ஞாயிறு, 31 அக்டோபர், 2021

புனிதர் அனைவர் பெருவிழா(1.11.2021)

புனிதர் அனைவர் பெருவிழா


அன்புக்குரியவர்களே! இன்று திருஅவையாக நாம் இணைந்து புனிதர் அனைவர் பெருவிழாவை கொண்டாடி மகிழ அழைக்கப்படுகின்றோம். 
புனிதர்கள் என்றால் யார்? என்று கேட்ட ஒரு மறைக்கல்வி மாணவனுக்கு, ஒரு மறைக்கல்வி ஆசிரியர் தந்த பதில்: புனிதர்கள் என்றால் இயேசுவை பிரதீப்பலித்தவர்கள் என்றார்.  

இந்த புனிதர்கள் எல்லாம்  இவ்வுலகில் மனிதராகப் பிறந்தவர்கள்.
இவ்வுலகில் வாழ்ந்தபோது இறைவனுக்கு ஏற்புடையவர்களாய் திகழ்ந்தவர்கள்.
தங்களது  வாழ்வின் வழியாக இறைவனைப் பலருக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.
என்றும் இறைவனோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
தம்மை நோக்கி மன்றாடுபவர்களுக்காக இறைவனிடம் பரிந்துரைப்பவர்கள்.
தங்கள் உயிரையே இறைவனுக்காக  கையளித்தவர்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

அனைத்துப் புனிதர்களுடைய பெருவிழா பல்வேறு இடங்களில், பல்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வந்தபோது திருத்தந்தை மூன்றாம் கிரகோரியார்தான் (827 -844) இதனை ஒழுங்குபடுத்தி, நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி கொண்டாடப் வழிவகுத்துக் கொடுத்தார்.

திருஅவை ஒவ்வொரு நாளுக்கும் ஒரு புனிதரை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றபொழுது, புனிதர் அனைவருக்கும் என தனியாக ஒரு நாளை ஒதுக்கி, அவர்களுக்கு விழாக் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? என்ற கேள்வி எழலாம். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்வில் பிரதிபலித்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். அவர்களை எல்லாம் ஒரு ஆண்டில் நினைவுகூர்ந்து விட முடியாது. எனவே அனைத்து புனிதர்களையும்  நினைவுகூர்ந்து விழா கொண்டாட வேண்டும் என்பதற்குதான் திருஅவை நவம்பர் ஒன்றாம் தேதியை புனிதர்கள் அனைவரின் பெருவிழாவாகக் கொண்டாடுகின்றது.

அனைத்துப் புனிதர்களின் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்லநாளில் திருஅவை இறைவார்த்தை வழியாக  நமக்கு என்ன செய்தியை தருகிறது என்று சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம் 

இன்றைய முதல் வாசகத்தில் ‘எல்லா இனத்தைச் சேர்ந்த, பல மொழியைப் பேசக்கூடிய, எண்ணிக்கையில் அடங்காத மக்கள் அரியணைக்கும், ஆட்டுக்குட்டுக்கும் இடையில் இருந்து இறைவனை வாழ்த்திக் கொண்டிருந்தார்கள்’ என்று வாசிக்க கேட்டோம் . இவர்கள் எல்லாம்  யார்?. இவர்கள் வேறு யாருமல்ல, இயேசுவை அவரின் இறையாட்சி விழுமியங்களை  தங்கள் வாழ்வில் பிரதிபலித்தவர்கள்.
இவர்களைப் போன்று இறைவனின் திருமுன் நிற்பததற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பதற்கான பதிலைதான் இன்றைய நற்செய்தி வாசகத்திலே வாசிக்க கேட்டோம் . 

ஆண்டவர் இயேசு தந்த மலைப்பொழிவை யாராரெல்லாம் தங்களுடைய வாழ்வில் கடைப்பிடித்து வருகிறார்களோ, அவர்களே இறைவன் தரும் விண்ணரசை உரிமைச் சொத்தாகப் பெறமுடியும். புனிதர்களாக மாறமுடியும். ஆலயத்தில் இருக்கின்ற புனிதர்களின் ஓவியங்களும், சிருபங்களும் வெறும் பார்வைக்கானவை அல்ல, வாழ்க்கை பாடத்தை கற்பிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளவை.

எளிய உள்ளத்தோராய், 
தூய இதயத்தோராய், 
நீதியின்மீது தாகமுடையோராய்,
அமைதிக்காக உழைப்போராய்,
கனிவுடையோறாய், 
நீதிக்காக துன்பங்களை அனுபவிப்பவராய், 
இன்னும் பல்வேறு இறையாட்சியின் விழுமியங்களின்படி வாழுகின்றபோது இறைவன் தரும்  விண்ணரசில் நாம் புனிதர்களாக எப்போதும் விளங்க முடியும் என்பதில்  எந்தவித மாற்றுக் கருத்து இல்லை.

நாம் நமது அன்றாட வாழ்வில் புனிதர்களை போல  இயேசுவின் போதனைகளின் படி வாழ்கின்றோமா?  என்று சிந்தித்துப் பார்க்க நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம்.

மண்ணில் மனிதனாக மலர்ந்து புனிதனாக உயர்ந்து நிற்கின்ற ஒவ்வொரு புனிதர்களின் வாழ்வும் நாமும் புனிதர்களாக மாறிட வழிகாட்டுகின்றன. இறைவன் காட்டுகின்ற பாதையில் பயணம் செய்து மனித நிலையிலிருந்து புனித நிலைக்கு நம்மை தகுதியாக்கிக் கொள்ளும் வகையில் நமது செயல்கள் அமைந்திட, நம் செயல்களால் இறைவனை இச்சமூகத்தில் பிரதிபலித்திட  இறைவனது அருளை வேண்டி இணைந்து தொடர்ந்து ஜெபிப்போம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...