வை நாம் உரிமையாக்கிக் கொள்ள முடியும் மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் மரணத்தை சந்தித்தே தீரவண்டும் மரணத்தை சந்தித்து இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் நாம் இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் ஞானத்தின் துணைகொண்டு இறைவார்த்தையின் அடிப்படையில் நாம் செய்த அனைத்து நல்ல பண்புகளும் நல்ல செயல்களும் நம் மறைவுக்குப் பின்னும் இந்த மண்ணில் நிலைத்திருக்கும்.... அவை எப்போதும் நம் நினைவை இந்த மண்ணகத்தில் நிலைநிறுத்திக் கொண்டே இருக்கும் இதுவே நிலைவழ்வு எனக் கருதலாம் நிலைவாழ்வு என்றால் இறப்புக்குப் பின்னான வாழ்வு என்று பொருள் கொள்வது உண்டு இந்த இறப்புக்குப் பிறகு இருக்கின்ற வாழ்வு என்பது இந்த மண்ணில் நாம் செய்த நன்மைகளின் அடிப்படையில் இறைவார்த்தையை வாழ்வாக்கி அதன் அடிப்படையில் ஞானத்தோடு இந்த சமூகத்தில் நாம் செயல்பட்ட தருணங்களின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் நமது நினைவை இந்த மண்ணில் நிலை நிறுத்திக் கொண்டே இருக்கின்றன இவைதான் நிலைவாழ்வு என பொருள் கொள்ள முடியும். இத்தகைய நிலை வாழ்வை நாம் நமது வாழ்வில் உரிமையாக்கிக் கொள்வது மிகவும் எளிது இந்த நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நாம் நமது வாழ்வின் ஒவ்வொரு நாளும் இறைவார்த்தையின் அடிப்படையில் ஞானத்தின் துணைகொண்டு ஒவ்வொரு செயலையும் சிந்தித்து சீர்தூக்கி பார்த்து எது சமூகத்திற்கு நல்லது எது அடுத்தவருக்கு நன்மை பயக்கும் அவைகளை இந்த சமூகத்தில் கண்ணில் காணக்கூடிய ஒவ்வொரு மனிதர்களுக்கும் எந்தவித எதிர்பார்ப்புமின்றி இயேசுவின் சீடர்கள் நாம் என்பதன் அடிப்படையில் சக மனிதர்களையும் மதித்து அவர்களின் நலவாழ்வில் அக்கறை கொண்டவர்களாய் நலமா அனைவரும் நலமா இந்த சமூகத்தில் அனுதினமும் செய்திடல் வேண்டும் அவ்வாறு செய்கின்றபோது நாம் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அப்பன் புகழ் எப்போதும் என்றும் நிலையாக இம்மண்ணில் நிலைத்திருக்கும். இயேசு இத்தகைய பண்புகளைக் கொண்டு இருந்த காரணத்தினால்தான் இருந்தும் அவர் உயிர்த்து இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் இயேசுவின் செயல்பாடுகள் நமது செயல்களாக மாற வேண்டுமென்றால் ஞானத்தின் துணைகொண்டு இறைவார்த்தையின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ளக் கூடியவர்களாக நாம் மாறிட வேண்டும் அவ்வாறு மாறுகின்ற போது நிலை வாழ்வை நாம் உரிமையாக்கிக் கொள்வோம் நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள இருப்பதை எல்லாம் விற்று இல்லாதவருக்கு கொடு என்று கூறிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளின் அடிப்படையில் நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள வழியை கண்டு கொள்வோம் அந்த வழியில் பயணித்து நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள முயற்சிகளில் ஈடுபடுவோம் எல்லா ஆற்றலும் நிறைந்த இறைவன் நம்மை வழிநடத்தி நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள உதவி செய்ய வேண்டி அவரது இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்....



இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...