இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைய முதல் வாசகம், நற்செய்தி வாசகம் மனமாற்றம் அடைவதற்கான ஊக்கத்தை நமக்குள் விதைக்கிறது. ஒரு மாற்றமே இன்னொரு மாற்றத்தை உருவாக்கும். பல பணிகளுக்கு மத்தியில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க கூடிய நாம் நமது வாழ்வை சீர்தூக்கிப்பார்த்து நல்ல மாற்றத்தை நமக்குள் உருவாக்கிக்கொள்ள இன்றைய வாசகங்கள் அழைக்கின்றன. இன்றைய முதல் வாசகம் குருக்கள் தங்களை தாங்களே சுய ஆய்வு செய்தவர்களாய் மாற்றத்தை நோக்கி இறைவனிடத்தில் முன்செல்கின்ற நிகழ்வினை எடுத்துரைக்கின்றன.
ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது என்பதற்கான மாற்றமாக மட்டும் இதனை பார்த்துவிட முடியாது. ஆண்டவரின் நாள் அண்மையில் என்பதை உணர்ந்தாலும் தங்கள் வாழ்வு தவறானது என்பதை உணர்ந்ததன் அடிப்படையில்தான் தங்களை திருத்திக் கொள்வதற்கு அவர்கள் முன் செல்கின்றார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட ஆண்டவர் இயேசுவின் பெயரால் ஒருவர் பேய்களை ஓட்டுவதை கண்டு தங்களோடு இல்லாத ஒருவர் தாங்கள் செய்கின்ற பணியினை செய்வது கண்டு அவர்மீது பொறாமை கொள்ளக்கூடிய ஒரு எதார்த்த மனப்பாங்கை சீடர்கள் கொண்டிருப்பதை கண்டு அவர்களுக்கு நல்லதொரு மாற்றத்தை உள்ளத்தில் விதைத்து கொள்ள ஆண்டவர் இயேசுகிறிஸ்து வழிகாட்டுகிறார்.
நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நாம் நம்மை சுய ஆய்வு செய்துநல்லதொரு மாற்றத்தை நமக்குள் விதைத்து கொள்ள வேண்டியது காலத்தின் அவசியம் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.
நம்மோடு இல்லாதவராக இருந்தாலும் மற்றவர் செய்கின்ற பணி மகத்துவமானது என உணரும்போது அவரது பணியை இயேசுவைப் போல நாமும் இந்த சமூகத்தில் அங்கீகரிக்க கூடியவர்களாக செயல்பட வேண்டும். நமக்குள் இருக்கும் போட்டி, பொறாமை தவிர்த்து அனைவரையும் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக மாறிட கூடிய ஒரு மாற்றத்தை நமக்குள் விதைத்து கொள்ள இன்றைய நாளில் இறைவன் அழைக்கின்றார். இத்தகைய மாற்றமே நம்மை பல மாற்றங்களை சமூகத்தில் எடுப்பதற்கு வழி நடத்தும். இறைவனின் இந்த அழைத்தலை உணர்ந்துகொண்டு வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை நமக்குள் விதைத்து கொண்டு நல்ல கனிகளைத் தரக்கூடிய மனிதர்களாக இச்சமூகத்தில் வளம்பெற இறைவனது அருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக